Home Love & Romanceமுத்தமழை – 33

முத்தமழை – 33

by Vathani S

முத்தமழை – 33

“ஏய் யாழி, கோழி.. என் அண்ணனை அப்படியே சூப் சாங்க் பாட வைக்கலாம்னு மட்டும் நினைச்சிடாத..” என்று பேசிக்கொண்டு வந்த, வந்தனாவை முறைத்துப் பார்த்தாள் யாழினி.

“தனா..” என அதட்டிய யாழினி “வெற்றி மாதிரியே நீயும் பேசாத, என்னை பார்த்தா லவ் பண்றவனை கழட்டி விடுறவ மாதிரியா இருக்கு…?” என்றாள் கோபமாக.

“ச்சே ச்சே நான் அப்படி சொல்ல வரலடி யாழிக்குட்டி, வீட்டுல மிரட்டி கல்யாணம் செஞ்சு வெச்சா என்ன செய்வ? நான் அந்த மீனிங்லதான் சொல்ல வந்தேன். ஏன் உங்க லவ் மேட்டர் தெரிஞ்சா, உன் அம்மாவும் அக்காவும் சும்மாவா இருப்பாங்க..?”

“ஹ்ம்ம்ம் சும்மா இருக்க மாட்டாங்கதான். அதுக்காக அவங்க மிரட்டலுக்கு பயந்து என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பேனா? என்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க சம்மதத்துக்காக வெயிட் பண்ணுவேன்..”

“ம்ம்ம்.. கடைசி வரைக்கும் சம்மதிக்கலன்னா?” 

“ரொம்பவே சிம்பிள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவேன்..” 

“ஓடியெல்லாம் போகாதடி தங்கம்… நேரா எங்க வீட்டுக்கு வந்துடு, நாங்களே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுறோம்..” என யாழிக்கு திருஷ்டி சுற்றினாள் வந்தனா.

“அதுக்கு முதல்ல அண்ணனும் வல்லியும்  ஓகே சொல்லணும்..” என்ற யாழினிக்கு ‘என்ன நடக்குமோ’ என்ற கவலையில் பெருமூச்சுதான் வந்தது.

 “அப்போ வெற்றியோட சம்மதம் வேண்டாமா.?” 

 “அவர்கிட்ட கேட்கனுமா என்ன?” 

“அது சரி… உன் கூட ஓடி வரப்போறவனே அவன்தான் மா.. அவன்கிட்ட கேட்காம?” 

“அதெல்லாம் வாங்கன்னு சொல்லக்கூட வேண்டாம், கண்ணக் காட்டினாலே வருவார்.. இப்போ, இந்த செகன்ட் கூப்பிட்டதுமே வந்துடுவார். நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தானே கூப்பிட போறேன்.” 

“ஆஹான்… ஓவர் கான்ஃபிடன்ட் ஆகாதுடி யாழி.. எங்கம்மா சீதாம்மாவை மறந்துடாத..”

“ஆன்டி என்னை வேண்டாம்னு சொல்லமாட்டாங்க..”

“எல்லாம் ஒரு பிளானோட தான் இருக்கீங்க.. நான்தான் வெட்டியா தண்டச்சோறு தின்னுட்டு சுத்திட்டு இருக்கேன்..” என இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்க,`இவர்கள் பேச்சைக் கேட்டு அதிர்ந்து, வந்த வேகத்திலேயே திரும்பி சென்றார் ராஜலட்சுமி.

அவர்கள் பேச்சை மற்றொரு பக்கமிருந்து கேட்ட பார்வதி பாட்டிக்கும் மனம் திக்கென்றுதான் ஆனது. 

தன் அறைக்கு வந்த ராஜலட்சுமிக்கு மனம் நிலைகொள்ளாமல் முரண்டியது. மகளை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் வேகமும் வந்தது.

மகள் இப்படி முரட்டு பிடிவாதமாக திருமணத்தை வேண்டாம் என்று மறுக்கவுமே, ராஜலட்சுமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. 

அது உண்மையாக இருக்கக்கூடாது என்று அந்த நொடி, கடவுளை மனதுக்குள் அத்தனை வேண்டி இருந்தார்.

ஆனால் கடவுளோ அவர் வேண்டுதலை நிராகரித்தது மட்டுமில்லாமல், அவருக்கு பிடிக்கவே பிடிக்காத அந்த குடும்பத்து பையனையே விரும்ப வைத்திருந்தார்.

இதை ராஜலட்சுமியால் ஜீரணிக்கவே முடியவில்லை. கர்ணனை இங்கு வரவிடாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தார், சொக்கலிங்கத்தின் உடல்நிலை அவனை வர வைத்தது.

அவனுக்கு திருமணமே செய்து வைக்கக்கூடாது என நினைத்து, பெண் பார்த்துக் கொண்டிருப்பது போலவே, எல்லோரிடமும் நடித்துக் கொண்டிருந்தார். 

வள்ளியை பார்த்ததும் கர்ணன் அதை முறியடித்திருக்க, சொக்கலிங்கத்தின் ஆசையும், ஆதரவும் அதுவாகவே இருக்க, மேலும் சொக்கலிங்கம் சொத்தை காட்டியும் மிரட்டி இருக்க, அவரால் அந்த கல்யாணத்தை நிறுத்த முடியாமல் போனது.

கல்யாணம் முடிந்தால் முடியட்டும், வாரிசு வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்ற திட்டம் வைத்திருக்க, அந்தத் திட்டத்தையும் வல்லி முறியடித்திருக்க, ராஜலட்சுமியின் கோபமும், ஈகோவும் பெருமளவில் சீண்டி விடப்பட்டிருந்தது.

இதில் பொறுமையாக யோசித்து இவர்களைப் பிரித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, இந்த வனிதா வேறு தினம் தினம் ஒரு புது பிரச்சனையை எடுத்துக் கொண்டு வருவது, அவரது பிபியை ஏகத்துக்கும் ஏற்றி வைத்திருந்தது.

இப்போது யாழினி அவருக்கு பிடிக்கவே பிடிக்காத, அவர் முற்றிலும் வெறுக்கும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பையனை விரும்புவது, அவரது தன்மானத்துக்கு வந்த இழுக்காகவும், வல்லி முன் தான் தோற்றுப் போய் நிற்பதாகவும் தோன்ற, இதை கண்டிப்பாக நடக்கவே விடக்கூடாது என்ற முரட்டுப் பிடிவாதம் அவருக்கு தோன்றியது.

அதோடு இப்போது இதை மகனிடமோ, முக்கியமாக மகளிடமோ சொல்லிவிடக்கூடாது என்று உறுதியாக நினைத்தார்.

சுந்தர் யாரிடமும் வெளியில் சொல்லமாட்டான் என்றாலும், மனைவியிடமும் எதையும் மறைக்கமாட்டான். சுமித்ராவின் வாய் கண்டிப்பாக சும்மா இருக்காது, அவள் தாய் வீட்டில் கூற, அது எப்படியாவது மற்றவர்களின் காதுக்கு வந்து விடும். அதை அவர் சுத்தமாக விரும்பவில்லை.

அடுத்து வனிதா. வனிதா, ஒரு அவசர குடுக்கை. அவளுக்கு இடம், பொருள் எல்லாம் புரியாது. உடனே அந்த விஷயத்தை பேசி, சண்டையிட்டே தீர வேண்டும். அப்படி நடந்தால் யாழினியின் பிடிவாதம் அது அதிகமாகும். வீம்புக்கென்றே அவள் சொன்னதைப் போலவே ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு, தன் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டு விடுவாள்.

அது ஒருபோதும் நடந்துவிடக்கூடாது என்று தெளிவாகி விட்டார் ராஜலட்சுமி.

ஆனாலும் மகள் மேல் கொலை வெறி கோபத்தில் இருந்தார்.

இங்கு பார்வதி பாட்டியின் முகம் வருத்தத்தில் இருக்க, அதை கவனித்த சொக்கலிங்கம் ‘என்னத்த’ என்று செய்கையில் கேட்க,

‘சொல்லலாமா? வேண்டாமா?’ என ஒரு நொடி யோசித்தவர், பின் அவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடாது, அதோடு யாழினி விஷயத்தில், ராஜலட்சுமி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வாள் என்ற உண்மை உணர்த்த, அங்கிருந்த பாண்டியனை ஒரு பார்வை பார்த்தார்.

அதை உணர்ந்த பாண்டியன் “நான் கர்ணன் சார் வச்ச ஆள் தான்மா, என்னை நம்பி நீங்க எந்த ரகசியத்தையும் தைரியமாக பேசலாம்.. என்னைத்தாண்டி வெளியேப் போகாது..” என்று கூற,

சொக்கலிங்கமும் ‘ஆமாம்’ என்பது போல் ஒரு பார்வையை கொடுக்க, தான் பார்த்தது கேட்டது என அனைத்தையும் மருமகனிடம் ஒப்பித்து விட்டார் பார்வதி.

அதைக் கேட்ட சொக்கலிங்கத்திற்கு ஒரு நொடி என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

அவருக்குமே மனைவியை நினைத்து, அத்தனை பயம் வந்திருந்தது.

கர்ணனின் விஷயத்தில் மிரட்டி பணிய வைத்தது போல், யாழினியின் விஷயத்தில் மனைவியை மிரட்டி விட முடியாது என்று அவருக்கு தெரியும்.

இது மட்டும் தெரிந்தால் நிச்சயம் மருமகளை பேசியே துரத்தி விடுவாள் என்றும் தெரியும்.

கர்ணனுக்கு தெரிந்தால்?

வனிதாவுக்கு தெரிந்தால்?

சுந்தருக்கு தெரிந்தால்.? என அவர் மனம் அனைத்தையும் யோசித்து, பதட்டப்பட ஆரம்பித்தது.

அதை கவனித்த பாண்டியன் “சார் சார் இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.. கர்ணன் சார் எல்லாத்தையும் பார்த்துப்பார். நீங்க இப்படி பதட்டப்படாதீங்க.. இப்படி பதட்டப்பட்டா உங்களோட பிரஷர் லெவல் கூடிடும்..” என மெதுவாகப் பேசி, பேசி அந்த சூழலை சமாளித்தார்.

பார்வதியும் “கர்ணாவுக்கு இது தெரியாம இருக்காது மாப்பிள்ளை.. தெரிஞ்சதால தான் பொறுமையா பேசிட்டு போயிருக்கான்.. அவனுக்கு வல்லியும் முக்கியம், யாழியும் முக்கியம். அப்படியெல்லாம் ராஜியோட பேச்சைக் கேட்டு தப்பு செய்யமாட்டான். நமக்கு இது தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..” என்று சமாதானம் செய்ய,

ஆனாலும் சொக்கலிங்கத்தின் முகம் தெளியவில்லை. மனைவியின் குணம் அவருக்கு தெரியுமே! இந்த பிரச்சனையை சாதாரணமாக கடந்து விடுவாள் என்று அவரால் நினைக்கவே முடியவில்லை.

இதில் வள்ளியின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. வள்ளி பிள்ளை உண்டான இந்த நேரத்தில், இதெல்லாம் தேவையா என்று யாழினியின் மேலும் கோபம் வந்தது.

இப்போது கூப்பிட்டு அதட்டி சத்தம் போட மனம் கூச்சலிட்டாலும், மனைவியின் குணம் உணர்ந்து அமைதியாக இருந்தார் சொக்கலிங்கம்.

பார்வதி பாட்டிக்கும் அதே எண்ணம்தான். இருவரும் அவரவர் எண்ணங்களில் இருக்க, இருவருக்கும் காப்பியோடு வந்தாள் யாழினி, கூடவே வந்தனாவும். 

அவர்களைப் பார்த்ததுமே அறையில் இருந்த மூவருமே, தங்களின் முகபாவனையை மாற்றி, சிரித்த முகமாகவே வரவேற்றனர்.

“பாண்டியன் சார் உங்களுக்கும் காஃபி எடுத்துட்டு வரட்டுமா?” என்ற யாழினியிடம்,

“சாருக்கு இப்போ காபி கொடுக்க வேண்டாம் மேம்.. இப்போதான் பில்ஸ் எடுத்திருக்கார். ஒரு ஒன் அவர் கழிச்சு ஜூஸ் கொடுங்க போதும்..” என்றவனிடம்,

சரியென்றவள் தந்தைக்கு கொண்டு வந்த காபியை அவனிடம் நீட்ட “தேங்க்ஸ்..” என்றதோடு அங்கிருந்து நகர்ந்துவிட, யாழினிக்கு தந்தையிடம் இதை எப்படி சொல்ல என தெரியவில்லை.

‘இன்று ஏன் இப்படி நடந்துகொண்டாய்?’ என்று கேட்டால், மனதை தைரியப்படுத்தி எப்படியாவது சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க, அவரோ அமைதியாக பெட்டில் சாய்ந்திருந்தார்.

“ப்பா..” என்றவள், ஏதோ சொல்ல வாயெடுக்க “அப்பா என்றபடியே உள்ளே வந்தாள் வனிதா.

இவள் முன்னால் கண்டிப்பாக தன் காதல் விவகாரத்தை பேசவேக்கூடாது என முடிவெடுத்த யாழினி சட்டென தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

உள்ளே வந்த வனிதா அங்கிருந்தவர்களை சுற்றிப் பார்த்துவிட்டு, வந்தனாவை முறைக்க, அவளோ ‘நல்லா முறைச்சுக்கோ, உனக்குத்தான் கண்ணுவலி வரும்’ என மனதுக்குள்ளே கவுன்டர் கொடுத்துவிட்டு, பாவம் போல் நிற்க,

“ப்பா உங்ககிட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும்..” என பல்லைக் கடித்து ஆரம்பித்தாள்.

“தனியா எல்லாம் பேசமுடியாது. நானும் இங்கதான் இருப்பேன்..” என யாழினியும், பாண்டியனும் கோரசாக சொல்ல, எரிச்சல் வந்துவிட்டது வனிதாவிற்கு.

“ப்பா.. என்ன இது?” என கோபமாக கேட்டு, “எனக்கு உங்ககிட்ட தனியா பேசியே ஆகனும்..” என பிடிவாதம் பிடித்தாள்.

அவளின் பிடிவாதம் புரிந்த சொக்கலிங்கமும் பாண்டியனை வெளியில் போகச் சொல்லிவிட்டு, யாழினியைப் பார்த்து தலையை அசைத்தார்.

அங்கிருந்த மற்ற மூவரும் வெளியேறியதும், பாண்டியன் வந்து சொக்கலிங்கத்தை நிமிர்த்தி, நன்றாக சாய்ந்து உட்காரும்படி அமர்த்திவிட்டு, அவரின் கையில் ஒரு பட்டனையும் கொடுத்துவிட்டு சென்றான்.

வனிதாவிற்கு அவன் பட்டனைக் கொடுத்ததெல்லாம் தெரியவில்லை. தனதையை வசதியாக உட்கார வைத்துவிட்டு செல்கிறான் என்று மட்டும் தெரிந்துகொண்டாள்.

செல்லும் போது “ரொம்பவும் கோபமா பேச வேண்டாம் மேடம். சாரோட பிபி இப்போ ஹையா இருக்கு.. கவனமா பேசுங்க..” என்றுவிட்டு செல்ல, அதைக் கேட்டு பல்லைக் கடித்தாள் வனிதா.

“அப்பா.. என்ன சொல்லிட்டு போறான் இவன். நான் என்ன உங்களை டென்சன் பண்ற ஆளா? முதல்ல இவனை வேலை விட்டு தூக்கனும்..” என கத்திய மகளை அமைதியாக பார்த்தார் சொக்கலிங்கம்.

அந்த பார்வை “உனக்கு என்ன சொல்லனுமோ அதை மட்டும் சொல்லு..” என்பது போல் பார்க்க,

அதில் வனிதாவிற்கு கோபம் வர, அவள் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, அந்த அறையின் அலாரம் அலற ஆரம்பிக்க, வெளியில் இருந்து வந்த அத்தனை பேரும் பார்த்தது சொக்கலிங்கம் மயங்கி சரிந்திருந்ததையும், அதை வனிதா பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததையும் தான். 

You may also like

1 comment

M. Sarathi Rio April 19, 2026 - 8:32 pm

அய்யய்யோ..! இந்த வனிதா இப்ப எதுக்கு வந்தான்னு தெரியலையே ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured