Home Love & Romanceமுத்த மழை – 26

முத்த மழை – 26

by Vathani S

முத்தமழை – 26

“வல்லி உன்னை கோவில்ல விட்டுட்டு போகவா..?” என்றபடியே சாப்பிட ஆரம்பித்த கணவனிடம்,

“எங்களை கோயம்புத்தூர்ல ட்ராப் பண்ணிட்டு, நீங்க திருப்பூர் போவீங்களா..” என வல்லபி பதிலுக்கு கேட்க,

“ஓ அங்க போறீங்களா? ட்ரைவர் இன்னைக்கு லீவாச்சே?” என்றான் மீண்டும்.

“நானும் பாட்டியும் போய்க்குவோம்.. சீதாம்மாவும் வந்தனாவும் அப்படியே வந்துடுவாங்க..” என்றாள் முறைப்பாக.

விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, இப்போ மறுபடியும் முதல்ல இருந்து கேட்டா அவளுக்கும் கடுப்பாகும் தானே..

அவள் முறைப்பாகவே பரிமாறிக் கொண்டிருக்க, அதை கண்களில் விசம சிரிப்புடன் ரசித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கணவன்.

“என்ன யாழி உன் பேஸ் இவ்ளோ டல்லா இருக்கு.?” என சுமித்ரா கவனித்து கேட்க, கர்ணனும் அப்போதுதான் தங்கையை கவனித்தான்.

“என்ன யாழிமா?” என கர்ணன் பதட்டமாக கேட்க,

“ண்ணா ஒன்னுமில்ல.. லைட்டா தலைவலி. சாப்பிட்டு ஒரு காபி குடிச்சா போதும்..” என்ற தங்கையிடம்,

“நீ ஓக்கே தான. இல்லை ஹாஸ்பிடல் போகனுமா? இன்னைக்கு ஆஃப் சொல்றியா ரெஸ்ட் எடுப்பியாம்..” என்றான் கரிசனமாக.

“அண்ணா.. நான் ஓக்கே தான். சீக்கிரம் கிளம்பலாம். நான் கார்மென்ட்ஸ் வந்துட்டு ஆஃபிஸ் போக லேட்டாகிடும்..”

“ம்ம் நீ காஃபி குடிச்சா கிளம்பலாம்..” என்ற நேரம் அவளுக்கு காஃபியோடு வந்தாள் வல்லபி.

“தேங்க்ஸ் வல்லி..” என்றபடியே காஃபியோடு தந்தையின் அறைக்கு யாழினி செல்ல,

“வீட்டுல ஒரு வயசு பொண்ணு இருக்கான்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கனும். நினைச்ச நேரமெல்லாம் கொஞ்சிக்கிட்டு திரிஞ்சா, அதை பார்த்தா அவ மனசு என்ன நினைக்கும்..” என அதுவரை கணவன் மனைவி இருவரையும் பார்த்து எரிச்சலில் இருந்த ராஜி கடுப்பாக பேச, அந்த பேச்சில் கர்ணன் பாதி சாப்பாட்டில் எழ, வல்லபிக்கு மூக்கு மேல் கோபம் வந்துவிட்டது.

“உட்காருங்க பாவா.. பாதி சாப்பாட்டுல எழுந்துக்கக்கூடாதுனு உங்ககிட்ட பலதடவை சொல்லிட்டேன்..” என அவனிடம் பல்லைக் கடித்தவள், ராஜியைப் பார்த்து “புதுசா கல்யாணம் ஆனவங்க இப்படித்தான் இருப்பாங்க. அது கூட உங்களுக்குத் தெரியாதா? நீங்கதான் வீட்டுக்கு பெரியவங்களா, அவளைக் கூப்பிட்டு வச்சு சொல்லி கொடுக்கனும். அதை விட்டுட்டு தொட்டதுக்கெல்லாம் எங்களையே குறை சொல்வீங்களா? ஏன் இந்த வீட்டுல ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க இருக்காங்களே, அவங்களை ஏன் நீங்க ஒன்னும் சொல்றது இல்ல..” என முகத்துக்கு நேரே கேட்க,

வல்லபி இப்படி நேருக்கு நேராக கேட்டது  ராஜலட்சுமிக்கும் அதிர்ச்சிதான். ஏன் மற்றவர்களுக்குமே அதிர்ச்சிதான். இத்தனை நாட்களில் அவள் சிறியதாக கூட யாரிடமும் முகத்தைக் காட்டியது இல்லை.

ராஜலட்சுமி என்ன சொன்னாலும், அவரைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருப்பாள். இப்போது மட்டும் ஏன்.? என கேள்வி குடைந்தாலும் மற்றவர்கள் வாயைத் திறக்கவே இல்லை.

“வல்லி..” என கர்ணன் மனைவியை அடக்க,

“அவளை பேசவிட்டு வேடிக்க பார்த்துட்டு, இப்போ வந்து அடக்குறியா..?” என வல்லபியின் மேல் உள்ள கோபத்தை கர்ணனிடம் காட்ட, ஆனால் அவனோ அதை காதில் வாங்கியது போல் கூட காட்டிக்கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் அவருக்கு பதில் தரும் விதமாக பாட்டி “உனக்கு என்ன சொன்னாலும் புரியாது ராஜி. ஆனா சீக்கிரம் எல்லாம் புரியும் போது நீ தனியா இருப்ப..” என்றதும்,

“என்ன சித்தி பேசுறீங்க. அவன் என் மகன். என் மகனை பேசக்கூட ஒவ்வொருத்தருகிட்டயும் அனுமதி வாங்கனுமா? இதுக்குதான் என் வாழ்க்கை போனா போகுதுனு இவனை வளர்க்க அந்தாளை நான் ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டேனா.?” என்றார் ஆத்திரமாக.

அந்த வார்த்தையில் துளியும் உண்மை இல்லை என்று அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். ஏன் அவருக்குமே தெரியும். அப்படி இருக்க இது அவரின் இயலாமையின், கோபத்தின் வெளிப்பாடு என புரிய, அவரது பேச்சை ஒதுக்கி அனைவரும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பிக்க, அதுவும் ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது.

கர்ணனும், யாழினியும் கிளம்பிய சிறிது நேரத்திலேயே வல்லியும் பாட்டியும் கோணியம்மன் கோவிலுக்கு கிளம்பிவிட்டனர்.

பாண்டியன் சொக்கலிங்கத்திற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிக்காக அறைக்குள் இருக்க, சுமித்ராவும் ராஜலட்சுமியும் உணவு மேஜையில் எதிரெதிரே அமர்ந்தனர்.

“இன்னைக்கு என்ன ஆச்சு அத்தை உங்களுக்கு.?” என சுமித்ரா உணவை எடுத்து வைக்க,

“ம்ச்.. இப்போ இந்த சோறு தான் முக்கியமா?” என அவளிடமும் காய்ந்தவர், “இன்னும் கொஞ்ச நாள்ள அவ புள்ளைய பெத்து, மொத்த சொத்தையும் எடுத்துட்டு போய்டுவா, அப்போ நீயும் உன் பிள்ளைங்களும் தெருவுல தான் நிப்பீங்க. கொஞ்சமாவாது வீட்டுல என்ன நடக்குதுனு புரியுதா உனக்கு.? இதுல ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மா வேற..” என சுமித்ராவிடம் எரிந்து விழ,

“என்னத்த சொல்றீங்க.? வல்லி கன்சீவா இருக்காளா? நம்மக்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே? என்ன நினைச்சிட்டு இருக்கா அவ.?” என கோபமாக கேட்க,

“க்கும்.. அது தெரிஞ்சிருந்தா இன்னேரம் இந்த வீடு ரெண்டாகியிருக்காது. அவ மாசமா இருக்கறது இன்னும் அவளுக்கே தெரியாதுனு நினைக்கிறேன். ஆனா எத்தனை நாள் தெரியாம இருக்கும். சீக்கிரம் தெரியும். அவளுக்கு தெரியுறதுக்கு முன்னாடி நாமளே எதாச்சும் பண்ணனும். அது வளர வளர நமக்குத்தான் பிரச்சினை..” என்றதும் சுமிக்கு முகமே வியர்த்துவிட்டது.

“அத்தை… என்ன சொல்றீங்க…? அவளுக்குத் தெரியாம அந்த கருவை கலைக்க போறீங்களா? இது மட்டும் தெரிஞ்சது மாமா நம்மளை உயிரோட புதைச்சிடுவார்.. நான் இந்த விளையாட்டுக்கே வரல. நீங்க என்னமோ பண்ணுங்க. எப்படியோ போங்க. இப்படினு என் அம்மாவுக்கு தெரிஞ்சாலே என்னை இங்க அனுப்ப யோசிப்பாங்க. நான் இப்பவே என் அம்மா வீட்டுக்கு போறேன்..” என சுமி பயத்தில் பேசிய படியே தன் அறைக்கு ஓட,

“ஏய் பைத்தியம்.. என்ன பேசிட்டு இருக்க..? இந்த வனிதா பேச்சைக் கேட்டு உன்னை என் பையனுக்கு கட்டிட்டு வந்து பெரிய தப்பை பண்ணிட்டேன்..” என தலையில் அடித்தபடியே சுமித்ராவிடம் சென்றவர் “சுமி.. நாம பேசினத நீ யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது, அப்படி ஏதாவது உளறி வச்சு வெளிய வந்தது, என்னோட இன்னொரு முகத்தை தான் நீ பார்க்க வேண்டி வரும்..” என மிரட்டிவிட்டு தன்னறைக்குச் செல்ல சுமித்ராவிற்கோ பயம் பிடித்துக் கொண்டது.

இப்போது இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவித்தவள், மாமியாரின் மிரட்டலை நினைத்து அமைதியாக இருந்தாலும் தனக்குள்ளே தவித்தபடி வல்லியின் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டிக் கொண்டாள்.

காரை ஓட்டிக் கொண்டிருந்த வல்லபியிடம் பாட்டி “வல்லி உனக்கு என்ன ஆச்சு? நீ இப்படி கோபப்படுற ஆளே இல்லையே? ராஜி எப்போது இந்த மாதிரி பேசுறவதானே.?” என்றதும்,

“பேசி முடிச்ச பிறகுதான் எனக்கே புரிஞ்சது பாட்டி. அதுக்காக நான் பேசினதுக்கு வருத்தமெல்லாம் இல்ல. அவங்க பேசினது தப்புத்தானே.!” என்றாலும் பெரியவர்களை எதிர்த்து பேசிவிட்ட ஒரு குடவுணர்ச்சி அவளுக்குள் உண்டாகத்தான் செய்தது.

கணவன் கிளம்பும் போது கூட அவளை தன் கையணைப்பில் வைத்துக்கொண்டு “என்னடி ஆச்சு..?” என அவளின் முகத்தைப் பார்த்து கேட்கத்தான் செய்தான். 

அவளுக்கேத் தெரியாத போது அவனுக்கு மட்டும் எப்படி பதில் சொல்வாள். அமைதியாக அவனின் கையணைப்பிலேயே இருந்தாள்.

“அம்மு.. நீங்க விரதம்.. கோவிலுக்கு போகனும். இப்படி எங்கிட்ட இருந்தா எனக்கு என்னென்னமோ தோணுதே..” என அவளின் கழுத்து வளைவில் தன் மூக்கை உரச,

“ஹ்ம்ம்..” என்றாலும் கணவனை விட்டு பிரியவில்லை.

இது அவள் கிடையாதே!. இந்நேரம் அவனைத் தள்ளிவிட்டு ஒரு முறைப்பையும் பரிசளித்திருப்பாளே.. என்ன போட்டு அவளை குடைகிறது என யோசித்தாலும், தன் அனைப்பை இறுக்கி இன்னும் நெருக்கமாக மனைவியின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்தான்.

அவனாக விடுவிக்கும் வரை அமைதியாக இருந்தவளைப் பார்த்து கர்ணனுக்கு யோசனைதான். அவளோடு இருந்து என்ன என்று கேட்டு சரி செய்யும் வேகம் எழுந்தாலும், இப்போது அவன் போயே ஆக வேண்டிய கட்டாயம் வேறு.. அதனால் மனைவியை மீண்டும் ஒரு முறை இறுக்கமாக அனைத்து “ஈவ்னிங்க் சீக்கிரம் வந்துடுறேன் அம்மு.. டேக் கேர் ஓக்கே..” என பிரிய மனமில்லாமல் தான் பிரிந்து சென்றிருந்தான்.

அதையெல்லாம் யோசித்தபடியே தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தாள். 

அப்போது “நாங்க வந்துட்டோம் வல்லிக்கண்ணு..” என்ற வந்தனாவின் ஆடியோ மெசேஜ் வர, வல்லபியின் முகத்தில் லேசான புன்னகை.

சில நிமிடங்களில் அவர்களும் கோவிலுக்குள் செல்ல, நால்வரும் அம்மனை வணங்கி வெளியே வரும் நேரம் வல்லபியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அருகில் வந்த வந்தனாவின் கரங்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தன்னை நிலை நிறுத்த முயன்றாள், முடியவில்லை. அப்படியே கீழே அமர்ந்துவிட, “ஹேய் வல்லி… என்ன? என்ன செய்யுது?” என தன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு, பதட்டமாக வல்லபியை வந்தனா பிடித்துக்கொண்டாள்.

இவளின் சத்தத்தில் முன்னே சென்று கொண்டிருந்த பெரியவர்கள் இருவரும் திரும்பியவர்களின் பார்வையில், முகமெல்லாம் வியர்த்து, சோர்ந்து போய் அமர்ந்திருந்த வல்லிதான் விழுந்தாள்.

“ம்மா.. வல்லிக்கு உடம்புக்கு முடில போல.. ஹாஸ்பிடல் போகலாம்.” என வந்தனா கத்த, அதற்குள் அங்கு சிறு கூட்டமே கூடிவிட்டது.

சீதாவும் பாட்டியும் அவளை ஆளுக்கொரு பக்கம் பிடித்து விசாரித்துக் கொண்டிருக்க, வந்தனா உடனே கர்ணனுக்கு அழைத்து “மாமா வல்லிக்கு என்ன? அவளுக்கு உடம்பு முடிலன்னா எதுக்கு கோவிலுக்கெல்லாம் அனுப்புறீங்க, அதுவும் செல்ஃப் ட்ரைவிங்க் வேற, கோவில்ல மயங்கி விழுந்த மாதிரி ட்ரைவிங்க்ல ஆகிருந்தா என்ன ஆகிருக்கும்..” என படபடவென பொரிய,

“ஏய் பைத்தியம்..” என சத்தமாக அதட்டியவன் “பொறுமையா என்ன நடந்ததுனு சொல்லு..” என கேட்க, வந்தனாவும் கடுப்பாகவே மீண்டும் சொல்ல, 

“நீ KGக்கு கூப்பிட்டு போ.. நான் வந்துடுறேன்..” என போனை வைத்தவன் அங்கிருந்தவர்களிடம் சூழ்நிலையை விளக்கிவிட்டு உடனே கிளம்பியிருந்தான்.

கர்ணனிடம் கத்திவிட்டு அவர்களிடம் வர, மூவரின் முகமும் பளிச்சென்று மலர்ந்து இருந்தது. அதிலும் வல்லியின் முகம் ரூஜ் போட்டது போல சிவந்து கிடந்தது.

அதைக் கண்டு குழப்பமாக “என்ன ம்மா..?” என சீதாவிடம் கேட்க,

“எல்லாம் நல்ல விசயம் தான்.. உனக்கு போட்டியா,உன்னை வச்சு செய்ய நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி வரப்போறாங்க. நீ சித்தி ஆகப்போற..” என தன் சந்தோசத்தைப் பகிர, 

வந்தனாவோ “அட ஹாஜி கபில்ஸ்.. அதுக்குள்ள என்னை சித்தி ஆக்கி வச்சிருக்க.. எனக்கு இப்ப சித்தி ஆகுற வயசாடி..” என பாவமாக கேட்க, வல்லியின் முகம் வெட்கமும் புன்னைகையுமாக மலர்ந்து விகசித்தது.

வல்லபி கர்ப்பமாகிவிட்டது உறுதியாகிவிட, இதை அறிந்து கொள்ளும் போது ராஜலட்சுமியின் நிலை என்னவாக இருக்குமோ?

You may also like

2 comments

Vijaya Veeraraghavan February 4, 2026 - 9:51 am

Nice 👍 interesting

Reply
mriomrio28399 February 4, 2026 - 2:39 pm

ரெண்டு பிள்ளையை பெத்தவ மாதிரியா இந்த ராஜி பேசுது, கர்பத்தை கலைக்கணுமாம்,
இருடி பேரப்புள்ளை பிறந்து அதோட பிஞ்சு காலால உன்னை எட்டி உதைக்கும்போது தான்
உன் வாய் அடங்கும் போல.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to mriomrio28399 Cancel Reply

About Me

Featured