தளிர் 25
முதல்நாள் இரவு உஷாவும் நரேனின் நண்பன் ஒருவனும் துணைக்கு இருக்க, அடுத்த நாள் காலை நிசா துணையிருக்க, மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். நரேன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து இதுதான் வழமையாக இருந்தது.
அன்றும் அப்படியே நடக்க, நரேனுக்கு வேண்டியதை செய்துவிட்டு வெளியில் அமர்ந்திருந்தவளிடம், “ஹேய் லிசன், உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என அருகில் வந்து நின்றான் விக்ரம்.
பட்டு வேட்டி, சட்டை எனத் திருமண உடையில் இருந்தான் விக்ரம். அப்போதுதான் அவளுக்கும் நிதர்சனம் பிடிபட்டது. இன்று காலையில் தானே இவர்களுக்குத் திருமணம் முடிந்திருக்கும். மனம் கனத்தது. இவளுக்காக அல்ல, உள்ளே சுயநினைவின்றிக் கிடக்கும் நரேனுக்காக. உள்ளுக்குள் பொங்கிய கோபத்தையும் ஆற்றாமையையும் வெளிக்காட்ட இது நேரமல்ல என்று உணர்ந்தவள், ‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
அவளது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு அவளது எண்ணவோட்டங்கள் புரியாமல் இல்லை. அவனைப் போலவே அவளும் இந்த சூழ்நிலையைக் கடந்து வரவேண்டும் என்று யோசித்தான். அதனால் அவளிடம் மிகவும் பொறுமையாகப் பேச வேண்டும் என நினைத்து, பேச வந்ததை மெதுவாக ஆரம்பித்தான்.
“நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. ஆனா இப்போ இதை நாம செய்யாம விட்டா கடைசி வரைக்கும் நரேன் இப்படியேதான் இருப்பான். அவனையும் அவன் வாழ்க்கையையும் சரி செய்யத்தான் நான் நினைக்கிறேன். அதனால…” என்றவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தி,
“உன் அண்ணன் லைஃப் நல்லா இருக்கணும்னா, இதைக் கண்டிப்பா செய்யணும் நீ.” என தயங்கியேதான் சொன்னான்.
“ப்ளீஸ், ஏற்கனவே எனக்கு பைத்தியம் பிடிக்கிறமாதிரி இருக்கு. இதுல புதுசா நீங்களும் ஒன்னை ஆரம்பிக்காதீங்க. என்ன சொல்லணும்? சுத்தி வளைக்காம விசயத்த சொல்லுங்க, நான் என்ன செய்ய முடியும்?” எனச் சற்றே கோபத்தில் கேட்க,
“சில்… சில்… நான் சொல்றேன், நோ டென்சன். உன் ஃப்ரண்ட் அந்த பொண்ணு உஷா, நரேனை லவ் பண்றாதானே, அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் செய்து வச்சிடலாம், ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா…” என முடிக்கும் முன்னே,
“போதும் கிளம்புங்க…” என்ற வார்த்தைகளில் கடினம் காட்டியவளை, ‘ஆரம்பிச்சிட்டா’ என எரிச்சலாகப் பார்த்தான் விக்ரம். முகம் சிவக்க, உடல் நடுங்க நின்றிருந்தவள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று, அவளது முகத்தைப் பார்த்தாலேப் புரிந்தது, பரிதாபமும் வந்தது.
ஆனாலும் அந்த பரிதாபத்தை முகத்தில் காட்டாமல், “நான் சொல்றதைக் கொஞ்சம் அவசரப்படாம கேளு.” என விக்ரம் சொல்ல,
“ப்ளீஸ் போதும், நரேன் அண்ணாவால் உங்க தங்கச்சி வாழ்க்கை எப்பவும் கெட்டுப் போகாது. நான் கியாரண்டி, வாரண்டி எல்லாம் தரேன். அதுக்காக இவ்வளவு மட்டமா இறங்க வேண்டாம், போங்க.” என அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் நிசப்தி கத்த,
“ஹேய்! எதுக்கு இப்படி வயலன்ட் பண்ற? நான் உங்கிட்ட பொறுமையாதானே பேசுறேன். நான் சொல்றதை நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்குற. இப்போ அவனை விட்டுட்டா அடுத்து நீ என்னதான் ஃபோர்ஸ் செஞ்சாலும், தலைகீழா நின்னாலும் மேரேஜுக்கு ஓகே சொல்லமாட்டான். அன்ட் அந்த பொண்ணு உஷாவும் நரேனைத் தவிர யாரையும் மேரேஜ் பண்ணிக்கமாட்டா. இப்போ ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும், நாள்போக்குல கண்டிப்பா அவங்க வாழ்க்கையை அவங்க வாழ்வாங்க, உஷாவும் அவ வீட்டுப் பிரச்சனையில இருந்து ரிலீஃப் ஆகலாம். ப்ளீஸ் நீ யோசிச்சு எனக்கு சொல்லு. அவசரப்பட்டு முடியாதுன்னு சொல்லி பின்னாடி கஷ்டப்படாதே.” என விக்ரம் பேசி முடிக்கவும், நரேனின் நண்பர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
வந்தவர்கள் அங்கு விக்ரமைப் பார்த்து மரியாதைக்கு பேசிவிட்டு நிசப்தியிடம் பேச ஆரம்பித்துவிட, விக்ரமிற்கு புரிந்தது எல்லோரும் அவன்மீது கோபமாகத்தான் இருக்கிறார்கள் என்று. இப்போது அவனால் எதுவும் செய்ய முடியாத கட்டத்தில் இருக்கிறான். அதோடு ஸ்வாதி வேறு போன் அடித்துக்கொண்டே இருந்தாள். அப்படியிருக்க அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை. அமைதியாக ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதும் எல்லோரும் நிசப்தியைப் பார்க்க, அவளும் விக்ரம் தன்னிடம் பேசியதைக் கூற, ஒருபக்கம் அவன் சுயநலமாக யோசித்திருந்தாலும், மற்றொரு பக்கம் நரேனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால், அவனைப்பற்றியும் யோசித்திருக்கிறான் என்றுப் புரிந்தது.
யோசனையாக இருந்த நண்பர்களும், விக்ரம் பேச்சே சரியெனச் சொல்ல நிசப்திக்கும் அதுவே சரியெனப்பட, நரேனிடம் எப்படி பேசுவது என யோசிக்க ஆரம்பித்தாள்.
இங்கு திருமணம் எந்தக் குறைவும் இன்றி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. ரேணுகாவும் சரி, மதியழகியும் சரி மகள்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. திருமணம் முடிந்த கையோடு அடுத்தடுத்து சம்பிரதாயங்களும் நடக்க, கிடைத்த நேரத்தில்தான் நரேனைப் போய் பார்த்து வந்திருந்தான் விக்ரம்.
நரேனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தாலும், தன் தங்கையின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டியம் கட்டாயம் ஒரு அண்ணனாக அவனுக்கு இருந்தது. அதோடு நரேனும் அப்படியே வாழ்க்கையை தொடர்ந்து விடுவானோ என்று பயந்துதான் நிசப்தியிடம் அதைப்பற்றி பேச ஆரம்பித்தான். அவளும் யோசிப்பாள், யோசித்து நல்ல முடிவாக எடுப்பாள் என நம்பினான்.
ரித்திக்கு மனதில் இப்போது எந்தக் குழப்பமும் இல்லை. நரேன் அவள் மனதில் எந்த மூலையிலும் இல்லை. அதனால் ரவியுடனான வாழ்க்கையை பல எதிர்பார்ப்புகளுடனே தொடங்க ஆரம்பித்தாள்.
அன்றிரவு விக்ரமின் அறைக்கு வந்த ஸ்வாதியிடம் நெருங்க ஆரம்பிக்க, “விக்ரம் எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல, இப்போ நடக்குற பிரச்சனை எல்லாம் என்னாலதான் நடக்குதோன்னு ஒரு எண்ணம். அதோட ரித்தியோட லவ் இன்னும் ரவிக்கும் அம்மாவுக்கும் தெரியாது. தெரிஞ்சா என்ன சொல்வாங்களோன்னு ஒரு பயம். இதெல்லாம் சேர்ந்து என்னை நார்மலா இருக்க விடல. ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் விக்கி. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.” எனக் கெஞ்சலும் கொஞ்சலுமாகப் பேச, ஏற்கனவே அரை மயக்கத்தில் இருப்பவனிடம் ஃபுல் பாட்டில் பிராந்தியைக் கொடுத்தால் என்ன ஆகும்? விக்ரமின் நிலை அப்படித்தான் ஆகிப்போனது.
அவள்மீது இருந்த மயக்கத்தில் சரியென்றுத் தலையாட்டி, அவள் கொடுத்த பாலைக் குடித்தவன் சிறிது நேரத்திலே உறக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அவன் உறங்கிவிட்டான் என்று தெரிந்த அடுத்த நிமிடம், அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த விக்கியெனும் போதை விழித்துக்கொள்ள, போனை எடுத்து விக்னேஷ்கு அழைத்தாள் ஸ்வாதி.
இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறாள் என யோசனையோடு எடுத்தவன், “ஹலோ” எனும் முன்னே அழ ஆரம்பித்து, “விக்கி… நான் உங்களை எவ்வளவு லவ் பண்ணேன் தெரியுமா? நீங்கதான் எனக்கு உயிர், நீங்க என்னை வேண்டாம்னு வெறுத்து ஒதுக்கின பிறகும்கூட உங்களையே நினைச்சிட்டு இருந்தேன். நான் உங்களை லவ் பண்றது தெரிஞ்சும் இந்த விக்ரம், என்னை ஏமாத்தி என் அண்ணன்கிட்ட பேசி என்னை கல்யாணம் செய்துட்டான். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கல. ‘போயும் போயும் அவன்தான் கிடைச்சானா உனக்குன்னு என்னைக் கேவலமா திட்டினதும் இல்லாம, அடிச்சிட்டு வெளியேப் போயிட்டான்.” என தன் நாடகத்தை ஆரம்பித்து வைத்தாள்.
“என்ன சொல்ற? பைத்தியமா உனக்கு? நீதான் லவ் பண்ண, நான் இல்ல. அவனைப் பிடிக்கலன்னா வீட்டுல பேசி வேற மாப்பிள்ளைப் பார்த்துருக்கலாம்தானே, எதுக்கு இப்படி பிரச்சனையில போய் மாட்டிக்கிற?” என விக்னேஷும் எரிச்சலில் கத்த,
“உன்னாலத்தான் உன்மேல இருக்குற கோபத்துலதான் அவன் என்னை மேரேஜ் பண்ணிருக்கான். உனக்கு இப்போ திருப்திதானே? நான் உன்னை மட்டும்தான் லவ் பண்ணேன், பண்ணுவேன். அப்படி ஒருவேளை விக்கி எங்கிட்ட தப்பா பிகேவ் பண்ணா என்னை நீ உயிரோடவேப் பார்க்க முடியாது.” என அழுகையும் ஆங்காரமுமாய் கத்திவிட்டு போனை வைத்தவள் முகத்தில் வெற்றியின் களிப்பு.
இங்கு விக்னேஷோ மிகவும் குழப்பத்தில் இருந்தான். அவன் மனதில் ஸ்வாதி பற்றிய எண்ணம் துளியும் இருக்கவில்லை. தன்னால் அவளுக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்பதையும் அவனால் நம்பமுடியவில்லை. ஏனென்றால் அவனுக்கு ஸ்வாதியை ஓரளவுக்குத் தெரியும். யாரையும் மதிக்கவும் மாட்டாள், யாருக்கும் பயப்படவும் மாட்டாள். அதோடு விக்ரமும் அவளைக் காதலிப்பதாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறான். அப்படியிருக்க இவள் சொல்வதை எந்தளவிற்கு நம்புவது என்றும் தெரியவில்லை.
அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் போது நிசப்திதான் நினைவில் வந்தாள். அன்று மட்டும் விக்ரம் எந்தப் பிரச்சனையும் செய்யாதிருந்தால், இந்நேரம் அவனுக்கு மனைவியாகி தன்னோடு இருந்திருப்பாள். அனைத்தையும் பாழாக்கிவிட்டு, நிம்மதியாக வாழ நினைக்கிறான் என யோசித்தவனின் மூளைக்குள் ஸ்வாதியின் பேச்சு ஒன்றன்பின் ஒன்றாக ஓட ஆரம்பித்தது.
நான் மட்டும் வலியில் துடிக்க, இவன் மட்டும் நிம்மதியாக இருப்பானா? அவனை எப்படி சும்மா விட? என திடீரென வில்லத்தனமாக யோசித்தவன் உடனே ஸ்வாதிக்கு அழைத்தான்.
அந்த நேரம் அவன் அழைப்பை ஸ்வாதி எதிர்பார்க்கவில்லை. வானத்தில் குதிக்க வேண்டும் போல் இருந்த எண்ணத்தைக் காட்டிக் கொள்ளாமல் போனை அட்டெண்ட் செய்து காதுக்கு வைத்தவள், “ஹலோ” எனக் கரகரப்பாகப் பேச,
விக்னேஷோ குரலில் சோகத்தைக் காட்டி, “ஸ்வே சாரி… வெரி சாரிமா. நீ இவ்ளோ சின்சியரா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. ஐம் சோ சாரி. என்னோட தப்பு இப்போதான் புரிஞ்சது. உனக்கு நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணாலும், எல்லாமே தப்பாதான் முடியும்பா. பார்க்குறவங்களுக்கும் தப்பாதா தெரியும். சோ முடிஞ்சவரை அவன்கூட வாழப்பாரு, இல்லைன்னா உன் அண்ணங்கிட்ட சொல்லி டிவோர்ஸ் வாங்கு.” எனச் சோகமாய், அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளை அவளை நோக்கி அம்பாக வீச, அதில் பொய்மான் வசதியாக மாட்டிக்கொண்டது.
“இட்ஸ் ஓகே விக்கி, எனக்கு உங்களைப் புரியுது. தகுதி இல்லாத ரெண்டு பேர் நம்ம வாழ்க்கைத் துணையா வந்துட்டாங்க. எல்லாம் விதி வேற என்ன சொல்ல?” எனவும்,
“நோ ஸ்வே, ஒரே தப்பை நான் மறுபடியும், மறுபடியும் செய்வேன்னு நினைக்கிறியா? நெவர்! இனி அவளா வந்து கெஞ்சினாலும், என் லைஃப்ல அவக் கிடையாது. சோ அதைப்பத்தி பேசாத.” என எரிச்சலாக விக்னேஷ் பேச, ஸ்வாதியின் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது.
அதைப் பேச்சில் துளியும் காட்டாமல், “இருந்தாலும் ஒரு பொண்ணோட வாழ்க்கை விக்கி. யோசிச்சு செய்யுங்க…” என்றவள், “விக்கி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே…” என இழுக்க,
“நோ ஸ்வே, நோ. நீ கேளு.” எனவும்,
“நான் பேசுறது தப்புன்னு எனக்குத் தெரியும், இது நடக்காதுன்னும் எனக்குத் தெரியும். ஆனா என்னோட காதல் மனசு இது எதையுமே ஏத்துக்க விடமாட்டேங்குது. நான் என்ன பண்ணட்டும் விக்கி? ப்ளீஸ் நீங்க என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க.” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தவள் ஒருவழியாக, “ஃப்யூச்சர்ல ஒருவேளை நான் டிவோர்ஸ் வாங்கிட்டா, நீங்க எனக்காக இருப்பீங்களா?” எனத் தைரியமாகக் கேட்டுவிட்டாள்.
ஒரு நிமிடம்! முழுதாக ஒரு நிமிடம் அவனிடம் பேரமைதி. அதன்பிறகு, “ஸ்யூர் ஸ்வே… உனக்காக நான் காத்துட்டு இருப்பேன். இதை நீ முன்னாடியே சொல்லியிருந்தால், நானும் முட்டாள்தனமா இருந்திருக்க மாட்டேன்.” என வருத்தமாகச் சொல்ல, ஸ்வேதாவிற்கு இப்போது நிஜத்திலே அழுகை வந்துவிட்டது.
“தேங்க்ஸ் விக்கி, தேங்க்ஸ் சோ மச் விக்கி. இது நடக்குமா நடக்காதா தெரியாது, ஆனா உங்களோட வார்த்தைகள் எனக்கு ஓராயிரம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.” என்றவள் அவன் மறுபேச்சு பேசும் முன்னே, அலைபேசியில் அவனுக்கொரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.
உள்ளம் நினைத்ததை சாதித்துவிட்டத் திருப்தியில் குத்தாட்டம் போட்டது. இனி அவளது திட்டங்கள் ஒவ்வொன்றும் தங்கு தடையின்றி செயல்படுத்தப்பட வேண்டும் எனக் குறித்துக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்கள் இப்படியே நகர, நரேன் டிஸ்சார்ஜ் ஆகும் நாளும் வந்தது. அவனுக்கு முன்னே ஒரு தீர்மானத்தோடு வந்து நின்றாள் நிசப்தி. அவள் முகத்தில் இருந்த யோசனையே ஏதோ பேசப்போகிறாள் என்று நரேனுக்குப் புரிய, என்ன எனும் விதமாக பார்த்தான்.
“உஷ் இங்க வா.” எனத் தோழியை தனக்கு அருகில் அழைத்தவள், “உனக்கு இன்னும் நரேன் அண்ணா மேல லவ் இருக்கா?” என்றாள்.
அந்தப் பேச்சில் யார் முதலில் அதிர்ந்தது எனத் தெரியாதளவிற்கு இருவரும் அதிர்ந்துப் பார்க்க, அடுத்து அவள் கேட்டதில் உஷா மயங்கியே விழுந்துவிட்டாள்.
***
1 comment
அடிப்பாவி..! அப்படின்னா இது எல்லாத்துக்கும் ஆரம்ப சுழி போட்டது இந்த சகுனி, கூனி, சூனியக்காரி ஸ்வாதி தான் இல்லையா..? அதற்கப்புறம் தான் விக்கி அவளோட கரம் கோர்த்து இருக்கிறான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797