வர வர காதல் கசக்குதைய்யா – 7
கேசவன் தெரிவித்த செய்தியில் இருந்து வெளிவரவே சில நிமிடங்கள் ஆனது முகுந்தனுக்கு. அந்த செய்தி புரிந்த நொடி சட்டென்று பவித்ராவை விலக்கிவிட்டு தூரமாக நகர்ந்து விட்டார். உடலும் மனமும் ஒருசேர நடுங்கத் தொடங்கியது. மனம் முழுக்க ரணம். முடிந்ததா..? அனைத்தும் முடிந்ததா..? இப்படித்தான், இதுதான் நடக்கும் என்று முன்னமே உறுதியாகத் தெரிந்தாலும், மனம் அதை ஏற்க மறுத்தது. உடலும் மனமும் சோர்ந்துவிட நிலைகுழைந்து போனார் முகுந்தன். ஆனால் அனைத்தும் சில நொடிகள் தான். கேசவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, தான் செய்த செயலின் குற்ற உணர்ச்சியில் நிமிர்ந்து அவரைப் பார்க்கும் திரானியில்லை என்றாலும், வேறுவழியும் இருக்கவில்லை அவருக்கு.
வேகமாக கேசவனின் கைகளைப் பிடித்து “என்னை மன்னிச்சிடு கேசவா, தயவுசெய்து மன்னிச்சிடு. நான் பெரிய தப்பு செய்திட்டேன். மன்னிக்க முடியாத பாவம் பண்ணிட்டேன். உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு கேசவா..” எனக் குற்ற உணர்ச்சியில் கதற,
“ஏய் என்னப்பா மன்னிப்பெல்லாம் கேட்குற, அப்படி மன்னிப்புக் கேட்கனும்னு நீ நினைச்சா அது பவிக்கிட்டயும், பாண்டியன்கிட்டயும் தான் கேட்கனும். என்கிட்ட இல்ல. நீ இங்க இருந்து போன பிறகு என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் முழுசா சொன்னா தான் உனக்குப் புரியும்.”
“எங்களுக்கு நடந்த இந்த கல்யாணம் எங்க ரெண்டு பேரோட விருப்பம் கொஞ்சமும் இல்லாம இன்னைக்கு காலையில் தான் நடந்தது. முதல்ல அதை தெரிஞ்சுக்கோ..” என்றவர் பவித்ராவிடம் திரும்பி, “பவி அழுதது போதும்.. இன்னும் எவ்வளவு அழுகை அழப் போற, அழறதை நிறுத்தினாதான், என்னால அடுத்து பேச முடியும்..” என அதட்டினார்.
“ம்ம்.. ம்ம்..” என்றபடியே வேகவேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார். முகுந்தனோ கேசவன் சொன்னது உண்மையா எனும் விதமாக அவரையேப் பார்த்துக் கொண்டிருக்க, “இந்த இடம் வேண்டாம், இருட்டுதான். ஆனா யாரும் பார்த்தா பிரச்சினையாகிடும். அந்தப் பக்கம் காத்தவராயன் கோவில் இருக்குல்ல அங்க போயிடலாம், அங்க யாரும் வரமாட்டாங்க..” என முன்னே நடக்க, மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பின் தயங்கி கேசவனின் பின்னே நடந்தனர்.
கோவிலுக்குள் சென்ற கேசவன், “முகுந்தா நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் பவியைச் சந்தேகப்படக் கூடாது. எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாம நீ வருவன்னு, உனக்காக கடைசி வரைக்கும் காத்துட்டு இருந்தா.. அந்த மாப்பிள்ளை வீட்டுல வேண்டாம்னு சொன்னதும் எல்லாருக்கும் பயங்கர கோபம். யாரோ சொல்றதைக் கேட்டு இப்படி பண்ணிட்டாங்களேன்னு ஆத்திரம். அதோட போய் அந்த வீட்டுல சத்தம் போட, அவங்க ஒன்னு பேச, இவங்க ஒன்னு பேசன்னு பிரச்சினை பெருசாகிடுச்சு. அப்படி எதுவும் இல்லாமலா ஊர்ல பேசுவாங்கன்னு ஏகத்துக்கும் பேச, அத்தை வீட்டுல வந்து பவிக்கிட்ட விசாரிச்சிருக்காங்க. முதல்ல வாயேத் திறக்கல, ஆனா ஆளாளுக்கு மாறிமாறி கேட்கவும் வேற வழியில்லாம உண்மையை சொல்லிட்டா…”
“அதுக்குப்பிறகு எவ்வளவு கொடுமையை அனுபவிச்சா தெரியுமா..? ஊரெல்லாம் இந்த விஷயம் பரவி, எங்க சொந்தத்துல அவளை ரொம்பவே அசிங்கமா பேச ஆரம்பிச்சிட்டாங்க, பாண்டியனுக்கு இது பெரிய அதிர்ச்சி, நீ சொல்லாம போனதும் இதுக்காகத்தான்னு அவனுக்குத் தெரிய, உன் மேல கோபமாகிட்டான். என்கிட்ட சொல்லி வருத்தப்படவும், எனக்குத் தெரிஞ்சதை சொல்லி உன்மேல தப்பில்லன்னு புரிய வச்சேன். அதுக்குப்பிறகு தான் பவிக்கிட்ட பேசவே ஆரம்பிச்சான். வீட்டுலயும் எல்லாரையும் ஒருவழியா சமாளிச்சான். பிறகு அவனுக்கும் வேலை. வெளியூர் போயிட்டான். எல்லாம் நல்லாதான் போச்சு.”
“ஒருநாள் வெளிய போயிட்டு வந்த மாமா ரொம்பவே டென்சனா வந்தாரு, வந்த வேகத்துல பவியை அடி வெளுத்துட்டாரு. என்னன்னு கேட்க போன அத்தைக்கும் அடி. அக்கம் பக்கம் எல்லாம் சேர்ந்து, விலக்கி என்னன்னு விசாரிச்சா யாரோ பவியை ரொம்பவுமே கேவலமா பேசிருக்காங்க. அதோட மாமா வளர்ப்பையும் தப்பா பேசிருக்காங்க. அந்த கோபத்துல தான் அடிச்சிருக்கார்.”
“அன்னைக்கு நைட்டு அத்தையும் மாமாவும் பேசிதான், பவிக்கு சாப்பாட்டுல விசம்” என அதுவரை கடகடவென அனைத்தையும் சொல்லிவிட்டு, அடுத்து பேச தயங்கி நிற்க, பவித்ரா எதற்கும் தன் தலையை நிமிர்த்தவே இல்லை. முகுந்தன் கேள்வியாகப் பார்க்க, கேசவன் அன்றைய நாளை நினைவு கூர்ந்தார்.
“என்ன மாமா புள்ளைய போட்டு இப்படி அடிச்சிட்டீங்க, நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா போகுதே..” என குருவம்மா அழ,
“நான் பெத்த என் செல்லத்த என்னையவே அடிக்க வச்சுட்டானுங்களே குருவு, நான் என்ன செய்வேன். என் புள்ள முகத்தைக் கூட என்னால பார்க்க முடியலையே குருவு.. அந்த பையன் எங்க இருக்கான் என்னன்னு விசாரிச்சாக் கூட, ஊரு உறவுக்குத் தெரியாம எங்கையாச்சும் கண் காணாத இடத்துல போய் பொழைக்கட்டும்னு நம்மளே அனுப்பி வைக்கலாம். ஆனா அந்த பையன் எங்க எப்படி இருக்கானோ தெரியல. இவ இங்க கஸ்டப்படுறதைப் பார்க்கும் போது என்னால நிம்மதியா இருக்க முடியலையே..” என முத்துலிங்கம் உடைந்தக் குரலில் பேச,
“என்ன மாமா பேசுறீங்க, உங்களுக்குப் புத்திகித்தி மழுங்கிப் போச்சா என்ன..? யாரு..? யாரு வீட்டுப் பொண்ணைக் கட்டுறது. கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பேசுங்க. நாளைக்கு நம்ம சாதி சனத்துல யாரு நம்மளை மதிப்பாங்க. இவ மட்டும் உங்க பொண்ணு இல்லை. உங்களுக்கு ஒரு பையனும் இருக்கான். நாளைக்கு அவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா.? நம்ம இனத்துல ஒருத்தனும் தரமாட்டான்.. நீங்க பேசினது மட்டும் வெளிய தெரிஞ்சது இந்த குடும்பத்தையே ஊரவிட்டு தள்ளி வச்சிடுவாங்க. அப்புறம் மொத்தக் குடும்பமும், கடைசி வரைக்கும் ஆளு அண்டாம போய் சேர வேண்டியது தான்..” என அப்போது தான் உள்ளே வந்த குருவம்மாவின் தம்பி பேச, மற்ற இருவரின் முகமும் இறுகிக் கருத்துப் போனது.
“உன்னை யாருடா உள்ளே விட்டது.. தெருவுல போற நாய்க்கு வீட்டுல என்ன வேலை..” என் முத்துலிங்கம் கத்த,
“என்ன எக்கா.. ரொம்பத் தான் துள்ளுறாரு உம் புருசன். சொல்லி வை, அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்ல. சும்மாவே உம் பொண்ணு மானம் ஊரெல்லாம் காத்துல பறக்குது, இதுல நீங்க பேசினது தெரிஞ்சா குடும்ப மானமும் பறக்கும். உம் பொண்ணு செஞ்ச கூத்துக்கு நம்ம இனத்துல ஒருத்தனும் கட்டிக்கிறேன்னு வந்து நிக்க மாட்டாங்க.”
“அதனால இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னா விடிஞ்சதும் எனக்கும் உம் பொண்ணுக்கும் காத்தவராயன் கோயில்ல வச்சுக் கல்யானத்தை முடிச்சு விடுங்க. அப்பதான் இந்த சாதிசனத்துல தல நிமிர்ந்து நிக்க முடியும். நான் போய் என் பொண்டாட்டிக்கு தாலி வாங்கிட்டு வர்ரேன். நான் இல்லன்னு ராத்திரியோட ராத்திரியா வில்லத்தனமா எதுவும் யோசிக்காம நான் சொன்னதை செய்ற வழியப் பாருங்க.. நான் வச்ச ஆளுங்களும், நானும் இங்கிட்டே தான் சுத்திட்டு இருப்போம்” என்றுத் திமிறாக பேசியபடியே நகர்ந்தவன்,
பின் மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி “மறுபடியும் சொல்றேன், என்னை ஏமாத்தனும்னு நினைச்சீங்க, என்னைப்பத்தி தெரியுமில்ல, கொலை செய்யக்கூட அஞ்சமாட்டேன். ஆனால் உங்களைக் கொலையெல்லாம் செய்யமாட்டேன். என்ன இருந்தாலும் நீ எங்கூட பொறந்த அக்கா, அதனால நீ ஆசை ஆசையா வளர்த்தியே உம்பொண்ணு அவளை நாசமாக்கிடுவேன்,” என மிரட்ட, அதில் முத்துலிங்கம் “டேய்..” என எகிற, அவரைத் தள்ளூ கீழேத் தள்ளியவன், “என்கிட்ட மோதனும்னு நினைச்சா, மாமன்னு கூட பார்க்கமாட்டேன், சொன்னதைக்கேட்டு நடந்துங்கோங்க..” என்றவன் தன்னுடன் வந்த ஆட்களிடம் எதுவோ பேசிக்கொண்டே வெளியேற, மற்ற இருவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்திருந்தார்கள்.
முதலில் தெளிந்தது குருவம்மா தான். “என்ன மாமா இந்த எடுபட்ட நாயி இப்படி சொல்லிட்டு போறான். இவன் பவுசு தெரிஞ்சுதான வூட்டுக்குள்ள கூட விடாம இருந்தேன். பாண்டி இல்லாதது தெரிஞ்சே வந்துருக்கான். கிளிய வளர்த்து கொரங்கு கையில கொடுத்த மாதிரி, ராணியாட்டம் வளர்த்த எம்பொண்ண இந்த நாய் கைல கொடுக்குறதா..? அதுக்கு அவளுக்கு அரளிவிதைய அரைச்சு, அத சோத்துல வச்சேக் கொன்னுடுவேன்..” என முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அழ,
“முதல்ல அதை செய்.. எவ்வளவு நாளுதான் அவளும் அசிங்கப்படுவா.. அவனுக்கிட்ட போய் சீரழியிறதுக்கு நிம்மதியா நம்ம வீட்டுலயே உசுர விடட்டும்..” என முத்துலிங்கமும் கோபம், ஆற்றாமை, விரக்தி என மொத்த உணர்வுகளும் கலந்து பேசிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
இப்போது மகன் இல்லாமல் போய்விட்டானே.? அவன் வந்துவிட மாட்டானா..? எப்போது வருவான்? இந்த இக்கட்டான சூழலிருந்து தன் பெண்ணைக் காப்பாற்றி விடமாட்டான.? என அவர்கள் பயந்துக் கொண்டே இருந்தனர்.
அவன் நண்பர்கள் மூலம் தெரிவிக்க முயற்சியும் செய்தனர். ஆனால் பலன் எனவோ பூஜ்ஜியம் தான். அவர் வேலை இடத்தில் இல்லை. வேலையாக வேறு ஊருக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்றுச் சொல்லிவிட, மகன் இப்போதைக்கு வரமாட்டான் என்று உணர்ந்த, அவன் பெற்றவர்கள் இருவரும் யோசிக்காமல் ஒரு முடிவை எடுத்து விட்டனர்.
ஆனால் அன்றைய இரவில் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். இவர்களது அழுகுரல் அவருக்கு கேட்டதோ என்னவோ, வந்துவிட்டார். அவர் வீட்டுக்குள் நுழையும் முன்பே அடியாட்கள் போல நான்கைந்து பேர் வீட்டைச் சுற்றி நிற்க, அதில் வித்தியாசம் உணர்ந்தவர் வேகமாக உள்ளே நுழைய, அப்போது தான் அழுதுகொண்டே தன் மகளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த குருவம்மா கண்ணில் பட்டார்.
என்ன நடக்கிறது, எதற்கு அம்மா அழுகிறாள் என யோசித்தபடியே “அம்மா..” என அழைக்க, “ராசா நீ வந்துட்டியா, எங்க போன நீயி, உனக்கு தகவல் சொன்னா நீ லீவுன்னு சொன்னாங்களே, நீயில்லாத நேரம் எந்தெந்த நாயோ வீட்டுல வந்து நாட்டாமை பண்ணிட்டு எம்புள்ளைய கேவலமா பேசிட்டு, கட்டிக் கொடுக்க சொல்லி மிரட்டிட்டு போறானே…” என ஒருப்பக்கம் மகனைக் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க, மற்றொருப்பக்கம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் முத்துலிங்கம்.
“என்னம்மா, என்னாச்சு, யாராச்சும் சொல்லுங்க.” என இருவரிமும் மாறி மாரிக் கேட்டுக்கொண்டே பவித்ராவைப் பார்க்க, அவளோ கண்ணில் தெரிந்த நிராசையோடு, வாயில் நுரைத் தள்ள அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அய்யோ பவி என்னாச்சு உனக்கு..” என்றவன் பவித்ராவை உலுக்க, கடவுளே நானே என் பொண்ண கொன்னுட்டேனே, சாமி எம்சாமி எம்பொண்ண காப்பாத்துய்யா.. எப்படியாச்சும் காப்பாத்துய்யா.. அய்யோ கண்ணு மேல போயிடுச்சே..” என குருவம்மா கதறவும் தான் பாண்டியனுக்கு அனைத்தும் விளங்க, அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தவர், அங்கிருந்த மாட்டுவண்டியைச் சாய்த்து, அந்த சக்கரத்தில் குப்புறவாக்கில் பவித்ராவை படுக்க வைத்து வேகமாக சுற்றினார்.
அதற்குள் குருவம்மா புழிச்சத் தண்ணியை (நீராகாரம்) எடுத்துவந்து கொடுக்க, அந்த தண்ணீரைக் கொடுத்து, கொடுத்து அனைத்தையும் வாந்தியெடுக்க வைத்தார். அதற்குள் இந்தக் களேபரத்தின் சத்தத்தில் தெருவில் இருந்த மக்கள் எல்லாம் வீட்டில் கூடிவிட, பவித்ரா விசத்தைக் குடித்துவிட்டாள் என்றே அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பாண்டியன் வந்துவிட்டார் என்றுத் தெரிந்ததும் குருவம்மாவின் தம்பியும், அவனது ஆட்களும் இருந்த இடம் தெரியாமல் அப்படியே நகர்ந்துவிட்டனர்.
பவித்ரா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே பாண்டியன் சற்று இயல்புக்கு வந்தார். அதற்குள் கேசவனும், ரம்யாவும் வந்துவிட, தோழியின் நிலை ரம்யாவை துவள வைத்துவிட்டது.
நடந்த அனைத்தையும் குருவம்மா அழுதுகொண்டே மகனிடம் சொல்ல, அதை உள்ளிருந்துக் கேட்ட ரம்யாவிற்கு கோபம் தலைக்கேறியது. அவருக்கு இப்போது கோபம் மொத்தமும் குருவம்மாவின் மேல் திரும்பிவிட்டது. இனியும் பவித்ராவை இங்கே விட்டு வைக்க முடியாது, இன்று போல் மீண்டும் ஒருநாள் நடக்க வாய்ப்பு வரும். அப்போதும் இதேபோல் தான் செய்வார்கள். இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்தவள் கேசவனிடம் சென்று பவித்ராவை உடனடியாக மணந்து கொள்ளச் சொன்னாள்.
அன்றைய தினம் நடந்ததை முகுந்தனிடம் கூறியவர், ரம்யா சொன்னதுனால மட்டும் பவியை நான் கல்யாணம் செய்யல, இதுல என் சுயநலமும் இருக்கு. ஏன்னா ரம்யாவுக்கு பாண்டியன் மேல விருப்பம் இருக்கு. இதுவரைக்கும் அவ இதைப்பத்தி யாருக்கிட்டயும் சொன்னதில்ல. இது நானா தெரிஞ்சிக்கிட்டது. நான் பவியை விருப்பம் இல்லாம கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், நாள் போக, நாள் போக எல்லாம் சரியாகி, இந்தக் கல்யாணமும் சரியாகும்னு நினைச்சேன். அதோட பாண்டியனும் ரம்யாவை கட்டிக்க சம்மப்திப்பான்னு நினைச்சேன். இது என்னோட சுயநலம்.” என்று பெருமூச்சு விட்டவர்,
“ஆனா.. நான் நினைச்ச எதுவும் நடக்காதுன்னு இன்னைக்கு புரிஞ்சது. அவ உனக்காக மட்டும் தான் இருக்கா. உன் இடத்துல வேற யாரையும் அவளால வச்சுப் பார்க்க முடியாதுன்னு புரிய வச்சுட்டா.. இதெல்லாம் எப்படி சாத்தியம்னு எனக்குப் புரியவே இல்ல” என்றபடியே ஏதோ முடிவு செய்தவராக, அங்கிருந்த அந்த உயர்ந்த சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.