அகானா – 100 (ஆ)
“என்ன பண்ற நீ..?” என கோபமாக வந்து நின்றார் ரவி.
அவரின் அதட்டலில் மஞ்சரியின் கண்ணீர் சட்டென நிற்க, அகானாவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
அவள் ஏதோ பேச வர, “தப்பு செஞ்சது நான். நான் மட்டும் தான். அதுக்கான தண்டனையும் எனக்கு மட்டும்தான். உங்களுக்கு கிடையாது. நான் செஞ்ச தப்புக்காக மட்டும்தான் ஒதுங்கி நிக்கிறேன்.. நீங்க என்ன செஞ்சீங்கன்னு இப்படி ஒதுங்கி நிக்கிறீங்க. உங்க பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு உங்களை விட வேற யாரும் வாழ்த்திட மாட்டாங்க. இந்த மாதிரி நேரத்துல அவளை கஷ்டப்படுத்தாம பொட்டு வச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க..” என மஞ்சரியைப் பார்த்து மிகவும் கடினமான வார்த்தைகளில் பேச,
“நீங்க பேசக்கூடாது..” என அகானா ஏதோ சொல்ல வர,
“வாயை மூடிட்டு போய் உட்கார்..” என்று ரவி மீண்டும் அதட்ட,
அதை காதில் வாங்காத மகளை முறைத்து “கண்ணா அமைதியா பிடிச்சு வை..” என மருமகனிடம் சொல்லிவிட்டு, வேக எட்டுக்களில் கீழிறங்கி மைதிலியிடம் வந்து நின்றுகொண்டார்.
“அம்மு..” என்ற கணவனின் ஒற்றை வார்த்தையில், முகம் சுனங்கினாலும் அமைதியாக அமர்ந்துகொண்டாள் அகானா.
அடுத்து யாருக்கும் காட்சிப் பொருளாக வேண்டாம் என்று நினைத்த மஞ்சரி மகளுக்கு பொட்டு வைக்க ஆரம்பித்தார்.
கைகள் நடுங்க, இதழ்கள் புன்னகையில் விரிய, விழிகளில் நீர் துளிர்க்க மகளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து, அட்சதை தூவி ஆசிர்வதித்தார்.
மஞ்சரியின் உணர்வுகளைப் புரிந்தார் போல ஆரியன் வந்து பக்கத்தில் நிற்க, மகன் தோளில் சாய்ந்தபடி மகளைப் பார்த்து நிறைவாக புன்னகைத்தார் மஞ்சரி.
பொட்டு வைத்து முடிய, இனி வளையல் அடுக்க ஆரம்பிக்க, முதலில் மஞ்சரியே ஆரம்பித்தார். அவர் தொட்டு அனைவரும் அடுக்கி முடிக்க ஆகன் மனைவியின் முன் வந்து நின்றான்.
அனைவரும் அவனையும், அவன் கையையும் மாறி மாறிப் பார்க்க, அகானாவோ அதுவரை இருந்த கலக்கங்கள் மறைந்து கணவனைப் பார்த்து குறும்பாக சிரித்தாள்.
கணவனுக்கும் மனைவியின் சிரிப்பு தொற்றிக்கொள்ள, தன் கையியிலிருந்த தங்க காப்பை அவளுக்கு அணிவித்துப் பின் மகிழினி கொடுத்த கண்ணாடி வளையலையும் போட்டுவிட்டு, மனைவியின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
அவன் செயலில் பெரியவர்கள் வேறுபக்கம் பார்க்க, சிரியவர்களோ ‘ஓகோ’ எனக் கத்தி கூச்சலிட்டு கொண்டாட ஆரம்பித்தனர்.
அனைத்தையும் ஒரு ஓரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு, தான் தொலைத்த சொர்க்கம் எத்தகையது என்று புரியாமல் இல்லை.
ஒட்டி உறவாடி மகளின் மனதை வேதனைப் படுத்தாமல், தள்ளியிருந்து அவளின் நலனைப் பார்த்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ரவி.
ஆனால் காலம் கடந்து யோசித்து என்ன பயன்?
இவரின் காலம் இனி இப்படித்தானே!
கவிதாவும் நித்யாவும் ஆரத்தி எடுக்க, மனையிலிருந்து எழுந்த மனவியைத் தன்னோடு அழைத்துக் கொண்டான் ஆகன்.
சொந்தங்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்ய, மனைவியை அழைத்துக்கொண்டு போட்டோ சூட் எடுக்க வந்துவிட்டான் ஆகன்.
திருமணத்தில் எதெல்லாம் மிஸ் செய்தானோ, அதெல்லாம் இந்த சீமந்தத்தில் நடத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்க, அவன் அலப்பறையைத் தாங்க முடியவில்லை யாராலும்.
‘நான் தான் செய்வேன்’ என வீராப்பாக வந்துவிட்டாலும், மண்டபத்தில் வைத்து எந்த பிரச்சினையும் செய்யவில்லை நித்யா..
மற்ற பொருட்களோடு தன்னோடதையும் சேர்த்து வைத்து, அதையும் எடுக்கும்படி பார்த்துக்கொண்டார். அதன் பிறகே வினோத்திற்கும் ஆகனுக்கும் நிம்மதியானது..
அவருக்கே தான் செய்வது சரியில்லி என்று புரிந்து போக, அந்த விழாவை மற்றவர்களைப்போல அவளும் மகிழ்ச்சியாக கொண்டாட ஆரம்பித்தார்.
பதினொரு வகை சாதம், பதினொரு வகை இனிப்பு என அந்த விழாவை அசத்தியிருந்தான் ஆரியன். எப்போதும் போல நவீனும், குமரனும் கை கொடுக்க, அந்த விழா சிறப்பாகவே நடந்தது.
விழா முடிந்து அனைவரும் ஆசுவாசமாக சற்றே தளர்ந்து அமர, மகியின் பெண் உறக்கத்திற்கு சினுங்க ஆரம்பித்தாள்.
மகள் சினுங்க ஆரம்பிக்க, பாட்டிகள் மொத்த பேரும் பேத்தியிடம் வந்துவிட்டனர்.
அத்தனை பேரையும் பார்த்து மகி பேய் முழி முழிக்க, ஆரியனுக்கு மனைவியை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது.
மனைவியிடமிருந்து மகளை வாங்கி தன் தாயிடம் கொடுத்தவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
“என்னாச்சுப்பா..? ஏன் இவ்ளோ டல்லடிக்கிற?” என கேட்க,
“ம்ச்.. இனி இப்படியெல்லாம் அடிக்கடி யாரையும் பார்க்க முடியாது இல்லையா? இவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..” என தன் மனதை மறைக்காமல் கூற, இந்த சில நாட்களிலேயே அவனுக்கு மனைவியின் மனநிலை புரிந்திருக்கத்தான் செய்தது.
அதனால் “கொஞ்ச நாள் தான் பாப்பா.. அங்க எல்லாம் முடிச்சிட்டு நாம இங்கேயே வந்துடலாம். அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. நம்ம பாப்பாவுக்கு ஸ்கூல் சேர்க்கும் போது, நாம இங்க மொத்தமா வந்துருப்போம், என்னை நம்பு ப்ளீஸ்..” என்றவனின் நெஞ்சில் சாய்ந்தபடியே,
“நான் உங்களை ரொம்பவும் டார்சர் பண்ணலதானே.. என்னோட சுயநலத்துக்காக உங்க லைஃபை சேஞ்ச் பண்றேனா?” என்றாள் தழுதழுப்பாக.
“நோ.. நோ.. லைஃப்னா என்னப்பா? புரிதலும், விட்டுக்கொடுத்தலும் தானே. உன்னைப் புரிஞ்சதுனால, நம்ம லைஃப் ஸ்மூத்தா போகனும்னு தான் நான் இதை செய்றேன்.. சோ நோ கில்டி ஃபீலிங்க்..” என அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க,
அந்த மண்டபத்தின் ஓரத்தில் மகளும், மருமகனும் போட்டோ எடுக்கும் காட்சியை விழிகள் தழும்ப பார்த்துக் கொண்டிருந்தார் ரவி.
அவருக்கு அருகில் மைதிலி!
“நீங்க சொன்ன மாதிரியே நாம கனடாவே போயிடலாமா? இங்க இருந்தா இவங்களைப் பார்த்து பார்த்து, உங்களுக்கு உடம்புக்கு முடியாம போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு..”
“அது ஒரு வகையில எனக்கான தண்டனை தான். அதை நான் மனப்பூர்வமா ஏத்துக்கத்தான் வேணும்.. ஆனா நான் சொன்னது உனக்காக. உனக்கு போகனும்னு தோணினா போகலாம். எனக்கு அப்ஜெக்ஷன் இல்ல..”
“ஹ்ம்ம் போலாம். எனக்கு கண்டிப்பா ஒரு மாற்றம் வேணும். இவ்ளோ நாள் இந்த குடும்பத்துல முக்கியமான ஒரு ஆளா இருந்துட்டு, இப்போ இப்படி ஒதுங்கி இருக்குறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒருவகையில எனக்கும் இது தண்டனைதான். ஆனா அதை இங்க இருந்து அனுபவிக்க முடியாது. தூரமா.. ரொம்ப தூரமா இவங்களை விட்டு போயிடலாம்..”
“ம்ம் புரியுது.. அம்முவுக்கு குழந்தை பிறக்கவும் போகலாம்..” என முடித்துவிட, மைதிலியும் அடுத்து எதுவும் பேசவில்லை.
இங்கு “மஞ்சு உனக்கு சந்தோசம் தானே..” என்ற விஜயாவை இறுக்கக் கட்டிக்கொண்ட மஞ்சரி “நீங்க இல்லைன்னா நானும் அம்முவும் என்ன ஆகிருப்போம்னு நினைக்கவே பயமா இருக்குக்கா.. நன்றி சொல்லி உங்களைத் தள்ளி வைக்க மாட்டேன். இப்படியே என்கூட நீங்க கடைசி வரைக்கும் இருக்கனும் க்கா..” என்றார் நா தழுதழுக்க
“என்ன மஞ்சு நீ?” என்றவருக்கு குரல் அடைத்துதான் போனது.
அதே நேரம் “உனக்கு வருத்தமா இல்லையா நித்தி..” என்ற கணவனிடம்,
“இல்லைன்னு பொய் சொல்லமாட்டேன்.. ஆனா நீங்க சொன்ன மாதிரி இது நமக்கான நேரமில்லனு புரிஞ்சது. மஞ்சரி அக்கா முகத்தைப் பார்த்தீங்களா? எவ்ளோ பயம், பதட்டம்.. அது ஒருவகையில என்னாலையோன்னு தோனுச்சு.. என் பங்குக்கு நானும் கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைச்சு என் முடிவை மாத்திக்கிட்டேன்.” என்றார் நித்யா..
மனைவியின் பேச்சில் தன் பாரமெல்லாம் குறைய, “தேங்க்ஸ் நித்தி.” என்றார் நிறைவான புன்னகையுடன்.
**************
கேமரா மேன் ஓய்வு கொடுத்த நொடியே “மாமா.. ஆல்ரெடி நான் ரொம்ப டயர்ட்.. எனக்கு கொஞ்ச நேரம் சாஞ்சு படுக்கனும்..” என கணவனுக்கு மட்டுமே கேட்கும்படி கூற, சட்டென அவளைப் பார்த்தவன் “ஓக்கே ப்பா.. போதும் ஒரு ஃபேமிலி போட்டோ மட்டும் எடுத்துட்டு முடிச்சிக்கலாம்..” என்றான் முடிவாக.
அதன் பிறகு குடும்ப போட்டோ எடுக்க அனைவரும் ஒன்று கூட, எவ்வளவோ தடுத்தும் மஞ்சரியை நடுவில் அமர்த்திவிட்டான் ஆகன்.
மஞ்சரி நடுவில் அமர ஆகனும், அகானாவும் இரண்டு பக்கமும் அமர, பெரியவர்கள் அனைவரும் ஜோடியாக பின்னே நிற்க, சிறியவர்கள் எல்லாம் குழந்தைகளுடன் முன்னே அமர என அழகாய், அம்சமாய் அந்த நிழற்படம் அமைய, அதை கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு நெஞ்சமெல்லாம் ரணரணமாய் வலித்தது.
மைதிலி இதையெல்லாம் பார்க்க முடியாமல் முன்னமே சென்றிருக்க, அனைவரும் அவரை அழைத்தார்கள்தான்.
ஆனால் மகளும், அவளின் அம்மாவும் அதை விரும்பமாட்டார்கள் என்று புரிய, கீழிருந்து அந்த இனிமையை வலி நிறைய அனுபவித்துக் கொண்டிருந்தார் ரவி.
இந்த வலி அவருக்குத் தேவையாகவும் இருந்தது!
என்றேனும் மகள் தன்னை மன்னிப்பாள் என்ற எண்ணம் அவருக்கு வரவே இல்லை.
மன்னிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் எப்போதோ மன்னித்திருப்பாளே..
அவள் தன்னை மன்னிக்க வேண்டாம்.. இந்த வலியிலிருந்து, வேதனையிலிருந்து, விடுதலையும் வேண்டாம்.
இது தனக்கான தண்டனை.. இது இப்படியே தொடர வேண்டும் என மனதார மகளிடம் மன்னிப்பும், கண்மூடி கடவுளிடம் வேண்டுதலையும் வைத்து கண் திறக்க, அகானா அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவருக்கு வலித்ததைப் போலத்தானே அவரின் மகளுக்கும் வலிக்கும்.. புரிந்தது! அனைத்தும் புரிந்தது.! புரிந்த நேரம் அனைத்தும் அவரை விட்டுப் போயிருந்தது..!
பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது..
என் விதி மேடைகட்டி நாடகம் ஆடுது..!
இப்போது அவரின் பார்வை மகளை விட்டு மஞ்சரியிடம் சென்றது. அவர் தொலைத்த சொர்க்கத்தின் அளவும் புரிந்தது..!
கன்னம் தீண்டிய
கண்ணீரை
கைவிரலில் துடைத்துவிட்டு
அடுத்த கணமே புன்னகை செய்கிறாள்..
‘ஒன்றுமில்லை’ என்ற வார்த்தையில்..
இந்த கவிதை மஞ்சரிக்கு எத்தனை பொருத்தம். இப்படியான சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை நடந்தேறி இருக்கும்.
அனைத்தையும் கடந்து வந்த, இந்த மஞ்சரியின் பார்வையில் கூட ரவிக்கான சிறு தேடல் இல்லை. அந்த இரும்பு பெண்மணியின் முகம் புன்னகையிலும், மகிழ்விலும் மலர்ந்து நிறைந்து தழும்பியது.
உன்னைச் சிறிதளவேணும்
தேடத் துணியாத
எதுவொன்றிலும் உனக்கு
உரிமை இல்லை…
என்ற வரிகள் ரவியின் முகத்தில் அறைய, தளர்ந்த நடையுடன் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
நான் தொலைத்த நாட்களெல்லாம்
மறுபடியும் மலருமா?
அனைவரும் புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்ற அந்த நொடி, அகானாவின் கை தன்னிச்சையாக வயிற்றின் மேல் சென்றது. பார்வையோ கணவனை நோக்கிப் பாய்ந்தது.
அவளின் உள்ளே இன்னொரு உயிர்… அருகே அன்பே உருவாக அவள் கணவன் ஆகன்…
பின்னால் அவளுக்காக உயிரையே கொடுக்கத் தயாரான குடும்பம்…
வாழ்க்கை அவளிடம் இருந்து எவ்வளவோ பறித்திருந்தது.
ஆனால்… அதைவிட அதிகமாக திருப்பிக் கொடுத்திருக்கிறது.
அவளின் இதழ்களில் நிறைவான புன்னகை மலர, ஆகன் அவளின் தோளை அணைத்துக்கொண்டான்.
அந்த நொடி…
துரோகத்தின் நிழல் காதலாகி இருந்தது…
அவள் அவரை வெறுக்கவில்லை…
அதைவிட கொடுமையாக, அவள் அவரைத் தேடவே இல்லை…
முற்றும்
1 comment
நம்ம மனசு ஒருத்தரை தேடினால் தானே, நாடினால் தானே….அவங்களை நாம நினைக்கிறதோ, வெறுக்குறதோ செய்ய முடியும்..
அது இல்லாதபட்சத்துல கடந்து போயிட்டேத்தான் இருக்கணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797