Home Love - Family - Romanceமுத்தமழை – 34

முத்தமழை – 34

by Vathani S

முத்தமழை – 34 

மீண்டும் ஒரு மருத்துவமனை வாசம் சொக்கலிங்கத்திற்கு. இந்த முறை கர்ணன் யார் பேச்சையும் கேட்கவில்லை. அவரை தங்களின் வீட்டிற்கும் அழைத்து வரவில்லை.

மருத்துவர் அறிவுறுத்தியபடி நேராக குன்னூருக்கு அழைத்து சென்றுவிட்டான்.

தந்தையைப் பார்த்துக்கொள்ள யாழினியும், பாண்டியனும் கிளம்ப, அவர்களோடு வந்தனாவும் தொற்றிக்கொள்ள, இவர்களை கர்ணனே குன்னூரில் சென்று விட்டு வந்தான்.

அவனை தடுக்கவோ, எதிர்க்கவோ அங்கு யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

அன்று நடந்த, வனிதா நடத்திய சம்பவங்கள் அப்படி!

அன்று மருத்துவமனையில் “கர்ணன்.. இப்படியே ஸ்ட்ரெஸ்லயே வச்சிருந்தா இவரோட ஹெல்த் கன்டிசன்ஷ்ல லிட்டில் பிட் கூட இம்ப்ரூவ்மென்ட் இருக்காது.. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க?” என மருத்துவர் மிகவும் கோபமாக கேட்க,

“என்ன செய்யலாம் டாக்டர்.. அவுட் ஆஃப் கன்ட்ரி எங்கேயும் அழைச்சிட்டு போகட்டுமா?” என்றவனுக்கு உள்ளம் குற்றவுணர்ச்சியில் தவித்தது.

“நோ.. நோ.. அவ்ளோ எல்லாம் அவரை அலைக்கழிக்க வைக்க வேண்டாம். இங்கேயே பக்கத்துல ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஹில்ஸ்டேஷன் கூப்பிட்டு போய் கொஞ்ச நாள் வைங்க. அவர் மைன்ட் ஃப்ரீயான மட்டும் தான், ஹெல்த் ரெகவர் ஆக வாய்ப்பிருக்கு..”

“ஓ.. ஓக்கே டாக்டர்.. குன்னூர்ல எங்க எஸ்டேட் இருக்கு.. அங்க அழைச்சிட்டு போயிடுறேன்..”

“ரொம்ப நல்லது கர்ணன். ஆனா கண்டிப்பா உங்க அம்மாவோ, உங்க சிஸ்டரோ வேண்டாம்.. அவங்களைதான் அழைச்சிட்டு போகனும்னா, இவர் அங்க போகவே வேண்டாம். இங்க ஹாஸ்பிடல்ல கூட இருக்கட்டும். ஏன்னா எப்படியும் அவங்க கூட போனா, அவர் ரெகவர் ஆகமாட்டார்..”

“நான் பார்த்துக்கிறேன் டாக்டர்..” என மருத்துவரிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன், அங்கிருந்த யாரையும் பார்க்கவில்லை.

முகத்தில் ஒரு கடினம்.. உடலில் ஒரு இறுக்கம்.. அவனைக் காணவே பயந்து போய் நின்றனர்.

ராஜியின் அருகில் நின்றிருந்த வனிதாவை நோக்கி வந்தவன், யாரும் என்ன என யூகிக்கும் முன்னே ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு, அவளுக்கு பக்கத்தில் நின்ற தங்கையின் கணவன் ரமேஷிடம் “ஸாரி ரமேஷ்..” என்றான் அத்தனை இறுக்கமாக.

“என்ன பண்ற நீ..?” என ராஜி கர்ணனை ஏதோ சொல்ல வர,

“அத்தை அமைதியா இருங்க, இந்த அடியை அவளுக்கு நீங்க கொடுத்துருக்கனும்..” என்றான் ரமேஷ் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்..

ஒற்றை அறையில் தன் கோபம் வடியுமா என்ன? ஆனாலும் அடக்கி ரமேஷைப் பார்த்து “என்ன நடந்தது? இவ வந்து ஏன் அப்பாக்கிட்ட அப்படி பேசினா?” என கடினமாக கேட்க,

“கர்ணா என்ன இது? அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.. அவருக்கு மரியாதை கொடுத்து பேசு..” என்ற ராஜியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை கர்ணன்.

அவனின் இறுகிய தோற்றம் ரமேஷிற்கு நடுக்கத்தைக் கொடுக்க, “மச்சான்.. அம்மாவும், அப்பாவும் பேசினது எங்க வீட்டுப் பிரச்சினையை. அதை இவ தப்பா புரிஞ்சிக்கிட்டு, மாமாக்கிட்ட வந்து சொத்தைக் கேட்டுருக்கா.?” என்றதும் தான் ராஜலட்சுமிக்கே மகள் என்ன பேசினாள் என்று தெரிய வந்திருந்தது.

“ஏய் வனி… மாப்பிள்ளை பேசுறது உண்மையா? அப்படி என்னடி உனக்கு இப்போ அவசரம்.. இன்னும் யாழினிக்கு கல்யாணம் கூட முடியல..” என ஆத்திரமாக கேட்க,

“ம்மா.. அவ கல்யாணம் பண்ணலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எனக்கு எப்படி சீக்கிரம் செஞ்சீங்களோ, அதே மாதிரி அவளுக்கும் முடிச்சி அனுப்புங்க..” என தன் தவறைக்கூட யோசிக்காமல் வனிதா வாய்விட,

“உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் நான் மேரேஜ் செஞ்சிக்க முடியாது. என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் நீ பேசுற? அப்போ உனக்கு அப்பாவை விட சொத்துதான் முக்கியமா?” என யாழினியும் கோபமாக கேட்க,

“யாழி..?” என்ற கர்ணனின் ஒற்றை அதட்டலில், யாழினி அமைதியாகிவிட, 

பார்வை ரமேஷிடமே இருக்க, ‘என்ன நடந்ததுனு நீ சொல்லியே ஆகனும்..’ என்ற உடல்மொழியோடு கர்ணன் நிற்க, 

வழக்கம்போல வனிதா தான் எதையோ செய்து வைத்துவிட்டாள் என்று ராஜலட்சுமிக்கு புரிந்தது. இப்போது இந்த பிரச்சினையிலிருந்து மகளை எப்படி காப்பாற்றுவது என்றுதான் அவர் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“தம்பி.. இதெல்லாம் இங்க வச்சு பேசுற பேச்சா.. நம்ம குடும்ப பிரச்சினையை எல்லாரும் பார்க்க பேசுறது சரியில்ல.. வீட்டுல போய் பொறுமையா எடுத்து சொல்லு, அவளுக்கு புரியும்..” என அந்த சூழ்நிலையிலிருந்து மகளை காப்பாற்ற சமாளிக்க, கர்ணனுக்கு வெறுத்தே போயிற்று..

இவர்களிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று புரிய, கண்ணை மூடி ஆழ மூச்செடுத்து, தன் கோபத்தை, இயலாமையை தவிர்க்க பார்த்தான். 

ஆனால் முடிய வேண்டுமே..!

ஆவன் வந்த இந்த மூன்றே மாதத்தில் எத்தனை பிரச்சினைகளை தன் தந்தையின் தலையில் கட்டுகிறார்கள். அவன் பார்க்கவே இத்தனை, பார்க்காமல் எத்தனையோ? இதையெல்லாம் எப்படி தன் தந்தை சமாளித்து, கடந்து வந்தார் என்று நினைக்கவே மலைப்பாகவும், கவலையாகவும் இருந்தது.

பெரும் பணம் படைத்தவர்.. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட நிம்மதியாக இல்லை என்பது எத்தனை வேதனை..

தன்னை நிதானிக்க நினைத்து முடியாமல் போக, “ரமேஷிடம் உங்க வீட்டுல என்ன பிரச்சினை.?” என்றான் பொறுமையாக.

“மச்சான்.. அது பிசினஸ்ல கொஞ்சம் பிரச்சினை. பிசினஸ்னா லாபம் மட்டுமே வருமா? லாபம் நஷ்டம் வரது, இருக்கிறதுதானே, நானும் அப்பாவும் அதைப்பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போ அம்மா அதைக் கேட்டுட்டு, உங்ககிட்ட கேட்டு பாருன்னு சொன்னாங்க. அந்தளவுக்கெல்லாம் இல்லன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள, மாமாகிட்ட வந்து சொத்தைப் பிரிச்சு கேட்டுருக்கா.. நீங்க போன் பண்ற வரைக்குமே அவ இங்க வந்தது எனக்குத் தெரியாது மச்சான்..” என்றவனுக்கு இதைப் பேசவே அவமானமாக இருந்தது.

அடுத்த கேள்வி ‘உன் மனைவி எங்கே போகிறாள், என்ன செய்கிறாள்? என்று கூட பார்க்காமல் என்ன செய்து கிழிக்கிறாய் என்று கேட்டால் என்ன செய்ய? இந்த முகத்தை எங்கே கொண்டு வைக்க? என தவிப்புடன் நிற்க,

ஆனால் அங்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக ராஜி வனிதாவை “அடிப்பாவி… உன்னை நான்தானே பெத்தேன்.. உனக்கு என்ன செய்யனும்னு எனக்குத் தெரியாதா? அப்படியா உனக்கு செய்யாம விட்டுடுவோம்.. என்ன பொண்ணுடி நீ..? இப்படி அப்பாவை படுக்க வச்சிட்டியே..” என ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளை அடித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்த்தியிருந்தார்.

‘இந்த அத்தை ஏன் இவ்ளோ அநியாயம் பண்றாங்க..’ என சுமித்ரா எரிச்சலாக நினைத்தபடியே தன் அண்ணனிடம் “அண்ணா.. இனி நானும் அண்ணி மாதிரியே தினமும் காலைல அங்க வந்துட்டு, இவர் வரும் போது கூட வந்துக்குறேன். எனக்கு மட்டும் அம்மா வீட்டுக்கு வரனும், அவங்க கூடவே இருக்கனும்னு தோணாதா..” என கோபமாக கேட்க,

“சுமி நீயும் புதுசா ஆரம்பிக்காத..” என சுந்தர் மனைவியை அடக்க,

“என்ன ஏன்ப்பா கேட்குறீங்க.. இவ்ளோ நேரம் உங்க அம்மா ஒரு நாடகம் நடத்தினாங்களே அதை கேட்க வேண்டியதுதானே. மாமா அண்ணியை ஒன்னும் சொல்லக்கூடாதுனு, அடிக்கிற மாதிரி அடிச்சு எப்படி இங்க இருந்து நகத்திட்டு போறாங்க பார்த்தீங்கள்ள.. இப்படியே நடந்தா உங்க தங்கச்சியை திருத்தவே முடியாது, உங்க அம்மாவையும்தான்..” என கோபமாக கூற, யாழினிக்கு அழுகை வெடித்து வர, அவளின் அருகில் நின்ற வல்லபியின் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள்.

திடீரென்ற யாழினியின் அழுகையில் அனைவரும் பயந்து அவளைப் பார்க்க, சுந்தரும் கர்ணனும் யாழினியின் இருப்பக்கமும் வந்து நின்றுவிட்டனர்.

“யாழி.. யாழி என்னம்மா?” என இருவரும் பதற,

“வேண்டாம்.. நீங்க யாரும் வேண்டாம்… என்னோட சொத்தையும் நீங்களே வச்சிக்கோங்க.. நான் அப்பாவைக் கூப்பிட்டு எங்கேயாவது போயிடுறேன். நானே அவரைப் பார்த்துக்குவேன்.. நீங்க எல்லாம் என் அப்பாவை கொன்னுடுவீங்க. எனக்கு என் அப்பா வேணும்..” அழுகையோட இருவரையும் அடித்தபடியே பேச, இருவருக்குமே பேச்சு வரவியல்லை.

அதிலும் கர்ணன் அதிர்ச்சியில் உறைந்தே போனான். அவனின் நிலையைக் கண்ட வல்லபி தான் “பாவா… அவ கோபத்துலயும் பயத்துலயும் பேசுறா.. முதல்ல அவளை சமாதானம் செய்ங்க… இப்படியே அவளை விடக்கூடாது பாவா..” என உலுக்க..

அதன் பிறகே நிதானத்துக்கு வந்தவன், யாழினியை இழுத்து தன் தோளில் சாய்த்து “யாழி.. யாழிமா.. அப்பாவுக்கு ஒன்னுமில்ல டா.. அப்பா சீக்கிரம் உன்னைக் கூப்பிடுவார் பாரு. அவர் பார்க்கும் போது நீ இப்படி இருக்கலாமா? யாழி.. யாழிமா..” என சமாதானம் செய்ய,

திடிரென்று சொக்கலிங்கத்திற்கு பிட்ஸ் வந்தது, அவருடைய பிபி அதிகமானது எல்லாம் சேர்ந்து ஏற்கனவே அவளை அதிர்ச்சியில் தள்ளியிருந்தது.

இதில் வனிதாவின் பேச்சும், தாயின் செய்கையும் பெண்ணவளை மொத்தமாக உலுக்கியிருக்க தன் கட்டுப்பாட்டையும் மீறி கத்தியிருந்தாள்.

அனைத்தும் சேர்ந்து இப்போது அவளுக்கு மயக்கத்தைக் கொடுக்க, கர்ணனின் மேலே மயங்கி சரிந்திருந்தாள்.

அடுத்து அவளுக்கு முதலுதவி செய்து, அவள் கண்விழிக்கும் வரை கர்ணனால் நிம்மதியாக மூச்சுக்கூட விட முடியவில்லை.

இதில் பாட்டியும், வல்லியும் தான் மிகவும் ஓய்ந்து போய்விட்டனர்.

யாழினி கண் திறக்கவுமே அவளிடம் மிகவும் பொறுமையாக தந்தையின் நிலையை எடுத்துச் சொல்லி, அவன் எடுத்த முடிவையும் கூற யாழினியும் உடனே சரியென்று விட்டாள். 

அடுத்த இரண்டாம் நாள் சொக்கலிங்கம் டிஷ்சார்ஜ் ஆனதும், மூவரையும் குன்னூர் அழைத்து வந்துவிட்டான்.

அங்கு ஒருநாள் இருந்து அனைத்தையும் பார்த்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்துவிட்டு கரூர் திரும்பிவிட்டான்.

அவன் சோர்வாக வீட்டிற்குள் நுழையும் நேரம், ஹால் சோபாவில் ராஜியும் வனிதாவும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே பாட்டி கோபமாகவும், வல்லி கலங்கிய கண்களுடனும் நிற்க, 

“என்ன.? என்ன வல்லி..?” என வேகமாக கேட்டபடியே கர்ணன் உள்ளே வர, “பாவா..” என்றவளுக்கு வார்த்தைகளுக்கு பதில் அழுகைதான் வெடித்து வந்தது..

You may also like

Leave a Comment

About Me

Featured