Home Love & Romanceஎன் சரி – 03

சரி – 03

அந்த இரவு மருத்துவமனை அறையில் இருந்த அமைதி மிகவும் கனமாக இருந்தது.

சுமதி கணவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவளது குரலில் ஒரு சோர்வு தென்பட்டது. ஆனால் மனதில் மட்டும் ஒரு விதமான கனத்த மௌனம்.

தன் மகன் வாழ்க்கையைப் பற்றி எடுத்த முடிவு இனி நிஜமாகப் போகிறது என்ற நம்பிக்கை.

பெற்றோரின் பேச்சைக் கேட்டபடியே, அந்த அறையிலிருந்து வெளியே வந்த வேந்தன், ஒரு நிமிடம் அந்த காரிடாரில் நின்றான்.

நீண்ட நடைபாதை. சிலர் மெதுவாக நடந்து செல்லும் சத்தம். தொலைவில் ஒரு குழந்தை அழும் சத்தம்.

ஆனால் அவனுடைய மனதில் மட்டும் அந்த வார்த்தை அவனைக் கலைப்படைய செய்திருந்தது.

‘நாளைக்கு கல்யாணம்… தாயின் அறுவை சிகிச்சை’ இரண்டும் ஒரே நாளில், அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்,

அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஒரு நிமிடம் கண்களை மூடி நின்றான். 

இந்த முடிவு அவனுடையதல்ல.

ஆனால் அதிலிருந்து ஓடிப் போகவும் அவனால் முடியாது.

அப்போது அவன் அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது.

அவரின் அந்த வேண்டுகோள்.

அந்த பயம்.

அவன் மெதுவாக மூச்சை விட்டான்.

“இது முடிஞ்சா போதும்…” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

அவன் தன் போனை எடுத்து, ஒரு நொடி யோசித்தான். பிறகு வீட்டு எண்ணை டயல் செய்தான்.

“தாத்தா… நாளைக்கு காலையில கோயில்ல கல்யாணம் வச்சுக்கலாம், அம்மா முடிவுதான்… மத்த வேலையெல்லாம் நீங்க பார்த்துடுங்க” அவன் குரல் அமைதியாக இருந்தாலும், அதற்குள் ஒரு சோர்வு இருந்தது.

அதைக் கேட்ட தாத்தா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். 

“சரி கண்ணா… நான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறேன், அப்பாவை வர சொல்லிடு. நீ மனச குழப்பிக்காத. எல்லாம் நல்லதாதான் நடக்கும்.” என்றார் மெதுவாக.

அந்த வார்த்தைகள் அவனை ஆறுதல் அளிக்கவில்லை. ஆனால் எதிர்க்கவும் அவனால் முடியவில்லை.

அதே நேரம்…

ஆதினி அந்த இரவு வீட்டில் தனது அறையில் அமர்ந்திருந்தாள்.

அவள் முன் ஒரு புத்தகம் திறந்து காற்றில் படபடத்து ஆடியது.

அவளால் ஒரு வரியும் படிக்க முடியவில்லை.

அந்த பக்கங்கள் வெறும் காகிதமாகவே தோன்றின. அவள் வீட்டில் யாரும் சத்தமாக பேசவில்லை.

அந்த அமைதியே இன்னும் சுமையாக தெரிந்தது ஆதினிக்கு.

சமையலறையில் கலா பாத்திரங்களை சற்று அதிக சத்தத்தோடு வைத்துக் கொண்டிருந்தார்.

அது கோபம் அல்ல.

அது ஒரு மனக்கசப்பு.

தன் இயலாமையின் வெளிப்பாடு

“என்ன அவசரம்… நாளைக்கே கல்யாணம்னு…” என்ற முணுமுணுப்பு வேறு.

அவரால் இன்னும் அந்த செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதற்குள் திருமணம் என்றால் ஒரு தாயின் மனதில் எத்தனை பரிதவிப்பு இருக்கும்? 

சுப்பு அனைத்தையும் கேட்டும், பார்த்தும் அமைதியாக இருந்தார்.

அவருக்குமே இந்த முடிவு அவ்வளவு எளிதல்ல.

ஆனால் தங்கையின் நிலை அவரை வேறு யோசிக்க விடவில்லை. இதைத்தவிர வேறு வழியும் அவருக்கு இருக்கவில்லை.

அவர் மெதுவாக வந்து தன் மகளின் அறை கதவின் அருகே நின்றார்.

ஆதினி ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஆதிம்மா…” தந்தை மெதுவாக அழைத்தார்.

திரும்பி பார்த்தாள் மகள்.

“உனக்கு இது கஷ்டம்னு எனக்கு தெரியும்… ஆனா அப்பா.. அப்பாவுக்கு வேறவழி இல்லை. நீ என்னோட பொண்ணு, சுமதி என் தங்கை. ரெண்டு பேருமே இந்த வீட்டுப் பொண்ணுங்க. நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்..” என நிறுத்தியவர் “உன் அத்தை சாதாரணமா வந்து பெண் கேட்டிருந்தா, சத்தியமா இதுக்கு நான் சம்மதிச்சிருக்க மாட்டேன். ஆனா அவ உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது உன்னை கேட்டா, என்னால இல்லைனு சொல்ல முடியல பாப்பா. அதே நேரம் உன்னை இப்படி பார்க்கவும் எனக்கு கஷ்டமா இருக்கு, நீ சொல்லு பாப்பா.. உனக்கு விருப்பம் இல்லைன்னா உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நான் சுமதிக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிக்கிறேன்” என்றார் வருத்தமாக.

‘அப்படி எதுவும் தன் மகள் வாயிலிருந்து வந்து விடக்கூடாது’ என்று அந்த நொடி அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டார் சுப்பு.

அந்த வார்த்தையில் ஒரு கெஞ்சல் இருந்தது. பரிதவிப்பும், பயமும் இருந்தது.

ஆதினி ஒரு நிமிடம் அவரை பார்த்தாள். பெற்றவரின் தவிப்பு மகளுக்கு புரியாமல் இல்லை. 

அவளுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இந்த நொடி அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. 

அதோடு நேற்றிலிருந்து ‘வேந்தன் தான் தன் கணவன்’ என்ற பிம்பத்தை வழுக்கட்டாயமாக தன் மனதுக்குள் புகுத்திக் கொண்டிருந்தாள்.  

மேலும் அதை மாற்ற முயற்சிக்கவில்லை, அதனால்  தந்தையிடம் ‘இல்லை’ என மெதுவாக தலையசைத்தாள்.

“உங்க சூழல் புரியுது ப்பா.. நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க. நான் சமாளிச்சுக்குவேன்..” என்றாள் வலித்த புன்னகையோடு.

“வேந்தன் ரொம்ப நல்ல பையன் பாப்பா. கொஞ்சம் அமைதியா இருப்பானே தவிர, மத்தபடி அவங்க அப்பா மாதிரி இல்ல. உன்னை புரிஞ்சிக்க டைம் எடுப்பான். ஆனா விட்டுக்கொடுக்க மாட்டான்.” என்றார் மருமகனை விட்டுக் கொடுக்காமல்.

“சரிங்க ப்பா…” என்றவளுக்கு தெரியும். இப்போது இந்த முடிவை மாற்ற முடியாது.

அந்த இரவு அவளுக்கும் தூக்கம் சரியாக வரவில்லை.

அடுத்த நாள் காலையில்…

சூரியன் இன்னும் முழுமையாக தன் ஒளியை வெளி உலகுக்கு காட்டாத அந்த முன் காலைப் பொழுது.

வேந்தனின் குல தெய்வ கோயில்.

அந்த கோயில் வாசலில் இரு வீட்டின்  சொந்தங்களும் நின்றிருந்தார்கள்.

பெரிய திருமண நிகழ்ச்சி அல்ல.

மிகச் சாதாரணமாக, மிக அவசரமாக, அதிலும் ஒரு விதமான அமைதியான திருமண நிகழ்வு.

வேந்தன் வெள்ளை பட்டு வேட்டி சட்டையில் நின்றிருந்தான்.

அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை.

ஆனால் உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

பாட்டி, தாத்தா அருகில்  நின்றிருந்தார்கள்.

பாட்டி அவனைப் பார்த்து, “எல்லாம் நல்லதாத்தான் நடக்கும் ப்பா…” என ஆருடம் சொன்னார்..

‘சரி’ என்பது போல் அவன் மெதுவாக தலையசைத்தான். பேசவில்லை. அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

மூர்த்தி சற்று தள்ளி நின்றிருந்தார். அவரும் எதுவும் பேசவில்லை.

ஆனால் அவரது பார்வை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தது.

அவருக்கு மனைவியை விட்டு வர மனமில்லை. சுமதி தான் “என்னால தான் அங்க இருக்க முடியாது, நீங்களும் இல்லைன்னா தம்பி ரொம்பவே வருத்தப்படுவான். அவனோட கல்யாணம் இப்படி நடக்கிறதே எனக்கு கஷ்டமா இருக்கு, இதுல நீங்களும் இல்லைன்னா..?” என நிறுத்த,

“சுமதி.. எனக்கு இதெல்லாம் ஏத்துக்கவே முடியல.. உன்னோட விருப்பம் தான் இப்போ முக்கியம்னு இந்த கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னேன். நமக்கு இருக்கிறது ஒரே மகன், அவனோட கல்யாணம் எப்படி நடக்கனும் தெரியுமா? அவனோட படிப்பு, அந்தஸ்து, தொழில் எல்லாமே உனக்கு தெரியும்ல்ல, அவனுக்கு அந்த பொண்ணு பொருத்தமானாவளா? இப்படி எனக்கு நிறைய குழப்பம். இதை உனக்கு சொல்லி புரிய வச்சாலும், நீ ஏத்துக்க மறுக்கிற, நான் என்னோட மறுப்பை வேற எப்படித்தான் சொல்றது..?” என மிகவும் வெளிப்படையாக, அதே நேரம் வருத்தமாகவே தன் எண்ணத்தை மனைவியிடம் பகிர்ந்தார் மூர்த்தி.

சுமதிக்கு தன் கணவரின் எண்ணம் முன்னமே தெரியும். அதனால் தான் அவரிடம் ‘வேண்டுமா? வேண்டாமா?’ என்று கேட்கவே இல்லை.

‘ஆதி தான் வேண்டும்’ என முடிவை எடுத்துவிட்டு, தன் கணவரிடமும் அந்த முடிவை பகிர்ந்தார்.

“ஆதி தங்கமான பொண்ணு.. வேந்தனுக்கு பொருத்தமான பொண்ணு ஆதி மட்டும் தான்..” என்றார் கணவரைப் பார்த்து.

“ம்ச்.. இதுவரைக்கும் அந்த பொண்ணுக்கு நம்ம குடும்பத்தை பத்தி என்ன தெரியும்? என்னையும், வேந்தனையும் ஒரு வில்லன் மாதிரி தான் நினைச்சிட்டு இருந்திருக்கும். இப்போ போய் அவளை நம்ம வீட்டுக்கு..” என நிறுத்தியவர், “சரி விடு.. இனி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல.. நடக்கிறது நடக்கட்டும்..” என அமைதியாகிவிட்டார்.

சுமதிக்கும் மேலும் இதைப்பற்றி பேச விருப்பமில்லை. அதனால் “நீங்க போய்ட்டு எனக்கு வீடியோ கால்ல காட்டுங்க..” என்றார் சிரமமான குரலில்.

மூர்த்தியும் அதற்குமேல் மனைவியிடம் தர்க்கம் செய்யவில்லை. மகனின் திருமனத்திற்கு வந்துவிட்டார்.

எளிமையான திருமணம் என்றாலும், அனைத்து நிகழ்வுகளும் நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். 

அவரின் ஒரே மகனின் திருமணம். அவனுக்கு அனைத்தும் சரியாக நடக்க வேண்டும் என்ற ஒரு தந்தையின் படபடப்பும் இருந்தது.

அது மூர்த்தியின் பெற்றவர்களுக்கும் புரிந்தது. அவரின் மகனுக்கும் புரிந்தது.

அதனால் அவரை எதற்கும் தடுக்காமல், கட்டாயப்படுத்தாமல் விட்டு விட்டனர் வீட்டினர்.

அதே நேரம்…

அந்த கோயிலுக்குள் ஆதினியின் குடும்பம் நுழைந்தது.

பெற்றோர் இருவருக்கும் நடுவே அன்னப் பதுமையாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஆதினி.

பச்சையில் பிங்க் வண்ண பார்டரில் பட்டு புடவை, அதே நிறத்தில் பிளவுஸ். 

மிக எளிய அலங்காரம்.

அவள் முகத்தில் மேக்கப் இல்லை.

ஆனால் மகாலட்சுமியின் கலை குடியிருந்தது.

அவள் முகத்தில் ஒரு அமைதி.

ஒரு பதட்டம்.

ஒரு தெரியாத பயம்.

சுப்பு அந்த இடத்தை ஆராய்ந்தபடியே மகளை வேந்தனின் அருகில் நிற்க வைத்தார்.

கலா மகளுக்கு பின்பக்கமாக் நின்றுகொண்டார்.

தன் அருகில் பதுமையென நின்றவளை பார்த்த நொடி… வேந்தனின் கண்கள் நொடி நேரம் அவள் மீது படிந்து மீண்டது.

நேற்று மருத்துவமனையில் பார்த்த பெண்.

இன்று… சற்று நேரத்தில் அவனுடைய மனைவி.

அந்த எண்ணம் அவனுக்கே புதிதாக இருந்தது.

ஆதினியும் அவனை ஒரு நொடி பார்த்தாள்.

இருவரும் எதுவும் பேசவில்லை.

ஆனால் அந்த பார்வையில் ஒரு உண்மை மட்டும் இருந்தது. இந்த கல்யாணத்தை இருவரும் தேர்ந்தெடுக்கவில்லை.

இருவருக்கும் ஒன்று போல ஒரு பெருமூச்சு வெளிவந்தது..

ஐயர் மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

சுப்பு தன் மகளை பார்த்தார். அவரது கண்களில் கலவையான உணர்வுகள்.

திரும்பி மனைவியைப் பார்த்தார்,  அவர் முகத்திலும் அதே உணர்வுதான்..

அவரால் முழுமையாக அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்று தெரியும். மகளுக்காக அமைதியாக இருக்கிறார் என்றும் தெரியும்.

சில நிமிடங்களில்…

அந்த மஞ்சள் கயிறு வேந்தனின் கைகளில் வந்தது.

அவன் அதை பார்த்தான். ஒரு சிறிய மஞ்சள் கயிறு.

ஆனால் இரண்டு பேரின் வாழ்க்கையை இனைக்கப் போகும் தண்டவாளம்.

இப்போது அவன் நிமிர்ந்து ஆதினியை பார்த்தான்.

அவளோ தலை குனிந்து நின்றிருந்தாள். அவளது விரல்கள் சற்றே நடுங்கின.

ஒரு நொடி… வேந்தன் கண்களை மூடி திறந்தான்.

அவன் மனதில் ஒரு எண்ணம்  “அம்மா…” மtட்டும்தான்.

அடுத்த நொடி… அதே நேரத்தில் கோவிலின் மணியோசை ஒலிக்க, “கெட்டிமேளம்…” என்று ஐயர் கூற,

தன் கையிலிருந்த மாங்கல்யத்தை ஆதினியின் கழுத்தில் கட்டினான்.

அங்கு இருந்தவர்கள் அர்ச்சதை தூவ, கதிரவனும் தன் கதிர்களை பூமியை நோக்கி வீச ஆரம்பித்தான்.

அப்போது வேந்தனுக்கும் ஆதினிக்கும் மட்டும் மனதுக்குள் ஒரு அமைதி நிலவியது.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த பார்வையில் காதல் இல்லை. பொறுப்பும் கடமையும் மட்டும் தான் இருந்தது.

அதே நேரம்…

மருத்துவமனையில் இருந்த சுமதி, கணவரின் போனில் மகனின் கல்யாணத்தை பார்த்து, பூரித்துப் போயிருந்தாலும் நேரில் அவர்களைப் பார்க்கும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

அவரது கண்கள் கதவின் பக்கமே நிலைத்து நின்றிருந்தது.

தன் மகன் வாழ்க்கை இப்போது பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. 

ஆதினி அவளைப் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியும் வந்திருந்தது.

ஆனால் அதே நிம்மதி ஆதினியின் பெற்றோருக்கு வேந்தன் கொடுப்பானா?

You may also like

2 comments

M. Sarathi Rio March 7, 2026 - 6:19 pm

வேந்தன் ஆல்ரெடி அமைதியான குணத்தவன் தானே.. அப்புறம் என்ன..? அதெல்லாம் வேந்தன் ஆதினியை காயப்படுத்தாமல் பார்த்துப்பான். ஏன்னா, அவளும் சூழ்நிலைக் கைதின்னு அவனுக்கும் தெரியும் தானே ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply
M. Sarathi March 7, 2026 - 6:22 pm

அதெல்லாம் வேந்தன் ஆதினியை நல்லாவே பார்த்துப்பான், ஏன்னா அவளும் சூழ்நிலைக் கைதித்தான்னு அவனுக்கும் தெரியும் தானே ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured