பகுதி – 13.
அங்கே நிலவும் மௌனத்தை யார் கலைப்பது எனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார்கள். பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்க, அறைக்குள் சுமித்ரா பொருமிக் கொண்டிருந்தாள்.
‘ஒரு பார்வையாவது இருக்கா பார்? என்னைத் தேடவே இல்லையே’ மனதுக்குள் ஒரு சுணக்கம்.
“என்ன சுமி, உன் ஆளு என் மகனோடவே ஐக்கியமாகிட்டார் போல? இந்த பெரியவங்களும் எதுக்கு வந்திருக்கோம் என்பதையே மறந்துட்டாங்களா என்ன?” சுமித்ரா ஏற்கனவே மனதுக்குள் புழுங்க, சுபிதா வேறு இப்படி கேட்டு வைத்தால் அவளும் என்ன செய்ய?
“அத்த… அண்ணி எங்கே இருக்காங்க? நான் அவங்களைப் பார்க்கலாமா?” குழலி அவளை நேரில் பார்க்கவில்லை என்பதால் கேட்டாள்.
“அதுக்கென்னம்மா? அதோ… அந்த ரூம்ல தான் இருக்கா, நீ போய்ப் பாரு” அனிதா சொல்லவே சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். தங்கை கேட்டதை கார்முகிலும் கேட்கவே செய்தான். அவனுக்கும் குழலியின் பின்னோடு சென்று அவளைப் பார்க்க மனம் பரிதவித்தது.
ஆனால் அப்படி எதையும் செய்ய முடியாது என்பதால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“மாப்ள, தங்கச்சி பின்னாடியே உன் மனசும் இப்போ போகுமே…” அதியன் அவன் காதைக் கடிக்க, அவனை முறைக்க கூட அவனால் முடியவில்லை.
“ஷ்… சும்மா இருடா…” அவனை அடிக்குரலில் அடக்கினான்.
“ஏன்டா, உனக்கு அவங்களைப் பார்க்கணும்னு ஆசையா இல்ல? எதுக்குடா இப்படி திணறிகிட்டு உட்கார்ந்து இருக்க? மூச்சு விடுடா, நீ இருக்கற விதத்தைப் பார்த்தால் எனக்கு மூச்சடைக்குது?” அதியன் சொல்ல, வேகமாக மூச்சு வாங்கினான்.
அப்படி மூச்சு வாங்கிய பிறகுதான் அதியன் தன்னிடம் விளையாடி இருக்கிறான் என்பது புரிய அவனைப் பார்த்து முறைத்தான்.
அதைப் பார்த்தவன், “என்னை முறைக்கறது இருக்கட்டும், தங்கச்சி உள்ளே போற கேப்ல அந்த மதி முகம் தெரியுதான்னு பார்த்துக்கடா” அதியன் அதற்கும் பேச, கார்முகிலுக்கு மூச்சடைத்தது.
அதே நேரம் குழலி சுமித்ரா இருந்த அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல, அவளைப் பார்த்தவுடன் சுமித்ராவும், சுபிதாவும் மெல்லியதாக புன்னகைத்தார்கள்.
“வாங்க…” சுமித்ரா அழைக்க, குழலி அவளை நெருங்கினாள்.
அவள் வரவே, “நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க, நான் இப்போ வர்றேன்” என்றவாறு சுபிதா விலகிச் சென்றாள். அவளது அந்த செய்கை குழலிக்கு அத்தனை பிடித்தது.
“எப்படி இருக்கீங்க அண்ணி? உங்ககிட்டே பேசி இருந்தாலும், உங்களை நேர்ல பார்க்கணும்னு எனக்கு அவ்வளவு ஆசையா இருந்தது” என்றவாறு சுமித்ராவின் அருகே அமர்ந்து அவள் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
“நான் நல்லா இருக்கேன்… நீங்க?” என்றவள் அவள் முகம் பார்த்தாள்.
“கொஞ்சம் மசக்கை தான் படுத்தி வைக்குது. எதைச் சாப்பிட்டாலும் வாந்தியா போய்டுது. ஒரு டம்பளர் ஜூஸ் கூட, முழுசா குடிக்க முடியறது இல்லை. அப்படியே குடிச்சா, மொத்தமா வெளியே வந்துடுது” என்றவளது முகத்தில் சோர்வையும் மீறி ஒரு சந்தோசம் தாண்டவமாடியது.
“ஓ… என் அக்காவுக்கும் அப்படித்தான் இருந்தது. மூணு மாசம் முடியற வரைக்கும் அப்படித்தான் இருக்கும். பிறகு சரியா போய்டும்” அவள் சொல்ல, அதையெல்லாம் குழலி கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.
“அண்ணி… நிஜமாகவே உங்களுக்கு என் அண்ணாவை கட்டிக்க முழு சம்மதமா? நீங்க சும்மா ப்ரேன்க் பண்ணலையே…?” என்றவளின் கரத்தில் தெரிந்த நடுக்கத்தை சுமித்ராவால் நன்கு உணர முடிந்தது.
“என்ன அண்ணி நீங்களே இப்படிக் கேட்கறீங்க?”.
“உங்க மேலே நம்பிக்கை இல்லாமல் இதைக் கேட்கலை அண்ணி. எனக்கே இதை நம்பறதுக்கு கஷ்டமா இருக்கு. எங்க அண்ணாகிட்டே கொஞ்ச நாள் பழகிப் பார்த்தால், பிறகு யாருமே அவனை அவாய்ட் பண்ண மாட்டாங்க, அந்த அளவுக்கு அவன் நல்லவன்.
“ஆனா அப்படி யாருமே இதுவரை செய்தது இல்லை. முதல் பார்வையிலேயே அவனோட நிறம்தான் அவங்க கண்ணுக்கு தெரியும். இத்தனைக்கும் அவன் ரொம்பவே லட்சணமா இருப்பான். இந்த கருமை நிறக் கண்ணா மாதிரி…” அவள் படபடவென பேச, அவள் கரத்தை தட்டிக் கொடுத்தாள்.
“அண்ணி ரிலாக்ஸ்… கொஞ்சம் அமைதியா இருங்க” அவள் அத்தனையாக படபடக்க, அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.
“அது… அது…” என்றவள் சுமித்ராவின் கரத்தை எடுத்து தன் கரத்துக்குள் வைத்து அழுத்திக் கொண்டாள்.
“கொஞ்சம் இருங்க…” என்றவள் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தாள். அதை வாங்கி மறுக்காமல் குடித்துவிட்டு அவளிடம் கொடுத்தவள், மீண்டும் சுமித்ராவின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.
‘இவங்களாவது பரவாயில்லை… அன்னைக்கு வந்த அத்தை செய்த ஆர்ப்பாட்டம்?’ நினைத்துப் பார்த்த சுமித்ராவுக்கு மனதைப் பிசைந்தது.
சுமித்ரா கார்முகிலை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொன்ன மறு நாளே சுதா அவளைக் காண வந்தார். “அம்மாடி நீ சொன்னது நிஜமா?” எனக் கேட்டு அவளைக் கட்டிக்கொண்டு அவர் அழுத அழுகை இன்னுமே அவள் கண்களுக்குள் நிழலாடியது.
அவள் கரத்தைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டு, “நீ மட்டும் சின்னவளா இல்லாமல் போயிருந்தா உன் காலிலேயே கூட விழுந்திருப்பேன்” சுதா சொல்ல பதறிப் போனாள்.
“அம்மா, இங்கே வாங்க… என்ன அங்கேயே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” எங்கே சுதா இருந்த வேகத்துக்கு அப்படி எதையும் செய்து வைத்துவிடுவாரோ என பயந்து போனாள்.
“இல்லம்மா, பயப்படாதே… அப்படியெல்லாம் எதுவும் செய்ய மாட்டேன்” அவர் சொல்ல, அனிதா வந்து அவரைப் பிடித்து அங்கே கிடந்த சோபாவில் அமர வைத்தார். அந்த நினைவுகள்தான் சுமித்ராவுக்கு வந்து போனது.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி… உங்களோட இந்த முடிவுக்காக நிச்சயம் நீங்க வருத்தப்படவே மாட்டீங்க. எங்க அண்ணா ரொம்ப நல்லவன், ரொம்ப புரிதல் உள்ளவன். உங்களை அவன் நல்லா பார்த்துப்பான். ஐ ப்ராமிஸ்…” அவள் சொல்லச் சொல்ல, சுமித்ராவுக்கு படபடப்பாக இருந்தது.
“எங்கே… நீங்க சொல்றீங்க. உங்க அண்ணாவைப் பாருங்க… எப்படி உட்கார்ந்து இருக்கார்ன்னு நீங்களே பாருங்க” அவள் சொல்ல, குழலி திரும்பிப் பார்த்தாள்.
“பூரா நடிப்பு அண்ணி அவனை நம்பாதீங்க. கண்ணாடியைப் பார்த்து அவனுக்கு அவனே பேசிக்கறான். படுக்கையில் படுத்து விடாமல் புலம்பிகிட்டே இருக்கான். ‘டேய் கறுப்பா உனக்கு உடம்பு முழுக்க மச்சம்டா’ன்னு அவனுக்கு அவனே பெருமை பேசிக்கறான்.
“உங்க மேலே பைத்தியமா இருக்கான். இந்த நடிப்பெல்லாம் கல்யாணம் வரைக்கும்தான், அதுக்குப் பிறகு பாருங்க… ‘உங்க அண்ணாவோட முடியலை’ன்னு நீங்க புலம்பற அளவுக்கு அட்டூழியம் பண்ணப் போறான்” அவள் சொல்ல, சுமித்ராவுக்கு ஏனோ நம்பிக்கை வர மறுத்தது.
சுபிதா அங்கே இருந்து செல்லும்பொழுது, அறைக்கதவை பூட்டாமல் போயிருக்கவே, அவர்களால் அதியனையும், கார்முகிலையும் அங்கே இருந்தே காண முடிந்தது. பெண்கள் இருவரும் இங்கே பார்க்கவே, அதியன் ஒரு சின்ன புன்னகையைக் கொடுத்தான்.
“உங்க அண்ணா பக்கத்தில் இருக்காரே அவர் யாரு?” அதியனுக்கு தானும் ஒரு மென்னகையைக் கொடுத்தவாறே கேட்டாள்.
“முகி, முகி, முகி… பாருடா…” அதியன் அவன் காலைச் சுரண்டி சொல்ல, அவன் படபடப்பில் நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான்.
“அவங்களா? நம்ம வீட்டுப் பக்கம் மளிகைக்கடை வைத்து இருக்காங்க. அண்ணா வீட்டுக்கு வந்தால், அங்கேதான் பாதி நேரம் இருப்பான். அண்ணாவோட நல்ல ஃப்ரண்டு… நம்ம வீட்டுக்கு மளிகை எல்லாம் அண்ணா கடையில் இருந்துதான் வரும்” அவள் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டாள்.
அதியன் சொன்ன வேகத்துக்கு அவளை நிமிர்ந்து பார்த்தவனால் ஒரு நொடி பார்வையை அவள்மீது இருந்து திருப்பவே முடியவில்லை. அதே நேரம் இவர்களுக்கு அருகே இருந்த குமார், “ம்கும்… ம்கும்…” என தொண்டையைக் கனைக்க, சட்டென பார்வையை விலக்கிக் கொண்டான்.
‘இவனுக்கு இவ்வளவு பெரிய பேரழகியா?’ குமாருக்கு வயிற்றெரிச்சலாக வந்தது. அவன் கணித்ததில் சுமித்ராவின் பார்வையும் குமாரின் பக்கம் செல்ல, அவன் பார்வையில் தெரிந்த பாவனையில் அவனை சுமித்ராவுக்குப் பிடிக்காமலே போனது.
“அவங்க பக்கத்தில் தனி சோபாவில் இருக்கறது என் கணவர்” குழலி சொல்ல, தன் பிடித்தமின்மையை அவளிடம் காட்டவில்லை.
“ஓ… ஓகே…” என்றாள். ஆனால் அதற்குப் பிறகு சுமித்ரா குமாரைக் கண்டுகொள்ளவே இல்லை.
அதே நேரம் கார்முகிலுக்கு அருகே இருந்த அதியனை அவளுக்குப் பிடித்திருந்தது. கார்முகிலுக்கு அருகே அமர்ந்து, அவனைச் சீண்டுவதும், சின்னக் குரலில் அவனை கேலி செய்து சிரிப்பது, தன்னைக் காண வைத்தது என அவன் செய்த ஒவ்வொரு செய்கையிலும் ஒரு நண்பனின் இலக்கணத்தைக் கண்டாள்.
தன் நண்பனுக்காக அவன் மகிழ்ந்து போவது அவன் பார்வையிலேயே தெரிந்தது. “முகில்… அவங்க உன்னையேதான் பார்க்கறாங்க, பாருடா…” அவள் பார்வை கார்முகிலை தொட்டு நிற்க, நண்பனிடம் சொன்னான்.
“நீ கொஞ்சம் உன் வலதுபக்கம் பாருடா…” அவன் சொல்ல, திரும்பிப் பார்த்த அதியன் குமாரைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
“அவன் கிடக்கறான் க்ரேக்… இவனுக்கு எப்படிடா உன் தங்கச்சியை கொடுத்தீங்க? சரியான வன்மம் புடிச்சவன். அவன் ஆளும் முகரையும்…” முகத்தை சுழித்து அவனிடம் சொல்லவில்லை என்றாலும், இரு ஆண்களின் முகபாவமே அவர்கள் குமாரைப் பற்றி பேசுகிறார்கள் என சுமித்ராவுக்குச் சொன்னது.
“அவரை நமக்கு பிடிக்கணும்னு அவசியமே இல்லை, என் தங்கச்சிக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு” கார்முகில் சொல்ல, அதியன் அதற்கு எதையும் சொல்லவில்லை.
“நேரமாகிட்டே போகுதே… பொண்ணை பார்த்துடலாமா?” மூர்த்தி கேட்க, சுபிதா அறைக்கு விரைய, குழலி வெளியே வந்துவிட்டாள்.
அறைக்கு வெளியே வந்தவள், அனைவரைப் பார்த்தும் கரம் குவித்தவள், “வணக்கம்…” எனச் சொல்ல, அந்த பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அவளை அங்கே அப்படிப் பார்த்த அந்த நொடி, கார்முகிலின் தேகத்தில் அத்தனை பரபரப்பு, படபடப்பு.
அவளை அப்படியே இறுக கட்டிக்கொள்ள தேகமும் மனமும் அத்தனையாக தவித்துப் போனது. அதை உணர்ந்து சற்று பயந்துதான் போனான். சுபிதா அவள் கரத்தில் காபி ட்ரேயைக் கொடுக்க, முதலில் கார்முகிலுக்கு கொடுத்தாள்.
அதில் நடு நாயகமாக இருந்த வெள்ளிக் கப்பை விடுத்து, அவன் வேறு கப்பை எடுக்கப் போக, “ம்ஹும்…” சின்னதாக மறுப்பாக குரல் கொடுக்க, பட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவள் பார்வையாலேயே அந்த வெள்ளிக் கப்பை சுட்டிக் காட்ட, அந்த அவள் செய்கையில் அவளையே வெறித்தான்.
“மச்சான்… நீங்க காபியை எடுத்தாத்தான் எங்களுக்கும் காபி கிடைக்கும்” குமாரின் குரல் அந்த அவர்களது இனிமைக்குள் அபசுவரமாக ஒலித்தது. அங்கே அவர்களது செய்கையை அனைவரும் பாராமல் பார்த்திருந்தாலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.
அருகே இருந்த அதியன் கூட நண்பன் கப்பை எடுக்க காத்திருந்தானே தவிர, அவனைக் கலைக்க கூட விரும்பவில்லை. வந்த இத்தனை நேரத்தில் இப்பொழுதுதான் சுமித்ராவை அவன் நிமிர்ந்து பார்க்கிறான் அதைக் கலைப்பதா? என்ற எண்ணத்திலேயே அமைதி காத்தான்.
குமார் அப்படிச் சொல்லவே, அதியன் குமாரை அழுத்தமாக ஒரு நொடி பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.
“என்னங்க… கொஞ்சம் என் கூட வாங்க…” என குழலி அவசரமாக வீட்டுக்கு வெளியே செல்ல, அவள் சென்ற வேகத்திலேயே அவள் வாந்தி எடுக்கப் போவது தெரிய, அவனும் பின்னால் ஓடினான்.
குமார் அங்கிருந்து செல்லவே, “மாப்ள… அந்த வெள்ளிக் கப்பு முதல் முதல்ல சுமித்ரா பால் குடிச்ச கப்பு. அதில்தான் உங்களுக்கு காபி கொடுக்கணும்னு அவளுக்கு ஒரு ஆசை… கப்பை எடுத்துக்கோங்க” செல்வம் சொல்ல, அந்த வெள்ளிக் கப்பை கையில் எடுத்துக் கொண்டான்.
அவள் அடுத்ததாக அதியனுக்கு கொடுக்க, “பெரியவங்களுக்கு கொடுங்க, நான் பிறகு எடுத்துக்கறேன்” அவன் மறுத்தான்.
“டேய்… எடுடா…” என கார்முகிலும், “என்னப்பா இது? எடுத்துக்கோ” என சுதாவும் சொல்ல, “நன்றிங்க” என்றவாறு கொஞ்சம் இருக்கையில் இருந்து எழுந்தவன் எடுத்துக் கொண்டான். அவள் கார்முகிலை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர,
“மாப்ள… தங்கச்சி குடிச்ச கப்பாம்டா… அடுத்து நீதான் அதில் குடிக்கற…” அதியன் சின்னக் குரலில் சொல்ல, அது அவளுக்கு தெளிவாகவே கேட்டு வைத்தது. அந்த பேச்சில் அவள் இதழில் ஒரு மென்னகையும், கன்னத்தில் சிறு ரோஜாவும் பூக்க, கார்முகிலுக்கோ சொல்லவும் வேண்டுமா?
அந்த கப்பை வாயில் வைத்து காபி குடிக்கையில் உள்ளுக்குள் ஒரு இன்ப ஊற்று. என்னவோ அவளிடமிருந்தே நேரடியாக அவள் இதழின் வழியாக காபியை அருந்துவது போன்றதொரு பிரம்மை. அந்த கற்பனை இன்னும் விரிய, அந்த காபி தீரவே கூடாது என மனம் விரும்பியது.
அவனது அந்த பரவசத்தை அவனது முகமே எடுத்துக் காட்ட, தன் தாயின் அருகே அமர்ந்தவள் அவனைத்தான் ஓரவிழியாக கவனித்தாள். அவன் பார்வை தன்னைத் தீண்ட வேண்டும், தன்னைத் தாலாட்ட வேண்டும்… அவள் மனம் வெகுவாக ஆசைப்பட, அவனோ அசைந்து கொடுக்கவே இல்லை.
அடுத்ததாக சுமித்ராவை அறைக்குள் அழைத்துச் சென்று சேரில் அமர்த்தி, முதலில் சுதா அவள் தலையில் பூவைச் சூட, அடுத்ததாக அனைவரும் அவளுக்கு பூ வைத்து விட்டார்கள். சுதா அவள் கன்னம் வழித்து சிரிக்க, அவளும் புன்னகைத்தாள்.
அன்று விருந்து எதுவும் வேண்டாம் என இவர்கள் சொல்லியிருக்கவே, டிபன் மட்டும் சாப்பிட்டு கை நனைத்துக் கொண்டார்கள். சுமித்ராவிற்கு பூ வைத்த பிறகு அவள் எப்படி இருப்பாள் எனப் பார்க்க கார்முகிலின் மனம் கிடந்தது தவித்தது.
ஆனால் அதற்கு மேலே அவள் அறையை விட்டு வெளியே வராமல் போகவே, அனைவரும் விடைபெற்றுக் கொண்டு கிளம்ப முயன்றார்கள். அந்த நேரம் சுமித்ரா குழலிக்கு என அவள் தேடி அலைந்து வாங்கியிருந்த அந்த கிருஷ்ணனின் தவழும் கையடக்க சிலையை அவளிடம் கொடுத்தாள்.
அதைப் பார்த்த குழலி, “அண்ணி… இது…?” அவள் தடுமாற,
“யானை தந்தத்தில் செய்தது… நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு தெரிஞ்ச உடனே உங்களுக்குன்னு வாங்கினேன்” அவள் சொல்ல, குழலிக்கு பேச்சே வரவில்லை. அவள் தன் அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைத்திருக்கும் புகைப்படங்களை இவள் எப்பொழுது பார்த்தாள் என்ற எண்ணம்தான் உள்ளுக்குள் ஓடியது.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி… எனக்கு… எனக்கு… சொல்ல வார்த்தையே வரலை” என்றவள் அத்தனை உணர்ச்சிவசப்பட்டாள்.
“உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே… அது போதும்” அவளது மகிழ்ச்சியை உள்வாங்கியவாறே சொன்னாள். அவளும் சரி, அவனைப் பெற்றவர்களும் சரி… ஏன் அதியன் கூட அவளிடம் விடைபெற்றுச் சென்ற பிறகும், கார்முகில் அவளிடம் செல்லவில்லை.
அதைப் பார்த்த சுதா, “முகில்… மருமககிட்டே சொல்லிட்டு வாப்பா” தாய் சொல்ல, சுமித்ரா இருந்த அறையை நோக்கிச் சென்றான். உள்ளுக்குள்ளே மனம் ஒரு மாதிரி பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.
எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் பூமுடித்திருக்க, அவனுக்கு விண்ணில் பறக்கும் உணர்வு. அவளை இப்படியே கையோடு தன்னுடனே அழைத்துச் செல்ல மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. அவனை அறைக்குள் பார்த்தவுடன் அவள் எழுந்து நிற்க, தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூடி இருந்த அவளை இமைக்காமல் பார்த்தான்.
அதென்னவோ அந்த நொடி அவளை அப்படிப் பார்க்கவே வித்தியாசமாகத் தெரிந்தாள். அவளை இன்றைக்குத்தான் முதல் முறையாக புடவையில் காண்கிறான். இதுவரை மார்டன் உடைகளில் மட்டுமே அவளைப் பார்த்துவிட்டு இப்படிப் பாக்கையில் அவனால் இமைகளைத் தட்டி விழிக்க கூட முடியவில்லை.
அவன் பார்வை தன்னை இமைக்காமல் வெறித்திருக்க, அவளுக்கு ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது. அத்தனை நேரமாக ஒரு பார்வைக்கு கூட பஞ்சமாக இருந்தது என்ன? இப்பொழுது அவன் பார்க்கும் பார்வை என்ன? அவள் நினைக்க,
அவனுக்கோ அந்த நொடி அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவளை மீண்டுமாக உணர்ந்துகொள்ள அவன் மொத்த தேகமும் பரபரத்தது. அன்று உணர்ந்த அவள் தேகத்தின் வெம்மையும், மென்மையும் நினைவுக்கு வர, பார்வை அனிச்சையாக அவள் தேகத்தில் நழுவியது.
தன் பார்வை அவள் தேகத்தில் நழுவியது கூடத் தெரியாமல் அவன் நின்றிருக்க, அவன் பார்வை தன் தேகத்தில் பதிந்த விதத்தில் ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தாள்.
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பார்க்கலையேன்னு கவலைப்பட்டா, இப்போ… இப்படிப் பார்த்து வைக்கறார்? என்னவோ கடிச்சு முழுங்கப் போற மாதிரி… ஆண்டவா…’ அவள் மனதுக்குள் அலற, “சித்தா…” என்றவாறு அங்கே ஓடி வந்தான் ஆதவன்.
அப்பொழுதுதான் கலைந்த கார்முகில், சற்று திடுக்கிட்டு அவளைப் பார்த்தவன், அவள் முகம் பார்க்க முடியாமல் தடுமாறிப் போனான்.
“நான் போயிட்டு வர்றேன்…” அவன் சொல்ல, மெதுவாக தலை அசைத்தாள். அவன் முகத்தில் நிலவிய சங்கடமும் தடுமாற்றமும் அவளை என்னவோ செய்தது. அவன் கண்களில் தடுமாற்றம் இருந்த அளவுக்கு, காதல் இல்லையோ என ஒரு எண்ணம்.
அன்று மட்டுமா? அடுத்து வந்த நிச்சயம், திருமண தேதி ஒரு மாதத்துக்குள்ளாக இருக்க, உடை எடுக்க, ரிசப்ஷன் உடை தெரிவு செய்ய என பலமுறை அவனை நேரில் சந்தித்துவிட்டாள். அப்படியும் அவனிடம் அவளிடம் பேசும் ஆவலோ, ஆர்வமோ இல்லாமல் போக அவளுக்கு அது பிடிக்கவே இல்லை.
அவனிடம் அவளாகவே பேச முயன்ற பொழுதும் கூட, அவள் கேட்டதுக்கு மட்டுமே பதில் கொடுத்தான். அவனுக்கோ அவள் கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் இது நடக்க வேண்டுமே என்ற டென்ஷன். அது நடவாமல் போய்விட்டால், தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்ற எண்ணம்.
அவனது பாராமுகம் அவளை வாட்ட, அதைக் கண்ட குழலி, தன் அண்ணனின் மனநிலையை அவளிடம் சொல்லிவிட்டாள். அதைக் கேட்டு சுமித்ராவுக்கு கோபம்தான் வந்தது.
‘அப்படி என்ன நடக்காமல் போய்டப் போகுது? என்மேலே இன்னும் அவருக்கு நம்பிக்கை இல்லையா?’ அவளுக்கு கோபம் வர, அதை அவனிடம் ஹோட்டலில் சாப்பிடப் போன பொழுது கொட்டிவிட்டாள்.
அதைக் கேட்டவன், “உன்மேலே நம்பிக்கை இல்லாமல் இல்லை, எனக்கு என் ராசி மேலே நம்பிக்கை இல்லை. என்னவோ நாய்க்கு முழுத் தேங்காய் ஒட்டாதுன்னு சொல்வாங்க… அப்படி…” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டாள்.
“அம்மா எனக்குப் போதும், நீங்க சாப்ட்டு வாங்க, நான் முன்னாடி கால் டேக்சி பிடிச்சு கிளம்பறேன். ரொம்ப தலை வலியா இருக்கு” அவனைப் பெற்றவர்களிடமும் ஒரு மன்னிப்பை வேண்டிவிட்டு கை கழுவப் போனாள்.
அவள் பின்னாலேயே அவனும் சென்றுவிட்டான். நேரம் அப்பொழுது மூன்று மணியைக் கடந்திருக்கவே அப்பொழுது அந்த ஹோட்டலில் யாரும் வெளி ஆட்கள் இருக்கவில்லை. கை கழுவும் இடத்தில் வைத்து அவன் அவளை வழி மறிக்க, அவன் அப்படி வருவான் என்பதை எதிர்பாராத சுமித்ரா, நேருக்கு நேராக அவன்மேல் மோதி இருந்தாள்.
“என்மேலே கோபமா?” அவள் வலியில் முகம் சுருக்க, அவளைத் தடுத்தவன் கேட்டு வைத்தான்.
“போடா ரோபோட்…” அவள் அடிக்குரலில் சீற,
“ஏய் ஏலியன்… உன்ன…” என்றவன் அவளைப் பிடிக்க முயல, அவளோ அவன் கைக்கு சிக்காமல் அவனை முறைத்தவாறே அங்கிருந்து அகன்றாள். செல்லும் முன்னர் அவன் பார்வை தன்மேல் நிலைத்திருக்க, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என செய்கையில் சொல்லிச் செல்ல, தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
1 comment
ஏலியன், ரோபோ 🤪🤪🤪🤪🤪