தளிர் 68
“விக்ரம் முதல்ல அவளை வெளிய அனுப்பு…” என்ற ரேணுகாவிடம், “ம்மா கொஞ்சம் பொறுங்க, நான் பேசிக்கிறேன்.” எனவும், நிசா அவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்னடா நான் சொல்ல சொல்ல கேட்காம பேசிட்டே இருக்க? அவ இங்க இருந்தா நான் கண்டிப்பா எதாச்சும் செஞ்சிடுவேன் விக்ரம். அவளை அனுப்பு முதல்ல…” என ரேணுகா விடாமல் கத்த,
“ம்மா, அவ இன்னும் என்னோட மனைவிதான், அதை மறந்திட வேண்டாம். எனக்கு அவக்கிட்ட பேசவும் கேட்கவும் நிறைய இருக்கு.” என விக்ரமும் கண்டிப்பாக சொல்ல, கடுங்கோபத்திற்கு வந்துவிட்டாள் நிசா.
இனி யாருக்காகவும் பொறுத்து போகும் எண்ணம் இல்லை அவளுக்கு. இதுவரை இந்த ஸ்வாதியால் அனுபவித்தது எல்லாம் இவனுக்குத் தெரியாதா? இல்லை, மறந்துவிட்டதா? மனைவி என்கிறானே என ஆற்றாமையும் எரிச்சலும் வர, வேகமாக அவன் முன்னே வந்து,
“மிஸ்டர் விக்ரம், இது என்னோட வீடு. அதை அடிக்கடி நீங்க மறந்துடுறீங்க போல… உங்க மனைவியை கூட்டிட்டு முதல்ல என் வீட்டுல இருந்து வெளியே போங்க.” என ஆக்ரோசமாகக் கத்த,
“இப்படி திமிரா பேசுறதை முதல்ல நிறுத்து, நான் போகணுமா, வேண்டாமானு நான்தான் முடிவு பண்ணணும், நீயில்ல.” என விக்ரமும் கத்த,
அதுவரை அமைதியாக அனைவரையும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த தசிரா, தகப்பனின் இந்த சத்தத்தில் வீலென்று கத்த ஆரம்பிக்க,
அவ்வளவு நேரமும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்த இருவரும் ஒரே நேரத்தில் குழந்தையிடம் செல்ல, அதுவோ தாயை விட்டுவிட்டு தந்தையிடம் ஒன்ற, யார் யார் மேலோ இருந்த கோபத்தை, யார் மீது காட்டவென தெரியாத நிசாவும், “நீயும் ஆரம்பிக்காத பாப்பா, வாயை மூடு…” என தசிராவின் முதுகில் பட்டென்று ஒரு அடியை வைத்துவிட, அது மேலும் கத்த ஆரம்பித்தது.
“ஏய்!” எனக் கத்திய விக்ரம், நிசாவைப் பிடித்து சோபாவில் தள்ள, “டேய் என்னடா பண்ற…?” என்று வந்த ரவியையும் தள்ளியவன் நிசாவிடம் திரும்பி, “என் பொண்ணு மேல கை வச்சா கொன்னுடுவேன் உன்னை… என் பொண்ணு மேல கை வைக்கக் கூடாதுனு உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? இன்னொரு முறை கை வச்சா தொலைச்சிடுவேன் ராஸ்கல்!” என கர்ஜிக்க, அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் சிலையாகிப் போக,
விக்ரமின் இந்த கோபத்தைப் பார்த்த ஸ்வாதி கூட கொஞ்சம் நடுங்கத்தான் செய்தாள். அதை வெளிக்காட்டாமல் நிசாவைப் பார்த்து எள்ளலாக சிரிக்க, அதைப் பார்த்து பல்லைக் கடித்த ரேணுகா, “நிசாம்மா நீ வா, அவனுக்கு பைத்தியம் முத்திப்போச்சு. அவன் என்னமோ பண்ணித் தொலையட்டும், நீ வா.” என அதிர்ந்து நின்றிருந்தவளை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
இதில் நிசா அந்த இடத்திலிருந்து நகரவும் குழந்தை இன்னும் அழ, “அம்மும்மா, ஏன் இப்படி அழறீங்க, அம்மாட்ட போகணுமா? அப்பாட்ட இருக்கணுமா?” என விக்ரம் கொஞ்சி சமாதானம் செய்ய முயற்சிக்க, அதுவோ நேரம் காலம் தெரியாமல், நடந்து கொண்டிருக்கும் சூழலும் புரியாமல், “ம்மா… ப்பா…” என அவன் முடியைப் பிடித்து ஆட்டியபடி, சமாதானமாகாமல் அழுது கொண்டிருக்க,
“ஓகே ஓகே அம்மும்மா… அழாதீங்க, அம்மும்மாவும் அப்பாவும் கார்ல போகலாமா? வாங்க, ஜாலியா வெளியே போயிட்டு வரலாம். அம்மும்மாவுக்கு அப்பா ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்.” என யாரையும் கண்டுகொள்ளாமல், கொஞ்சியபடியே குழந்தையோடு வெளியில் நடக்க,
“ம்மா… ம்மாட்டா… ம்மா…” என, தசிரா இப்போது நிசாவைப் பார்த்து அழ ஆரம்பித்தது.
என்ன செய்வது எனத் தெரியாமல், ‘ஷப்பா!’ என விக்ரம் முழிக்க ஆரம்பிக்க, ‘செத்தடா சேகரா!’ என நினைத்த ரவி வந்து குழந்தையை விக்ரமிடமிருந்து வாங்கி நிசாவிடம் கொடுத்துவிட்டு, “இப்போதான் பொண்ணு மேல பாசம் அருவியா கொட்டுது, எப்படி சமாளிக்கணும்னு கூடத் தெரியல. வழக்கம் போல மூடிட்டு போய் அவளுக்கு…” என ஸ்வாதியைக் காண்பித்து, “சொம்பு தூக்கு, அதுக்குத்தான் நீ சரிப்பட்டு வருவ.” என விக்ரமை கடித்துக் குதறியவன்,
ஸ்வாதியைப் பார்த்து முறைத்து, “சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு, என் பொண்டாட்டி சாப்பிடணும். நீ இருந்தா அவ வெளிய வரமாட்டா.” என கடுகடுவென கொட்ட,
“ரவி நீ பேசறது கொஞ்சமும் சரியில்ல, அவ உன் தங்கச்சி. யாருக்காகவோ நீ அவளை விட்டுக்கொடுத்து பேசுறது சரியில்ல.” என்ற தாயை முறைத்தவன்,
“உங்களுக்கும் தனியா சொல்லணுமா? அவ யாரோ இல்ல, என்னோட மனைவி. உங்க மகளைக் கூப்பிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க.” என மதியையும் விட்டு வைக்காமல், கடித்துக் குதறிவிட்டு ரித்தியிடம் சென்றுவிட்டான்.
“விக்கி…” என்று வந்த ஸ்வாதியைப் பார்த்து பல்லைக் கடித்த ரேணுகா, “நிசாம்மா வா, உனக்கு இன்னைக்கு செக்கப் இருக்குதானே? கிளம்பலாம், ரஞ்சனிக்கு நான் பேசிட்டேன்.” என்று கார் கீயை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல,
அப்போதுதான் நரேன், நிசாவை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல வந்தான் என்பதே விக்ரமிற்கு ஞாபகம் வந்தது.
“ஷிட்!” எனத் தலையில் அடித்துக் கொண்டவன், “ஸ்வாதி நீயும் ஆன்ட்டியும் கிளம்புங்க, நான் ஈவ்னிங் வீட்டுக்கு வரேன், பேசலாம். எனக்கும் உங்கிட்ட பேச வேண்டியது இருக்கு.” என்றதும்,
ஸ்வாதியின் முகம் வெளுக்கத் தொடங்க, “என்ன விக்கி, என்ன பேசணும்?” என கொஞ்சமே கொஞ்சம் பயந்த குரலில் கேட்க,
“என்ன கொஸ்டீன் இது? இவ்வளவு நாள் கழிச்சு வந்துருக்க, உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கணும் இல்ல… ரித்தியோட பாப்பா பிரச்சனை முடிஞ்சு எல்லாம் ஓகே ஆனதும் பேசலாம்னு இருந்தேன். இந்த பிரச்சனை இனி ஓயாது போல… ஓகே, இப்பவே பேசிடலாம், டாக்டர்கிட்ட போக அப்பாய்ன்மென்ட் டைம் சேன்ஞ்ச் பண்ணிக்கலாம்.” என்றவன் முகுந்தனுக்கு அழைத்து தாமதமாக வருவதாக சொல்லிவிட்டு,
“ம்மா, இங்க கொஞ்சம் வாங்க. நான் பேசி முடிச்சதும் போகலாம்.” என ரேணுகாவை அழைத்தவன், முறைத்துக் கொண்டிருந்த நிசாவையும், “உனக்கு வேற தனியா சொல்லணுமா? உட்கார்.” எனக் கடுகடுத்துவிட்டு, “டேய், வெளிய வாடா.” என ரவியிடமும் கத்தினான்.
பின் ஸ்வாதியிடம் திரும்பி, “சொல்லு ஸ்வாதி, அன்னைக்கு என்ன நடந்தது? ஆக்சிடென்ட் ஆன கார்ல நீதானே இருந்த, அப்புறம் எப்படி நீ தப்பிச்ச?” எனவும், ஸ்வாதிக்கு முகமெல்லாம் வியர்க்க தொடங்கியது.
“அது விக்ரம்… நான் கார்லதான் இருந்தேன், அப்புறம்…” எனத் திக்க,
“விக்ரம், என் பொண்ணு உயிரோட வந்தது உனக்கு பிரச்சனையா இருக்கா?” என மதி ஆரம்பிக்க,
“ஆன்ட்டி நீங்க இதுல எங்கேயும் தலையிடக்கூடாது. அவ உங்க மகள்னா, எனக்கு வொய்ஃப். உங்களை விட அதிகமா வருத்தப்பட்டதும் பாதிக்கப்பட்டதும் நான் மட்டும்தான். அதனால அவ எல்லாத்துக்கும் ரீசன் சொல்லித்தான் ஆகணும். எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கா, அதைப்பத்தி நாம எதுவும் கேட்க வேண்டாமா?” என மதியிடம் பட்டென்று சொன்னவன்,
“வந்திருக்கிறது நம்ம ஸ்வாதி தானா? இல்ல, பணத்துக்காக ஸ்வாதியை எதாச்சும் செஞ்சிட்டு, அவளைப் போலவே வேற ஆள் வந்திருக்காங்களா? இப்படியெல்லாம் யோசிக்கணும்தானே ஆன்ட்டி?” என வக்கீலாக பேச, (ஏன்டா இப்படி? எல்லோரும் உன்னை கூமுட்ட வக்கீலுனு சொல்றாங்க, சோகத்த… இவனும் இவன் பெர்ஃபார்மன்சும்…)
“இரு இரு விக்கி, நான் எல்லாமே உனக்கு சொல்றேன். நீ அம்மாக்கிட்ட கோபப்படாத.” என்றதும்,
“சரி சொல்லு, அன்னைக்கு என்ன நடந்தது? நீ செத்துட்டனு சொல்லி உன்னோட அடையாளத்தைச் சொல்லி, ஒரு டெட் பாடியை போலீஸ் காட்டும் போது, நாங்க எப்படி நம்பாம இருக்க முடியும்? அதனால இப்போ நீ உயிரோட எங்க முன்னாடி நிக்கிறதை நம்பவே முடியல.” என ஸ்வாவதியைப் பார்த்துக் கேட்க,
“அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை வரவும் எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சி. உன்னை விட்டு தூரமா போயிடணும், நீ என்னைத் தேடணும், உன்னை பயமுறுத்தணும்னு தான் நான் கார் எடுத்துட்டு கிளம்பினேன். ஆனா பாதி வழியிலே ஒரு லேடியும் ஜென்னும் என்னை நிறுத்தி லிஃப்ட் கேட்டாங்க. முதல்ல நான் முடியாது சொன்னேன், அவங்க ரொம்ப கெஞ்சி கேட்கவும் நானும் ஓகே சொல்லிட்டேன்.
கார் ஈசிஆர்ல டர்ன் பண்ணது மட்டும்தான் ஞாபகம் இருக்கு, அதுக்குப் பிறகு நடந்த எதுவும் ஞாபகமே இல்ல விக்கி. லாஸ்ட் மன்த் ஒருநாள் திடீர்னுதான் எல்லாமே ஞாபகம் வந்தது. இடைப்பட்ட காலங்கள்ல என்ன நடந்ததுனு எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல விக்கி.” என ஸ்வாதி தேம்பி தேம்பி அழ,
‘என்ன என்ன கதையெல்லாம் விடுறா பார்…’ என ரித்தி உள்ளிருந்தே பல்லைக் கடிக்க,
‘உன் வாய், உன் உருட்டு. நீ என்ன வேணும்னாலும் உருட்டிட்டுப் போ.’ என நிசாவும் அற்பபதரைப் போல் பார்க்க,
‘அம்மாடியோவ்! இவ நடிப்புல அருந்ததி அனுஷ்கா தோத்துடுவா, என்னா நடிப்பு!’ என ரேணுகா மனதில் நினைத்துக்கொண்டே விக்ரமை முறைத்துப் பார்க்க,
‘வாயைத் திறந்து சொல்றது எல்லாம் பொய். இருக்குற தெலுங்கு படத்தையெல்லாம் கரைச்சுக் குடிச்சு ஒரு கதையை சொல்லிட்டு இருக்கா. அதையும் நம்பி கேட்டுட்டு இருக்கான் பார், இவனெல்லாம் திருந்தவே மாட்டான்.’ என ரவியும் விக்ரமை கோபமாகப் பார்க்க,
‘என் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டாளோ, யாரும் இல்லாம எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருப்பா. இதுக்காகவாது அந்த விக்னேஷை துரத்தி விட்டுட்டு, விக்ரம்கூட என் பொண்ணை சேர்த்து வைக்கணும்.’ என மதியும் ஸ்வாதியை பாவமாகப் பார்க்க,
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தக் கதையைக் கேட்ட விக்ரமோ, ஸ்வாதியின் அருகில் போய், “அப்படி உன்னை காப்பாத்தினது யாரு? எங்க இருக்காங்க? உன்னை எப்படி அவங்க பார்த்துக்கிட்டாங்க? எனக்கு நம்பவே முடியலையே…” என அடுத்த வரிசை கேள்விகளைக் கேட்க, இப்போது அடுத்த கதை கேட்க அனைவரும் சுவாரஸ்யாமாகி விட்டனர்.
“விக்ரம் ஒரு நிமிஷம்டா!” என்ற ரேணுகா வேகமாக கிட்சன் சென்று, தசிராவிற்கு உணவை எடுத்து வந்து நிசாவிடம் கொடுத்து, “பாப்பாவுக்கு ஊட்டு, இந்த கிறுக்கன் பண்ண கூத்துல ஏற்கனவே ரொம்ப அழுதுட்டா. விட்டா சாப்பிடாமலே தூங்கிடுவா.” என்றவர் தன் போனை எடுத்து ரஞ்சனிக்கு அழைத்து, “ரஞ்சி, இன்னைக்கு நிசாவுக்கு ஹாஸ்பிடல் வரமுடியாது. வீட்டுக்கு போகும் போது நீ இங்க வந்து பார்த்துட்டு போ.” என்று கூறி வசதியாக அமர்ந்து, “இப்போ ஓகேடா.” என விக்ரமிடம் சொல்ல,
மதி, ஸ்வாதி தவிர்த்து மற்ற அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
விக்ரம் அதை வெளிக்காட்டாமல், “ம்மா, இங்க என்ன லியோ படமா ஓடிட்டு இருக்கு? ஃப்ர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்க்குற மாதிரி ஆர்வமா உட்கார்ந்திருக்கீங்க?” என கிண்டலடிக்க,
“லியோ என்னடா லியோ… இது, அதைவிட ப்ளாக்பஸ்டரா போகும் போலடா.” என ஸ்வாதியைப் பார்த்து ரேணுகா கிண்டலடிக்க,
‘கிழவி கிண்டலா பண்ற? அந்த உஷாவை இங்க இருந்து ஓடவிட்ட மாதிரி உன்னையும் ஓடவிடுறேன். இவ்வளவு நாள் உன்னை சும்மா விட்டது என் தப்புதான். முதல்ல என் விக்கிக்கிட்ட சொல்லி, உனக்கு பூஜையை போடுறேன். அப்போதான் எனக்கு குளுகுளுனு இருக்கும்.’ என மனதிற்குள் நினைத்துவிட்டு, வெளியில் விக்ரமைப் பாவமாக பார்த்து வைத்தாள்.
“விக்ரம் இதெல்லாம் சரியே இல்ல. என் பொண்ணை இல்ல இல்ல… உன் பொண்டாட்டியை எல்லாரும் அவமானப்படுத்துறாங்க, நீயும் பார்த்துட்டு சும்மா இருக்க? இதுதான் நீ உன் பொண்டாட்டியைப் பத்தி தெரிஞ்சிக்கிற லட்சணமா?” என மதியழகி பொங்க,
‘மீண்டும் மீண்டுமா? இந்த கொசு தொல்ல தாங்கலடா…’ என நினைத்த ரேணுகா, “நீ அமைதியா இரு மதி, வந்துருக்கிறது நம்ம ஸ்வாதிதானானு நமக்கு தெரியணுமில்ல…” என,
“ம்மா நீ சும்மா இரு, விக்கி கேட்குற எல்லா கேள்வியும் சரிதானே. அவர் சொல்ற மாதிரி என்னை மாதிரி வந்து ஏமாத்திட்டா என்ன செய்றது? நீங்க ஏமாந்திடக்கூடாது இல்ல…” என ரேணுகாவை முறைத்துப் பார்க்க,
‘இன்னைக்கு நீ இங்க செமையா சேதாரம் ஆகித்தான் போகப்போற. அதை என் ரெண்டு கண்ணால பார்த்து அப்படியே சந்தோசப்பட போறேன்.’ என பதில் பார்வை பார்க்க,
“ம்ம் சொல்லு ஸ்வாதி, முதல்ல உட்கார், உட்கார்ந்து பேசு. குடிக்க கொண்டுவர சொல்லவா? டையர்டா இருக்குற மாதிரி இருக்கே. இரு ஜூஸ் கொண்டு வர சொல்றேன்.” என பெண்களைப் பார்க்க, அவன் பார்ப்பதை உணர்ந்த இருவரும் குழந்தையைக் கொஞ்சுவது போல குனிந்துகொள்ள, ரவியோ போனை பார்ப்பது போல் அமர்ந்துகொள்ள, மதிதான் அனைவரையும் முறைத்தபடி கிட்சனுக்குள் சென்றார்.
விக்ரம் அவளை பேசவிடாமல் பேசுவதைப் பார்த்த ஸ்வாதிக்கு, ‘எப்படி இங்க இருந்து கிளம்புறது? கொஞ்சம் உளறினாலும் மாட்டிப்போம். அப்புறம் விக்கி என்னை மன்னிக்கவே மாட்டான். இவனை எப்படி இந்த பேச்சில் இருந்து டைவர்ட் பண்றது?’ என தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட, விக்ரம் அமைதியாக அவள் முகபாவனைகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
பேச்சுக்களால் நிறைந்த இடம் இப்போது அமைதியாக காட்சியளிக்க, தசிராவின் பார்வை தகப்பனிடம் செல்ல, ஸ்வாதியின் பார்வை தசிராவிடம் செல்ல, அவள் முகம் ஒரு திட்டத்தில் பளிச்சிட்டது.
***
1 comment
அடேயப்பா..! இவ கிட்ட மட்டும் நிதானமா பேசறான்… ஒருவேளை பொண்டாட்டி என்கிறதா?
😡😡😡
CRVS (or) CRVS 2797