Home Love - Family - Romanceமுத்தமழை – 31

முத்தமழை – 31

by Vathani S

முத்தமழை – 31

“வல்லி.. நானும் அம்மாவும் உன்னை பார்க்கத்தான் வந்துட்டு இருக்கோம்..” என்ற வந்தனாவின் குரலில் குதூகலம் நிரம்பி கிடந்தது.

“ம்ம் எனக்கு ஒன்னும் இல்ல தனா.. சொன்னாலும் அம்மா கேட்குறதே இல்ல..” என சலித்து பதில் கூறினாலும், அந்த சலிப்பு அவள் குரலில் சற்றும் இல்லை.

“உன்னை ஒன்னும் கொஞ்சுறதுக்கு நாங்க வரல.. எங்ககிட்ட சொல்லாம வந்துட்ட இல்ல, அதுக்காக உன்னை லெஃப்ட் ரைட் வாங்கத்தான் வரோம்..” என்ற வந்தனாவின் குரலில் இருந்த சினுக்கத்தில், பக்கத்தில் இருந்த கர்ணன் வாய்விட்டே சிரித்துவிட்டான்.

“வல்லி.. நான் உங்க ரெண்டு பேர் கூடவும் சண்டை. எங்க குட்டி பாப்பாவதான் பார்க்க வரோம். உன்னை இல்ல.” என உடனே சிலுப்பிக்கொள்ள,

“சரி சரி நான் சிரிக்கல..” என கர்ணன் கூற, 

“சிரிங்க சிரிங்க.. அங்க வந்து வச்சிக்கிறேன் உங்க ரெண்டு பேரையும்..” என்று கோபத்தோடு போனை வைத்துவிட்டாள் வந்தனா..

“இவ என்னடி நம்மளை விட எக்சைட்டா இருக்கா? அவளை மாதிரியே வளர்த்து விட்டுட போறா? அவ ஒருத்தியவே யாராலயும் சமாளிக்க முடியல.. அவளை மாதிரியே ஒரு ஜெராக்ஸ்னா கண்டிப்பா நான் தாங்கமாட்டேன்..” என கர்ணன் சிரிக்க, வல்லிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

பின் “அவ இல்லைன்னா, அம்மாவோட இழப்புல இருந்து என்னால மீண்டு வந்திருக்கவே முடியாது பாவா. பார்க்கத்தான் விளையாட்டுத்தனமா இருப்பா.. ஆனா அவ்ளோ கேரிங்க் பெர்சன். என்னை ஒரு நிமிசம் தனியா விட்டதே இல்ல. முதல்ல எனக்கே கொஞ்சம் கோபம் வந்தது, என்ன இவ இப்படி இருக்கான்னு, திட்டி சண்டை கூட போட்டிருக்கேன். ஆனா அது எதையும் மனசுல வச்சிக்காம என்னை விடாம கூடவே இருப்பா. அப்புறம் வெற்றி அண்ணனும் அவளும் போடுற சண்டைல, அவ தான் ஜெயிப்பாளே, பாவம் அண்ணன் அவக்கிட்ட மாட்டிட்டு முழிப்பாங்க, அப்போதான் என்னை சப்போர்டுக்கு கூப்பிட்டுப்பாங்க, நான் சொன்னதும் சரின்னு அமைதியாகிடுவா, அதுல இருந்து அவளை மிரட்டவே என்னை யூஸ் பண்ணிப்பாங்க எல்லாரும்..” என குரல் கனிந்து கூற, கர்ணனும் அந்த பேச்சை முகம் மலர கேட்டுக் கொண்டான்.

“உங்க லூட்டியெல்லாம் பார்த்து தான் யாழி உங்களை விடாம சுத்திருக்கா. யாழி பேசும் போதெல்லாம் வந்தனா பத்தி அவ்ளோ கம்ப்ளைன்ட் சொல்லுவா, அவங்க சண்டையை காம்ப்ரமைஸ் பண்ணவே உனக்கு நேரம் சரியா இருக்கும்ப்பா..” என சிரித்தான்.

“ஹ்ம்ம்.. அதெல்லாம் இப்போ நினைச்சா சைல்டிஸா இருக்கு பாவா.. ஆனா எல்லாமே கியூட்டா இருக்கும். யாழிக்கு வீட்டுக்கு போகவே மனசு வராது. ஆனா அத்தை போன் பண்ணிட்டே இருப்பாங்க. வேறவழியே இல்லாம கிளம்புவா..” என்ற வல்லபிக்கும் மலரும் நினைவுகள் தான்.

“வெற்றிக்கு இந்த வருஷம் எங்க போஸ்டிங்க்ன்னு கன்ஃபார்ம் ஆகிடுச்சுன்னா, அவங்க கல்யாணத்தைப் பத்தி வீட்டுல பேசிடலாம்..” என்றான் கர்ணன் ஒரு பெருமூச்சோடு.

“ஹ்ம்ம் வெற்றி ண்ணாவும், யாழியும்  நம்ம பாப்பா பிறந்த பிறகு தான் மேரேஜ் பண்ணிக்கப் போறதா முடிவு எடுத்திருக்காங்களாம், தனா சொன்னா. இன்னும் எதுவும் சரியா தெரியல. நீங்க அண்ணாக்கிட்ட பேசுங்க.. அதுக்குப் பிறகு வீட்டுல பேசலாம்.” என்ற மனைவியிடம் வழக்கம்போலவே தலையை ஆட்டி வைத்தான் பொண்டாட்டி தாசன்.

“சரி ப்பா.. நீ ரெஸ்ட் எடு. நான் போய் அப்பாவைப் பார்த்துட்டு ஆஃபிஸ் போய்ட்டு ஒன் அவர்ல வரேன். அதுக்குள்ள அத்தையும் தனாவும் வந்துடுவாங்க..” என கிளம்ப,

“நானும் வரேன் பாவா.. மாமாவை பார்க்கனும்..” என்றதும் கர்ணன் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. அவனுக்கும் இப்போது தந்தை வல்லியைப் பார்த்தால் சந்தோசப்படுவார் என்று தெரியுமே. அதனால் அழைத்துக் கொண்டு கீழிறங்கினான்.

“பார்த்து கவனமா இறங்கு.. உன் இஷ்டத்துக்கு ஓடிட்டு இருக்காத..” என கணவன் பட்டத்தில் இருந்து அப்பன் ஸ்தானத்திற்கு தொபுக்கடீரென குதித்தவனை முறைத்தபடியே இறங்கினாள் வல்லி.

அவர்கள் இறங்கும் நேரம் ஹாலில் வனிதாவும் ராஜியும் அமர்ந்திருக்க, வனிதாவின் முகம் கடுகைப் போட்டால் பொறிந்து விடும் அளவிற்கு சூடாக இருந்தது இருவருக்கும் தெரிந்தது.

‘என்ன.?’ என்று யோசனை இருவர் முகத்தில் வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “வா வனி..” என கர்ணன் அழைக்க, “வாங்க அண்ணி..” என வல்லியும் அழைத்தாள்.

கர்ணனைப் பார்த்து தலையை அசைத்தாளே தவிர, வல்லியின் பக்கம் பார்வையைக் கூட திருப்பவில்லை.

அதை கவனித்த கர்ணன் “நீ போ.. நான் பேசிட்டு வரேன்..” என்றதும்,

“இல்ல.. நான் அண்ணிக்கு காபி கொடுத்துட்டு போறேன்..” என வல்லி கிச்சன் பக்கம் செல்ல,

“உனக்கு தான் பால் ஸ்மெல் ஆகல் இல்ல. சுமி போட்டுக் கொடுப்பா.. இல்ல சமையல்காரங்க செய்வாங்க. நீ போய் அப்பா கூட இரு..” என்றான் கண்டிப்பாக.

“இல்ல..” என இழுத்தவள் அவன் பார்வையில் அமைதியாக சொக்கலிங்கத்தின் அறைக்கு சென்றுவிட, அவள் உள்ளே நுழையும் வரை அமைதியாக இருந்த கர்ணன் ராஜியின் அருகில் அமர்ந்து, எதிரில் இருந்த வனிதாவைப் பார்த்து “என்ன வனி.?” என்றான் நிதானமாக.

“என்ன? என்ன வனின்னு கேட்குறீங்க? ஏன் வந்தன்னு கேட்குற மாதிரியே கேட்குறீங்க. இது எனக்கும் வீடுதான் இங்க வர எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..” என படபடவென பேச,

“வனி கொஞ்சம் அமைதியா இரு.?” என ராஜி அதட்ட,

“இப்போ யாரு உன்னை இங்க வரக்கூடாதுனு சொன்னது? உனக்கு உரிமை இல்லைன்னு சொன்னதும் யாரு..?” என அதே நிதானத்துடன் கேட்க,

“ம்ச்..” என வனிதா பட்டென முகத்தை திருப்பிக்கொள்ள,

“வனி..” என சத்தமாக அதட்டினான் கர்ணன். அதில் வனிதாவின் விழிகள் கலங்க, 

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதுக்கு அழுது ஊரை கூட்டுற.. என்ன பிரச்சினை உனக்கு? இவ்ளோ காலையிலேயே வந்துருக்கியேன்னு கேட்டா அதுக்கு காரணம் சொல்லாம, எதுக்கு இவ்ளோ கோபம்..” என கண்டிப்புடன் கேட்க,

“விடு தம்பி.. அதெல்லாம் நான் பேசிட்டேன். அவளுக்கு வேற கோபம். அவங்க அத்தைக்கிட்ட சண்டை போட்டுட்டு வந்துட்டா.. அதை நான் சரி பண்ணிக்கிறேன். நீ போய் அப்பாவை பாரு..” என்றதும்,

“அப்போ இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலைன்னு சொல்லாம சொல்றீங்களா?” என ராஜியிடமும் காய, கர்ணனின் இந்த பேச்சை அதிர்ச்சியுடன் பார்த்தனர் வனிதாவும் ராஜியும். 

“ஏன் தம்பி இப்படியெல்லாம் பேசுற.?” என ராஜி அதிர்ச்சி விலகாமலே கேட்க,

“பின்ன நீங்க பேசுறது, நடந்துக்குறது எல்லாமே அப்படித்தான் இருக்கு. நானும் இங்க வந்ததுல இருந்து இவ நடவடிக்கையை கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். ஒன்னும் சொல்றதுக்கு இல்லையே.. என்ன பிரச்சினையாம் இவளுக்கு.. நான் வந்தா? இல்ல என் கல்யாணமா? இல்ல என் பொண்டாட்டியா? இல்ல என் குழந்தையா?” என கத்த, அறைக்குள் இருந்த அனைவருமே வெளியில் வந்துவிட்டனர்.

வல்லியோ கணவனின் கோபத்தில் அதிர்வோடு அவனைப் பார்க்க, சுந்தரோ “இவ திருந்தவே மாட்டா சுமி, எல்லாத்துலயும் அவசரம், இப்போ அவன் கேட்குற கேள்விக்கு என்ன பதில் சொல்லுவா?” என மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுக்க,

“அவளுக்கா பதில் சொல்லத் தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை சமாளிக்க உங்க அம்மா இருக்காங்களே அப்புறம் என்ன பயம். அவங்க பார்த்துப்பாங்க..” என சுமியும் சின்ன குரலில் கூறி முடிக்கும் முன்னே ராஜலட்சுமி கர்ணனிடம் பேச ஆரம்பித்திருந்தார்.

“எல்லா பிரச்சினைக்கும் நீதான், நீ மட்டும் தான் காரணம் தம்பி.. உன்னாலதான் அவ இப்படி வந்து உக்காந்திருக்கா.?” என ராஜியும் அவனை விட சத்தமாக சொல்ல, 

‘இது என்ன புதுசா?’ என்பது போல் அனைவரின் பார்வையும் ராஜியின் மேல் விழ, 

“நான் சொல்லல.. உங்க அம்மா அப்படியே அடிச்ச பால் எல்லாத்தையும் நோ பால் ஆக்கிடுவாங்கனு..” என கணவனின் காதில் கடுப்பாய் முணுமுணுத்தாள்.

“என்ன.. என்ன அமைதியா இருக்க? இப்போ பேச வேண்டியதுதான.?” என வனிதாவும் குதிக்க, அதை கணக்கில் கூட எடுக்காத கர்ணன், தன் தாயின் முகத்தையே கூர்மையாக பார்த்திருந்தான்.

அப்போது பாண்டியனின் உதவியோடு ஹாலுக்கு வந்தார் சொக்கலிங்கம். அவரின் பார்வை மனைவியிடமே இருந்தது. 

அதை கவனித்த கர்ணன் “ப்பா.. இந்த பிரச்சினையை நானே சால்வ் பண்ணிக்கிறேன், நீங்க எதுவும் பேசக்கூடாது. முக்கியமா அம்மாவை மிரட்டவே கூடாது..” என திட்டவட்டமாக கூற, வனிதா மற்றும் ராஜியின் முகத்தில் ஒரு கிண்டல் பார்வை வந்தது.

அதை யாரும் பார்க்கும் முன் சட்டென மாற்றிக்கொள்ள, அந்த பார்வை வல்லபியின் கண்களில் இருந்து தப்பவில்லை.

சொக்கலிங்கமோ மகனின் பேச்சில் கோபம் வர, அவனை முறைத்தபடியே இருந்தார்.

“நீங்க சொல்லுங்க? என்னை வச்சு என்ன பிரச்சினை.?” என நேரடியாக ராஜியிடம் கேட்டான் கர்ணன்.

“வனியோட பங்காளி வீட்டுல உனக்கு பொண்ணு எடுக்கிறதா பேசி முடிச்சிருந்தோம்..” என்றார் ராஜி.

“ஆனா அதுக்குள்ளத்தான் நீ இந்த மேனாமினுக்கிதான் வேணும்னு முடிவே பண்ணிட்ட..” என வனிதா குறுக்கே வர,

“உன்கிட்ட கேட்கும் போது மட்டும் தான் நீ பேசனும், இடைல புகுந்து ஏதாவது வாயை விட்ட, உன் கன்னம் பழுக்கும் புரியுதா? அப்புறம் இன்னொரு தடவை என்னை வா, போன்னோ, இல்லை வல்லியை அவ இவன்னோ பேசினா பல்லை உடைச்சிடுவேன் ஜாக்கிரதை..” என இரும்புக் குரலில் கூற, வனிதா மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேருமே கர்ணனின் அந்த குரலில் அதிர்ந்துதான் போயினர்.

“என்ன பேசுறீங்க நீங்க.? அண்ணி உங்களை அப்படி கூப்பிடுறது தப்பு, அதை நீங்க சொன்னது சரி. என்னை ஏன் அப்படி கூப்பிட சொல்றீங்க? நான் அண்ணியை விட சின்ன பொண்ணு, அண்ணிக்கு எப்படி விருப்பமோ அப்படியே கூபிடட்டும்.” என வல்லி கணவனிடம் கத்த

“நீ வாயை மூடு..” என மனைவியிடமும் கத்தியவன், “இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்க் வனி, இதுக்குபிறகு மரியாதைக் குறைவா நீ பேசினா, அதை என்னால சகிச்சிக்க முடியாது. இல்ல, நான் அப்படித்தானு நீ பேசினா, அப்புறம் உனக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இருக்காது பார்த்துக்கோ..” என்று முடித்துவிட்டு மீண்டும் பார்வையை தன் தாயிடம் திருப்பியிருந்தான்.

“கர்ணா நீ பேசுறது சரியில்ல..” என்ற ராஜியிடம், 

“இப்போ இதுதான் பிரச்சினையா? இல்ல வேற எதுவும் இருக்கா?” என கேட்க,

“அவங்க வீட்டுல பொண்ணு எடுக்கலன்னு கோபம் ண்ணா, அதனால நம்ம மாப்பிள்ளைக்கிட்ட வந்து கத்திட்டு போயிருக்காங்க. அது தெரிஞ்சு அத்தை போய் விசாரிச்சதுக்கு, பொண்ணுதான் எடுக்கல. எங்க பையனையாவது அவங்க சின்ன பொண்ணுக்கு எடுக்க சொல்லுங்கன்னு சொல்லிருக்காங்க..” என அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் கூறிவிட, இதைக் கேட்டு, கர்ணன் மனைவி இருவரில் யார் அதிகம் அதிர்ந்தது என்று கணிக்கவே முடியவில்லை.

சுந்தரின் பேச்சைக் கேட்டபடியே அப்போதுதான் வெளியில் வந்த யாழினியோ பயத்தில் அரண்டு போய் கர்ணனைத்தான் பார்த்தாள்.

You may also like

1 comment

M. Sarathi Rio March 14, 2026 - 10:42 pm

ஓ ..இதான் இவங்க எண்ணமா ? அதாவது யாழினியை வல்லியோட அண்ணன் வெற்றிக்கு கட்டித் தரக் கூடாது அப்படித்தானே ?

Reply

Leave a Comment

About Me

Featured