அத்தியாயம் – 2
“கோபுர தரிசணம் கோடி புண்ணியம்னு சொல்லுவாங்கதான். அதுக்காக எப்பவுமே கோபுரத்தை மட்டுமே பார்த்துக் கும்பிடனும்னு இல்ல, கோவிலுக்குள்ள போயும் கும்பிடலாம்.” எனக் கிண்டலடித்தக் கணவர் முகுந்தனைப் பார்த்து அசடு வழிந்தார் பவித்ரா ‘சாரி’ என்ற சொல்லோடு.
“எதுக்கு சாரி… போ.. போய் சாமி பார்த்துட்டு வா.. நான் வெயிட் பன்றேன்..” என்றவர், காரை ஓரமாக நிறுத்த, “டைம் ஆகலையா..” என பவித்ரா தயங்க,
“இல்ல.. இன்னைக்கும் கூட நான் அதே பதிலைச் சொன்னா நீ கும்புடுற கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார். நான் மேனேஜ் பண்ணிக்குறேன் நீ போயிட்டு வா..” என்றக் கணவனைப் பார்த்து மீண்டும் தயங்கி “நீங்க..” எனவும், இப்போது முகுந்தனின் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை. ‘என்னை உனக்குத் தெரியாதா’ என்பது போல் ஒரு பார்வை. வாடாமல் இருந்தது அந்த புன்னகை.
பவித்ராவும் பதிலுக்கு ‘உங்களை’ என ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, உலகையேக் காக்கும் அந்த தென்னாடுடைய சிவன் கோவிலுக்குள் நுழைந்தார். அந்த நிமிடம் பவித்ராவின் மனம் முழுக்க நிம்மதியும், ஒருவகையான அமைதியும் வந்து சூழ்ந்து கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
முகுந்தன்-பவித்ரா இருவருக்கும் நடந்தது காதல் திருமணம். இவர்களது காதல் வீட்டில் தெரிந்ததும், இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. பவித்ராவை ஆணவக் கொலை செய்யுமளவிற்கு கூட, அவர் வீட்டில் இறங்கிவிட்டனர். பவித்ராவின் உயிர்த்தோழியின் அண்ணன் தான் யாருக்கும் தெரியாமல், இருவரையும் மதுரையில் வடக்கே செல்லும் ஒரு ரயிலில் ஏற்றிவிட்டார். அதன்பிறகு இவர்களைப் பற்றி எதுவும் அவர்களுக்குத் தெரியாது. தெரிய விட்டதும் கிடையாது முகுந்தன்.
சில வருடங்கள் மிகவும் கஷ்ட ஜீவனம் தான் இருவருக்கும். ஆனால் எந்த வகையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை. பரஸ்பர அன்பும், காதலும் இருவரது வாழ்க்கையை இலகுவாக்கிச் சென்றது. திருமணம் முடிந்த இந்த இருபத்தியேழு வருட தாம்பத்ய வாழ்க்கையில், எத்தனையோ கஷ்டங்கள், குழப்பங்கள், வறுமைகள், மேடு பள்ளங்கள் என எத்தனை வந்திருந்த போதும் அதை இருவரும் பேசி, புரிந்து கொண்டு ஒற்றுமையாகக் கடந்து வந்திருந்தனர்.
பவித்ரா அடிப்படையில் வசதியான வீட்டுப்பெண் என்பதால் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பாட்டார் தான். ஆனால் முகுந்தன் அவர் மேல் காட்டிய அன்பிலும், அக்கறையிலும் அனைத்து கஷ்டங்களையும் சுலபமாகக் கடந்து வந்துவிட்டார்.
முகுந்தன் மிகவும் கடினமாக உழைத்தார், உழைத்துக் கொண்டே படித்தார், மனைவியையும் படிக்க வைத்தார். அவரது கடின உழைப்புக்கு ஏற்றார் போல ஆதித்யன் பிறந்த ஒரு வருடத்தில் அரசு வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது, அதிலிருந்து அவர்களது வாழ்க்கைத்தரம் அனைத்தும் ஏறுமுகம் தான்.
அடுத்த இரண்டாண்டுகளில் ஆதன். மகன்கள் இருவரும் பள்ளி செல்லும் வரை பொறுத்திருந்து, அதன் பிறகு பவித்ராவும் வேலையில் சேர்ந்துவிட்டார். இரண்டு பேரும் உழைத்தால் தான் எதிர்காலம் சிறப்பாகும் என்பதை உணர்ந்தவர் கணவரின் வழியிலே சென்று வங்கித் தேர்வு எழுதி ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார்.
“நான் கதவு திறக்குறதைக் கூட கவனிக்காம என்ன யோசிக்குறீங்க..” என்ற மனைவியின் பேச்சில் தான், அதுவரை தன் கடந்து போனக் காலங்களில் இருந்து நினைவுக்கு வந்தார் முகுந்தன்.
“என் யோசனையெல்லாம் சொல்ற மாதிரி இல்ல.. அதை விடுங்க, நீங்க என்ன வேண்டுனீங்க உங்க கடவுள்கிட்ட, என்ன சொன்னார் உங்க சிவசாமி..” என்ற கணவரை முறைத்த பவித்ரா “வேண்டினதை வெளியேச் சொன்னா பலிக்காதாம்..” எனக் காரின் கதவை அடைத்துவிட்டு, கையிலிருந்த திருநீறை கணவரின் கழுத்தில் பூசிவிட,
“ஹ்ம்ம்… நெத்தியில பூசினாலும் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் பவி..” எனக் கண்சிமிட்ட,
“ஆஹான்.. இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு, முகுந்தன் சார் வழியுறார்..” என விழியுயர்த்த..
“முகுந்தன் சாருக்கு என்னென்னமோ ஆகுதுதான். ஆனா இப்போ ஒன்னும் செய்ய முடியாதே..” என்று சொல்லி மனைவியைச் சீண்டி, அவரிடம் சில அடிகளையும் வாங்கிக் கொண்டு காரை எடுத்தார்.
“வீட்டுல தலைக்கு மிஞ்சி ரெண்டு பசங்க கல்யாண வயசுல இருக்காங்க, அதை மறந்துடாதீங்க, காலாகாலத்துல அவங்களுக்கு பொண்ணு பார்க்குற வழியைப் பாருங்க.. அதை விட்டுட்டு இப்ப தான் ரொமான்ஸ் கேக்குது..” எனச் சட்டெனத் தாயாக மாற,
“எவடி இவ.. தலைவரே ‘இளமைத் திரும்புதேன்னு’ பாட்ட பாடிட்டு எஞ்சாய் பன்றார். நான் பண்ணக்கூடாதா.? என் பசங்க என்னை மாதிரியே அவனுங்களுக்குப் பிடிச்ச பொண்ணைத் தூக்கிட்டு வருவானுங்க, நான் ஏன் பொண்ணைத் தேடி அலையனும்..” என்றதும் பவித்ராவின் முகம் சட்டென மாறிவிட்டது.
அதை உணர்ந்தவர் போல, “அதெல்லாம் பார்த்துக்கலாம் விடு, நீ சொல்லு நீ என்கூட எப்படி இருக்க, உன் சாமிக்கிட்ட அப்படி என்ன வேண்டின..” என அதிலேயே நிற்க,
“என்ன பேச்சு இது.. உங்க கூட எப்படி இருக்கேன்னா, நல்லாதானே இருக்கேன், என்ன நினைக்கிறீங்க, நீங்க சொல்லுங்க நான் எப்படி இருக்கேன் உங்கக்கிட்ட.. நீங்களே சொல்லுங்க..” என சிறுக் கோபம் முகிழ்த்தக் குரலில் கேட்க,
“அதுக்கு ஏண்டி சண்டைக்கு வரிஞ்சுக் கட்டிட்டு வர, அடிக்கடி மூட் ஆஃப் ஆகிடுறியே அதுக்காகத் தான் அப்படி சொன்னேன். மத்தபடி என் பொண்டாட்டி என்ட்ட எப்படி இருக்கான்னு எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்.. யாருக்கிட்டயும், ஏன் உங்கிட்ட கூட சொல்லனும்னு இல்ல சரியா.. இப்ப சொல்லு நீ என்ன கேட்ட சாமிக்கிட்ட, சொல்லாம விடமாட்டேன்.” என வம்பு வளர்க்க,
“என்னமோ ஆச்சு உங்களுக்கு, நான் என்ன பெருசா கேட்க போறேன், என் புருஷன் நல்லா இருக்கனும், புள்ளைங்க நல்லா இருக்கனும், இவங்க மூனு பேரும் நீண்ட ஆயுளோட தீர்க்காயுசா இருக்கனும், இதுதான் நான் இத்தனை வருசமா வேண்டுறேன். இப்போ மட்டும் என்ன கேட்க போறேன். ஏன் திருப்பி திருப்பி அதையேக் கேட்குறீங்க,” எனச் சலிக்கவும்,
“இல்ல.. உனக்காக நீ எதுவும் கேட்கலையா..?” மனைவியைப் பற்றித் தெரிந்தும் கேட்டார் முகுந்தன் மிகவும் சிறிதாகிவிட்டக் குரலில்.
“எனக்காகன்னா என்ன..? எனக்காக என்ன கேட்க, நீங்க மூனு பேரும் தான் நான் முகம் பார்க்கும் கண்ணாடி, நீங்க எப்படி உங்களைக் காட்டுவீங்களோ, அதைத்தான் நான் ரெஃப்லக்ட் செய்வேன். நீங்க மூனுபேரும் ஹேப்பின்னா நானும் ஹேப்பி..” எனச் சொல்லிவிட்டு சிரிக்க,
“ம்ம்ம்..” என்ற பெருமூச்செடுத்தவர் “உண்மைதான், நீ சொல்றதும் சரிதான், ஆனல் ஒன்னை மறந்துட்ட, எங்க முகம் உன்னோட கண்ணாடின்னா, நீ, உன் முகம் எனக்கு கண்ணாடி, நீ என்ன நினைக்குற, என்ன காட்டுற எல்லாம் எனக்குத் தெரியும், புரியும்..” என ஆழ்ந்தக் குரலில் மனைவியைப் பார்த்துச் சொல்ல,
“ஏன் தேவையில்லாம எதை தையோ யோசிச்சு மனசைக் கெடுத்துக்குறீங்க, நான் நல்லாதான் இருக்கேன். டூ மந்த்ஸ்ல வீ.ஆர்.எஸ், அப்புறம் ஃபுல் ரெஸ்ட். இந்த அரக்க பரக்க எல்லாம் இல்லாம வீட்டுல நிம்மதியா இருக்கலாம், இப்போ இப்படி ஓடிட்டே இருக்குறது தான் கஷ்டம். அதுவும் இனிமேல் இல்ல. நான் நல்லாதான் இருக்கேன். இருப்பேன்.. எதையும் யோசிக்காம வண்டியை எடுங்க. என்னை விட்டுட்டு போக உங்களுக்கு இன்னும் லேட்டாகிடும்..” என முடித்தவர், தன் முகத்தை வேகமாக ஜன்னல் பக்கம் திருப்பிக் கொள்ள, முகுந்தனின் எண்ணமும் எங்கெங்கோ சுழன்றது. அந்த எண்ணங்கள் மனைவியிடம் வேறெதுவும் பேசவிடவில்லை. அமைதியாக காரை செலுத்த ஆரம்பித்தார்.
ஜன்னல் புறம் திரும்பிய பவித்ராவின் விழிகள் பின்னோக்கி நகர்ந்த கான்கிரீட் மரங்களையே வெறித்துக் கொண்டிருந்தது. விழிகளில் விழவா என்பது போல் நீர்த்துளிகள் துளிர்த்துக் கொண்டிருக்க, உடலும், உள்ளமும் தாயைத் தேடியது.
‘அம்மா உன்னைப் பார்க்கனும் போல இருக்கு. என்னை மறந்துட்டியா..’ என மனம் அரற்றியது. அரற்றிய மனதை உள்ளேயே அடக்கியவள், துளிர்த்த விழிநீரையும் உள்ளே இழுத்து, முகத்தை நொடியில் சாதாரணமாக்கியவள், தண்ணீரை அருந்திவிட்டு நிமிரவும், அவர் வேலை செய்யும் வங்கியும் வந்துவிட, “மறக்காம லஞ்ச் சாப்பிடுங்க.” என்ற வார்த்தையோடு இறங்கிவிட்டார். ஆனால் முகுந்தனுக்குத்தான் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு தலையசைப்போடு கிளம்பிவிட்டார்.
பெற்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதை சூழ்ந்ததாலோ என்னவோ அன்றைய நாளே மிகவும் அழுத்தமாக இருந்தது பவித்ராவிற்கு. எடுத்துச் சென்ற உணவை வீணாக்க விருப்பமில்லாமல், ஏனோதானோவென்று முழுங்கிவிட்டு, அந்த நாளைக் கடத்த மிகவும் கஷ்டப்பட்டார். கிளம்பும் நேரம் முகுந்தன் அழைத்து, வேலையிருப்பதாகவும், டாக்சியில் செல்லும்படியும் சொல்லிவிட, வேறுவழியில்லாமல் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.
பாரங்கள் அழுத்த மிகவும் சோர்வுடன் தான் வீட்டிற்குள் நுழைந்தார். இரவு வேலை முடிந்து விடியலில் வந்த மகன், பொழுது போனது கூட தெரியாமல் இப்போது உறங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பிக் கிளப்ப வேண்டும் என யோசித்தபடியே கதவைத் திறந்தவருக்கு, அது தானாக திறக்கவும், அதோடு வீட்டுக்குள் இருந்து பாட்டுச் சத்தமும் கேட்க, ‘ஆதி’ என்றவரின் இதழில் தானாக சிறு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
“உனை நினைத்து நான் எனை மறப்பது அதுதான் அன்பே காஃபி.. ஃபில்டர் காஃபி” என்ற பாடல் சத்தம் கிச்சனில் இருந்து வர, வீட்டிற்குள் நுழைந்த பவித்ராவின் கால்கள் நேராக சென்று நின்றது அங்கு தான்.
காஃபியை நுரை பொங்க ஆற்றியவன், அதில் வாசம் பிடித்து “வாவ் இதுவல்லவோ காஃபி.. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு..” என்றுத் திரும்ப, சுவற்றில் சாய்ந்தபடி சிரிப்போடு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா தான் கண்ணில் பட்டார்.
“ம்மா.. எப்போ வந்த… கரெக்ட் டைமுக்கு வந்திருக்க, வா வா ஃபர்ஸ்ட் காஃபி குடி..” என்ற ஆதித்யன், அங்கிருந்த டைனிங்க் சேரில் அவரை அமர வைக்க, “ஃப்ரெஷாகல கண்ணா விடு.. ஃப்ரஷாகிட்டு வர்ரேன்..” என்றதும்,
“நோ.. நோ.. ஒரு நாள் ஃப்ராஷாகாம காஃபி சாப்பிட்டா உன் சாமி கண்ண குத்திடுமா.. குடி மா..” என்ற ஆதி, இருவருக்கும் காஃபியை வார்த்து, தாயின் கையில் ஒன்றைத் திணித்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்து அவருக்கருகில் அமர்ந்தான்.
அன்றைய நாள் முழுவதுமான அழுத்தங்கள் அனைத்தும் அந்த காஃபியில் கரைவது போல் இருந்தது பவித்ராவிற்கு. மிடறு மிடறாக ரசித்துக் குடித்தவருக்கு அதுவரை இருந்த தலைவலி சுத்தமாக அவரை விட்டு விடைப் பெற்றுச் சென்றிருந்தது.
காஃபியை சொட்டு விடாமல் குடித்தவர் முகம் தெளிய, மகனைப் பார்த்து “தேங்க்ஸ் கண்ணா..” எனவும், ‘எனக்கு தேங்க்ஸ் சொல்வியா’ என்பது போல் அவரைப் பார்த்து முறைத்தான் ஆதித்யன்.
“என்ன தேங்க்ஸ் எல்லாம் சொல்ற, என்ன ஓடுது உன் மைண்ட்ல, அப்பாக்கிட்ட பேசுன்னு நானும் நிறைய டைம் சொல்லிட்டேன், கேட்க மாட்டேங்குற, அவர் வருத்தப்படுவார் தான். ஆனா உன்னைப் புரிஞ்சுக்குவார் தானே, ஏன் மா இப்படி பன்ற..” என்ற மகனின் சொல்லில் இருந்த உண்மை பவித்ராவைச் சுடத்தான் செய்தது. மகன் மட்டுமல்ல அவன், அவரின் அன்பான நண்பனும் கூட.
மகன் சொல்வதும் சரிதான். கணவரிடம் பேசினால் அனைத்தும் சரியாகும் தான். ஒருவேளை அவருக்குப் பிடிக்காமல், அதனால் கோபம் வந்து வீட்டுக்குள் பிரச்சினைகள் ஆரம்பித்தால், அதை பவித்ராவால் தாங்கிக்கொள்ளவே முடியாதே, அந்த ஒரு விசயத்திற்காக மட்டுமேதான் அவர் கணவரிடம் இதைப்பற்றி பேசுவதில்லை. ஆனால் மூத்த மகனிடம் அனைத்தையும் பேசுவார். தன்னைப்பற்றி, தன் ஊர், பெற்றோர், அண்ணன், தங்களின் காதல் மலர்ந்த விதம் வரை அனைத்தையும் பகிர்ந்திருந்தார்.
பவித்ராவின் முகத்தில் ஏற்படும் சிறு சுணக்கத்தைக் கூட அந்த வீட்டின் மூன்று ஆண்களும் துல்லியமாக கண்டுபிடித்து விடுவர். அத்தனை அன்னியோன்யம் அவர்கள் நால்வருக்குள்ளும். ஆனால் பவித்ராவின் வீட்டைப்பற்றியோ, அவரது குடும்பத்தைப் பற்றியோ யாரேனும் வாய் திறந்தால் ருத்ரனாகிவிடுவார் முகுந்தன். பவித்ராவை கொலை செய்ய நினைத்தனர் என்பதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனாலே பிறந்த வீட்டைப் பற்றி கணவர் இருக்கும் போது மூச்சு விடுவதில்லை பவித்ரா.
“என்னம்மா.. என்ன யோசனை..” என்ற மகனிடம், ஒன்றுமில்லை என பொய் சொல்ல முடியவில்லை அவரால். “தெரியல கண்ணா, இப்போ எல்லாம் எனக்கு ரொம்ப அம்மாவைத் தேடுது. அவங்களைப் பார்க்கனும் போல இருக்கு. அவங்க மேல இருந்தக் கோபமெல்லாம் இப்போ எங்க போச்சோ தெரியல, இந்த இருபத்தியேழு வருஷம் அவங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன்.. இப்போ எப்படி இருக்காங்களோ, என்ன பன்றாங்களோ.. இருக்காங்களோ இல்லை..” என்றவர் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, அதில் தன் முகத்தைப் புதைத்து விம்மி அழுதார்.
அவரைச் சில நிமிடங்கள் அழவிட்டவன், தாயின் முகத்தை நிமிர்த்தி “ம்மா.. நீ நினைச்சு வருத்தப்படுற அளவுக்கு கூட அவங்க உன்னை நினைப்பாங்களா தெரியாது. அவங்க உன்னைக் கொல்ல பார்த்தாங்க.. மறந்துட்டியா, அப்படிபட்டவங்களை நினைச்சு நீ உருகிட்டு, வருத்தப்பட்டு உன் உடம்பைக் கெடுத்துக்குற” என்றுக் கோபமாகக் கேட்டதும், “அவங்க பார்வையில அது தப்பில்ல கண்ணா.. நாங்க வளர்ந்த சூழல் அப்படி, சாதி, அந்தஸ்து, கௌரவம் இதுதான் அங்க உயிரைவிட முக்கியம்” என முடிக்க,
“இதுதான் இதுதான் இங்க பிரச்சினை, பெத்த பொண்ணை யாராவது கொல்வாங்களா.? அதுவும் காதலிச்சாங்கன்னு தெரிஞ்சா உயிரை எடுப்பாங்களா.? காதல் ஒன்னும் தப்பு இல்லம்மா.” என்ற மகனை ஆழ்ந்து பார்த்தவர் “உனக்கு தப்பா தெரியலன்னு சொல்லுடா. அப்போ நீ யாரையோ சைட் அடிக்கிற அப்படித்தானே,” எனத் தன் சோகத்தை மறைத்து மகனை வம்பு இழுக்க,
“நோ.. அதுக்கு வாய்ப்பே இல்லம்மா.. எனக்கு லவ்வெல்லாம் செட்டே ஆகாது. நீயேப் பார்த்து ஏதோ ஒன்னைப் பிடிச்சி என் தலையிலக் கட்டினாத்தான் உண்டு. எனக்கு எங்க லவ் பண்ண டைம் இருக்கு..” என வாயடிக்க,
“என்ன நடக்குது இங்க, நான் இல்லாம ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க..” என அப்போது உள்ளே நுழைந்த ஆதனும் சேர்ந்து கொள்ள,
“அதுவந்து ஆது.. நம்ம மாமாவுக்கு ரொம்ப அழ்க்கான ஒரு பொண்ணு இருக்காம், அதை எப்படி கரெக்ட் பண்ணன்னு யோசிச்சிட்டு, அம்மாக்கிட்ட ஐடியா கேட்டுட்டு இருக்கேன். உனக்குத் தெரிஞ்சாலும் சொல்லு..” எனத் தம்பியை ஆதித்யன் வம்பிழுக்க,
“என்ன அந்த ஹிட்லருக்க்கா.. டேய் அவுரு போலிசு இல்லடா விக்ரம் சொல்ற மாதிரி பொறுக்கி.. சும்மாவே அம்மாவை இழுத்துட்டு வந்ததுதுக்கு நம்ம அப்பாவை அடிக்க இன்னும் தேடிட்டு இருக்காரு, இதுல அவரோட பொண்ணை வேற இழுத்துட்டு வர ஐடியா கேட்குறியே.. உனக்கு உயிர் வாழ ஆசை இருக்கா இல்லையா..” எனப் பயந்தது போல பேசிக் கிண்டலடிக்க,
“அடிங்க என் அண்ணாவையே, அதுவும் என் முன்னாடியே கிண்டல் செய்வியா.. இன்னைக்கு வெறும் அரிசி உப்புமா தான்டா உனக்கு..” எனச் சின்ன மகனை விரட்ட, “நோ ம்மா,. நான் உண்மையைத்தான் சொன்னேன்.. நீ எது செஞ்சாலும் எனக்கு உப்புமா மாதிரி தான் இருக்கும்..” எனக் கத்திக் கொண்டே தாய்க்கு போக்கு காட்ட, இருவரையும் வாய் கொள்ளா சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்தான் ஆரணியின் ஆதித்யன்.
காதலிக்க நேரமில்லை என்றவன், காதலிப்பதையே தன் முழுநேர வேலையாக்கிக் கொள்ளப் போகிறான் என்பதை அவன் அறிவானா..? அறிய வைக்க அவனவள் வருவாளா..?
காத்திருப்போம்..