ஒரு வாரம் கழித்து...
“நான் முன்னமே சொல்லிருக்கணும். சொல்லாதது என் தப்பு தான்” ஏழு நாட்களாக உள்ளுக்குள்ளே புழுங்கி, வெந்து, தணிந்த பிற்பாடே சுலோச்சனா வாய் மலர்ந்தாள்.
“பரவால்ல. அதான் தெரிஞ்சுடுச்சே. முடிஞ்ச கதைய விடு” சத்யா சர்வ சாதாரணமாக அவளின் கடந்த காலத்தை ஒதுக்கித் தள்ளினான்.
‘அவ்வளவு தானா?’ என்பது போல் அவள் அவனைப் பார்த்து வைத்தாள்.
“எங்க காலேஜ்ல என்ட்ரன்ஸ் எக்ஸாம் வருது. ஒழுங்கா உக்காந்து படி” அவன் தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டே உரைத்தான்.
அவளுக்கு ‘மீண்டும் படிப்பதா?’ என்றிருந்தது “என் மார்க்ஸ்லாம் பாத்துருப்பீங்களே. நான் அந்தளவுக்கு ப்ரைட் ஸ்டூடன்ட் கிடையாது”
“எல்லாம் எங்களுக்குத் தெரியும். இன்னும் ஒரு மாசம் டைமிருக்கு. டெய்லியும் படிக்கிற. பாஸ் பண்ணுற. தட்’ஸ் இட்” உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று திரும்பியதால் வழிந்த வியர்வையை, துவாலையில் ஒற்றியெடுத்துக் கொண்டே அவன் உத்தரவிட்டான்.
“டெய்லியும் படிக்கணுமா? சன்டே கூடவா?” அவள் அகல விழி விரித்தாள்.
“இனிமேல் சன்டே, மன்டேலாம் கிடையாது. எவ்ரிடே என் கூட ரெண்டு மணி நேரம் படிக்கணும். நீ தனியா உக்காந்து நாலு மணி நேரம் படிக்கணும். டோட்டலி சிக்ஸ் ஹார்ஸ். அப்போ தான் சிலபஸ் கவர் பண்ண முடியும்”
அவளின் நா தந்தியடித்தது “உங்க கூட ப… படிக்கணுமா? அப்போ வீட்டு வேலை?”
அவனுக்கிருப்பது ஒரே ஒரு தாயார் மட்டுந்தான். தந்தை உயிருடன் இல்லை. உடன் பிறந்தாரும் யாருமில்லை. தாயார் மிகவும் நற்குணமுடையவர். அவனையும் நற்பண்புகளோடு வளர்த்து ஆளாக்கியவர். அத்துணைத் துயரத்திலும் வறுமையிலும் மகன் கேட்டு எதையும் அவர் மறுத்ததே கிடையாது. அவர் மீதிருந்த நம்பிக்கையில் தான் அவன் தன் மனைவியின் மேற்படிப்பிற்குத் திட்டமிட்டான். “அதெல்லாம் எங்க அம்மா பாத்துப்பாங்க. நான் பேசிக்குறேன். போய் உன்னோட புக்ஸை எடுத்துட்டு வா. புதுசா என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போடணும்” என்றான் மும்முரமாய்.
அவன் இவ்விடயத்தில் தீவிரமாக இருப்பதையே அவள் அப்போது தான் உணர்ந்தாள் “புக்ஸா? எல்லாம் அம்மா வீட்டுலல்ல கிடக்கு”
“ஒரு புக் கூட கைல இல்லையா? கைய ஆட்டிட்டு வந்துர வேண்டியது”
“இப்படிலாம் பேசாதீங்க” அவள் விரல் நீட்டினாள்.
“கோவம் வருதோ?”
“ஆமா” அவள் சற்றே நிதானித்து, துப்பட்டா முனையைத் திருகியபடி தரை நோக்கினாள்.
“அவ்ளோ ரோஷம் இருந்தா சாயந்தரம் புக்கும் கையுமா இரு. சிலபஸ் இந்த லேப்டாப்ல இருக்கு. லேப் யூஸ் பண்ணத் தெரியும்ல?”
“நானொன்னும் ஒன்னும் தெரியாத முட்டாள் இல்லை”
“அதையும் தான் பாக்குறனே” என்றவன் அழகாளனாகத் தயாராகிப் பணிக்குச் செல்லலானான்.
அன்று மாலை அவன் வீடு திரும்பிய போது, அவள் புத்தகத்துடன் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தாள். அதே ஊரில் வசிக்கும் தன்னுடைய கல்லூரித் தோழியிடம் மன்றாடி வாங்கிய புத்தகம் அது.
அவனுடைய மடிக்கணினி அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே இருக்க, “லேப்டாப்ப ஆன் பண்ணவே இல்லையா நீ?” என்றான் வந்ததும் வராததுமாய்.
“பா... பாஸ்வேர்ட் தெரியல” அவள் பாவமாக இயம்பினாள்.
“நானொன்னும் ஒன்னும் தெரியாத முட்டாள் இல்லை” சட்டைக் கையின் பொத்தானை அவிழ்த்தபடி, அவள் சொன்னதை அவன் சொல்லிக் காண்பித்தான்.
“நீங்க தான் பாஸ்வேர்ட் சொல்லிட்டுப் போயிருக்கணும்” அவள் வெகுண்டெழுந்தாள்.
“உனக்குத் தான தேவை. நீ முன்னெச்சரிக்கையா கேட்டு வச்சுருக்கணும்”
அவளுக்குத் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது “ப்ளீஸ்! பாஸ்வேர்ட் சொல்றீங்களா?”
“எஸ்… என்ன, மூஞ்சைப் பாக்குற? டைப் பண்ணு. எஸ்… யூ… எல்… யூ…”
“சுலுவா?”
“பின்ன என்ன ஹுலுவா?”
அவள் அவனை ஏகத்திற்கும் முறைத்தாள்.
அதில் சிறிதே சிறிதளவு அவனின் அட்டகாசம் அடங்கியது “அட் லீஸ்ட் எழுத்து கூட்டியாச்சும் படிக்கத் தெரிஞ்சுருக்கே. அதுவரைக்கும் பரவாயில்ல”
“நானும் டிகிரி வாங்குனவ தான்” அவள் சட்டமாகச் சொன்னாள்.
“ஒரு டிகிரிய வச்சுட்டு நாக்க வழிக்கிறதா?”
“என்னை மறுபடி மறுபடி கோவப்படுத்துறீங்க” அவளின் ஆட்காட்டி விரல் மீண்டும் தலைதூக்கியது.
“அப்டீனா கோச்சுட்டுப் போ. உன்னோட அம்மா வீட்டுக்குப் போறியா? பஸ் ஏறிப் போக வழி தெரியுமா?”
அவளால் அதற்கு மேல் போராட இயலவில்லை “உங்களுக்கு என்ன தான் வேணும்?”
“காலைலருந்து என்ன படிச்ச? அதைச் சொல்லு” எனக் கேட்டபடி அவன் அவளுக்கெதிரே ஓர் இருக்கையில் அமர்ந்தான்.
அவள் தான் படித்ததை அவனிற்கு விளக்கிக் கூறினாள். அவன் அவளின் கற்றல் முறையில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, புதிதாகச் சில நுட்பங்களைக் கற்றுத் தந்தான். அங்ஙனமே இரண்டு மணி நேரங்கள் பறந்தோடிப் போயின. இடையில் சத்யாவின் தாயார் வந்து இருவருக்கும் தேநீர் பரிமாறிவிட்டுச் சென்றார்.
“இப்போ இந்த சிலபஸப் பாரு. இதுல இவ்ளோ தான் நீ முடிச்சிருக்க. முத நாள்ங்குறதால இதுவே போதும். போகப் போக பிக் அப் பண்ணிடணும். ஓகே தான? போய்த் தூங்கு” என்றவன் தானும் எழுந்து உடை மாற்றச் சென்றான்.
அவன் படுக்கையறைக்கு வருவான் எனக் காத்திருந்தவள், அவனைத் தேடி மீண்டும் வெளியே வந்தாள். ‘அவன்ட்டயே திட்டு வாங்கிட்டு அவனையே தேடிட்டு இருக்கோம். என்ன மானங்கேட்ட மனசோ!’ என உள்ளுக்குள் அரற்றியபடி அவள் ஓர் அறைக்கதவைத் திறக்க, அங்கே தரையில் போர்வை விரித்து அவன் கவிழ்ந்தடித்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.
சத்தம் எழாமல் கதவை மூடியவள், அவனது உறக்கத்தைக் கலைக்காமல் அறைக்குத் திரும்பினாள். அடுத்த ஒரு மாதத்திற்கு இதுவே அவர்களின் வாடிக்கையானது. படிப்பது போக மீதியிருந்த நேரங்களில் மட்டுமே அவள் சொந்த வேலைகளைச் செய்தாள்; மாமியாருடன் உறவாடினாள்; தாயகத்திற்குச் சென்று திரும்பினாள். தன் வீட்டிலிருந்து மாமியார் வீடு வரை அவள் படிக்கிறாள், அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என சத்யா சிறு பிரசங்கமே நடத்தியிருந்தான். அவனை மீறி அவளின் நேரத்தை ஒருவரும் வீணடிக்கத் துணியவில்லை. அத்தகைய ஒழுக்கத்திற்கும் கண்டிப்பிற்கும் தக்க பலனும் கிடைத்தது. நான்கு மடங்கு தேர்வர்கள் கலந்து கொண்ட அந்நுழைவுத் தேர்வில், சுலோ தேர்ச்சியடைந்து மேற்படிப்பிற்கான தனது இருக்கையைத் தக்க வைத்தாள். அத்தகவலைக் காலையிலேயே அறியப் பெற்ற சத்யா, கல்லூரியில் நாள் முழுவதும் உற்சாகமாகவே நடமாடினான். எப்போது மாலை வரும் என முதன்முறையாகக் காத்திருந்தான் இளவல். அவன் வீடு வந்தபோது அவள் எப்போதும் போலவே ஆர்ப்பாட்டமின்றி தென்பட்டாள். பாவாடை, சட்டையணிந்து புதிதாய்ப் பூத்த மலர் போல செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவள், அவனைக் கண்டதும் சமையற்கட்டிற்கு நடையைக் கட்டினாள்.
அவனிடம் சுடச் சுட தேநீரை நீட்டியவள் “அத்தை தெரிஞ்சவங்க யாரையோ பாக்கப் போயிருக்காங்க. உங்கள்ட்ட ஒரு வார்த்தை சொல்லச் சொன்னாங்க” என்றாள்.
“ம்ம். ரிஸல்ட் வந்துடுச்சு. பாத்தியா?”
“பாத்தேனே. நீங்களும் பாத்துருப்பீங்க போல? எனக்கு முன்னாடியே நீங்க கால் பண்ணிட்டதா, மாது அண்ணி சொன்னாங்க”
“ஆமா. காலேஜ் நோட்டீஸ் போர்ட்ல உன் பேர் இருந்துச்சு. கங்ராட்ஸ்!” அவன் புன்னகையுடன் கரம் நீட்டினான்.
“தேங்க் யூ!” என்றபடி அவனுடன் கரம் குலுக்கியவள், ஏதோ தோன்றவும் அவனை அணைத்துக் கொண்டாள்.
சுயக் கட்டுப்பாட்டை மீறி தனது அணைப்பு இறுகுவதை உணர்ந்தவன், அவளைப் பலங்கொண்டு தள்ளிவிட்டான்.
அதில் அவளின் தளிர் மேனி வலித்துவிட்டது போலும். “ஆஹ்!” அவள் தோளைத் தேய்த்தபடியே அவனை உறுத்தாள்.
“ஸாரி. வலிச்சுருச்சா? வேணும்னே பண்ணல” அவனின் குரல் பாகாய் இளகியது.
அவள் கோபத்துடன் தனது அறைக்கு நடையைக் கட்ட, அவன் அவளைப் பின்தொடர்ந்து கைப்பிடித்தான்.
“கன்ட்ரோல் மீறுற மாதிரி தோனுச்சு. அதான் அப்படிப் பண்ணிட்டேன். தப்பா எடுத்துக்காத”
“நீங்களா ஒரு கோட்டைப் போட்டுட்டு தாண்ட மாட்டேன்னா என்ன அர்த்தம்?” அவள் அழுத்தமாக வினவினாள்.
“எல்லாம் உன் படிப்புக்காகத் தான, சுலோ? உன் கனவு என்னாகுறது?”
“நானா பிஜி படிச்சே தீருவேன்னு ஒத்தக் கால்ல நின்னேன்! நான் உங்களால தான் படிச்சேன். சொல்லப் போனா, உங்களுக்காகத் தான் படிச்சனே. எங்க வீட்டுல இருக்குறவங்களைப் பொருத்தவரை, நான் யூஜி முடிச்சதே பெரிய சாதனை. அவங்க சொன்னாங்களா; எங்க புள்ளைய மேல மேல படிக்க வையின்னு. நீங்க எக்ஸாம் எழுதச் சொன்னீங்க. நானும் எழுதுனேன்; பாஸும் ஆயிட்டேன். இதுக்கு மேல என்ட்ட என்ன எதிர்பாக்குறீங்க?”
“சரியான கோவக்காரியைப் பிடிச்சு என் தலைல கட்டி வச்சுட்டாங்க” அவன் புலம்பித் தவித்தான்.
“அப்படியா சங்கதி? அடக்க ஒடுக்கமா, அமைதியா, நல்லா படிச்சவளா எவளாச்சும் வருவா. போய்க் கட்டிக்கங்க. இப்ப வெளிய போங்க” அவள் அவனை வெளியே நிறுத்தி கதவடைக்க முனைந்தாள்.
“சனு!” அவன் என்றுமில்லாத் திருநாளாக கொஞ்சினான்.
“ம்ச்ச்” அவள் முகத்தைக் கூட காட்டாமல் கரங்களைக் கட்டி நின்றாள்.
“சரி, கோவப்படாத” என இறங்கிப் போனவன் அவளைக் காற்று புகா வண்ணம் தன்னுடன் இழுத்தணைத்துக் கொண்டான்.
அவன் உச்சியில் முத்தம் வைக்க, அவள் சமாதானமாகி அடர்ந்த தாடியில் முத்திரை பதித்தாள். அவர்களின் காதல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் மோதி உடைய, அவர்களின் நெருக்கம் கரையைக் கடந்தது. இரவு கவிழ்ந்த வேளை, தாயார் வீட்டினுள் நுழையும் ஓசை கேட்டது. அதில் நெற்றி சுருக்கிக் கண் விழித்தான் ஆடவன்.
“சத்யா!” அன்னையார் தன் இருப்பை அறிவிப்பதற்காகக் குரல் கொடுத்தார்.
“ஆன், வரோம்மா” என்ற பதிலில் தாங்கள் அறையிலிருப்பதை அவன் தெரிவித்திருந்தான்.
அவனின் மனைவி கலைந்த ஓவியமாய்ப் புறமுதுகு காட்டிப் படுத்திருக்க, அவன் எழுந்து மின்விளக்கை உயிர்ப்பித்தான்; இழை இழையான கருங்கேசம் அவளுடைய சௌந்தர்ய முகத்தில் அலைப்புற்றிருக்க, அதை மெல்ல விலக்கினான். அப்போது விழி நோக்கிப் பாய்ந்த மின்னொளியால் அவள் கண்களைச் சுருக்கினாள்.
அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் “ஐ லவ் யூ, சனு!” என்றான் ஆழ்ந்த குரலில்.
“சத்யா” என்று மென்மையைக் கூட்டி அழைத்தவள் அவனின் பிடறி கோதி, நாசியில் அதரம் பதித்தாள்.
“ஹேய், என்ன யோசனை?” அவன் அவளின் முகத்தையே கூர்ந்து கண்ணுற்றான்.
“இல்ல… நான் திடீர்னு பிரெக்னன்ட் ஆயிட்டா என்ன பண்ணுறது?”
“படிக்காம தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காதடி”
“அப்படிலாம் நினைக்கல…”
“இழுக்காத. செகன்ட் இயர்லயே கல்யாணம் ஆகி, குழந்தை பெத்து, டிகிரி வாங்குன பொண்ணுங்கள நான் பாத்துருக்கேன். கொஞ்சம் கஷ்டம் தான். பட் மேனேஜ் பண்ணிக்கலாம்”
“ம்ம்ம்”
“இந்த வம்பே வேணாம்னு நீ நினைச்சாலும் சொல்லு. நான் கன்ட்ரோல்ல இருந்துக்குறேன்”
“நீங்க இருப்பீங்க. என்னால முடியாதே” அவள் எவ்வித ஒளிவு மறைவுமின்றி மொழிய, அவனுடைய முகத்தில் மகாஜோதி சுடர்விட்டது.
“சனு, அம்மாவைக் கொஞ்ச நாள் ஊருக்கு அனுப்பிடலாமா? அவங்க ரொம்ப நாளா அங்கப் போகணும்னு கேட்டுட்டு இருக்காங்க”
“ஏங்க? நம்ம கூடயே இருக்கட்டுமே”
“அதில்ல, சனு. காலேஜ் ஆரம்பிக்குற வரைக்கும் நீ ஃப்ரீ தான. அப்டியே வீட்டையும் பாத்துட்டு, என்னையும் கவனிச்சுக்கோயேன். அம்மாக்குக் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம். பேரப் புள்ளைலாம் வந்துட்டா அவங்க தானே சமாளிக்கணும்” அவன் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, பல்வேறு ஏடாகூடங்களுக்கு வழி வகுத்தான்.
“ஒரே ஈவ்னிங்ல தலைகீழாயிட்டீங்க, போங்க” அவள் எள்ளலாய் இதழ் வளைத்தாள்.
“இப்படி ஆக்குனது நீ”
“ஆமா, நாந்தான் உங்களைக் கெடுத்துட்டேன்”
“தப்பு தப்பா பேசாதடி”
“அப்போ நீங்க எனக்குச் சரியா பேசக் கத்துக் கொடுக்கறது தானே”
“சொல்லித் தரவா… சொல்லித் தரவா… சொல்லித் தரவா…” அவன் மெட்டிசைத்தபடி அவளருகே சென்று விழுந்தான்.
இப்போது விட்டத்தைப் பார்த்துத் திரும்பிப் படுத்தவள், நெற்றியில் கையை வைத்தாள் “நீங்க வொர்க் பண்ற அதே காலேஜ்ல படிக்கணும்குறத நினைச்சா தான் அன்ஈஸியா இருக்கு. நான் வேணா வேற காலேஜ் டிரை பண்ணவா?”
“நீ ஆணியே கழட்ட வேணாம். உன்னைக் கண்ணுக்குள்ளயே வச்சுப் பாத்துக்கணும்னு தான் இந்த ஏற்பாடே”
“அந்தளவுக்கு என்னைப் பிடிக்குமா?”
“எவ்ளோ பிடிக்கும்னு காட்டவா?” அவன் அவளது போர்வையை விலக்க முயல,
அவனது தலையில் வலிக்காமல் தட்டினாள் அவள் “சத்யா, உங்க சேட்டையை நிறுத்துங்க. உண்மையைச் சொல்லுங்க; என்னை ஏன் பிடிக்கும்?”
“தெரியலயே. அன்னைக்கு உங்க அண்ணன் கூப்டாருன்னு பூமி பூஜைக்கு வந்திருந்தேன்ல. அப்போ யெல்லோ கலர் ஸாரி கட்டிட்டு, எனக்கு டீ கொடுத்தியே. அந்த நிமிஷமே என்னோட இதயம் ஜிவுஜிவுன்னு ஆயிடுச்சு. நீ ஒன்னுந்தெரியாத சின்னப் புள்ளைன்னு எனக்கு நானே எடுத்துச் சொல்லி மனசைத் திருத்திக்கிட்டேன். அப்பறம் ஒரு நாள் மாதுவே இந்தப் பேச்சை எடுக்கவும் என்னால மறுக்க முடியல. அப்போ என் புத்தி பூரா ‘கண்ணா! லட்டு தின்ன ஆசையா?’ அப்டினு கேட்டுக் கூவிட்டுருந்துச்சு”
“என்னை வேற யாருக்காச்சும் கட்டிக் கொடுத்துருந்தா என்ன செஞ்சுருப்பீங்க?”
“இன்னொரு ஃபிகரைத் தேடிட்டுப் போயிருப்பேன்”
அவன் கேலியாகச் சொன்னதையே அவளால் தாங்க இயலவில்லை. அவனின் காதைப் பிடித்து நன்றாகத் திருகி வைத்தாள் “சத்யா…”
“சும்மா சொன்னேன்டி, இராட்சசி. யாருக்கு எது கிடைக்கும்னு இருக்கோ, அது நிச்சயமா கிடைக்கும். அது பொண்ணா இருந்தாலும் சரி. முத்தாவா இருந்தாலும் சரி. கஜக் கஜக்கா இருந்தாலும் சரி. நீ கோவப்பட்டா மூக்குலாம் சிவந்து, எவ்ளோ அழகாய்டுற தெரியுமா? அப்படியே இன்னொரு ரௌன்ட் போலாம். வரியா?” என்று கேட்டுக் கண்சிமிட்டினான்.
“அத்தை கூப்பிட்டதையே மறந்துட்டீங்க. எழுந்திருங்க முதல்ல. எழுந்திருங்க, சத்யா” அவள் அவனைக் கட்டிலை விட்டுத் தள்ள முற்பட்டாள்.
“முதல்ல மம்மிய ஊருக்குப் பேக் பண்ணணும். அதுக்கப்பறம் நீ என்ன சாக்கு சொல்றன்னு நானும் பாக்குறேன்டி”
“இந்த இலட்சணத்துல நீங்க தான் ஊருலயே இல்லாத சீமந்தப் புத்திரன்னு உங்கம்மா மெச்சிக்கிறாங்க. உங்களைப் பெரிய விருமாண்டி சந்தானம் ரேஞ்சுக்கு நினைச்சுட்டு இருந்தா, ஒரே நாள்ல பொண்டாட்டிகிட்ட கவுந்துர வேண்டியது” என அவனின் காதல் மயக்கத்தை உள்ளூர இரசித்தபடி, அவள் வம்பிழுத்தாள்.
அவனோ அவள் உடுத்தியிருந்த போர்வையை அநாயாசமாக உருவி, இரசனையாய்ப் பார்வையை ஓடவிட்டான் “இந்த அழகைப் பாத்துட்டும் கவுறாமா இருந்தா ஒரு ஆண் மகனுக்கு அழகா? சொல்லு, சனு”
“சத்யா! அடி வாங்குவீங்க” அவள் எச்சரிக்கையாக விரல் நீட்ட,
அதைப் பற்றியிழுத்து அவளைத் தனக்கு நெருக்கமாக்கினான் கணவன் “உனக்காக ஸ்வீட்லாம் வாங்கிட்டு வந்தேன். அது எல்லாத்தையும் விட நீ தந்த டிரீட்டு சூப்பரோ சூப்பர். ஹே, உன் லிப்ஸக் காட்டு. அச்சச்சோ!”
அவனது திகைப்பிற்கான அர்த்தம் புரியாமல், அவள் தன் அலைபேசியின் முன்புறப் படமியில் முகம் பார்த்தாள். அவளுடைய கீழுதட்டின் ஓரத்தில் காயமாகி, உதிரம் உறைந்திருப்பது அதில் தெரிந்தது “என்ன பண்ணி வச்சிருக்கீங்க? இப்டியே நான் எப்படி வெளிய போறது?”
“அதுக்குத் தான் சொல்றேன். வெளியவே போகாத” என்ற அவனின் கண்கட்டு வித்தைக்கு அவள் கட்டுப்படவில்லை.
மௌனமாக ஆடை பூட்டியவள் “இதோ வரேன், அத்தை!” என்று பொய்யாகக் குரல் கொடுத்தாள்.
“அவங்க கூப்பிடவே இல்லை. எங்க ஓடுற?” என்றவன் அவளைத் தாவிப் பிடிக்க முயற்சித்துத் தோல்வியைத் தழுவினான்.
அவனிடமிருந்து அவள் தப்பினாலும், அன்றும் பின்வந்த நாட்களிலும், அவன் தந்த காதல் தடயங்களை மறைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டாள்.
வாரங்கள் பல கடந்து…
“மது, வா, வா” உற்சாகமாகத் தன் மகனை வரவேற்று, அவன் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்டினார் சிந்தாமணி.
“என்னம்மா? முகத்துல சந்தோஷக் களை தூக்கலா இருக்கு. என்ன விஷயம்?” அவன் புன்னகை ததும்பக் கேட்டான்.
“உன் பொண்டாட்டி நல்ல சேதி சொல்லிருக்காடா. எத்தனை நாள் ஆசை! எனக்கு றெக்கை கட்டி பறக்குறாப்புல இருக்கு” என்று அவர் கூறி முடித்துத் திரும்புவதற்குள் இருவரையுமே காணவில்லை.
இங்கே மின்னல் வேகத்தில் மது மாதுவை அறைக்குள் கடத்திச் சென்றிருந்தான் “பொண்டாட்டி, புருஷன்கிட்ட தானடி இதையெல்லாம் முதல்ல சொல்லிருக்கணும்”
அவளின் முகத்திலோ நாணம் தாண்டவமாடியது “அம்மா தான் பொறுமையா சொல்லிக்கலாம்னு சொன்னாங்க”
“எங்க அத்தை இருக்காங்களே; ஹையோ! இராத்திரி பகலா கஷ்டப்பட்டு வேலை பாத்த எனக்குத் தெரியாமலா போயிடும்? எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்துச்சு”
“ச்ச்சீ!” அவள் உதடுகளைச் சுளித்தாள்.
“என்ன ச்ச்சீ? இல்லை, என்னங்குறேன்?”
“உங்க பேச்சைத் தான் ச்சீன்னு சொன்னேன். மச்சான், நீங்க சொன்ன நாள் வந்துருச்சு. எனக்கு எப்போ வளையல் வாங்கித் தரப் போறீங்க?” அவள் ஆவலுடன் கேட்டாள்.
“நீயென்னடி, வளையல் வாங்கவே மாசமானவ மாதிரி பேசுற”
“மச்சான்!” அவள் சிணுங்கினாள்.
“அச்சோ, என் தங்க மயிலு! மச்சான் விளையாட்னேன்டி. நீ கேளு, செல்லம். உனக்கில்லாம வேற யாருக்கு நான் வளையல் வாங்கித் தரப் போறேன்?”
“ஆஹான்?” அவள் ஏற்ற இறக்கத்துடன் வினவ
“ஆன்” அவன் சம்மதமாய் முற்றுப்புள்ளி வைத்தான்.
“எல்லாம் ஒரு பொம்பளைப் புள்ளை வர வரைக்கும் தான். அப்பறம் உன் ஆதிக்கம்லாம் செல்லாக் காசாயிடும்” அவன் மெலிதாக முணுமுணுக்க,
அவள் வியாக்கியானமாய் இடித்துரைத்தாள் “மைன்ட் வாய்ஸுனு நினைச்சு வெளிய பேசிட்டுருக்கீங்க”
“ஐயையோ! எல்லாத்தையும் கேட்டுட்டியா?” என வேடிக்கையாகப் பதறியவன் அவளைக் கை நிறைய அள்ளி அணைத்து, நெஞ்சம் நிறைய உச்சி முகர்ந்தான். மறுதினமே கண்ணன் கார்விழியாளின் கரங்களில் மூன்றிணைத் தங்க வளையல்களைத் தவழ விட, உள்ளம் குளிர்ந்தாள் தாரகை.
காலச் சக்கரம் விரைந்து சுழன்றது. மது மாதுவின் வாழ்க்கை, கலகங்கள் தீர்ந்து காதலால் நிறைந்தது. கணவனின் அன்பிலும் அரவணைப்பிலும் அவளின் வயிறு தழைத்து வளர்ந்தது. மறுவாழ்வு மையத்தில் இருந்து இராமசாமி திருந்திய மனிதராய் அவர்களிடத்தில் திரும்பினார்; வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருந்தால் கண்ட எண்ணங்களும் உதிக்கும் என்பதால், உள்ளூரிலேயே எளிமையான ஒரு பணிக்குச் செல்லலானார். அவரின் மாற்றத்தால் அர்ச்சனா தேவி கடலளவு அகமகிழ்ந்தார்.
“அப்பா, உங்கள்ட்ட ஒன்னு சொல்லணும்” மாது தயக்கத்துடனே அவரிடம் மனந்திறந்தாள்.
“என்ன, மாது?”
“நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், பா”
“தெரியும்மா. மாப்பிள்ளை சொல்லிட்டாரு” அவர் பொறுமையிழக்காமல் விடையருளினார்.
“உங்களுக்கு என் மேல கோவமே வரலையா?”
“நீ எந்த நேரத்துலயும் பொய் சொல்ல மாட்டன்னு எனக்குத் தெரியும்மா. நீயே பொய் சொல்லிருக்கீன்னா நிலைமை எவ்ளோ மோசமா இருந்துருக்கு, நான் எவ்ளோ மோசமா நடந்துட்ருக்கேன்னு எனக்குப் புரியுது. நல்லதுக்காக சொல்ற பொய் பொய்ல சேராது, மாது”
“என்னை மன்னிச்சுருங்கப்பா” என்று சொல்லும்போதே அவளின் குரல் தழுதழுத்தது.
“இல்லமா. நீயும் அம்மாவும் தான் என்னை மன்னிக்கணும்” அவர் அங்ஙனம் கூறியது தான் தாமதம் எனும் விதமாக, அவள் அவரைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள். அக்காட்சியில் நெகிழ்ந்து போன அர்ச்சனா, பின்புறமிருந்து மகளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.
மதுவும் மாதுவும் வாசுவின் உணவகத்தை வாடகைக்கு எடுத்து புதிதாகத் தொழில் தொடங்கினர். மெல்ல மெல்ல மது விடுதிக்கு இணையாக, அவர்களின் ‘மிஸ்டிக்’ உணவகமும் பிரசித்தி பெற்றது. கணவனின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக, அன்றாட கணக்கு வழக்குகளைக் கணினி மயமாக்கினாள் மாது. அது போக, அவளின் பணி வேட்டையும் ஒருபுறம் தொடர்ந்தது. முதல் முயற்சியில் சறுக்கலைச் சந்தித்து, இரண்டாவது நேர்காணலில் வெற்றிகரமாக அரசாங்க உத்தியோகத்தை உறுதி செய்தாள் அவள். கூடவே, குடும்பத்தினர் பலரின் உதவியுடனும் மேற்பார்வையுடனும் இரு வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டன.
முதலாவதாக, அர்ச்சனாவின் புது இல்லத்தில் பால் காய்ச்சப்பட்டது. அங்கேயே மாதுவின் வளைகாப்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வளைகாப்பு முடிந்த அன்றிரவே அவள் கணவனைத் தேடி புகுந்தகம் வந்து சேர்ந்தது தனிக்கதை. மாரி பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வெழுதி முடித்திருந்தான். இம்முறையும் அவனாகத் தான் படித்தான்; தேர்ச்சியும் பெற்றான். இப்போதும் மது மற்றும் மாதுவின் இரவு உலாக்கள் தொடர்ந்தபடி இருந்தன. ஒரேயொரு மாற்றம் என்னவெனில், இரு சக்கர வாகனத்துடன் முத்துமாரி அவர்களின் நான்கு சக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்தான். அவ்வகையில் மாமன் ஆனவன் மச்சானை வண்டி ஓட்டப் பழக்கப்படுத்தினான். இடைப்பட்ட காலத்தில், தீபக் கௌரா மற்றும் காவியா தம்பதியருக்குக் குழந்தை பிறந்தது. அவர்களுக்குத் தங்களின் பழைய வீட்டை மது பரிசாக அளித்திட, அவர்களின் நன்றியுணர்வு விண்ணைத் தொட்டது. பத்தாவது திங்களில் மாதுவிற்குப் பிரசவமாகி, அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அடுத்த இரு மாதங்களில் அவர்கள் புதுவீட்டிற்குக் குடி பெயர்ந்தனர்.
புதுமனை புகுவிழாவில்…
சுலோச்சனா ஆறு மாத கர்ப்பஸ்திரியாக வலம் வந்தாள். அவளுக்கென நியமிக்கப்பட்ட மெய்க்காவலன் போல அவளை அணுக்கமாகத் தொடர்ந்தான் சத்யா.
“முகமெல்லாம் தங்கம் மாதிரி மின்னுது. உனக்கும் உங்க அண்ணி மாதிரியே ஆம்பளைப் புள்ள தான் போ” என்றார் ஓர் உறவினப் பெண்மணி.
“ஐயே! அப்பறம் என் அண்ணன் பையனுக்கு யார் பொண்ணு கொடுக்குறதாம்? உள்ள இருக்குறது பொட்டைப் புள்ளையாக்கும்” அவள் ஜம்பமாய் வாயடித்தாள்.
“ஆம்பளைப் புள்ளைங்குறேன்”
“பொட்டைப் புள்ளைங்குறேன்” அவள் தன் பிடியில் நிலையாக நின்றாள்.
“என்ன தம்பி, எதுவுமே சொல்லாம நிக்குறீங்க?” உறவினப் பெண்மணி சத்யாவை ஏறிட்டு வினவினார்.
“பொம்பளைப் புள்ளை தான்மா” அவன் சாதுவாக மொழிந்தான்.
“வீட்டுல வச்சு சமாளிக்குறதும் இல்லாம, எப்படி இவளைக் காலேஜுக்குக் கூப்டுப் போய்ச் சமாளிக்குறீங்க?”
“காலேஜ்ல அவரு என் கண்லயே பட மாட்டாரு. நானும் அவரைத் தேடிப் போக மாட்டேன். காலைக்கு அப்பறம் சாயந்தரம் வீட்டுக்கு வரப்போ தான் பாத்துப்போமே” அவள் மெய் விளம்பினாள்.
“அவ இருக்குற பக்கமே வரக் கூடாதுனு மேடம் ஆர்டர் போட்டுருக்காங்க” அவனும் புன்னகை மாறாமல் செப்பினான்.
“ஜாடிக்கேத்த மூடி தான். இப்படியே சேந்து நல்லா இருங்க” என்று அப்பெண்மணி இருவரையும் வாழ்த்திவிட்டு நகர்ந்தார்.
“பொம்பளைப் புள்ளை தானே, சத்யா?” அவள் இடையில் கரங்கள் தாங்கி எழிலோவியமாகக் கேட்டாள்.
“மத்தவங்க முன்னாடி பேர் சொல்லிக் கூப்பிடாதடி” அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கிசுகிசுத்தான்.
“சொல்லு”
“ஆமா. உன்னை மாதிரியே குட்டி அறந்த வால் தான் பொறக்கப் போறா”
“அப்போ கையைப் பிடிச்சுக்கோ” என்றபடி அவள் வலக்கரத்தை நீட்ட அதை உள்ளங்கைக்குள் பொத்தி, மருதாணியிட்ட விரல்களுக்கு முத்தமிட்டு நடையைத் தொடர்ந்தான் அவன்.
அன்றிரவு காதில் அணிந்திருந்த குடைக் கம்மலையும் மாட்டலையும் கழற்றி, ஒரு பெட்டகத்தில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள் மாதுளை. முகங்கழுவி, வெள்ளை உள்சட்டையும் வேட்டியுமாகக் குளியலறையிலிருந்து வெளிப்பட்டான் மதுசூதனன். மெத்தையில் துயில் கொண்டிருந்த சிசுவைச் சில நிமிடங்களுக்கு இரசித்தவன் கொசுவலையை அவிழ்த்துவிட்டு, மனைவியின் அருகில் வந்தமர்ந்தான்.
“பந்தி முடிஞ்சதும் வாசு அண்ணா உங்களை எங்கயோ கூட்டிட்டுப் போனாரு போல?”
“ம்ம். நம்ம ஊர்ல வார்ட் கவுன்சிலர் எலெக்ஷன் வருதாம். நம்ம வார்டுல என்னை நிக்கச் சொல்றாங்க”
“அரசியலா? நீங்களா? என்ன சொல்றீங்க, மச்சான்?”
“நீ எப்படியும் வேணாம்னு தான சொல்லப் போற?”
“எனக்கு அரசியல் பத்திலாம் தெரியாது. ஆனா, வெள்ளை வேட்டி, சட்டைல கம்பீரமா தெரிவீங்க. அது மட்டும் உறுதி. பார் ஓனர்ஸ் அஸோசியேஷன்ல நீங்க பாக்காத பதவியா? வர வாய்ப்பை வேணாம்னு சொல்லாதீங்க, மச்சான். என் முழு ஆதரவும் உங்களுக்குத் தான்”
“தேங்க்ஸ், பொண்டாட்டி. ஆனா, நான் நிறைய யோசிக்கணும். பாக்கலாம்”
“இன்னைக்குக் காலையில மனோஜை இந்தத் தெரு முக்குல பாத்தேன். அவனை ஏன் அப்படியே விட்டீங்க, மச்சான்?”
“அவன்ட்டருந்து பணத்தைத் திருப்பி வாங்குறது பெருசில்ல. அவன்ட்ட அடிச்சுப் பிடுங்கியிருந்தா நமக்குத் தான் குற்றவுணர்ச்சியா இருக்கும். இப்போ, அவன் நம்மள பாத்துட்டு தலையைக் குனிஞ்சுட்டுப் போறான். அவன் செஞ்ச காரியத்துக்கு ஒருத்தரும் வேலை கொடுக்க மாட்டேங்குறாங்க. அவன் பண்ண துரோகத்துக்கு இது தான் சரியான தண்டனை”
அவனது கூற்றைத் தலையசைத்து ஆமோதித்தவள் கழுத்தணியை அவிழ்க்கப் பாடுபட, முந்திக் கொண்டு அவளுக்கு உதவியவன் பின்னங்கழுத்தில் அழுத்தமாக அச்சாரமிட்டான்.
அவள் மெல்லிய குரலில் மருகினாள் “மச்சான்…”
“ஒன்னரை மாசம் ஆகணும்னு சொன்ன. இப்போ ரெண்டு மாசமே முடிஞ்சுடுச்சு. உன் புருஷன் பாவமில்லையா, கண்மணி?”
“எனக்குப் பயமாயிருக்கு”
“டெலிவரிக்கு முன்னாடி கடைசியா நீ என்ன சொன்னனு நீயே யோசிச்சுப் பாரு. டியூ டேட் தாண்டியும் வலி வராம போனப்போ, நாம ரெண்டு பேரும் சேந்துருந்தா குழந்தை பொறக்குமாம்; ஃபோன்ல பாத்தேன் மச்சான்னு சொன்னியா, இல்லையா? அப்ப இந்தப் பயம்லாம் எங்கப் போச்சாம்?”
“அப்போ வேற. இப்போ வேற”
“நாம சோஃபாக்குப் போயிடலாம். அங்கத் தான் உனக்கு இந்தக் கூச்ச நாச்சமெல்லாம் வராது. அதுல நடந்த சம்பவம் தான நம்ம குட்டிப் பையனுக்கு அடி போட்டுச்சு”
“சரியான மறதிப் பேர்வழி நீங்க. அது ஒன்னும் காரணம் இல்ல. உங்க மினிவேன் தான் காரணமாக்கும்”
“ஆமால்ல. ஒரு ரைட் போய்ட்டு வருவோமா? எங்க வீட்டுல எல்லாருக்கும் ரெண்டு ரெண்டா இருக்கு. நமக்கும்…”
“அப்டியே விழுந்தடிச்சுக் கெஞ்சாதீங்க. இன்னும் ரெண்டு மூனு வருஷம் போகட்டும். பொறுமையா பிளான் பண்ணிப்போம். அது வரைக்கும் ஒரு எல்லைக்குள்ள இருங்க” அவள் வெட்கப் பூச்சோடு தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தாள்.
“சரிடி, அம்முப் புள்ள! பொறும்மையா பிளான் போட்டுக்கலாம்” என்றவன் அவளின் நெற்றி, கன்னம், கழுத்தைத் தொடர்ந்து தொண்டைக் குழியிலும் முத்தம் வைக்க, சொக்கிப் போனாள் பாவை.
அவர்களின் கூடலில் சிலிர்த்துப் போய்த் தலையை உலுக்கின சாளரத்துக்கு அப்பால் நின்ற ரோஜாச் செடிகள்.
***