தளிர் 36
நிசப்திக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்க, “நான் கிளம்பலாமா? அப்பா தனியா இருப்பாங்க, இந்த ஒன் வீக்ல என்ன ஆச்சுனு எதுவும் தெரியல. அவரை முழுசா பார்த்தா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.” எனச் சோர்ந்தக் குரலில் சொல்ல,
“எஸ், கண்டிப்பா பார்க்கலாம். நீ கோமாவுக்கு போகவும் எனக்கு ரொம்ப பயமா போச்சு. உங்க அப்பாவும் நினைவில்லாம இருக்கார், நீயும் இப்படி இருக்க. விக்ரமும் ஊர்ல இல்ல, நான் எப்படி இதெல்லாம் சமாளிக்கனு திணறிட்டேன். நல்லவேளை நீ முழிச்சிட்ட, உன்னோட அப்பாவை ஃபுல் செக்கியூரிட்டி அண்ட் மெடிக்கல் சேஃப்டியோட இங்கேயே சிஃப்ட் பண்ணிட்டேன். நீ ஃபுல்லா ரெக்கவர் ஆனதும் கூடவே இருக்கலாம். இது எங்க கெஸ்ட் அவுஸ்தான். விக்ரம்கிட்டயும் சொல்லிட்டேன், பயம் வேண்டாம்.” என மிகவும் அன்பாக பேச, நிசப்தியால் அப்போது அவளை நம்ப மட்டுமே முடிந்தது.
“ம்ம்ம்… ஓகே தான். ஆனா இங்க ஏன்? எங்க வீடு இருந்ததே…” என்றவளிடம், “ஆமா இருந்தது, ஆனா அங்க யாரையும் எனக்குத் தெரியாதே. எப்படி அங்க நான் உங்களைப் பார்த்துக்க முடியும்? அதனால விக்ரம்தான் இங்க வச்சு பார்த்துக்க சொன்னார்.” என அவள் நம்பும் விதமாக முடித்துவிட்டாள்.
“சரி” என்றவள், அன்று முழுவதும் விழிப்பும் உறக்கமுமாக இருந்தாள். அடுத்த நாள் கொஞ்சம் வழக்கத்திற்கு வந்திருந்தாள். சுற்றுப்புறம் மெல்ல உணர்வுக்கு வந்தது. உடல் மிகவும் சோர்வாக இருந்தது. அது கோமாவில் இருந்ததாலோ என்று நினைத்தாள். ஸ்வாதி அங்கு இல்லை. ஆனால் அனைத்திற்கும் ஆள் இருந்தது. அன்று பார்த்த உருண்டையான மனிதர்களில் இருவர் வெளியில் நின்றிருந்தனர்.
அனைத்தையும் கிரகித்தபடியே தந்தை இருந்த அறைக்குள் சென்றிருந்தாள். மருத்துவமனையில் எப்படி இருந்தாரோ, அதைப் போலவே எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார். அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக மிஷினில் அவரது உயிர் துடிப்பு கேட்டுக் கொண்டிருந்தது.
பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு, அவளது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்றேத் தெரியவில்லை. அவள் வாழ்க்கையை யாரோ சுழற்றுவது போலொரு தோற்றம். எப்போது விக்ரமைப் பார்த்தாளோ அன்றிலிருந்தே அவள் வாழ்க்கையேத் திசை மாறிப் போயிருந்தது.
அன்று விக்னேஷை கொல்ல வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில், அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து அடித்திருந்தாள். அது அவன் உயிரை எடுக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
‘காதலிக்கிறேன், கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று வந்து நின்றவன், எப்படி மாறிப் போனான். காதலில் தேவை முதலில் நம்பிக்கைதானே. அது இல்லையென்ற பிறகு அங்கு காதல் எப்படி இருக்கும்? விக்னேஷை வேண்டாம் என்று ஒதுக்க இதுதான் காரணம். அதைத்தான் அவனிடமும் அன்று நேரடியாக அவள் சொன்னாள்.
ஆனால் அவனோ விக்ரமோடு பழகுவதைக் காரணம் காட்டி, மிகவும் கேவலமாக நடந்து கொண்டான். அதைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அந்த நேரம் விக்ரம் மேலும் அவளுக்கு பெரியளவில் மரியாதைக் கிடையாதுதான். அதோடு விக்ரமால்தான் தன் வாழ்க்கைப் பாதை மாறியது என்ற எண்ணமும் இருக்க, அவளுக்கு விக்ரமின் மேல் அத்தனை வெறுப்பு.
அது தெரியாமல் இந்த விக்னேஷ், விக்ரமின் பின்னால் அவள் சுற்றுகிறாள், ஸ்வாதியின் வாழ்க்கையைக் கெடுக்கிறாள் என்று சொல்லி, அதையும் விட கேவலமாக ஆணுக்காக அவள் அலைவதாகப் பேசியதைத்தான், நிசப்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இப்படியே எண்ணங்கள் சுழல அமர்ந்திருந்தவளிடம் வந்து நின்றாள் நர்ஸ் கோமதி. மருத்துவமனையில் இருந்த நர்ஸ்.
“என்னம்மா இங்க வந்துட்ட, ரெஸ்ட் எடுக்கல?”
“ஹான் சிஸ்டர் போகணும், ரொம்பவே டையர்டா இருக்கு, நீங்க இங்க என்ன பன்றீங்க?”
“நான் தான்மா உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்குறேன், உங்க அப்பாவுக்கு கண்டிப்பா ஒரு டேகேர் நர்ஸ் தேவை. அதோட நீயும் முடியாம இருந்த, அதுதான் ஸ்வாதி மேம் என்னை இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க. இப்போ உனக்கு எப்படி இருக்கு?”
“ம்ம், கொஞ்சம் பரவால்ல.”
“சரிம்மா, இந்த மாத்திரையை போட்டுக்கோ, இது சாப்பிடுற முன்னாடி போடுறது.”
“ம்ம் சிஸ்டர், என்னோட போன் வேணுமே, ஸ்வாதி இங்க இல்லையா?”
“இல்லம்மா, ஈவ்னிங் வருவாங்க, அவங்ககிட்டத்தான் இருக்கு. வெயிட் தூக்கக்கூடாது, ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது, ரொம்ப கவனமா இருக்கணும். ஒரு மாசத்துக்கு இங்கதான் நீங்க இருப்பீங்க, நான் பார்த்துக்குறேன்.”
“ஒரு மாசமா, அவ்வளவு நாள் ஏன்?”
“ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் செஞ்சாச்சு இல்லம்மா, இனி ட்ராவல் எல்லாம் செய்யக்கூடாது. அதனாலத்தான் உங்க அப்பாவைக் கூட இங்க கொண்டு வந்துட்டாங்க. ஓவுலேஷன் டைம் பார்த்து எல்லாம் முடிஞ்சிட்டா அப்புறம் நீங்க வீட்டுக்குப் போயிடலாம். நார்மல் ப்ரெக்னென்ட் லேடி போல இருக்கலாம். மன்த்லி செக்கப்புக்கு வந்தா போதும்.”
“ஓ… எனக்கு… எனக்கு… இதெல்லாம் சொல்லவே இல்ல. இன்ஃபார்மும் இல்ல, கான்ஃபார்மும் பண்ணல.” பயத்திலும் அதிர்ச்சியிலும் அவள் உடல் நடுங்கியது.
“என்னம்மா சொல்ற? உங்களுக்கு பணத்தை தண்ணியா செலவு செய்றாங்க ஸ்வாதியம்மா. நீங்க இப்படி சொல்றீங்க? இது வெளியேத் தெரிஞ்சா எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமா? அவங்களை அரெஸ்ட் பண்ணிடுவாங்க. அந்த வக்கீல் சாரையும் சேர்த்துதான். இது இல்லீகல்னு எதுக்கும் நான் எங்க டாக்டர்கிட்ட சொல்லி வைக்கிறேன்.” என அவளின் டாக்டர் சொல்லிக் கொடுத்த போலவே பேசினாள் கோமதி.
“அச்சோ இல்ல இல்ல… ஒன்னும் வேண்டாம். நான் பார்த்துக்குறேன்… இதெல்லாம் எப்ப முடியும்? அப்பாவுக்கு எப்படி இருக்கு?”
“சீக்கிரம் முடிஞ்சிடும்மா, ஆனா உங்க அப்பா அப்படியே தான் இருக்கார். அவருக்கு இனி நினைவு திரும்பும்னு சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்த? நீ வாழ வேண்டிய பொண்ணு.”
“எனக்கு அப்பா தான் சிஸ்டர் எல்லாம், அவருக்காக என் உயிர கூட கொடுக்கலாம். எனக்காக அவர் வாழ்க்கையவேத் தொலைச்சிட்டு இருக்கார். அம்மா இறந்த பிறகு அவருக்கு நான், எனக்கு அவர்… அப்படித்தான் இருந்திருக்கோம். இனியும் அப்படித்தானே. அவருக்காக நான் இது கூட செய்யலனா எப்படி? அவர் இருக்குறவரை எங்கூடவே இருக்கட்டும்.”
“நல்ல பொண்ணுமா… நாளைக்கு உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, மறந்துடாத. இந்தக் குழந்தை பிறந்த பிறகு உன் வாழ்க்கை எப்படி மாறுமோ? கடவுளுக்கே வெளிச்சம்! தைரியமா இரும்மா, நான் உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்.”
ஒரு முடிவை எடுக்கும் வரை மட்டுமே சரியா, தப்பா என யோசிக்க வேண்டும். எடுத்தபிறகு அந்த யோசனை இருக்கவேக் கூடாது. நிசப்தியும் கிட்டத்தட்ட அந்த முடிவில் தான் இருந்தாள்.
தந்தை இனி பிழைக்கமாட்டார் என்று யார் சொன்னாலும், அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. அவர் ஒருநாள் விழித்து தன்னைப் பார்ப்பார், தன்னிடம் பேசுவார், அதற்கு இந்த வைத்தியம் கண்டிப்பாகத் தேவை. அதனால் ஸ்வாதியின் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டாள். என்ன, அவளுக்கு இன்னுமே ஸ்வாதியின் சுயரூபம் தெரியவில்லை. அவள் விக்ரமின் மனைவி என்ற முறையிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தெரிய வரும் போது?
ராஜஸ்தானில் இருந்த நரேனுக்கு வேலை அதிகமாக இருந்தது. புதிதாக டைல்ஸ் தொழிலில் இறங்கியிருந்தான். வேலை அதிகம் என்பதால் நிசப்திக்கு அழைக்கவில்லை. அதனால் அங்கு நடந்த எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
அந்த வார விடுமுறையில் ஹைதரபாத்தில் இருந்து வந்த உஷா நேராக மருத்துவமனைக்கு வர, அங்கு அவர்கள் இல்லையென்று தெரியவும் விசாரித்தாள்.
ஒரு வாரத்திற்கு முன்பே டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகத் தகவல் தர, வீட்டிற்கு போயிருப்பார்கள் என்று அங்கு வர, அங்கும் இல்லை. பக்கத்தில் விசாரிக்க, நிசப்தியைப் பார்த்தே ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று சொல்லவும், பயம் பிடித்துக் கொண்டது.
உடனே நரேனுக்கு அழைத்துச் சொல்ல அவனுக்கும் பயம், பதட்டம் எல்லாம். அதோடு அவனால் அங்கிருந்து நகரவே முடியாத சூழல். சட்டென்று அவனுக்கு ஞாபகம் வந்தது விக்ரம்தான்.
அவனுக்கு அழைக்க, அழைப்பே போகவில்லை. உடனே ரவிக்கு அழைத்து விவரம் சொல்ல, பக்கத்தில் தான் ரித்தியும் இருந்தாள். விஷயம் பகிரப்பட, அவளால் நிலைகொள்ள முடியவில்லை.
சமீபமாக மாமியாரும் ஸ்வாதியும் அடிக்கடி தனியாகப் பேசுவதும், வெளியில் சென்று வருவதுமாக இருக்க, லேசாக சந்தேகம் வந்திருந்தது.
ஒருவேளை இவர்களும் அதற்கு காரணமாக இருப்பார்களோ என்று யோசித்தபடியே, ரேணுகாவிற்கு அழைத்துச் சொன்னாள். அவருக்கும் நிசப்தியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது.
தன் மகனால்தானே அவள் வாழ்க்கை பாழாய் போனது. அதனாலே அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கிறார். இன்று இதைக் கேட்டதும் அவருக்கும் பதட்டம் வந்துவிட்டது.
ரவிக்குத் தங்கையின் மேல் கடுகளவு கூட சந்தேகம் வரவில்லை. அதனால் அவனுக்குத் தெரிந்தவரை வைத்து தேடுதலில் இறங்கியிருந்தான்.
“நரேன் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. போன தடவை வந்துருக்கும் போதே ரொம்பவும் நம்பிக்கை இல்லாம இருந்தா. நான்தான் தைரியம் சொல்லி விட்டுட்டு போனேன். போயிருக்கக் கூடாதோ? அவ அப்பாவுக்கு எதுவும் ஆகி, அவளும்…? எனக்குப் பயமாயிருக்கு நரேன்.” என அழ,
“வாயை மூடு…” என மனைவியை அதட்டியவன், “அவ ஒன்னும் கோழை கிடையாது. கண்டிப்பா எங்கையாவது இருப்பா. நம்மக்கிட்ட மறைக்குற அளவுக்கு எதுவும் இருக்காது, நம்பு. சீக்கிரம் அவளேக் கூப்பிடுவா. நீ நம்ம வீட்டுக்குப் போ. நான் பார்த்துக்குறேன்.” என்றவனுக்கும் இப்போது பயம்தான்.
ஏனென்றால் மருத்துவர் அவனிடமும் சொல்லியிருந்தார். பிழைக்க வாய்ப்பில்லை, இப்படியே ஜடம் போலவே இருப்பார், இருந்தும் இல்லாத நிலை என்று. அதை நிசப்தியிடம் சொல்லாமல் மறைத்திருந்தான். இப்போது தெரிந்து விட்டதோ, அதனால் எதுவும் விபரீத முடிவு எடுத்துவிட்டாளோ என யோசிக்க ஆரம்பித்தவனுக்கு, அதற்கு மேல் அங்கு இருக்க முடியும் என்றுத் தோன்றவில்லை. உடனேக் கிளம்பியிருந்தான்.
விக்ரம் அன்று மாலை நேரமே வீட்டிற்கு வந்திருந்தான். வந்தவனிடம் ரேணுகா விஷயத்தைச் சொல்ல, அவனுக்கு குழப்பமாக இருந்தது.
நிசப்தி திருச்சியில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தான். உடனே தன் நண்பனுக்கு அழைத்துக் கேட்க, அவள் வேலைக்கு வந்தே இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது எனவும் கடுப்பாகிவிட்டான்.
“இடியட்… இடியட்… உங்கிட்ட என்ன சொன்னேன்? அவளைப் பத்திரமா பார்த்துக்கோ, எதுவா இருந்தாலும் உடனே எனக்குச் சொல்லுனு சொன்னேன். இப்போ கோட்டை விட்டுட்டு டைலாக் பேசுற முண்டம். அவ எவ்வளவு பிரச்சனைல இருக்கானு தெரியுமா? முட்டாள்!” எனக் காட்டுக் கத்தல் கத்தியவன், நெற்றியை நீவியபடி அமர்ந்துவிட்டான்.
எப்படி, எங்கே போய் அவளைத் தேடுவது? ஆயாசமாக வந்தது. அப்போது, “விக்கி!” என அழைத்தார் ரேணுகா.
அந்தக் குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். பலநாட்கள், இல்லை இல்லை பல வருடங்களே ஆகிவிட்டது, ரேணுகா மகனிடம் இந்தக் குரலில் பேசி. அத்தனைக் கனிவு, பாசம் அந்தக் குரலில். தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டே “என்னம்மா?” எனவும்,
“நான் சொல்ல வர்றதை நீ சரியான முறையில் எடுத்துக்கணும், அந்தப் பொண்ணு வாழ்க்கை இவ்வளவு மோசமா போக நீ மட்டும்தான் காரணம். அது நீ இல்லைனு சொன்னாலும், என்னால ஏத்துக்க முடியாது. இல்லைனு உன்னால சொல்ல முடியுமா?”
“இல்ல, நான்தான் காரணம். எனக்கும் தெரியும், ஸ்வாதி மேல அவ்வளவு ஆசை இருந்தும், அந்தக் குற்ற உண்ர்ச்சியாலதான் சேர்ந்து வாழ தோனல. அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதும் தான், என் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கணும்னு நினைச்சேன்.”
“ஆனா இப்போ என்ன நடக்குது பார்த்தியா? அந்தப் பொண்ணையும் உயிருக்கு போராடிட்டு இருக்குற அப்பாவையும் காணோம். இருக்காங்களா? இல்லையானேத் தெரில. அப்படி ஒருவேளை இல்லாம போயிட்டா, அந்தப் பாவத்துக்கு மொத்தக் காரணமும் நீ மட்டும்தான் விக்கி, மறந்துடாத. பாவத்துக்கு மேல பாவம். அந்தப் பாவம்தான் நம்ம குடும்பத்துக்கு வாரிசைக் கொடுக்கலையோ…” என பேசிக் கொண்டே வந்தவர், கடைசி வார்த்தையில் மகனின் மேல் சாய்ந்து அழவே ஆரம்பித்துவிட்டார்.
“அம்மா என்னம்மா நீங்க? அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, நாங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கல, வாழ்ந்தா தானே குழந்தை வர, நான் பார்த்துக்குறேன். அந்தப் பொண்ணைக் காப்பாத்தி உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறது என் பொறுப்பு. நீங்க டென்சன் ஆக வேண்டாம். போங்க, போய் சாப்பாடு எடுத்து வைங்க வரேன்.” என தாயை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு அமர்ந்தவனுக்கு யோசனைகள் ஸ்வாதியிடம் சென்றது.
அதே நேரம் நிசப்தியைப் பற்றி பேசலாம் என விக்ரமைப் பார்க்க வந்த ரவியின் காதில் அனைத்தும் விழ, அவனுக்குப் பேரதிர்ச்சி.
திருமணமாகி இத்தனை ஆண்டுகளாகியும் இருவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவில்லையா? நிச்சயம் விக்ரமின் மேல் தப்பிருக்காது என்றுத் தெரியும். அவன் தங்கைதான் டெஸ்ட் டியூப் பேபி என்று பைத்தியம் பிடித்து அழைகிறாளே. இப்போது எப்படி உள்ளே செல்வது? விக்ரமை விட ரேணுகாவை எப்படி எதிர்கொள்வது? அவன் திருமணம் முடிந்து பிள்ளைக் குட்டியென ஒரு நிறைவான வாழ்க்கையில் இருக்க, தன் தங்கையைக் கட்டியவனின் வாழ்க்கைப் பாலைவனமாகக் காட்சியளிப்பதை சகிக்க முடியவில்லை அவனால்.
அந்த நேரம் அவர்களை எதிர்கொள்ளும் திராணியின்றி வந்த வழியேக் கிளம்பிவிட்டான்.
***
அன்று மாலை நிசப்தியைப் பார்க்கத் தாயோடு வந்திருந்தாள் ஸ்வாதி. அவளைப் பார்த்ததும் மென்மையாக புன்னகைக்க, அவளும் புன்னகைக்க,
“நிசப்தி உங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும், அதுக்கு முன்னாடி இவங்க என்னோட அம்மா. இந்த ஒரு வாரமா இங்க வந்து உன்னைப் பார்த்துட்டு ஈவ்னிங் தான் போவாங்க. நீ சரி சொன்னதும் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம்.” எனவும், நிசப்தி புன்னகைக்க மதியழகியும் பதிலுக்குப் புன்னகைத்தார்.
“முக்கியமான நியுஸ் ஒன்னு சொல்லணும்னு சொன்னேன்ல, அது என்னன்னா நாம உடனே கேரளாவில் இருக்குற எர்ணாகுளம் போறோம்.” என்றதும் நிசப்திக்கு முகமெல்லாம் வியர்த்து போனது.
“ஏன்… ஏன்… எதுக்கு…?” எனப் பதட்டமாகக் கேட்க,
“உன் அப்பா உயிர் மேல உனக்கு ஆசையே இல்ல போல?” என்ற ஸ்வாதியின் குரலில் என்ன இருந்தது என்றே அவளால் கணிக்க முடியவில்லை.
***
1 comment
இந்த ஸ்வாதியை திட்டி, திட்டி நமக்குத்தான், வாயும் கையும் வலிக்கும் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797