Home Antiheroதளிர் – 56

தளிர் 56

“ஒரு சின்ன வேலையை கூட உன்னால முடிக்க முடியாதா? டேமிட்! அவளும் அந்த குழந்தையும் தப்பிச்சிட்டாங்க பார். யூஸ்லெஸ் இடியட்…!” எனக் கத்திய ஸ்வாதி, போனை தூக்கி எறிய, தூக்கத்தில் இருந்த விக்னேஷிடம் அசைவு ஏற்பட வேகமாக அவனிடம் வந்தாள்.

விக்கியின் கைகளைப் பிடித்து வருடியவாறே அவனைப் பார்க்க, அதில் விழித்தவனின் பார்வை ஸ்வாதியிடம் விழ, “என்ன விக்கி, வலிக்குதா? டாக்டர் வர சொல்லவா? இல்லை, நாம ஹாஸ்பிடல் போலாமா?” என பரிதவிப்புடன் கேட்க,

தன்னை வருடிய கையை மற்றொரு கையால் பிடித்தவன், ‘இல்லை’ எனும் விதமாகத் தலையை ஆட்டி மறுத்துவிட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

அதில் ஸ்வாதிக்கு பெரும் ஏமாற்றம். தன்னிடம் இன்னும் பேசவே இல்லையே என முகம் சுனங்கிப் போய், விழிகள் கலங்க ஆரம்பிக்க, “லவ் யூ ஸ்வே!” என்ற வார்த்தைகள் விக்கியிடமிருந்து வந்து விழ, அந்த வார்த்தைகளுக்காக அவள் ஏங்கிய ஏக்கமும் ஆசையும் மனதில் படமாக விரிய, அவன் கைகளில் முகத்தைப் புதைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் ஸ்வாதி.

அவள் அழுது ஓயட்டும் என்று அவனும் நினைத்தானோ என்னவோ, ஸ்வாதியின் அழுகையை நிறுத்த முயற்சிக்கவில்லை அவன்.

சில நிமிட நேரங்களுக்குப் பிறகு அழுகை நிற்க, இப்போது விக்கி எழுந்து அமர்ந்திருந்தான். தன் கைகளை அவளிடமிருந்து பிரித்து விரிக்க, அவனின் அந்த செய்கையை நம்ப முடியாமல், விழிகள் தெறிக்க திகைப்புடனே அந்தக் கைகளில் புகுந்தாள் ஸ்வாதி.

தன் அணைப்பிற்குள் அடங்கியவளின் முதுகை வருடி, காதோர முடிகளை ஒதுக்கியவன், நெற்றியில் ஆழமாய், அழுத்தமாய் ஒரு முத்தத்தைப் பதித்தான்.

உயிரை உருக்கிய அந்த முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தவளிடம், “ஸ்வே, கொஞ்ச நாளைக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம். உன்னோட டர்ன் முடிஞ்சது, இனி நடக்கப் போறது எல்லாம் என்னோட டர்ன். இதுவரைக்கும் நீ எனக்காக செஞ்சது எல்லாம் போதும். இனி உனக்காக, உனக்காக மட்டுமே நான் செய்யப் போறேன். நீ இந்தப் பிரச்சனையில இருந்து லீவ் ஆகிடு ஸ்வே, நான் பார்த்துக்கிறேன்.” என்றான் மென்மையாக, அவளுக்கு வருத்தம் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில்.

“ஆனா… ஆனா விக்கி… அவ… அவளை சும்மா விடக்கூடாது விக்கி. உன்னை… உன்னை…” எனத் தேம்பியவளின் முகத்தை, இழுத்து மார்பில் அழுத்தமாய் இறுக்கி, அவள் பயத்தைப் போக்கி, “நான் நல்லா இருக்கேன் ஸ்வீட்டி, ப்ளீஸ்… இப்படி அழுறதை நிறுத்து, நீ எவ்வளவு தைரியமான பொண்ணு? உன்னையும் உன் காதலையும் நினைக்கும் போது, நான் உனக்கு துரோகம் செஞ்சிட்டேனோனு மனசுக்கு உறுத்தலா இருக்கு. கொஞ்ச நாள், கொஞ்சமே கொஞ்ச நாள், நமக்காக இங்க வாழலாம்.

நாம் இருக்கோம் என்பதே அங்கே யாருக்கும் தெரிய வேண்டாம். எல்லாம் சரியாகிடுச்சுனு அந்த விக்ரம் ஆசுவாசம் ஆகும் போது, அவனை அடிக்கணும். திரும்பி எழுந்துக்கவே முடியாத அளவுக்கு அடிக்கணும். அவனை அடிக்கிற அடில, அவனோட மொத்தக் குடும்பமும் சிதைஞ்சி சின்னா பின்னமாகணும். முக்கியமா, அந்த நிசப்தி…” என்றவனின் குரல், இப்போது அழுத்தமாகவும் இறுக்கமாகவும் மாறியிருந்தது.

“விக்கி…” என்றவள், அந்தக் குரலில் மிரண்டுதான் போயிருந்தாள். அதைக் கவனித்தவன், “நத்திங்டா! நான் சொன்னது ஓகேதானே? உன் டாக்டர் ஃப்ரண்ட்கிட்ட சொல்லி, இந்த வீக் இங்க இருக்க ஏதோ ஒரு கோவில் இல்ல, சர்ச்ல வெட்டிங் அரேன்ஞ் பண்ண சொல்லு. கமல்கிட்ட இந்த வெட்டிங் பத்தி சொல்ல வேண்டாம். அன்ட் அங்க என்ன நடக்குதுனு அவன்கிட்ட கேட்கவும் வேண்டாம். பார்த்துக்கலாம், சரியா?” என்றான் விக்கி.

“அப்போ அங்க என்ன நடக்குது, என்ன செய்றாங்கனு நமக்கு எப்படித் தெரியும் விக்கி?” என ஸ்வாதி யோசனையாகக் கேட்க,

“அந்த விக்ரம் இன்னும் கமலை விட்டு வச்சிருப்பான்னு நீ நினைக்கிறியா? நிசப்தி மேல கை வச்சதுக்கே என்ன செஞ்சான்னு நமக்குத் தெரியும். இப்போ அந்த குழந்தை மேல கை வச்சிருக்கோம், சோ…” என நிறுத்தியவன், “கமல் அவன் கஷ்டடிக்கு போயிடுவான். என்னதான் ஃப்ரண்ட் என்றாலும், உயிர் பயம் வந்தா காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டான். அதனால அவன்கிட்ட இருக்க நம்ம சம்மந்தப்பட்ட எல்லா எவிடென்சையும் அழிச்சிடு.” என்று வரிசையாகச் சொல்ல, ஆச்சரியமாகப் பார்த்தாள் ஸ்வாதி.

அவள் பார்வையில், ‘என்ன’ என்று புருவம் உயர்த்த, “ம்ம்ஹூம்…” எனத் தலையசைத்தவள், “ரொம்ப பயந்துட்டேன் விக்கி, நீயும் நானும் இப்படி எல்லாம் இருப்போம் என்று, நான் கனவுல கூட யோசிச்சது இல்லை விக்கி. இந்த மாதிரியான மெமரிஸ் நம்ம லைஃப்ல நடக்காமலே போயிடும்னு நினைச்சிருந்தேன். அதெல்லாம் இப்போ நிஜத்துல நடக்கும் போது, ஐ கான்ட் பிலிவ் இட் விக்கி, தேங்க் யூ விக்கி, என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு… தேங்க் யூ விக்கி, என்னை அப்படியே நம்பி லவ் பண்றதுக்கு.” என உணர்ச்சிவசப்பட்டு, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு பேசியவளை, அவனும் இறுக்கமாகவேக் கட்டிக் கொண்டான்.

துரோகி, ராங்கி, அடவாடி, திமிர் பிடித்தவள் என்று எல்லோராலும் பேசப்பட்டவள், தன் கையில் குழந்தையாக உருமாறி இருப்பதை மனம் நிறைந்து உள்வாங்கிக் கொண்டிருந்தான் விக்னேஷ்.

***

இங்கு மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் மயக்கத்தில் இருந்தவளை, விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். வட்ட முகம் மிகவும் கலையிழந்து சோர்வாக இருக்க, உடல் மெலிந்து பார்க்கவே பஞ்சத்தில் அடிபட்டது போல் இருந்தாள்.

இங்கு வந்த ஒரு வாரத்திலேயே மெலிந்து விட்டாளே, அவ்வளவு மனக்கஷ்டமா என நினைத்தாலும், இதெல்லாம் அவளாக இழுத்துக் கொண்டதுதானே, தேவைதான் என்றும் நினைத்தான்.

இப்படி எதற்கெடுத்தாலும் வீம்பு பிடிப்பவளை எப்படி சரி செய்ய, என்ற யோசனையில் இருந்தவனை கதவு திறக்கும் சத்தம் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

சாருதான் வந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்து நொடி நேரம் தயங்கினாலும் அதை மறைத்து, “நான் சாரு, இங்கதான் டாக்டரா, பீடியாட்ரிஷியனா ப்ராக்டிஸ்ல இருக்கேன். நிசா என்னோட ஸ்கூல் மேட்.” என்றாள் அமைதியாக.

“ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவன், “தெரியும்.” என்றபடியே, மகளின் துயில் கலையாமல், அடுத்தப் பக்கம் தோளில் போட்டுக் கொண்டான்.

“நிசாவுக்கு என்ன நடந்தது, அவளுக்கு என்ன?” என்று கேட்ட சாருவை வித்தியாசமாக பார்த்தான் விக்ரம்.

அவன் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவள், ‘என்ன’ என்று பார்க்க, “நிசா உங்கிட்ட ஒன்னும் சொல்லலையா?” என்றான் விக்ரம்.

“இல்ல, அதைப்பத்தி மூச்சே விடல. நானும் எதுக்கு அவளைக் கஷ்டப்படுத்தணும்னு கேட்கல. ஆனா இப்போ தோனுது, கேட்டுருக்கணும், அவளைக் கட்டாயப்படுத்தியாவது கேட்டுருக்கணும்.” ஆதங்கமும் அழுகையுமாய் பேசியவளை வெற்றுப் பார்வை பார்த்தான் விக்ரம்.

“ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவன், “நான்… என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது. அவ வெறுத்து வேண்டாம்னு வந்த ஆள் நான். அவ்ளோதான் இப்போ சொல்லமுடியும். மீதியை அவளே வந்து சொல்லும் போது கேட்டுக்கோங்க.” என்றவன், எழுந்து நிசாவின் அருகில் சென்று நின்றான்.

“இந்த கஷ்டம் எல்லாம் என்னால மட்டும் தான், என்னோட முட்டாள் தனத்தால மட்டும் தான். நான் மட்டும்தான் இதை சரி செய்யவும் முடியும். அதுக்கு எனக்கு உங்க ஹெல்ப் கண்டிப்பா வேண்டும். இவ எழுந்து உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லும் போது, என் மேல இருக்குற மரியாதை மொத்தமும் குறைஞ்சு போயிடலாம். ஏன், என்னை கொல்ல கூடத் தோனலாம். ஆனா அதுக்காக எனக்கு உதவாம இருக்காதீங்க ப்ளீஸ். இவளை நான் பழையபடி மாத்தி எங்கம்மா முன்னாடி நிறுத்துறேன்னு சொல்லிருக்கேன்.” என விடாமல் பேசியவனைப் பார்த்து சாருவுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் முகத்திலேயே அது தெரிய, “சீக்கிரம் உங்களுக்குப் புரியும், தெரியும். அப்போ உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?” என்றவன் மெல்ல சிரித்தான்.

பின், “நான் இங்கதான் இருப்பேன், இருக்கேன்னு இவக்கிட்ட சொல்ல வேண்டாம். நான் இருக்கேன்னு தெரிஞ்சா, அவ இங்க இருந்தும் எங்கேயாச்சும் போயிடுவா.” என்றவனின் குழந்தை சிணுங்க ஆரம்பிக்க, சத்தமில்லாமல் குழந்தையைக் கொஞ்சி தட்டிக் கொடுத்தபடியே, நடக்க ஆரம்பித்தவனிடமே சாருவின் பார்வை இருந்தது.

‘இவன் என்னதான் சொல்ல வருகிறான்?’ சுத்தமாக புரியவில்லை பெண்ணுக்கு. ஆனால் நிசாவின் இந்த நிலைக்கு அவன் மட்டுமே காரணம் என்று புரிந்தது.

அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தவளிடம் வந்தவன், “நான் இங்க ஆப்போசிட்ல இருக்க ஹோட்டல்ல தான் ஸ்டே பண்ணிருக்கேன். பாப்பாவை நான் அங்க வச்சிருக்கேன். நிசா எழுந்ததும் சொல்லுங்க, கொண்டு வந்து கொடுக்குறேன்.” என நகர,

“சார் ஒரு நிமிசம்…” என்று நிறுத்தியவள், “நான் வீட்டுக்குப் போகணும், பையன் தேடுவான். ஒரு ஒன் அவர் நீங்க இங்க இருங்க, நான் போய்ட்டு வந்துடுறேன்.” எனவும்,

“ஓ… சாரி சாரி… நான் பாப்பாவுக்காகத்தான் சொன்னேன், நீங்க போய்ட்டு வாங்க.” என அனுப்பி வைத்தவன், அங்கிருந்த அட்டென்டர் பெட்டில் நல்ல வசதியாக குழந்தையைப் படுக்க வைத்து, அருகில் அமர்ந்து கொண்டவன் பார்வை, நிசப்தியைத் தொட்டு நின்றது.

சாருவும் உடனே கிளம்பிவிட்டாள். அவளுக்கு யோசிக்க நிறைய இருந்தது. அதோடு விக்ரமையும் அவன் சொன்னதையும் எந்தளவிற்கு நம்ப வேண்டும் என்றும் யோசிக்க வேண்டி இருக்க, அங்கிருக்க முடியாமல் குழந்தையை சாக்கிட்டு கிளம்பிவிட்டாள்.

அவள் வாழ்க்கைதான் தனியாக அமைந்து விட்டது என்றால், நிசாவிற்கும் அப்படித்தானா? யோசிக்கவே பாரமாகவும் பயமாகவும் இருந்தது. முதலில் குழந்தையைப் பார்ப்போம், பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்று யோசித்தபடியே, வீட்டை நோக்கி காரை செலுத்தினாள் சாரு.

தன் பார்வையில் இருந்த நிசப்தியைப் பார்த்து, ‘எப்படி இவளை சரி செய்ய?’ இதுவே அவனது சிந்தனையாக இருந்தது. குழந்தை விழித்து கேட்கும் முன், இவள் விழித்து விட வேண்டுமே என்ற வேண்டுதலும் சேர, அமைதியாக கண்மூடி அமர்ந்து கொண்டான்.

இப்போது அவன் சிந்தையில் ஸ்வாதி என்பவள் எங்குமே இல்லை. எப்போது அவனை ஏமாற்றுவதற்காகவும், நிசப்தியை பழி வாங்குவதற்காகவும் திருமணம் செய்தாள் என்பது தெரிந்ததோ, அப்போதே அவளைத் தூக்கி தூர எறிந்துவிட்டான். அவனது எண்னத்தில், செயலில் என எங்கேயும் ஸ்வாதி இல்லை.

ஆனால் அவனை நம்ப வைத்து ஏமாற்றியதையும், அவள் மேல் அவன் வைத்திருந்த காதலையும் அதற்காக பயன்படுத்திவிட்டாள் என்பதைத் தான், அவனால் மறக்க முடியவில்லை. ஒரு ஆணாகவும் ஒரு கணவனாகவும் வாழ்க்கையில் படு மோசமாக ஏமாந்து, தோற்றுப் போனான்.

புகழ் பெற்ற லாயர், யாராலும் எதிர்க்க முடியாத, வழக்கறிஞர்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கும், எதிரில் இருக்கும் ஒவ்வொருவரும் இவனது வாதத்திற்கும் பேச்சிற்கும் பயந்து பின்வாங்க, இவனோ ஒரு பெண்ணிடம் தோற்றுப் போயிருந்தான்.

அவன் தோற்றது கூட இப்போது பெரிதாக தோன்றவில்லை. இவன் பொருட்டு மற்றவர்கள், குறிப்பாக நிசப்தியைக் குறி வைத்து ஓட வைப்பது தான், அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நடந்த அனைத்திற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடித்தாலும், இதில் முற்று முதலாக பாதிக்கப்பட்டது நிசப்திதான்.

இனியும் அவளையும் குழந்தையையும் அவன் தனியாக விடப்போவதில்லை. என்ன ஆனாலும் அவர்கள் இனி தன் பார்வையின் கீழ் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றடிக்க, தலை வலிக்க ஆரம்பித்தது. ஒரு காபி குடித்தால் பரவாயில்லை என்றுத் தோன்ற, குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அங்கிருந்த கேன்டின் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***

“உஷா உனக்கு எவ்வளவு தூரம் எடுத்து சொன்னேன், அப்படி இருந்தும் மறுபடியும் நரேனைப் புரிஞ்சிக்காம பேசி கஷ்டப்படுத்திருக்கியே…?” என ஆற்றாமையாக அந்த சிஸ்டர் பேச, உஷாவிற்கு அவமானத்தில் முகம் கறுத்துப் போனது.

“நீயே உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிறனு சொல்லும் போது, நான் என்ன செய்ய முடியும்?” என்றவர் அறையை விட்டு வெளியில் சென்றுவிட, அவளுக்கே அவளைப் பிடிக்கவில்லை.

எப்படி நான் ஒரு சுயநலவாதியாக மாறிப் போனேன்? நிஷாவை நான் எப்படி எனக்கு போட்டியா நினைக்க ஆரம்பிச்சேன்? அவ எனக்கு செஞ்ச உதவிக்கு நான் பதிலுக்கு என்ன செஞ்சேன்? நானும் கழுகு போல அவளைக் கொத்தி குதற ஆரம்பிச்சிட்டேன். நான் இனி எப்படி இவங்க முகத்துல முழிப்பேன்? நரேன் என்னை மொத்தமா வெறுத்துட்டார். அதுதான் என் முகத்துலயே முழிக்காத, என்கூட பேசாதனு சொல்லிட்டார். இனி நான் யாருக்காக இருக்கணும்? எதற்காக இருக்கணும் என்று தன்னிரக்கம் சூழ, என்ன செய்கிறோம் என்ற ஸ்மரனையே இல்லாமல், அங்கிருந்த ப்ளக் பாயின்டில் கையை வைத்தவள் தூக்கி எறியப்பட்டாள்.

“ஹேய்! என்ன காரியம் பண்ற உஷா…” என அப்போதுதான் உள்ளே வந்த, அந்த சிஸ்டர் கத்திக்கொண்டே ஸ்விட்சை ஆஃப் செய்துவிட்டு அவளை இழுக்க, அதற்குள் அவரது சத்தத்தைக் கேட்டு மற்றவர்களும் வந்துவிட, சில நிமிடங்களில் அந்த இடமே களேபரமாக மாறிப்போனது.

மூச்சு, பேச்சு இல்லாமல் மயக்கத்தில் இருந்தவளை முதலுதவி செய்து, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த சிஸ்டரும் அப்போதே நரேனுக்கு அழைத்தும் சொல்லியிருந்தார்.

அடித்துப் பிடித்து ஓடி வந்தவன் மனைவியின் செயலில் அதிர்ந்து போய்விட்டான். என்னதான் வேண்டும் இவளுக்கு, ஏன் இப்படி, என பல கேள்விகள், பல யோசனைகள். அவளைப் பார்த்து கன்னம் கன்னமாக அறைய வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், இருக்கும் இடமும் தற்போதைய சூழலும் அவனைக் கட்டிப்போட, அமைதியாகவே இருந்தான்.

தனக்கு ஒன்று என்றதும் ஓடி வந்தவனை, எப்படியான வார்த்தைகளைக் கூறி காயப்படுத்தி விட்டோம் என்று, உஷாவிற்கும் குற்றவுணர்ச்சி ஏற்பட, இவளும் அமைதியாகவே இருக்க, ஆனால் காலம் அமைதியாக இருக்குமா?

ஒரே அறைக்குள் இருந்தாலும் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்க, உள்ளே வந்த சிஸ்டர் இருவரையும் வறுத்து எடுத்துவிட்டார்.

“நரேன் இனி உங்க மனைவி இங்க இருக்க வேண்டாம். இங்க இருக்குற ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்தம்னு யாரும் கிடையாது. ஆனா அவங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் துளி கூட நாங்க வர விட்டது இல்லை. அதுக்கு காரணம் அவங்களை நாங்க தன்னம்பிக்கையும் தைரியமும் கொடுத்து வளர்க்குறோம். இப்படி இருக்க இடத்துல, உஷா செய்த இந்த செயலை மத்தவங்களும் பழகினா… நோ! யோசிக்கவே முடியல.

யாரும் இல்லாம இருக்குறது வேற, இருந்தும் இல்லாம இருக்குறது வேற. அவளுக்கு நீங்க இருக்கீங்க. நல்லதோ, கெட்டதோ இனி நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அவளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உனக்குத்தான் இருக்கு.” என இருவரையும் வார்த்தைகளால் விளாச கணவன், மனைவி இருவராலும் பதில் பேச முடியவில்லை.

இருவரின் அமைதியையும் பார்த்தவர், “நரேன்…” என அவர் அழைக்க, “எஸ் மேம், நான் அழைச்சிட்டு போறேன். இனி இப்படி ஆகாம பார்த்துக்குறேன். அவ மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது இல்லையா? நானும் அவளைக் கவனிச்சிருக்கணும், விட்டுட்டேன். இனி இப்படி ஆகாது.” என்றவனின் குரலில் குற்றவுணர்ச்சி.

அந்தக் குரலும் அது உணர்த்திய உணர்வும், உஷாவை மேலும் மேலும் குற்றவுணர்ச்சியில் தள்ள, இந்த நிலையில் அவனோடு போய் இருப்பது நிச்சயம் முடியாது என்று தோன்ற, “நான் எங்கேயும் வரல.” என்றாள் பட்டென்று.

அதில் விழுக்கென்று நிமிர்ந்தவன், “வரலன்னா வேற எங்க போகப் போற?” எனக் காட்டமாகக் கேட்டவனிடம்,

“இல்ல, நான்… நான் கொஞ்ச நாள் தனியா ஒரு வேலைத் தேடி, அப்புறம் அங்க வரேன்.” என சொல்ல வந்ததை பிச்சு பிச்சு சொல்ல, “ஷிட்!” என்றவன், தன் கோபத்தையெல்லாம் அடக்கி ஆயாசமாக சிஸ்டரை பார்க்க, அவருக்கும் உஷாவை நினைத்து ஆயாசமாகத்தான் இருந்தது.

இருந்தும் அதை வெளிக்காட்டாமல், “என்ன சொல்ற, தெளிவா சொல்லு.” என கண்டிப்பாகக் கேட்க, “இருக்கட்டும் மேம், அவ என்ன முடிவு எடுத்தாலும், என்னையும் யோசிச்சு எடுக்க சொல்லுங்க, அது போதும். நீங்க பேசிட்டு சொல்லுங்க, நான் வரேன்.” என நரேன் கிளம்பிவிட்டான்.

அவனுக்கு அங்கு இருக்க முடியவில்லை. எங்கே மீண்டும் அவள் கிறுக்குத்தனமாகப் பேசி, அதைக் கேட்டு அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் போய்விடுமோ என்று, பயந்தே அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

நரேன் கிளம்பவுமே உஷா வாய்விட்டு அழ, “என்னதான் பிரச்சனை உஷா? நீ முட்டாள் கிடையாது. இது உன்னோட வாழ்க்கை மட்டும் இல்ல, நரேன் வாழ்க்கையும் தான்.” எனக் கோபத்தில் கேட்க,

அதுவரை தன் மனதில் இருந்தவற்றைக் கூறியவள், “நான் கொஞ்ச நாள் தனியா இருக்கேன், அப்போதான் எனக்கும் இந்த வாழ்க்கைல பிடிப்பும் நம்பிக்கையும் வரும். அதோட அவரும் எந்த உறுத்தலும் இல்லாம என்னை ஏத்துக்குவார்.” என்று முடித்துவிட, அவருக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும், நரேனுக்காக சரியென்றார்.

அடுத்து நடந்த அனைத்தும் மின்னல் வேகம் தான். நரேனுக்கு அழைத்து சொன்னவர், உஷாவின் தந்தையை வரவைத்து, மீண்டும் ஒருமுறை அவரை மிரட்டி உஷாவை அவருடன் அனுப்பி வைத்தார்.

சென்னைக்கு வந்தவளும் தனக்கு தெரிந்த நண்பன் மூலம், ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 15, 2026 - 6:11 pm

அட ராமா..! இந்த உஷாவுக்கு என்ன தான் வேண்டும்ன்னு தெரியலையே…?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured