19
இங்கே வீட்டிற்கு வந்த புகழ் தன் அன்னையை அணைத்துக்கொள்ள, “போடா, இப்போதான் இந்த அம்மாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சதா?” என முறுக்கிக்கொள்ள,
“ம்மா… உங்களுக்கேத் தெரியும், வொர்க் அதிகம். யுஎஸ் போறதுக்கான வேலையை வேற பார்த்துட்டு இருக்கேன். எப்படியும் போக முன்னாடி வந்து உங்ககூட ஒன் வீக் இருக்குற மாதிரிதான் ப்ளான். அதுக்குள்ள வர வச்சிட்டீங்க, இப்போ அந்த ப்ளான் ஃப்ளாப்.” என சிரித்தபடியே தாயை வம்பிழுக்க,
“ம்ச் போடா…” என அவன் தோளில் தட்டியவர், “சரியா சாப்பிட மாட்டியா தம்பி? பாரு, எப்படி மெலிஞ்சி போயிட்ட…?” என்றார் அவனது கன்னத்தை வருடியபடி.
“ஏன் வசு, இந்த அம்மாக்களோட கண்ணுக்கு மட்டும் எப்படி பிள்ளைகளை, ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்தா இளச்ச மாதிரி தெரியுது? நல்லா பாரு, உன் பையன் ஒரு சுத்து குண்டாகிட்டான், ஜிம் கூட போறதில்ல…” என சிவகுருவும் மனைவியை வம்பிழுக்க,
“நீங்க சும்மா போங்க, என் பையன் மேல கண்ணு வைக்காம…” என கணவரை கடிந்தவர், “நீ போய் குளிச்சிட்டு வா தம்பி, சாப்பிடலாம். நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று கிட்சன் செல்ல,
“சரிம்மா.” தனது அறைக்குச் சென்று, குளித்துவிட்டு வந்தவன் நினைவில் வந்தாள் அவனது சாரு.
“மிஸ் யூ பேபி!” என்று சொல்லிக்கொண்டவன், போனை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
கோவிலுக்கு சென்று அப்போதுதான் வீட்டிற்கு வந்த சாருவின் போன் ஒலிக்க ஆரம்பிக்க, எடுத்து பார்த்தவளின் முகம் தானாக ஒரு புன்னகையை தத்தெடுத்தது.
“சொல்லுங்கப்பா, வீட்டுக்கு போயிட்டீங்களா? எல்லாரும் நல்லா இருக்காங்களா? அத்தை என்ன சொன்னாங்க? மாமா ஓகேவா?” என்றவளிடம்,
“இப்போதான் வந்தேன் பேபி. எல்லாரும் நல்லா இருக்காங்க. க்ளாஸ் எப்பிடி போச்சு?” எனவும்,
“மெசேஜ் போட்டேன்ப்பா உங்களுக்கு. இன்னைக்கு போகலப்பா, க்ளாஸ்ல கான்சென்ரேட் பண்ண முடியும்னு தோனல. அதனால நானும் ஜெயாம்மாவும் இஸ்கான் டெம்பிள் போயிட்டு வந்தோம், சாரிப்பா!” என்றவளின் குரல் இறங்கிப்போனது.
“ம்ம்ம்… இட்ஸ் ஓகே பேபி. மெசேஜ் பார்க்கல, இனி காலேஜ் லீவ் போடக்கூடாது, ரைட்!? நான் டூ டேஸ்ல வந்துடுவேன். கவனமா இருக்கணும், சாப்பிடணும், அழக்கூடாது ஓகே?” என்று சமாதானம் செய்ய,
“இல்ல, இனி லீவ் எடுக்கமாட்டேன், ப்ராமிஸ்! சாரிப்பா… கோபம் இல்லையே?” என்றவளின் குரலில் இருந்த வருத்தம் அவனை அசைக்க,
“சரி விடு, சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நாளைக்கு காலேஜ் போகனுமில்ல…” என்றவன், அவளை ஒருவழியாக சமாதானம் செய்து, போனை வைத்துவிட்டு கீழே வந்தவன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெற்றோருடன் சேர்ந்து சாப்பிட்டான்.
உடல் இங்கிருந்தாலும் அவனது மனதில் அங்கே அவள் என்ன செய்கிறாளோ என்று தவிப்பாகவே இருக்க, பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டான்.
“ஏன் தம்பி பாதியிலேயே எழுந்துட்ட?” என்ற தாயின் கேள்விக்கு,
“இல்லம்மா போதும், நைட் ஹெவியா வேண்டாம்.” என்றவனை ஆழ்ந்து பார்த்தார் தந்தை. மகனின் நிலை சிவகுருவுக்கு புரிந்தது, சிரித்துக் கொண்டார்.
சாப்பிட்டு தன்னறைக்கு வந்த சாருவுக்கு தன்னவன் நினைவாக இருந்தது.
அவளது தாத்தா இறந்த பிறகு தனியாக இருப்பது இதுவே முதல் முறை. தனது அறையில் இருந்தவளுக்கு மூச்சு முட்டுவதைப்போல் இருக்க, அங்கிருந்து எழுந்து புகழின் அறைக்குள் வந்தாள். அந்த அறை முழுவதும் அவனின் வாசம் நிறைந்திருந்தது. ஆழ மூச்செடுத்து தனக்குள் நிரப்பிக்கொண்டவளுக்கு, அவன் அருகிலே இருப்பதாக தோன்ற அவன் பெட்டிலேயே படுத்துவிட்டாள்.
இங்கு தனதறைக்கு வந்த புகழின் மனமும் தன்னவளைத்தான் அசை போட ஆரம்பித்தது. என்ன முயன்றும் அவள் எண்ணத்தில் இருந்து அவனால் வெளிவர முடியாமல் போக, உடனே அவளை வீடியோ காலில் அழைத்தான். போனை எடுத்த சாருவும் தூக்க கலக்கத்திலேயே, “ஹலோ!” என்றாள்.
“பேபி என்னாச்சுடா, தூங்கிட்டியா?” என்றவன் அறையைப் பார்க்க, அவள் தனது அறையில் படுத்திருப்பது புரிந்தது. அவள் தன்னை தேடுகிறாள் என்று அவனுக்கு விளங்க, “பேபிமா… என்னை தேடுனியாடி?” என குழைய,
“ஆமாப்பா, எப்போ வர்றீங்க?” என்றாள் சடைவாகவே.
“ம்ம்… எனக்கும் அங்க வரணும் போல இருக்குதான், அம்மா ரெண்டு நாள் இங்கேயே இருந்திட்டு போக சொல்றாங்க அம்மு. முடிஞ்சளவுக்கு நான் சீக்கிரம் வர பார்க்குறேன். அதுவரை நீ டல்லடிக்காம, காலேஜ் போய்ட்டு வா. நான் வந்ததும் டூ டேய்ஸ் அவுட்டிங் போகலாம்.” எனவும்,
“நிஜமாவா புகழ்? ஹேய் சூப்பர்ப்பா!” என குதூகலித்தவள், சிறிது நேரம் பேசிவிட்டு அதே மனநிலையில் போனை வைத்தாள்.
மறுநாள் காலை சாப்பிடும்போது புகழ் உம்மென்று இருக்க, அதைப் பார்த்த வசந்தா, “புகழ் இப்போ எதுக்கு முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க? சரி, உன்னோட கல்யாணத்தை பற்றி நான் இப்போ பேசலை, சரியா? அதுக்காக சாப்பாட்டை குறைக்காத, சாப்பிடு தம்பி.” என்ற பின்னர்தான், முகம் இயல்பானது அவனுக்கு. அவனருகே நின்று பார்த்து பார்த்து உணவை பரிமாறியபடி இருந்தார் வசந்தா.
அந்தநேரம் புகழின் போனுக்கு ஒரு மெசேஜ் வர, ஸ்க்ரீனில் பேபி என்று இருக்க, அதைப் பார்த்ததும் வசந்தா புருவம் சுருக்கினாலும் எதுவும் பேசவில்லை.
இங்கே சாருவுக்கு புகழை விட்டு பிரிந்திருப்பது கடினமாக இருந்தது. அடுத்தநாளும் கல்லூரிக்கு கிளம்ப மனமில்லைதான். ஆனாலும் அவன் வருந்துவான் என்று சென்றிருந்தாள்.
ஏனோதானோவென்று அந்தநாள் கழிய, இரவில் அவனது அறையில் கணவனின் சட்டை ஒன்றை அணிந்துகொள்ள, அதன்பிறகே அவள் மனம் சற்று சமாதானம் அடைய, அப்படியே தூங்கிப் போனாள்.
இப்படியாக அடுத்த நாளும் கழிய, தனது பெற்றோருடன் புகழ் இருந்தாலும், சாருவின் நினைவு அவனை மிகவும் வாட்டியது. இதில் வசந்தா வேறு இன்னும் இரண்டு நாட்கள் இருக்குமாறு கூற, அதை புகழால் மீறவும் முடியவில்லை. அதை சாருவிடம் சொல்ல, சிறு அமைதிக்குப்பின் அவளும் இருந்து வருமாறு கூறிவிட, புகழ்தான் தவித்துப் போனான்.
இரண்டு நாட்கள் ஒருவாரம் என்றாகிவிட, அடுத்த நாள் காலையிலையே புகழ் தனது பையோடு கீழே வந்தான். இவ்வளவு நேரத்தோடு வந்த மகனைப் புரியாத பார்வை பார்த்தார் வசந்தா.
தாயின் பார்வையை உணர்ந்தவன் அவர் அருகில் சென்று, “அம்மா, எனக்கு ஹாஸ்பிடல்ல இருந்து போன் வந்தது. எமெர்ஜென்சினு சீஃப் கால் பண்ணார், என்னோட ரெசெர்ச் பத்தின டீடைல்ஸ் கொடுக்கணும், அதனால நான் கண்டிப்பா போகணும் ம்மா… ப்ளீஸ்…” என்று பாவமாக கேட்க,
இதைக் கேட்ட வசந்தா, “என்ன தம்பி இப்பிடி சொல்ற? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, ஒரு வாரம் இருந்திட்டு போவன்னு நினைச்சா, இப்பிடி கிளம்புற? அம்மா கூட ஒரு வாரம் இருந்திட்டு போ கண்ணா.” என்றார் அவரும் பாவமாக.
தாயின் நிலை அவனுக்கும் புரியத்தான் செய்தது. அதே நேரத்தில் தன்னை மட்டுமே நினைத்து, வெளியில் சிரித்து, உள்ளே அழுது தவிக்கும் தன்னவளைப் பார்க்க, அவன் உள்ளம் துடித்தது. தந்தையின் புறம் திரும்பி தாய் அறியாது கண்களால் பேச, அவனது பார்வை புரிந்த சிவகுரு மகனுக்கு உதவிக்கு வந்தார்.
“வசும்மா, தம்பிக்கு இருக்கணும்னு நினைச்சாலும், அவனோட வேலை அப்படி இல்லையே. இப்போ புகழ் ஹாஸ்பிடல்ல இருந்து போன் வந்திருக்குனு சொல்றான்லமா, ஏதாவது முக்கியமானதாக இருக்கும். இல்லன்னா அவனோட சீஃபே கால் பண்ணிருக்க மாட்டார்ல… அவன் போயிட்டு வரட்டும், எல்லாம் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சதும் வந்து இங்க இருக்கட்டும்.” என மனைவியை சமாதானம் செய்ய,
“ம்ச்! நீங்களும் இப்படியே சொல்லுங்க, எப்போதான் ரெண்டு பேரும் என்னை புரிஞ்சிக்க போறீங்களோ? என்னவோ பண்ணுங்க, இனி நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டீங்க. சரி புகழ், நீ பத்திரமா போயிட்டு வா. பெங்களூர் போயிட்டு அம்மாக்கு போன் பண்ணு. டைமுக்கு சாப்பிடு. நீங்க புகழை ஏர்போர்ட்ல விட்டுட்டு வாங்க.” என வசந்தா கோபமும் சலிப்புமாக விடை கொடுக்க,
“ம்மா சாரி… சாரிம்மா… நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா இங்க இருக்குற மாதிரியே வரேன்.” என்றவன், தாயை அணைத்துவிட்டு தந்தையுடன் கிளம்பினான்.
காரில் ஏறியதும் இத்தனை நேரம் தாயிடம் மறைத்து வைத்த தவிப்பு, அவனது முகத்தில் தாண்டவமாடியது. மகனது முகத்தைப் பார்த்த சிவகுரு, “புகழ் எல்லாம் ஓகே தானே?” என்றார் மகனின் தவிப்பை உணர்ந்தவாறு.
“நோ டாட், எதுவும் ஓகே இல்லை. சாரு ஓகே இல்லை டாட், சம்திங் கோயிங் ஆன்.” என்றான் பதட்டமாக.
“என்ன சொல்ற? சாருவுக்கு என்னாச்சு? சொல்லு புகழ், ஏன் அமைதியாக இருக்க?” என்றார் அவரும் பதட்டமாகவே.
“டேட் காலையில ஜெயாம்மா போன் பண்ணியிருந்தாங்க. ரெண்டு நாளாக சரியா சாப்பிடலையாம், ரூமுக்குள்ளே அழுதுட்டு இருந்திருக்கா. இப்போ காய்ச்சலா இருக்காம், ஹாஸ்பிடலுக்கு போகலாம்னு சொன்னப்போ முடியாதுனு சொன்னதும், ஜெயாம்மா டாக்டரை வீட்டுக்கு கூப்பிட்டு பார்த்திருக்கிறாங்க. மாத்திரை போட முடியாதுனு சொல்லிட்டு இருக்கிறா உங்க மருமக…” என்றான் கொஞ்சம் கோபமாக.
“புகழ் அவளோட தாத்தா இறந்ததுக்கு பிறகு நீ அவ கூடவே இருந்திருக்க. முதல் தடவை நீ அவளை தனியா விட்டுட்டு இருக்க, அதை மருமகளால தாங்கிக்க முடியலை போலடா. நீ இங்க கத்தினமாதிரி அவகிட்டயும் கத்தாத. பொறுமையா சொல்லு, புரிஞ்சிப்பா. சாருவை பத்திரமா பார்த்துக்கணும் தம்பி.” என்றவர், மகனுக்கு மேலும் சில அறிவுரை அளித்து வழியனுப்பி வைத்தார்.
பயண நேரத்தை நெட்டி தள்ளுவது பெரும்பாடாகிப் போனது புகழுக்கு. இந்த ஒரு வாரத்திற்கே இப்படியென்றால், இனி அவன் யுஎஸ் செல்லும் இரண்டாண்டுகள் எப்படி தனியே சமாளிப்பாள். மனம் நொடியில் நூறு விதமான கேள்விகளும் பதில்களுமாக குழம்பித் தவித்தது.
‘ஒரு டாக்டரா இருந்துகிட்டு எப்படி உடம்பை கெடுத்து வச்சிருக்கா?’ என அதற்கும் மனதுக்குள் அவளைத் திட்டி தீர்த்தபடியே ஃப்ளைட்டில் இருந்து இறங்கினான்.
இங்கு தன்னவன் அறையில் பெட்சீட்டால் உடலை முழுவதுமாக மூடிக்கொண்டு படுத்திருந்தாள் சாரு.
கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் காதோரம் சென்றது. அவளது பார்வையோ சுவற்றில் மாட்டி இருந்த புகழின் புகைப்படத்தை இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தது.
ஃப்ளாட்டுக்கு வந்த புகழை வரவேற்றது ஜெயாம்மாதான். அவரருகில் வந்தவன், “ஜெயாம்மா சாரு எங்க? இப்போ எப்படி இருக்கா?” என கேள்விகளைக் கேட்டுக் கொண்டே சென்றவனைப் பார்த்தவர்,
“தம்பி, பாப்பா உங்க ரூமில்தான் படுத்திருக்கு, அழுதிட்டே இருக்கு. அதை பார்க்கும் போது மனசு கேட்கல, அதுதான் உங்களுக்கு போன் போட்டேன். நான் போன் போட்டது பாப்பாக்கு தெரியாது. உங்களுக்கு சொல்லக்கூடாதுனு சொல்லுச்சு.” என்றார் பதட்டமாக.
“சரி ஜெயாம்மா, நான் எதுவும் சொல்லல. இப்போ போய் சாருவை பார்க்குறேன். எனக்கு ஒரு காஃபி மட்டும் கொடுங்க.” என்றவன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
“தம்பி ஒரு நிமிசம், எங்க பொண்ணு வீட்டுல கொஞ்சநாளா பிரச்சனை தம்பி. அவ நேத்து போன் போட்டு ஒரே அழுகை. நான் ஊருக்கு போயிட்டு ரெண்டு நாள்ல வந்திடுறன் தம்பி, தப்பா எடுத்துக்காதீங்க.” எனவும்,
“சரி ஜெயாம்மா, செலவுக்கு பணம் ஏதும் வேணுமா?” என்று பணத்தை எடுக்க,
“அதெல்லாம் இருக்கு தம்பி, பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க.” என்றவர் அங்கிருந்து கிளம்பிவிட, அவர் சென்றதும் தன் அறை நோக்கி வேகமாக சென்றான்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க சாரு, ஜெயா வருவதாக நினைத்து, “எனக்கு சாப்பாடு வேண்டாம் ஜெயாம்மா, எனக்கு பசியில்லை.” என்றாள் எரிச்சலாக.
அவள் கூறியதைக் கேட்டவாறு உள்ளே வந்தவன், மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்து, தன்னவள் நெற்றியில் கையை வைக்க, சட்டென்று திரும்பிய சாரு தனக்கு மிக அருகே இருக்கும் புகழ் முகத்தைப் பார்த்து விழிகளை விரிக்க, சட்டென்று பெருகிய கண்ணீரை ஒரு கையால் துடைத்துவிட்டு அதிர்ச்சியாய் பார்த்தாள்.
இருவரும் எதுவும் பேசவில்லை. சில நிமிடங்கள் அந்த இடத்தை மௌனமே ஆட்சி செய்ய, விழிகள் நான்கும் பேசிக் கொண்டன.
“பேபி!” என்று தன் இரு கைகளிலும் அவளை அள்ளி அனைத்துக்கொள்ள, அவளும் கணவனின் மார்பில் ஒரு கேவலுடன் தஞ்சம் அடைந்திருந்தாள்.
தன் அணைப்புக்குள் அழுகையில் குலுங்கியவளின் உச்சியில் எண்ணிலடங்கா முத்தங்களைக் கொடுத்தவன் இடையிடையே, “சாரி பேபி… உன்னை தனியாக விட்டுட்டு நான் போயிருக்க கூடாது. என்னால்தான் உனக்கு ஃபீவர். ஏன்டி இப்பிடி சாப்பிடாம அழுதிட்டு இருக்க? சாரி பேபி…” என்று கோபமும் ஆற்றாமையாகவும் கேட்டவனுக்கு பதில் கூறாது, மேலும் அவனுக்குள் புதைந்து கொண்டாள் சாரு.
***