20
அமெரிக்காவின் உறைபனி காலமது. வீட்டிலிருந்து சன்னல் வழியே வெளியே பார்த்திருந்தான் புகழ். சுற்றிலும் வெண்பனி நிறைந்திருக்க இன்னமும் பூந்தூரலாய் பனிச்சாரல் பெய்து கொண்டிருந்தது. அங்கு உறைந்திருந்த உறைபனி போல் தான், இப்போது அவனவளும் அவன் நெஞ்சினில் உறைந்து போயிருக்கிறாள்.
அவள் மீது கொண்ட காதல் பனியாய் இறுகி போயிருக்கிறது. அவளைக் குறித்தான அவனின் ஏக்கம் மேலும் மேலும் வளர்ந்து, பெரும் பாரமாய் பனிச்சிகரமாய் வளர்ந்து நிற்கிறது.
எவ்வளவு வேலை இருந்தாலும் மனம் மட்டும் அவளையே தான் சுற்றி வருகிறது. அவனின் உடல் மட்டுமே இங்கிருந்தது, அவன் உயிர் மொத்தமும் பெங்களூரில் தான். தன்னவளைப் பற்றிய எண்ணம் அதிகம் இழையோடியது அன்று. வேலையும் பெரிதாய் அன்றில்லை, இந்நேரம் அவளை அழைக்கவும் முடியாது, நள்ளிரவு நேரம் அவளுக்கு.
ஆயிற்று, அவன் மனம் கவர்ந்தவளை தனியே இருக்கவிட்டு, அவன் இங்கு வந்து எட்டு மாதங்கள் ஓடிவிட்டது. இடையில் கூட அவனால் இந்தியாவிற்கு செல்ல முடியவில்லை. ஒரு வருடமாவது கடந்திருந்தால் மட்டுமே அவனால் இந்தியா செல்ல இயலும்.
அன்று சென்னைக்கு சென்று வந்த பிரிவையே தாங்க முடியாது உடல் சுரம் கண்டிருந்தவள், இதோ எட்டு மாதமாய் அங்கிருப்பவனை விட்டு எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
அன்றைய நிகழ்வுகள் மீண்டும் அவன் கண் முன்னே ஓடியது. தன்னை இறுக்கி அணைத்து அவன் மார்பிலேயே ஒன்றினாளே… எங்கே அவளை விட்டு அவன் சென்று விடுவானோ என்பது போன்ற அணைப்பு தான். இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்த்தது அவனுக்கு. அவள் அருகாமை வேண்டும் என்றும் தோன்ற வைத்தது.
***
“சாரும்மா…” என்றான் மென்னழைப்பாய்.
அவள் பதிலேதும் சொன்னாள் தானே… மேலும் மேலும் அவளின் அணைப்பு இறுக மெல்ல அவளை, தன்னில் இருந்து பிரித்தவன் அவள் கண்களை ஆழ நோக்கினான்.
“என்னை பாருடி…” என்றவன், அவள் தாடை பற்றி தன்னை நோக்க வைத்தான். ஆனாலும் முரண்டு பிடித்து தலை கவிழ்ந்தாள் அவள்.
“சாரு!” என்றான் அழுத்தமாய். அவனின் வித்தியாசமான அழைப்பில் தன்னைப் போல நிமிர்ந்து மிரட்சியாய் பார்த்தாள் அவனை. அதில் மனம் சற்றே இளகிய போதும், அதை வெளிக்காட்டாது அவளையே பார்த்தான்.
“நான் என்ன செய்யணும் சாரு?”
அவன் பேச்சில் புரியாது குழப்பமாய் ஏறிட்டாள் அவனை. “சொல்லு, நான் இப்போ என்ன செய்யணும்?”
“புரியலைப்பா எனக்கு.”
“நீ சின்ன குழந்தை இல்லை சாரும்மா. நான் சென்னைக்கு ஒரு வாரம் போயிட்டு வந்ததுக்கே இப்படின்னா, நான் அமெரிக்காக்கு இரண்டு வருஷம் போகணும். அப்போ என்ன செய்யப் போற, சொல்லு சாரு.”
“நீ இப்படித்தான் இருப்பன்னா உன்னை விட்டு கண்டிப்பா என்னால எங்கயும் போக முடியாது. நம்ம ரெண்டு பேரும் நம்மை படிப்பை மூட்டைக்கட்டி வச்சுட்டு, நம்ம குடும்ப வாழ்க்கையை தொடங்கலாம்.” என்றவனை. ‘பே’ என்று பார்த்தாள் அவள்.
“பின்ன என்ன தான்டி செய்யணும் நான்? நீ இப்படி இருக்கிறதை என்னால எப்படிடி பார்த்திட்டு சும்மா இருக்க முடியும்? உன்னை வருத்தப்பட வைக்கவா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? உன்னை என் கூடவே இப்போ வச்சுக்கணும்னு ஏன் நினைச்சேன்? போடி… நீ உன்னோட பெத்தவங்க, உன் தாத்தா, பாட்டி, மாமா அத்தைனு யார் ஆசையும் நிறைவேத்த போறதில்லை, உன்னால நானும்…” என்று, அவன் முடிக்கும் முன்னே, அவன் வாயைத் தன் கை கொண்டு பொத்தினாள்.
அவன் சொல்வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. சிறு வயதில் இருந்தே அவள் தன் பிரியமானவர்களைப் பிரிந்து தானே இருந்திருக்கிறாள். இப்போது மட்டும் ஏன் இப்படி என்று யோசித்தவள், தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டாள்.
அவளுக்கு புரிய வேண்டும் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்வது புரியாமல் தான் போகுமா அவளுக்கு?! கட்டிலில் இருந்து எழுந்த புகழ் வேறு ஒன்றும் பேசவில்லை. அவன் எப்போதும் வைத்திருக்கும் மெடிக்கல் கிட்டில் இருந்து மாத்திரையை எடுத்து வந்தவன், தண்ணீர் பாட்டிலையும் அவளிடம் நீட்டினான்.
“முதல்ல உங்ககிட்ட பேசிடுறேன்.” என்றாள் அதை வாங்காது. அவனோ நீ, நான் சொல்வதை செய்தால் தான் வேறு எதுவும் என்பது போல், அழுத்தமாய் நீட்டிய வாக்கிலேயே இருக்க, மூஞ்சை சுருக்கி சிணுங்கியவாறே அதை வாங்கி விழுங்கினாள். உடன் அவனை நோக்கி ஒரு பார்வை வேறு, ‘இப்போ சந்தோஷமா?’ என்பது போல். அதில் அவனுக்கு மெல்ல சிரிப்பு எட்டிப் பார்த்தாலும், அவளறியாமல் அதை மறைத்துக் கொண்டான்.
“சொல்லு சாரும்மா, நான் சொன்னது…” என்று மீண்டும் ஆரம்பித்தவனை, “புரியுதுப்பா, ஆனாலும்…
இல்லைப்பா, நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு நீங்க எப்பவும் என்கூடவே இருக்கணும் தான். அதுக்காக நம்மை பெத்தவங்களோட ஆசையும் நம்மோட ஆசையும் சேர்த்து புதைச்சுட்டு, நாம சந்தோசமா இருந்தா போதும்னு நான் நினைக்கல.
இந்த பிரிவு எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு. தாங்கிக்கவே முடியாததா தான் இருந்துச்சு. நான் சரியாகிடுவேன், இப்போ தான் பழகிட்டேன்ல… நீங்க மேல படிங்க, நா… நான் கண்டிப்பா தனியா இருந்துக்குவேன். எங்க வீட்டாளுங்க ஆசைப்படி என்னோட படிப்பையும் நான் முடிப்பேன்பா.” என்று ஒருவாறு அவன் எதிர்பார்த்த பதிலை அவள் சொல்லி முடிக்க, மெச்சுதலான பார்வை அவனிடத்தில்.
“தட்ஸ் மை கேர்ள்!” என்று அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான். ஊரில் இருந்து கிளம்பிய போது வெகுவாய் அவளைக் குறித்தான கவலைதான் அவனுக்கு. எப்படி அவளை தனியே விட்டு அமெரிக்கா செல்லப் போகிறோம் என்ற யோசனையும் சேர்ந்தே வந்தது.
வீட்டிற்கு வந்து அவள் நிலை கண்டதும் துடித்துதான் போனான். இப்படியே இவளை விட்டால் அவள் படிக்கவும் மாட்டாள், தன்னையே சார்ந்துதான் இருப்பாள். அவளை தனியே விட்டு போகவா, வேண்டாமா என்று குழம்பி இருந்தவன், நொடியில் முடிவெடுத்தான் உறுதியாக தான் வெளிநாடு செல்வது என்று.
எப்போதும் யாராவது அவளை அரவணைத்துக் கொண்டே இருப்பதாக தோன்றியது. முதலில் அம்மா, அப்பா பின் தாத்தா, பாட்டி, மாமா, அவர்களுக்கு பின் இதோ இந்த நொடி வரை அவன்.
அவள் தனியாய் தன்னைத் தானே காத்துக்கொள்ள வேண்டாமா? தைரியமாக இருக்க வேண்டாமா? அவன் பிள்ளைகளின் தாய் தன்னிச்சையாய் செயல்படுபவளாய் தானே இருக்க வேண்டும். இதோ, இந்த நிமிடம் அவளை அவள் வாயாலயே சொல்ல வைத்து விட்டானே!
அடுத்த இரு வாரங்களில் அவன் அமெரிக்கப் பயணத்திற்கு தேவையான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிக்க, உள்ளூர வருத்தம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாது வளைய வந்தாள் பெண்.
அடுத்த இரண்டு மாதத்திற்கு பின் அவன் கிளம்புவதாய் இருக்க, இதோ அதொவென்று அந்நாளும் நெருங்கி வந்தது. வசந்தாவோ மகனை தன் கண் பார்வையிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டார்.
அன்று காலையிலேயே மகனுக்கு அழைத்துவிட்டார். “என்னம்மா?” என்றவாறே தூங்கி எழுந்திருந்தான் மகன். அலைபேசியின் சத்தத்தில் அடுத்த அறையில் இருந்தவளும் எழுந்து வந்திருந்தாள் என்னவோ ஏதோவென்று.
“கண்ணா நீ எப்போ இங்க வர்ற? இன்னும் ஒரு மாசத்துல அமெரிக்கா கிளம்பிடுவ…” என்றவரின் குரலே சரியில்லாமல் போக, மகனுக்கும் வருத்தம். ஆனாலும் இங்கிருக்கும் வரை சாருவுடன் இருக்க பிரியப்பட்டவன், மகனாய் தாயைக் குறித்தும் யோசிக்க செய்தான்.
“உன்னால முடியலைன்னா அம்மாவும் அப்பாவும் அங்க வந்து ஒரு மாசம் இருக்கோம்பா, நீ ஊருக்கு போகுற வரை.” என்று சொல்லவும்,
“அதெல்லாம் வேண்டாம்மா, நானே அங்க இருந்துதான் ஃப்ளைட் ஏறப் போறேன். சோ, நானே அங்க வர்றேன்மா. என் செல்ல அம்மால்ல… ஒரு பத்து நாள் பொறுத்துப்பீங்களாம், இங்க கொஞ்சம் வேலை இருக்கு. அதெல்லாம் முடிச்சுட்டு நான் அங்க வருவேனாம்.” என்று சொன்னவன் அறை வாசலை நிமிர்ந்து பார்க்க, அங்கு அவன் மனைவி சோக சித்திரமாய் நின்றிருந்தாள் அவன் பேச்சைக் கேட்டு.
ஒரு வழியாய் அம்மாவை சமாதானம் செய்தவன், இதோ அடுத்து மனைவியை மலையிறக்க அவள் பின்னாலேயே சென்றான். “சாரும்மா…” என்றவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொள்ள, அவளோ அசையாது நின்றிருந்தாள்.
“என்னால முடியலை சாரும்மா, நான் ஊருக்கு போகும் போது நீயும் என்னோட வா. நான் அம்மாகிட்ட எல்லாம் சொல்லிடலாம்னு இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல பாசச்சண்டை போட்டு என்னால முழிக்க முடியலைடி. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா…?” என்றவன் அவளெதிரே வந்து நின்றான்.
உண்மையாகவே அவன் முகம் பாவமாய் இருக்க, “இப்போ வேணாம்பா, அத்தை நம்மளை எப்படி எடுத்துப்பாங்கனு தெரியலை. அதான் மாமாவே சொல்லிட்டாங்கல்ல, அவங்க சமயம் பார்த்து அத்தைகிட்ட பேசிக்குவாங்க. நீங்க சென்னை போயிட்டு வாங்க, நான் எதுவும் நினைக்க மாட்டேன்.” என்றாள் திடக்குரலில்.
“அம்மாகிட்ட சொல்லலைனாலும் நான் உன்னையும் கூட்டிட்டு தான் சென்னை போவேன். உன்னைப் பார்க்காம நான் ஃப்ளைட் ஏறிட முடியுமா, சொல்லு?”
“நான் எப்படி அங்க…?”
“அதை அப்பா பார்த்துக்குவார்.” என்று முடித்தவன் என்ன சொன்னானோ, ஏது சொன்னானோ புகழ் சென்னைக்கு சென்ற இரண்டாம் நாளே, சிவகுரு வந்து மருமகளை அழைத்துச் சென்றார்.
“உன்னை இங்க வர வச்சிருக்கேன், உங்கப்பா எங்கதான் போனாரு? புள்ள அமெரிக்காவுக்கு படிக்கப் போறானே, ரெண்டு வருஷம் கழிச்சுதான் வருவான். அவனைப் பார்ப்போம்னு இருக்கா? அப்படி என்னதான் வேலையோ?” என்று கணவரைத் திட்டிக் கொண்டிருக்க, சம்மந்தப்பட்டவரோ தன் மருமகளுடன் உள்ளே நுழைந்தார்.
“உள்ள வாம்மா!” என்று அவளை அழைத்தார். அவள் தயக்கம் புரிந்து உடனே மனைவியைத் திரும்பி பார்த்தவர், “என்ன வசு, அப்படியே நிக்குறே? வான்னு சொல்லு அந்த புள்ளைய…” என்றார்.
குழப்பமாய் அவளைப் பார்த்த போதும், “வாம்மா!” என்று அவளை வசந்தா அழைத்திருக்க, மாடியில் இருந்து அன்னையையும் தன் மனைவியும் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் புகழ்.
“என் ஃப்ரண்டு பொண்ணு இவ, இங்க சென்னையில ஒரு கேம்ப்காக வந்திருக்கா. அவளோட பேரண்ட்ஸ் இறந்துட்டாங்க, ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்கா பெங்…” என்று ஆரம்பித்தவர், “பெங்கால்ல… வெஸ்ட் பெங்கால்ல.” என்று முடித்தார்.
சிவகுருவிற்கு பொய் என்பதே பிடித்தமில்லாத ஒன்று. இன்று மகனுக்காய் கூட அதை சொல்ல முடியவில்லை அவரால். இருந்தும் பிரயத்தனப்பட்டு சமாளித்திருந்தார். முகமெல்லாம் வியர்த்து போனது அவருக்கு.
புகழ் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர இறங்கி வரவேயில்லை. தன்னவளின் பார்வை வீட்டை, முக்கியமாய் தன்னைத் தேடி அலைவதை கண்டுகொண்டான். அன்னையின் முன்பு அவர் கவனம் அவர்கள் மேல் பதிவதை அவன் விரும்பவில்லை அக்கணம்.
அன்னையின் குணம் நன்றாய் அறிந்தவன். செல்வின் அவனின் நண்பன், அப்பாவின் உதவியாளன் என்றாலும் கூட, அவனை ஓரடி என்ன, நான்கடி தள்ளித்தான் வைத்திருக்கிறார் அவர்.
“உன் ஃப்ரண்டுன்னா வெளிய வச்சுக்கோ, நம்ம ஸ்டேட்டஸ்க்கு அவன்லாம் ரொம்ப கீழ… உங்கப்பா தான் அவரைப் போல கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்கறான்னு, அவனை தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறார் புத்திகெட்ட மனுஷன். நீ அவரை போல இருக்கக்கூடாது கண்ணா…” என்று புத்தி சொல்பவர். அதனாலேயே அவன் நண்பர்கள் என்று யாரும் அவன் வீட்டிற்கே அழைத்து வந்ததில்லை.
“ஒரு வாரம் இங்கதான் இருப்பா. ஹாஸ்டல்ல தான் தங்குறேன்னு சொன்னா. என் ஃப்ரண்டு பொண்ணாச்சே, எப்படி என்னால தனியா விட முடியும்? அதான் கூட்டிட்டு வந்துட்டேன்.”
“ஏன் ஹாஸ்டல்ல இருக்க இவளுக்கு பயமா?” என்றார் வசந்தா உடனே. அவரின் பேச்சில் அவ்வளவு எரிச்சல் அப்பட்டமாய் தெரிந்தது.
“என்ன பேசுற வசந்தா நீ? தாய், தகப்பனில்லாத பொண்ணு இது. அந்த பொண்ணுக்கு தெரியாத ஊரு, எங்க போய் தங்க வைக்க? இவளோட அங்கிள் என்கிட்ட ரொம்ப கேட்டுக்கிட்டார். அதனால தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க?” என்று அவரும் மனைவியை முறைத்தார்.
சாருவிற்கு தன் மாமியாருக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பது உடனே புரிய, அவரின் பேச்சும் அதை உறுதி செய்திருந்தது. “மா…” என்று ஆரம்பித்துவிட்டு, “அங்கிள், ஆன்ட்டிக்கு எதுக்கு சிரமம் அங்கிள்? எனக்கு நல்ல ஹாஸ்டல் ஒண்ணு பார்த்து கொடுங்க, நான் அங்க ஸ்டே பண்ணிக்கிறேன்.” என்றவள், வெளியே கிளம்பவே தயாராகி விட்டிருக்க, “முட்டாள்! இவளை யாரு இடையில பேசச் சொன்னது?” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவன், வேகமாய் படியிறங்கி வந்தான்.
அன்னையை என்னவென்று பார்க்க, “அப்பாவோட ஃப்ரண்டு பொண்ணாம், ஏதோ கேம்ப்பாம்… ஒன் வீக் ஸ்டே பண்ண கூட்டிட்டு வந்திருக்கார். எனக்கு தெரியாத எந்த ஃப்ரண்டுன்னு தெரியலை.” என்ற வசந்தாவின் கண்கள், கணவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தது.
“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“என்ன சொல்லணும்?”
“அப்பா இதுக்கு முன்னாடி இப்படி யாரையும் கூட்டிட்டு வந்திருக்காரா?”
“அதான் எனக்கும் சந்தேகம், புதுசா என்னன்னு…?”
“அப்பாவே ஒருத்தரை கூட்டிட்டு வந்திருக்காங்கன்னா, யோசிக்க வேண்டாமாம்மா? ஏதோவொரு காரணம் இருக்கும்னு. ஒரு சின்ன ஹெல்ப் நம்மால முடியாதது இல்லையே. அதுக்கு எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க? பாருங்க, அவளுக்கு… அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா?” என்றான்.
மகன் அவளுக்கு, அவங்களுக்கு என்று மாற்றியதை சரியாய் அப்போதே அத்தாய் கவனித்திருக்கவில்லை. கவனித்திருந்தால் நடந்தது முன்கூட்டியே அறிந்திருக்கக் கூடும். மகனிடமும் கணவரிடமும் நேரடியாய் சண்டையிட்டிருக்கவும் கூடும்.
ஆனால் இதுதான் நடக்க வேண்டும் என்றிருக்கிறதே… அதை யாரால் மாற்ற முடியும்? மாமியாரும் மருமகளும் நேருக்கு நேராய் நின்று முட்டிக் கொள்வார்கள் என்று, ஆண்கள் இருவருமே அறியவில்லை.
“நான் எதுவும் சொல்லலை புகழ், என்னவோ புதுசா இருந்துச்சு. அதான் என்னன்னு கேட்டேன். அந்த பொண்ணு இங்க இருக்கிறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை.” என்றார் வசந்தா போனால் போகிறது என்ற ரீதியில்.
மகன் இறங்கி வந்திருக்காவிட்டால், அவரும் இந்நேரம் இவ்வளவு இறங்கி வந்திருக்கவே மாட்டார் என்பது போலத்தான் இருந்தது, மனைவியின் பேச்சு சிவகுருவிற்கு. புகழின் திருமணம் தெரிந்தால் என்னாகுமோ என்று அக்கணமே அவருக்கு திக்கென்றிருந்தது.
அன்னைக்கும் மனைவிக்கும் இடையேயான அடுத்த சந்திப்பு, இருவரின் பிரிவிற்காய் என்று அறிந்திருந்தால் புகழ் அதை தடுத்திருப்பானோ! அன்றி, மனையாளைக் குறித்தான தாயின் ஆலகால விஷப்பேச்சு கேட்டு அன்னையைப் பிரிந்திருப்பானோ!
***