பகுதி – 28.
குழலி பிரசவத்துக்கு என அவர்கள் வீட்டுக்கு வந்திருக்க, கார்முகிலின் வீடே கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குழலிக்கு என சுதா ஏதாவது ஒன்றைச் செய்தால், அதையே மறுக்காமல், மறக்காமல் சுமித்ராவுக்கும் செய்தார்.
அன்றைக்கும் அப்படித்தான், குழலி எதையோ சாப்பிட வேண்டும் எனக் கேட்க, சுதாவே அதை தன் கையால் செய்தார். அன்று விடுமுறை நாளாகவும் இருக்க, உணவு உண்ண வந்த சுமித்ராவுக்கும் அதைப் பரிமாற முயன்றார்.
“அம்மாடி, இது குழலி கேட்டான்னு நானே செய்தேன். இதை சாப்பிட்டுப் பாரு…” என்றவர் அவளுக்குப் பரிமாறினார்.
“ஐயோ அத்த, அண்ணி கேட்டா அவங்களுக்குக் கொடுங்க… எனக்குன்னு எதுக்கு சிரமப்படறீங்க?” சிறு புன்னகையோடு கேட்டாள்.
“அவ கேட்டா, அவளுக்குன்னு மட்டும்தான் செய்வேனா? உனக்கும் சேர்த்துதான்ம்மா செய்தேன். இந்த டிஷ் உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாருன்னு சொன்னேன்” என்றவர் மருமகளின் கன்னம் வழித்தார்.
குழலிக்கு என வேளைக்குத் தயாராகும் ஜீஸ், சூப் என எதுவாக இருந்தாலும் சுமித்ரா வீட்டில் இருந்தால் அவளுக்கும் கொடுக்காமல் விட மாட்டார். வீட்டில் தினமும் சுமித்ராவுக்குப் பிடித்த சமையல் இருந்தாக வேண்டும் என பார்த்துக் கொள்வார்.
அலுவலகத்துக்கு குழம்பு, கூட்டு, பொரியல் என எடுத்து செல்வதை விட, கலந்த சாதம் என்றால் இன்னும் பிரியம் என அவள் சொல்லியிருந்தாள். அது முதலே விதம் விதமாக அவளுக்கு மட்டும் என கலந்த சாதம் செய்ய வைத்து கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அதிலும் பெற்ற தாயைப்போல்… “இன்னைக்கு சாப்பாடு எப்படிம்மா இருந்தது?” என அவர் கேட்டு நிற்கையில் அவருக்கும், அனிதாவுக்கும் அவளுக்கு வித்தியாசமே தெரிந்தது இல்லை. அவள்தான் அந்த வீட்டின் ராணி என்பது போலத்தான் நடந்து கொள்வார்.
மூர்த்தியுமே கூட, அவளிடம் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், சுமித்ரா என்றால் அவருக்கும் பிரியமே. வெளியே கடைத்தெருவுக்கு எனச் சென்றால், வித்தியாசமாக ஏதாவது பழங்கள் அவர் கண்களுக்கு தட்டுப்பட்டால் உடனே அவளுக்கு என வாங்கி வந்து கொடுப்பார்.
தங்கள் மகனை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மணந்து கொண்டதால் அவர்களுக்கு அவள்மேல் அளவிட முடியாத பிரியமும், பாசமும் இருந்தது. அவளுக்கும் கார்முகிலுக்கும் ஏதோ சின்ன ஊடல் எனத் தெரிந்த பிறகும் கூட அதை அவளிடம் காட்டிக் கொண்டதே கிடையாது.
சுதாவுக்கு சுமித்ரா என்றால் தன் மக்களை விட ஒரு படி மேலேதான். இப்பொழுது மட்டும் என்று இல்லை, எப்பொழுதுமே அவள் அப்படித்தான். ‘கொண்டாடினார்கள்’ எனச் சொல்வோமே, அப்படித்தான் கொண்டாடும் இடத்தில்தான் சுமித்ரா அங்கே இருந்தாள்.
அன்றைக்கு மூர்த்திக்குப் பிறந்தநாள். பொதுவாகவே அவரது பிறந்தநாளை அவரே ஞாபகம் வைத்துக் கொள்வது கிடையாது. தங்களது திருமண நாளை மட்டுமே சுதா ஞாபகம் வைத்திருந்து, கோவிலில் பிரசாதம், பூஜைக்கு என ஏற்பாடு செய்வார்.
“அத்த… ஒரே நிமிஷம் இருங்க…” என்றவள் தங்கள் அறைக்குச் சென்று இரண்டு பரிசுப் பொதிகளோடு வெளியே வந்தாள்.
“அத்த, மாமா… இது உங்களுக்கு” என்றவள் இருவரின் கரங்களிலும் அதைக் கொடுக்க, அவர்களோ புருவம் நெரித்தார்கள்.
“இது எதுக்கும்மா?” சுதா கேட்க,
“மாமா… நீங்க சொல்லுங்க…” அவள் மூர்த்தியிடம் கேட்க, அவருக்குமே எதற்கு எனப் புரியவில்லை.
“ஐயோ மாமா… இன்னைக்கு உங்களுக்குப் பிறந்தநாள் தானே. அதைக்கூட மறந்துடுவீங்களா?” சுமித்ரா சுகமாக சலித்துக் கொள்ள, அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கே அது புதிய செய்தியே.
“அப்பா… அப்படியாப்பா?” என்ற மக்கள் அவரைக் கட்டிக்கொண்டு வாழ்த்த, அவரோ மெல்லியதாக புன்னகைத்தார்.
“எங்க பிறந்தநாளை நாங்க உங்களுக்கே சொன்னதில்லையே… பிறகு எப்படி மருமகளுக்குத் தெரியுமாம்?” அவர் கேட்க, மர்மமாக புன்னகைத்தாள்.
“அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல பரிசைப் பிரிங்க…” மகன் அவசரப்படுத்த, “அவருக்கு சரி, எனக்கு எதுக்கும்மா கிப்ட்?” என்றவாறு சுதா அதைப் பிரித்தார்.
பரிசைப் பிரித்து பார்த்தவர்கள் நிஜத்தில் அதிர்ந்தார்கள். “கப்பிள்ஸ் வாட்ச், அதுவும் தங்கத்தில்… உள்ளே நான்கு வைரக் கற்கள் வேறு மின்ன, அதன் மதிப்பு அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் புரிந்து போனது.
“எதுக்கும்மா இப்போ இவ்வளவு காஸ்ட்லி கிப்ட்?” மூர்த்தி தயக்கமாக இழுக்க, அதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் முகங்களில் தெரிந்த சந்தோசம்… அதையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
“ஹையோ அண்ணி… எங்க அம்மா வாட்சே கட்ட மாட்டாங்க. உங்க சர்ப்ரைஸ் வேஸ்ட்டா போச்சு” குழலி சொல்ல, சுமித்ராவிடம் ஒரு மர்ம புன்னகை.
“மாமா, அத்தை… ஒருத்தருக்கு ஒருத்தர் வாட்சை மத்தவங்களுக்கு கட்டி விடுங்க” அவள் சொல்ல, சுதாவும், மூர்த்தியும் மருமகளைத்தான் பார்த்தார்கள். மூர்த்தியின் முகத்தில் அப்படி ஒரு உணர்வுப் பெருக்கு என்றால், சுதா அழுதே விட்டார்.
தாய் அழுவதைப் பார்த்த குழலி, “அம்மா… இப்போ எதுக்கும்மா அழறீங்க?” என்றவாறு தாயைக் கட்டிக் கொள்ள, கார்முகிலும் தாயைத்தான் சென்று அணைத்துக் கொண்டான்.
மூர்த்தியோ தன் மருமகளிடம் சென்றவர், “அம்மாடி… உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலைம்மா” என்றவாறு அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டார்.
“மாமா… எதுக்கு இப்போ இவ்வளவு எமோஷனல் ஆகறீங்க? முதல்ல அத்தைக்கு வாட்சை கட்டி விடுங்க, வாங்க…” என்றவள் சுதாவின் அருகே அவரை அழைத்துச் சென்றாள்.
“அத்த… அழாதீங்க… கையைக் காட்டுங்க… ம்… மாமா கட்டி விடுங்க” அவள் சுதாவின் கரத்தைப் பிடித்து, மூர்த்தியின் பக்கமாக நீட்டினாள். மூர்த்தி மனைவியை கெஞ்சலாக பார்த்து வைக்க, ‘சரி’ என்பதுபோல் சுதா தலையை அசைத்த பிறகே அதைக் கட்டி விட்டார்.
“என்னை மன்னிச்சுடு சுதா… அன்னைக்கு நான் செய்தது தப்பு” என்றவாறு அவர் வாட்சை கட்டி விட்டார்.
“இப்போ எதுக்கு அந்த பேச்செல்லாம்? பேசாமல் கட்டி விடுங்க” சுதா சொல்ல, மூர்த்தியின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை எனலாம்.
“அம்மாடி… ரொம்ப நன்றிம்மா” மூர்த்தி கையெடுத்தே கும்பிட்டுவிட்டார்.
“மாமா… இப்படிப் பண்ணீங்கன்னா நான் உங்ககிட்டே பேசவே மாட்டேன். குழலி அண்ணின்னா இப்படித்தான் செய்வீங்களா?” அவள் முறுக்கிக் கொள்ள, சுதாவும் மூர்த்தியும் அவளை ஒன்றாக அணைத்துக் கொண்டார்கள்.
கார்முகிலுக்கும், குழலிக்கும் ஏதோ மர்மப்படம் பார்க்கும் உணர்வு. “இங்கே என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” குழலிதான் கேட்டாள்.
“எதுவும் இல்லை… போங்க… போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க” சுதா அவர்களை விரட்ட முயன்றார்.
“அண்ணி… நீங்களாவது சொல்லுங்க…” குழலி கேட்க, உதட்டைப் பிதுக்கினாள்.
“எனக்கு விஷயம் எல்லாம் எதுவும் தெரியாது. ஆனா அத்தை ஏதோ ஒரு கோபத்தில் வாட்ச் மட்டும் கட்டாமல் இருக்காங்கன்னு தோணிச்சு. அதுவும் அவங்ககிட்டே பலவிதமான வாட்ச் இருக்கு. எல்லாம் அப்படியே புதுசா பாதுகாக்கறாங்க. சோ… அதை வச்சு அவங்களுக்கு வாட்ச் புடிக்கும் என்ற எண்ணத்தில் இதை வாங்கிட்டு வந்தேன்” அவள் தோளைக் குலுக்க, மூர்த்தியின் கண்களில் கண்ணீர்.
மனைவியின் கரத்தில் இருந்த வாட்சைப் பார்த்தவர் அழுதார். அதைப் பார்த்த சுதா பதறிப் போனார்.
“என்னங்க… எதுக்கு இப்போ இந்தக் கண்ணீர்?” அது ஏன் எனத் தெரிந்தும் கேட்டார்.
“அன்னைக்கு உன் வாட்ச் ஸ்ட்ரேப் அறுந்து போச்சு. அதை நீ மாத்தணும்னு சொல்லிட்டே இருந்த. அந்த பழைய பாடாவதி வாட்ச் உனக்கு வேண்டாம்னு சொல்லி அதை தூக்கிப் போட்டுட்டு போயிட்டேன். ஆனா அது உங்க அம்மாவோட வாட்ச்ன்னு எனக்கு சத்தியமா தெரியாது சுதா. அப்படித் தெரிஞ்சிருந்தால் நான் அதைச் செய்தே இருக்க மாட்டேன்” மூர்த்தியின் குரலில் மலையளவு வருத்தம்.
“அப்பா… நீங்களா?” குழலி கேட்டு வைக்க, சுதா மகளை முறைத்தார்.
“ஏன்…? நீ உன் புருஷன்கிட்டே சண்டையே போட்டது இல்லையா?” மகளிடம் சண்டைக்குப் போனார்.
“ச்சேச்சே… நான் சண்டைக்குப் போனாலே அவர் என் கால்ல விழுந்துடுவாரே” குழலி சொல்ல, சுதா அடிக்க கை ஓங்கினார் என்றால், மற்றவர்கள் எல்லாம் சிரித்துவிட்டார்கள்.
“உனக்கு எப்படிம்மா என் வாட்ச் கலெக்ஷன் எல்லாம் தெரியும்?” சுமித்ராவிடம் கேட்டார்.
“அதுவா… அன்னைக்கு உங்களுக்கு ஜுரம் அப்போ மாத்திரை கொடுக்க வந்தேனே, அப்போதான் கவனிச்சேன். வேணும்னு எதையும் செய்யலை அத்த… எதேச்சையா பார்வையில் பட்டது, அவ்வளவுதான்” அவள் சொல்ல, யாரும் அதைத் தவறாக எல்லாம் நினைக்கவே இல்லை.
“அப்பா… எங்ககிட்டே எல்லாம் அம்மா வாட்ச் கட்ட மாட்டாங்க, அம்மாவுக்குப் பிடிக்காதுன்னு சொல்லி, அவங்களுக்கு வாட்ச் கிப்ட் பண்ண விடாமல் இருந்ததுக்குக் காரணம் இதுவா? இது தெரியாமல் அப்பாவியா இருந்திருக்கோம் பாருங்களேன்” குழலி தாடையில் கை வைத்துக் கொண்டாள்.
“அதும்மா… அந்த சம்பவத்துக்குப் பிறகு, எத்தனையோ விதமான வாட்ச் வாங்கிக் கொடுத்தும் சுதா வாட்ச் கட்டுறதையே விட்டுட்டா. ஒரு வேளை நீங்க வாங்கிக் கொடுத்து, அவ கட்டிட்டான்னா… அதை என்னால தாங்கிக்க முடியும்னு தோணலை அதான்” மூர்த்தி சொல்ல, சுதா கணவனைப் பார்த்தார்.
‘அப்படியெல்லாம் நான் செய்வேனா?’ என்ற கேள்வி அதில் இருக்க, மனைவியை தன் அருகே அமர்த்திக் கொண்டார்.
“ஆனா என் மருமக புத்திசாலி… வாட்ச் வாங்கிட்டுவந்து கட்டிக்கோங்கன்னு கொடுக்காமல், கட்டி விடுங்கன்னு சொன்னா பார்… அம்மாடி…” அவளை மறு பக்கம் அமர்த்தி, அவள் தலை கோதினார்.
கார்முகிலுக்கு தன்னவளை நினைக்கையில் நெஞ்சம் பூரித்தது. அதைவிட, தன்னை விட மற்றவர் அவளைக் கொண்டாடுகையில் பெரும் பொறாமையாக கூட இருந்தது. அது அவளுக்கும் புரிய இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டாள். கண்களில் ஒரு மாதிரி சிரிப்பை அவள் வழியவிட, அவனோ போலியாக முறைத்தான்.
“டேய் அண்ணா… இந்த அண்ணி வசியம் பண்றாங்கடா. அதே மாதிரி அவங்க சர்ப்ரைஸ் எல்லாம் அடிச்சுக்கவே முடியாது. எனக்கு மாங்காயோட புளிப்பை விட, புளியோட புளிப்புதான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன் தானே.
“அம்மா என்னன்னா புளி எல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என் அத்தையும் அதையே சொல்ல… எனக்கு ஒருநாள் மாங்காய் பார்சல் ஒன்னு வந்தது. அதை ரூமுக்கு எடுத்துட்டு போய் திறந்து பார்த்தால், உள்ளே புளி இருந்தது.
“அதுவும் நல்ல பழுத்த புளி. உடனே நான் அண்ணிக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னேன். அதோட… நாம சின்ன வயசில் அந்த புளியம்பழம் மரத்தில் காய்த்து, பழுக்கறதுக்கு முன்னாடி ஒரு பச்சை கலர்ல மாறி இருக்குமே. அப்படி வேணும்னு கேட்டேன்.
“ஒரு வாரம் கழிச்சு… அது கிடைக்கலைன்னு சொன்னாங்க. நானும் சரின்னு விட்டுட்டேன். ஆனா அன்னைக்கு சாயங்காலமே நான் கேட்ட மாதிரி புளியம்பழம் வந்தது. நான் எவ்வளவு ஷாக் ஆனேன் தெரியுமா? அண்ணின்னா அண்ணி தான். நீயும் இருக்கியே…” சந்தடி சாக்கில் அண்ணனை வாரினாள்.
“நான் என்ன பண்ணேன்?” அவன் பரிதாபமாக கேட்டு வைக்க,
“ம்… நீ எதுவுமே செய்யலைன்னுதான் நானும் சொல்றேன்” குழலி நொடித்துக் கொள்ள, மற்றவர்கள் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். சுமித்ராவும் வாய்விட்டே சிரித்து வைக்க, ‘நான் எதுவுமே செய்யலையா?’ பார்வையால் அவளிடம் கேட்டு வைத்தான்.
அவன் பார்வையின் பொருள் அவளுக்கும் புரிய, ‘ஐயோ…’ என உள்ளுக்குள் அலறியவள், வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“சுதா… அந்த வாட்சை எல்லாம் கட்டிக் காட்டேன்” மூர்த்தி ஏக்கமாக கேட்டு வைக்க, “அதுக்கென்ன கட்டிட்டா போச்சு… வாங்க…” என்றவாறு தங்கள் அறைக்குச் சென்றார்கள். அதே நேரம் குழலியின் அலைபேசியும் இசைக்க, அவள் அதை எடுக்கப் போனாள்.
அவர்கள் அனைவரும் உள்ளே செல்லவே, தன்னவளை அள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான். “முகி… என்னப் பண்றீங்க? யாராவது பார்க்கப் போறாங்க?” பதறினாலும், அவன் கழுத்தை வளைத்து கட்டிக் கொண்டாள்.
“யார் பார்த்தால் எனக்கென்ன? நான் என் பொண்டாட்டியைத்தானே தூக்கிட்டு போறேன்” என்றவன், தங்கள் படுக்கையில் அவளைக் கிடத்தி அவள்மேல் சரிந்தான்.
“முகி… பட்டப் பகல்ல… டோர் வேற லாக் போடலை” அவள் கிசுகிசுக்க, வேகமாக விலகிச் சென்று கதவைத் தாழ் போட்டு வந்தான். வந்தவன் அவள் இதழ்களை அத்தனை வேகமாக சிறை செய்ய, அவன் இதழ் தீண்டலில் கரைந்தாள்.
“எல்லாரையும் ஏதோ செய்து சர்ப்ரைஸ் பண்ற? என் சர்ப்ரைஸ் தான் சொதப்பிடுச்சா?” அவள் இதழ்களில் இருந்து விலகியவன் கேட்டு வைக்க, பரிதாபமாக தலை அசைத்தாள்.
“அன்னைக்கு என்ன ப்ளேன் பண்ணி இருந்த?” அவன் கேட்க, அவள் விஷயத்தைச் சொல்ல, அவனுக்கு மனதுக்கு கஷ்டமாகிப் போனது.
“சத்தியமா அப்படித் தூங்கிடுவேன்னு நினைக்கவே இல்லை. எழுந்த உடனேயே உங்ககிட்டே சொல்லிடலாம்னு ட்ரைபண்ணா, அதுவும் முடியாமல்…” விட்டால் அழுது விடுவேன் என்பதுபோல் அவனைப் பார்த்து வைத்தாள்.
“அதையெல்லாம் விடு… இப்போ ட்ரை பண்ணுவோமா?” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே வேகமானான். அவளை முத்தமிட்டு, கொண்டாடி… அவளோடு நெருக்கமாக மாற முயல, அதுமட்டும் முடியவே இல்லை.
அவளும் இதழ் கடித்து தாங்கிக் கொள்ள முயல, ம்ஹும்… அவன் முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக தோல்வியை மட்டுமே தழுவியது. “முகி… பரவாயில்லை… இன்னும்…” அவள் சொல்ல, அவனோ மறுத்தான்.
“நீ இப்படி கஷ்டப்படற… என்னால் முடியாது” என்றவன் கடந்த நாட்களில் செய்ததையே இப்பொழுதும் செய்தான். அவளைக் கொண்டாடி, உணர்வுகளைத் தூண்டி, அவளை உச்சம் காண வைத்துவிட்டே அவன் விலக, அவள் முகத்திலோ வருத்தம்.
“ஏலியன்… என்ன ஓகே இல்லையா?” அவள் காதுக்குள் இதழைப் பொருத்தி அவன் கேட்க, அவன் இதழ்களை அழுத்தமாக கடித்து வைத்தாள். அவனோ வலியைத் தாங்கிக் கொண்டு சிரிக்க, அவளும் என்னதான் செய்ய?
“ஏன் இப்படிப் பண்றீங்க? ம்ச்… இப்படியே போனா எப்படி? எனக்கு… எனக்கு பத்து பிள்ளை பெத்துக்கணும். நீங்க இப்படியே இருந்தால் அது முடியாது… புரியுதா?” வருத்தமாகத் துவங்கி, கோபத்தில் முடித்தாள்.
அவனோ கடகடவென சிரித்துவைக்க, அவனை முறைத்தாள். “எதுக்கு இப்போ இப்படி சிரிச்சு உங்க ஃபீலிங்ஸ்சை மறைக்கறீங்க?” அவன்மேல் முழுதாக படுத்துக் கொண்டவள் கேட்டாள்.
“நான் எதையும் மறைக்கலை, அதே மாதிரி எனக்கென்ன கஷ்டம்? அதுக்கெல்லாம் எதுவுமே இல்லை. சரி… பத்து பிள்ளை போதுமா?” என்றவன் அவளை ரசித்துப் பார்த்திருந்தான். அவன் பார்வைகள் அவளை என்னவோ செய்ய, அவனோடு இழைந்தாள்.
“ப்ளீஸ் இன்னொரு முறை ட்ரை பண்ணுங்க…” அவள் சொல்ல, மறுக்காமல் செய்தவன் அவள் வலிதாங்க முயல, பிடிவாதமாக விலகிக் கொண்டான். அதில் அவளுக்கு ஏக வருத்தம்.
அடுத்த நாளும் இப்படியே கழிய, மறுநாள் மாலையில் குழலிக்கு வலியெடுக்கவே அவளை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கே அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறக்க, குமாரை கையில் பிடிக்க முடியவில்லை.
“எனக்கு பொண்ணு பொறந்திருக்கா… நான் ஆசைப்பட்ட மாதிரியே எங்க வீட்டுக்கு மகாலஷ்மி வந்திருக்கா” என ஆர்ப்பாட்டம் செய்துவிட்டான். அவர்கள் வீட்டில் இரண்டே ஆண்கள் என்பதால் இந்த கொண்டாட்டம்.
குழலியை அறைக்கு மாற்ற, தன் குழந்தையை மற்றவர்களின் கரத்தில் கொடுக்கவே மறுத்தான். “மாப்ள… கொஞ்சம் எங்ககிட்டேயும் கொடுக்கலாம்…” அவன் யாரிடமும் குழந்தையை கொடுக்காமல் போகவே, கார்முகில் மனம் தாளாமல் சொல்லிவிட்டான்.
“உங்களுக்கும் ஆசை இருந்தால் நீங்களும் ஒன்றை பெத்துக்கோங்க, யார் வேண்டாம்னு சொன்னதாம்?” அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவாறே சொன்னான். அவன் முகத்திலேயே என் பிள்ளை என்ன அழகு, கலர் எனப் பார்த்தாயா என்ற பெருமிதம் மிளிர்ந்தது.
கார்முகிலுக்கு எப்படியோ, ஆனால் அவன் சொன்ன விதத்தில் சுமித்ராவுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. அதைப் பார்த்து குழலி உள்ளுக்குள் பதற, சுதா மனதுக்குள் தவித்தார். மருமகனைப்பற்றி தெரியும் என்றாலும், அவனிடம் ஏன் தன் மருமகள் ஒரு பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது.
சுமித்ரா இத்தனை நேரத்துக்கு எல்லாம், குழந்தைக்கு என வாங்கிக் குவித்த பொருட்களை எல்லாம் பார்த்து சுதாவே மிரண்டுதான் போனார். குமாருக்கோ… ‘வேற யார் இருக்கா செய்து அழகு பார்க்க? செய்யட்டும்…’ என்ற நினைப்புதான் உள்ளுக்குள் ஓடியது.
அது அவன் முகத்திலும் தெரிய, கார்முகிலுக்கு முதல்முறையாக குமாரின்மேல் அத்தனை ஆத்திரம் வந்தது. தன் தங்கையின் முகத்துக்காகவும், குழந்தை பிறந்திருக்கும் இந்த நேரத்தில் பிரச்சனை வேண்டாம் என்ற எண்ணத்திலும் அதை அவனிடம் காட்டவில்லை.
தனிமையில் அவளிடம், “இவ்வளவு எதுக்கு ஏலியன்? அதுவும் அந்த குமாரோட குழந்தைக்கு” மனம் தாளாமல் அவளிடம் கேட்டுவிட்டான்.
“என்ன பேசறீங்க நீங்க? அது நம்ம குழலியோட குழந்தை, அப்படி மட்டும் பாருங்க” அவனிடம் சின்னக் குரலில் கடிந்து இருந்தாள். அப்படி இருக்கையில், இது எதையுமே கண்டுகொள்ளாமல் குமார் நடந்துகொள்வது ஏனோ மனதுக்குப் பிடிக்கவே இல்லை.
கார்முகில் தன் தாயைப் பார்க்க, “முகிலா… நீங்க வீட்டுக்குப் போயிட்டு பிறகு வாங்கப்பா” என்றவருக்கு மனதே ஆறவில்லை. கார்முகிலுக்கும், சுமித்ராவுக்கும் திருமணம் முடிந்து பல மாதங்கள் கடந்து இருந்தாலும், இன்று வரைக்கும் அவர்களுக்கு வாரிசு வேண்டும் என அவர் கேட்டதே இல்லை.
சுமித்ரா தங்கள் மகனுக்கு கிடைத்த பொக்கிஷம். அதை வைத்து மகன் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்று மட்டுமே நினைத்தார். அதற்காக மகனுக்கு பிள்ளை வேண்டாம் என்று எல்லாம் அவர் நினைக்கவே இல்லை. ஆனால் இப்படி எதையாவது கேட்டு அவர்களை சங்கடப்படுத்த அவர் நினைக்கவில்லை.
அப்படி இருக்கையில்… தன் மருமகனே என்றாலும் குமார் பேசுவது அவருக்கு சற்று கோபத்தையே அளித்தது.
தாயின் மனநிலைக்கு ஒத்ததுதான் குழலியின் மனநிலையும். தன் அண்ணனுக்கு ஒரு திருமணம் முடிந்துவிட்டால் போதும் என அவள் எத்தனை நாள் எண்ணி இருக்கிறாள். அப்படி இருக்கையில் தன் கணவனே என்றாலும் அவன் செய்வது அவளுக்கும் பிடிக்கவில்லை.
“என்னங்க… குழந்தையை என்கிட்டே கொடுங்க” குழலி கேட்க, குழந்தையும் அந்த நேரம் அழவே, அவள் குழந்தைக்குப் பசியாற்ற வேண்டி இருந்தது.
“எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்க, அம்மா… நீங்க மட்டும் என்னோட இருங்க” என்றவள் தன் அண்ணன், அண்ணி அனைவரிடமும் கண்களால் மன்னிப்பை வேண்டினாள். கணவன் செய்யும் அலப்பறைகளில் அவளுக்கு எரிச்சல்தான் வந்தது.
மனைவி சொன்னாலே கேட்டுக் கொள்ளும் அவன், அவள் கோபம் கொண்டால் கேட்காமல் இருப்பானா? அவன் வெளியேற, “சாரி அண்ணி, சாரிண்ணா…” குழலி மன்னிப்பை வேண்ட, சுமித்ராவின் முகம் தெளியவே இல்லை.
“அட விடும்மா… அவர் என்ன இன்னைக்கு நேற்றா பேசறார்? நாலு வருஷமா பேசிக்கிட்டுத்தானே இருக்கார். நான் அதையெல்லாம் பெருசாவே எடுத்துக்கலை. நீ உடம்பை பார்த்துக்கோ… இந்த குட்டி எப்படியும் நம்ம வீட்டுக்குத்தானே வருவா, அப்போ நான் ஆசை தீர கொஞ்சிக்கறேன்” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
சுமித்ரா அமைதியாகவே வரவே, “ஏலியன், இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க? அவர் எல்லாம் ஒரு ஆளுன்னு அவர் சொன்னதையெல்லாம் பெருசா எடுத்துப்பியா?” மனைவியிடம் கேட்டான்.
ஆனால் அவள் சொன்ன பதிலில் திடுக்கிட்டுப் போனான்.