Home Anti Heroineஅகானா – 79

அகானா – 79

by Vathani S

அகானா- 79

மருத்துவமனையில் மஞ்சரியின் அருகில் அமர்ந்திருந்தாள் அகானா. அவளது முகம் முன்னை விட இன்னமும் இறுக்கம் கூடிப் போயிருந்தது.

மகளின் மனதில் என்ன ஓடுகிறது என்று மஞ்சரியால் கூட கணிக்க முடியவில்லை. 

விழியெடுக்காமல் மகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் அகானா அதை கவனிக்கவில்லை. 

சில நொடிகளில் கவனித்தவள், அவர் அருகில் வந்து “ம்மா..” என்றாள் குரல் அடைக்க.. 

அடுத்த வார்த்தை பேசினால் கூட குரல் உடைந்து கதறி அழுதுவிடுவேன் என்று சொன்னது, மகளின் அந்த ஒற்றை வார்த்தை.

“அம்மு..” என்றார் அவரும் மகளின் முகத்தைப் பார்த்தபடியே.

“ம்மா… ம்மா..” என்றவளும் தாயின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மு.. நமக்கு இங்க இருக்க வேண்டாம்டா.. நாம இங்க இருந்து போயிடலாமா?” என்றார் திக்கித் திணறி.. எப்போதுமே மகளிடம் இப்படி கேட்டுவிடக்கூடாது என்று உறுதியாக நினைத்தவர், இன்று அந்த உறுதியை உடைத்துவிட்டு கேட்டார்.

“ம்மா..” என்ற அகானா ஒரு நொடி அதிர்ந்து பின் சட்டென “சரி ம்மா..” என்றாள்.

“அம்மா உன்னை கஷ்டப்படுத்த இதை கேட்கல பாப்பா..” என்றார் மீண்டும் திணறி.

“ம்மா.. நீங்க எனக்கு விளக்கம் சொல்வீங்களா? எனக்கு உங்களைப் புரியும். நாம கிளமபலாம்..” என்றாள் முடிவாக..

“கண்ணா..” என்றார் கேள்வியாக.

“எனக்குத் தெரியல ம்மா.. நான் ஆகன்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்றவளுக்கு நிச்சயம் தன் முடிவை அவன் ஏற்கமாட்டான் என்று தெரியும்.

இங்கிருக்கும் தொழிலை, அவனுக்காக உருவாக்கின அந்த சாம்ராஜ்யத்தை விட்டு வா என்று அவளாலும் அழைக்க முடியாது. அழைக்கவும் மாட்டாள்.

இதற்கான முடிவை அவனே எடுக்கட்டும் என நினைத்து அமைதியாகிவிட்டாள்.

இப்போது மஞ்சரியின் பார்வை அகானாவின் கை காயத்தில் பட்டது.

நல்லவேலையாக நரம்பில் கத்தி படவில்லை என்று ஆரி சொன்னது நியாபகம் வந்தது. அப்படி மட்டும் நடந்திருந்தால், நினைக்கவே நெஞ்சம் நடுங்கிப் போனது.

“அம்மு.. நமக்கு இந்த பழிவாங்கிறது எல்லாம் வேண்டாம்டா.. என்ன செஞ்சாலும் உன்னோட கோபமும், ஆத்திரமும் அடங்காதுனு எனக்குப் புரியுது. ஆனா அவங்க பின்னாடி ஓடி உன்னோட வாழ்க்கையை அழிச்சிக்க போறியா.. அப்போ நம்ம பட்ட கஷ்டமெல்லாம் இதுக்காகவாடா.. போதும் பாப்பா.. இதெல்லாத்தையும் தூக்கி எரிஞ்சிட்டு வா.. நமக்கான வாழ்க்கையை இன்னும் நாம வாழவே இல்லடா…” என்றார் உடைந்த குரலில். 

அகனாவின் உடல் இரும்பென இறுகிப் போனது, தாயின் இந்த பேச்சில்.

தாய் சொல்வது உண்மைதானே! கால ஓட்டத்தில் ஓட வேண்டிய கட்டாயம் இருவருக்கும். அதில் இருவருக்கும் இதுநாள் வரை ஓய்வென்பதே இருந்ததில்லை.

இவர்களின் கடிகார ஓட்டத்தைப் பார்த்து விஜயாவும், ஆரியனும் தான் எங்கையாவாது பிக்னிக் போல அழைத்துப் போவார்கள்.

கோவில் தாண்டி இவர்களாக வெளியில் போனதில்லை. அப்போதெல்லாம் ‘சீக்கிரம் லைஃப்ல செட்டிலாகிட்டு, அம்மாவை ஃபாரின் கூப்பிட்டு போகனும், அவங்களை ஹேப்பியா வச்சிக்கனும். ஃபுல் ரெஸ்ட் கொடுக்கனும்.. பெரிய வீடு கட்டிக் கொடுக்கனும்.. அம்மாவுக்கு விருப்பம் இருந்தா, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு லைஃப் அமைச்சுக் கொடுக்கனும்..’ என அவள் கல்லூரி காலத்தில் ஆகனிடம் சொல்லியிருக்கிறாள்.

அப்போது ஆகன் யாரென்று அவளுக்குத் தெரியாது. மஞ்சரி பற்றி ஆகனுக்கும் தெரியாது.

இப்போது மஞ்சரி கூறவும் அதெல்லாம் மனதுக்குள் நிழலாக ஓடி மறைந்தது.

“பாப்பா..” என்றார் மகளின் யோசனையான முகத்தைப் பார்த்து.

“ஒன்னுமில்ல ம்மா..” என்று உடனே சொன்னவள், பின் “ம்மா.. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றாள் பொறுமையாக.

“என்ன பாப்பா..” என்றார் அவருமே சற்று பயந்து.. மகள் ஏடாகூடமாக கேட்டுவிடக்கூடாதே என்ற உதறல் வேறு.

“உங்களுக்கு விருப்பம் இருந்தா, நீங்க இன்னொரு மேரேஜ் செய்துக்கிறீங்களா..?” என்றாள் நிதானமாக.

“பாப்பா.. என்ன பேசுற நீ..? புரிஞ்சுதான் பேசுறியா?” என மஞ்சரி சற்று குரலை உயர்த்தி அதட்ட, அதே நேரம் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தான் ஆகன்..

மஞ்சரியின் முகம் கோபத்தில் இருக்க, அகானாவின் முகமோ நிர்மலமாக இருந்தது.

“என்ன அம்மு…? என்றபடியே மஞ்சரியின் ரிபோர்ட்சைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன்.

சில நிமிடங்களுக்குப் பிறகும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, புருவம் சுருக்கி அவளைத் திரும்பி பார்க்க, அவளோ விழிகளில் தேங்கிய நீருடன் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா.. என்ன அத்த..? ஏன் அம்மு கண் கலங்குது?” என வேகமாக வந்து மனைவியின் கையைப் பிடிக்க, அதுவரை திடமாக இருந்தவள், அவன் கைப்பிடித்த நொடி உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ஆகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எத்தனை பெரிய வேலைகளை, யாருக்கும் தெரியாமல், துளியளவு கூட சந்தேகம் வராத அளவிற்கு அநாயசாமாக செய்து முடித்தவள், இப்போது ஏன் இப்படி அழுகிறாள்.? 

“அம்மு.. அம்மு.. எதுக்குடி இப்படி அழற..? என்ன பிரச்சினை..?” என அவளிடம் சமாதானமாக கேட்டாலும், இப்போது பார்வை மஞ்சரியிடம் சென்றது.

அவரின் விழியோரங்களிலும் விழிநீர் கசிந்து வலிந்து கொண்டிருந்தது. முகமோ அளவு கடந்த வேதனையை சுமந்திருந்தது.

“என்ன அத்த..? நீங்களாவது சொல்லுங்க. என்னதான் நடந்தது.?” என்றவனுக்கு, மனம் வேகமாக ஒரு வாரத்திற்கு முன் அவன் கண்ட காட்சியில் சென்று நின்றது.  

“ஹேய்..” என்ற அகானவின் சத்தத்தில் உதய் வேகமாக உள்ளே வர, அதற்குள் அகானாவே மைதிலியைப் பிடித்து கீழே தள்ளி இருந்தாள்.

நடந்த நிகழ்வில் ரஞ்சனி அதிர்ந்து போய் நிற்க, கீழே கிடந்த மைதிலியை துப்பாக்கி முனைக்கு கொண்டு வந்திருந்தான் உதய்.

“மேம் பிளட் ஓவர் ப்லொவ் ஆகுது, நாம உடனே ஹாஸ்பிடல் போகணும்.” என உதய் பதற,

“ஆழம் அதிகமில்ல உதய்..” என அகானா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரஞ்சனி தன் புடவை முந்தானையை அகானாவின் கையை சுற்றி பிடித்திருந்தார்.

“என்ன? என்ன பண்றீங்க? என அதை உதற முயன்றவளை,

 “வாய மூடு” என அதட்டி அமைதியாக்கி விட்டு, உதையை கோபமாக பார்த்தார்.

“உன் கூட யாரும் வரலையா..” என அதே கோபத்துடன் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஆரியும், ஆகனும் பதட்டத்துடனே உள்ளே வந்திருந்தனர் 

நொடியில் அங்கிருந்த சூழ்நிலையை உணர்ந்து கொண்ட ஆகன் ரஞ்சனியிடம் மனைவியின் கையில் சுற்றியிருந்தைக் காட்டி “அதை கழட்டி எடுங்க..” என்று கத்தினான் கோபமாக.

ஏற்கனவே மைதிலியின் செயலில் பயத்தில் இருந்த ரஞ்சனி, மகனின் கோபத்தில் நடுங்கித்தான் போனார்.

“ரத்தம் அதிகமா வருது கண்ணா என்றாற் அதே பயந்த குரலில்.

“எப்படி வந்தா உங்களுக்கு என்ன? அவ இருந்தாலும் செத்தாலும் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே? நீங்க ஏன் இவ்ளோ பதட்டபடுறீங்க. ஆக்சுவல்லா இப்போ நீங்க சந்தோசம்தானே படனும்..” என ஆத்திரமாக கத்தியவன், பின் “இதோ இவங்க கூட போய் ஜெயில்ல களி திண்ணுங்க..” என மீண்டும் கிண்டலாக கூற,

அதற்குள் அகனாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. “போலாம் பாவா..” என அவன் சட்டையை பிடித்தபடியே அவன் மேல் சாய, அவளைப் பதட்டமாகப் பிடித்தபடியே, 

“முதல்ல இதை எடுங்க..” என்று பல்லைக் கடித்தவனிடம் எதுவும் பேசாமல், அகானாவின் கையை சுற்றி இருந்த, தன் முந்தானையை எடுக்க, அதற்குள் நவீன் தன் சட்டையை கழட்டி அகானாவின் கையை இறுக்கமாக சுற்ற, மனைவியை கைகளில் ஏந்தி கொண்டான் ஆகன்.

“சீனியர்.. உங்களால முடியுமா?” என்ற ஆரியனுக்கு ஒரு  முறைப்பை மட்டும் பரிசாக கொடுத்துவிட்டு, காரை நோக்கி நடந்தான்.

“சீனியர்.. ஆன்டி..” என ரஞ்சனியைப் பார்த்து ஆரியன் தயங்க,

“அதுக்குத்தான் இன்ஸ்பெக்டர் இருக்காரே, அவர் கூட வருவாங்க..” என தயவு தாட்சன்யமே இல்லாமல் கூறிவிட்டு நடக்க, ரஞ்சனிக்கு மகனின் பேச்சில் உடலும் மனமும் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

மகன் சொன்னது போல் மைதிலியோடு தன்னையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்திலேயே நின்றிருக்க, “கிளம்புங்க மேம்.” என்ற உதயோடு இருவரும் வெளியில் வந்தனர்.

ரஞ்சனியின் அருகில் வந்த மைதிலிக்கு அகானாவை உயிரோடு விட்டு விட்டோமே என்ற கோபம் தணல் போல் தகிக்கத் தொடங்கியது.. 

‘அன்றே அவளை முடித்திருக்க வேண்டும்.. பாவம் பார்த்து விட்டு வைக்க, இன்று என் வாழ்க்கைக்கே எமனாக வந்துவிட்டாளே.’ என்று மனதுக்குள் கொதி நிலைக்கு சென்று கொண்டிருந்தார்.

“ஏன் அண்ணி இப்படி பண்ணீங்க?” என ரஞ்சனி தன் கோபத்தைக் காட்ட முடியாத இயலாமையில் கேட்க,

“போதும் நிறுத்து.. அவ பேசினதை எல்லாம் கேட்ட பிறகும் எப்படி நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற.. ஓ.. என்ன இருந்தாலும் அவ உன் பையனுக்கு பொண்டாட்டி, உன் வீட்டு மருமக… உன் அண்ணணோட ஒரே வாரிசு.. உன் குடும்பத்துல மூத்த வாரிசு.. விட்டுக் கொடுக்க மாட்டல்ல.. அதை நான் மறந்தே போயிட்டேன். உங்களை மாதிரி நன்றிகெட்ட ஜென்மங்கள கூட வச்சிருக்கிறதுக்கு, நாலு நாய் வாங்கி வளர்த்திருக்கலாம். இனி உன் குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. எனக்கு யாரோட சப்போர்ட்டும் தேவையில்ல. உங்களை மறுபடியும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்துறது தான் என்னோட முதல் வேலை..” என ஆங்காரமாக கத்த, மைதிலியின் மற்றொரு முகம் ரஞ்சனிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அப்போது உதயின் கார் ரயில்வே ட்ராக் சிக்னலில் நிற்க, அவனும் ஏதோ யோசனையில் இருக்க, சட்டென காரைத் திறந்த மைதிலி, யாரும் அதை உணரும் முன்னே ட்ராக்கைத் தாண்டி அடுத்தப் பக்கம் வேகமாக சென்று மறைந்திருந்தார்.

நொடியில் நடந்து போன நிகழ்வில், யார் அதிகம் அதிர்வுக்குள்ளானது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.

உடனே உதய் ஆகனுக்கு அழைத்து சொல்ல, “விடுங்க உதய்.. பார்த்துக்கலாம்..” என கசப்பாக கூறியவன், அகானாவிற்கு முதலுதவி செய்து கொண்டிருந்தான்.

அவள் விழித்து எழும் வரை அவன் உயிர், அவன் வசமே இல்லை.

அதன் பிறகு அகானா அதிகம் யாரிடமும் பேசவில்லை. மிகவும் அமைதியாகிப் போனாள். 

திடீரென்று இப்போது அழுவதைப் பார்த்து அவனுக்கு பயமும், குழப்பமும் ஒருங்கே வர, “என்னதாண்டி பிரச்சினை?” என சலிப்பாக கேட்க,

“அம்மா.. அம்மாவுக்கு ஒரு துணை வேணும் சீனியர்.. அவங்க இப்படி இருக்கிறது எனக்குப் பிரச்சினை. இவங்களை இப்படி பார்க்கும் போதெல்லாம் என்னையும் அறியாம என் கோபம் வெளியில் வந்து, அது வெறியா மாறிடுது. நான் மாறனும், இதெல்லாம் விடனும்னா, நான் சொல்றதுக்கு அவங்களை சரின்னு சொல்ல சொல்லுங்க..” என அவனிடம் அழுதபடியே கத்த, இப்போது பேச்சற்று நிற்பது ஆகனாகிப் போனது.

You may also like

1 comment

M. Sarathi Rio April 21, 2026 - 8:24 am

அட ராமா..! இத்தனை பேர் இருந்தும் திரும்பவும் மைதிலியை கோட்டை விட்டாங்களா ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured