அகானா – 81
துரைப்பாண்டியின் வீட்டிற்கு வந்திருந்தார் தாமோதரன், அவரது முகத்தைப் பார்த்தே கோபத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் துரைப்பாண்டி. என்ன காரணம் என்றும் அவருக்குத் தெரியுமே.
“தாமு.. வா சாப்பிடலாம்..” என துரைப்பாண்டி சாதாரணமாக அழைக்க,
“எனக்கு வேண்டாம்..” என்றார் தாமோதரன் பட்டென, பின் “அவளை சும்மா விட்டுருக்கக்கூடாது..” என்றார் ஆத்திரமாக.
“சும்மா விட்டுட்டோம்னு யார் சொன்னது?” என்றார் துரைப்பாண்டி சிரித்துக் கொண்டே…
“ஹான் என்ன சொல்றீங்க ண்ணா.. நிஜமாவா?” என்றார் கண்கள் மின்ன,
“அந்த பொம்பள இப்போ நம்ம கஸ்டடிலதான் இருக்கு.. கலெக்டர் மேடம்க்கு தெரியாது.. ஆனா..” என இழுத்தபடியே சிரிக்க,
“என்ன ண்ணா சொல்றீங்க..? அம்முவுக்குத் தெரியாதா? அப்போ வேற யாருக்குத் தெரியும்? நவீனா?” என படபடப்பாக கேட்க,
“ஹ்ம்ம் நவீனா? உன் மகனுக்கு அவ்ளோ தைரியம் இருக்கா?” என சிரித்தவர், “டாக்டர் தம்பிக்கு தெரியும்..” என்றார் அதே சிரிப்புடன்.
“ஆகனுக்கா.. அவனுக்கு எப்படி? அவன்தான் அவங்க குடும்பத்து ஆளுங்களை விட்டுக்கொடுக்க மாட்டானே..?” என குழப்பமாக கேட்டவர், “நிஜமாவேவா ண்ணா.. இல்ல எனக்காக சொல்றீங்களா?” என்றார் சற்றே கவலையாக.
“என்னை நம்பமாட்டியா தாமு? அந்த தம்பிக்கு கலெல்டர் பாப்பா செய்றது எல்லாம், ஆரம்பத்துல இருந்தே தெரியும். முதல்ல கோபப்பட்டு கத்தினதெல்லாம் உண்மைதான். அப்புறம் அவங்க அப்பா சொன்ன பிறகு, எல்லாம் தெரிஞ்சும், பாப்பா என்ன செஞ்சாலும் பரவாயில்லனு அமைதியாகிட்டார். இப்போவும் அந்த மைதிலி வெளியே இருந்தா, பாப்பாவுக்கு குடைச்சல் கொடுத்துட்டே இருப்பான்னுதான், தூக்கி நம்ம இடத்துல போட்டு வச்சிருக்கோம்.. அதுவும் டாக்டர் தம்பி சொல்லித்தான்..” என்றார்.
“என்னால இதெல்லாம் நம்பவே முடியல?” என்றார் தாமோதரன் அப்போதும் நம்பிக்கை இல்லாமல்.
“தாமு.. நான் சொல்றதை கவனி. இனிமேலும் பழிவெறியோட அந்த பாப்பா இருக்க வேண்டாம். உன்னோட கோபம் எனக்குப் புரியுது. ஆனா இதெல்லாம் ரொம்ப முன்னாடியே செஞ்சிருக்கனும். இல்லையா பாப்பா அந்த டாக்டர் தம்பியை கல்யாணம் செய்யாமலாவது இருந்திருக்கனும். இப்போ பழிவாங்க, அது இதுன்னு கிளம்பினா, அவங்க வாழ்க்கை என்னாகும் யோசிச்சிப் பாரு. இதுவரைக்கும் அவங்க வாழ்க்கையில எந்த ஒரு சந்தோசமோ நிம்மதியோ இருந்ததில்ல.. இன்னமும் அப்படியே இருக்கனும்னு நினைக்கிறியா?” என்றார் வருத்தமாக.
“என்னை நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லண்ணா? என் பொண்ணுக்கு அந்த டாக்டர் குடும்பம் கொஞ்சம் கூட பொறுத்தமே இல்ல. ஆனாலும் வேறவழி இல்லாமதான் அதை ஏத்துக்கிட்டேன். இவ்வளவு நடந்த பிறகும், என் பொண்ணொட உயிரையே எடுக்கத் துணிஞ்சான்னு தெரிஞ்ச பிறகும் நான் எப்படி அந்த குடும்பத்தை ஏத்துக்க முடியும். என்னால முடியல ண்ணா..” என தாமோதரன் பேசிக் கொண்டிருக்கும் போதே, ரவியும் வினோத்தும் துரைப்பாண்டியைச் சந்திக்க வந்திருப்பதாக தகவல் வந்தது.
தாமோதரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உட்கார வைங்க, வரேன்..” என்றார்.
“தாமு… அவங்க பேசி முடிச்சி கிளம்புற வரைக்கும், நீ எதுவும் பேசக்கூடாது. என் பேச்சுக்கு மரியாதை கொடுத்தா, அங்க வா.. இல்லையா நீ கிளம்பு..” என்றார்.
“ம்ம் நான் எதுவும் பேசல..” என்றவர், “ஆனா அவங்க என்ன பேசுறாங்கன்னு நான் தெரிஞ்சிக்கனும், அதுக்காக வரேன்..” என்று துரைப்பாண்டியோடு ஹாலுக்கு வந்தார்.
வந்திருந்தவர்கள் தாமோதரனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்று, அவர்கள் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.
“வாங்க டாக்டர்..” என்ற துரைப்பாண்டியிடம், தலையை மட்டும் அசைத்தார் ரவி.
“சொல்லுங்க…” என வினோத்தைப் பார்த்து கேட்க,
“அது.. அண்ணியைப்பத்தி விசாரிக்கத்தான்..” என்றார் மென்று விழுங்கியபடி,
“எனக்கு எப்படிப்பா தெரியும்..? அவங்கதான் அங்க இருந்து தப்பிச்சு போயிட்டாங்களே, நீங்க தப்பான ஆளுக்கிட்ட வந்து விசாரிச்சிட்டு இருக்கீங்க.” என்றார் சிரித்தபடியே.
“அண்ணா.. உங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பே இல்ல. அம்முவுக்கு நீங்கதான் எல்லா வகையிலும் உதவி செஞ்சிருக்கீங்க. இப்போவும் நீங்கதான் அண்ணியை என்கேயோ வச்சிருக்கீங்க.. ப்ளீஸ் அண்ணா.. அவங்களை விட்டுடுங்க…” என்றார் வினோத்.
“ஏன்ப்பா.. எனக்கும் அந்த கலெக்டர் மேடத்துக்கும் ஏகப்பட்ட பிரச்சினை போயிட்டுருக்கு.. நான் எப்படி அந்தம்மாவுக்கு உதவி பண்ணிருப்பேன். சமயம் கிடைச்சா நானே அந்தம்மாவை போட்டுத்தள்ள ஆள் செட் பண்ணுவேன்… என்கிட்ட வந்து இதை கேட்டுட்டு இருக்கீங்க..” என்றதும் ரவி அதிர்ந்து பார்த்தார்.
“உண்மையா தான் சொல்றேன் டாக்டர். மேலிடத்துல இருந்து ஏகப்பட்ட ப்ரசர். இந்த பாப்பாவை ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க.. இல்லை மொத்தமா முடிச்சி விடுங்கன்னு சொல்லிட்டே இருக்காங்க. சிஎம் பினாமி வரைக்கும் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்காங்க. உங்க முகத்துக்காகத்தான் இன்னும் அவங்க மேல கை வைக்காம இருக்கேன். மேலிடத்துல பேசி ட்ரான்ஸ்ஃபர்க்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன். நீங்களும் பேசுங்க..” என்றதும், வந்தவர்களுக்கு அடுத்து என்ன பேச என்றேத் தெரியவில்லை.
“அண்ணி நிஜமாவே உங்க கஸ்டடில இல்லையா? நவீன் தான் உங்ககிட்ட கேட்டு பார்க்க சொல்லி அனுப்பினான்..” என்றார் வினோத்.
“இல்ல வினோத்.. நான் அவங்களை பார்க்கவே இல்ல. எதுக்கும் கவனமா இருங்க.. அடிப்பட்ட பாம்பு வேற..” என்றதும், மற்ற இருவரும் எழுந்துகொண்டனர்.
துரைப்பாண்டியின் பார்வை ரவியின் மீதே இருக்க, அவரை ஏமாற்றாமல் “அம்மு ட்ரான்ஸ்ஃபர் ஆகுற வரைக்கும், மைதிலியை உங்க கஷ்டடில வச்சிருக்க முடியாது ண்ணா.. அது எல்லாருக்குமே பிரச்சினைதான். நீங்க சொன்ன மாதிரி மைதிலி, அடிப்பட்ட பாம்புதான். அதனால கவனமா இருங்க..” என அவருக்கும் எச்சரித்து கிளம்ப, துரைப்பாண்டியின் முகத்தில் புன்னகை வந்தது.
“என்ன ண்ணா.. இவன் உங்களையே மிரட்டிட்டு போறான்..” என தாமோதரன் கேட்க,
“அவர் எங்கடா மிரட்டிட்டு போறார். மைதிலியைப்பத்தி சொல்லிட்டு போறார். அவர் சொல்றதும் சரிதானே..” என்றவர், “சரி அடுத்து என்ன செய்ய போற.? என் கூட இருக்கியா? இல்ல வேற பிசினஸ் பண்றியா?” என்றார்.
“பிசினஸ்தான் பண்ணனும் ண்ணா.. கவிதா எனக்காக ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா.. இதுக்குப் பிறகாவது அவளை நல்லா வச்சிக்கனும், நவீனோட கல்யாணத்தை முடிக்கனும்..”
“ம்ம்.. அதுவும் சரிதான்.. என்ன பண்றதுனு நான் யோசிச்சி சொல்றேன். அதுவரைக்கும் வீட்டுல இதுபத்தி பேசாத. நவீனோட கல்யாணத்தை வேணும்னா பேசி முடிவு பண்ணிடுங்க..”
“சரிங்க ண்ணா..” என்றவர், “மஞ்சுவுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சே ஆகனும்னு அம்மு முடிவா இருக்கா.. ஆனா மஞ்சு அதுக்கு சம்மதிப்பாளானு தெரியல..” என்றார் மிக வருத்தமாக.
“ரொம்ப நல்ல விசயம்தானே தாமு.. இந்த வயசுல அந்த பொண்ணு யோசிக்கிறதே பெரிய விசயம் இல்லையா? அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும் தாமு.. சொல்லப்போனா இதெல்லாம் நீங்க செஞ்சிருக்கனும்..” என்றார் சற்றே கோபமாக.
“அண்ணா… மஞ்சு இங்கேயே இருந்திருந்தா, முன்னாடியே இதை நான் செஞ்சிருப்பேன். ஆனா இப்போ எப்படி?” என்றார் தடுமாற்றமாக.
“இப்போதான் கண்டிப்பா செய்யனும் தாமு. இனிதான் அந்த பொண்ணுக்கு ஒரு துணையும், ஆதரவும் தேவை. இதுவரை மகளுக்காகனு வாழ்ந்துடுச்சு. மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சிடுச்சு. இனி மகளோட வாழ்க்கையில தலையிட முடியுமா சொல்லு? அந்த மகளோட பயம் என்னனு புரிஞ்சு, அவங்க சொல்றதை கேட்டா நல்லது..” என்றதும், தாமோதரனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
ரவியை விட்டுப் பிரிந்த இத்தனை வருடங்களில், எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்திருக்கும். அனைத்தையும் தூக்கி எறிந்து, மிகவும் சாதாரணமாக, கஷ்ட ஜீவனத்தில், தன் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறாள்.
அத்தனை கடினமான சூழலில் கூட இன்னொரு வாழ்க்கையை யோசிக்காதவர், இப்போது எப்படி நினைப்பார்.
அதோடு அனைவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தினால், தவறான முடிவை எடுத்து விடுவாரோ என்று பயமாகவும் இருந்தது.
மஞ்சரியின் மனநிலையை சரியாக தாமோதரன் மட்டுமே கணித்திருந்தார்.
இங்கு மருத்துவமனையிலிருந்து நேராக மகளை, தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் சங்கர்.
மகளின் அனைத்து தேவைகளையும் அவரே பார்த்துக் கொண்டார். மகிழினியும் தாயை எதற்கும் தேடவில்லை. தங்களுடைய இத்தனை வலிக்கும், வேதனைக்கும் இவரின் பழிவெறியும் ஒரு காரணம் என்று தெரிந்ததால் வந்த கோபம்.
சங்கரும் மனைவியை மகளின் பக்கத்தில் கூட விடவில்லை. கணவர் மற்றும் பிள்ளைகளின் ஒதுக்கத்திலும், வெறுப்பிலும் முற்றிலுமாக உடைந்து போயிருந்தார் ரஞ்சனி.
அவருக்குமே மைதிலி இந்தளவிற்கு இறங்குவார் என்று தெரியவில்லை.
மகன் மற்றும் மகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால், என்ற கேள்வியே அவரைத் தூங்கவிடவில்லை. கண்ணை மூடினாலே மைதிலி அகானாவை கத்தியில் குத்தியது நியாபகம் வந்தது. அப்போது மைதிலியின் முகத்தில் தெரிந்த குரோதத்தில், ஒரு நிமிடம் நெஞ்சே நடுங்கித்தான் போனது.
இப்போது அதையெல்லாம் யோசித்தபடியே மகளின் அறையில் அமர்ந்திருந்தார்.
அப்போது மகிழினியைப் பார்க்க விஜயா வந்திருக்க, அவரைப் பார்த்ததுமே வேகமாக எழுந்து வரவேற்றார்.
விஜயாவோ எந்தவித விரோதமும் இல்லாமல் ரஞ்சனியிடம் பேச, ரஞ்சனிக்கு குற்றவுணர்ச்சி அதிகமானது.
“நான் உங்கக்கிட்ட நடந்துக்கிட்ட முறை ரொம்ப தப்பு.. அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்களை மாதிரி பெருந்தன்மையா எல்லாம் நான் நடந்துப்பேனான்னு கேட்டா, கண்டிப்பா கிடையாது, இப்போவும் என் பிள்ளைங்களுக்காக சுயநலமாதான் உங்ககிட்ட பேசுறேன். ஏன்னா அவங்க வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம்..” என எந்த ஒழிவு மறைவும் இன்றி மனதில் இருந்ததை பேச, விஜயா மென்மையாக புன்னகைத்தார்.
“எனக்கு உங்களை புரியுது.. நீங்க இந்தளவுக்கு இறங்கி வந்ததே போதும். கொஞ்ச நாள்ல அவங்களும் உங்களை புரிஞ்சிப்பாங்க. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதீங்க. எல்லாம் சீக்கிரமே சரியாகும்..” என சமாதானம் செய்ய, அவர் கையைப் பிடித்து கதறிவிட்டார் ரஞ்சனி.
இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த மகிழினியின் விழிகளும் கசியத் தொடங்கியது.
சில நொடிகளில் தன்னைத் தேற்றிக் கொண்டவர் “உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்..” என நகர,
மகிழினியிடம் வந்த விஜயா, மஞ்சரியைப் பற்றியும், அகானா எடுத்த முடிவைப் பற்றியும் கூற, மகிழினிக்கு அத்தனை மகிழ்ச்சி.
“அண்ணியோட முடிவை தப்புனு சொல்ல முடியாது அத்தை. மஞ்சு அத்தையை எப்படியாவது சமாதனம் செஞ்சு, இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கனும்.. அவங்க இனிமேலாவது சந்தோசமா, நிம்மதியா இருக்கனும்..” என மகிழ்ச்சி பொங்க பேச, மருமகளின் கையைப் பிடித்து, ஆதுரமாக அழுத்திக் கொண்டார் விஜயா.
“உனக்கு இதுல ஒன்னும் வருத்தமில்லயே? உன் மாமா..” என நிறுத்த,
“கண்டிப்பா இல்லத்த.. அவருக்குனு ஒரு லைஃப் இருக்கும் போது, மஞ்சுத்தைக்கும் ஒரு லைஃப் வேணும்ல.. ரெண்டையும் சேர்த்து கன்ஃபியூஸ் ஆகிக்கக்கூடாது. நாங்க தெளிவாதான் இருக்கோம்.. நீங்க மஞ்சு அத்தையை மட்டும் எப்படியாவது சமாளிங்க..” என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, காஃபியோடு உள்ளே வந்தார் ரஞ்சனி.
1 comment
எல்லாரும் முடிவு பண்ணா போதுமா? மஞ்சரி அத்தை முடிவு பண்ண வேணாமா?
😌😌😌
CRVS (or) CRVS 2797