தளிர் 70
நிசாவிடமிருந்து இறங்கிய தசிரா, விக்ரமிடம் சென்று அவன் மடியில் வாகாக அமர்ந்துகொள்ள, அவனும் வழக்கம் போல தன்னோடு அணைத்துக்கொள்ள, இதைப் பார்த்த ஸ்வாதிக்கும் மதிக்கும் வயிறு எரிந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டும் நேரம் இதுவல்ல என்பது போல் குழந்தையைப் பார்த்து சிரிக்க, அதுவும் சிரித்தது.
“பாப்பா அப்படியே உன்னை மாதிரியே இருக்கு விக்கி.” என ஏதோ சொல்ல வேண்டுமே என்று ஸ்வாதி சொல்ல,
“என் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பா.” என அவனும் பதில் கொடுக்க, இந்த பேச்சில் நிசா சட்டென்று உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்துவிட்டாள்.
திடீரென்று எழுந்ததும் எல்லோரும் அவளையேப் பார்க்க, “ரேணும்மா இப்படி சாதாரணமா பேசுறது, அதை கேட்குறது எல்லாம் உங்க எல்லாருக்கும் பழகிருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல. என்னோட வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டு, எதுவுமே நடக்காத மாதிரி என் வீட்டுக்கே வந்து சட்டமா பேசுவா, அதை பார்த்துட்டு நான் இருக்கணும் இல்ல?” என்றவள், விக்ரமிடமிருந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.
“விக்கி, நான் நிசாவுக்கு செஞ்சது…” என ஆரம்பிக்கும் போதே,
“அதை விடு ஸ்வே, உன்னைப் பத்தி சொல்லு. நீ எப்படி எங்க இருந்த?” என விக்ரம் மீண்டும் ஆரம்பிக்க,
‘இவன் இதை நிறுத்தவே மாட்டானா?’ என மனதுக்குள்ளே நொந்து கொண்டவள், “சொல்றேன் விக்கி…” என மீண்டுமாக தன் கதையை ஆரம்பித்தாள்.
“ஆக்சிடென்ட் ஆன வரைக்கும் தான் எனக்கு ஞாபகம் இருந்தது விக்கி. ஆந்திரா பக்கத்துல ஒரு கிராமத்துலதான் இருந்தேன். கொஞ்ச நாள் முன்னாடி திடீர்னு மயங்கி விழுந்துட்டேன். மயக்கம் தெளிஞ்சி பார்க்கும் போது தான், நான் அங்க இருக்குறதே புரிஞ்சது. அவங்க யாரையும் எனக்கு அடையாளம் தெரியல. என்னை பார்த்துக்கிட்டவங்ககிட்ட நான் எப்படி இங்க வந்தேன், எனக்கு என்னாச்சு எல்லாம் கேட்டேன். அவங்கதான் நீ தலையில அடிபட்டு ரோட்டுல கிடந்த, அக்கம் பக்கம் விசாரிச்சோம், யாருக்கும் தெரியல. மயக்கம் தெளிஞ்சு உனக்கும் உன்னைப் பத்தி எதுவும் தெரியல. அதனால இங்க கூப்பிட்டு வந்துட்டோம்னு சொன்னாங்க. இப்போ அங்க என்ன நடந்ததுனு எதுவும் ஞாபகம் இல்ல விக்கி.” என சோகமாக, பாவமாக முடித்துவிட,
“அப்போ அந்த பையன்…?” என மதி ஆரம்பிக்க, அவரது கையைத் தட்டி அமைதியாக இருக்க சொல்லி கண் காட்டிவிட்டாள். அதில் அவரும் அமைதியாகிட,
“யார்… யார் அந்த பையன்?” என ரவி கேட்க,
“என்னை காப்பாத்துனாங்க இல்லையா, அந்த ஊர்ல உள்ளவர். அவர்தான் என்னை கொண்டுவந்து விட்டுட்டு போனார்.” என அவசரமாக சொல்ல,
“ஓ…” என ரவி முடித்துவிட, விக்ரம் இன்னும் யோசனையில் தான் இருந்தான்.
“என்ன விக்கி?” என ஸ்வாதி தடுமாறி கேட்க,
“இல்ல… இல்ல, ஒன்னுமில்ல. ஆனா, நீ முன்னாடி இருந்த மாதிரி இல்ல. இன்னைக்கு உஷாக்கிட்ட நடந்துக்கிட்ட மாதிரி, நீ கோபமா எல்லாம் பேசவே மாட்ட. எல்லார்கிட்டயும் அன்பா அனுசரனையா இருப்ப. இப்போ அதுக்கு ஆப்போசிட்டா இருக்கியா, அதுதான் என்னால நம்ப முடியல, இல்ல ரவி…” என உள்ளுக்குள் சிரித்தபடி நண்பனையும் கூட்டு சேர்க்க,
ரவியும், “எனக்கும் அப்போ இருந்தே சந்தேகம்தான், ஆனா இதை சொன்னா என் அம்மாவே நம்பமாட்டாங்க. யாரோ வந்து ஏமாத்திட்டு போகட்டும், நமக்கென்ன விடு விக்கி.” என்றவன் உதட்டுக்குள் சிரித்தபடி அறைக்குள் சென்றுவிட, எல்லோருக்குமே சிரிப்புதான், ஆனால் வெளியில் காட்டமுடியாதே!
மதி மட்டும் அனைவரையும் குழப்பமாக பார்க்க, ரேணுகா கண்ணைக் காட்ட, அவரும் ஒருவேளை வேறாளாக இருக்குமோ என நினைத்து, “ஆமாம், ஸ்வாதி இப்படி சத்தமா எல்லாம் பேசவே மாட்டா.” என்றுவிட, பல்லைக் கடித்தாள் ஸ்வாதி.
“என்ன சொல்ற விக்கி? நான் அப்படி இருந்தேனா? இல்லையே…” என குழம்பியபடி தலையைப் பிடித்துக்கொள்ள,
“என்னாச்சு ஸ்வாதி? தலை வலிக்குதா? ஹாஸ்பிடல் போகலாமா? அம்மா, கீ எடுங்க…” என விக்ரம் பதட்டமாக எழ,
“இல்ல விக்கி, ஒன்னுமில்ல. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா போதும், வீட்டுக்கு போகட்டுமா?” என எழுந்து மதியைப் பார்க்க, அவரும் குழப்பத்துடனே அவளுடன் கிளம்ப யத்தனிக்க,
“சரி வாங்க, உங்களை வீட்டில் விடுறேன்.” என முன்னே நடக்க, ‘இவன் என்ன இவ்வளவு டார்ச்சர் பண்றான்?’ என தலையில் அடித்துக்கொண்டவள், “வரேன் அத்தை…” என ரேணுவிடம் வலுக்கட்டாயமாக பல்லை இளித்து புன்னகைத்துவிட்டு வெளியில் செல்ல,
“வராத… அப்படியே போயிடு. இந்த வீட்டுல இருந்தும், என் பையன் வாழ்க்கையிலிருந்தும்…” என தன் மொத்த வெறுப்பையும் காட்டி ரேணுகா கூற, அவரை முறைத்துக்கொண்டே போய்விட்டாள் ஸ்வாதி.
அவர்கள் வெளியில் சென்றதும் எரிச்சலுடன் வெளியில் வந்த ரித்தி, “இனி இவ இந்த வீட்டுக்கு வராம பார்த்துக்கோங்கமா. எங்க, அவளைப் பார்த்ததும் கோபத்துல எதுவும் செஞ்சிடுவோமோனு தான் நான் உள்ளயே போய்ட்டேன்.” என்றாள்.
“விடு விடு… இனி, நாமளே கூப்பிட்டாலும் இங்க வரமாட்டானு தான் நினைக்கிறேன். அதுக்குதான் உன் அண்ணன் ஏதோ சொல்லி, அவளைக் குழப்பி அனுப்பிருக்கானே…” என சிரித்த ரேணு, “ரவி, எதுக்கும் மதியை கொஞ்சம் கவனமா இருக்க சொல்லு. இவ்வளவு செஞ்சவ, இன்னும் எது செய்யவும் தயங்கமாட்டா.” என கூற, ரவிக்கும் அதே எண்ணம்தான்.
இங்கு காரில் ஏறியதில் இருந்தே ஸ்வாதிக்கு முகமெல்லாம் வியர்த்து, இதயம் பயத்தில் நின்றுவிடும் போல தடதடவென துடிக்க ஆரம்பித்தது.
விக்ரம் அவர்கள் வீட்டுக்கு வருவது பிரச்சனையில்லை. ஆனால் அவன் வரும் நேரம், அங்கு விக்னேஷ் இருந்து விடக்கூடாது. அப்படியிருந்தால் அடுத்து நடப்பதை அவளால் யோசிக்கக்கூட முடியவில்லை.
‘முன்னாடியெல்லாம் நான் என்ன சொன்னாலும் நம்புவான். இப்போ எல்லாத்துக்கும் கொஸ்டீன் பண்றான். ஷப்பா! இவன்கிட்ட இன்னும் கவனமாத்தான் இருக்கணும். விக்னேஷ்ட்டயும் முதல்ல சொல்லி வைக்கணும்.’ என யோசித்தவள், அவர்கள் தெருமுனையில் இருக்கும் கோவிலும் அதில் உள்ள கூட்டமும் கண்ணில் பட,
“விக்கி நிறுத்து, நிறுத்து… கோவிலுக்கு போகணும். அங்க வரும்போதே அம்மா போகலாம் சொன்னாங்க. நான்தான் திரும்ப வரும்போது போகலாம்னு சொல்லிட்டேன்.” என படபடவென சொன்னவள், காரை நிறுத்தியதும் அவன் அடுத்து பேசும் முன் இறங்கிவிட்டாள்.
மதியும் இறங்கப் போக, “அத்தை கொஞ்சம் கவனமா இருங்க.” என, ஸ்வாதிக்கு கேட்காத குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் விக்ரம்.
விக்ரம் போய்விட்டான் என்று உறுதி செய்த பிறகு, “ம்மா, உனக்கு கொஞ்சமாவது என்மேல பாசமிருக்கா? நான் எப்போ அவங்க சொன்ன மாதிரி அடக்க ஒடுக்கமா இருந்துருக்கேன்? அவங்க எல்லாரும் சேர்ந்து நம்மளை ஏமாத்துறாங்க, அது உனக்கு புரியுதா, இல்லையா? எனக்கு தலையில் அடிபட்டதுனு சொன்னது, பழசை மறந்துட்டேன்னு சொன்னது எல்லாம் கதை. அவங்களுக்காக ரெடி பண்ண கதை. அதை உண்மைனு நம்பி நீயும் என்னை சந்தேகமாக பார்க்குற, என்ன? அப்படி நடந்திருந்தா வந்ததுமே உங்கிட்ட சொல்லிருக்க மாட்டேனா?” என பல்லைக் கடிக்க,
“ம்ம்… எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு ஸ்வாதி.” என மதி குழப்பத்துடனே சொல்ல, “ம்மா…” எனப் பல்லைக் கடித்தவள்,
அவருக்கு அவருடன் இருந்த நாட்களின் பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி, ஒருவழியாக நம்ப வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
இங்கு காரில் வந்த விக்ரமிற்கு விக்னேஷின் அடுத்த மூவ் தசிராவாகத்தான் இருக்கும் என்று நினைத்தான். குழந்தையை கடத்தி மிரட்டுவானோ என்று யோசிக்கும் போதே, இல்லை… அவன் முகத்தை வெளியில் காட்டாமல் ஸ்வாதியின் பின்னே இருந்துதான் வேலை செய்வான். அப்படி செய்தால் கடத்தல் போல எந்த வேலையும் செய்யமாட்டான். குழந்தையிடம் கை வைத்தால் நிசா எப்படி தாங்குவாள் என, பல யோசனைகளுடன் வீடு வந்து சேர்ந்தான்.
விக்ரம் நினைத்த மாதிரியேதான் விக்னேஷின் திட்டங்களும் இருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தனக்கு எதிரே இருந்தவனைப் பார்த்து, “எல்லாம் பக்காதானே?” என கையில் இருந்த ஃபைலை புரட்டியபடியே கேட்க,
“எஸ் சார், எல்லாம் பக்காதான். ஒரிஜினல் ரிப்போர்ட்டே தோத்துடும். ஜட்ஜே ஆர்கியுமென்ட் பண்ணாம, இதை உண்மைனு நம்பிடுவார் சார்.” என பல்லைக் காட்ட,
“ம்ம்… இந்த ரிப்போர்ட்டால பிரச்சனை வந்தா, நான் மட்டும் இல்ல, நீயும் உன்னோட இந்த பிசினசும் தான் போலீஸ்ல மாட்டும் பார்த்துக்கோ.” என, மேஜையில் ஒரு கட்டு பணத்தை விட்டெறிந்துவிட்டு நகர்ந்தவனின் முகத்தில், விக்ரமை நினைத்து குரூரமான புன்னகை நெளிந்தது.
‘விக்ரம் எனக்கே செக் வைக்கிறியா? நான் வைக்கிற இந்த செக்ல நீ… ஹா… ஹா… அதை நான் பார்க்கணுமே…’ என சிரித்தவன், ஸ்வாதி அவனிடம் அங்கு வீட்டில் நடந்த அனைத்தையும் அன்று சொல்லியிருக்க, விக்னேஷின் மூளை விழித்துக்கொண்டது.
விக்ரமின் கோல் ஸ்வாதி இல்லை, நான்தான் என்று அவனுக்கு உடனே புரிய, சிரித்தவனின் மூளையில் தசிராவை வைத்து திட்டம் அழகாக உதயமானது.
***
அன்று அலுவலகத்தில் இருந்தான் விக்ரம். நரேனையும் உஷாவையும் ஹனிமூனுக்காக மாலத்தீவு அனுப்பியிருந்தான். அதனால் வேலை அதிகம் இருந்தது.
நான்கைந்து ஜூனியர்கள் இருந்தாலும், அவனுக்கு நரேன் போல் யாரும் வேலை செய்யமாட்டர்கள் என்ற எண்ணம். அதனால் சில டாகுமென்ட்சை நிசாவிடம் கொடுத்து டைப் செய்ய சொல்லியிருந்தான்.
அதை கேட்பதற்காக அவளுக்கு கால் செய்திருந்தான். “அந்த டைப்பிங் ஒர்க் முடிச்சிட்டா, கரெக்ஷன்ஸ் பார்த்து எனக்கு மெயில் பண்ணு நிசா. நான் பிரிண்டவுட் எடுத்துக்குறேன். க்ளைன்ட் இருக்காங்க, இங்கேயே சைன் வாங்கிடலாம்.” என்றதும்,
“ம்ம்… டூ மினிட்ஸ்ல அனுப்புறேன், நரேன் அண்ணா உங்களுக்கு கால் பண்ணானா? ரெண்டு நாளா எனக்கு பேசவே இல்ல.” என நிசா கேட்டதும்,
“இல்லையே, நானும் பேசல. இப்போ எப்படி டிஸ்டர்ப் பண்றதுனு நானும் கால் பண்ணல.” என்றவனுக்கு, எதுவோ தப்பாக தெரிய, “உன்கிட்ட யார் எப்போ பேசினா? உஷாவா, நரேனா?” எனத் தன் பதட்டத்தை மறைத்து கேட்க,
“ரெண்டு பேருமே தினமும் பேசுவாங்க. சாட்டர்டே நைட் பேசுனாங்க, இன்னைக்கு வெட்னஸ்டே இன்னும் பேசல. அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு, விசாரிங்களேன்…” என்றவளின் குரலில் பயம் இருப்பதை விக்ரம் உணர்ந்து கொண்டான்.
அதை போக்கும் பொருட்டு, “ஹேய் ஹனிமூன் போயிருக்காங்க. அவுட்டிங் போயிட்டு வந்து டயர்டா இருப்பாங்க. ஃப்ரீயாகிட்டு பேசுவாங்க, நானும் அந்த ஹோட்டல்ல விசாரிச்சு பார்க்குறேன். நீ டென்சனாகி அம்மாவையும் டென்சன் பண்ணிடாத. நைட் நான் வரதுக்குள்ள விசாரிச்சிட்டு வரேன், டேக் கேர்.” என்று போனை வைத்தவன் முதல் வேலையாக, நரேன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கால் செய்து விசாரிக்க, அவர்கள் கூறிய பதிலில் விக்ரமின் மூளை, வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“த்ரீ டேய்ஸ்கு முன்னாடியே அவங்க வெக்கேட் பண்ணிட்டு போயிட்டாங்க சார்.” என்றவரின் பதிலில் குழப்பமானவன், மீண்டும் மீண்டும் கேட்க, “சார் வெக்கேட் பண்ணும் போது, அந்த லேடி மட்டும்தான் வந்து லக்கேஜ் எடுத்துட்டு போனாங்க. அவங்க ஹஸ்பென்ட் இல்லை. கேட்டதுக்கு அவருக்கு ஒரு ஒர்க் இருக்கு, முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட் வந்துடுவேன்னு சொல்லிருக்கார்னு சொன்னாங்க.” என அந்த வரவேற்பு பெண் யோசித்து யோசித்து சொல்ல விக்ரமிற்கு தலை வலித்தது.
என்ன நடந்திருக்கும், நரேன் எங்கே? உஷா மட்டும் ஏன் வந்து வெக்கேட் செய்ய வேண்டும்? ஒருவேளை ஆக்சிடென்ட் போல எதுவுமா? அப்படியென்றால் நம்மிடம் தானே முதலில் சொல்லியிருப்பாள். இல்லை, இது ஆக்ஸிடென்ட் இல்லை. கடத்தி வைத்து மிரட்டி…’ என்றவனின் யோசனை அங்கேயே நிற்க,
சட்டென்று தன் போனை எடுத்து ஒருவனுக்கு அழைத்தான். அழைப்பை எடுத்ததும், “விக்னேஷ் இங்கதான் இருக்கானா?” என பதட்டமாக கேட்க,
“எஸ் பாஸ், ரெண்டு பேரும் இங்கேதான் இருக்காங்க. மார்னிங் கூட பார்த்தேன்…” என்றதும்,
“ஓகே” என்றவன், விக்னேஷின் எண்ணை தன் நண்பனுக்கு கொடுத்து, “இந்த நம்பரோட இன்கமிங் அன்ட் அவுட்கோயிங் கால்ஸோட ஃபுல் டீடைல்ஸ் வேணும்.” என அவசரமாக பேச நிசா அழைத்திருந்தாள்.
“நிசா, இங்க ஒரு பிரச்சனை, நான் கால் பண்றேன்.” என கட் செய்திட, உடனே ரேணுகா அழைத்தார்.
‘ஏன் மாறி மாறி கூப்பிடுறாங்க?’ என பதட்டத்துடன் எடுத்து, “ம்மா என்னாச்சு…?” எனவும்,
“நான்தான் சொன்னேனே, அந்த கடங்காரி நம்மளை நிம்மதியா வாழ விடமாட்டானு. பாரு, நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டா.” என அழ,
“ம்மா, என்னனு முதல்ல சொல்லுங்க. இங்கேயும் ஒரு பிரச்சனை…” என பல்லைக் கடிக்க,
“அந்த விளங்காதவ, பத்து மாசம் சுமந்து புள்ள பெத்தவ மாதிரி, குழந்தை எனக்குதான் சொந்தம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கா. அதை நம்பி வீட்டுக்கு வந்த போலீஸ் நிசாவை விசாரனைக்கு கூப்பிடுறாங்க.” என மேலும் அழ,
“ம்மா, நீங்க முதல்ல அழறதை நிறுத்துங்க. நான் கிளம்பிட்டேன், பத்து நிமிசத்துல வந்துடுவேன். அவங்ககிட்ட கோபப்படாம பொறுமையா பேசுங்க. பாப்பாவை ரித்திக்கிட்ட கொடுத்து குட்டீஸ் எல்லாரையும் ரூம்லயே இருக்க சொல்லுங்க. நான் ரவிக்கு சொல்லிடுறேன், நீங்க இப்போ தைரியமா பேசுங்க. அவளையும் தைரியமா இருக்க சொல்லுங்க.” என வேகமாக சொன்னவன், அதைவிட வேகமாக வண்டியில் ஏறி கிளம்பியிருந்தான் வீட்டிற்கு.
***
1 comment
இந்த விக்ரம் களம் இறங்கி அடிக்கிறதுக்குள்ள அந்த விக்கி எல்லாரையும் அடிச்சு தூக்கிடுவான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797