தளிர் 80
“விக்கி, என் ஃப்ரண்ட் புகழ் உனக்குத் தெரியுமில்ல?” என்றதும் விக்ரம் புருவம் சுருக்க,
“புகழ்டா… திருப்புகழ்! குன்னூர்ல கேன்சர் ரிசெர்ச் சென்டர் வச்சிருந்தானே, அவன்தான். அவன் இங்க ஜிப்மர் வந்துருக்கானாம், நான் போயிட்டு வரேன்.” என முகுந்தன் கிளம்ப,
“ஹேய்! இங்க வரச் சொல்லு முகுந்த், நானும் பார்த்து ரொம்ப நாளாச்சே…” என்ற விக்ரமை முறைத்தான் முகுந்தன்.
“டேய், அவன் வேர்ல்ட் ஃபேமஸ் ஆன்கலாஜிஸ்ட். அவன் இந்தியா வர்றதே ரேர். இப்போ ஜிப்மர்ல ஒரு ரேர் கேஸ்ன்னு, நம்ம கவர்ன்மென்டே ரெஃபர் செஞ்சி வர வச்சிருக்காங்க.” என்றதும்,
“ஓ…” என்ற விக்ரம், “ஓகே, நீ போய் அப்படியே டேரா போட்டுடாத, சீக்கிரம் வந்துடு.” என்று விடை கொடுத்தான்.
முகுந்தன் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த வீடும், அவன் மனதும் வெறுமையாய் மாற ஆரம்பித்தது. சூறாவளியாய் சுழன்ற மனம், மீண்டும் நிசப்தியிடமே வந்து நின்றது.
‘என்ன கேட்பேன் அவளிடம், என்ன சொல்வேன் அவளிடம், என்னை பிடிச்சிருக்கா என்று கேட்பேனா, என் குழந்தை மட்டுமல்ல, நீயும் வேண்டும் என சொல்வேனா? என்ன சொல்வேன், என்ன கேட்பேன், எப்படி பெறுவேன் என ஆழ்ந்த யோசனை விக்ரமிடம்.
தேடி வந்த போதெல்லாம் விரட்டி விட்டுவிட்டு, இப்போது என்னோடு வாவென்று எப்படி அழைப்பது? அவளை எப்படி நேரில் பார்ப்பது, எப்படி கையாள்வது எப்படி அணுகுவது என கேள்விகள் பல, விடை தெரியாமல் விழி பிதுங்கி அமர்ந்திருந்தான் அந்த வக்கீல்.
காதல் என்றால் அவ்வளவு ஈசியா? நேசமும் பாசமும் ஈசியா? இல்லை நிசப்தி என்பவள்தான் ஈசியா? அவளைத் தெரிந்திருந்தாலும் புரியவில்லை விக்ரமிற்கு.
விக்னேஷைக் கொன்ற அந்த நொடி கூட, ஸ்வாதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து, அவன் தப்பித்துக் கொள்வதாகத்தான் திட்டம். ஆனால் அந்த நேரம் அவன் மனதில் விருட்சமாய் வளர்ந்த அவனின் குற்றவுணர்ச்சி அதை செய்யவிடவில்லை.
‘உன் குடும்பத்தால் மொத்தமாக அனைத்தையும் இழந்து, யாருமற்ற நிலைக்கு வந்து, உன் குழந்தையை சுமந்து என அவள் பட்ட கஷ்டத்திற்கு நீ என்ன கைம்மாறு செய்யப்போகிறாய் என்ற, அவனது மனசாட்சியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தான், அவளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றுதான், ‘நான் கொலையாளி, என்னை அரெஸ்ட் செய்து கொள்.’ என வசந்த்திடம் கூறினான்.
அதே முடிவுடன் தான் மருத்துவமனைக்கும் வந்தான். ஆனால் மருத்துவமனையில் குழந்தையை அணைத்துப் படுத்திருந்த, தன்னவளைப் பார்த்தபிறகு தன் முடிவில் லேசான ஆட்டம் கண்டான்.
குழந்தைக்கு அவள் இருக்கிறாள், ஆனால் அவளுக்கு? அவளுக்கு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்வி தோன்றிய நொடி, அவன் எடுத்த முடிவில் நிலையாக இருக்க முடியவில்லை.
நிசப்திக்கு எப்படி நியாயம் செய்வது, அவளேத் தன்னிடம் வந்து பேச என்ன செய்ய என்று யோசித்துதான், அந்த திட்டத்தை வசந்த்திடம் கூறினான்.
அந்த திட்டமும் விக்னேஷின் குடும்பத்தாரால் சரியாக வேலை செய்ய, இப்போது நிசப்தி அவனைத் தேடி வரும் நேரத்திற்காக காத்திருக்கிறான். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை, அவள் அவனை ஏமாற்றமாட்டாள் என்ற குருட்டு நம்பிக்கை. வந்துவிடுவாள், என்னைத் தேடி வந்துவிடுவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
சில நீண்ட நிமிடங்கள் அப்படியே யோசனையில் அமர்ந்திருக்க, “அப்பாஆஆ…” என்ற குரலில் சட்டென்று நிமிர்ந்தவன், அவன் மேல் தாவி ஏறிய மகளை நடுங்கிய கைகளோடும், கலங்கிய கண்களோடும் வாரி சுருட்டிக் கொண்டான்.
‘வந்துவிட்டாளா…? என்னைத் தேடி வந்தேவிட்டாளா? என்னை மன்னித்து, என்னிடமே வந்துவிட்டாளா?’ என நினைத்த நொடி, கலங்கிய கண்களில் இருந்து கோடாய் இறங்கியது அவனது விழிநீர்.
“ப்பா… ப்பா…” என்ற மகளை முத்தமிட்டு தனக்குள் வாகாக வைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க, குற்றம் சாட்டும் பார்வையோடு கையை கட்டிக்கொண்டு, அவனுக்கு எதிரே நின்றிருந்தாள் அவனின் நிசப்தி.
ஆம், அவனின் நிசப்தியேதான்! பலமுறை உணர்ந்தாலும் இப்போதுதான் அவளுக்கு உணர்த்த முயலுகிறான்.
தன்னைப் பார்த்ததும் சுதாரித்தவள், “பாப்பா சாப்பிடணும்.” என்றாள் அறிவிப்பாக.
குழந்தையைத் தூக்கிக்கொண்டே கிச்சன் சென்று வேகமாக அனைத்தையும் ஆராய்ந்தான்.
பால் மட்டுமே இருக்க, பாவமாய் திரும்பி பார்த்தான் அவளை. ஆனாலும் நிசப்தி எதுவும் செய்யவில்லை. அவன் அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து, அந்த வீட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
“பழி வாங்குறா…” என முனங்கிக்கொண்டே, “அம்முக்குட்டி, என்ன சாப்பிடுறீங்க?” என குழந்தையிடம் பேசியபடியே பாலை சூடு செய்து, அங்கிருந்த சத்துமாவை போட்டு கூழ் போல செய்து ஆற வைத்து, கதை பேசியபடியே கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட, அதுவுமே அமைதியாக வாங்கிக்கொண்டு சமத்தாக சாப்பிட்டு முடித்தது.
குழந்தைக்குத் தேவையானதை செய்தாலும், பார்வை அடிக்கொருமுறை அவளைத் தொட்டு தொட்டு மீண்டது. அவ்வளவு நேரமும் நிசப்தியிடம் அசைவு இல்லை.
விக்ரமோ, ‘என்னடா இவ, யார்கூட வந்தா, எப்படி வந்தா, மூச்சே விடாம இருக்கா…’ என மனதுக்குள் புலம்பியபடியே, அவள் முன் வந்து நின்றான்.
தாயைப் பார்த்ததும், “ம்மா…” என தசிரா தாவ, அதில் விழித்துப் பார்த்தவள், குழந்தையை வாங்காமல் அவனையே பார்க்க, ‘ஏதோ முடிவோடுதான் வந்துருக்கா போல…’ என நொந்தவன், “அம்முவ வாங்கு, இல்லன்னா அழ போறா.” என்றான் அமைதியாக.
“ஓ… உங்க பொண்ணு சும்மாக்கூட அழக்கூடாது உங்களுக்கு. ஆனா யார் பெத்த பொண்ணோ, எப்படி வேணும்னாலும் கஷ்டப்படுத்தலாம், அழலாம் இல்ல…” என அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சொல்ல, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பாவமாக பார்த்தான், பார் கவுன்சிலையே ஆட்டி வைக்கும் ஆட்டக்காரன்.
விக்ரம் பேசாமல் நிற்கவும் மேலும் கோபம் ஏற, “ம்ம்… என்ன, த க்ரேட் கிரிமினல் லாயர் பதில் சொல்லாம நிக்கிறீங்க?” என நக்கலாக கேட்க,
“ம்ச்…” என்றவன், “இப்போ என்ன வேணும் உனக்கு?” என்றான் நொடியில் தன் திமிரைக் கையிலெடுத்து.
இந்தத் திமிர்தானே எல்லாவற்றிற்கும் காரணம் என யோசித்தவளுக்கு மேலும் மேலும் கோபம் ஏற, அவன் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். அது சிணுங்கிக்கொண்டே அவனின் தோளில் தூக்கத்துக்கு அலைபாய்ந்தது.
“உங்க பொண்ணை தூங்க வச்சுட்டு வந்து பேசுங்க.” என்றாள், பல்லைக் கடித்து குழந்தையைக் கண்ணால் காட்டி.
விக்ரமும் அதை உணர்ந்தவன் போல, பதில் பேசாமல் தன்னறைக்குள் நுழைந்து, குழந்தையைத் தூங்க வைக்கும் முயற்சியில் இறங்க, நிசப்தி எழுந்து வெளியில் வந்தாள்.
அப்போதுதான் அந்த இடத்தையே பார்க்கிறாள். கடற்கரையை ஒட்டிய அழகான வில்லா போன்ற வீடு. சுற்றிலும் இது போலவே சில வீடுகளும் இருந்தன. பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று, அங்குள்ள செக்கியூரிட்டிகளையும் சிசிடிவி கேமாராக்களையும் பார்த்ததும் புரிந்தது.
கரையைத் தொட்டு கரைந்தோடும் அலைகளை வெறித்தபடியே எவ்வளவு நேரம் நின்றிருப்பாளோ, “காஃபி!” என்று கப்பை நீட்டியவனைப் பார்த்து,
“ஓ… நான் அமைதியா இருக்கவும் உங்கூட சமாதானமாகி, குடும்பம் நடத்த வந்துருக்கேன்னு நினைச்சிட்டியோ?” என்றவள் நொடியும் தாமதிக்காமல், அவன் கையிலிருந்த காபியை வாங்கி அவன் முகத்தில் ஊற்றிவிட்டு, நிற்காமல் வீட்டுக்குள் சென்றிருந்தாள் நிசப்தி.
“ஷப்பா! இவளை எப்படித்தான் சமாளிக்க? இந்த ஆம்பளைங்க எல்லாம் ஏன் சன்னியாசம் போறாங்கன்னு இப்போதான் தெரியுது.” என புலம்பியபடியே, முகத்தைத் துடைத்துக்கொண்டே அவளுக்குப் பின்னே வந்தான்.
நிசப்தியோ கிச்சனுக்குள் நுழைந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். இரண்டு மேகி பாக்கெட் மட்டுமே கண்ணில் பட, “ச்சு…” என்றபடியே அதை எடுத்து வெளியில் வைத்துவிட்டு, ஒரு பேனில் நீரைக் கொதிக்க வைத்துவிட்டு, பெரிய வெங்காயத்தை வேகமாக நறுக்க ஆரம்பித்தாள். அவள் வேலையில் அத்தனை வேகம், அதுவே சொன்னது அவளின் பசியை. உருகித்தான் போயிற்று அவனுக்கு.
“சாரி, ரொம்ப பசியா? ஆர்டர் பண்றேன்.” என்றான் குற்றவுணர்வுடன். அவளை நிறையவே படுத்துகிறோம் என புரிகிறது அவனுக்கு.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் இல்லை பெண். தன் கோபத்தையெல்லாம் காய் நறுக்குவதில் காட்டினாள். இப்போது தக்காளியை நறுக்கி முடித்திருந்தாள்.
“நிசா சொன்னா கேளு, இந்த நூடுல்ஸ செய்ய டூ மினிட்ஸ்னு சொல்வாங்க. ஆனா டூ மினிட்ஸ்ல எந்த நூடுல்ஸும் செய்யமுடியாது. நீ போய் பாப்பா கூட இரு, நான் ஆர்டர் பண்றேன்.” என மொக்கையாக பேசி அவளிடமிருந்து கத்தியை வாங்க முற்பட, ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் பேச்சில் மேலும் காண்டாக, அதோடு கத்தியையும் பறிக்க முற்பட்டதில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டவள், சற்றும் யோசிக்காமல் அவன் கையைக் கத்தியால் கீறிவிட்டாள்.
“ஹேய் இடியட்! ஷ்ஷ்… ம்மா…” என கையை உதறிக்கொண்டே, நிசப்தியைக் கடித்துக் குதறுவது போல முறைக்க, அவளோ அங்கு ஒருவன் கதறிக்கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும், கண்டுகொள்ளாமல் சமைக்கும் வேலையை முடித்தாள்.
“கொலைகாரி… கொலைகாரி… எத்தன நாள் இப்படி என்னை கொல்லணும்னு நினைச்சிட்டு இருந்த? ச்சு… ச்சு…” எனக் கத்தியபடியே டேப்பை திறந்து கையை தண்ணீரில் காட்ட, இது எதையும் காதில் வாங்கியது போல காட்டிக் கொள்ளாமல், தட்டில் நூடுல்சை போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டாள்.
“ஷ்ஷ்… என்ன எரிச்சல்? எப்படி இருக்கா பார்? பைத்தியம்… பைத்தியம்… கொஞ்சம் கூட பயமே இல்லாம போய் கொட்டிக்க உக்காந்தாச்சு.” கொஞ்சம் கீழிறங்கி கத்தி பட்டிருந்தாலும், சரியாக மணிக்கட்டில் இருக்கும் நரம்பில் காயம் ஆகியிருக்கும். அந்த வகையில் தப்பிவிட்டான்.
“எப்பா! எப்படி இவ்ளோ கொடூர கோபக்காரியா இருக்கா! இப்போ எப்படி இவளை சமாதானம் செய்ய? கண்டிப்பா அதுக்கு வாய்ப்பே இல்ல. எதாவது பேச போய் வாயை கிழிச்சிட்டா… நோ…! இந்த வாய்தான் என் வாழ்க்கையே! அது இல்லாம… நோ… நோ… அவளே ஆரம்பிக்கட்டும், பெரிய இவன் மாதிரி நான் போய் பேசி கிழி வாங்க வேண்டாம்.” என முணுமுணுத்தபடியே டவலை கையில் சுத்தியபடி, வெளியில் வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
கடுகடுவெனவென எதிரில் அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், மீண்டும் உணவில் கவனமாக, காண்டாகி விட்டான் விக்ரம்.
அதே நேரம் உள்ளே வந்த முகுந்த், நிசாவைப் பார்த்து ஆச்சரியமாக, “ஹேய் நிசாம்மா! எப்போ வந்த? உன் ஹெல்த் ஓகேவா? என்ன நூடுல்ஸ் செஞ்சி கொடுத்தானா? இதெல்லாம் நீ சாப்பிடக்கூடாதுனு தெரியாதா? மறுபடியும் ஹெல்த் இஸ்ஸூஸ் வந்துடும். அவனுக்குத்தான் கொஞ்சமும் அறிவில்ல, அவன் செஞ்சு கொடுத்தா நீயும் சாப்பிடுவியா?” என என்ன நடந்ததென்றே தெரியாமல் இருவரையும் பார்த்து கத்த,
“இப்போ வாயை மூடுறியா, என்னடா…?” என விக்ரம் ஆத்திரமாக கத்த,
“என்ன… என்ன கோபம் உனக்கு? எல்லாத்தையும் மறந்துட்டு உன்னைத் தேடி வந்தவளை சமாதானம் செய்யாம, ஒரு ரசம், கொஞ்சம் சாதம் வச்சுக் கொடுக்க முடியாம, நூடுல்ஸ் செஞ்சி கொடுத்துருக்க… இதெல்லாம் அவளுக்கு சேராது, அது கூட தெரியாதா உனக்கு?” என முகுந்தனும் விடாமல் பேச, இருவரையும் பார்த்து லேசாக சிரிப்பு கூட வந்தது நிசப்திக்கு.
முகுந்தனைப் பார்த்து பல்லைக் கடித்த விக்ரம், “இப்போ நீ வாயை மூடல, கொன்னுடுவேன்டா இடியட்…” என்றவன், “கையில இவ்ளோ பெரிய டவலை சுத்திருக்கேன், அதுவும் ப்ளட்டா இருக்கு. அது உன் கண்ணுக்கு தெரில? அவ கொட்டிக்கிற இத்துனூண்டு நூடுல்ஸ்தான் தெரியுதா?” எனக் கத்தியவன், “ஷ்ஷ்ஷ்…” என்றபடியே தன் கையை உதறிக்கொண்டான்.
அப்போதுதான் விக்ரமின் கையில் சுத்தியிருந்த டவலை பார்த்த முகுந்தன், “ஏன்டா டேய், ஒரு காய் கூட சரியா கட் பண்ணத் தெரியாதா? பாரு, கையை கட் பண்ணி வச்சிருக்க, உன்னையெல்லாம்…” என்று முகுந்த் முடிக்கும் முன்னே,
அவன் மீது, “டேய்…” என பாய்ந்திருந்தான் விக்ரம்.
இவர்கள் வாயாடுவதை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த நிசப்தி, முகுந்தனின் கடைசி பேச்சில் என்ன முயன்றும் முடியாமல் பக்கென்று சிரித்துவிட, முகுந்தனின் கீழே இருந்த விக்ரம், மலர்ந்து சிரித்த பெண்ணவளையே, விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
***
1 comment
அது சரி, இவனுக்கு இந்த நேரத்துலயும் அவளை சைட் அடிக்க தோணுது பாருங்களேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797