14
வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பலவிதம் என்றாலும், இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒருவிதமான அதிசய உணர்வு.
சென்னை வந்த பிறகு சாருவின் வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் பயணித்தது. செல்வமும் ரெஜினாவும் இரண்டு வாரங்கள் இருந்துவிட்டு, நாங்குநேரி கிளம்பியிருந்தனர். சாருவும் வழக்கம் போல் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு பெங்களூர் பற்றிய ஞாபகங்கள் துளியும் இருக்கவில்லை.
செல்வத்தின் திருமணம் அதையெல்லாம் மறக்க வைத்திருந்தது. அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் தாத்தாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியும், அவளை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைக்க, வேறெதுவும் அவளுக்கு ஞாபக அடுக்கில் இல்லை.
இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், ஒரு புது எண்ணில் இருந்து அவளுக்கு கால் வர, யோசனையோடே எடுத்து ஹலோ சொல்ல, அந்தப்பக்கம் கேட்ட குரலில் அவளுக்குத் திக்கென்றது.
“ஹலோ, நான் சிவகுரு பேசுறேன்மா, திருவோட அப்பா. நீ சாரு தானே?” என்ற அந்தக் குரலில் திடுக்கிட்டவள், “திருவா?” என இவள் திருதிருவென முழித்தாள்.
“திரு தான்மா. திருப்புகழ்! பெங்களூர்ல பார்த்தேன்னு சொன்னானேமா. நீ கூட நல்லா பாடுவனு சொன்னான்.” என அவர் மூச்சு விடாமல் பேச,
பெங்களூர் என்றதும் தான் அவளுக்கு அனைத்தும் விளங்க, அய்யோ அந்த வில்லங்கமானவனோட அப்பாவா இது. கால் பண்ணுவாங்கனு சொன்னான்ல, மறந்தே போயிட்டேன். இப்ப எப்படி சமாளிக்க என யோசித்து ஒரு வழியாக, “சாரி… சாரி அங்கிள்… முன்னாடியே சொல்லிருந்தாங்க, நான் மறந்துட்டேன். சாரி அங்கிள், சொல்லுங்க அங்கிள்.” என பேச்சுக்கு பேச்சு அங்கிள் சொல்லவும் சிவகுருவிற்கு உருகி விட்டது.
ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கு ஏங்கி கொண்டிருந்தவர், புகழுக்குப் பிறகு அவரின் மனைவிக்கு குழந்தை பிறப்பது சிரமம் என்றுவிட, வேறெந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாரில்லை சிவகுரு. அதனால் அடுத்தக் குழந்தையைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை அத்தம்பதியினர்.
சிவகுருவின் மனைவி தனக்கு ஒரு குழந்தைதான் என்பது உறுதியானதால், மகனை எங்கும் விடமாட்டார். தன் மகிழ்ச்சி, துக்கம் அனைத்தையும் அவனிலே கரைக்க விரும்புவார். அவனைச் சுற்றியே இருப்பார், இம்மியும் நகர விடமாட்டார் அவனை.
ஆனால் சிவகுரு அப்படியில்லை. என்னதான் மனதை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டாலும், விசேஷ நாட்களில், கோவில்களில் எங்கேனும் பட்டு சரசரக்க ஓடி ஆடும் பெண் குழந்தைகளைப் பார்த்தால் ஏங்கிப் போவார். அதை மனைவி அறிய வெளிக்காட்டவும் மாட்டார். அந்த நேரம் தன்னை நிந்தித்த கடவுளை அவர் நிந்திப்பார். இப்போது சாரு பேசவும் அந்த குறையெல்லாம் பறந்து போனது போலொரு எண்ணம்.
“அங்கிள், லைன்ல இருக்கீங்களா? அங்கிள்… அங்கிள்…” எனப் பலமுறை அவள் கத்திய பிறகே நினைவுக்கு வந்தார்.
“எஸ்… எஸ்மா… இட்ஸ் ஓகேமா, எனக்கு உன்னால ஒரு உதவி வேணும் சாரும்மா. உங்க வீட்டு அட்ரஸ் தர்றியா? நான் வீட்ல வந்து பெரியவங்க இருக்கும் போது வந்து பேசுறேன்.” என சிவகுரு மகிழ்வாகப் பேச,
“ஹான்!” என அதிர்ந்தவள், “எஸ் அங்கிள், எதுவும் பிரச்சனையா? நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் செய்ய முடியும்?” என யோசனையாகத் தயங்கி தயங்கிக் கேட்க,
“நோ… நோ… இது முழுக்க முழுக்க எனக்கான ஹெல்ப் தான்டா. இத்தனை வருசத்துல இப்பதான் என் மகன் உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்கான். தப்பா எதுவும் இல்ல, பெரியவங்கக்கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்.” என அவர் பேச, சாருவிற்குத் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் பைத்தியம் பிடித்தது.
‘இவர் பேசுவதையெல்லாம் பார்த்தால், ஏதோ பெண் பார்க்க வருவது போல இருக்கே? அம்மாடியோவ்!’ என பயந்தவள் வேகமாக, “பரவாயில்லை அங்கிள் சொல்லுங்க, வீட்டுல தாத்தா மட்டும் தான். அவர் அதிகம் வெளிய வரமாட்டார். என்ன ஹெல்ப்னு சொல்லுங்க, என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.” என தான் நினைத்தது போல், எதுவும் இருக்கக் கூடாதே என பதட்டமாகப் பேச, இவளின் பதட்டமெல்லாம் அவருக்குப் புரியவில்லை.
சாரு வேறு மாதிரியாக யோசித்திருக்கிறாள் என்றும் நினைக்கவில்லை அவர். அதனால் மிகவும் சாதாரணமாக, “உன்னோட வீடியோ எல்லாம் பார்த்தேன்டா. தம்பி போட்டு காண்பிச்சான். உன் குரல் அப்படியே தேனா இனிச்சதும்மா, அந்தக் குரல்ல என்னப்பன் கந்தனோட கீர்த்தனைகளைக் கேட்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை வந்துடுச்சும்மா. அதனால எனக்கு ஒரு ஆல்பம் போட்டுத் தர்றியா?” என அவர் மிகவும் மகிழ்வாகப் பேச,
சாருவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘தாத்தாவிடம் மாமாவிடம் கேட்காமல் எப்படி? அதனால் தான் அவர் வீட்டில் பேசவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அது புரியாமல் லூசு மாதிரி எதை எதையோ யோசித்து டென்சன் ஆகியிருக்கேன். ச்சே… லூசு… லூசு…’ எனத் தன்னையேக் குட்டிக் கொண்டவள், “சாரி அங்கிள், இன்னைக்கு உங்ககிட்ட நெறைய சாரி கேட்குற மாதிரி இருக்கு. இது பெரிய விஷயம், நானா முடிவெடுக்க முடியாது. தாத்தாகிட்ட பேசிட்டு சொல்லட்டுமா?” என அவள் இழுக்க,
“அதெல்லாம் வேண்டாம்மா, நானே வந்து கேட்குறேன். அதுதான் சரியா இருக்கும், நீ அட்ரஸ் மட்டும் சொல்லு.” என அவர் முடிக்க, சாருவிற்கும் வேறு வழி இருக்கவில்லை. அட்ரஸை கொடுத்து இவள் பயந்து போய் பக்பக்கென்று இருக்க,
அடுத்த ஒரு மணி நேரத்தில் சாரு கொடுத்த விலாசத்தில், விஸ்வத்தின் முன்னே அமர்ந்திருந்தார் சிவகுரு. ‘அம்மாடி! என்ன இவ்ளோ ஸ்பீடா இருக்காங்க?’ என சாரு திகைக்கும் அளவிற்கு இருந்தது அவரின் நடவடிக்கை.
பெரியவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி, தான் வந்ததைப் பற்றிய விவரம் சொல்ல, விஸ்வத்திற்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவருக்கு அதிர்ச்சி! ஆனால் ஆனந்த அதிர்ச்சி! அவருக்குத் தன் மனைவியைப் போலவே பாடும் சாருவின் குரலை இப்படி கேட்க வேண்டுமென்று பெரிய ஆசை. ஆனால் தன் ஆசையை அவளிடம் திணிக்க விரும்பாமல், அதைக் கோடிட்டு கூட காட்டியிருக்கவில்லை.
ஆனால் இன்று இந்த வாய்ப்பு அதை மறுக்க அவர் விரும்பவில்லை. அதனால், “இப்போ சாருவுக்கு செமஸ்டர் ஸ்டார்ட் ஆகப் போகுது. முடிஞ்சதும் நீங்க சொன்ன சூட்டிங், ரெக்கார்டிங் எல்லாம் வச்சுக்கலாமா?” என மறைமுகமாகத் தன் சம்மதத்தை வெளியிட, சிவகுருவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.
“ரொம்ப சந்தோசம் ப்பா, என்னை உங்க மகனா நினைச்சுக்கோங்க. எந்தவித பயமோ, சங்கடமோ இல்லாம நீங்க சாருவை அனுப்புங்க. நான் பத்திரமா பாத்துக்குறேன். என்னை முழுசா நம்பலாம்.” எனவும், விஸ்வத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனோ அந்த நேரம் அவருக்கு தன் மகன் முரளியின் நினைவு, ஞாபகம் வந்து அவரை அலைக்கழித்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இறந்த கொடூர நாளும் நினைவுக்கு வந்தது.
அந்த நினைவுகள் தந்த தாக்கத்தில் பெரியவர் அமைதியாகிவிட, சாருவுக்கும் அப்போதைய அவரின் நிலை புரிய, அந்த நேர சூழ்நிலையை கையிலெடுத்துக் கொண்டு, சிவகுருவிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.
சிவகுருவிற்கும் அந்த நேர சூழ்நிலை புரிய, அதை மாற்றும் பொருட்டு சாருவின் பேச்சுக்கு ஏதுவாகத் தன்னைப் பற்றி, தன் குடும்பம், தொழில், மகன், அவனின் படிப்பு என அனைத்தையும் சொல்ல, விஸ்வமும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.
பின் ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல, கேட்ட சிவகுருவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஒரு குடும்பத்தை மொத்தமாக பறிகொடுத்த வேதனை, அவர்கள் இருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிய, அந்தப் பேச்சை மாற்றும் பொருட்டு, தன்னுடைய ஆல்பம் எப்படி இருக்க வேண்டும் என சொல்ல ஆரம்பித்தார்.
“உன் செமஸ்டர் லீவு ஸ்டார்ட் ஆனதும், அறுபடை வீட்டுக்குப் போகலாம் சாரும்மா. ஒவ்வொரு கோவில்ல வச்சும் எடுக்கலாம். திருச்செந்துர் தான் ஃபர்ஸ்ட். அங்க இருந்து ஸ்டார்ட் செய்யலாம்.” என தன் திட்டங்களைக் கூறி, ஒருவாறு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
அடுத்து வந்த நாட்களில் சிவகுரு, விஸ்வத்திடம் மிகவும் நெருக்கமாகி விட்டார். மகன் என்று, தான் பேச்சுக்கு சொல்லவில்லை என்பதை நிரூபித்திருந்தார். திருநெல்வேலியில் இருக்கும் தன் கிளையைப் பார்க்க போகும் போதெல்லாம், நாங்குநேரி சென்று வருவதும் வாடிக்கையாகி இருந்தது. செல்வத்திடமும் பேசியிருக்க, இருவரும் கூட நண்பர்களாகியிருந்தனர்.
சாருவின் செமஸ்டர் எக்ஸாமும் முடிந்து, அவர்கள் நாங்குநேரி கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான். விஸ்வமும் சாருவும் முன்னமே ஊருக்குச் செல்ல, இரண்டு நாட்கள் கழித்து சிவகுரு தன் சூட்டிங் ஆட்களோடு செல்வது என தீர்மாணிக்கப்பட, அதன்படி தான் அனைத்தும் நடந்தது.
சமீபமாக சிவகுரு, செல்வத்தின் வீட்டில் தங்குவது வழமையாக இருக்க, இப்போதும் அப்படியே நினைத்துக் கிளம்பியிருந்தார். ஒரு தொல்லையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு போவதை மறந்து விட்டிருந்தார்.
ஆம், இந்தப் பயணத்தின் சூத்திரதாரியே புகழ்தான். சிவகுருவிற்கு முருகனின் மேலிருந்த பக்தியை, தனக்கு சாதகமாக வைத்துக் கொண்டு, அவர் மனதில் ஆல்பம் தயாரிக்கும் ஆசையை உருவாக்கி, அதன்பிறகு தான் சாருவின் வீடியோக்களை போட்டுக் காட்டினான்.
அவரும் மகன் நினைத்ததைப் போலவே, சாருவின் குரலில் மயங்கிப் போய்விட்டார். அதற்கடுத்து நடந்த திட்டங்கள் அனைத்தும் அவனது தான். தந்தையை சாருவின் வீட்டிற்கு அனுப்பியது, ஆல்பம் பற்றி பேசியது, அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து கொண்டது, சூட்டிங் நடக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்தது வரை அனைத்தும் அவன்தான்.
தந்தையும் மகனும் இப்படி ஒரு வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என, வசந்தாவிற்குத் தெரியவே இல்லை. சிவகுரு, அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம் என சொல்ல, ‘நோ’ என ஒரே வார்த்தையில் சொன்னவன், அவரிடம் சர்ப்ரைஸாக காட்ட வேண்டும் என தந்தையின் வாயை அடைத்து விட்டான். அதுவே பிற்காலத்தில் வசந்தாவிற்கு கோபமாக உருவெடுத்து, சாருவின் மீது இறங்கப் போகிறது என அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அடுத்து நடந்த அனைத்தையும் தடுத்திருக்கலாமோ, என்னவோ?!
சாரு ஊருக்கு சென்ற இரண்டாம் நாள் சிவகுருவும் புகழும் அவளின் வீட்டின் முன்னே நின்றிருந்தனர். சிவகுரு வருவார் என்றுத் தெரியும், ஆனால் இவன் எப்படி என, தனக்கு முன்னே ஸ்டைலாக நின்று, தலைக் கோதி, கண்ணைச் சிமிட்டியவனை அதிர்ச்சியோடு பார்க்க,
அவனோ, “ஹாய் ஸ்வீட்டி!” என வாய்க்குள் சொன்னவன், பின் சத்தமாக, “என்ன ஜூனியர்? என்னைப் பார்த்து ஸ்டன் ஆகிட்ட?” என சீண்டும் குரலில் கேட்க, அதுவரை அதிர்ச்சியில் விரிந்த விழிகள், இப்போது முறைப்புக்கு சென்றது பெண்ணுக்கு.
“அன்னைக்கு டாட், திருவோட அப்பா பேசுறேன்னு சொல்லும் போது திருதிருனு முழிச்சியாம். நீ அப்படி முழிச்சா எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பார்த்தேன், சேம் இப்போ முழிக்கிற மாதிரிதான் அப்போ முழிச்சிருப்ப, ரைட்!?” என கொஞ்சம் கோபமான குரலில் கேட்க,
அந்த குரலில் நிமிர்ந்து பார்த்தவள் அவன் முகத்தையே நோக்கி, அவனின் குரலில் அப்படி என்ன இருந்தது எனத் தேட, சட்டென சுதாரித்தவன்,
“என்னவாம், மேடம் ரொம்ப ஹாட்டா இருக்கீங்க? நான் வந்தது பிடிக்கலயோ? கன்ஃபார்மா பிடிக்கல, ரைட்!? அதுதான் உன் ஃபேஸ்ல வர ரியாக்சனை பார்த்தே தெரியுதே…” என மேலும் அவளை வம்பிழுத்துச் சீண்ட,
“ரொம்பத் தெரியும் உங்களுக்கு, வாயை மூடுங்க.” எனப் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பியவள், “வாங்க!” என வாயெல்லாம் பல்லாகச் சொல்ல, அவள் செய்கையில் சட்டெனப் பூத்தக் குறும்பு புன்னகையோடு அவளைப் பின்தொடர்ந்தான் திருப்புகழ்.
***
1 comment
அடப்பாவி..! என்னாம்மா ப்ளான் போட்டு பக்காவ காயை நகர்த்தியிருக்கான் இந்த புகழ்..!
😀😀😀
CRVS (or) CRVS 2797