அத்தியாயம் 3
பேய்க்கே புது பிரச்சனை
காசிநாதன் சுவரில் சாய்ந்தபடியே கபிலனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எழுபத்தைந்து வருடங்களாக அந்த மாளிகைக்குள் கால்வைத்த எல்லா மனிதர்களும், அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியிருந்தார்கள். சிலர் வாசலிலேயே மயங்கி விழுந்தார்கள். சிலர் மந்திரவாதியை அழைத்து வந்தார்கள். சிலர் பூசாரியை அழைத்து வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருந்தது.
அவர்கள் அந்த வீட்டைப் பார்த்தார்கள்.
கபிலன் மட்டும் அந்த வீட்டை வாங்க நினைத்தான்.
அந்த வித்தியாசம்தான் காசியின் நிம்மதியை மெதுவாகக் கலைத்துக் கொண்டிருந்தது.
கபிலன் தரையில் விழுந்த டிபன் பாக்ஸைத் துடைத்து மீண்டும் அருகில் வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு நீளமான அளவுகோலை எடுத்தான்.
“என்னடா இது?”
என்று காசி புருவத்தைச் சுருக்கினான்.
மல்லிகா சிரிப்புடன் பார்த்தாள்.
“உன்னை அளக்க வரல. வீட்டை அளக்க வந்திருக்கான்.”
கபிலன் நடுக்கூடத்தின் ஒரு மூலையில் நின்று சுவரிலிருந்து சுவருக்கு அளவெடுக்க ஆரம்பித்தான்.
“ஒன்பது… பத்து… பதினொன்னு…”
என்று வாய்விட்டு எண்ணிக்கொண்டே நடந்தான்.
காசி அவன் பின்னாலேயே நடந்தான்.
“மல்லிகா… இவன் என்ன பண்ணுறான்?”
“உன் வீட்டுல Room Booking போடப் போறான் போல.”
“அட… இது என் வீடுடா!”
அந்தக் கோபத்தில் காசி அருகில் கிடந்த பழைய பித்தளைத் தட்டைப் பார்த்தான்.
“இப்போ இதைப் பறக்கவிட்டா… கண்டிப்பா பயந்துருவான்.”
மல்லிகா இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள்.
“சரி… இந்தத் தடவை என்ன காரணம் சொல்லப்போறான்னு நானும் பார்க்கிறேன்.”
காசி மெதுவாக கைகளை உயர்த்தினான்.
அந்தப் பித்தளைத் தட்டு முதலில் சிறிது நடுங்கியது.
பிறகு மெதுவாக தரையிலிருந்து மேலெழுந்தது.
காசி முகத்தில் வெற்றிப் புன்னகை.
“ஆமாம்… ஆமாம்… இப்படித்தான்…”
தட்டு காற்றில் மிதந்தபடியே கபிலனை நோக்கிப் போனது.
கபிலன் அப்போது அளவுகோலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் திடீரென்று மேலே ஏதோ நகர்வதை கவனித்தான்.
காசி மனதுக்குள் எண்ணினான்.
“இப்போ… இப்போ… பயம் ஆரம்பம்…”
ஆனால் கபிலன் அமைதியாகக் கையை நீட்டி அந்தத் தட்டைப் பிடித்தான்.
“நல்ல Quality.”
என்று சொல்லிக்கொண்டு தூசியை ஊதினான்.
காசி அதிர்ச்சியில் உறைந்தான்.
“பறந்துட்டு வந்த தட்டை… கையால பிடிச்சிட்டானே?”
கபிலன் தட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
“Pure Brass போல.”
அவன் பையில் இருந்த நோட்டுப் புத்தகத்தை மீண்டும் எடுத்தான்.
“Antique Items – Sell separately.”
என்று எழுதியான்.
காசி இரண்டு அடிகள் பின்னால் தடுமாறினான்.
“மல்லிகா…”
“ஹூம்?”
“இவன்… வீட்டை மட்டும் வாங்க வரல.”
“ஆமா.”
“வீட்டுக்குள்ள இருக்குற சாமானையும் விற்கப் போறானா?”
மல்லிகா சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“நீ இன்னும் இரண்டு நாள் சும்மா இருந்தா… உன்னையும் Antique Collection-ல சேர்த்துருவான்.”
என்றாள்.
காசி தன்னிச்சையாக தன் மார்பைப் பிடித்துக்கொண்டான்.
“அடப்பாவியே…”
கபிலன் மெதுவாக மேல்மாடியை நோக்கிப் பார்த்தான்.
“அங்க என்ன இருக்குமோ…”
என்று சொல்லிக்கொண்டே படிக்கட்டில் காலை வைத்தான்.
காசி பதறினான்.
“இல்ல… மேல மட்டும் வரக்கூடாது.”
“ஏன்?”
“அங்கதான்…”
அவன் சொல்லாமல் நின்றுவிட்டான்.
மேல்மாடிதான் காசியின் உலகம்.
அவன் எழுதிய தோல்வி டைரிகள்…
பழைய புகைப்படங்கள்…
அவன் பாதுகாத்து வைத்திருந்த சில நினைவுகள்…
எல்லாமே அங்கே இருந்தன.
“மல்லிகா…”
“என்ன?”
“எப்படியாவது இவனை மேலே வர விடக்கூடாது.”
மல்லிகா அமைதியாகக் கபிலனைப் பார்த்தாள்.
“அதுக்கு முதல்ல… நீ ஒரு தடவையாவது அவனைப் பயமுறுத்தணும்.”
காசி ஒரு நிமிடம் யோசித்தான்.
பிறகு திடீரென்று முகம் மலர்ந்தது.
“ஒரு ஐடியா.”
“சொல்லு.”
“படிக்கட்டே உடைஞ்ச மாதிரி சத்தம் வரவைக்கிறேன்.”
“அப்புறம்?”
“இவன் கீழே இறங்கிடுவான்.”
“சரி… பண்ணு.”
காசி கண்களை மூடி முழு கவனத்தையும் பழைய மரப்படிக்கட்டின் மீது செலுத்தினான்.
அடுத்த நொடியே…
கிர்ர்… கிரக்… கிரீச்…
என்று படிக்கட்டு முழுக்க பயமுறுத்தும் சத்தம் எழுந்தது.
கபிலன் நின்றான்.
காசியின் முகத்தில் நம்பிக்கை திரும்பியது.
மல்லிகாவும் இந்த முறை என்ன நடக்குமோ என்று ஆர்வமாகப் பார்த்தாள்.
கபிலன் மெதுவாகக் குனிந்து படிக்கட்டைப் பார்த்தான்.
பிறகு தன் செருப்பைக் கழற்றிவிட்டு, முதல் படியில் மெதுவாகக் காலை வைத்தான்.
“ஹ்ம்…”
என்று தலையசைத்தான்.
“இவ்வளவுதானா…”
என்று சொல்லிவிட்டு திரும்பிப் பையைத் திறந்தான்.
ஒரு சிறிய எண்ணெய் டப்பாவையும் தூரிகையையும் எடுத்தான்.
காசி குழப்பமடைந்தான்.
“இப்போ… என்ன பண்ணப் போறான்?”
கபிலன் முதல் படிக்கட்டில் எண்ணெய் தடவ ஆரம்பித்தான்.
“சத்தம் வராம இருக்கணும்னா… இதுல கொஞ்சம் Oil போட்டா போதும்.”
என்றபடியே ஒவ்வொரு படிக்கட்டிலும் பொறுமையாக எண்ணெய் தடவ ஆரம்பித்தான்.
காசி தலையில் கை வைத்துக்கொண்டு மெதுவாக தரையில் உட்கார்ந்தான்.
“மல்லிகா…”
“என்ன?”
“நான் பேயா இருக்கேனா…”
ஒரு பெருமூச்சு விட்டான்.
“இல்ல… Maintenance Supervisor-ஆ இருக்கேனா?”
காசிநாதன் படிக்கட்டின் ஓரத்தில் கால்களை மடக்கி அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு மனிதனைப் பார்த்து பயப்பட வேண்டிய நிலை வந்திருந்தது.
அவன் பயந்தது கபிலனை அல்ல.
அவன் கையில் இருந்த கருவிப்பெட்டியைத்தான்.
“மல்லிகா…”
“ம்…”
“அந்தப் பெட்டிக்குள்ள இன்னும் என்னென்ன இருக்குமோ?”
“ஏன்?”
“ஜன்னலுக்கு கீல்… படிக்கட்டுக்கு எண்ணெய்… அடுத்தது சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சிடுவானோன்னு பயமா இருக்கு.”
மல்லிகா சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“அப்படிச் செஞ்சா இந்த மாளிகை இவ்வளவு அழகா இருந்திருக்கும். நீயும் எழுபத்தைந்து வருஷமா தூசியோட சேர்ந்து வாழ்ந்துட்டு இருக்க மாட்ட.”
என்றாள்.
காசி பதில் சொல்லவில்லை.
கீழே, கபிலன் ஒவ்வொரு படியிலும் எண்ணெய் தடவி முடித்துவிட்டு, மகிழ்ச்சியோடு மேலே ஏற ஆரம்பித்தான்.
ஆச்சரியம்.
இப்போதுவரை “கிரீச்… கிரக்…” என்று அலறிய படிக்கட்டு, இப்போது சத்தமே இல்லாமல் அமைதியாக இருந்தது.
காசி தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டான்.
“நான் பயமுறுத்த சத்தம் போட்டேன்…”
“ஆமா.”
“இவன் அதையே சரி பண்ணிட்டான்.”
“ஆமா.”
“என்னோட பேய் வேலைக்கு இவன்தான் பெரிய எதிரி.”
மல்லிகா மெதுவாகச் சொன்னாள்.
“இல்ல காசி…”
“அப்போ?”
“உன்னோட அவசரம்தான் உனக்கு எதிரி.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, கபிலன் மேல்மாடியை அடைந்துவிட்டான்.
மேலே இருந்த நீண்ட வராண்டாவை பார்த்தவுடன் அவன் கண்கள் விரிந்தன.
“ஆஹா…”
என்று ரசித்தான்.
ஜன்னல்கள் வழியாக நிலவொளி உள்ளே விழுந்து, தரையில் நீண்ட வெள்ளைக் கோடுகளை வரையிருந்தது.
மரத்தாலான கூரை இன்னும் உறுதியாக இருந்தது.
சுவரில் பழைய ஓவியங்கள்.
மூலையில் தூசி படிந்த பெரிய கண்ணாடி.
அனைத்தையும் பார்த்த கபிலன், மனதிற்குள் கணக்குப் போட ஆரம்பித்தான்.
“இதை Clean பண்ணணும்…”
“இந்த Window-க்கு Glass மாத்தணும்…”
“இந்த Hall-ல Antique Theme…”
காசி திகைத்தான்.
“மல்லிகா…”
“ம்?”
“இவன் வீடு பார்க்கல…”
“பின்ன?”
“என் கனவை redesign பண்ணிட்டு இருக்கான்.”
அதே நேரத்தில், கபிலன் வராண்டாவின் கடைசி அறையை நோக்கி நடந்தான்.
அந்த அறையின் கதவு மட்டும் முழுவதும் மூடியிருந்தது.
அது…
காசியின் அறை.
அவன் எழுபத்தைந்து வருடங்களாக யாரையும் உள்ளே விடாத இடம்.
கதவின் முன்னால் கபிலன் நின்றான்.
காசியின் முகத்தில் பதற்றம்.
“அந்த ரூம் மட்டும் வேண்டாம்…”
கபிலன் கைநீட்டி கதவைத் தள்ளினான்.
கதவு திறக்கவில்லை.
இன்னொரு முறை முயன்றான்.
இன்னும் திறக்கவில்லை.
காசி நிம்மதியாக மூச்சுவிட்டான்.
“பூட்டிருக்கே…”
மல்லிகா அமைதியாகச் சிரித்தாள்.
“பூட்டு இல்ல காசி.”
“அப்போ?”
“நீதான் உள்ளே இருந்து பிடிச்சிருக்க.”
காசி அப்போதுதான் கவனித்தான்.
பதட்டத்தில் தெரியாமலே கதவை இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
“ஓ…”
அவன் மெதுவாக கைகளை எடுத்தான்.
அந்த நொடியே…
கிர்ர்…
என்று கதவு தானாக திறந்தது.
கபிலன் ஒரு கணம் நின்றான்.
காசி கண்களை மூடிக்கொண்டான்.
“இந்த தடவை… கண்டிப்பா பயப்படுவான்…”
கதவு முழுவதும் திறந்தது.
அறைக்குள் பழைய மேஜை.
புத்தகங்கள்.
சில மங்கிய புகைப்படங்கள்.
ஒரு மூலையில் பெரிய மரப்பெட்டி.
அவற்றையெல்லாம் நிதானமாகப் பார்த்த கபிலன், உள்ளே நுழைந்தான்.
அவன் முதல் பார்வை சுவரில் மாட்டியிருந்த பழைய கருப்பு-வெள்ளைப் புகைப்படத்தின் மீது விழுந்தது.
அதில் மீசையுடன் சிரித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன்.
அவன்…
காசிநாதன்.
கபிலன் புகைப்படத்தின் தூசியை மெதுவாகத் துடைத்தான்.
“இந்த வீட்டோட Owner போல…”
என்று மெதுவாகச் சொன்னான்.
காசி அப்படியே உறைந்து நின்றான்.
எழுபத்தைந்து வருடங்களாக…
யாரும் அந்தப் புகைப்படத்தைத் தொட்டதில்லை.
யாரும் அதில் இருந்த முகத்தை கவனித்ததில்லை.
முதல் முறையாக ஒரு மனிதன் அந்தப் படத்தை மரியாதையோடு துடைத்துப் பார்த்தான்.
காசியின் முகத்தில் இருந்த கோபம் மெதுவாகக் குறைந்தது.
அவன் புகைப்படத்தை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த அமைதியை உடைத்தது கபியின் அடுத்த வாக்கியம்தான்.
“மீசை செம்மயா இருக்கு…”
காசியின் முகத்தில் பெருமை.
“நல்ல Height-உம் இருந்திருப்பாரு…”
காசி நிமிர்ந்து நின்றான்.
“இந்த Photo-வை Reception Hall-ல வச்சா நல்லா இருக்கும்…”
காசி மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
ஆனால் அடுத்த நொடியே கபிலன் தன் நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.
அதில் எழுதினான்:
“Old Owner Photo – Frame மாற்ற வேண்டும். மீசைக்கு கொஞ்சம் Touch-up தேவை.”
காசி சில நொடிகள் அப்படியே நின்றான்.
பிறகு மெதுவாக மல்லிகாவைத் திரும்பிப் பார்த்தான்.
“மல்லிகா…”
“என்ன?”
“இவன்…”
“ம்?”
“என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுறான்…”
மல்லிகா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.
“காசி…”
“என்ன?”
“இன்னும் இவன் இங்கே ஒரு மணி நேரம்தான் இருக்கான்.”
“ஆமா.”
“ஆனா…”
சிரிப்பை அடக்கிக்கொண்டு அவள் சொன்னாள்.
“இந்த வேகத்துல போனா… நாளைக்குள் இந்த மாளிகை புதுசா மாறிடும்.”
காசி பெருமூச்சு விட்டான்.
“அது பரவாயில்ல…”
“பின்ன?”
“என்னை Renovation-ல சேர்க்காம இருந்தா போதும்…”
1 comment
எனக்கென்னவோ, விட்டால் இந்த கபிலன் காசியையே லவ் பண்ண வைச்சிடுவான் போலவே.
😀😀😀
CRVS (or) CRVS 2797