22
வசந்தா அன்று காலை வேளையில் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தார். வீட்டிற்கு தேவையானது எல்லாம் எப்போதும் அவர் சென்று வாங்குவது தான் வழக்கம். மகன் இன்னும் சில வாரங்களில் இந்தியா வந்துவிடுவான். அதற்கு முன் அவனுக்கு பிடித்தது எல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை தாய்க்கு.
வீட்டிற்கு தேவையானதை எல்லாம் வாங்கிவிட்டு அவர் வெளியில் வர, கடையின் பணியாள் அதை எடுத்து காரில் பின்னால் வைத்தான். அவனுக்கு நன்றி சொல்லி பர்சில் இருந்து இரண்டு தாளை எடுத்து அவனிடத்தில் கொடுக்க, வாங்க மறுத்தவனின் கையில் வைத்துவிட்டு, வண்டி ஏறப் போனவரின் கண்ணில் அடுத்த கடையில் நின்றிருந்த ஜெனி கண்ணில் பட்டாள் கையில் குழந்தையுடன்.
செல்வினை அவருக்கு பிடிக்காது என்றாலும், ஜெனியின் கையில் இருந்த குழந்தை அவரை ஈர்த்துவிட, தன் இயல்பை மீறி அவர்களை நோக்கிச் சென்றார்.
“ஜெனி!” என்ற அவரின் அழைப்பில் திரும்பியவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் தான். அவரைப்பற்றி தான் அவளின் கணவன் நிறையவே சொல்லி இருக்கிறானே! அதனால் வந்த அதிர்ச்சி தான், இவர் நம்மிடம் பேசுவாரா என்று.
“ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
“ஹ்ம்ம்… நல்லா இருக்கேன், உன் குழந்தையா?”
“ஆமா ஆன்ட்டி.”
“எத்தனை மாசம் ஆகுது? துறுதுறுனு பார்க்குறான்.” என்றவர் குழந்தையின் கன்னத்தை வருடினார். மனதில் தன் மகனுக்கும் ஒரு மகனிருந்தால் என்ற எண்ணமே ஓடியது. செல்வினுக்கும் திருப்புகழுக்கும் ஒரே வயது தானே என்று நினைத்தார்.
“எட்டு மாசம் ஆகுது ஆன்ட்டி. புகழ், சிவகுரு சார்னால தான் நாங்க நல்லா இருக்கோம். எல்லாத்தையும் விட சாரு அவங்களால தான், நான் இப்போ உயிரோடவே இருக்கேன் ஆன்ட்டி.”
“உங்க மருமக கிரேட் ஆன்ட்டி, யாருமில்லாம நான் டெலிவரி பெயின் வந்து அவஸ்தை பட்டப்போ, சாருதான் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணா. பத்தாததுக்கு அவளோட ரத்தத்தையும் கொடுத்து என்னை காப்பாத்தி இருக்கா. அவளோட ரத்தம்தான் இப்போ என் உடம்புல ஓடுது. நான் அவர்கிட்ட சொல்லிட்டே இருப்பேன், புகழ் அண்ணா ரொம்ப லக்கின்னு. இப்போ சொல்றேன் ஆன்ட்டி, நீங்களும் ரொம்ப லக்கி. அவ்வளவு தன்மையான, எந்த பாகுபாடும் பார்க்காத ஒரு பொண்ணு உங்களுக்கு மருமகளா கிடைச்சது…” என்று, அவள் தன் போக்கில் மனமார்ந்து சாருகேஷி பற்றி உளறியிருக்க, இங்கு சிலையாய் சமைந்து நின்றது வசந்தாவே தான்.
‘என்ன நடக்கது இங்க? எனக்கு தெரியாம என்ன நடக்குது? இல்லையில்லை… நடந்துச்சு.’ என்றவர் சட்டென்று சுதாரித்து, “நான் வர்றேன்.” என்று காரில் ஏறிவிட்டார்.
ஜெனியும் வேண்டுமென்றல்லாம் அவரிடம் இதை சொல்லியிருக்கவில்லை. அவரே வந்து பேசவும் அவளும் மடை திறந்த வெள்ளம் போல் பேச்சு வாக்கிலேயே கொட்டிவிட்டாள் உண்மையை. அதன் விளைவுகள் பற்றி அறிந்திருந்தால், அவரிடம் பேசி கூட இருந்திருக்க மாட்டாள். புகழ், சாருவின் பிரிவிற்கு தானும் ஒரு காரணம் ஆகப் போகிறோம் என்று அறியாது, அவளும் வீட்டிற்கு கிளம்பினாள்.
வசந்தா நேரே வீட்டிற்கு கிளம்பியவர், வாங்கி வந்த பொருளை கூட எடுத்து வைக்கச் சொல்லாமல், நேரே உள்ளே வந்து ஹால் சோபாவில் அமர்ந்தவர் தான். எண்ணம் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.
‘இவ மருமகனு சொல்றான்னா, அப்போ என்னமோ இருக்கு. என் புள்ளையும் நான் கூப்பிட கூப்பிட வராம அப்பப்போ சாக்கு சொல்லிட்டு தானே இருந்தான் என்று, எல்லா புள்ளிகளையும் இணைக்க ஆரம்பிக்க, அப்படித்தான் என்று உறுதியாக உள்மனம் சொல்ல, யோசிக்கவே இல்லை சட்டென்று எழுந்துவிட்டார்.
‘எங்க இருப்பா இப்போ அவ?’ என்ற யோசனை. வசந்தாவிற்கு தன் வீட்டிற்கு வந்த பெண்தான் சாரு என்றெல்லாம் யோசனை செல்லவேயில்லை. அவள் முகம் கூட அவருக்கு மறந்திருந்தது எப்போதோ.
செல்வினுக்கு அழைத்துவிட்டார் உடனே, “சொல்லுங்க மேம்!” என்றவனிடம் “எங்க இருக்க?”
“சார் கூட கொச்சின் வந்திருக்கேன் மேம், நேத்தே சொல்லிட்டு தானே மேம் கிளம்பினோம்.”
“ஓ…!” என்றவர், “எப்போ ரிட்டர்ன்?”
“டூ டேஸ் ஆகும் மேம், எனி ப்ராப்ளம் மேம்?”
“இல்லை… ஹான்…!” என்று அவர் இழுக்க, “சொல்லுங்க மேம்.”
“நீ வேற ஊர்ல தானே இருந்த, எப்போ சென்னை வந்த?” என்றார் கேள்வியாய். வழக்கமாய் அவன் எங்கிருக்கிறான் என்பதெல்லாம் அவர் கேட்டதேயில்லை. அதைப் பற்றிய அக்கறையெல்லாம் அவருக்கு இருந்ததேயில்லை.
அவன் சில மாதங்களாய் தான் சென்னையில் இருக்கிறான் என்று அவர் அறிவார். அதற்கு முன்பு அவன் வேறு கிளையில் இருப்பதாய் சிவகுரு சொன்ன ஞாபகம் அவருக்கு. அவர் –பெங்களூர் என்று சொல்லியிருந்தார் தான், ஆனால் அந்த அளவிற்கு அவருக்கு நினைவில்லை அதெல்லாம். தேவையானது என்றால் நினைவில் இருக்கும், அவரைப் பொறுத்தவரையில் அது அனாவசியம் தானே!? அதனால் நினைவில் இல்லை அவருக்கு.
“என்னாச்சு மேம்?” என்றான் அவன் அப்போதும்.
“ஒண்ணுமில்லை… அவர் சொன்னாரு, நீ வேற பிரான்ச்ல இருந்தன்னு… அதான் கேட்டேன்.”
“ஆமா மேம், லாஸ்ட் சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி வரை பெங்களூர்ல தான் மேம் இருந்தேன்.” என்றவன், “சார்கிட்ட பேசணுமா மேம்?” என்று கேட்க, “நான் அப்புறம் பேசிக்கிறேன்.” என்றவர் போனை வைத்துவிட்டார்.
உடனே முடிவெடுத்து அவர் நேரே கிளம்பி இருந்தார் பெங்களூருக்கு. அடுத்து தயாராய் இருந்த விமானம் அவரை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் தரையிறக்கி இருந்தது.
மனம் முழுதும் கோபமும் ஆத்திரமும் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணமும் முழுக்க முழுக்க ஓடியது. கண்மண் தெரியாத கோபம் எழுந்தது முகமறியா அப்பெண்ணின் மீது. அவர் சம்மந்தப்பட்ட தன் மகனிடம் தான் நடந்ததை கேட்டிருக்க வேண்டும்.
அதை விடுத்து அவரின் கோபம் அனைத்தும் சாருவின் மீதே திரும்பி இருந்தது. அவதான் எல்லாத்துக்கும் காரணம், அவதான் என்று ஓடியது. ஏர்போர்ட்டில் இருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
மகன் பெங்களூரில் படிக்கச் செல்கிறான் என்றதுமே, சிவகுரு அவனுக்காய் அங்கு தனியே இருந்த ப்ளாட் ஒன்றினை விலைக்கு வாங்கி இருந்தார். அது வசந்தாவின் பெயரில்தான் இருந்தது.
மகன் பெங்களூரில் இருந்து தன்னை பார்க்க வராததும் கூட, அவளால் தான் என்ற எண்ணம் அவருக்கு. வீடு வரும் வரையிலும் கூட, அவளுக்கு மனதால் அவ்வளவு வசைப்பாடிக் கொண்டுதான் வந்து சேர்ந்திருந்தார்.
பெண்ணவளோ சென்னையில் இருந்து கிளம்பிய புயல், அவள் வாழ்க்கையை சூறாவளியாய் சுழற்றி அடிக்கப் போவது அறியாமல், மிகுந்த மகிழ்ச்சியில் நடமாடிக் கொண்டிருந்தாள்.
தன்னவன் இன்னும் சில தினங்களில் வந்துவிடுவான் என்பதே பெரும் உவப்பாய். அன்று விடுமுறை தினம் என்பதால், வீட்டில் தான் இருந்தாள் பெண். சிவகுரு சென்ற வாரம் மருமகளை வந்து பார்த்து சென்றிருந்தார்.
செல்வினின் சனி, ஞாயிறு பொழுதுகள் எப்போதும் பெங்களூரில் தான். மனைவி, மகனுடன் வந்துவிடுவான். இந்த வாரம், தான் கொச்சின் செல்வதால் அடுத்த வாரம் வந்து விடுவதாக சொல்லியிருந்தான்.
சோம்பலான தினமாக தோன்றியது அவளுக்கு அன்று. கையில் இருந்த துணியால் தூசியை துடைத்து கொண்டிருந்தவள் காதில், அழைப்பு மணியின் சத்தம் கேட்க அதை வைத்துவிட்டு வாசலுக்கு சென்றாள்.
கண்ணாடி வில்லையின் வழியாக வெளியில் பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள். ‘அத்தை இங்க எப்படி?’ என்று யோசித்தாலும், கதவைத் திறக்காமல் இருக்க முடியாது. மூடிய கதவுக்கு பின்னே எத்தனை நாள்தான் ஒளிந்திருப்பது? எதையும் எதிர்த்து நின்று பழக வேண்டுமே!
மூடியிருந்த கதவை மெல்ல திறந்தாள் அவள். அவளைப் பார்த்தவருக்கு அப்பட்டமான அதிர்ச்சி. கணவரின் நண்பரின் மகள் என்று அறிமுகம் செய்து வைத்த பெண்ணல்லவா இவள்? ‘அப்போ… அப்போ எல்லாரும் கூட்டு சேர்ந்து என்னை ஏமாத்தி இருக்காங்க.’ என்று நினைக்க நினைக்க, ஆத்திரம் சிகரத்தின் உயரத்தைத் தொட்டது அவருக்கு.
“உள்ள வாங்க!” என்றவளின் கன்னம் வலிக்க, அவர் அறைந்த அறையில் ஒரு சுற்று சுற்றி கீழே விழப் போனவளை, வேலை செய்யும் பெண்மணி சட்டென்று வந்து தாங்கிப் பிடித்திருந்தார்.
“யாரும்மா நீங்க, எங்கம்மாவை அடிக்குறீங்க? சாருக்கு போன் பண்றேன், நான் இப்பவே…” என்றவரை முறைத்தார் வசந்தா.
“வெளியே போ நீ முதல்ல…” என்று அப்பெண்மணியைப் பார்த்து இரைந்தார்.
“நான் ஏன் போகணும்?”
“போடின்னா… வேலைக்காரி, எனக்கு சமமா பேசுவியா நீ?” என்று கத்தினார்.
“நீங்க சொல்லி நான் ஏன்மா கேட்கணும்?” என்றவர் தன் இடையில் வைத்திருந்த பட்டன் போனை எடுத்தார், சிவகுருவிற்கு அழைக்க.
“உனக்கு அடுத்த அடி விழுறதுக்குள்ள போடி இங்க இருந்து…” என்றவர், நெருங்கி வந்திருந்தார் அப்பெண்ணை நோக்கி.
“ஜெயாம்மா!” என்றவள் தலையசைத்தாள் எதுவும் பேச வேண்டாம் என்பது போல். அவளால் பேசக்கூட முடியவில்லை. அவள் கன்னத்தில் வசந்தாவின் விரல் தடம் அப்படியே பதிந்து போயிருந்தது. காது வேறு நொய்ங் என்று சத்தம் போட்டது பேரிரைச்சலாய்.
“போ வெளியே…!”
“நீங்க யாரு? நீங்க சொல்லி எல்லாம் நான் போக முடியாது.” என்று அப்போதும் ஜெயாம்மா அங்கு இருந்து நகராது நிற்க, “ஏய்!” என்று பல்லைக் கடித்த வசந்தா, “நானா? நான் யாருனு தெரியுமா? நீ நிக்குற இந்த வீட்டோட முதலாளி. என் வீட்டுல வந்து என்னையே எதிர்த்து பேசுவியா நீ?”
“ம்மா, புகழ் அய்யா…” என்றவள் சாருவைப் பார்க்க, “என் புள்ளடி அவன்.” என்கவும் வாயை மூடிக் கொண்டார். ஆனால் அங்கிருந்து நகருவதாய் இல்லை அவர்.
“ஜெயாம்மா நீங்க போங்க, நான் பார்த்துக்குறேன்.” என்றாள் சாரு கலங்கிய விழிகளுடன். அவளைப் பார்க்கவே பாவமாய் இருக்க, “ம்மா…!” என்றார் அவர்.
“போங்க…” என்று அவள் சொல்ல, மனமேயில்லாமல் அங்கிருந்து வெளியேறினார் அவர்.
“நான் போகச் சொன்னது அவளை மட்டுமில்லை, உன்னையும் தான் போடி வெளியே…” என்றார் ஆங்காரமாய்.
“அதை உங்க புள்ள வந்து சொல்லட்டும்.” என்றாள் அவள் திடமாய்.
“என் புள்ள சொல்லணுமா உனக்கு? அவ்வளவு தூரம் ஆகிப்போச்சா? அவனை என்ன பண்ணிடி மயக்கின? என்னை கூட பார்க்க வராம என் புள்ளைய என்ன பண்ணி மயக்கின? அவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணை நான் பார்த்து வச்சிருக்கேன், போயும் போயும் நீயெல்லாம் அவனுக்கு ஈடா? அழகா இருந்தா போதுமா? ஹ்ம்ம்… அதை காட்டி தானே மயக்கின…” என்று அவர் இகழ்ந்தார்.
“அவன் சொத்தை பிடுங்கலாம்னு நினைச்சியா? இல்லை, டாக்டர் ஆச்சே, கோடி கோடியா சம்பாதிப்பான்னு நினைச்சு அவனை வளைச்சு பிடிச்சியா? எதை காட்டி மயக்கின? இல்லை, மயங்கின?” என்று அவர் பேசப்பேச, அவளுக்கும் கோபம் வந்தது கட்டுப்படுத்த முடியாது.
திருவின் அன்னை என்று முடிந்தவரை அமைதி காத்தாள் பெண். “நானும் டாக்டர் தான்…” என்றாள் மெல்ல.
“டாக்டர்னா என் பையனுக்கு ஈடாகிடுவியா நீ?” என்றார் நக்கல் வழிந்த குரலில்.
“எனக்கு என்ன குறை? நான் ஏன் அவருக்கு இணையில்லை?”
“தகுதி, தராதரம் என்னடி உனக்கு?”
“நான் ஒண்ணும் ஒண்ணுமில்லாதவ இல்லை.”
“பின்ன கோடிஸ்வரியா நீ? நீ கோடிஸ்வரியாவே இருந்தாலும், நான் நினைக்கிற பொண்ணை தான் என் பையனுக்கு கட்டி வைப்பேன், நீ போடி வெளியே…” என்றார்.
“ஏற்கனவே தாலி கட்டினவளை போகச் சொல்ல உங்களுக்கு உரிமையில்ல.” என்று அவள் பேச, அப்போது தான் அவள் கழுத்தில் இருந்த அந்த செயினை பார்த்தார் இவர். ‘இது தன் கணவரின் அன்னையின் தாலியை வைத்து…’ அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை அவரால்.
அவள் கழுத்தில் இருந்த செயினை வெளியே இழுக்க, டாலர் மட்டுமாக இருந்த செயின் வெளியே வந்தது. “ஹான்! இதான் உன் தாலியா?” என்றார் இளக்காரமாய். தன்னை மீறி இன்னும் எதுவும் நடந்துவிடவில்லை என்ற இறுமாப்பு அவரிடத்தில் இப்போதும்.
ஆனால் அதற்கு மேலும் நடந்துவிட்டது என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. “இதுதான் என்னைப் பொறுத்தவரை தாலி.” என்றாள் அவளும்.
“டாலர் செயின்ல போட்டுக்கிறதுக்கு பேரு தான், உங்க ஊருல தாலியாடி வெட்கங்கெட்டவளே…! இது என் புருஷனோட அம்மாவோடது. அது உன் கழுத்துக்கு வந்திருக்குன்னா, நீ வச்சிருக்கறது என் மகனையா, என் புருஷனையா?” என்று அவர் நரம்பில்லாமல் வார்த்தையை விட, உள்ளே மொத்தமாய் உடைந்து போனாள் பெண்ணவள்.
அவர் பேசியது அவளுக்கு பெரும் கோபத்தை வரவழைத்திருக்க, “ஏய்!” என்றிருந்தாள்.
“அப்போ நான் நினைச்சது தான் உண்மை. அதனால தான் என் புருஷன் உன்னை கூட்டிட்டு, என் வீட்டுக்கே வந்திருக்காரு. என்னவொரு திண்ணக்கம் இருக்கணும் உனக்கு? அப்பன், மகன்னு ரெண்டு பேரையும் வளைக்க திட்டம் போட்டு வந்த நாயே! போடி இங்க இருந்து…” என்று அவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை.
“நான் ஏன் போகணும்? நீங்க போங்க இங்க இருந்து. உங்க புள்ளையும் புருஷனும் தான் என்னை கூட்டிட்டு வந்தாங்க. அவங்க சொல்லட்டும், என்னை போகச் சொல்லி. நீங்க சொல்லாதீங்க, முதல்ல அவங்க இல்லாத நேரத்துல வந்து என்கிட்ட நீங்க பேசினதே தப்பு.
உங்களுக்கு எது பேசணும்னாலும் அவங்ககிட்ட பேசிக்கோங்க. இதுக்கு மேல எதுவும் பேசுனீங்க அவ்வளவு தான்!” என்று அவளும் விரல் நீட்டி எச்சரிக்க, அவள் விரலைப் பிடித்தவர் அதை வளைக்கப் போனார்.
சுலபமாய் அதை தள்ளிவிட்டவள், “உங்ககிட்ட இனி எனக்கு பேச எதுவுமில்லை.” என்றாள்.
“என்னை நீ வெளிய போக சொல்வியாடி? அவ்வளவு திமிரா உனக்கு? என் புருஷன் உன் பின்னாடி வர்றார்னு தானே இப்படி பண்ற.”
“சீய்… அசிங்கமா பேசாதீங்க. எனக்கு தெய்வம் மாதிரி மாமா, அவரை பேசாதீங்க. நான் மனுஷியா இருக்க மாட்டேன். போனா போகுதுனு பார்த்தா ரொம்ப பேசுறீங்க நீங்க. தகுதி தகுதினு பேசுறீங்க, உங்களுக்கு என்ன தகுதி இருக்கு எங்க சிவகுரு மாமாவுக்கு மனைவியாக? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என் புகழுக்கு அம்மாவா இருக்க? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஆமா, நீங்க எப்படி ஆட்டோ ஓட்டிட்டு இருந்த எங்க மாமாவை கல்யாணம் பண்ணீங்க? அப்போ எங்க போச்சு உங்க தகுதி? வசதியா எங்க மாமா இருக்கவும் தானே, நீங்க கல்யாணம் பண்ணிகிட்டீங்க. என்னை பேசுறீங்க… ச்சே! நீங்கலாம் ஒரு பொண்ணா?” என்று அவளும் ஆத்திரம் மிக கேட்டாள்.
“சிவகுரு மாமா எனக்கு அப்பா மாதிரி, அவரையும் என்னையும் சேர்த்து பேசுறீங்க. அப்போ உங்க கணவர் உங்களைவிட்டு போற அளவுக்கு தான், நீங்கலாம் அவர் கூட வாழ்ந்து இருக்கீங்களா என்ன?” என்று அவள் கேட்டுவிட, ஆடி போய்விட்டார் வசந்தா.
மிக அவமானமாக உணர்ந்தார் சிறு பெண்ணின் பேச்சால். அவர் பேசியது தவறு என்று உணராமல் போனவர், தன்னை அவள் பேசிவிட்டாளே, அவளை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்று, கோபமும் ஆத்திரமும் அழுகையும் ஒருங்கே எழுந்தது அவருக்கு.
அவரே ஆத்திரத்தில் தான் வாயை விட்டார். அப்படியாவது அவள் சென்றுவிடுவாள் என்று எண்ணித்தான் பேசினார். அவளோ அழிச்சாட்டியமாய் தன்னையே வெளியேற்ற பார்க்கிறாளே!
“போங்க நீங்க இங்க இருந்து.” என்றாள் நிமிர்வாய்.
“போறீங்களா இல்லை…” என்றவள் முடிக்கவில்லை. ஆத்திரமாய் அவளை உறுத்து விழித்தவர் வெளியேறிவிட, ஓவென்ற கேவல் அவளிடத்தில்.
அவள் அழுது கரைந்திருக்க, அலைபேசியின் அழைப்பு மணி விடாது ஒலித்தது. ஆங்காரமாய் வெளியே சென்றிருந்த வசந்தா உடனே அழைத்தது மகனுக்கு தான்.
“திரு…” என்றவரின் கேவல் உறங்கிக் கொண்டிருந்தவனின் உறக்கத்தை மொத்தமாய் களவாடி சென்றிருந்தது.
“அம்மா… அம்மா… என்னாச்சும்மா?” என்று பதறினான் எதிர்முனையில் மகன்.
“அந்த பொண்ணு என்னைய நிறைய பேசிட்டாடா. உங்கப்பா ஆட்டோ ஓட்டுறவர், அவரைப் போய் எப்படி கல்யாணம் பண்ண? காசுக்கு தானே கல்யாணம் பண்ண, உனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டுட்டா.” என்றார் அவர்.
“அம்மா நீங்க யாரை சொல்றீங்க? சரியா சொல்லுங்க.”
“சாருவை தான் சொன்னேன் திரு. உங்க விஷயம் தெரிஞ்சு அவகிட்ட பேச வந்தேன். அம்மாகிட்ட சொல்லாம நீங்க பண்ண காரியம் எங்க வந்து விட்டிருக்குனு பாருங்க. அவளுக்குலாம் என்ன தகுதி இருக்குனு என்னை பேசுறா. நான் உயிரோட இருக்கணுமா இன்னும்? அய்யோ! என்னால தாங்க முடியலையே!” என்று, அவர் மகனிடம் தான் பட்ட அவமானங்களை மட்டுமே வரிசைப்படுத்த, இங்கு புகழுக்கோ சாருவின் மீதான கோபம் அதிகரித்தது.
வசந்தா தான் அவமானப்படுத்திய எதையும் பெரிதாய் சொல்லாது, அவள் பேசியதை மட்டும் ஏற்ற இறக்கங்களுடன் சொல்லியவர், அழுது கொண்டே போனை வைத்துவிட, மகன் பதறி அன்னைக்கு அழைக்க, போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
கலவரமாகிப் போன புகழ், தந்தைக்கு அழைத்து அன்னையை பார்க்கச் சொல்ல, மனைவியை அறிந்தவராக, “புகழ் அம்மாவுக்கு ஒண்ணுமிருக்காது, நான் பார்த்துக்கறேன். நீ சாருவை பாரு.” என்று சொல்ல, “ஹ்ம்ம்… பாக்குறேன்பா, அவளையும் பார்க்கணும் தானே…” என்ற மகனின் வித்தியாச குரல் அவர் உணர்ந்திருக்கவில்லை.
திரு அடுத்து அழைத்தது தன் மனைவிக்கு தான், அதீத கோபம் அவனுக்கு. அன்னையை அழ வைத்துவிட்டாளே… அவனுக்கு தெரியும், அவன் அம்மா எப்படி என்று. எதுவாக இருந்தாலும் என்னிடம் தானே சொல்லியிருக்க வேண்டும். அவள் பேசுவாளா என் அம்மாவை என்றுதான் இருந்தது அவனுக்கு.
“ஹலோ!” என்று அழுகையோடு அவள் பேச, அதெல்லாம் அவன் மண்டைக்கு ஏறவே இல்லை. “எங்கம்மாவை வீட்டை விட்டு வெளிய போக சொன்னியா?” என்றான் எடுத்த எடுப்பில்.
“அவங்க தான் என்னை…” அவன் அவளை பேசவிடவில்லை.
“சொன்னியா?”
“ஆமா சொன்னேன்…” என்ற அவள் பதில் அவன் கோபத்தை இன்னும் கூட்டியது.
“ஏன்?” என்றான் ஒற்றைச் சொல்லாய்.
“அவங்க தப்பா பேசினாங்க…”
“அவங்க மட்டும் தானா?” என்றவன், “சரி, அவங்க பேசினா நீ யார்கிட்ட சொல்லி இருக்கணும், என்கிட்ட தானே? அதை விட்டு பெரியவங்கனு மரியாதை இல்லாம என்னவும் பேசுவியா? எங்கப்பா ஆட்டோ ஒட்டுனவர், அவரை எப்படி கட்டிக்கிட்டீங்கனு கேட்டியாமே? முதல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு, அதெல்லாம் கேட்க? சீய்… அசிங்கமா இல்லை உனக்கு?” என கோபத்தில் வார்த்தையை விட்ட, கணவனின் பேச்சு அவளை ஒட்டுமொத்தமாய் நொறுக்கியது.
“என்னை சொல்லணும்? நான் தானே லவ் லவ்ன்னு உன் பின்னாடி சுத்தினேன். தப்பு என்னோடது தான்…” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, அவன் மனைவியோ அலைபேசியை எப்போதோ துண்டித்திருந்தாள்.
அவன் அன்னை கேட்டதை செய்ய துணிந்துவிட்டாள். யாருக்காக அவள் பொறுத்தாளோ, அவனே அந்த காதல் தவறென்று பேசிவிட்டானே. இனி என்ன இருக்கிறது, என் வாழ்வில்? யாருக்காய் இதெல்லாம் என்று எண்ணியவள் முடிவெடுத்துவிட்டாள்.
இனி அவன், அவள் வாழ்வில் இல்லையென்று மிகப்பெரிய முடிவை எடுத்து விட்டாள். அவள் மட்டும் முடிவெடுத்து விட்டால் போதுமா? இருவருக்குமான இணைப்பு பாலமாய் அவர்களின் மகன், அவள் வணங்கும் முருகன் பாலமுருகனாய் அவள் வயிற்றில் கருவாகி இருந்தானே? அதை உணராதவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாள். அதற்கு காரணமானவனும் கோபத்தில் தான் விட்ட வார்த்தையை நினைத்து வருந்தினான்.
நான்தான் உலகம்னு இருக்கவகிட்ட நான் பேசினது தப்பு என்று எண்ணம் வெகுவாய் ஓட, இந்தியாவிற்கு கிளம்ப ஆயத்தங்கள் செய்தான் உடனே. கிடைத்த அடுத்த பிளைட்டில் கிளம்பியிருந்தவனுக்கு, டெல்லி வரை செல்லும் விமானமே கிடைத்திருக்க கிளம்பிவிட்டான் அவன்.
***
1 comment
அவன் அம்மா தான் முட்டாள்ன்னா.. இவனும் அப்படித்தானோ..?
😔😔😔
CRVS (or) CRVS 2797