அகானா – 95
“மேம்… இந்த கேஸ்ல காணாம போனது என்னோட டீம் மேட் சௌந்தர்.” என்றான் உதய்.
அகானா சில நொடிகள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“அவரோட ஃபேமிலி இப்போ எங்க இருக்காங்க?”
“வைஃப் ஹேமா பெங்களூர்ல ஒரு ஐடி கம்பெனில வொர்க் பண்றாங்க மேம். ஒரு பெண் குழந்தை இருக்கு. டெலிவரிக்குப் பிறகு, இப்போதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி பெங்களூர் போயிருக்காங்க. அதுக்கு முன்னாடி இங்கதான் இருந்தாங்க. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணிட்டுருந்தாங்கன்னு சௌந்தரோட அம்மா சொன்னாங்க.”
“ஹ்ம்ம்…” மேசையில் விரல்களால் மெதுவாகத் தட்டியபடி யோசித்தவள், “ஏன் திடீர்னு பெங்களூர் போனாங்க? மாமியார் வீட்ல ஏதாவது பிரச்சினையா? ஃபேமிலி இஷ்யூஸ் ஏதாவது இருக்கா?”
“இல்ல மேம். ரிலேடிவ்ஸ்ல தான் மேரேஜ். ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் தான். எந்த பிரச்சினையும் இல்ல.”
“சௌந்தருக்கு கூடப் பிறந்தவங்க?”
“ஒரே ஒரு சிஸ்டர். ரஷ்யால மெடிசின் படிக்கிறா. அப்பா எக்ஸ் மிலிட்டரி. அம்மா ஸ்கூல் டீச்சர்.”
“ஓகே.” ஒரு நொடி அமைதியாக இருந்த அகானா திடீரென நிமிர்ந்தாள். “நாம ஹேமாவை விசாரிக்கணும்.”
“இங்க வரச் சொல்லட்டுமா மேம்?”
“நோ.” அவளது பதில் உடனடியாக வந்தது.
“அவங்களை இங்க வர வைக்க வேண்டாம். நமக்கு நம்பிக்கையான ஆட்களை பெங்களூர்ல இருக்காங்கல்ல, அவங்களையே போகச் சொல்லுங்க, அங்கேயே விசாரிக்கட்டும்.”
“மேம்…?”
“அவங்க ரியாக்ஷன், பாடி லாங்குவேஜ், பதில் சொல்லும்போது முகத்துல வர்ற மாற்றம்… எல்லாத்தையும் நான் பார்க்கணும்.”
“அதாவது…?”
“முழு இன்டரோகேஷனும் வீடியோ ரெக்கார்ட் ஆகணும்.”
“ஓகே மேம்.” உதய் சம்மதமாகத் தலையசைத்தான்.
“ஆனா நீங்க கிளம்பற இந்த டூ வீக்ஸ்க்குள்ள எப்படி முடியும்?”
அகானாவின் உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“3 டேய்ஸ் மேக்சிமம் முடிச்சிடலாம் உதய்.”
“எப்படி மேம்?”
“நம்மள பாத்துட்டு இருக்கிறவங்க கவனத்தை முதல்ல திருப்பணும்.” அவளது கண்களில் குறும்பும் தந்திரமும் மின்னின.
“அந்த MLAவோட ஆட்களுக்கு இந்த இன்வெஸ்டிகேஷன் பத்தி கொஞ்சம் லீக் பண்ணுங்க.”
“மேம்…?”
“ஆமா. அவங்க உங்க பின்னாடி சுத்தட்டும்.”
“அப்போ…?”
“நான் வேற வழியா உள்ளே போய் கேஸை முடிக்கிறேன்.”
உதய் சிரித்துவிட்டான்.
“மேம்…”
“எஸ் உதய். இந்த கேஸ் ஆல்மோஸ்ட் முடியிற ஸ்டேஜ்க்கு வந்தாச்சு..” நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்தவள் தொடர்ந்தாள். “இன்னைக்கு MLAவும் அவரோட பிரதரும் சென்னை கிளம்புறாங்க.”
“ஆமா மேம்.”
“அவங்க கவனம் முழுக்க அங்கதான் இருக்கும்.”
“ஹ்ம்ம்…”
“அதனால நீங்க அந்த ரிப்போர்டரோட வீடு, ஆபீஸ், அப்புறம் அந்த எஸ்.ஐ.யோட குடும்பம், நண்பர்கள், கான்டாக்ட்ஸ்… எல்லார்கிட்டயும் ஆட்களை அனுப்பி விசாரிக்க ஆரம்பிங்க.”
“அப்போ இங்க…?”
“இங்க இருக்கிற அவங்களோட ஆட்கள் எல்லாம் அந்த ட்ராக்குல ஓடுவாங்க.” அகானாவின் முகத்தில் நம்பிக்கை தெரிந்தது. “அதுக்குள்ள நாம யாருக்கும் தெரியாம நம்ம வேலையை முடிச்சிடலாம்.”
“ரொம்ப ரிஸ்க் மேம்.”
“ரிஸ்க் இல்லாத கேஸ் எதுவுமே இல்ல உதய்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் பேசினாள்.
“டாக்டர் ரவி கேஸ்ல ஒரு முக்கியமான நபர் இன்வால்வ் ஆகிருக்காங்கன்னு சொன்னேன்ல?”
“யெஸ் மேம்.”
“அது MLAவோட பையன் ஸ்ரீகாந்த்.”
உதய் அதிர்ச்சியடைந்தான்.
“வாட்?”
“ஆமா.”
“கன்ஃபார்ம்டா மேம்?”
“நாளைக்கு அந்த கேஸ் கோர்ட்டுக்கு வருது.”
அவளது குரல் கடினமடைந்தது. “அதுக்காகத்தான் தங்கராஜும், வேலாயுதமும் சென்னை போறாங்க. சிஎம்கிட்ட கேசை டாக்டர் மேலையே திருப்ப ப்ளான்.. டாக்டர் ரவிக்கு செக்யூரிட்டி டைட் பண்ணிடுங்க.”
“ஓகே மேம்.”
“SPகிட்ட நான் பேசிக்கிறேன்.”
“ஸ்ரீகாந்தை கவனிக்கணுமா?”
“விமலும் அவனோட ஆட்களும் எனக்கு தேவை. அவங்களை வச்சு நான் மேனேஜ் பண்ணிப்பேன்”
“ஓகே மேம்.”
“இதுக்குள்ள நீங்க வேற ஏஜென்ட்ஸ் சில பேரை ரெடி பண்ணுங்க.”
உதய் தலையசைத்தான்.
“ஹ்ம்ம்… ஸ்ரீகாந்த் கடைசி நேரத்துல மைதிலி மேமை கை காட்டிட்டு தப்பிக்க பார்க்கலாம்.”
“அதுக்குத்தான் நாம முன்னாடியே மூவ் பண்றோம்.” அகானாவின் பார்வை கூர்மையடைந்தது. “மைதிலி மேம் பேர் எந்த இடத்துலயும் வெளிய வரக்கூடாது.”
“ஓகே மேம்.”
“அந்த டாகுமென்ட்ஸோட காப்பிஸ் ஆகன்கிட்ட இருக்குன்னு சொன்னீங்களே?”
“ஆமா மேம்.”
“அதை முதல்ல வாங்குங்க.”
“அப்புறம்?”
“அதை வச்சிதான் இந்த ஆட்டத்தோட கடைசி நகர்வை முடிவு பண்ணப் போறோம். துரைப்பாண்டி அண்ணன் கொடுத்த தகவல் எதுவும் லீக் ஆகக் கூடாது.” என்றாள் உறுதியாக..
“எஸ் மேம்..” என்ற உதயிடமும் அதே உறுதி வந்தது
அந்த வார்த்தைகளுடன் அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது.
ஆனால் அந்த அமைதிக்குள்…
நெருப்பொன்று ஒன்று உருவாகி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
அதே நாள் மாலை நேரம்.
அலுவலக அறைக்குள் நிலவிய அமைதியை உடைத்து, லேப்டாப்பின் திரை மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அகானாவும் உதய்யும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோவை ஓட விட்டாள் அகானா.
திரையில் ஹேமா தோன்றினாள்.
சோர்வடைந்த முகம்.
தூக்கமின்மையை வெளிக்காட்டும் கண்கள்.
அருகில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“மேம், கடைசியா சௌந்தர் சார்கிட்ட எப்போ பேசினீங்க?” என்று விசாரணை அதிகாரியின் குரல் கேட்டது.
“மூணு மாசத்துக்கு முன்னாடி…” என்றவள் சட்டென்று நிறுத்தினாள்.
“இல்ல… நாலு மாசம் இருக்கும்…”
அகானாவின் புருவம் சுருங்கியது.
வீடியோவை உடனே நிறுத்தினாள்.
“என்ன மேம்?” என்றான் உதய்.
“ஒன்னுமில்லை… தொடர்ந்து பார்ப்போம்.”
மீண்டும் வீடியோ ஓடத் தொடங்கியது.
“அவர் காணாம போனதுக்குப் பிறகு எந்த நம்பர்ல இருந்தாவது உங்களை தொடர்பு கொண்டாரா?”
“இல்ல…” என்றவள் ஒரு நொடி தயங்கினாள். “இல்ல சார்…” அவளது பார்வை இடப்பக்கம் திரும்பியது. கைகள் நடுங்கின.
அதை கவனித்த அகானா நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“Pause.”
வீடியோ மீண்டும் நின்றது.
“உதய்…”
“மேம்?”
“இவங்க பொய் சொல்ல பழகினவங்க இல்ல.”
“அப்போ?”
“அதுதான் பிரச்சினை.”
உதய் குழப்பத்துடன் பார்த்தான்.
அகானா மீண்டும் வீடியோவை இயக்கினாள்.
“சௌந்தர் சார் எதாவது பிரச்சினை பற்றி உங்ககிட்ட பேசினாரா?”
இந்த முறை ஹேமாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
“இல்ல…” என்று சொன்னாலும், அவளது முகம் வேறொரு கதையைச் சொன்னது.
வீடியோ முடிந்தது. அறைக்குள் சில நொடிகள் அமைதி நிலவியது.
“என்ன நினைக்கிறீங்க மேம்?” என்று மெதுவாகக் கேட்டான் உதய்.
லேப்டாப்பை மூடிய அகானா ஜன்னலருகே சென்று நின்றாள்.
வெளியே இருள் சூழ ஆரம்பித்திருந்தது.
“ஹேமா பொய் சொல்லல உதய்.”
“அப்போ?”
“அவங்க முழு உண்மையையும் சொல்லல.”
உதய் அதிர்ச்சியடைந்தான். “அதாவது…?”
அகானா மெதுவாகத் திரும்பினாள். “ஒருத்தர் இறந்துட்டார்னா, அதை ஏத்துக்கிற வலி முகத்துல தெரியும். ஒருத்தர் காணாம போயிட்டார்னா, அவரைத் தேடுற பதற்றம் தெரியும். ஆனா ஹேமாவோட முகத்துல இந்த ரெண்டுமே இல்ல.”
உதய் யோசனையில் ஆழ்ந்தான்.
“அப்போ…?”
அகானாவின் கண்கள் கூர்மையடைந்தன.
“அவங்க யாரையோ பாதுகாக்க முயற்சி பண்றாங்க.”
“யாரை மேம்?”
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், மேசையின் மீது கிடந்த சௌந்தரின் புகைப்படத்தை எடுத்தாள்.
அதை சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு,
“சௌந்தரை.” என்றாள்.
உதய் திடுக்கிட்டான்.
“வாட்?”
“யெஸ்.”
அகானாவின் குரல் உறுதியாக ஒலித்தது.
“சௌந்தர் இறக்கல. அவர் இன்னும் உயிரோட இருக்கார்.”
அறைக்குள் மீண்டும் அமைதி நிலவியது.
ஆனால் அந்த அமைதிக்குள்…
விசாரணையின் திசையே மாறப் போகும் ஒரு உண்மை பிறந்திருந்தது.
“சௌந்தர் உயிரோட இருக்கலாம்னு எனக்கு சந்தேகம் இருந்துச்சு உதய்… இப்போ இந்த காலண்டரும், ஹேமாவோட நடவடிக்கையும் அந்த சந்தேகத்தை உறுதி பண்ணுது.”
அகானாவின் வார்த்தைகள் அறைக்குள் கனமாக ஒலித்தன.
உதய் சில நொடிகள் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மேம்… இவ்வளவு கான்ஃபிடென்டா எப்படி சொல்றீங்க?”
அகானா உடனே பதில் சொல்லவில்லை.
மீண்டும் லேப்டாப்பைத் திறந்து, ஹேமாவின் விசாரணை வீடியோவை இயக்கினாள்.
“இந்த இடத்தை பாருங்க.”
திரையில் ஹேமாவின் முகம் உறைந்து நின்றது.
“இங்க என்ன இருக்கு?” என்று கேட்டாள்.
உதய் சில நொடிகள் உற்றுப் பார்த்தான்.
“ஒன்னும் புரியல மேம்.”
“பின்னாடி இருக்குற காலண்டரை பாருங்க.”
உதய் திரையை நெருங்கிப் பார்த்தான்.
“அதுல என்ன மேம்?”
“இந்த வீடியோ எடுக்கப்பட்ட தேதி என்ன?”
“ஜூன் பதினைந்து.”
“காலண்டர்ல மார்க் பண்ணியிருக்குற தேதி?”
உதய் திடீரென நிமிர்ந்தான்.
“ஜூன் பதினெட்டு…”
“எக்ஸாக்ட்லி.”
அகானாவின் கண்களில் மின்னல் மின்னியது.
“வீடியோ எடுக்கப்படுறதுக்கு மூணு நாளைக்கு அப்புறமா இருக்கும் தேதியை ஏன் மார்க் பண்ணி வச்சிருக்காங்க?”
உதயின் முகம் இறுகியது.
“யாரையோ எதிர்பார்த்திருக்காங்க… அல்லது…” அகானா வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள். “அல்லது யாரையோ சந்திக்கப் போறாங்க.”
சட்டென அந்த இடம் அமைதியால் சூழ்ந்தது.
அந்த அமைதியை உடைத்து உதயின் மொபைல் ஒலித்தது.
“எஸ்…”
சில நொடிகள் பேசியவன் அதிர்ச்சியுடன் அகானாவை நோக்கினான்.
“மேம்…”
“என்ன?”
“பெங்களூர்ல நம்ம ஆட்கள் ஹேமாவை ஃபாலோ பண்ணியிருக்காங்க.”
“சொல்லுங்க.”
“நேத்து நைட் அவங்க ஒரு பார்சல் வாங்கியிருக்காங்க.”
“சோ?”
“அது சாதாரண பார்சல் இல்ல.”
“என்ன சொல்றீங்க?”
“அந்த பார்சலை வாங்கும்போது ஹேமா ஒரு பெயர் சொல்லியிருக்காங்க.”
அகானாவின் முகம் இறுகியது.
“என்ன பேர்?”
“எஸ்.கே.”
அடுத்த நொடி அகானா எழுந்து நின்றாள்.
“சௌந்தர் கிருஷ்ணன்…”
உதய் திகைத்தான்.
“மேம்…”
“இது அவருக்காக வந்த பார்சல்.” அவளது குரல் உறுதியாக ஒலித்தது.
“சௌந்தர் உயிரோட இருக்கார்னு எனக்கு இப்போ நூறு சதவீதம் உறுதியாயிடுச்சு.” என்ற அகானாவிற்கு அடுத்து அவள் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் நிழலாக மனதில் ஓடியது.
—
அதே நேரம்…
அடர்ந்த காட்டின் நடுவே… மழை பெய்து முடிந்த ஈரமான மண்வாசனை காற்றில் கலந்திருந்தது.
சிறிய மரக்குடிசை ஒன்று.
அதன் உள்ளே காயங்களால் வாடிய முகத்துடன் ஒருவர் படுத்திருந்தார்.
அவரது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
நெற்றியில் ஆழமான காயம்.
மூச்சை இழுத்துக் கொண்டே கண்களை மெதுவாகத் திறந்தார்.
அவர்… சௌந்தர்.
வெளியே காலடி சத்தம் கேட்டது.
கதவு திறந்தது.
ஒருவர் உள்ளே நுழைந்தார்.
அவரைக் கண்டதுமே சௌந்தரின் முகத்தில் அதிர்ச்சி பரவியது.
“நீ.. நீங்க நீங்க யார்…?” என்று மெதுவாக முணுமுணுத்தார்.
அந்த நபர் மெதுவாக சிரித்தார்.
“உன்ன நம்புறவங்க இன்னும் காத்துட்டு இருக்காங்க SK… ஆனா இந்த காட்டுல இருந்து நீ வெளிய போறது ரொம்பவே சந்தேகம்…”
“ஹேமா..” என சௌந்தரின் உதடுகள் முணுமுணுக்க,
“இன்னும் நீ உன் குழந்தையோட முகத்தைக் கூட பார்க்கலையாமே, அப்படியா?”
“ப்ளீஸ்.. என் ஃபேமிலியை ஒன்னும் செஞ்சிடாத..”
“ஹாஹா..” என்ற அந்த உருவத்தின் சிரிப்பில் அந்த காடே அதிர்ந்தது.
சௌந்தரின் கண்களில் தெரிந்த பயம்…
அந்த மனிதன் யார் என்பதை விட…
அவர் யாருக்காக வேலை செய்கிறார் என்பதையே அதிகமாக வெளிப்படுத்தியது.
காட்டின் இருள் இன்னும் அடர்ந்தது.
அந்த இருளை கிழித்துக்கொண்டு ஒரு புயல் நெருங்கிக் கொண்டிருந்தது.
அதன் பெயர்…
அகானா.
(தொடரும்…)
1 comment
அட ராமா ! எதுக்காக இப்படி சுத்தி வளைச்சு மூக்கைத் தொடுறாங்கன்னு தெரியலையே…?
😇😇😇
CRVS (or) CRVS 2797