Home Anti Heroineஅகானா – 96

அகானா – 96

by Vathani S

அகானா -96

மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்திருந்த குரங்கணி, வெளியுலகினருக்கு சொர்க்க பூமியாகத் தோன்றியது.

பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஏலக்காய் மணம் வீசும் மலைப்பாதைகள், பனிமூட்டம் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சிய அந்த பகுதி, சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொண்டது.

ஆனால் அந்த பசுமையின் பின்னால், பலருக்குத் தெரியாத ஒரு இருண்ட உலகம் மறைந்திருந்தது. 

கருங்குன்றம் குரங்கனியின் மலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம்

கடன், வறுமை, மிரட்டல் ஆகியவற்றின் பிடியில் சிக்கிய சில குடும்பங்கள், தலைமுறை தலைமுறையாக கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தனர்.

அவர்களின் அலறல்கள் மலைகளைத் தாண்டி வெளியே யாருக்கும் கேட்கவில்லை.

ஆனால்… அந்த அமைதியை உடைக்கப் போகும் புயல் ஏற்கனவே கிளம்பியிருந்தது.

அதன் பெயர்… அகானா.

“இன்னும் ஒரு உயிர் கூட அங்கே அடிமையாக இருக்கக் கூடாது!” என்று மேசையைத் தட்டியவள், தனது சிறப்புப் படையை உடனடியாக அழைத்தாள்.

அடுத்த நாள் அதிகாலை…

பனியை கிழித்துக்கொண்டு நான்கு ஜீப்புகள் மலைப்பாதையில் சீறிப் பாய்ந்தன. முன்னால் சென்ற வாகனத்தில் அகானா அமர்ந்திருந்தாள். எஸ்டேட் நிர்வாகம் அனுப்பிய ஆட்கள் வழியை மறித்து நிற்க, சிறப்புப் படையினர் மின்னல் வேகத்தில் இறங்கினர்.

“அரசாங்க நடவடிக்கை! வழியை விட்டு விலகுங்கள்!” என்று அதிகாரி எச்சரித்தார்.

ஆனால் எதிர் தரப்பினர் தாக்க முயன்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கே பரபரப்பு வெடித்தது. படையினர் அவர்களை கட்டுப்படுத்தி முன்னேற, அகானா நேராக எஸ்டேட்டுக்குள் நுழைந்தாள்.

சிறிய குடிசைகளுக்குள் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்கள், அதிகாரிகளைக் கண்டதும் நம்ப முடியாமல் பார்த்தனர்.

“பயப்படாதீங்க, உங்களை காப்பாத்தி கூப்பிட்டு போகத்தான் வந்துருக்கேன்!” என்று அகானா உரக்கக் கூறிய அந்த நொடி, பலரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஒரு கதவு திறக்கப்பட்டது போல, அந்த மலைக்கிராமம் அன்று முதல் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

“கலெக்டர் வந்துட்டாங்க!” என்ற செய்தி எஸ்டேட் முழுவதும் பரவிய நொடியே, எம்.எல்.ஏ.வின் தம்பியான வேலாயுதத்தின் முகம் கோபத்தில் சிவந்தது.

“யாரும் அவங்ககிட்ட எதுவும் சொல்லக்கூடாது!” என்று கர்ஜித்தவன், தனது ஆட்களை மக்கள்மீது ஏவினான்.

அடுத்த சில நொடிகளில் அங்கே அலறல் சத்தங்கள் மட்டுமே கேட்டன.

உண்மையைச் சொல்ல முன்வந்த வயதான தொழிலாளி ஒருவர் தரையில் தள்ளப்பட்டார். பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் கதறினர்.

அதைப் பார்த்த அகானா, “எல்லாரையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போங்க!” என்று போலீசாருக்கு உத்தரவிட்டாள்.

ஆனால் நிலைமை எதிர்பாராத விதமாக மோசமடைந்தது.

வேலாயுதத்தின் ஆட்களில் சிலர் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். மலைப்பகுதியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கிச் சத்தம் எதிரொலித்தது.

ஒரு கணம் அந்த இடமே போர்க்களம் போல மாறியது.

தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், காயமடைந்த குழந்தை ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஓடிய அகானாவைப் பார்த்த மக்கள், முதல் முறையாக நம்பிக்கையுடன் அவளை நோக்கினர்.

காயமடைந்த குழந்தையை பாதுகாப்பான இடத்துக்கு ஒப்படைத்தவள்… “இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டாம நான் இந்த மலையை விட்டு கீழே இறங்க மாட்டேன்!” என்று அவள் கூறிய வார்த்தைகள், அங்கே இருந்த ஒவ்வொருவரின் மனதிலும் தீயாய் பற்றிக் கொண்டது.

“அவளைப் பிடிங்கடா! இன்னைக்கு இந்த மலையிலிருந்து யாரும் உயிரோட கீழே இறங்கக் கூடாது!”

வேலாயுதத்தின் கர்ஜனை மலை முழுவதும் எதிரொலித்தது.

அவனது ஆட்கள் அகானாவை நோக்கிப் பாய்ந்த அந்த நொடி, அருகில் கிடந்த மண்ணை ஒரு கைப்பிடி அள்ளியவள், மின்னல் வேகத்தில் வேலாயுதத்தின் முகத்தில் வீசினாள்.

“ஆஆஆ…!”

கண்களில் மண் விழுந்ததால் வேலாயுதம் அலறியபடி தடுமாறினான்.

அதே நேரத்தில், அகானா தனது வயர்லெஸ் கருவியை எடுத்தாள்.

“டீம் ஆல்பா… ஆக்ஷன் நவ்!”

அவளது குரல் ஒலித்த அடுத்த நொடியே, காட்டின் பல பகுதிகளில் மறைந்து நின்றிருந்த சிறப்புப் படையினர் வெளிப்பட்டனர்.

“போலீஸ்! யாரும் அசையாதீங்க!”

திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத வேலாயுதத்தின் ஆட்கள் நிலைகுலைந்தனர்.

சிலர் தப்பி ஓட முயன்றனர்.

சிலர் ஆயுதங்களை கீழே போட்டனர்.

அந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, அகானா குடிசைகளுக்குள் பதுங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டாள்.

“முதல்ல மக்களைக் காப்பாத்துங்க! யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது!”

கண்களில் இருந்த மண்ணைத் துடைத்துக்கொண்டே எழுந்த வேலாயுதம், அருகில் கிடந்த துப்பாக்கியை எடுக்க முயன்றான்.

ஆனால் அதற்குள்…

“ட்ராப் இட்!”

என்று கம்பீரமாக ஒலித்த குரலுடன், போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை நோக்கி தன் பிஸ்டலை நீட்டினார்.

வேலாயுதம் சுற்றிப் பார்த்தான்.

அவனது ஆட்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவனருகே வந்த அகானா, அவனது கண்களை நேராகச் சந்தித்தாள்.

“இந்த வேட்டை இந்த மலைக்குள்ள மட்டும் நடக்குதுன்னு நினைச்சியா?”

அவளது உதடுகளில் வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

“உன்னோட எஸ்டேட், பண்ணை, பழத்தோட்டம், கிடங்கு… நீ மனிதர்களை அடைத்து வச்சிருந்த ஒவ்வொரு இடத்துலயும் இந்நேரம் ரெய்டு நடந்துட்டு இருக்கு.”

வேலாயுதத்தின் முகம் மெதுவாக வெளிற ஆரம்பித்தது.

“உன் ஆட்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டாச்சு. கணக்கு வழக்கு புத்தகங்கள், போலி ஆவணங்கள், சட்டவிரோத ஒப்பந்தங்கள், சொத்து விவரங்கள்… எல்லாமே என் ஆட்களின் கையில.”

“பொய்!” என்று கர்ஜித்தான் அவன்.

“இப்போ அந்த வார்த்தையையே நீதிமன்றத்துல போய் சொல்லு.”

வயர்லெஸை உயர்த்திக் காட்டியவள் தொடர்ந்தாள்.

“இன்னேரம் சென்னைல உன் அண்ணன், எம்.எல்.ஏ. தங்கராஜையும் சிபிசிஐடி கைது செய்ய கிளம்பியிருப்பாங்க.”

“இல்ல… அது நடக்காது…”

“நடந்துடுச்சு.” அகானாவின் குரல் நெருப்பை போல அந்த இடமெல்லாம் பரவியது.

“நீங்க பல வருடமா அதிகாரத்தை வச்சு ஆடுன ஆட்டம் இன்றோட முடிஞ்சிடுச்சு. மக்களோட கண்ணீர்ல கட்டின சாம்ராஜ்யம் எப்போதும் நிலைக்காது.”

வேலாயுதம் அவளை வெறியுடன் முறைத்தான்.

“என்னை அழிச்சிட்டதா நினைக்காதே!”

“உன்னை நான் அழிக்கல.” அவனது கைகளில் மாட்டப்பட்டிருந்த விலங்கை இறுக்கமாகப் பிடித்தவள் சொன்னாள், “நீ செய்த பாவங்கள்தான் உன்னை அழிச்சிருக்கு.”

சுற்றிலும் நின்றிருந்த மக்களை நோக்கிக் கை காட்டினாள். “இவங்க குரல் இல்லாதவங்கன்னு நீ நினைச்ச. சட்டம் தூங்குதுன்னு நினைச்ச. அதிகாரம் உனக்கு நிரந்தரம்னு நினைச்ச.” அவளது குரல் இப்போது இடி போல ஒலித்தது.

“ஆனா ஒன்னை மறந்திடாத வேலாயுதம்… ஒரு மனிதனோட பயத்தை விட அவனோட விடுதலைக்கான ஆசை பெரியது! இன்னைக்கு இந்த மலையில விழுந்தது உன் ஆட்களோட இரத்தம் இல்ல…”

ஒரு நொடி இடைவெளி விட்டாள்.

“உன்னோட அகங்காரம்… உன்னோட திமிர்… உன்னோட அரசியல் செல்வாக்கு!” என்று கர்ஜனையாக கூறியவள் “Accused Velayutham… Take him away!” என அந்த காடே அதிரும் அளவிற்கு கர்ஜித்தாள்.

போலீசார் வேலாயுதத்தை இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகளாக பயத்தால் தலைகுனிந்து வாழ்ந்த மக்கள், இன்று முதல் முறையாக நிமிர்ந்து நின்றனர்.

சிலர் அழுதனர்.

சிலர் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தினர்.

சிலருக்கு இன்னும் நடப்பது கனவா, நிஜமா என்றே புரியவில்லை.

அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு மூதாட்டி அகானாவை நோக்கி வந்தாள்.

கண்ணீர் வழிந்த முகத்துடன் அவளது கரங்களைப் பற்றிக்கொண்டவர்,

“எங்களைக் காப்பாத்த யாருமே வரமாட்டாங்கன்னு நினைச்சோம் தாயி… கடவுளே நேர்ல வந்து நிக்குற மாதிரி இருக்கு…” என்றார்.

அகானா மெதுவாகத் தலையசைத்தாள்.

“இல்ல பாட்டிம்மா… நான் கடவுள் இல்ல. உங்களுக்காக வேலை செய்ய, சம்பளம் வாங்குற ஒரு அரசு அதிகாரி. இந்த சுதந்திரம் உங்களோட உரிமை. யாரோ கொடுத்த பரிசு இல்லை, இந்த நாட்டோட சட்டம் உங்களையும் காப்பாத்தும். உங்களோட பிள்ளைகளையும் காப்பாத்தும். இனிமே யாருக்காகவும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை.” என்றவள், சிறிது நேரம் அமைதியாகி மீண்டும் பேசினாள்.

“ஆனா… இந்த நன்றியெல்லாம் எனக்கு மட்டும் சொந்தமானது இல்லை.”

மக்கள் அவளைப் பார்த்தனர்.

“நீங்க முதல்ல நன்றி சொல்ல வேண்டியது கனலி மேடத்துக்கும், நிலவன் சாருக்கும் தான். உங்க குரலை வெளியுலகத்துக்குக் கொண்டு போனது அவங்க தான். இன்னொரு முக்கியமான நபரும் இருக்கார். துரைப்பாண்டி அண்ணன்.”

அந்த பெயரைக் கேட்டதும் சிலர் அதிர்ச்சியடைந்தனர்.

“அவர் இங்கே இல்லை. ஆனா இந்தக் காட்டுக்குள்ள எங்களால் நுழைய முடிஞ்சது, இங்க நடக்குற அநியாயங்களுக்கான ஆதாரங்களை சேகரிக்க முடிஞ்சது, உங்களை உயிரோட மீட்க முடிஞ்சது… இதுக்கெல்லாம் பின்னாடி இருந்த முக்கிய காரணம் அவர் கொடுத்த தகவல்கள்தான்.”

“எந்த வழியா உள்ளே வரணும்… எங்கே மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்காங்க… யாரை நம்பலாம்… யாரை நம்பக்கூடாது… எல்லா விவரங்களையும் எங்களுக்கு கொடுத்தது அவர்தான்.”

“அதிகாரம், பணம், அரசியல் செல்வாக்கு எல்லாத்தையும் மீறி உண்மை வெளியே வரணும்னு நினைச்ச சில மனிதர்கள் இருந்ததால்தான் இன்றைக்கு இந்த நாள் சாத்தியமாயிருக்கிறது.”

அப்போது கூட்டத்தில் நின்றிருந்த ஒரு சிறுவன் தைரியமாக முன்னே வந்தான்.

“அக்கா… நாங்க இனிமே பள்ளிக்கூடம் போகலாமா?”

அந்த ஒரு கேள்வி அங்கே இருந்த பலரின் கண்களைக் கலங்க வைத்தது.

மண்டியிட்டு அவன் உயரத்திற்கு இறங்கிய அகானா, அவன் தலையை வருடினாள்.

“கண்டிப்பா போகலாம்.”

“நீங்க எல்லாரும் படிக்கணும்.”

“பெரிய ஆளாகணும்.”

“உங்க வாழ்க்கையை நீங்களே எழுதணும்.”

அந்த வார்த்தைகளுக்கு, மலைக்கிராமம் முழுவதும் கரவொலி எழுந்தது.

அந்த கரவொலிக்கிடையே, விலங்கிடப்பட்ட கைகளுடன் இழுத்துச் செல்லப்பட்ட வேலாயுதம் திரும்பிப் பார்த்தான்.

பல ஆண்டுகளாக பயத்தால் தலைகுனிந்திருந்த மக்கள்…

இன்று அவனைப் பார்த்து பயப்படவில்லை.

அந்த நொடியில்தான் அவனுக்குப் புரிந்தது.

தோற்றது அவனல்ல…

அவனது அதிகாரம்.

தோற்றது அவனது செல்வாக்கு.

தோற்றது அவனது அகங்காரம்.

வென்றது சட்டம்.

வென்றது மக்களின் உரிமை.

அதற்கெல்லாம் முன்னால் நின்றிருந்தாள்…

தேனி மாவட்ட ஆட்சியர் அகானா.

அந்த இடமே ஆனந்தக் கண்ணீரில் தத்தளிக்க, அகானா தேடி வந்த அந்த மனிதன் இன்னும் அவளது கைகளில் கிடைக்கவில்லை… இந்த வெற்றிக்கு நடுவிலும், சௌந்தர் பற்றிய மர்மம் இன்னும் முடிவுக்கு வரவில்லை…

You may also like

Leave a Comment

About Me

Featured