Home Love - Family - Romanceஓடங்கள் – 25 (ஃபைனல்)

ஓடங்கள் – 25 (ஃபைனல்)

by Vathani S

25

ஐந்து வருடங்களுக்கு பின்,

“சாரும்மா இங்க வந்து கிருத்திகா குட்டியை வந்து என்னனு பாரு.” என்று குரல் கொடுத்தார் வசந்தா.

“என்னாச்சு அத்தை?” என்று வந்தவள், மகள் செய்து வைத்த அலும்பில் சிரித்துவிட்டாள்.

சாரு அவள் மகளுக்கு அலங்காரம் செய்வது போல, அவர்களின் இரண்டு வயது மகள் கிருத்திகா, வசந்தாவிற்கு அஷ்டகோணலாய் அலங்காரம் செய்திருந்தாள்.

அவரும் பாவம், குழந்தைக்கு தன்னை கொடுத்துவிட்டு அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்திருக்கிறார் போல. “ஏய் வாலு, பாட்டி பாவமில்லையா, இப்படியா செய்வாங்க? ஏன் அத்தை, நீங்க ரெண்டு அடி போட்டிருக்கலாமில்லை. இல்லைன்னா அப்பவே என்னை கூப்பிட்டிருக்கலாம் தானே?”

“குழந்தை தானே சாரு, அவளுக்கு இது ஒரு விளையாட்டு. என் பேர பிள்ளைங்க என் கூட விளையாடாம, வேற யார் கூட விளையாடுவாங்க சொல்லு. நீ இன்னும் நாலு கூட பெத்து கொடு, நான் பார்த்துக்குறேன்.” என்றார் அவர்.

“அத்தை…” என்றாள் இவள் பொய் கோபத்தோடு. அவர் பேசியதெல்லாம் மறந்துவிட்டாளா என்றால், அவளிடத்தில் பதிலில்லை. ஆனால் நிச்சயம் அவர் மீது எந்த கோபமுமில்லை என்பது மட்டும் நிஜம்.

காயம் கொடுத்தவரே காயத்திற்கு மருந்திட்டால்? அப்படித்தான் இருந்தது வசந்தாவின் செய்கை. அவரின் குணம் பற்றி அறிந்திருந்தவளுக்கு, அவரின் இந்த மாற்றம் நிச்சயம் ஆச்சரியம் தான்.

அவர் வேறு வழியில்லாது மாறியிருக்கவில்லை என்பது மட்டும் நிஜம். தன்னை உணர்ந்து தான் மாறியிருக்கிறார் என்பது, முழுக்க முழுக்க இத்தனை வருடத்தில் அவள் கண்டறிந்த உண்மை.

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற அன்றுதான் அவர் மாற்றத்தை வீட்டினர் அனைவருமே உணர்ந்திருந்தனர். அன்றைய நிகழ்வுகள் இன்றும் பசுமையாய் அவள் நினைவில்.

***

இவர்கள் ஐந்தரைக்கே கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பே செல்வின் வந்திருந்தான். “ஆமா, நீ கோவில்ல என்ன பண்ற?” என்றான் புகழ்.

“கோவிலுக்கு எதுக்குடா வருவாங்க, சாமி கும்பிடத்தான்.”

“பார்றா! பயபுள்ளை சர்ச்க்கு போறதை விட்டு கோவிலுக்குலாம் சாமி கும்பிட வருது?” என்றான் தோழன் கிண்டலாய்.

“போதும் மச்சி, ரொம்ப ஓட்டாத…”

“அப்புறம் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்…” என்றான் புகழ் பூடகமாய்.

“என்னடா?”

“நீ ஜெனி மேல ரொம்ப கோவமா இருக்கியாம்?”

“பின்னே, அவ செஞ்சது தப்பு தானே?”

“அதுக்காக நீ அவளை இந்தளவுக்கு தண்டிச்சிருக்க வேண்டாம்.”

“நான் என்னடா பண்ணேன் அவளை?”

“ஜெனிக்கு மூணு மாசம்னு கேள்விப்பட்டேன். உன்கிட்ட தான்டா கத்துக்கணும், எப்படி கோபப்படுறதுனு…” என்று புகழ் ரகசிய குரலில் சொல்ல செல்வின், “போடா…” என்றான் வெட்கத்துடன்.

“கோவில்ல வந்து என்ன பேச்சு பேசுற நீ?”

“சரி, சீரியஸா கேக்குறேன் சொல்லு. நீ இங்க வந்த காரணம்?”

“உங்களுக்காக தான், எனக்கும் தான் வேண்டுதல். ஏன் கிறிஸ்டியன்ஸ் எல்லாம் கோவிலுக்கு வரக்கூடாதா?”

“சரி நம்பிட்டேன்.” என்றவன், தன் குடும்பத்தினருடன் கோவிலுக்குள் நுழைந்திருந்தான். அன்று முகூர்த்த நாள் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர் மணமக்கள் சிலர்.

இவர்கள் கோவிலின் ஒரு முக்கிய உபயதாரர் குடும்பம் என்பதால், அவர்களை உள்ளே அழைத்துச் சென்றிருந்தனர். கடவுளுக்கு அருகில் அவருக்கு நடக்கும் பூஜையை மனமார கண்டு ரசித்தனர்.

வசந்தா எங்கோ பார்த்துக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் கையில் தட்டு, தேங்காய் சகிதம் ஐயர் இவர்களை நோக்கி வந்தார். தேங்காயின் மீது தாலி ஒன்றும் இருக்க, சாருகேஷியின் கண்கள் அதையே வெறித்தது.

அடுத்து என்ன நடக்கும் என்ற ஊகம் வந்தமர, மற்றவர்களின் புறம் அவள் பார்வை சென்றது. “புகழ் தாலியை எடுத்து சாரு கழுத்துல கட்டு.” என்ற வசந்தாவை, சிவகுருவும் பார்த்திருந்தார் ஆச்சரியமாக அல்ல, அன்பாக.

அவரும் இதை எதிர்பார்த்து இருக்கவில்லை தான். ஆனால் இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது போல. அதற்கு தான் இத்தனையும் நடந்ததாக அவர் எண்ணிக் கொண்டார். அனைத்தும் இறைவனின் செயல் என்பதை மனமார நம்பும் மனிதர் அவர்.

புகழ் தாலியை வாங்காது தன் பெற்றோரை முதலில் பார்த்தவன் சாருவைப் பார்க்க, அவளின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

“அம்மா…” என்றான் இவன் தவிப்பாக.

“புகழ் அதான் அம்மா சொல்றாங்கல கேளு.” என்றது செல்வின்.

நண்பனை முறைத்தான் மற்றவன். “அப்புறம் முறைச்சுக்கலாம். பாருங்க நாம கோவில்ல இருக்கோம், இன்னும் நாலு கல்யாணம் இருக்காம் ஐயர்க்கு. அவங்களுக்கும் வேலை இருக்கும்ல… ஹ்ம்ம் சீக்கிரம்…” என்றான் அவன்.

“சொல்லுங்க அவன்கிட்ட…” என்று கணவரை துணைக்கழைத்தார் வசந்தா. அதில் அவர் முகம் இன்னமும் கனிந்துவிட, “புகழ் எங்களுக்காக…” என்று தந்தையும் சொல்ல, தாலி அவன் கைக்கு வந்திருந்தது இப்போது.

மனைவியை நோக்கி அவன் திரும்ப, அவள் ஓரடி பின்னால் நகர, அவளின் அந்த செயலில் அடி வாங்கினான் கணவன்.

“சாரு குழந்தையை கொடு.” என்று அவள் கையில் இருந்த சஷ்டியை தான் வாங்கிக் கொண்டார் வசந்தா.

“இல்லை…” என்றவள் அப்படியே நிற்க, முகம் மொத்தமாக இறுகிப் போனது திருப்புகழுக்கு.

“வேணாம் ப்பா” என்று புகழும் சொல்ல, “சாரும்மா இது கடவுளோட விருப்பம், உன்னோட தாத்தாவோட விருப்பம். எங்க விருப்பமும் அதுதான்.” என்று சிவகுரு அழுத்திச் சொல்ல அமைதியாக நின்றாள்.

“சாரு…” என்று கண்டிப்பாய் வசந்தா பார்க்க, “அம்மா விட்ருங்க.” என்றவன் தாலியைத் திருப்பிக் கொடுக்க, “சரி” என்ற குரல் மிக மெல்லியதாய் கேட்க திரும்பி தன்னவளைப் பார்த்தான்.

“நிஜமா ஓகே தானே உனக்கு?” என்று அவள் சம்மதம் கேட்க, அவள் தலை ஆடிய பின்னே தான் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான் புகழ். இதுநாள் வரை இல்லாத ஒரு உணர்வு அந்நேரம் இருவருக்குமே ஏற்பட்டது.

வார்த்தையில் வடிக்க முடியாத ஒரு உணர்வு, உடன் மன நிம்மதியும். இருவரின் தவிப்புகளும் அந்த நொடி அடங்கித் தான் போயிருந்தது. தகிக்கும் நெருப்பு குளிர் நீர் கொட்டி அடங்குவது போல, அவர்களின் அனைத்து உணர்வுகளும் அடங்கி அமைதி வந்தது.

செல்வின் மாலை எடுத்துக் கொடுக்க, இருவருமே மாற்றிக் கொண்டனர். ஆரம்பம் மட்டுமே தயக்கமாய், பின் சகஜமாய் அனைத்தும் வந்தது.

கடவுளின் முன் கைக்கூப்பி வணங்கினர் இருவரும், இது எப்போதும் நிலைக்க வேண்டும் என்று. மீண்டும் உள்ளே சென்ற ஐயர் இப்போது தட்டு, தேங்காய், தாலி என்று வர புகழ் திருதிருத்தான்.

அவனருகில் நின்றிருந்தவனிடம், “டேய் என்னடா நடக்குது, ஜெனிக்கு தெரியாம எதுவும் பண்ணப் போறியா?” என்று முறைத்தான்.

“என்னை ஏன்டா முறைக்கிற? அப்பப்போ நான் என்ன உன்னோட முறைப்பொண்ணா? முறைச்சுட்டே இருக்கியே!”

“உனக்கு தெரியாம இருக்காது, சொல்லு என்னன்னு.”

“உங்கம்மாவுக்கு என்னை பிடிக்கலைன்னாலும், இந்த நிமிஷம் எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று செல்வின் சொல்ல, “டேய்!” என்றான் புகழ்.

“சீய்! சீய்! உங்கம்மா உங்க மேரேஜ் பண்ணி வச்சதை பத்தி சொன்னேன் பக்கி. நொடியில என்னைப் பத்தி தப்பா யோசிச்சுட்டியே பக்கி…” என்று திட்டினான்.

இம்முறை ஐயர் புகழின் தந்தை முன் நின்றவர், “தாலி எடுத்துக்கோங்கோ.” என்கவும் அவர் புரியாது விழித்தார்.

“நான் எதுக்கு?”

“சஷ்டியப்த பூர்த்தினா நீங்க தானே தாலி கட்டணும், உங்க வீட்டம்மாவுக்கு.” என்று அவர் சொல்ல வசந்தாவைத் திரும்பி பார்த்தார் சிவகுரு.

“என்ன! அப்பாவுக்கு அறுபது வயசு ஆகிடுச்சா?” என்றான் புகழ்.

சாரு அவர்களை இப்போது ஆத்மார்த்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளின் முறை மகனை மாமியாரிடத்தில் இருந்து வாங்கிக் கொண்டாள்.

“கட்டுங்க மாமா.” என்று அவள் சொல்ல, உண்மையாகவே அந்த நொடி அவருக்கு மனைவி மீது எந்த கோபமும் இல்லை.

“அப்பா சீக்கிரம்…” என்று மகனும், “சார் கட்டுங்க.” என்று செல்வினும் சொல்ல மனைவியைப் பார்த்தார்.

“கட்டுங்க.” என்று அவர் மெல்லிய குரலில் சொல்ல மகன், மருமகள், பேரன், அனைத்தையும் விட அவர் பெரிதும் வேண்டி நிற்கும் அவர் மனம் கவர்ந்த முருகனும் இருக்க, நிறைந்த மனதுடன் தாலியை மனைவியின் கழுத்தில் கட்டினார்.

வசந்தா தலை நிமிரவேயில்லை, “மேடம் வெட்கப்படுறாங்க சார்.” என்று செல்வின் கத்த, அவனை முறைத்தார் வசந்தா இப்போது.

“மேடம் நீங்க முறைக்கிறது கூட இப்போ அழகா இருக்கு.” என்றவனை புகழ் முறைத்தான் இப்போது.

“எப்பா! ஒண்ணு சொல்லிடக் கூடாது, ஆளாளுக்கு முறைக்கிறாங்கப்பா.” என்று முணுமுணுத்தவன் அடங்கினான்.

வசந்தா அவர் கழுத்தில் முதலில் போட்டிருந்த தாலி சங்கிலியை கழற்றி, கோவிலில் இருந்த உண்டியலில் போட திகைத்து பார்த்தார் சிவகுரு.

“என்னோட அகங்காரம், திமிர், எல்லாம் கழட்டி போட்டுட்டேன்.” என்று மெல்லிய குரலில் அவர் சொல்ல, பார்த்திருந்தவர்கள் என்ன உணர்ந்தார்களோ அந்த நிமிடம் நிறைவாகவே சென்றது.

***

அவ்வப்போது அவரின் குணம் தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. முன்பு போல அல்லாது எப்போதாவது என்பதால், மற்றவர்களும் பெரிதாய் அதை எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போதும் செல்வினை கண்டால் அவருக்கு ஆகாது தான். ஆனால் அவன் மீது அவருக்கு வெறுப்பில்லை, மற்றவர்களுக்காக அவனை ஏற்றுக் கொண்டார்.

மாமியாரை பற்றி யோசித்துக் கொண்டே நடந்தவளின் கையை, யாரோ பிடித்து இழுக்கவும் இழுத்தவனின் மீது மோதி நின்றாள் சாரு.

வேறு யார், எல்லாம் அவளின் மணாளன் தான். “என்னடி யோசனை?”

“அத்தையை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றாள்.

“அத்தையை பத்தி யோசிக்க என்ன இருக்கு? அத்தை பெத்தவனை கவனிச்சாலும் உனக்கு புண்ணியம் கிடைக்கும்.” என்றவன், பேசிக் கொண்டே அவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தான் அவளோடு. உடன் தாழை போட்டு மனைவியுடன் கட்டிலில் சரிந்தான்.

“போதுமே! ஆரம்பிச்சுடாதீங்க…”

“அடிப்பாவி! நானெல்லாம் ரொம்ப லேட். பாரு உங்கண்ணனை… மூணாவது ரவுண்டு போய்ட்டான். கல்யாணம் பண்ணி எவ்வளவு நாள் நான் பிரம்மச்சாரியா இருந்து, அப்புறம் கடவுள் புண்ணியத்துல விரதம் கலைஞ்சு, நீ விட்டு போய்… சரி… சரி… நான்தான் உன்னை திட்டி அனுப்பிட்டேன். நீ போய் திரும்ப வந்து, நாம பேசி, சரியாகி பாரு சொல்லும் போதே எனக்கு மூச்சு முட்டுது.”

“அதென்ன கடவுள் புண்ணியத்துல உங்க விரதம் கலைஞ்சுதுனு சொல்றீங்க. என் புண்ணியத்துலனு தானே சொல்லியிருக்கணும்.” என்று மனைவி சொல்ல,

“ஆமாமா… உன் புண்ணியம் தான். இப்பவும் அந்த புண்ணியம் வேணுமே…” என்றவனின் இதழ்கள், அவளின் பதிலை வாங்கும் முன்பே அவளிதழின் மீது தன் ஊர்வலத்தைத் தொடங்கியிருந்தது.

அவர்கள் வாழ்வில் இனி ஒரு பிரிவில்லை என வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்.

மாலையிடும்

சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே

அறியாதது

அழகான மனைவி

அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள்

பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்

வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே…!

***நிறைவு***

You may also like

Leave a Comment

About Me

Featured