வர வர காதல் கசக்குதைய்யா – 6
பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மனிதர்களால் இன்னும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக மிக அழகாக காட்சியளிக்கிறது பூப்பாறை கிராமம். தமிழக – கேரள எல்லையில் இயற்கையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் தான் பூப்பாறை.
இங்குள்ள மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களை காண கண் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை அழகுகள் கொட்டிக் கிடக்கும்.
உயரே செல்லச் செல்ல பசுமையான மரங்கள் அடர்ந்து காணப்பட, பசுமையான காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மற்றும் பெரும் பள்ளத்தாக்குகள் அதிசயக்கவும், ஆச்சிரியப்படவும் வைக்க, அதே சமயத்தில் நம்மை அச்சப்படவும் வைப்பதுதான் இவ்வனத்தின் அழகு!
சிறகடித்துச் செல்லும் பறவைகளின் கூட்டத்தையும், சிங்கவால் குரங்குகளையும் அதிகம் பார்க்க முடியும். காட்டுக் கோழிகள், சேவல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. தேயிலை தோட்டங்களும், ஏலத் தோட்டங்களும், காபி தோட்டங்களும் பச்சை பசேல் என பசுமையாக காட்சி கொடுத்து, நமக்குள்ளும் பசுமையை விதைக்கும்.
தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே இது தான் என் இடம் என்பது போல யானைகள் ஒற்றையாகவும், கூட்டமாகவும், குடும்பமாகவும் அந்த மலைகளுக்கு இணையாக நிமிர்ந்து நின்றிருக்கும்.
தமிழக – கேரள எல்லை என்பதால், இங்கு பெரும்பாலும் தமிழர்கள் தான் கூலித் தொழிலாளிகளாக பணியில் இருக்கிறார்கள். கடுங்குளிர், பனி, மழை என எப்போதும் மேகமூட்டத்துடனே காணப்படும் இடம். கதிரவன் வந்து கண்சிமிட்ட மாட்டானா என நம்மை ஏங்க வைக்குமிடம். மாலை ஆறு மணியே இரவு பத்தைப்போல காட்சியளிக்கும்.
சுற்றிலும் ஏலத்தோட்டம் மத்தியில் உயர்ந்து, அடர்ந்து பரந்து விரிந்திருந்தது அந்த பலாமரம். அதன் கும்மிருட்டின் நடுவே காவலுக்காய் போடப்பட்டிருந்த சிறுகுடில் ஒன்றிருக்க, தன் ஆறடியயையும் சுருக்கி, கண்கள் மட்டும் தெரியுமளவிற்கானத் தாடியும், கவலை அப்பிய முகமுமாக, பாதியாக இளைத்த உடலுடன் குறுக்கிப் போய் படுத்திருந்தார் முகுந்தன். அவரது எண்ணமெல்லாம் மீனாட்சிபுரத்திலேயே இருந்தது.
பவித்ராவின் மேல் காதல் என்று உறுதியான அன்றைய நாளின் நடு இரவில் கிளம்பி வந்தவர் தான் முகுந்தன். தன் கால் போன போக்கில் நடந்து வந்து சேர்ந்த இடம் போடி பேருந்து நிலையம்.
ஆதரவற்ற நிலையில் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை. பவித்ராவை விட்டுத் தூரமாக, ரொம்பத் தூரமாக போக வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தார்.
ஆனால் எங்கே போவது, என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் ஏலத் தோட்டத்தில் காவலுக்கு ஆட்கள் வேண்டுமென ஒருவர் பக்கத்தில் இருந்த மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட முகுந்தன் அடுத்து எதையும் யோசிக்கவில்லை.
அந்த மனிதரிடம் ஒருவாறாகப் பேசி அவருடன் பூப்பாறை வந்துவிட்டார். இதோ அவர் வந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. சிறு தனிமைக் கிடைத்தால் கூட பவித்ராவின் முகம் வந்து இம்சிக்க, அதை மறக்கும் பொருட்டு, வேலை வேலையென தன் சிந்தனை முழுவதையும் மறக்கும் அளவிற்கு இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்தார்.
பகலானால் மரம் வெட்ட, தண்ணீர் பாய்ச்ச, ஏலக்காய்கள் பறிக்க, இரவானால் யானைக்காட்டில் காவலுக்கு என தன்னை மிகவும் வருத்திக் கொண்டார். ஆனால் தன் உடலை அத்தனை வருத்தியும், நித்திராதேவி அவருக்குத் தூக்கம் எனும் மாமருந்தைக் கொடுக்கவே இல்லை.
என்ன முயன்றும் அவரால் பவித்ராவை மறக்கவே முடியவில்லை. தனக்குத்தான் யாருமே இல்லையே செத்து விடலாமா என யோசித்து தற்கொலை முயற்சி கூட ஒருமுறை செய்திருந்தார். ஆனால் அந்த நொடி பவியின் முகம் அவர் மனக்கண்ணில் வந்து ‘நீங்க போயிட்டா, நானும் வந்துடுவேன்’ எனக் கதறுவது போல் தோன்ற அந்த எண்ணத்தையும் விட்டிருந்தார்.
இப்படியே வருடம் ஒன்றைக் கடந்து விட, எப்படியும் பவித்ராவை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள், யாருக்கோ திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள், அவளும் அந்த ஊரில் இருக்க மாட்டாள், இப்படியே இருப்பதற்கு ஊருக்குப் போய் அவளைப்பற்றித் தெரிந்து கொண்டு, நண்பர்களையும் பார்த்துவிட்டு வரலாம் என, மிகுந்த மன உளைச்சலுக்குப் பிறகு முடிவு செய்து மீனாட்சிபுரத்திற்கு வந்தார்.
அவர் வந்ததும் ஒரு நடு இரவில் தான். முகுந்தன் சாலையோரமாக நடந்து வர, எதிரே ஒரு பெண் வேகமாக ஓடிவருவது தெரிய, இந்த நேரத்தில் யார், ஒருவேளை ஊருக்குள் எல்லோரும் சொல்வது போல மோகினிப் பிசாசோ என ஒரு நிமிடத்தில் பயந்து அப்படியே நின்று விட்டார்.
ஆனால் அந்தப் பெண் அவருக்கு அருகில் வராமல் சற்றே வளைந்து மற்றொரு பாதையில் ஓடவும் தான் தெரிந்தது, அது பேயல்ல பெண்னென்று. என்னவோ ஏதோ என்று முகுந்தனும் பின்னே ஓட, அவருக்குப் பின்னும் ஒரு உருவம் ஓடி வந்தது.
என்ன தான் புயல் வேகத்தில் அந்த பெண்ணின் பின்னே ஓடி வந்திருந்தாலும், நொடியில் நடந்த விபரீதத்தை அவரால் தடுக்க முடியவில்லை. ஓடிவந்த அந்தப் பெண் எதையும் யோசிக்காமல் அங்கிருந்த கிணற்றில் குதித்திருக்க, சற்றுத் தடுமாறிய முகுந்தனும் வேறு எதையும் யோசிக்காமல் அடுத்து அந்தப் பெண்ணுக்கு பின்னே குதித்திருந்தார்.
சில பல நிமிட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைத் தூக்கிகொண்டு மேலே வந்தவர், கீழேக் கிடத்திவிட்டு முகத்தைப் பார்க்க, அங்கிருந்தப் பெண்ணைப் பார்த்து மொத்தமாக அதிர்ந்தார். வாய் தானாக ‘பவி’ என உச்சரிக்க, முகம் முழுவதும் வியர்த்து, இதயத்தின் ஓசை அதன் துடிப்பை விட பலமடங்கு சத்தமாக, அதிவேகமாக துடிப்பது போல் உணர, அவளைக் காப்பற்ற வேண்டும் என்பதைக் கூட உணரமால், தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார்.
முகுந்தனுக்கு பின்னே ஓடிவந்த உருவம், நடந்ததை ஒருவாறாக யோசித்து, அவரது அதிர்ச்சியை உணர்ந்து, முகுந்தனை உலுக்கி எடுக்க, அதில் சற்றே உணர்வுக்கு வந்தவர், தன்னை உலுக்கிய உருவத்தைப் பார்த்து மேலும் அதிர்ந்தார். இப்போது வாய் தானாக கேசவ் என்று உச்சரித்தது.
“என்ன பார்த்துட்டே இருக்கே, முதல்ல அவ முழுங்குன தண்ணியை வெளியே எடு, சீக்கிரம் வயித்தை அமுக்குடா..” எனச் சொல்லி, பவித்ராவின் காலடியில் அமர்ந்து, இரண்டு கால்களையும் பரபரவெனத் தேய்க்க ஆரம்பித்தார் கேசவன்.
“பவி.. பவி…” என்று பேரைத் தவிர வேறொன்றும் வரவில்லை முகுந்தனின் வாயிலிருந்து. கண்ணீர் அருவியாக பொழிய, கைகள் அவள் வயிற்றை அமுக்கி, நீரை எடுக்க ஆரம்பித்தது. கிணற்றில் விழுந்த சிறிது நேரத்திலேக் காப்பாற்றப் பட்டதால், அதிகமாய் நீரை விழுங்கவில்லை. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து, நினைவு திரும்பி விட, சோம்பலாய் கண் விழித்தாள் பவித்ரா.
தன் சுரனையே இல்லாமல் யார் தன்னைக் காப்பாற்றினார்கள் என்று கூட அறியாமல், “யாரு நீங்க.? எதுக்கு என்னைக் காப்பாத்துனீங்க, நிம்மதியா வாழத்தான் முடியல, நிம்மதியா சாகக்கூட விடமாட்டீங்கள..?” எனக் கண்ணை மூடிக்கொண்டு கத்தியவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைந்தார் முகுந்தன்.
“செத்துட்டா.. செத்துட்டா எல்லாம் சரியா போகுமா..? யாருக்குத்தான் பிரச்சினை இல்லை. பிரச்சினையைப் பார்த்து பயந்து செத்துப் போறேன்னு எல்லாரும் கிளம்பினா இன்னைக்கு யாரும் உயிரோட இருக்க முடியாது. சாகப் போறாளாம், சாக..” எனக் கடுகடுவெனக் கோபத்தில் முகுந்தன் கத்த,
“அதை சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு. ஒரு ஆம்பளையே பிரச்சினையைப் பார்த்து ஓடி ஒழியும் போது, எதுவுமே செய்ய முடியாத ஒரு பொண்ணு என்ன செய்வா, சாகத்தான் செய்வா..” என முகத்தில் அடித்தது போல கேசவ் சொல்ல, அதில் இருந்த உண்மை சுட, தன்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சுக் கிளம்பியது முகுந்தனிடம்.
என்ன நடக்கிறது என்று எதுவும் அறியாமல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த பவித்ராவை ஒருமுறைப் பார்த்த கேசவ், நடந்ததை பொறுமையாகச் சொன்னார்.
“முகுந்தா எனக்கு உன்னோட விருப்பமும் தெரியும், பவித்ரா விருப்பமும் தெரியும். உங்க ரெண்டு பேருக்குள்ளத்தான் விருப்பம் இருக்கு, அது யாராலையும் பிரிக்க முடியாதுன்னும் தெரியும்..” என்றதும், முகுந்தனின் முகத்தில் மின்னலாய் ஒரு வலி வந்து போனது.
“என் மனசு எனக்கு தெரிஞ்ச நேரம், என் தகுதி என்னன்னு அப்போதான் ஆணியடிச்ச மாதிரி புரிஞ்சது. இவ இவங்களை நிமிர்ந்து பார்க்கக் கூட எனக்கு தகுதி இல்லன்னு தெரியும். நீ முடவன், உச்சியில இருக்குற கொம்புத் தேனுக்கு ஆசப்படக் கூடாதுன்னு அறிவு ஆயிரம் முறை சொல்லுது. ஆனா இந்த வெட்கங்கெட்ட மனசு, அதை சுத்தமா கேட்க மாட்டேங்குது.” என்றவர் தலையைக் குனிந்து கொள்ள,
“நீ போயிட்ட பிறகு என்னாச்சுன்னு உனக்குத் தெரிய வேண்டாமா.? உனக்கு பவியைப் பிடிச்ச மாதிரியே, அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. நீ ஊர்ல இல்லைன்னதும், சாப்பிடாம தூங்காம பித்து பிடிச்சவ மாதிரி ஆகிட்டா. கிட்டத்தட்ட பைத்தியம் போல இருந்தா. வீட்டுல எல்லோருக்கும் பயம். எனக்கும் ரம்யாவுக்கும் மட்டும் தான் உங்களைப்பத்தி தெரியும்.”
“ரம்யா இவக்கிட்ட பேசிப்பேசி ஒருவழியா விசயத்தை வாங்கிட்டா, ஆனா வீட்டுல சொல்ல பயம், அதனால எங்கிட்ட சொன்னா.. இது சாத்தியமே ஆகாதுன்னு புரியவைக்க முயற்சி செஞ்சோம். அது விழலுக்கு இறைத்த நீர் மாதிரி வேஸ்டாதான் போச்சு. சரி கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்னு நாங்க நினைச்சிட்டு இருந்தோம். ஆனா அதுக்கான வாய்ப்பே இல்லன்னு சில மாசங்களுக்கு முன்னாடி தான் எங்களுக்கேப் புரிஞ்சது.”
“பாண்டியன்கிட்ட சொல்லிப் பார்க்கலாம்னு நான் நினைக்கும் போது ரம்யா வேண்டவே வேண்டாம்னுட்டா, கோபத்துல என்ன வேனும்னாலும் நடக்கும், அதனால வேற யோசிக்கலாம்னு சொன்னா. ரம்யா சொல்றதை யோசிச்சும் பார்க்கும் போது அதுவும் சரின்னு தான் தோனுச்சு.”
”பவி மனசு மாறி, நிதர்சனத்தைப் புரிஞ்சி சரியாகிடுவான்னு கொஞ்ச நாள் வெயிட் பண்ணோம். ஆனா அதுக்குள்ள அத்தை இவளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து ஆரம்பிச்சி, பேசியும் முடிச்சிட்டாங்க. இதை நாங்க எதிர்பார்க்கல, பாண்டியன்கிட்ட சொல்லலாம்னா, அவனும் ட்ரைனிங்க் அது இதுன்னு ஊர்லயே இல்ல. அத்தைக்கிட்டயோ, மாமாக்கிட்டையோ இதைப்பத்தி பேசக்கூட முடியாது. என்ன செய்யலாம்னு நாங்க யோசிச்சிட்டு இருக்கும் போது, திடீர்னு அந்த மாப்பிள்ளை வீட்டுல கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”
என்ன ஏதுன்னு விசாரிக்கும் போது, பவியைப் பத்தி விசாரிச்சுருக்காங்க, நம்ம ஊரு ஆளுங்க, நீ அவளைக் காப்பத்தினதை வச்சு கண்டதையும் பரப்பி விட்டுருக்காங்க, அதைக்கேட்டு உண்மைன்னு நினைச்சு பவியையும், அந்த குடும்பத்தையும் தவறா பேசி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க.” என வரிசையாக மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தவர் சட்டென்று அமைதியாகிவிட, இப்போது முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார் பவித்ரா.
இருவருக்குள்ளும் ஏதோ சொல்ல முடியாத அழுத்தமான ஒரு செய்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட முகுந்தன், “என்ன நடந்ததுன்னு சொல்லு கேசவ்.. பிறந்ததுல இருந்து எனக்கு கிடைச்சது எல்லாம் ஏமாற்றமும், வலியும் வேதனையும்தான். இதையும் தாங்கும் என் இதயம் சொல்லுங்க..” என மரத்தக் குரலில் சொல்ல,
“அது..” என இழுத்தவர் பவித்ராவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, “பவியோட அம்மா அவளுக்கு விசம் வச்சு கொல்லப் பார்த்தாங்க.” என்று முகுந்தனைப் பார்த்துக் கூர்பார்வையோடு சொல்ல, ‘என்ன..’ என அதிர்ந்தவர், பவித்ராவின் அருகில் சென்று, எதிலிருந்தோக் காப்பது போல, அவளைத் தனக்குள் மொத்தமாக சுருட்டிக் கொண்டார்.
‘இல்ல.. இல்லா அப்படியெல்லாம் இல்ல, இதெல்லாம் பொய்.. அவள் எனக்கிட்ட இருக்கா, பத்ரமா இருக்கா..’ என மனதுக்குள் சொல்லித் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாலும் உடம்பு வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தது.
தங்கள் நேசத்தை இதுவரை இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டதில்லை, காதலியின் கடைவிழிப்பார்வையும், மன்னவனின் மையல் பார்வையும் இதுவரை இருவரும் அறிந்ததில்லை. அப்படியிருக்க இந்த நேசம் எப்படி இருவருக்குள்ளும் சாத்தியம். இருவரையும் விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன்.
இதற்கே இப்படியென்றால் அடுத்து சொல்லப் போகும் விசயத்தைக் கேட்டால் என்ன ஆவான் என்று நினைக்க, கேசவனின் மனதிலும் பாரம் ஏறியது. ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும்.
மனதைக் கல்லாக்கிக் கொண்டு , “உன் கைக்குள்ள இருக்குற பவித்ரா இப்போ என்னோட மனைவி..” என அடுத்த குண்டைத் தூக்கிப்போட, ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் தாங்குவது, ‘என்ன..’ என மீண்டும் மீண்டும் அதிர்ந்த முகுந்தன் அப்படியே சிலையாகிவிட, தலையில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார் பவித்ரா..
யாரோ ஒருவரின் அன்பை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதுதான் இவ்வாழ்வின் சாபமா என்றா கேட்கிறாய்?
இல்லை,
யாரோருவருக்கு அன்பை
சலிக்க சலிக்க
திகட்ட திகட்ட
தந்துகொண்டே இருப்பது தான்
வாழ்வின் வரம்.
காதலிப்பதை விட
நேசிப்பதை விட
காதலிக்கப்படுவது
நேசிக்கபடுவது போதை..
யாருக்கும் கிட்டாத திகட்டாத
காற்றில் மிதக்கும் ஒரு வகை போதை..
எனக்குன்னு யார் இருக்கா என்பதற்கும் எனக்குன்னு அவன் இருக்கான் என்பதற்கும் இடைப்பட்டது தான் வாழ்வின் சூட்சுமம்.
தூக்கி வைத்து கொண்டாட யாரோ சிலர் தான் படைக்கப்பட்டுருக்கின்றனர்.
ஆசீர்வதிக்க பட்டுருக்கின்றனர்.
அதில் நீ ஒருத்தி என கொண்டாடு,
அதை விடுத்து
எனக்கு இது நிலைக்குமா
நான் இதற்கு தகுதியானவளா என்று
ஏன் பிதற்றுகிறாய்…
எதற்கு தவியாய் தவித்தோமோ
எது வேண்டுமென தவமிருந்தமோ
அது அப்படியே வேறு வடிவில் வந்து மடியில் தவழுகிறது..
அதையேன் மறுக்கிறாய்..
காதலிப்பதற்கு என்று தனிதகுதி எதுவுமில்லை இதுவரை,
அதற்கு தேவை ஒன்றே ஒன்று தான்
ஆத்மார்த்தமான அன்பு..
அது டன் கணக்கில் கொட்டிகிடக்கிறது.
உன்னை தலையில் தூக்கி வைத்து
கொண்டாட ஒருவன் இருக்கும்போது
நீயேன் தரையில் உருண்டு பிரள்கிறாய்..
மனதையும் உன்னையும் அவனிடம் தந்துவிட்டு பேசாமல் படுத்துறங்கு,
அவன் பார்த்துக்கொள்வான்
அனைத்தையும்..
அவனுக்கு நீதான் ‘எல்லாமே’