முத்தமழை – 35
“பாவா..” என தன் தோள் சாய்ந்த மனைவியை அனைத்தபடியே நின்ற கணவனின் உடல் ஏகத்துக்கும் இறுகிப் போயிருந்தது.
அந்த நேரத்தில் கர்ணனை எதிர்பார்க்காத வனிதாவும், ராஜலட்சுமியும் சற்று பயந்துதான் போனார்கள்.
“தம்பி நீ தப்பா புரிஞ்சிக்கக்கூடாது..” என ராஜலட்சுமி, கர்ணன் பேசுவதற்கு முன்பே அவசரமாக கூற,
“நான் உங்ககிட்ட எந்த விளக்கமும் கேட்கவே இல்லையே ம்மா..” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு தன்னறைக்குச் செல்ல முற்பட,
“கர்ணா… இங்க நடந்த கூத்துல புள்ள காலையிலிருந்து சரியாவே சாப்பிடல. உன்னைப் பார்த்தாலும் சாப்பிட்ட மாதிரி தெரியல. ரெண்டு பேரும் சாப்பிட்டு அப்புறம் மேல போங்க.” என கண்டிப்புடன் பாட்டி கூறவும், இருவருக்கும் சாப்பிடும் எண்ணம் துளியும் இல்லை.
ஆனால் ‘கணவனுக்கு பசிக்குமே’ என்று அவளும், ‘இரண்டு உயிராய் இருக்கிறாள் மனைவி, அவளுக்கும் குழந்தைக்கும் பசிக்குமே’ என கணவனும் அடுத்தவர்களுக்காக பார்த்து, உணவு மேஜையில் அமர்ந்தனர்.
இருவருக்கும் உணவை பரிமாறிய பாட்டி “இங்க பாரு வல்லி, குடும்பம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும். இன்னைக்கு இங்க நடந்ததும் எல்லார் வீட்டுலயும் நடக்கிறதுதான். இதையெல்லாம் காதுல வாங்கி, மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருந்தா உங்க வாழ்க்கை நரகமாகிடும். உள்ள இருக்குற குழந்தையைப் பத்தி யோசிங்க. இது உங்க வாழ்க்கை யாருக்காகவும் அதை விட்டுக்கொடுக்ககூடாது புரியுதா..?” என சற்றே அதட்டலாக கூற, வல்லிக்கு கண்கள் தழும்பி வழிந்தது.
“வல்லி.. சொன்னா கேட்கனும்.. பார் கர்ணா சாப்பாட்டுல கையே வைக்கல..” என மேலும் அதட்டவும் தான் கணவனையே நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
அவன் முகத்தில் தெரிந்த வேதனையில் சட்டென தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஒன்னுமில்ல பாவா.. யாழியும், வந்துவும் போனது ஒருமாதிரி இருக்கு.. நீங்க சாப்பிடுங்க..” அழுகையில் சிவந்த முகமும், கலங்கிய கண்களும், உதட்டில் வலிய வரவைத்த புன்னகையுமாக கூறிய மனைவிக்காக அப்போதே இவர்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கும் ஆத்திரம் வந்தது கர்ணனுக்கு.
முயன்று தன் கோபத்தை அடக்கி, “சாப்பிடு குட்டிமா.. வெளிய போயிட்டு வரலாம்..” என்றான் மென்மையாக,
“இந்த நேரத்துல..” என ஏதோ சொல்ல வந்த பாட்டி, இருவருக்கும் இப்போது தனிமை தேவைப்படுவதை உணர்ந்து அமைதியாகிவிட்டார்.
இருவரும் சாப்பிட்டு முடிக்க, அங்கிருந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் கர்ணன்.
“இப்ப எங்க போறாங்க? அப்பாவை பத்தி எதுவும் சொல்லல?” என வனிதா ஆரம்பிக்க,
“வாயை மூடு.. எல்லாம் உன்னாலத்தான். எத்தனை தடவை சொல்றது… கொஞ்ச நாள் அமைதியா இரு இருன்னு.. கேட்டா குறைஞ்சுப் போயிடுவியா? எனக்கே சலிப்பு வந்துடும் போல, நீ பேசுறது, கேட்குறது எல்லாம் பார்க்கும் போது.” என ராஜலட்சுமி கோபமாக கூற,
“ம்மா… இவ நடந்த எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லி வச்சா என்னாகும்..? எனக்கு அந்த பயம்தான்..” என பதட்டமாக கூற,
“சொன்னா சொல்லட்டும்.. நாம என்ன இல்லாததையா சொன்னோம்..” என்ற ராஜலட்சுமியை ஒரு புழுவைப்போல பார்த்துவிட்டு சென்றார் பாட்டி.
அவருக்கே இவர்கள் பேசிய பேச்சை ஜீரணிக்க முடியவில்லை. வல்லியால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்..
இன்று நடந்த அனைத்தும் அவருக்கு மீண்டும் மனதில் ஓட ஆரம்பித்தது.
வல்லபி மதிய உணவிற்கான வேலையாக இருக்கும் போது, அங்கே வந்த வனிதா “யார் யார்தான் இந்த வீட்டு கிச்சனுக்கு வரனும்னு இல்ல..” என ஜாடையாக பேச,
“ரோட்டுல போறவங்க யாரும் இந்த கிச்சனுக்குள்ள வர, இந்த வீட்டு மூத்த மருமகதான்.. கண்ணு தெரியலனா ஹாஸ்பிடல் போய் ஒன்ஸ் செக் பண்ணிட்டு வாங்க..” என வல்லபி வனிதாவைப் பார்த்து நேரடியாகவே பேச,
“ஏய் யாருக்கிட்ட வந்து என்ன பேசுற..?” என்ற நேரம், சுமித்ராவும், சுந்தரும் கிளம்பி வெளியில் வர, அவர்களைப் பார்த்ததுமே வல்லபியைவிட்டுவிட்டு, அவர்களிடம் சென்றாள்.
“அண்ணி எங்க கிளம்பிட்டீங்க.?” என எந்த சங்கடமும் இல்லாமல் கேட்க,
“எங்க அம்மா வீட்டுக்குத்தான் அண்ணி.. எனக்கும் எங்க அம்மாவைப் பார்க்கணும் போல இருக்குமில்ல, பக்கத்துலயே வீடு இருந்தாலும் நான் என்ன உங்களை மாதிரி தினமுமா போயிட்டு வரேன்..” என முகத்தைச் சுழித்து பதில் சொல்லிவிட்டு நடக்க,
“என்ன சுந்தர் இது புதுப்பழக்கம்..” என ராஜலட்சுமி மகனிடம் கேட்டுக் கொண்டிருக்க, பாட்டிக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு தன்னறைக்கு சென்றுவிட்டாள் வல்லபி.
“என்னம்மா புதுப்பழக்கம்.. அவ சரியாதான் இருந்தா. இப்போ நீங்களும் வனியும் செஞ்ச கூத்துல நானும் போறேன்னு நிக்கிறா.. எல்லாருக்கும் ஒரு நியாயம், அவளுக்கு ஒரு நியாயமா?” என்றவன் அடுத்து பேசாமல் மனைவியோடு கிளம்பிவிட்டான்.
பேருக்குக்கூட சுமித்ரா மாமியாரிடம் சொல்லிக் கொள்ளவில்லை.
“எவ்வளவு திமிர் பார்த்தியாடி இவளுக்கு.. சொன்ன பேச்சுக்கு மறு பேச்சு பேசாம இருந்தவ, இன்னைக்கு மதிக்காம போறா..”
“எல்லாம் இந்த வீட்டுக்கு ஒருத்தி வந்துருக்காளே.. அவளோட காத்து பட்டிருக்கும்…” என வல்லபியை மனதில் வைத்து பேச,
“போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும்.. உடம்பு சரியில்லாத மனுசனைப்பத்தி கொஞ்சமாவது அக்கறை இருக்கா.. செஞ்ச தப்பை மறந்துட்டு என்ன திமிரா பேசிட்டு இருக்கீங்க..’ என பாட்டி கத்தவும் தான் அமைதியாக இருந்தனர்.
ஆனால் மனதுக்குள் வல்லபியின் மீதான கோபம் மட்டும் தீரவே இல்லை.
மாலை அப்போது தான் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு, வெளியில் வந்தவளை மீண்டும் பிடித்துக் கொண்டனர்.
“இந்த வீட்டுப் பொண்ணு நான்.. எனக்கு என்ன வேணும்னு கூட கேட்காம உன் இஷ்டத்துக்கு செஞ்சிட்டு இருக்க.. என்ன பழக்கம் இது..” என வனிதா ஆரம்பிக்க,
“அம்மா இருந்து சொல்லிக் கொடுத்திருந்தா, இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்..” என ராஜி கூட சேர்ந்து கொள்ள,
“ஆமாம் அது என்னமோ உண்மைதான்.. இப்போ நீங்க சொல்லிக் கொடுத்து உங்க பொண்ணு பேசுற மாதிரி, எனக்கு சொல்லிக் கொடுக்க என் அம்மா இல்லைதான்..” என வல்லபி பட்டென திருப்பிக் கொடுக்க,
“ராஜி என்ன பேசிட்டு இருக்க? வயசுக்கு தகுந்த பேச்சு இல்லையே உன்கிட்ட,.. வாயும் வயிறுமா இருக்குற பொண்ணுக்கிட்ட என்ன பேசுற..” என பாட்டியும் அதட்ட,
“இவங்ககிட்ட எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது பாட்டி..” என்ற வல்லியின் பேச்சில் ராஜிக்கு கோபம் கண்ணை மறைக்க,
“ஆமா உன் புருஷன் பொறந்ததுமே அவன் அம்மாவைக் கொன்னுட்டான். நீயும் உன் அம்மாவை கொன்னுட்ட.. இப்போ பொறக்கவே இல்ல, அது வெளிய வறதுக்குள்ள என் புருசனை அனுப்பிடும் போல..” என்ற ராஜியின் வார்த்தைகளை வல்லபியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“ஏய் ராஜி..” என பாட்டி ஏதோ சொல்ல வரும் முன்னே, அந்த டைனிங்க் டேபிளின் மேலிருந்த கத்தியை எடுத்து, ராஜியின் கழுத்தில் வைத்திருந்தாள்.
“நொடியில் நடந்த சம்பவத்தில் இருவரும் அரண்டு போய் நிறக,
“இன்னொரு தடவை என் புருசனைப் பத்தியோ, என் புள்ளையைப் பத்தியோ நீங்க ரெண்டு பேரும் தப்பா பேசினீங்க.. சோத்துல விசம் வச்சு கொல்லக்கூட தயங்கமாட்டேன்.. அமைதியா இருந்தா, எப்பவும் அமைதியாவே இருப்பான்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? மாமா விசயத்துலயே உங்க ரெண்டு பேரையும் கேஸ் போட்டு உள்ளத் தள்ளிருக்கனும், பாவம் பார்த்து விட்டு வச்சது என் தப்புத்தான்..” என ஆங்காரமாகக் கத்த,
“வல்லி.. வல்லி..” என பாட்டிதான் அவளை அடக்கி சமாதானம் செய்யும்படி ஆனது..
“ஏன் பாட்டி இவங்க இப்படியெல்லாம்..” என்று அழுகை பொங்கியக் குரலில் கேட்டுக் கொண்டிருக்கும் போதுதான் கர்ணன் உள்ளே வந்தது.
கார் சத்தம் கேட்கவுமே தங்களின் பயத்தைக் காட்டாதிருக்க, இருவரும் தொப்பென சோபாவில் அமர்ந்து கொண்டனர்.
அதைப்பார்த்து பாட்டிக்கு ஒருப்பக்கம் சிரிப்புத்தான் என்றாலும், வல்லியை இவர்கள் இப்படியேதான் தொந்தரவு செய்வார்களோ என்று கவலையாகவும் இருந்தது.
இப்போது அதையெல்லாம் யோசித்தபடியே சீதாவிற்கு போன் செய்ய ஆரம்பித்தார்.
பாட்டி உள்ளே சென்றதும் “ம்மா… இந்த கிழவி எப்போ போகும்..” என தாயின் காதில் முணுமுணுக்க,
“போதும் வனி.. வாயை மூடிட்டு கிளம்பு.. புள்ளைங்க தேட ஆரம்பிச்சிடுவாங்க..” என மகளுக்கு அதட்டலைக் கொடுத்தாலும், ராஜியின் மனமும் அதைத்தான் யோசித்தது.
வல்லி அவரிடம் இப்போது தனியாக சிக்கியிருக்கிறாள். இதுதான் அவருக்கு சரியான நேரம். இந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். முதலில் அவளின் திமிரை அடக்கி, பயத்தைக் காட்டவேண்டும். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வீட்டிலிருந்து மொத்தமாக துரத்த வேண்டும். ஆனால் இந்த சித்தியை வைத்துக்கொண்டு எப்படி? முதலில் இவரை அனுப்ப வேண்டும்.. எப்படி? என யோசித்தபடியே மகளை டிரைவருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இங்கு கர்ணனின் கார் நேராக, கரூரிலேயே பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வந்து நின்றது.
நடை சாற்ற இன்னும் அரை மணி நேரம் இருக்க, காரிலிருந்த டிஸூவை எடுத்துக் கொடுத்து “முகத்தை துடைச்சிட்டு வா அம்மு..” என்றான் அமைதியாக.
அவளுக்குமே இந்த ஆர்ப்பரிப்புகளும், ஆதங்கமும் குறைய வேண்டுமே.. அதனால் அமைதியாக கணவன் சொன்னதை செய்து மெதுவாக கீழிறங்கினாள்.
காலம் மாறும்
கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும்
ஏதம்மா நான் உன்
பிள்ளை தானம்மா
இவர்களைப் பார்த்ததுமே பூக்காரம்மா பூவை நீட்ட, பெண்ணுக்கு வைக்க மனமில்லை தான். ஆனால் கணவனுக்கு பிடிக்குமே என்பதால் ஜாதிமல்லியை வாங்கிக்கொள்ள, கர்ணன் பணம் கொடுத்துவிட்டு மனைவியோடு உள்ளே நடந்தான்.
இவர்களின் திருமனத்திற்கு வந்த ஐயர் இந்த கோவில் அர்ச்சகர் தான் என்பதால், இவர்களைப் பார்த்ததுமே புன்னகையுடன் வரவேற்றார்.
இருவரின் முகத்திலும் சிரிப்பில்லை என்பதை கண்டுகொண்டவர், அமைதியாகவே அர்ச்சனை செய்தார்.
பின் “அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு தம்பி.. அன்னைக்கு கோவில் வேலை பத்தி ஐயாக்கிட்ட சொல்லிட்டு வந்தேன். இன்னும் அழைக்கல.. சரி வீட்டுல சூழ்நிலை சரியில்லையோன்னு நானும் அந்தப்பக்கம் வரல..” என்றார் அவர்.
“இப்போ கொஞ்சம் பரவாயில்ல ஐயா, அப்பா இப்போ குன்னூர்ல இருக்கார். எங்கிட்ட எல்லாமே சொல்லிருக்கார்.. நான் தான் கொஞ்சம் வேலையில மறந்துட்டேன். லிஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வாங்க.. என்னனு பார்த்து பண்ணிடலாம்..” என்றதும், அவருக்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது.
அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்து பிரகாரத்தின் படிக்கட்டில் அமர்ந்தார்கள்.
கணவனின் காலடியில் இருந்த படியில் அமர்ந்திருந்தவள், அவன் காலில் தலையை சாய்த்துக் கொள்ள, அவனுமே மனைவியின் கூந்தலை மென்மையாக வருடிவிட்டான்.
“அம்மு.. நான் ஒன்னு சொன்னா கோபப்படக்கூடாது.. நான் சொல்றது உனக்காகவும், நம்ம குழந்தைக்காகவும் தான்..” என மென்மையாக ஆரம்பிக்க,
“ம்ம்ம்..” என்றாலும் நிமிர்ந்து பார்க்கவில்லை பெண்..
“நீ கொஞ்ச நாள் கோயம்புத்தூர்ல போய் இருக்கியா அம்மு…” என்றான் அடைத்த குரலில்..
அதில் சட்டென எழுந்தவள், அவனை முறைத்துப் பார்க்க
“அம்மு.. அம்மு..” என்றவனும் வார்த்தைகளுக்குத் திணறித்தான் போனான்.
“அவங்க சொன்னது அப்படியே நடக்கனும் அதானே…” என்றவளுக்கு, அதுவரை அடக்கியிருந்த கண்ணீர், கன்னத்தில் வழியத் தொடங்கியது..
“அம்மு.. என்ன நீ..? இது கோவில் இங்க வச்சு என்ன அழுகை.. யாரும் பார்க்க முன்னாடி கண்ணைத் துடை..” என்றவன், அவனே மனைவியின் விழிகளை அழுத்தி துடைத்தும் விட்டான்.
“நான் உனக்காகத்தான் சொன்னேன்… இப்படியே எவ்ளோ நாள் அமைதியா இருக்க முடியும்.. நீயும் பதில் பேசமாட்ட..” என்றதும்,
“நான் ஏன் பேசமாட்டேன்.. நான் நல்லா பேசி விட்டுட்டேன்..” என்றாள் மூக்கு விடைக்க,
“என்ன..? என்ன பேசின.?” என்றவனுக்கு பக்கென்றானது.
“ஹான் என்ன பேசினாங்க… அவங்க என்ன பேசினாங்களோ, அதுக்கு பதில்..” என்றாள் கடுப்பாக.
“அவங்க அப்படி என்ன பேசினாங்க..?” என்றவனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.
அவள் பதிலுக்கு பேசியதையும் சேர்த்து தான் சொன்னாள். மறைக்கவெல்லாம் இல்லை.
மனைவி தனக்காக பேசியதில் கர்ணனின் விரல்கள் தானாக தன் தாடையைத் தடவி, மீசையை முறுக்கிக் கொண்டது.
“நீங்க இப்படி வீராப்பா மீசையை முறுக்கிக்கிற அளவுக்கு ஒன்னும் நடந்திடல.. இன்னொரு முறை உங்க அம்மாவும், தங்கச்சியும் என் புருசனையும், என் புள்ளையையும் எதாவது சொன்னா, அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்…” என கடுகடுவென சொல்லிவிட்டு எழுந்து கொள்ள, கணவனின் காலடியில் மாட்டியிருந்த பெண்ணவளின் புடவை முந்தானை, அவளை போன வேகத்தில் திரும்பி அவனிடமே வர வைத்தது..
“என்ன பண்றீங்க கோயில்ல வச்சு..?” என கணவனைப் பார்க்காமலே பல்லைக் கடிக்க,
“மேடம் கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்க..” என சிரிக்க, அப்போதுதான் அவளுக்கே தெரிந்தது, அவன் காலுக்கடியில் புடவை மாட்டியிருந்தது..
“ம்ம் சரி விடுங்க..” என சுற்றும் முற்றும் பார்த்தபடி பதட்டமாக கூற, அவனுக்கோ அந்த பதட்டமெல்லாம் இல்லை போல, அவளை இழுத்து மீண்டும் தன்னோடு நெறுக்கமாக அமர வைத்துக்கொண்டான்.
அன்றைய நாளின் அலைச்சலும், கோபமும், சோர்வும் இப்போது போன இடம் தெரியவில்லை.
தன் கைவளவில் இருக்கும் மனைவியின் இருப்பை உணர்ந்து, அவளின் வாசனையை தனக்குள் நிரப்பியபடியே கண் மூடி அந்த தருணத்தை ரசித்தான் வல்லியின் மணாளன்.
மாமன் தோளில்
சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும்
கிள்ளையே நீ என்
வாழ்வின் எல்லையே