முத்தமழை – 36
“அண்ணனும் அண்ணியும் கிள்மபிட்டாங்களா அத்த..” என்றபடியே உள்ளே வந்த வனிதாவிற்கு பதிலே சொல்லாமல் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் அவளின் மாமியார் விமலா.
“அத்தை..” என மீண்டும் அழைக்க,
“என்ன..? என்ன வேணும் உனக்கு? நீ உன் அம்மா வீட்டுல உக்காந்து சீராடும் போது, என் பொண்ணு இங்க வரக்கூடாதா?” என கடுமையாக கேட்க,
“நான் அப்படி கேட்க வரல த்த.. அண்ணி கிளம்பிட்டாங்களான்னு தான் கேட்டேன்..” என அவர் எதற்கு கோபமாக பேசுகிறார் என்று புரியாமல் கேட்க,
“வேற எப்படி கேட்க வந்த? கிளம்பாம இங்கேயே வச்சுக்க சொல்றியா? அவ என்ன உன்னை மாதிரி அம்மா வீட்டுலயே உட்கார்ந்து ஊர் வம்பு இழுக்குறாளா?” என்று கடுப்பாகா கேட்க,
“அத்தை என்னாச்சு.? ஏன் இவ்ளோ கோபம்..?” என எதற்கென்று தெரியாமல் மீண்டும் கேட்க,
“ஒன்னுமே இல்லாத விசயத்தை ஊதி பெருசு பண்ணதும் இல்லாம, அதை செஞ்சதுக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி வரலியே உனக்கு. பெத்த அப்பனுக்கே இந்த நிலமைனா, நாளைக்கு எங்களுக்கு, என் பையனுக்கு..?” என விமலா ஆத்திரமாக கேட்க,
“மாமா நான் நம்ம குடும்பத்துக்காகத்தான் இதெல்லாம் பண்ணேன்..” என மாமியாரை விடுத்து மாமானாரிடம் கூற,
“நான் கேட்டா எங்கிட்ட பதில் சொல்லு, அதென்ன திமிரா ஆம்பளைங்ககிட்ட பேசுறது..” என அதற்கும் விமலா கத்த,
“போதும் விமலா..” என மனைவியை அடக்கியவர், “என்ன நம்ம குடும்பத்துக்காக பண்ண? அப்படி நினைச்சிருந்தா நீ இந்தளவுக்கு கீழ்த்தரமா இறங்கி போயிருக்கமாட்ட.. இன்னைக்கு எனக்கும் என் பையனுக்கும் எவ்ளோ அசிங்கம் தெரியுமா? சொத்தைக் கேட்டு மருமகளை அனுப்பி வச்சதுனாலத்தான், சொக்கலிங்கத்துக்கு உடம்பு முடியாம போயிருச்சு.. அந்த மனுசன் என்ன செய்யாமலா போயிடுவாரு, அப்படி என்ன சொத்து மேல கண்ணுனு.. எங்களைப் பார்த்து கேட்குறாங்க.. இதெல்லாம் யாரால..” என அவரும் கேட்க, வனிதாவால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
“மாமா நான் இப்படியெல்லாம் யோசிக்கல..” என விளக்கம் சொல்ல வர,
“நீ எதைத்தான் சரியா யோசிச்சிருக்க.. என் பையன் ஆசைப்பட்டானு உன்னை கொண்டு வந்ததுமில்லாம, என் பொண்ணையும் கொடுத்துட்டு இன்னைக்கு திக்கு தெரியாம முழிக்கிறேன்..” என விமலா பேச,
“அத்தை நீங்க பேசுறது ரொம்ப தப்பு.. இத்தனை வருஷம் கழிச்சு இதெல்லாம் ஏன் பேசுறீங்க..” என வனிதாவும் கோபமாக ஆரம்பிக்க,
“இந்த திமிரெல்லாம் எங்கிட்ட காட்டக்கூடாது. உன் அம்மா வீட்டோட வச்சிக்கனும். ரெண்டு புள்ளைங்க ஆகிடுச்சு, இன்னும் கொஞ்சம் கூட குடும்ப பொறுப்பு வரல, பச்ச புள்ளைங்கள விட்டுட்டு உன் அம்மா வீட்டுக்கு ஓடிடுற, கொஞ்சமாவது அதுங்க மேல அக்கறை இருக்கா. என் பொண்ணு இப்படி வந்து உட்கார்ந்தா உன் அம்மா சும்மா விடுவாங்களா? உனக்கு ஒரு நியாயம் என் பொண்ணுக்கொரு நியாயாமா? இனி உன் அம்மா வீட்டுக்கு போகனும் நினைச்சா மொத்தமா அங்கேயே போயிடு.. இல்ல உன் புருசன் புள்ளைங்களை அழைச்சிட்டு தனியா போயிடு.. இனியும் உன்னைமாதிரி சண்டி மாடுங்க கூட இந்த வீட்டுல பொழப்புத்தனம் நடத்த முடியாது..” என விமலா பேசிக்கொண்டே செல்ல, அங்கிருந்த யாருமே அவரைத் தடுக்கவில்லை.
“நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. உங்க பணத்துக்காகத்தான் உங்க வீட்டுல சம்மந்தம் பண்ணோம்னா, வரலட்சுமி அண்ணியை எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். தங்கமான மனுஷி.. உன் அம்மாவோட எண்ணம் தெரிஞ்சும், சொக்கு அண்ணனுக்காகத்தான் இந்த சம்மந்தத்தை ஒத்துக்கிட்டோம். சொக்கு அண்ணனை எங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். அவங்க வீட்டுக்கு வாழப் போனா புள்ளைங்க நல்லா இருப்பாங்கனு நினைச்சுக் கொடுத்தோம். ஆனா இப்படினு முன்னாடியே தெரிஞ்சிருந்தா திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டோம்…” என மேலும் பேச, வனிதாவிற்கு இதெல்லாம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுவரை தன்னை ஒரு வார்த்தை கூட மனம் வருந்தும் படி பேசியிறாத மாமியார், இன்று இவ்வளவு பேச என்ன காரணம்.. சுமி வந்து தன்னைப்பற்றி தவறாக எதுவும் சொல்லிவிட்டு சென்றாளோ.. ஆம் அப்படித்தான் இருக்கும். இல்லையென்றால் அங்கு நடந்தது எப்படி இவர்களுக்குத் தெரியும்.. என சுமித்ராவை தவறாக நினைக்க ஆரம்பித்து, அவள் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டாள்.
“என்ன நான் சொன்னது காதுல விழுந்ததா? இனி உன் அம்மா வந்து உன்னை பார்த்தா போதும்.. இங்க இருந்து நீ போகக்கூடாது. போய் புள்ளைங்க என்ன செய்றாங்க, புருசன் என்ன செய்றான்னு பாரு..” என கண்டிப்புடன் கூற, பதிலேதும் சொல்லாமல் ‘அப்போ அவர் உள்ளத்தான் இருக்காரா? அவங்க அம்மாவை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறாரா? இன்னைக்கு இருக்கு அவருக்கு..’ என மனதுக்குள் கருவியபடி அறைக்குச் செல்ல, அங்கு இவளுக்கு மேல் கடுங்கோபத்தில் இருந்தான் ரமேஷ்.
“நீங்க உள்ள இருந்துட்டு தான் உங்க அம்மாவை பேச வச்சீங்களா?” என அவனின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் வனிதா கத்த ஆரம்பிக்க,
“வாயை மூடு..” என அத்தனை சத்தமாக கத்தினான் ரமேஷ். அவன் சத்தத்தில் உறக்கத்தில் இருந்த பிள்ளைகள் கூட அரண்டு எழுந்து அழ ஆரம்பித்துவிட்டனர்.
“என் வாயை கிளறி வாங்கிக் கட்டிக்காம, பசங்களை பாரு..” என கத்திவிட்டு, அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியில் சென்றுவிட, பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் வனிதா..
இங்கு வல்லபியின் வீட்டில் “என்னதான் லிங்கா அண்ணனுக்காக நாம எல்லாம் செஞ்சாலும், வல்லியை கொடுக்க முடியாதுனு தீர்க்கமா சொல்லிருக்கலாமோனு இப்போ எல்லாம் எனக்கு அடிக்கடி தோணுது..” என்ற மனைவியை யோசனையுடன் பார்த்தார் சிவகுரு.
“ஒன்னுமன்னுமா பழகினாலும் குடும்பம்னு வரும்போது நாம ஒதுங்கியிருக்கலாமோனு நினைக்கிறேன். இன்னைக்கு நம்ம வல்லிக்கு எவ்ளோ பிரச்சினை.” என்றார் வருத்தமாக.
“சீதா.. நீ இப்படி பேசுறது யாருக்கும் தெரியக்கூடாது.. தெரிஞ்சா லிங்காவும், மாப்பிள்ளையும் ஏன் நம்ம வல்லி கூட வருத்தப்படும்.. இனி எப்போதும் இந்த பேச்சு இருக்கக்கூடாது சீதா.. நடக்கிறதுக்கு முன்னாடி நாம என்னமும் செஞ்சிருக்கலாம். நடந்திடுச்சு, முக்கியமா நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிடுச்சு. அடுத்து என்ன செய்யலாம்னு தான் யோசிக்கனுமே தவிர, அதையே யோசிச்சு வருத்தப்படக்கூடாது..” என்றார் பொறுமையாக.
“மனசுக்கு புரியாம இல்லை.. ஆனா யோசிச்சிப்பாருங்க. ஒரு விசேஷம். நம்ம பொண்ணு உண்டாகிருக்கா.. அதை முழுமனசா நம்மளால கொண்டாட முடிஞ்சதா? வல்லியை அந்த அம்மா பார்த்துக்கவே செய்யாது.. இவளும் அங்க இருந்து வரமாட்டேங்கிறா? எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க..” என்றார் சீதாவும்.
எனக்கும் புரியுதுமா.. இப்போதான் லிங்கா ஒரு கண்டத்தை தாண்டி வந்துருக்கான். மறுபடியும் ஒரு அதிர்ச்சி அவனுக்கு வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். முடிஞ்சா ஐஞ்சாம் மாசமே வளையல் போட்டு கூப்பிட்டு வந்துடுவோம். ராமுக்கிட்டயும், மாப்பிள்ளைக்கிட்டயும் நான் பொறுமையா பேசுறேன்..” என்று அந்த பேச்சை அப்போதே முடிக்க, நாட்களும் அதன் போக்கில் நகரத் தொடங்கியது.
சீதா நினைத்தது போலவே, ராஜலட்சுமி வல்லபியை சுத்தமாய் கண்டு கொள்வதில்லை. சுமியையும் விடுவதில்லை. ஆனா சுமி அவரை கண்டு கொள்வதில்லை.
வனிதா இங்கு வராமல் போனதற்கு சுமிதான் காரணம் என அவளின் மீதும் ராஜலட்சுமிக்கு கோபம்..
ஆனால் பாட்டியும் கர்ணனுமே அவளை நன்றாக பார்த்துக் கொண்டனர்.
இடைப்பட்ட நாளில் குன்னூர் போக வேண்டும் என்ற ராஜியை கர்ணனே அழைத்துச் சென்று காட்டிவிட்டு, அழைத்து வந்தான்.
பத்து நாட்களுக்குப் பிற்கு சொக்கலிங்கத்தை செக்கப்பிற்காக கரூருக்கு அழைத்து வந்திருந்தனர்.
ஒருநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்க, பாண்டியனிடம் வல்லி கேட்டாள் என சில பூஞ்செடிகளை வாங்கிக் கொடுக்கும் படி சொல்லியிருந்தான் கர்ணன்.
மருத்துவமனைக்குச் சென்றும் சொக்கலிங்கம் மனைவியிடம் பேசவில்லை. கணவரின் ஒதுக்கம் வல்லபியால் என்று முடிவு செய்த ராஜலட்சுமி அதே கோபத்துடன் வீட்டிற்கு வந்தார்.
அப்போதுதான் வேலையெல்லாம் முடித்து விட்டு ஹாலில் அமர்ந்து ஜாதி மல்லியைத் தொடுக்க ஆரம்பித்தாள் வல்லபி.
பொதுவாகவே வல்லி மிக பொறுமை. இப்போது மூன்று மாத கருவையும் சுமப்பதால் மிகவுமே நிதானமாகவே செயல்படுவாள்.
பூ தொடுத்துக் கொண்டிருந்த நேரம் “மேடம்..” என்றபடியே வந்து நின்றான் பாண்டியன்.
“சொல்லுங்க அண்ணா..”
“நீங்க கேட்ட செடியெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன். சார் உங்க பால்கனில செட் பண்ணனும் சொன்னார்.”
“ஆமா ண்ணா.. ரூம் வழியா யாரும் உள்ள வரக்கூடாதுனு சொல்லிட்டார். ஸ்டீல் ஸ்டெப்ஸ் கீழ இருந்து, எங்க பால்கனிக்கு வர மாதிரி நாளைக்கு அரேஞ்ச் பண்ணிடலாம். அவங்ககிட்ட மட்டும் நான் பாவாவை பேச சொல்றேன்..”
“சரிங்க மேடம்.. இந்த செடியெல்லாம் மாடி ஹால்ல வைக்க சொன்னார். ஈவ்னிங்க் வந்து அவரே உள்ள வச்சிக்கிறேன் சொன்னார்.”
“ஓக்கே ண்ணா.. அது நான் பார்த்துக்கிறேன். செகியூரிடி இருக்கார் அவரை வச்சு எடுத்து வச்சிக்கிறேன்.. மாமா ஹாஸ்பிடல்ல தனியா இருப்பார். இப்போ நீங்க அங்க கிளம்புங்க”
“ஓக்கே மேடம்..” என்ற பாண்டியன் உடனே கிளம்பிவிட, மெதுவாக எழுந்து மிகவும் நிதானமாக எட்டு வைத்து வாசலுக்கு வந்தாள் வல்லபி.
அங்கிருந்த செக்யுரிடியிடம் “இதை மாடி ஹால்ல வச்சிடுங்க..” என்றாள். அவரும் தயக்கமாக ராஜலட்சுமியை பார்த்துக் கொண்டே வர,
“ஏய் அவளுக்குத்தான் இந்த வீட்டோட மானம் மரியாதை தெரியாதுன்னா, இத்தனை வருசம் குப்பை கொட்டின உனக்கும் தெரியாதா? யாரை வீட்டுக்குள்ள விடனும், யாரை விடக்கூடாதுனு கூட தெரியாதா? அதானே முதல்ல அவளே இந்த வீட்டுக்கு வர தகுதியில்லாதவ தான..” என ராஜலட்சுமி கோபமாக பேச, வல்லபியோ அதை காதில் வாங்காமல் செக்யுரிடியை நேராக பார்த்தாள்.
அவரோ வல்லபியைப் பார்க்காமல், ராஜலட்சுமியிடம் “மன்னிச்சிடுங்க ம்மா.” என்றுவிட்டு விடுவிடவென வெளியில் சென்றுவிட்டார்.
“நீ என்னத்த வெட்டி முறிக்கிற, ஏன் இந்த சின்னத் தொட்டியை கூட உன்னால தூக்க முடியாதா? ஊரு உலகத்துல யாருமே புள்ள பெக்கலையா?” என வல்லபியிடம் கத்த, எதற்கும் பதில் சொல்லாமல் மீண்டும் சோபாவில் வந்தமர்ந்து பூவை கட்ட ஆரம்பித்தாள்.
வல்லபியின் நிதானத்தைப் பார்த்து அசந்து விட்டார் ராஜலட்சுமி. அது அவருக்கு மேலும் கோபத்தைக் கொடுக்க, அவளுக்கு எதிரில் அவளையே முறைத்தபடி அமர்ந்துகொண்டார்.
‘இன்று இவளை விடவே கூடாது என்று அவர் முடிவு செய்திருக்க, வெளியில் வந்த வாட்ச்மேனோ நடந்ததை கர்ணனிடம் சொல்ல பயந்து, யாழினியிடம் கூற, அவளோ உடனே கர்ணனுக்கு அழைத்து சொல்லிவிட்டாள்.
கேட்ட அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டில் இருந்தான் கர்ணன்.
மனைவியைப் பார்த்து புன்னகைத்தபடியே வர, அவளும் கணவனின் புன்னகையை மலர்ந்து எதிர்கொண்டாள்.
“முடிஞ்சதா?” என பூ கட்டும் வேலையைப் பார்த்து கேட்க,
“இன்னும் கொஞ்சம் தான்..” என்று அவளும் கூற,
“சரி நீ முடி. அதுக்குள்ள இதெல்லாம் நான் மேல எடுத்து வைக்கிறேன்..” என அவளுக்கு கூறிவிட்டு பொறுமையாக ஒவ்வொரு தொட்டியையும் தன் அறை பால்கனியில் கொண்டு வந்து வைத்தான் கர்ணன்.
அதை மலர்ந்த புன்னகையோடு வல்லபி பார்க்க, கண்ணில் குரோதம் மின்ன கொல்லும் வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார் ராஜலட்சுமி.