தூரம் 13
தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை. ஐசியு வாசலில் அனைவரும் பதட்டத்துடன் நின்றிருக்க, ஓய்ந்து போய் ஒரு மூலையில் அம்ர்ந்திருந்தார் கொடியின் தந்தை.
மற்றொரு மூலையில் இறுகி போய் அமர்ந்திருந்தான் இளங்கோ. யாரையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் கூட அவனுக்கு இல்லை.
அங்கிருந்த அனைவரும் பேசி, திட்டி, சண்டையிட்டு, ஏன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருந்தால் கூட அவனுக்கு வலித்திருக்காதோ என்னமோ? ஆனால் யாருமே அவனை எதுவும் சொல்லாமல், ஏன் வா என்று கூட அழைக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
அமுதா மட்டும் தான் புலம்பிக்கொண்டு இருந்தாள். அவளையும் ஆனந்தி, அடக்கி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தாள்.
அன்று ஆஃபிஸூக்கு சென்ற பிறகுதான் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஞாபகமே வந்தது இளங்கோவிற்கு.
உடனே கொடிக்கு அலைபேசியில் அழைக்க, அவளோ போனை எடுக்காமல் போக, அடுத்து நந்தினிக்கு அழைத்தான்.
அவளும் காலையில் இருவருக்கும் நடந்த பேச்சைக் கூற, “சரி ராசாத்தி, அண்ணி வந்ததும் எனக்கு கூப்பிடு, நானும் வந்துடுறேன்.” என கூறி வைத்தவனுக்கு, மகளை எப்படி சரி செய்வது என்பதிலேயே தான் கவனம் இருந்தது.
அனைத்தும் சரியாக இருக்கிறது என நினைத்தது தவறோ என்ற யோசனைதான், அன்றைய நாள் முழுவதும் அவனுக்கு. அப்படியான யோசனையில் இருக்கும் போதுதான் சீனி சார் அவனைத் தேடி வந்தார்.
வந்தவர் அவனைப் பார்த்தபடியே அமர, அந்த பார்வையே அவனை குற்றம் சொல்ல, தடுமாறி போனான் இளங்கோ.
நொடியில் தன் தடுமாற்றத்தை மறைத்து, “யெஸ் சார்!” என்றதும்,
“உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவே இல்ல இளா. எவ்வளவு கோபம் இருந்தாலும், அதை பேசி சண்டை போட்டு சரி செஞ்சிருக்கணுமே தவிர, இப்படி ஒதுக்கி வச்சு பழிவாங்கி இருக்கக்கூடாது.” என்றுவிட்டார் பட்டென.
“சார்…” எனத் திணறியவன், “அது ஒரு கோபத்துல…” என வார்த்தைகளை மென்று விழுங்கியவன், அவர் முகத்தைப் பார்க்கவே இல்லை.
“நேத்து உன் வொய்ஃப்போட முகத்தை பார்க்கவே முடியல இளா. அப்படி என்ன கோபம் உனக்கு அவங்க மேல? குழந்தைகளும் அவங்களை அவாய்ட் பண்ற மாதிரி இருந்தது.” என கோபமாக கேட்க,
“அது கொஞ்சம் பிரச்சனை…” என்றவன் அனைத்தையும் சொல்லி முடிக்க, அதைக் கேட்டு ஏகத்துக்கும் கோபம் ஏறியது அவருக்கு.
“என்னைய்யா பண்ணி வச்சிருக்க அந்த பொண்ணை? அந்த ஒரு விசயத்தைத் தாண்டி வேற எதுவும் அவங்க மேல தப்பு சொல்ல முடியுமா? இதுவுமே அவங்க செஞ்ச தப்பு இல்லையே? ஒருத்தன் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டு போயிட்டான். அதுல அவங்க மேல என்னய்யா தப்பு? இதுக்காக நீ கொடுத்த தண்டனை ரொம்பவே அதிகம்.” என சலிப்பாக கூற,
“இல்ல சார், அது பணத்தோட மதிப்பு அவளுக்கு தெரியணும்னு தான்…” எனவும்,
“போதும்யா… உன் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு, அதை பேசியே இறக்கிடாத. உன்னை விட அதிகமா அவங்களுக்கு அந்த பணத்தோட மதிப்பு தெரியும். இப்போ நீ செஞ்சதுல இன்னும் தெரிஞ்சிருக்கும். இனி உன்னால அந்த பொண்ணுக்கூட எப்படி நிம்மதியா வாழமுடியும்?” என கவலையாக பேசியவர்,
“நேத்தே கவிதா சொன்னா, கொடிக்கிட்ட என்னமோ சரியில்ல. முன்ன மாதிரி எங்கிட்ட சகஜமாவே பேசல. ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனை போய்ட்டு இருக்கு போலன்னு…” என்றவர்,
“முதல்ல உன் வொய்ஃப்பை சரி பண்ணு இளா. அவங்க இல்லைன்னா நாம எல்லாம் ஒன்னுமே இல்ல. சண்டை போடவாச்சும் நம்மக்கூட அவங்க இருக்கணும்.” என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமலே கிளம்பிவிட்டார்.
சில நாட்களாக அவனுக்குமே மனைவியின் செயல்கள் அனைத்துமே குழப்பத்தையும் யோசனையையும் தந்தது. அன்று மயங்கி விழுந்தது வேறு அவன் குழப்பத்தை அதிகம் பண்ண, இன்று கண்டிப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்து, சீனி சாரிடம் பெர்மிஷனும் வாங்கியிருந்தான்.
அப்போது கணேஷிடமிருந்து போன் வர, இவர் ஏன் இப்போது போன் பண்ணுகிறார்? ஒருவேளை நிவியை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார்களோ என்று யோசித்தபடியே, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.
“சொல்லுங்க அண்ணா…” என்றவன், அந்தப் பக்கம் கூறிய செய்தியில் அடித்துப் பிடித்து தேனி ஜிஹச்க்கு ஓடினான்.
அவன் சென்று பார்க்கும் போது அவள் வீட்டைச் சேர்ந்த அனைவரும் அங்கு இருக்க, இவன் மட்டுமே கடைசியாக வந்திருப்பது புரிந்தது.
அதுவே மனம் கனமாக, சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு கணேசிடம் சென்று, “என்னாச்சு ண்ணா…?” என மூச்சு வாங்க கேட்க,
அவரோ அவனை நேராக கூட பார்க்காமல், கொடி ஹாஸ்பிடல் சென்றதைக் கூறி, “ரோட்டுல மயங்கி விழுந்துருக்கா அனாதை மாதிரி… எவ்வளவு நேரம் அந்த வெயில்ல கிடந்தாளோ தெரியல. அந்த பக்கம் போனவங்க தூக்கிட்டு வந்து ஆஸ்பத்திரில சேர்த்துருக்காங்க.
நல்ல வேளையா அவளுக்கு பார்த்த டாக்டரும் அங்கதான் இருந்துருக்காங்க. உடனே முதலுதவி செஞ்சி இங்க அனுப்பிருக்காங்க. அங்க வேலை செய்ற நர்ஸ் பொண்ணு, எனக்கு சொந்தம். அதுதான் என்னை கூப்பிட்டு சொல்லுச்சு. உடனே நாங்க எல்லாரும் வந்துட்டோம்.” என்றார் பெருமூச்சோடு.
“என்ன சொல்றாங்க?” என்றான் வார்த்தைகளே வராமல்.
“வந்ததுமே ஐசியுக்கு கொண்டு போயிட்டாங்க. ரொம்ப சத்தம் போட்டாங்க, அவளோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க. எதுவுமே எங்களுக்கு தெரியல. இங்கேயே டெஸ்ட் எடுக்கலாம்னு எடுத்துட்டு இருக்காங்க.” என்றவன்,
“உனக்கு அவக்கூட வாழ பிடிக்கலன்னா, எங்ககிட்ட அனுப்பிருக்கலாமே இளா. இப்படி கஷ்டப்படுத்திருக்க வேண்டாமே?” இந்த வார்த்தையை சொல்லி முடித்ததுமே ஆனந்தியும் அமுதாவும் அழ ஆரம்பித்துவிட்டனர்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் அடுத்து யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஒரு மூலையில் போய் அமர்ந்துவிட்டான்.
இளங்கோவால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவர்கள் கூறுவது சரிதானே? பிடிக்கவில்லை என்றால் அவளை விட்டிருக்க வேண்டும். கூடவே வைத்து கொடுமை செய்திருக்ககூடாது. வார்த்தைகளாலும் மௌனத்தாலும் வதைத்திருக்கக் கூடாது.
தனியாக இருந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு கஷ்டம் வந்துருக்காதோ? அய்யோ! இப்போது எப்படி அவளை சரி செய்வேன் என, அவன் மனதுக்குள் நடக்கும் போராட்டம் அவன் மட்டுமே அறிவான்.
நான்கு மணி நேரங்கள் கழித்து, வெளியில் வந்த மருத்துவர் யாருமே எதிர்பார்க்காத வெடிகுண்டை தூக்கி அங்கிருந்தவர்களின் தலையில் இறக்கினார்.
அவர் கூறியது முதலில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீண்டது கணேசன் தான்.
“என்ன… என்ன சொல்றீங்க டாக்டர்? எங்களுக்கு ஒன்னுமே புரியலையே? கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்…” என பதட்டமாக கேட்க, அதற்குள் இளங்கோவும் அருகில் வந்திருந்தான்.
“இந்த பேஷண்டோட ஹஸ்பெண்ட் யாரு?” என்றவரிடம் இளங்கோ வேகமாக வந்து முன்னே நிற்க,
“இதுக்கு முன்னாடி வேற எங்கேயாவது செக்கப் போய் இருக்கீங்களா?” என்று அவனிடம் கேட்க, இல்லை என்பது போல் இளங்கோ தலையை ஆட்ட, மருத்துவரின் முகத்தில் இருந்த அதிருப்தி அவனைக் கொல்லாமல் கொன்றது.
“தைராய்டுக்கு மெடிசன் ஸ்டாப் பண்ணி எவ்வளவு நாளாச்சு?” என்றார் அடுத்த கேள்வியாக.
“இரண்டாவது பையன் பிறந்த சமயம் தான் தைராய்டு இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. அதிலிருந்து ஒரு த்ரீ இயர்ஸ் விடாம மெடிசன் எடுத்துட்டு இருந்தா. அப்புறம் டாக்டரே வேண்டாம், நிறுத்திக்கலாம்னு சொல்லிட்டாங்க. இப்போ மறுபடியும் வலி இருக்குனு செக் பண்ணும் போது, தைராய்டு இருக்குன்னு சொல்லி மெடிசன் எடுத்துட்டு இருக்கா.” என்றான் யோசனையாக.
இப்போது மருத்துவருக்கே இளங்கோவின் மீது கோபம் வந்துவிட்டது.
“உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனையா?” என்றார் அதே கோபத்தோடு.
“என்னாச்சு டாக்டர்? எனக்கு ஒன்னும் புரியல…” என்றான் குழப்பமாக. இதற்கும் அதற்கும் என்ன சம்மந்தம்? குழப்பமாகவே அவரைப் பார்த்தான்.
“நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி அது தைராய்டு கிடையாது.” என்று கொஞ்சம் கேப் விட்டவர், பின் பெருமூச்சுடன், “அவங்களுக்கு த்ரோட் கேன்சர். சிம்டம்ஸ் எல்லாம் அதுதான் சொல்லுது.” என மருத்துவர் இளங்கோவைப் பார்த்து கூற, அடுத்து என்ன பேச, கேட்க என தெரியாமல் அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
அந்த அமைதியைக் கலைத்தது அமுதாவின் அலறல் தான், “அய்யோ கொடிமா!” என்ற அமுதாவின் கதறல் அந்த இடத்தையே அதிர வைத்தது.
இளங்கோ அப்படியே சரிந்தமர்ந்தான், அவன் உலகமே ஒரு நொடி நின்று சுழன்றது.
கணேசும் நடராஜும் அவனைத் தூக்கி நிறுத்த, அவனின் புரியாத பார்வையும் கண்களில் தெரிந்த பயத்தையும், பார்த்த மருத்துவருக்கு கொடி இதைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை என்று புரிந்தது.
அது அவர் கோபத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தது. பின் சமாதானமாக, “பயப்படத் தேவையில்லை, இது ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் கேன்சர்தான், கண்டிப்பா காப்பாத்திடலாம். அவங்க இப்போ கரெக்டான மெடிசின் தான் எடுத்துட்டு இருக்காங்க. சோ ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்றவர்,
பின், “அவங்க பார்த்துகிட்டு இருக்கிற டாக்டர்கிட்ட நான் பேசிட்டேன். அவங்களும் சொன்னாங்க, மெடிசன் எல்லாம் கரெக்டா தான் எடுத்துட்டு இருக்காங்க என்று. சோ பயப்படாம அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க. எவ்வளவு சீக்கிரம் சர்ஜரி பண்ண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பண்ணிடலாம்.” என மருத்துவர் இளங்கோவைப் பார்த்து கூற, அவன் இன்னும் சுயநினைவுக்கே வரவில்லை என்று, அவன் அரண்ட பார்வையில் தெரிந்தது.
அதைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ, “நீங்க பேசி ஒரு முடிவு எடுத்துட்டு எனக்கு சொல்லுங்க. பேஷண்ட உடனே மதுரைக்கு ஷிப்ட் பண்ணணும். இங்கேயே எல்லா ஃபெசிலிட்டியும் இருந்தாலும் மதுரைக்கு கொண்டு போறதுதான் பெட்டர்.
ஒருவேளை மதுரை வேண்டாம்னு சென்னைக்கு கொண்டு போறேன்னு சொன்னாலும் ஓகே. உங்களுக்கு எது பெட்டர்னு பேசிட்டு எனக்கு முடிவு சொல்லுங்க, நான் லெட்டர் கொடுக்கிறேன்.”
“பட் கண்டிப்பா டூ டேஸ் இங்க இருக்கிற மாதிரி தான் இருக்கும். அதுக்கு பிறகு ஷிஃப்ட் பண்ணிக்கலாம்.” என்ற மருத்துவர் அங்கிருந்து நகர்ந்துவிட, அனைவரின் பார்வையும் இளங்கோவையும் சங்கரையும் தொட்டு தொட்டு மீண்டது.
அவனுக்கு யாரிடமும் பேசும் தைரியம் இல்லை, முக்கியமாக சங்கரிடம்.
அவருக்கு என்ன பதில் சொல்வான்? வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவரிடம், உங்கள் மகள் தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று திருமணத்தை முடித்து, இன்று எப்படிப்பட்ட சூழ்நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறான். கொடியே மன்னித்தாலும் அவர் மன்னிக்க மாட்டாரே என இடிந்து போய் அமர்ந்திருக்க, சரியாக அந்நேரம் வெங்கடேஷ், தன் குடும்பத்துடன் நவீனையும் நர்த்தனாவையும் அழைத்துக்கொண்டு வர,
நர்த்தனாவைப் பார்த்ததும் அமுதாவிற்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ? முதல் நாள் தந்தை வந்து கூறியதிலிருந்தே அவள் மேல் கோபமாக இருந்த அமுதா, இப்போது தங்கையை இப்படி பார்க்கவும், இவளும் ஒரு காரணம் தானே என நினைத்து, யாரைப் பற்றியும் யோசிக்காமல் நர்த்தனாவை இழுத்து ஒரு அறை அறைந்திருந்தாள்.
“அமுதா என்ன பண்ற?” என நர்த்தனாவை இழுத்து தனக்கு பின்னால் விட்டு, தங்கையை அதட்டிய ஆனந்தியை முறைத்து, “விடு, இன்னும் ரெண்டு போடுறேன். எவ்வளவு திமிரு இவளுக்கு? கொஞ்சமும் அம்மா என்ற மரியாதை இல்லாம வேலைக்காரிய விட மோசமா நடத்துவாளா? என்ன, அவ இல்லாம இவ மேல இருந்து குதிச்சு வந்தாளா? அவளா இருக்கப் போய் இவ்வளவு பொறுமையா இருக்கா. என் பெண்ணாயிருந்தா, இந்நேரம் தலைகீழா கட்டி வச்சி தோல உரிச்சிருப்பேன் ராஸ்கல்…” என கத்த, ஆனந்தியின் முதுகுக்குப் பின்னே இருந்த நர்த்தனாவின் உடல் பயத்தில் நடுங்கியது.
ஆளுக்கொரு மூலையில் அழுது கரைந்து அமர்ந்திருக்க, அதுவரை யோசனையிலேயே இருந்த சங்கர், கணேசனிடம் வந்து, “என் பொண்ணை பார்த்துக்க எனக்குத் தெரியும், இவங்க…” என இளங்கோ மற்றும் பிள்ளைகளைக் காண்பித்து, “யாரும் இங்க இருக்கக்கூடாது.” என கண்டிப்பாக சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட, அதற்கும் கூட இளங்கோ நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவன் எதாவது கூறுவான் என அவன் முகத்தையே அனைவரும் பார்த்திருக்க, அவனோ எழுந்து கணேசனையும் அழைத்துக்கொண்டு நேராக மருத்துவரின் அறைக்குள் சென்றுவிட்டான்.
வெங்கடேஷின் மனைவி வனிதா தான், “எத்தனை தடவை சொல்லிருப்பேன் உங்ககிட்ட, அக்காவுக்கு ஏதோ சரியில்ல சரியில்லன்னு… கேட்டீங்களா? இப்போ எங்க வந்து நிக்குது பாருங்க?” என கணவனிடம் கத்தியவள்,
அப்படியே ஆனந்தியிடம் திரும்பி, “அக்கா அவர் செஞ்சதுக்கு நாங்க என்ன செய்வோம்? ஏன், பெரியப்பா எங்களையும் சேர்த்து போக சொல்றார்?” என அவள் ஒரு பக்கம் அழ, அந்த மருத்துவமனையே இவர்களால் களேபரமானது.
துன்பங்கள் வாழ்க்கையில் ஒர் அம்சம். துணிவுடன் கையாள்வதே வாழ்வில் சிறப்பம்சம் என யார் சொல்வர்கள் கொடியின் உறவுகளிடம்.
***