Home Love - Family - Romanceமுத்தமழை – 48

முத்தமழை – 48

by Vathani S

முத்தமழை -48

“சேட்டா இதானு ஞான் பறஞ்ச ஆளு..” என சுந்தரை ஒருவனிடம் காட்டினான், அவனின் நண்பன் சுரேஷ்..

“சுரேஷா ஆளு எங்கனியா?” என்றார் அந்த மிசினில் மாட்டிறைச்சியை உள்ளேத் தள்ளியபடி.

“சேட்டா.. ஆள் எண்ட ப்ரண்ட்தன்னே, நாட்டிலேக்கி நல்ல வளம் கொண்ட ஃபேமிலியா?”

“ஓ.. பச்சே ஈயாளு எந்தாடா, கூடெப்பிறன்ன அண்ணனையே பிரதிகாரம் செய்யான் வந்து நிக்குகையானு… நாள இது நமுக்கு வலிய ஒரு பிரஷ்னம் ஆவருது.”

“அதெல்லாம் ஒரு பிரஷ்னமும் ஆவில்ல… நமுக்கு என்ன செய்யணமோ, அத அவன் பக்காவாயிட்டு செய்யும். நம்மட கையிலுள்ள சாதனம் அவனுக்குக் கொடுத்தா மதி. இந்த மீட்டிங் களிஞ்ஞா, பின்ன அவனும் நம்மளுக்கிடையில் ஒரு பந்தமும் உண்டாவில்ல.”

“நீ இதுவர ஒரு வில்லங்கமும் உண்டாக்கியிட்டில்ல… அதுகொண்டுதானே நின்ன நம்பி இந்த கமிட்மென்ட் எடுத்தே. இனி அறியாத்த ஆரேயும் உள்ளிலே கொண்டு வரது. ஆள் கண்ணு கட்டிட்டு தப்பிச்சுப் போயா, பின்ன நமக்கு எந்தா செய்யாம்பட்டும்? ஈ பாண்டியாட்களை எப்போழ்தும் நம்பாம் பாடில்ல.”

என இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, மீதி இறைச்சிகளையும் பொறுமையாக மிசினுக்குள் தள்ளியபிறகே கையுறையைக் கழட்டி வெளியில் வந்தார் பாஸ்கர் சேட்டன்.

அங்கு வெளியிலோ அந்த மாட்டிறைச்சியின் வாடைக்கு, வாந்தியெடுத்து ஓய்ந்து போய், தன் கர்சீப்பால் முகத்தை மூடிக்கொண்டு பாவமாக அமர்ந்திருந்தான் சுந்தர். கூடவே ரமேஷும்.

“வாங்க ப்ரதர்ஸ்.. இந்த வாடையெல்லாம் உங்களுக்கு பழக்கமில்லயா?” என்றபடியே அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார் பாஸ்கர்.

இதுவரை மலையாளத்தில் பேசியவர், இவர்களிடம் தெளிவாக தமிழில் பேசினார்.

“இல்லை’ என இருவரும் தலையை ஆட்ட,

“நான் இன்னைக்கு ட்ரீட் வைக்கலாம்னு நினைச்சேன். எங்க ஊர்ல ஃபேமஸே பீஃப்தான், அதை டேஸ்ட் பண்ணாம எப்படி அனுப்ப முடியும்..” என்ற பாஸ்கரின் வார்த்தைகள் முடியக்கூட இல்லை, இப்போது ரமேஷ் வேகமாக வாஸ்பேசினைத் தேடி ஓடினான்.

“ஸாரி சார்..” என்ற சுந்தர் பரிதாபமாக விழிக்க,

“அது இருக்கட்டும் ப்ரதர்.. இங்க என்ன ரூல்ஸ்னு உங்களுக்கு சுரேஷ் சொல்லிருப்பான். எங்க பொருளுன்னு யாருக்கும் தெரியக்கூடாது. எங்க பேரும் வெளிய வரக்கூடாது. அப்படி வந்தா அடுத்த நாள் நீங்க இந்த உலகத்தைப் பார்க்கிறது கடைசி நாளா இருக்கும்..” என்றவரின் குரல் இறுக்கமாக, அழுத்தமாக, மிரட்டலாக வந்து விழ சுந்தருக்கு சர்வாங்கமும் அடங்கியது.

ரமேஷின் பேச்சைக் கேட்டு இத்தனை தூரம் வந்துவிட்டான். ஆனால் இப்போது வரைக்கும் அதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை.

“அப்படி.. அப்படியெல்லாம் எந்த தப்பும் நடக்காது சேட்டா.. எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணித்தான் பண்றோம். அவனை மொத்தமா முடிச்சிவிட்டாத்தான் எங்களுக்கு நிம்மதி..” என வேகவேகமாக ஓடி வந்து சொன்னான் ரமேஷ்.

ஆனால் பாஸ்கரின் பார்வை சுந்தரிடமே நிலைத்து நிற்க, “ஆமா சேட்டா.. எங்க தொழில்ல இருந்து மட்டுமில்ல, எங்க வீட்டுல இருந்தே அவனை மொத்தமா ஒழிக்கனும். அதுக்காகத்தான் இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்துருக்கேன். இது வெளிய தெரிஞ்சா, நீங்க மாட்டுமில்ல என்னோட தொழில் சாம்ராஜ்யமே அழிஞ்சிடும். அதனால கவனமாதான் ஹேண்டில் பண்ணுவேன்..” என நிதனாமாக, அழுத்தமாக சுந்தர் சொன்னபிறகே அந்த பொருளை இருவரிடமும் ஒப்படைத்தார் பாஸ்கர்.

அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அந்த பொருளோடு வெளியில் வந்தவர்களிடம், “டேய் மச்சான், நீதான் பீஃபெல்லாம் சாப்பிடுவியே அப்புறம் ஏன் வேண்டாம்னு சொன்ன?” என்ற சுரேஷிடம்,

“இப்படி ரத்த வாடையோட இதுதானே முதல் டைம். இதைப் பார்த்ததுமே எனக்கு குடலே வெளியே வந்துடும் அளவுக்கு பிரட்டிடுச்சு..” என அந்த நினைப்பில் தன் உடலை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டவன், “ஓகே சுரேஷ்.. நாங்க கிளம்பறோம். அம்மா வேற கால் பண்ணிட்டே இருக்காங்க, அங்க என்ன பிரச்சினைனு தெரியல. நான் ரீச்சாகிட்டு உனக்கு கால் பண்றேன்..” என்று விடைபெற்று கிளம்பிவிட்டார்கள் இருவரும்.

*

இங்கு யாழினியோடு சண்டையிட்ட அன்றே தன் பணியிடத்துக்கு வந்துவிட்டான் வெற்றி. இந்த ஒருவாரமாக வீட்டிலிருந்து ஆள்மாற்றி ஆள் போன் செய்து கொண்டே இருக்கிறார்கள். யாரிடமும் பேசும் எண்ணம் இருக்கவில்லை.

பெரிதாக வாழ்க்கையில் தோற்றுவிட்டது போல் உள்ளது துடித்துக் கொண்டிருந்தது.

அதற்காக யாழினி அவளை ஏமாற்றிவிட்டாள் என்று சொல்ல முடியாது. அவளின் நியாயமான கோபத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவ்வளவே.

“உங்களுக்கு நான் ரெண்டாம் பட்சம்தானே..” என்ற யாழினியின் பேச்சை வெற்றி தவறாகவே எடுத்துக் கொண்டான்.

“இப்போ என்ன சொல்ல வர.. வல்லியும், வந்தனாவும்தான் எனக்கு முக்கியம் நீ இல்லைன்னு சொல்ல வர்ரியா?”

“நான் எப்போ அப்படி சொன்னேன்.?” 

“அப்போ உன்னோட பேச்சுக்கு என்ன அர்த்தம்?”

“நான் இத்தனை பிரச்சினையிலே இவ்ளோ பேரோட போராடிட்டு இருக்கேன், நீங்க உங்க வேலைதான் முக்கியம்னு இருந்தீங்க.. எனக்காக வர வேண்டாம். எனக்காக பேசியிருக்கலாம்னுதான் என்னோட கோபம். அதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா நான் என்ன செய்ய முடியும்..”

“இதை என்ன நம்ப சொல்றியா? பிரச்சினை எப்படி வந்தது? உன்னை யார் அந்தளவுக்கு இறங்க சொன்னது? உனக்கு சப்போர்ட்டா உன் அண்ணன் இருந்தார், வல்லி இருந்தா.. நீ நினைச்சிருந்தா அவங்ககிட்ட சொல்லி பிரச்சினையை முடிச்சிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு எதுக்கு இப்படி ஒரு சீனை கிரியேட் பண்ண, அதை நான் உண்மைன்னு நம்பி எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஓடி வரனும் அதுதானே உன்னோட ஐடியா.. என்னோட கேரியரை மொத்தமா முடிச்சி விடனும்னு நினைச்சியா?” என்றவனின் குரலில் அத்தனை கோபம்.

இப்படியெல்லாம் ஒரு நாளும் யோசித்திராத யாழினிக்கு பேரதிர்ச்சி. இதயம் அந்த நொடி செயல்பட மறுத்தது போல, அத்தனை அதிர்ச்சி.

அவனையே வெறித்துப் பார்த்தபடி நிற்க, “உன் அண்ணன் என்னமோ உனக்கும் எனக்கும் டைம் கொடுக்குறாராம். எதுக்கு என்னை யூஸ்லெஸ்ன்னு காட்டிக்க எனக்கு டைம் தராரா? ஹான் அவர் யார் என் லைஃப்ல எனக்கு டைம் தர..”

“அண்ணாவை ஒன்னும் சொல்லக்கூடாது..” என்றாள் ஆத்திரமாக.

“எஸ்.. உன் அண்ணாவை ஒன்னும் சொல்லக்கூடாது. அவர் என் தங்கையோட கணவர். அவர்க்கு நான் மரியாதை கொடுக்கனும். ஆனா என் வாழ்க்கையில முடிவெடுக்க அவர் யார். நான் என்ன செய்யனும், செய்யக்கூடாதுன்னு சொல்ல அவர் யார்..” என்றான் காட்டமாக.

“அவர் ஒன்னும் உங்க வாழ்க்கையில தலையிடல. இந்த முடிவை எடுங்கன்னு உங்களை கட்டாயப்படுத்தல. அவர், அவரோட தங்கச்சி வாழ்க்கையைப் பார்க்கிறார். அவளுக்கு என்ன நல்லதோ அதை யோசிச்சி செய்றார். ஏன் நீங்க கூடத்தான் வல்லிக்கிட்ட என் அண்ணாவை வேண்டாம்னு சொன்னீங்க.. ஒரு அண்ணனா உங்களுக்கு எப்படி உங்க தங்கச்சி வாழ்க்கை முக்கியமோ, அதுபோலத்தான் அவருக்கும்..” என்றாள் யாழினியும் பதிலுக்கு காட்டமாக.

“போதும் நிறுத்து.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது நீ.. உன் அண்ணன்கூட என்னை கம்பேர் பண்ணுவியா? அவர் மாதிரி நான் என்ன உன்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணுகூட லிவிங்க்ல இருந்து கூத்தடிச்சிட்டு வந்துருக்கேனா?” என்ற போது வெற்றியின் கோபம் எல்லையைக் கடந்திருந்தது.

“வெற்றி.. இது தப்பு.. என்ன நடந்ததுனு அண்ணா வல்லிக்கிட்ட எல்லாம் சொல்லிட்டார். உங்களுக்கு தெரியாத ஒன்னைப்பத்தி தப்பா பேசாதீங்க. ப்ளீஸ்..” என்றவளுக்கு இதுவரை இருந்த கோபமெல்லாம் போய் அழுகை வந்திருந்தது.

‘என் அண்ணனைப்பற்றி எல்லாம் தெரிந்து தானே திருமணம் நடந்தது, பிறகும் ஏன் இப்படி பேசுகிறார்கள். அதிலும் வெற்றி, வெற்றி எப்படி பேசலாம்’ என்ற கோபமும் வேதனையும் அவளை நிலைகுலைய வைத்தது.

“உண்மையைச் சொன்னா இப்படித்தான் நியாயப்படுத்தத் தோனும். வல்லி சின்ன பொண்ணு, அதோட கண்மூடித்தனமா அவரை லவ் பண்றா? அதனால அவர் என்ன சொன்னாலும் கேட்கத்தான் செய்வா? அதுக்காக உண்மையை பொய்யுன்னு சொல்ல முடியுமா? இப்போ நீயும் அங்க தான், அவக்கிட்டதான் போறியாம்.. நீயாவது ஒழுங்கா வருவியா? இல்ல உன் அண்ணனை மாதிரி..” என அடுத்து என்ன சொல்லியிருப்பானோ யாழினியின் கரம் வெற்றியின் கன்னத்தில் அழுந்த பதிந்திருந்தது.

அவள் அடித்திருக்கிறாள் என்பதே அதிர்ச்சி என்றால், அடுத்து அவள் பேசிய “ச்சீ.. உங்க மனசுல என்னைப்பத்தி இந்த மாதிரியான எண்ணம் தான் இருந்திருக்கா..? அப்போ என்னை நம்பாம தான் என்கூட பழகினீங்களா? நான்.. நான் அப்படித்தான்னு உங்க மனசு சொல்லிடுச்சா? அப்போ என்னோட இந்த லவ் பொய்யா? நீங்க என்னை நம்புற அளவுக்கு நான் நடந்துக்கலயா? என்னோட லவ்வை என் அண்ணாவை வச்சுதான் முடிவு பண்ணுவீங்களா? அப்படின்னா நம்ம லைப் எப்படி போகும்.? ஒவ்வொரு நாளும் இந்த சந்தேகத்தோடேதான் மூவ ஆகுமா? எனக்கு பயமா இருக்கு? இது இது எனக்கு வேண்டாம்? என்னால இப்படியொரு வாழ்க்கை வாழ முடியாது.. ப்ளீஸ் இதை இப்பவே இங்கேயே முடிச்சிக்கலாம்.. உங்களை லவ் பண்ணதுக்கு, இப்படியொரு இக்கட்டுல மாட்டி விட்டதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து சாரி.. ரொம்ப ரொம்ப சாரி..” என அழுத விழிகளுடன் கரங்களைக் கூப்பி கூறியவள் காரிலிருந்து வேகமாக வெளியேறி, அங்கு நின்றிருந்த பாண்டியனை கூட கண்டுகொள்ளாமல் நடக்க, வெற்றிக்கு பேரதிர்ச்சியானது.

பாண்டியன் வந்து உலுக்கும் வரைக்குமே வெற்றி நிதானத்திற்கு வரவில்லை.

“வெற்றி.. வெற்றி..” என்றவர் “என்னாச்சு யாழினி அழுதுட்டே போகுது..” என்றார் பதட்டமாக.

காரை விட்டிறங்கியவன் “அவளை அழைச்சிட்டு போய் வீட்டுல விட்டுடுங்க சார்.. நான் கிளம்பறேன்..” என வேறெந்த பதிலும் சொல்லாமல், வீட்டிற்கும் வராமல் வேலை செய்யும் இடத்திற்கு வந்துவிட்டான்.

பாண்டியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. யாழினியைத் திரும்பிப் பார்த்தார். சற்று தூரமாகவே சென்றிருந்தாள்.

கோபத்தில் வேகமாக நடந்திருக்கிறாள் என்று புரிய, காரை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்று நிறுத்தினார்.

“ஏறு யாழினி.?” என்றவரின் கட்டளையான குரலில், “அண்ணாக்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம், ப்ளீஸ். என்னால மறுபடியும் அண்ணாவுக்கு எந்த பிரச்சினையும் வரவேண்டாம். வெற்றிக்கு கோபம், கொஞ்ச நாள்ள சரியாகிடும்..” என்றாள் அழுகையை அடக்கியக் குரலில்.

ஆனால் பாண்டியனோ நிதானமாக யாழினியைப் பார்த்தார். அந்த பார்வையே சொன்னது, ‘என் தொழிலுக்கு துரோகம் செய்யமாட்டேன்’ என்று.

கண்களை அழுந்த துடைத்து, வழிந்த நீரையும் அழுத்தித் துடைத்துவிட்டு காரில் ஏறியவள் “போலாம்..” என்றதோடு சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

அன்று நடந்ததியெல்லாம் யோசித்த வெற்றிக்கு யாழினியின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

‘உன்னை எப்படி எங்கிட்ட வர வைக்கனும்னு எனக்குத் தெரியும் டி..’ என மனதுக்குள் கருவிக்கொண்டவன் அவள் ஆஸ்திரேலியா செல்லும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

இங்கு வீட்டிலோ யாழினியை ஆஸ்திரேலியா அனுப்பும் முடிவை கர்ணன் மனைவியிடம் சொல்ல, வல்லியோ ‘ஏன்?’ என்பது போல் மட்டும் பார்த்தாள்.

அந்த பார்வையில் மனைவியின் இடையோடு கட்டிக் கொண்டவன் , அவளின் கேள்விக்கு தன்னிடமிருந்த பதிலைக் கூற, அந்த பதில் ஏற்றுக் கொள்ளும்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்க, குழப்பமாக கணவனைப் பார்த்தவளிடம் “ஹ்ம்ம் மேடம்.. போதும்.. இது நமக்கான டைம். அந்த யோசனையை எல்லாம் தள்ளி வைங்க..” என கைகளில் அள்ளிக்கொண்டு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து, தன் மடியில் இருத்திக் கொண்டான்.

“ரெண்டு பேருக்கும் பிரச்சினையா? யாழி முகமே சரியில்ல..?” என்றவளின் கூந்தலில் முகம் புதைத்து, ‘ஹ்ம்ம்..’ என்று ஜாதி மல்லியின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான். 

“பாவா ப்ளீஸ்..” என்றவளின் குரல் நடுங்க.. பால்கனியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பூக்களின் நறுமனம் அவனை வேறொரு உலகிற்கு களவாடிச் சென்றது.

கண்ணாலே நீ என்னை களவாடிச் சென்றாயோ..

நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ..

இது தினமும் தினமும் புதிதாய் தொடராதா? 

You may also like

1 comment

M. Sarathi Rio July 13, 2026 - 5:45 pm

இந்த வெற்றிக்கு கிறுக்குத்தான் பிடிச்சிடுச்சுப் போல.

😯😯😯
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured