Home Love - Family - Romanceமுத்தமழை – 51

முத்தமழை – 51

by Vathani S

முத்தமழை – 51

அனைவரும் ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்க, “பாட்டிம்மா..” என ஓங்கி ஒலித்தது வல்லபியின் குரல்.

அனைவரும் அவளைப் பார்க்க, “பாட்டி இது உங்க வீடு, உங்க மகள் வீடு, உங்க மருமகனோட வீடு, உங்க பேரனோட வீடு, முக்கியமா இது என்னோட வீடு.. இங்க யார் வரனும் வரக்கூடாது நான் தான் முடிவு பண்ணனும், யாரோ என்னவோ சொல்றாங்கன்னு நீங்க வருத்தப்படுவீங்களா? என் பேரன் வீடு, நான் இங்கதான் இருப்பேன், அதை கேட்க இங்க யாருக்கும் உரிமை இல்லைனு சொல்றதை விட்டுட்டு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று வல்லபி கண்டிப்புடன் கூற, வாசல் வரை சென்ற வனிதா, கணவனின் கையை உதறிக்கொண்டு வேகமாக வந்து வல்லியின் முன் நின்றாள்.

அவள் வேகத்தைப் பார்த்த கர்ணன், மனவியை சட்டென தனக்குப் பின்னே இழுத்துக்கொண்டு தங்கையை ஆத்திரமாக முறைத்தான்.

“என்ன.. என்ன பேச்சு இதெல்லாம்.? இது இவ வீடா? சொல்லுங்க இது இவ வீடா?” என ஆங்காரமாக கத்த,

“வனி.. வனி கொஞ்ச நேரம் சும்மா இரு.. அவ ஏதோ கோபத்துல பேசுறா.. நீ இப்படி கத்தாத..” என ராஜி மகளைக் கட்டுப்படுத்த நினைக்க,

“ம்மா.. அவளை விடுங்க.. அவ என்ன பேசனுமோ பேசட்டும்..” என கர்ணன் இறுக்கமான குரலில் கூற, ராஜிக்கு உள்ளுக்குள் மணியடித்தது.

“தம்பி அவ தான் ஏதோ கோபத்துல பேசுறா, நீயும் ஏன் சரிக்கு சமமா அவக்கிட்ட நின்னு பேசிட்டு இருக்க. அவ சித்தியை பேசினது ரொம்ப தப்பு. நான் கண்டிக்கிறேன். இப்போ இந்த பேச்சு வேண்டாம்..” என்றார் கெஞ்சலாக.

அதில் வல்லிக்கு ‘உன்னை எனக்குத் தெரியும்’ என்ற கிண்டல் புன்னகை உண்டாக, அது சரியாக வனிதாவின் கண்களில் பட்டுவிட்டது.

“என்ன திமிர் டீ உனக்கு? நீ நினைச்சதெல்லாம் நடக்கிற திமிர்தானே இப்படி நக்கலா சிரிக்க வைக்குது. உன்னை இந்த வீட்டுக்குள்ள விட்டதே தப்புடி.. ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டின மாதிரி..” என கர்ணனை மீறி திமிறிக்கொண்டு முன்னே சென்றவளை பக்கத்திலிருந்த சோபாவில் தள்ளிவிட்டான் கர்ணன்.

“தம்பி என்ன இது..?” என ராஜி மகளைத் தூக்க,

“விடுங்கம்மா.. எவ்ளோ சொன்னாலும் இவளுக்கு புத்தி வராது..” என்றான் சுந்தர் ஆத்திரமாக.

“முதல்ல கிளம்பு..” என்றான் ரமேஷ் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“எல்லாரும் ஏன் என்னையே வில்லி மாதிரி பார்க்குறீங்க. நான் உங்களுக்காகவும் தான் இவ்வளவும் பேசுறேன். இவ யார் இந்த வீட்டுக்கு, இவ வந்து இந்த வீட்டுல நாட்டாமை பண்ணுவாளா?” என்றாள் ஆத்திரம் அடங்காத குரலில்.

“சரி சொல்லு.. அவ யாரு..?” என்றான் கர்ணன் நிதானமாக.

கர்ணனின் செய்கையும், பேச்சும் இன்றைக்கு ஒன்றும் சரியில்லை என்று ராஜலட்சுமிக்கு புரிந்து கொண்டே இருந்தது.

அவனின் நிதானம் வேறு அவருக்கு பயத்தைக் கொடுத்தது.

“தம்பி விடு.. அவளுக்குத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு..” என ராஜி சமாளிக்கப் பார்த்தார்.

ஆனால் வனிதா இன்று அமைதியாக போகும் நிலையில் இல்லை. அதிலும் வல்லியின் இது ‘என்னோட வீடு’ என்ற வார்த்தை அவளுள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை எழுப்பி விட்டிருந்தது.

“அவ உனக்கு யாரா வேனும்னாலும் இருக்கட்டும், எனக்கும் இந்த வீட்டுக்கும் யாரும் இல்ல.. என்னைக்கு இந்த வீட்டுக்கு வந்தாளோ..?” என முடிக்கும் முன்னே, ரமேஷ் அவளின் கைப்பிடித்து இழுத்தான்.

“மாப்பிள்ளை அவளை பேச விடுங்க, அவ மனசுல என்ன இருக்குனு எனக்குத் தெரியனும்..” என்ற கர்ணனின் இறுகிய குரல் சுந்தருக்கு ஒப்பாக இல்லை.

வனிதாவை வைத்து தங்களை மடக்கப் பார்க்கிறான் என்று புரிந்துவிட, “ண்ணா அவளுக்குத் தான் கிறுக்கு புடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன? விட்டுத் தள்ளுங்க, அவ முதல்ல இங்க இருந்து போய் தொலையட்டும்..” என்றவன், “ரமேஷ் அவளை இழுத்துட்டு போங்க..” என கண்ணைக் காட்ட, ஆனால் வனிதா வர வேண்டுமே.

“அண்ணா.. வல்லிக்கு இன்னைக்கு முழுக்க ரெஸ்டே இல்லை. நீங்க அவளை அழைச்சிட்டு ரூமுக்கு போங்க, பாண்டியன் சார் அப்பாவை அழைச்சிட்டு போங்க. பாட்டி வாங்க நாம போகலாம்..” என யாழினி கூற, கர்ணன் நகரவே இல்லை.

“அண்ணா..”  என யாழி அழைக்க, 

“இருக்கட்டும் யாழி.. இவ இன்னைக்கு பேசி முடிக்கட்டும்..” என்று கர்ணன் அமர்ந்து மனைவியையும் தன்னோடு அமர்த்திக் கொண்டான்.

வல்லிக்கு கணவன் ஏதோ திட்டத்தோடு தான் வனிதாவை பேச வைக்க முயல்கிறான் என புரிய, இங்கு இருந்தால் பேச்சு திசை மாற வாய்ப்பிருப்பது புரிய, “பாவா.. நான் படுக்குறேன், நீங்க பேசிட்டு வாங்க..” என்று எழ, கர்ணன் தங்கையைப் பார்க்க, அது புரிந்த யாழினி, வல்லியோடு மாடியேறினாள்.

“இப்போ சொல்லு? என்ன பிரச்சினை.?” என்றான் காட்டமாக.

“நீ.. நீ தான் பிரச்சினை. நீ என்னைக்கு இங்க வந்தியோ அப்போ ஆரம்பிச்சது பிரச்சினை. நாங்க பாட்டுக்கு நிம்மதியா இருந்தோம், நீ வந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட..” என்றாள் அகங்காரக் குரலில்.

வனிதாவிற்கு தன் மீது  அக்கறையோ, அன்போ இல்லையென்று முதலிலேத் தெரியும் தான். ஆனால் அதை இப்படி முகத்திற்கு நேராக பேசுவாள் என்று அறியவில்லை.

கண்களை மூடி அந்த வார்த்தைகளை கடக்க முயன்ற நேரம் தன் தோளில் மெல்லிய கரங்கள் பதிவதை உணர்ந்து கண் திறந்தான்.

விழிகள் தழும்ப அவனின் அம்மு நின்றிருந்தாள். வாரி அனைத்துக் கொள்ளும் வேகம். சூழ்நிலை உணர்ந்து பெண்ணவளின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

நடுங்கிய விரல்களும், அவளின் சிவந்த மூக்கும் அவளின் கோபத்தை சொல்லாமல் சொல்ல, “நீ போ நான் வரேன்..” என்றான் வலிந்து சிறு புன்னகையுடன்.

‘முடியாது’ என பிடிவாதமாக தலையசைத்து மறுக்க, தன் கைவளைவில் வைத்துக் கொண்டான்.

“மாமா முதல்ல இவளை கூப்பிட்டு போங்க..” என பெரியவர்கள் பேசட்டும் என அமைதியாக இருந்த யாழி சொல்ல,

“ஏய்.. நீயெல்லாம் ஒரு ஆளா.. உனக்கு எங்கிட்ட பேச வெட்காம இல்ல.. அவன் கூட போனேன்னு சொன்னவ தான நீ..” என முடிக்கும் முன்னே கர்ணனின் கரம் வனிதாவின் கன்னத்தில் இடியென இறங்கியது.

“இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வரக்கூடாது. என்ன பணம் பணம்னு பேய் பிடிச்சு ஆட்டுதா உனக்கு.. நானும் பொறுமையா சொல்லலாம்னு பார்த்தா, திமிரா பேசுறா, யாரையும் மதிக்காம ஆட்டம் காட்டுற, உனக்கு இது தான் லாஸ்ட் வார்னிங்க்.. இன்னொரு தடவை யாரையாவது மரியாதைக் குறைவா நடத்தினா, உன் பல்லு மொத்தமும் கொட்டிடும் பார்த்துக்கோ..” என்றான் இரும்பான குரலில்.

அவன் பேசி முடிக்கும் வரை அந்த வீடே அமைதியாகிப் போனது. 

“சுந்தர்… நீயும் மாப்பிள்ளையும் ஆஃபிஸ்ல இருந்து எடுத்த எட்டு கோடி, அப்புறம் பெட்டிங்க்ல விட்டா எழுபது லட்சம் எல்லாத்துக்கும் ஒன் வீக்ல கணக்கு காமிக்கனும், அப்படியில்லைன்னா அதை நீங்க செட்டில் பண்ணனும், என்ன செய்யப் போறீங்கன்னு நாளைக்கு ஆஃபிஸ்ல வந்து எனக்கு சொல்லுங்க. அண்ட் இந்த சாஃப்ட்வேர் பிசினஸ் நான் ஸ்டார்ட் பண்ணி யாழி கொடுக்கப்போறேன். இது என்னோட உழைப்பு. அதை யாழிக்கு கொடுக்குறேன். இதை சொத்து கணக்குல சேர்க்கக்கூடாது.” என்றான் மிகவும் கண்டிப்புடன்.

“பணமா.. அதை எப்படி நாங்க ரிட்டர்ன் பண்ண முடியும்..” என அதிர்வாக கேட்டான் ரமேஷ்.

“நான் ரிட்டர்ன் பண்ணுங்கன்னு மட்டும் சொல்லல, அதுக்கு சரியான அக்கவுன்ட்ஸ் இருந்தாலும் காட்டுங்கன்னும் தான் சொன்னேன்.” என்று சுந்தரைப் பார்க்க, அவன் முகத்தில் அத்தனை கோபம்.

“அப்படி உங்களுக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் எங்க யாருக்கும் இல்ல.. இங்க இருக்கிற எல்லா ப்ராப்பர்டிலயும் எல்லாருக்கும் பங்கு இருக்கு. சோ உங்க ஆட்டத்தை எனக்கு காட்டாதீங்க..” என்றான் ஆத்திரமாக.

“ஓ… அப்படியா?” என ஒரு நொடி யோசித்த கர்ணன், இத்தனை நடந்த அனைத்தையும் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்று “அப்பா.. நீங்க சொல்லும் போது எனக்கு இஸ்டம் இல்லாமதான் இருந்தது. இவங்க எல்லாரையும் அனுசரிச்சு போயிடலாம்னு தான் நானும் யோசிச்சேன். ஆனா இனி அதுக்கு வாய்ப்பில்லன்னு நினைக்கிறேன் ப்பா. நீங்க சொத்தை பிரிச்சிடுங்க..” என்று கனமான குரலில் கூறி முடிக்கவும், ராஜலட்சுமி நெஞ்சைப் பிடித்து கீழே விழவும் சரியாக இருந்தது.

எது நடக்கக்கூடாது என்று அவர் அத்தனை கடவுளை வேண்டினாரோ, அது இப்போது அவர் கண் முன்னே நடக்க, நெஞ்சமெல்லாம் அடைக்கும் உணர்வு, மூச்சு விடக்கூட சிரமமாக இருக்க, அப்படியே மயங்கி சரிந்தார் ராஜலட்சுமி.

*****

இங்கு ராமசாமியின் வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு சீதாவைத்தான் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

“எப்படி அந்த வீட்டைப் பற்றித் தெரியாமல் பெண் கொடுக்க சம்மதித்தீர்கள்..?” என்ற கேள்வியைத்தான் மாறி மாறி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி..” என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்களின் மனம் தாளவே இல்லை.

‘எப்படி வாழ வேண்டிய பெண், வசதியில்லையா? என்ன குறை அவளிடம்.. இப்படியொரு குடும்பத்தில் சிக்க வைத்து விட்டார்களே..’ என்ற கோபத்தி வெளிப்பாடு தான் இந்த பேச்சுக்கள்.

ரெண்டு சம்மந்தம் பண்ணிருக்க பொம்பளைக்கு, ஒரு பொண்ணெடுத்த சம்மந்தக்காரங்ககிட்ட எப்படி பேசனும்னு கூட தெரியாதா? ஆட்டமா ஆடுறா? மாமியார்னா கொம்பா முளைச்சிருக்கு..’ என வந்தவர்களில் ஒவ்வொருவரும் ஒன்று பேச, முதல்முறையாக தன் மகளாக வளத்த பெண்ணுக்கு தவறு செய்து விட்டோமோ என்று தோன்றிவிட்டது சீதாவிற்கு.

“அண்ணி.. மாப்பிள்ளை அவளை எப்படி பார்த்துக்கிட்டார்னு உங்களுக்குத் தெரியுமே..” என மென்று முழுங்க,

“அத்தைகளா.. பாட்டிகளா நீங்க என்னதான் தலைகீழா நின்னுருந்தாலும், வல்லி மாமாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்திருக்க மாட்டா. அவ மாமா மேல உயிரையே வச்சிருக்கா.. அந்த தாய்க்கிழவியும், அந்த குடும்பமும் சரியில்லதான், ஆனா மாமா நல்லவர். யாழினி இருக்கா, பாட்டி இருக்காங்க. அவங்களை மீறி எதுவும் நடந்திடாது.”

“அதையெல்லாம் விட, வல்லிக்கண்ணுக்கு ஒன்னுனா மாமா சும்மா இருக்கமாட்டார். அதனால இந்த டென்சனை எல்லாம் விட்டுட்டு இப்போ சூடா பிரியாணி சாப்பிடுங்க.. காக்ரோச் பிரியாணி உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்..” என்றதும் அங்கிருந்த அத்தனை பேரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

“இனி அடிக்கடி பிள்ளைய பார்க்குற மாதிரி, அந்த வீட்டுக்கு போயிட்டு வரனும் சீதா.. அம்மா இல்லன்னு புள்ள எந்த இடத்துலயும் வருந்திடக்கூடாது. நீயும், இன்னைக்கு மாதிரி ஒதுங்கி எல்லாம் இல்லாம, பாப்பாவை போய் பார்த்துட்டு வா..” என்று அறிவுரை கூறி வந்தவர்கள் கிளம்ப, சிவகுருவும், ராமசாமியும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டின் ஆணி வேரான கர்ணனைக் கட்டிய வல்லிக்கே இந்த நிலை என்றால், யாழியை திருமணம் செய்யப்போகும் வெற்றியின் நிலை? யோசிக்கவே பயமாக இருந்தது அந்த பெரியவர்களுக்கு..!

You may also like

1 comment

M. Sarathi Rio July 16, 2026 - 7:11 pm

அதானே..! ஆனால் வெற்றி என்ன வீட்டோட மாப்பிள்ளையா ஆகப் போறான்..?

😀😀😀
CRVS (or) CRVS2797

Reply

Leave a Comment