Home PREMIUM NOVELSஅ.. ஆ.. – 65

அ.. ஆ.. – 65

by Vathani S

அகானா – 65

தன் அறையில் ஆகனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்த அகானா, “குட் மார்னிங்க் சீனியர்..” என்றபடியே போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்தி குப்புற விழ, ஆகனுக்கோ அதிர்ச்சி.

‘என்ன நடக்குமோ? இவளை எப்படி சமாளிக்கன்னு தெரியாம நான் டிசைன் டிசைனா யோசிச்சி வச்சிருந்தா, அதுக்கெல்லாம் வேலையே இல்ல போலயே.. படுத்துருக்கிறத பார் தவளை மாதிரி..’ என முணுமுணுத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் சட்டென எழுந்தவள் குளியலறையை நோக்கி வேகமாக நகர்ந்துவிட, ஆகனுக்கோ நடந்தது இவளுக்கு தெரியுமா, தெரியாதா?’ என மீண்டும் குழப்பத்திற்குள் சென்றுவிட்டான்.

ஆனால் குளியலறைக்குள் நுழைந்த அகானாவின் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.

கோபம்தான். அந்த கோபமும் அவள் மீதுதான். வேண்டாம்.. வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனின் ஒற்றைத் தொடுகையில் கரைந்து போன தன் மனதையும், உடலையும் நினைத்து வெட்கிப் போனாள்.

இனி அவனை எப்படி எதிர்கொள்ள? தன்னிலையை காரணம் காட்டி ஏளனம் செய்வானோ? இதையே காரணமாக்கி அவன் வீட்டிற்கு அழைப்பானோ? தன்னுடைய இந்த நிலையை அவன் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டானோ என பலவாறு யோசித்து யோசித்து மூளையை சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் சில நிமிடங்கள் தான். அடுத்த நிமிடம் “நோ அகி.. இது நீ இல்ல.. நீ இப்படி பதட்டப்படக்கூடாது. பொறுமை… பொறுமை.. நிதானமா இரு. உன்னுடைய பலமே உன்னோட அந்த நிமிர்வுதான். இப்படி பயந்து யோசிச்சு அதை  இழந்துடாத. முதல்ல உன்னை நிதானபடுத்து. அப்புறம் பொறுமையா யோசி…’ என கட்டளையிட்ட மூளையின் செயலுக்கு ஏற்ப, ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் அகானா.

பின் சவருக்கு அடியில் நின்று, சாரலாய் கொட்டும் நீரில் தன் முகத்தைக் காட்டினாள்.

நீர் பட்டு எரிந்த சில இடங்களை தடவி, தன்னை நிதானித்துக் கொண்டாள். 

இப்போது ஆகனின் பக்கமிருந்து யோசித்தாள். நடந்த எதிலும் அவனுடைய தவறென்று எதுவுமில்லை என்று புரிந்தது.

அத்தனை பேரையும் எதிர்த்து, தங்களுடைய வாழ்க்கைக்காக, எனக்காக மட்டுமே இங்கு வந்து தங்கியிருக்கிறான் என்று அவளுக்கு புரியத்தான் செய்தது.

இப்போது வெளியில் இருப்பவனை எப்படி எதிர்கொள்ள என்ற பெருங்கேள்வியோடு சவரை நிறுத்திவிட்டு, மாற்றுடையைப் பார்க்க, அங்கு அப்படி ஒன்றும் இல்லவே இல்லை.

“ப்ச்.. எடுத்துட்டே வரலையா.?” என வாய்க்குள் முனங்கியபடியே தலையில் தட்டிக் கொண்டவள், டவலை எடுத்து உடலைச் சுற்றிய நேரம் குளியலறையின் கதவு மெல்ல தட்டப்பட்டது.

அவள் திறக்காமல் இருக்கவும், “உன்னோட ட்ரெஸ் அம்மு..” என ஆகனின் குரல் மெல்லிய குரலாக கேட்க, 

“வேண்டாம், தேவையில்ல..” என எந்த மறுப்பும் சொல்ல முடியாத இடத்தில் இருந்தவள் கதவை மெல்ல திறந்து கையை நீட்ட, நீட்டிய கையில் எதுவும் தட்டுப்படாமல் போக, கதவை சற்று அகல திறந்து தலையை நீட்டி எட்டிப் பார்க்கும் நேரம், அவளையும் தள்ளி, ஆகனும் உள்ளே நுழைந்திருந்தான். 

“ஏய்..” என்றவள் ஆகனின் பார்வையில் அவனை முறைத்துப் பார்க்க, அதை சிறு சிரிப்புடன் ரசித்தபடியே மனைவியை நெருங்கியவன் “என் அம்மு எங்கிட்ட வந்ததை கொண்டாட வேண்டாமா?” என அவளின் முகத்தில் விழுந்திருந்த முடிக் கற்றைகளை பின்னுக்கு தள்ள, அதில் அகானாவின் உடல் மொத்தமும் சிலிர்த்து சிவந்து போனது. 

அதை ஆகனும் உணர, மென் சிரிப்புடன் அவளை இழுத்து இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

“வெறும் ஸ்டார்ட்டர் மட்டும் கொடுத்துட்டு ஏமாத்தினா எப்படி அம்மு? நான் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுற ஆளு? நீ கொடுத்தது உன் மாமாவுக்கு பத்தவே இல்லடி..” என்றவன் மனைவியின் கழுத்தோரம் சிலிர்த்துக் கொண்டு நின்றிருந்த பூனை முடியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“ப்ளீஸ்… எனக்கு லேட் ஆகுது..” என மனைவியின் குரல் கணவனின் காதில் விழவில்லை என்பது அவனின் இதழ் அழுத்தத்தில் அவளுக்கு புரிந்து போனது.

ஆகன் இறுக்கமாய் அனைத்திருந்தாலும், அகானாவின் உடல் சற்று விரைப்பாகவேதான் இருந்தது. அவளின் முகம் அவன் மார்பில் உரசியும் உரசாமலும் இருக்க, அதை உணர்ந்தவன் அனைப்பில் மேலும் இறுக்கத்தைக் கூட்டி, பிடிமானத்திற்காக தன் சட்டையைப் பிடித்திருந்த அவளின் கையை எடுத்து, தன்னைச் சுற்றி போட்டு “நீயும் என்னை கட்டிப் பிடிக்கலாம் அம்மு, உன்னை மாதிரி நான் பிகு பண்ணமாட்டேன்..” என முணுமுணுத்தான்.

அவன் உதட்டசைவில் உண்டான குறுகுறுப்பா, இல்லை உடல் நெருக்கத்தின் விளைவால் உண்டான சூட்டின் கதகதப்பா எதுவென்று தெரியவில்லை.

அகானாவின் கைகள் தன்னால் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக மாறிட, அவள் முகமோ கணவனின் மார்பில் அழுத்தமாக பதிந்தது.

அந்த நொடி அடுத்து என்ன செய்வது என்றிருந்த இருவரின் நிலையும் மாறி, அவர்களின் காதலும், காதலினால் ஏற்பட்ட அடுத்தக்கட்ட நகர்தலுமே முன்னின்று அவர்களின் இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்திட வழி வகுத்தது.

“அண்ணா நீங்க சொல்றதை என்னால நம்பவே முடியல. அப்போ மாமாவுக்கு முன்னாடியே அம்முவை தான் டார்கெட் பண்றாங்கன்னு தெரியுமா? அதனாலத்தான் அரெஸ்ட் ஆனாரா?” என சங்கரிடம் தன் அதிர்ச்சி விலகாமலே நித்யா கேட்க, 

“அப்படித்தான் ஆகன் சொல்றான்.. ஆனா என்னாலத்தான் இதை நம்ப முடியல. மஞ்சரியும், அம்முவும் இங்க இருந்து போன இத்தனை வருசத்துல வராத பாசம், இப்போ அவங்களை பார்த்ததும் வந்துடுச்சா..?” என்றார் அவரும் கோபமாக.

நித்யாவாலும் அதை நம்ப முடியவில்லை. அதனால்தான் திரும்ப திரும்ப கேட்டு தன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறாள். 

“ம்ச் நித்தி.. ஆகன் சொன்னது உண்மைதான். இது அம்முவுக்கும் தெரியும்.” என வினோத் கடுப்பாக சொல்ல,

“ம்ம் சரி இன்னைக்கு இங்க வருவாங்கல்ல அப்போ கேட்டுக்கலாம்..” என்ற நித்யா இருவருக்கும் விருந்து தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டாள்.

“வினோ.. மாமாவை போய் பார்க்கலையா?” என்ற சங்கரிடம்

“இல்ல மாமா.. இங்க சமையல் முடிஞ்சதும் எடுத்துட்டு போகனும். ரஞ்சியும் போன் பண்ணி கொண்டு வர சொன்னா..”

“உன் அக்கா எல்லாம் கடைசி வரை திருந்தவே மாட்டா வினோ. ரெண்டு பேருக்கு செஞ்சி சாப்பிட எவ்ளோ நேரம் ஆகும். அது கூட அவளால முடியாதா?”

“விடுங்க மாமா.. அவ கோபத்தை இப்படி காட்டுறா? இன்னும் ஆகன் போனது தெரிஞ்சா என்ன செய்வாளோன்னு நானே பயந்து போய் இருக்கேன்..”

“என்ன செய்வா? அவளால என்ன செஞ்சிட முடியும். அப்படி மட்டும் ஏதாவது பண்ணட்டும் அவளை என் கையாலயே கொன்னு போட்டுடுவேன் வினோ. எனக்கு என் புள்ளைங்க வாழ்க்கைதான் முக்கியம்..” என கடுமையாக பேசிய சங்கரிடம் வினோத்தால் பதிலே பேச முடியவில்லை.

“கோபப்படாதீங்க மாமா.. நமக்கு ரஞ்சியோ, மைதிலி அண்ணியோ இப்போ முக்கியமில்ல. அம்முவும் அவளோட வாழ்க்கையும் தான் முக்கியம். ஆகன் என்னதான் அவளுக்கு செகியுரிடி அரேஞ்ச் பண்ணிருந்தாலும், நீங்களும் துரைப்பாண்டி அண்ணன்கிட்ட சொல்லி ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிடுங்க. அவர் காதுல போட்டு வைக்கிறது தான் நல்லது.”

“நீ சொன்னதுமே முதல் வேலையா அவரைப் போய் பார்த்துட்டு தான் வரேன். அவரும் பார்த்துக்கலாம்னு சொல்லிருக்கார். ஜெயில்ல இருக்குற ரவிக்கும் பாதுகாப்பு கொடுத்துடலாம்னு சொல்லிருக்கார்..”

இவர்கள் அனைவரும் அகானாவையும், ரவியையும் மட்டுமே யோசித்து பேச, மஞ்சரியை யோசிக்க மறந்து போயிருந்தனர்.

“மகி.. அவங்க வரும் போது வரட்டும், நீயும் ஆரியும் உக்காந்து சாப்பிடுங்க..” என மகிழினியை விரட்டிக் கொண்டிருந்தார் மஞ்சரி.

“சரிங்க த்த..” என மறுக்க முடியாமல் ஆரியனின் அருகில் அமர்ந்து கொரிக்க ஆரம்பிக்க,

“மகி.. சீனியருக்கு இன்னைக்கு சர்ஜரி இருக்கு. உனக்கே தெரியும். சர்ஜரி நடக்கிற அன்னைக்கு சீனியர் லேட்டாதான் ஹாஸ்பிடல் வருவாருன்னு. அப்புறம் ஏன் நீ இவ்ளோ டென்சன் ஏத்திக்கிற. நீ பயப்படுற அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் ஒன்னும் சின்ன புள்ளைங்க கிடையாது. நம்மளை விட மெச்சுரிடி அதிகம் உள்ளவங்க. நீ இப்படி பயந்து பயந்து எங்களையும் டென்சன் பண்ணக்கூடாது..” என ஒரு கட்டத்தில் ஆரியனே அதட்டிவிட, அதன் பிறகே ஒழுங்காக சாப்பிட ஆரம்பித்தாள் மகிழினி.

ஆரியன் கூறியதை போலவே முதலில் அறையில் இருந்து வெளியில் வந்த அகானாவோ, எதுவுமே நடக்காதது போல் லேட்டாகிவிட்டது என அரக்க பறக்க சாப்பிட்டு, கண்ணனோடு அலுவலகம் கிளம்பிவிட்டாள்.

ஆகனைப் பற்றி கேட்கலாம் என்று முயன்ற மஞ்சரியை கண்ணாலே சைகை செய்து அடக்கியிருந்தான் ஆரி.

“ரெண்டும் கூட்டு களவானிங்க மஞ்சும்மா.. இதுங்களுக்கு பஞ்சாயத்து செய்ய போனா, நாமதான் மூக்கு உடையனும். அதுங்களே அடிச்சி புடிச்சி மண்டைய உடைச்சி வரட்டும், நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்..” என இருவருக்கும் சொல்லிவிட்டு அவனும் கிளம்பிவிட்டான்.

அகானா கிளம்பிய வேகத்தில் ‘பே’வென விழித்து நின்ற மருமகளைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது மஞ்சரிக்கு.

“மகி.. நீ உங்க தாத்தாவை பார்க்க போறேன்னு சொன்னியே.. போய் கிளம்பு.. நானும் அக்கா வீட்டுக்கு போகனும். கண்ணா போகும் போது நாமளும் போகலாம்..” என மகிழினியை அனுப்பிவிட்டு தன்னறைக்கு வந்தார் மஞ்சரி.

காரில் சென்று கொண்டிருந்த அகானா நவீனுக்கு அழைத்து “அண்ணா.. அம்மா அங்க வருவாங்க.. நீ ஈவ்னிங்க் கொண்டு வந்து விட்டுடு..” என கூறியவள், உடனே மாலினியின் அம்மாவிற்கு அழைத்தாள்.

அவர் ஹலோ என்று சொல்லும் முன்னே “நான் அகானா பேசுறேன். இன்னைக்கு என் அம்மாவும், பெரியம்மாவும் வந்து நவீ அண்ணாவுக்கு உங்க பெரிய பொண்ணை கேட்பாங்க. வழக்கம் போல முடியாதுனு எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணக்கூடாது. அப்படி நீங்க தேவையில்லாத பிடிவாதம் பிடிச்சா, அப்புறம் நடக்கிறதுக்கு நாங்க பொறுப்பில்ல…” என மிகவும் கடுமையாக பேச,

“என்ன? என்னைய மிரட்டுறியா? உன் மிரட்டலுக்கு பயந்து நான் பொண்ணு கொடுக்கனுமா?” என அவரும் கத்த,

“மிரட்டல்தான்.. ஆனா அதுதான் வேலைக்கு ஆகலயே.. அப்போ அதிரடிதான் சரி வரும் போல. நீங்க சரின்னு சொன்னா, நாலு பேர் பார்க்க கல்யாணம் நடக்கும். உங்க பொண்ணும் உங்க வீட்டுக்கு வந்து போக இருப்பாங்க. இல்லன்னா உங்க பொண்ணைத் தூக்கிட்டு வந்து கல்யாணம் செஞ்சி வைப்பேன். அதுக்குப் பிறகு இந்த ஜென்மத்துக்கும் உங்க ரெண்டு பொண்ணுங்களும் உங்க முகத்துல கூட முழிக்க மாட்டாங்க.. யோசிச்சி முடிவு பண்ணுங்க..” என அதட்டிப் பேசி போனை வைத்துவிட, அந்தப் பக்கம் மாலினியின் அம்மாவிற்கு பேச்சே வரவில்லை.

கார் ஓட்டிக் கொண்டிருந்த கண்ணனும் கூட அதிர்ந்து தான் அகானாவை பார்த்தார்.

“இவங்ககிட்ட எல்லாம் கெஞ்சிட்டே இருந்தா மிஞ்சிட்டுதான் போவாங்க..” என முணுமுணுத்தபடியே பைலை பார்க்க ஆரம்பித்தாள்.

You may also like

2 comments

CRVS2797 January 22, 2026 - 5:03 pm

அச்சோ..! எல்லாரும் மஞ்சரியை டீல்ல விட்டுட்டான்ங்க போலவே..
அப்படின்னா மஞ்சரியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொல்றிங்களா..?

😴😴😴
CRVS (or) CRVS 2797

Reply
Vathani S January 22, 2026 - 5:18 pm

உடனே எப்படி சொல்ல முடியும் க்கா..

Reply

Leave a Comment

About Me

Featured