Home Antiheroதளிர் – 04

தளிர் – 04

by Vathani S

தளிர் 4

தனக்கு முன் சட்டமாக அமர்ந்திருந்தவளை அடக்கப்பட்டக் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான் விக்ரம். அதற்குள் நரேன் குழந்தையைப் பற்றி விசாரித்திருந்தான்.

“பாஸ் பாப்பா…” என இழுக்க,

“ஐ க்னோ.” என்று நரேனுக்குப் பதிலைக் கூறியவன், “வாட் நெக்ஸ்ட்?” என்றான் நிசப்தியைப் பார்த்து.

“ஹான்… ஐ டோன்ட் நோ, வாட் நெக்ஸ்ட்?” என்றுத் தோளைக் குலுக்கி அலட்சியமாகச் சொன்னவள், “இந்த பேரம் பேசுற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்கக் கூடாது ரைட். அதுக்காகத்தான் இந்த மீட்டிங் என்றால், உங்க பொன்னான டைமை இதுக்காக வேஸ்ட் பண்ண வேண்டாம். போய் அடுத்த வேலையைப் பார்க்கலாம் கிரேட் கிரிமினல் லாயர் மிஸ்டர் விக்ரம்.” என்றாள் அந்த அலட்சியம் கொஞ்சமும் குறையாமல்.

“ஆஹான்…” என்றவனின் குரலில், வார்த்தையில் இப்போது அவளுக்கு மேல் அவனுக்கு அலட்சியம் கூடியிருந்தது.

“இன்னும் இந்த விக்ரமைப் புரிஞ்சிக்கவே இல்லையே மேடம். த கிரேட் கிரிமினல் லாயர் விக்ரம்… கேட்க நல்லாத்தான் இருக்கு.” என அவள் கூறியதை சிலாகிப்பது போல கிண்டல் செய்தவன், “நான் அவ்வளவு சீக்கிரம் என்னோட பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன், அதுக்கு இந்த கேஸ் ஒரு சாம்பிள். இதுக்கு மேலையும் உங்களுக்கு டவுட் வருமா என்ன? அன்ட் எனக்கு சில டீடையில்ஸ் வேணும். என்னால ஈசியா கேதர் பண்ண முடியும், பட் உங்கிட்ட வாங்கி உன்னையே ஜெயிக்கிறதுல தானே கிக்கே இருக்கு. ம்ம்… சரிதானே…” என்று நக்கலாகப் பேசியவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் பெண்.

அவனை ஒரு பார்வைப் பார்த்தவள், “உங்களுக்கு ஒரு பொருள் தேவைப்படும் போதுதான் தேடணும்னு தோனும் இல்ல. ஆனா அதுவரைக்கும் அந்தப் பொருளை வச்சிருந்தவங்களோட மனநிலை, அதை அவங்ககிட்ட இருந்து பறிச்சிட்டா, அடுத்து அவங்க எப்படி வருத்தப்படுவாங்க இதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையில்ல.” என்றாள் வெறித்தப் பார்வையோடு.

“சென்டிமென்ட்ஸ்… ஹான்! இந்த இடியாட்டிக் சென்டிமென்ட்ஸ் என்னோட தொழிலுக்கு ஆகவே ஆகாது நிசப்தி மேடம். அதனாலதான் நான் தி கிரேட் கிரிமினல் லாயர் விக்ரம். அன்டர்ஸ்டேன்ட்… ப்ளீஸ் வேற ட்ரை பண்ணுங்க மிஸ் நிசப்தி.” என்றவனை, அதே வெறித்தப் பார்வையை பார்த்தாளேத் தவிர ஒன்றும் பேசவில்லை.

இருவரின் பார்வையும் நேருக்கு நேர் மோதிக் கொண்டாலும், அதில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததேத் தவிர, துளி அளவிற்கும்கூட அன்போ, நட்போ இருக்கவில்லை.

இருவரையும் கவனித்த நரேன் முன்னே வந்து, “பாஸ் அந்த மினிஸ்டர் பிஏ கால் பண்ணிட்டே இருக்கார்.” என அவன் காதில் முணுமுணுக்க,

“அந்த பொறுக்கிக்கு என்ன வேணுமாம்? இப்படி டார்ச்சர் பண்ணா கேசை வித்ட்ரா பண்ணிடுவேன்னு சொல்லிடு.” எனக் கோபமாகக் கத்தியவன் நிசப்தியிடம் திரும்பி,

“ஹேய் லுக், எனக்கு உன்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்ல ரைட். ஆனா என் பொண்ணைப் பத்தி ஏகப்பட்ட கவலை இருக்கு.” என்றதும் நிசப்தியின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

அதைக் கண்டு விக்ரமின் முகம் இறுகியது, அதைப் பார்த்து திருப்தியாகச் சிரித்தவளை முறைத்தவன், “நான் இவ்வளவு நாள் உன்னைத் தேடாம இருந்ததுக்கு என்கிட்ட வேலிட் ரீசன் இருக்கு. பட் அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை புரியுதா? அன்ட் மோரோவர் என் குழந்தையோட எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் மெயின்டன் பண்ணணும்னு நினைக்கிறேன், அதனாலதான் கோர்ட் கேஸ்ன்னு அலையவிட எனக்கு மனசு இல்ல. அவளை இந்த வயசுல அப்படி அல்லாட வச்சா, அவளோட மனநிலை எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது. அதனாலதான் இந்த மீட்டிங். இன்னும் உனக்கு ஒரு நாள் டைம் இருக்கு, நல்லா யோசிச்சு சொல்லு. நீயும் ஒரு குழந்தைக்கு அம்மா.” என்றவன்,

அந்த அம்மாவில் அழுத்தம் கொடுத்துவிட்டு, “இப்போ நீ போகலாம்.” என அவள் பதிலை சற்றும் எதிர்பார்க்காமல், தன் வேலையில் மூழ்கிவிட அவனைக் கொன்றுவிடும் கோபத்தில் அவனுக்கு எதிரே நின்றிருந்தாள் நிசப்தி.

உள்ளுக்குள் முட்டி மோதும் கோபத்தையும் ஆற்றாமையையும் வலியையும் வெளிப்படுத்தும் வழி தெரியாமல், அவனையே நீர் மறைத்த விழிகளோடு வெறித்துக் கொண்டிருந்தாள் நிசப்தி.

அவளது நிலமையை உணர்ந்த நரேன்தான், “மேம்…” என்றதும், அதுவரை விக்ரமை வெறித்துக் கொண்டிருந்தவள், தன் பலம் கொண்ட மட்டும் நரேனை ஓங்கி அறைந்திருந்தாள்.

“இந்த அடி உன் பாஸுக்கு விழ வேண்டியது, இன்னைக்கு நீ, நாளைக்கு…” என்று, “ஏய்…” எனச் சேரைத் தள்ளிக்கொண்டு எழுந்த விக்ரமைக் காட்டி, “அவன்…” என்றுக் காட்டமாகச் சொல்லிவிட்டு, “என்னைச் சீண்டிப் பார்க்குற வேலையை இதோட விட்டுடணும். அண்டர்ஸ்டேன்ட்…” என்றுக் கத்திவிட்டு வெளியேறிவிட, திமிறிக் கொண்டிருந்த விக்ரமை நரேன்தான் பிடித்துக் கொண்டிருந்தான்.

“பாஸ்… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப். ப்ளீஸ்… அவங்க என்னைத்தானே அடிச்சாங்க விடுங்க.” எனவும், ஒரே உதறலில் நரேனைத் தள்ளியவன்,

“இப்படி எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் செய்றதுனாலதான் கொஞ்சமும் பயம் இல்லாம இருக்கா. ஏன்டா ஏன் நான் சொல்றதைக் கொஞ்சமும் புரிஞ்சிக்காம இப்படி பண்றீங்க.” என கத்தியவன், கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்து அது முடியாமல் போக, அங்கிருந்த அத்தனைப் பொருட்களையும் கீழேத் தள்ளிவிட்டு, பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று படாரெனக் கதவை அடைத்தான் விக்ரம்.

விக்ரமின் இந்த செயலில் நரேனுக்கு மிகவும் வருத்தமாகிப் போனது. அவன் அறிந்த விக்ரமை இன்னும் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அவனுடைய வலியையும் வேதனையையும் யாரையும், விக்ரம் இதுவரை அறியவிட்டதில்லை. அதற்கு முக்கியமானக் காரணம் ஸ்வாதி.

இப்போதும் அந்த அறையில் என்ன மாதிரியான வேதனையில் துடித்துக் கொண்டிருப்பான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அதை நரேனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாது. அது விக்ரமிற்கு மட்டுமல்ல, நிசப்தியின் உயிருக்கேக்கூட பிரச்சனையாகிவிடும்.

இவற்றை எல்லாம் விக்ரம் எப்படி சரி செய்து கொள்ளப்போகிறானோ என்ற பெரும் கேள்வி, வழக்கம்போல அவன் மனதில் உண்டானது. அதோடு நிச்சயம் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சரி செய்துகொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்தது.

இவ்வாறு யோசனைகளில் இருந்த நரேனின் மொபைலில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்க, அந்த மினிஸ்டரின் பிஏவாக இருக்குமோ என்று நினைத்தபடியே எடுத்துப் பார்க்க, அதுவோ நிசப்தி அனுப்பிய, “சாரி” என்ற செய்தியைக் காட்டியது.

அதுவரை இருந்த இறுக்கம் தளர அவன் முகத்திலும் இலகுவான புன்னகை மலர்ந்தது. கூடவே, “உங்கிட்ட அடி வாங்குறது எனக்கு என்ன புதுசா?” என்ற செய்தியையும் அனுப்ப வைத்தது.

அறைக்குள் அடைந்து கொண்டிருந்த விக்ரமிற்கு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்னதான் குழந்தையை அவள் அறியாமல் அவன் பார்த்துவிட்டாலும், இன்னும் பழகவில்லை. எப்படியும் இப்போது கூட்டிக்கொண்டு வருவாள், குழந்தையோடு ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்த இது சரியான வழியாக இருக்கும் என்று அவன் நினைத்திருக்க, அவள் கூட்டிக்கொண்டு வராதது மட்டுமில்லாமல், திமிரான வார்த்தைகளை வேறு பேசுகிறாள். நினைக்கும் போதே கோபம் தலைக்கேறியது.

‘திமிர்… திமிர் அத்தனையும் திமிர். உடம்பு முழுக்க திமிர். என் குழந்தையவே எங்கிட்ட ஒட்ட விடாம பண்றியா? உன்னை என்ன பன்றேன் பாருடி? உன்னை கதறிட்டு வந்து என் கால்ல விழ வைக்கல, என் பேர் விக்ரம் இல்ல.’ என வன்மமாக சூளுரைத்தவன், சிகரெட்டை பற்ற வைத்து ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தவனின் மூளை அடுத்த வேலைக்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தது.

இங்கு தன் காரில் ஏறிய நிசப்திக்கு கை, கால்கள் தொடக்கம் உடல்கூட லேசாக நடுங்க ஆரம்பித்தது. எவ்வளவுதான் தைரியமானப் பெண் என்று வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் பயம் அப்பிக் கிடந்தது என்பதுதான் உண்மை.

அவளும் குழந்தையும் மட்டும் என ஒரு அழகான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவளை, குழந்தையைக் காரணம் காட்டி இங்கு கொண்டு வந்ததும் இல்லாமல், தன்னிடமிருந்து குழந்தையை வேறுப் பிரிக்கப் பார்க்கிறானே இந்த விக்ரம்.

வாழ்க்கையில் மொத்தத்தையும் இழந்தவள்தான். ஏன் வாழக்கையையே இழந்தவள்தான். ஆனால் அப்போதெல்லாம் வாழவேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது அவள் வயிற்றில் இருந்த இந்தச் சின்னஞ்சிறு மகள்தான்.

தன்னை வாழ வைப்பவளும் அவளே. தன் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுப்பவளும் அவளே. அப்படி இருக்க அவளை இழக்க வேண்டும் என்றால் முடியுமா? முடியாது, முடியவே முடியாது. வேண்டுமென்றால் உயிரைத்தான் இழக்க முடியும். நினைக்கும் போதேக் கண்ணைக் கரித்தது.

கடவுளே இன்னும் எனக்கு என்ன என்ன கஷ்டங்களைத்தான் வைத்திருக்கிறாய். என் கண்ணீரைப் பார்த்தும் உனக்கு மனம் இறங்கவில்லையா? என மானசீகமாகக் கடவுளிடம் சண்டையிட்டவள் ஸ்டியரிங்கின் மேலேத் தலையைக் கவிழ்ந்தாள். உள்ளம் ஆற்றாமையில் பொங்கி வழிந்தது.

தசிரா இல்லாத ஒரு வாழ்க்கையை அவளால் இந்த ஜென்மத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சும்மா இருந்தவனை சீண்டிவிட்டு வந்தாகிவிட்டது. அப்படி இருக்க இவன், இந்த விக்ரம் இனி என்ன என்ன செய்வானோ என்ற பயம், அவளை அடுத்த வேலையை செய்யவிடாமல் செய்தது. எல்லோரும் சொன்னது போல கொஞ்சம் பொறுமையாகப் பேசியிருக்கலாமோ என்று யோசித்தபடியே முகத்தை அழுந்தத் துடைத்தாள் பெண்.

சிகரெட்டை இழுத்தபடியே ஜன்னலோரம் வந்தவன், இன்னும் நிசப்தியின் கார் கிளம்பாமல் இருக்க, யோசனையாகப் புருவம் சுருக்கினான். பின் ஏதோ நினைத்தவனாக தன் மேஜையில் இருந்த பைனாக்குலரை எடுத்து அவளது காரைச் சுற்றி, பின் எதிர்த்த பில்டிங் எனப் பார்த்துக் கொண்டே வந்தவனின் இதயம், “ஓ காட்…” என்று அப்படியே நின்றது.

எதிர்த்த பில்டிங்கின் மாடியில் ஒருவன் கையில் பிஸ்டலுடன் நிசப்தியை சுடுவதற்காகக் குறிப் பார்த்துக் கொண்டிருந்தான். வேகமாக மொபைலை எடுத்து நிசப்திக்கு அழைத்துக்கொண்டேத் தன்னிடமிருந்த பிஸ்டலை உருவி, அதில் சைலன்சரை மாட்டி சுடுவதற்கு ஏதுவாக வைத்தவன், அவள் போனை எடுத்ததும், “சபீ காரை மூவ் பண்ணாத, காரை விட்டு இறங்காதே, சீட்டுக்கடியில் ஒளிஞ்சிக்கோ. கம் ஃபாஸ்ட் ஃபாஸ்ட்…” என்று அவசர, அவசரமாக சொல்லிக்கொண்டே எதிரில் இருந்தவனை சுட்டான்.

ஆனால் அதற்கு முன்னே எதிரில் இருந்தவன் நிசப்தியை நோக்கி சூட் செய்திருந்தான். எல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்திருக்க, தான் சுட்டவன் என்ன ஆனான் என்று யோசிக்கக்கூட இல்லாமல், வேகமாக அறையைவிட்டு வெளியேறி தனக்காக காத்திருந்த நரேனையும் கண்டு கொள்ளாமல் பார்க்கிங்கை நோக்கி ஓடியிருந்தான்.

விக்ரமின் ஓட்டத்தைப் பார்த்த நரேனுக்கும் ஏதோ விபரீதம் என்றுப் புரிய, அவனும் விக்ரமிற்குப் பின்னே ஓடினான். அதற்குள் காரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது.

சுற்றியிருந்தவர்களை விலக்கிவிட்டு இவன் காரைத் திறக்க, தோள்ப்பட்டையில் குண்டடிப்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட அப்படியே இவன் மேல் விழுந்தவள் மயக்கத்திற்குச் சென்று கொண்டிருந்தாள் பெண்.

நிலமையின் தீவிரத்தை உணர்ந்த நரேன், விக்ரமின் காரை எடுத்துக்கொண்டு வர, அதற்குள் விக்ரம் அவளது துப்பட்டாவை எடுத்துக் காயத்தில் வைத்துக் கட்டியவன், அவளைத் தூக்கிக்கொண்டு காருக்கு விரைந்தான்.

மருத்துவமனையை சென்று சேரும் வரைக்குமான நிமிடங்கள் எல்லாம் நரகமாகக் கழிந்தது ஆண்கள் இருவருக்கும். “சபீ… சபீ… எழுந்துக்கோ. உனக்கு ஒன்னுமில்ல, இங்க பாரு சபீ, உனக்கு ஒன்னுமில்லடி, தசிக்குட்டியை விட்டுட்டு போகணும்னு நினைச்சிடாத. ப்ளீஸ் சபீ… கண்னை முழிச்சிக்கோ.” என்ற விக்ரமின் கதறலில் நரேனுக்கும் கண்கள் கலங்கியது.

எப்படி இருக்க வேண்டிய வாழ்க்கை. இருவருக்கும் எப்படி ஆகிவிட்டது. கடவுளே இன்னும் எப்படியெல்லாம் இவர்களை சோதிக்கப் போகிறாய். இனியேனும் அவர்களை வாழவிடக்கூடாதா? என்று தன் பங்குக்கு நரேனும் கடவுளைச் சாடியவன், தன் மொபைலை எடுத்து நிசப்திக்கு வைத்திருந்த செக்யூரிட்டிகளுக்கு அழைத்து காச்சு காச்சென காச்சிவிட்டான்.

அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து, நடந்ததைச் சொல்லி உடனே ரெடியாக இருக்குமாறு கூறியவன், பின் மினிஸ்டருக்கு அழைத்து இப்போது நடந்த அசம்பாவிதங்களைச் சொல்லி, டிபார்ட்மென்டுக்குத் தெரியாமல் விசாரித்து தரும்படிக் கேட்டுக்கொண்டு, தனக்குத் தெரிந்த தகவல்களையும் கொடுத்தான்.

அதற்குள் மருத்துவமனையும் வந்திருக்க, அனைத்து ஏற்பாடுகளோடு ஊழியர்கள் முன்னமே நிற்க, அடுத்து நடந்த அனைத்தும் மின்னல் வேகம்தான்.

போலீஸ் கேஸ் என்று மருத்துவர்கள் காவல்துறைக்கு அறிவிக்க, அவர்களும் உடனே வந்து விட்டனர். வந்தவர்கள் யாரையும் விக்ரமை நெருங்கவிடவில்லை நரேன். அவர்கள் கேட்டக் கேள்விக்கு அவனே பதில் சொல்லியிருந்தான்.

அதில் அந்தப் பெண் யாரென்றக் கேள்விக்கு, ஒருமுறை விக்ரமைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ‘சாரி பாஸ்’ என மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டவன், “விக்ரம் சார் வொய்ஃப் மிசஸ்.நிசப்தி விக்ரம்.” என்று சொல்லிவிட்டான்.

ஆனால் இப்படி நடந்த எதுவும் விக்ரமின் மூளைக்குச் சென்று அடையவில்லை. அவனது எண்ணமெல்லாம் முகம் வெளுத்து தன் கைகளில் கிடந்த நிசப்தியின் நினைவுகள்தான்.

ஐசியுவின் வாசலில் அமர்ந்தவன் அந்தக் கதவை விட்டு பார்வையை அப்படி, இப்படி என்று திருப்பவில்லை. அவளுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லும்வரை அவன் அப்படித்தான் இருப்பான் என்று உணர்ந்த நரேனும், ரவிக்கு அழைத்து நடந்ததைச் சொல்லிவிட்டு விக்ரமின் அருகில் வந்து அமர்ந்தான்.

அடுத்து ரவி வந்து என்ன பேசுவானோ என்ற எண்ணம்தான் நரேனுக்கு. ரவியின் கேள்விகளுக்குப் பதிலைத் தேடித்தேடிக் களைத்திருந்தான்.

***

You may also like

2 comments

mriomrio28399 February 1, 2026 - 5:09 pm

ஓ மை காட் ? யார் சுட்டது ? ஏன் ?
எதுக்கு ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply
Kanimozhi February 1, 2026 - 7:46 pm

Interesting….

Reply

Leave a Reply to Kanimozhi Cancel Reply

About Me

Featured