• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 5.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
பகுதி – 5.

கார் சாலையில் விருட்டென பாய்ந்து கொண்டிருக்க, ஹரீஷுக்கு சர்வஜித்தை திரும்பிப் பார்க்க கூட சற்று நடுக்கமாக இருந்தது. அவனுடனே இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருக்கிறான்தான். அவனது உள்ளும் புறமும் அவனுக்கு நன்றாகவே தெரியும்தான்.

ஆனாலும் கடந்த வாரத்தில் அவன் அரபு நாட்டில் ஆடிய ருத்ர தாண்டவம், அவன் கொஞ்சம் கூட எதிர்பாராதது. அதைவிட ‘இவருக்கு எத்தனை முகங்கள்? இதில் எது நிஜமான முகம்?’ என்றே அவன் குழம்பிப் போனான்.

‘சர்வஜித் என்கையில் ஒரு முகமும், சர்வா என்கையில் வேறு முகமும், ‘உஸ்தாத்’ என்கையில் முற்றிலும் வேறாக அவன் உருவம், உடல்மொழி என அனைத்தும் மாறும் விதம் கண்டு மலைத்தான்.

மும்பை உலகில் ‘சர்வஜித்’ சென்னையில் ‘சர்வா’ அரபு நாட்டில் ‘உஸ்தாத்’ ஹரீஷ் அப்படியே அசைய மறுத்து அமர்ந்து இருந்தான்.

சர்வஜித் தன்னிடம் இருக்கும் தனி ஜெட் விமானமும், அவனிடம் இருக்கும் ஐந்து நாட்டு பாஸ்போர்ட். அது ஒவ்வொன்றிலும் அவனது முகம் முதல் அங்க அடையாளம் துவங்கி, பெயர் வரைக்கும் வேறாக இருக்க அவனை ஹரீஷால் கணிக்க முடியவில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அது... தன் அருகே இருப்பவன் இரக்கமற்ற அரக்கன் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. மும்பையில் இருப்பவன், சென்னையில் தன் கிளைகளைப் பரப்புவதும், வேறு எதையோ குறி வைப்பதும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அதுவும் ‘உஸ்தாத்’ என்ற அடையாளத்தில், அரபு நாட்டிலும், சர்வதேச கடல் பரப்பிலும் அவன் கொன்று குவித்த மனிதர்களை நினைத்தால் அடி மனதே சில்லிட்டது. அன்றைக்கு தன் தனி விமானத்தை உடனே எடுக்கச் சொன்ன பொழுதே சற்று உஷார் ஆனான்.

‘எதுவோ பெரிதாக நடக்கப் போகிறது’ என அவனது உள்மனது சொல்லிக் கொண்டே இருந்தது. ஹரீஷ் உள்ளுக்குள் இப்படி எண்ணிக் கொண்டிருக்க, சர்வஜித்தோ கையில் இருந்த சிகரெட்டை ஆழ்ந்து புகைத்துக் கொண்டிருந்தான்.

அவன் அதன் புகையை உள்ளிழுத்து, அந்த நிக்கோட்டினின் விறுவிறுப்பை ரத்த நாளங்களில் எல்லாம் கலக்கவிட்டு திளைத்தான். அதைப் பார்க்கையிலேயே சர்வஜித் அந்த சிகரெட்டை எத்தனையாக சுவைக்கிறான் எனத் தெரிந்தது.

‘இந்த புகையில் நமக்கு நாத்தம் மட்டும்தான் தெரியுது. இவருக்கு என்னன்னா அதுதான் உலகமேங்கற மாதிரி பண்றார். ரெண்டு பாட்டில் சரக்கு உள்ளே விட்டு போதையில் மிதக்கறதை விட்டு, இது இதில் என்ன இருக்கோ?’ ஹரீஷ் நினைக்க, சர்வஜித்துக்கோ அந்த புகை நிக்கோட்டின் வாசம் அவனைக் கட்டி வைத்தது.

நிஜத்தில் அவன் இப்படியாக புகைக்கும் நேரங்களில் எல்லாம் ஒன்று தன்னையே மறப்பான். அடுத்தது என்ன என்று தீவிரமாக சிந்திப்பான். இப்பொழுதும் அவனுக்குள் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது.

சர்வஜித் தன் நிழல் உலக வாழ்க்கையான ‘உஸ்தாத்’ அடையாளத்தை துறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. சொல்லப்போனால் இம்ரானிடம் தான் அவன் இருந்தான். ஆனால் இம்ரானால் அவன் வளர்ந்ததை விட, ‘உஸ்தாத்’ மூலமாக இம்ரான் வளர்ந்தான் என்பதுதான் உண்மை.

‘உஸ்தாத்’ என்ற ஒருவன் மட்டுமே புத்தி கூர்மையும், திட்டமிடலும், சாதுர்யமும் கொண்டவனாக இருந்தான். இம்ரான் ஆயுதக்கடத்தல் செய்வதுதான் அவனது முக்கியமான வேலையே. நாடுகளுக்கு இடையே ஆயுதங்களை பரிவர்த்தனை செய்வதுதான் அவனது வேலை.

அரசாங்கத்துக்குத் தெரியாமல் அதைச் செய்வதில் ‘உஸ்தாத்’ கை தேர்ந்தவனாக இருந்தான். ஆயுதங்களோடு தங்கக் கட்டிகளை கடத்துவதும் அவர்களது அடுத்த வேலையாக இருந்தது. கடல் கடந்து, அவனை வந்து செர்கியிலேயே தன் இலக்கு எதுவென சர்வஜித் குறித்து வைத்திருந்தான்.

அவனோடு பல வருடங்கள் பயணித்த பொழுதே, அவனுக்கே தெரியாமல் தன் வேலைகளை இந்தியாவில் அவன் செய்யத் துவங்கி இருந்தான். ஆனால் அது இம்ரானுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

தன் அடையாளத்தை மாற்றுவது, மறைந்து போவது என அனைத்தையும் இம்ரானிடமிருந்துதான் அவன் கற்றுக் கொண்டான். ஆனால் அவனைவிட அதில் மேலாக அவன் சிறந்து விளங்க, இம்ரானின் வலக்கரமாக சீக்கிரமே மாறிவிட்டான்.

தன் வேரை அவன் இந்தியாவில் நிலையாக ஊன்றிய பிறகு இம்ரானிடமிருந்து நிரந்தரமாக விலக முடிவெடுத்தான். ஆனால் அது அவனுக்குத் தெரிய வந்தால் நிச்சயமாக தன்னை உயிரோடு விட மாட்டான் என அவனுக்கு நன்கு தெரியும்.

எனவே அவனிடமிருந்து விலக முடிவெடுத்த பிறகும், பொறுமையாக இரண்டு வருடங்கள் காத்திருந்தான். அதற்குள் அவனுக்கென அவன் பதுக்கி இருந்த தங்கக் கட்டிகள் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அனைத்தையும் சுவிஸ் வங்கிக்கு இடம் மாற்றினான்.

அப்படி இடம் மாற்ற அவன் தனக்கென உள்ளவர்களை அவன் கண்டு வைத்திருந்தான். யாரின் கற்பனைக்கும் எட்டாதவாறு பணமும், தங்கமும் அவனிடம் சேர்ந்திருக்க இம்ரானிடம் இருந்து வெளியேற தக்க தருணத்துக்காக காத்திருந்தான்.

அது சரியான நேரத்தில் அவனுக்கு வாய்க்கப்பெற, அவர்களது ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அவனும் இறந்துவிட்டதாக அவனை நம்ப வைத்து தப்பிவிட்டான். அப்படி (உஸ்தாத்) சர்வஜித் இறந்துவிட்டான் என உடனே நம்பிவிட்டால் அது இம்ரான் இல்லையே.

ஆனால் அவனையும் நம்ப வைக்க, அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அவன் தயாராகிவிட்டான் என இம்ரானுக்கே தெரியாது. அது பரம ரகசியமாக சர்வஜித்துக்குள் இன்னும் புதைந்து கிடந்தது.

அப்படி மட்டும் இல்லையென்றால் இம்ரானின் கண்ணில் அவன் மண்ணைத் தூவி இருக்க முடியுமா என்ன? ‘இப்பொழுது இம்ரானுக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் யாரால், எப்படி வந்தது?’ என சர்வஜித்துக்கு தெளிவாகத் தெரியும்.

‘அவனை விட்டு வைத்தது நான் செய்த தவறு. அந்த தவறையும் திருத்தி விடுகிறேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டவனாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் சென்று இறங்க வேண்டிய இடம் வரவே, சர்வஜித் எழுந்து கொண்டான்.

சர்வஜித் எத்தனையோ விதமாக இந்த பயணத்தை தவிர்க்க நினைத்தான். தான் இருக்கும் இடத்திலேயே இருந்து இம்ரானை அவனால் அழிக்க முடியும். ஆனால் தான் அவன் முன்னால் சென்று நிற்காமல் போனால், இம்ரான் எந்த எல்லைக்கும் செல்வான் என அவனுக்குத் தெரியும்.

சர்வஜித்துக்கு இனிமேல் அந்த நிழல் உலக தொடர்புகள் தன்மேல் விழுவதை அவன் சுத்தமாக விரும்பவில்லை. இம்ரானுக்கு தான் உயிரோடு இருப்பது மட்டுமே தெரிந்திருக்கிறது. எங்கே இருக்கிறோம் எனத் தெரியவில்லை. அவன் தன்னை தேடத் துவங்கி இருப்பான். தன் படையையே அனுப்பி இருப்பான். அப்படி இருக்கையில், வெறுமே கையைக் கட்டிக்கொண்டு இருக்க அவனால் முடியாது.

அவன் முன்னால் சென்று நின்று, தான் அவனை வேரோடு சாய்க்க செய்துவைத்த அனைத்தையும் செய்ய தான் அங்கே இருந்தே ஆக வேண்டும். இம்ரானின் கூட்டத்துக்குள் அவனுக்கு நெருக்கமாக, விசுவாசமாக இருந்த யாரையும் கூட அவன் நம்பத் தயாராக இல்லை.

தன் உயிரைக் காக்க உதவியவன் என்ற ஒரே காரணத்துக்காக இரக்கம் காட்டியவனே தன்னை ஒற்றிக் கொடுத்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்தையும் முடித்தாக வேண்டிய கட்டாயத்தினாலேயே அவன் இறங்கிவிட்டான்.

ஹரீஷும் அவன் பின்னால் செல்லப் போக, அவனைத் தடுத்தவன் அங்கே இருந்த வேறு இருவரைப் பார்த்தான். “இதுக்குள்ளே நீ இல்லை...” என்றவன் பக்கத்தில் இருந்த ஒரு ஹெலிகாப்ட்டரை கை காட்டினான்.

“அதில் போய் ஏறிக்கோ...” என்றவன் சென்றுவிட, ஹரீஷுக்கு எதுவும் புரியவில்லை. நிஜத்தில் அந்த ‘நிழல் உலகுக்குள் தானும் நுழைந்துவிட்டால் என்ன ஆகுமோ?’ என அவன் பயப்படவே செய்தான்.

‘தன்னை இதற்குள் இழுக்க மாட்டேன் எனச் சொன்னாரே?’ என்றும் யோசித்துக் கொண்டும் இருந்தான். அப்படி இருந்த பொழுதும் அவனோடு வர மாட்டேன் என ஹர்ஷாவால் சொல்ல முடியவில்லை.

அப்படியெல்லாம் சர்வஜித்திடம் மறுத்துப் பேசிவிட முடியாது என அவனுக்குத் தெரியாதா என்ன? மறுத்துப் பேசி தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. தன் உயிர் இப்படிப் போவதில் அவனுக்கு விருப்பமும் இல்லை.

ஆனால் தான் சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக அவன் தன்னை விட்டுச் செல்ல, ஹரீஷுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. ‘இதற்கு என்னை அங்கேயே விட்டு வந்திருக்கலாமே’ என எண்ணியவனுக்கு அப்பொழுதுதான் இதில் வேறு விஷயம் இருக்கிறது எனப் புரிந்தது.

ஹரீஷ் ஹெலிகாப்டரில் கிளம்பிச் செல்ல, சர்வஜித் அங்கே இருந்த கறுப்பு நிற சபாரி காரில் சென்று ஏறிக் கொண்டான். கிட்டத்தட்ட ஆறு கார்கள் வரிசையாக கிளம்பிச் செல்ல, அதைப் பார்த்த ஹரீஷுக்கே ஒரு நொடி உதறல் எடுத்தது.

அதில் இருந்த ஆட்களும், அவர்கள் சுமந்திருந்த ஆயுதமும், ‘சரியான கொலைகாரக் கும்பல்ல வந்து மாட்டிகிட்டேன்’ நிஜத்தில் அவனுக்கு அந்த நொடி அப்படித்தான் இருந்தது. கொஞ்சம் விட்டால், ‘என்னை யாராச்சும் காப்பாத்துங்க’ எனக் கதறிவிடும் நிலையில் இருந்தான்.

அவன் தைரியமானவன்தான்... பல கலைகள் கற்றவன், பத்துபேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் திறன் கொண்டவன். அதற்குள் எல்லாம் இந்த ‘நிழல் உலக வாழ்க்கை’ வரவே செய்யாது. ஒரு சர்வதேச குற்றவாளி ஆவதிலோ, வேறு நாட்டில் என்ன, தன் நாட்டு ஜெயிலில் கைதியாக இருக்க கூட அவன் விரும்பவில்லை.

உடல்பலமும், தைரியமும் ஒரு பக்கம் இருந்தாலும், ‘பயம் அது வேறு டிப்பார்ட்மென்ட்’ என்றுதான் தனக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்வான். அப்படி இருக்கையில் இங்கே தன்னையும் இழுத்து வந்துவிட்டானே’ அவன் நினைக்கையில் அவன் விட்டுச் சென்றது அவன்மேல் ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்தது.

‘உன்னை நான் அதற்குள் இழுக்க மாட்டேன்’ என அவன் கொடுத்த வாக்கை அவன் நிறைவேற்றுவதில் அவன்மீதான அபிமானம் கூடியது. ஹரீஷின் உடைமைகளை ஹெலிகாப்ட்டரில் ஏற்றியவர்கள், அவனையும் அழைக்க அதில் தயங்காமல் சென்று ஏறிக் கொண்டான்.

அடுத்த அரைமணி நேரப் பயணத்தில் அவனை ஒரு மிகப் பிரம்மாண்டமான சரக்கு கப்பலில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள். அது சர்வதேச கடல் பரப்பில் நிற்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

கப்பலில் வேலை செய்யும் ஆட்கள் கூட அவன் கண்களுக்குத் தெரியவில்லை. கப்பல் கேப்டன் அவரது முழு சீருடையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

“படேல்... சர்தார் படேல்...” அவன் தன்னை அறிமுகப்படுத்த, “ஹரீஷ்...” தானும் சொன்னவன் அவனிடம் கை குலுக்கினான். அவனது உடமைகள் அடங்கிய பை முன்னால் செல்ல, அதைப் பார்த்தவன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

“இப்படி வாங்க...” என அழைத்துச் சென்ற படேல், அவனுக்கென அங்கே ஒரு சொகுசு அறையைக் கை காட்டினான்.

“டேக் ரெஸ்ட்... ஏதாவது வேணும்ன்னா அங்கே ப்ளூ பிரிண்ட் இருக்கு பார்த்துக்கோங்க. அப்படியே இன்டர்காம், தேவைக்கு அழைக்க வேண்டிய நம்பர்கள் எல்லாம் அங்கேயே இருக்கு” அவன் ஹிந்தியில் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

“தேங்க்ஸ்...” அவன் சொல்ல, “சுக்ரியா...” என்றவாறு அவன் சென்றுவிட்டான்.

அவன் செல்லவே ‘கப்பல் எல்லாம் நான் கடல்லேயும், படத்திலேயும் மட்டும்தான்டா பார்த்திருக்கேன். இதிலே கொண்டு வந்து இறக்கி விட்டானுக, எனக்கு இது ஆடுறதில் வாந்தி வேற வர்ற மாதிரி இருக்கே’ தனக்குள் புலம்பியவன் அப்படியே நின்று இருந்தான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
அப்பொழுது அவனது அறைக்கதவு மெல்லியதாக தட்டப்பட, “எஸ்...” அவன் குரல் கொடுக்க, கப்பலின் கிளீனர் உடையில் இருந்த ஒருவன், ஒரு கிட்டார் பையை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் போய்விட, “இது...?” வாய்விட்டே சொன்னவன் வேகமாகச் சென்று கதவை தாழ் போட்டான். அவன் கொடுத்துவிட்டுச் சென்றதை படுக்கையின்மேல் வைத்து மெதுவாக அதன் கிளிப்களை விலக்கினான்.

அதற்குள் ஒரு சினைப்பர் ரைஃபிள் அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது. “வாவ்...” அதன் அழகில் சற்று மயங்கித்தான் போனான். அவன் ஒரு தேர்ந்த ஸ்னைப்பரும் கூட. எத்தனை மீட்டர் இடைவெளி இருந்தாலும், காற்றையும், அவர்கள் இருக்கும் இடத்தையும், மூவிங்கில் இருந்தால் அதையும் கணக்கிட்டு கச்சிதமாக குறி பார்த்து அடிப்பான்.

அதை கையில் எடுத்தவன், தனித்தனி பாகங்களாக இருந்த அவற்றை ஒன்றாக பொருத்தினான். அந்த லென்ஸைப் பொருத்திவிட்டு, அங்கே இருந்த சின்ன கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

அகன்ற கடல் பரப்புக்கு நடுவே வெகு தூரத்தில் இன்னொரு கப்பல் இருப்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்கு மேலே எதுவும் செய்யத் தோன்றாமல் அதை அப்படியே வைத்துவிட்டு படுக்கையில் சென்று அமர்ந்தான்.

அறை முழுக்க தூய வெண்மையில் இருக்க, படுக்கையும் அப்படியே இருந்தது. அதில் சாய்ந்து அவன் அமர்ந்துகொள்ள அரை அடிக்கு அவனை உள் வாங்கியது. தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் சிக்னல் சுத்தமாக இருக்கவில்லை.

எப்படியும் உறக்கம் வராது என்பதால், அங்கே இருந்த சிறிய தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவன் அதில் ஓடிய எதையோ அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவன் இங்கே இப்படி இருக்க, சர்வஜித்தோ அந்த காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். பின்னர் அவன் ஒரு ஜீப்பில் மாறிக் கொள்ள, அது அங்கே இருந்த பாலைவனத்துக்கு இடையே ஓடத் துவங்கியது.

கிட்டத்தட்ட மூன்றுமணி நேரப் பயணம். பயணத்தின் இறுதியில் பரந்து விரிந்த அந்த மணல் பரப்புக்கு நடுவில் ஒரு மிகப்பெரிய கோட்டைச்சுவர் பார்வைக்குத் தரின்தது. இவர்கள் அந்த பல அடி உயர கதவுக்கு முன்னால் சென்று நிற்கும் முன்பே கதவுகள் அகலமாக திறந்துகொண்டது.

ஜீப் உள்ளே சென்று நிற்க, கோட்டைச் சுவருக்கு எதிர்பதமாக ஒரு சிறிய கட்டிடம் அங்கே சற்று தொலைவில் கண்ணுக்குத் தெரிந்தது. அதற்கு முன்னால் ஜீப்பைக் கொண்டுபோய் நிறுத்த, உள்ளே இருந்து ஆயுதம் ஏந்திய இருவர் வந்து (உஸ்தாத்)சர்வஜித்தை அழைத்துச் சென்றார்கள்.

அவனுக்குப் பின்னால் எட்டுபேர் ஆயுதம் ஏந்தியவாறு உள்ளே செல்ல, படிகள் கீழ்நோக்கி இறங்கிச் சென்றது. மேலே தெரிந்ததற்கு மாறாக, உள்ளே மிகப்பெரிய கட்டிடமே இருந்தது. அந்த இடம் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்தான் என்பதால் சாதாரணமாகவே நடந்து சென்றான்.

“வா உஸ்தாத்... வா... என்னையவே ஏமாற்றி விட்டோம் என்று நினைத்தாயா?” என்ற இம்ரான் இடிஇடியென சிரித்தான். “உன்னை எப்படி கண்டு பிடித்து இழுத்து வந்தேன் பார்த்தாயா? அதுதான் இம்ரான்” என்றவன் இன்னுமே சிரிக்க சர்வஜித் நிதானமாகச் சென்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

நொடிகளுக்குள் அந்த இடத்தில் பலர் ஆயுதம் ஏந்தியவாறு நிறைந்துபோக, அதற்கு எல்லாம் அவன் கொஞ்சமும் பாதிக்கப்படவே இல்லை.

“என்னை எதற்காக வர வைத்தாய்?” ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் ஆழ்ந்து அதை புகைத்தான். நிஜத்தில் அவனது அந்த நிதானம் இம்ரானை அசர வைத்தது என்றே சொல்லலாம்.

“சிம்பிள்... என் ரகசியம் தெரிந்த யாரும் வெளியே இருக்கக் கூடாது. ரெண்டாவது நீ எனக்கு வேலை செய்தாகணும். உன் அளவுக்கு இப்போ என்கிட்டே யாரும் இல்லை” அவன் பேசிக் கொண்டு இருக்க, அதை அவன் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

“அது நடக்க வாய்ப்பே இல்லை” என்றவன் எழுந்துகொள்ள முயன்றான்.

“நீ எப்படி என் பார்வையில் இருந்து தப்பினாய்?” அது நடக்க வாய்ப்பே இல்லையே எப்படி நடந்தது என்ற குழப்பம் அவனுக்குள் வேர் ஊன்றியது.

அத்தனை நேரமாக இரும்பாக இருந்த அவனது முகத்தில் சின்னதாக ஒரு மாற்றம் வந்து போனது. “அது ரகசியம்... யாருக்கும் சொல்வதற்கு இல்லை” என்றவன் தோளைக் குலுக்கினான்.

“இந்த முகம்... உலகத்தில் எந்த கேமராவிலும் பதிவாகவில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த முகத்தை மறைத்து ஓடிப் போனவன், இப்பொழுது இதே முகத்தோடு திரும்பி வந்திருக்கிறாய் என்றால்...” என்ற இம்ரானின் கண்கள் ஒளிர்ந்தது.

“அப்படியென்றால்... இந்த முகத்துக்குப் பின்னால்...” எனக் கேட்டவன், அவன் தலை முடியைப் பிடித்து கொத்தாக இழுக்க, அது அவன் முகத்தையும் சில இடங்களில் கிழித்துக்கொண்டு அவன் கரத்தோடு சென்றது.

அப்படியும் சர்வஜித்தின் முகம் அவனுக்குத் தெளிவாகத் தெரியாமல் போக, மீண்டும் அவன் முகத்தில் கை வைக்கப் போனவனை சட்டென தடுத்துப் பிடித்தான்.

“உனக்குத் தெரியாத என் முகம்... உனக்குத் தெரியவே வராது” அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, சர்வஜித்தின் கரத்தில் கட்டி இருந்த வாட்ச் சின்னதாக அதிர்ந்தது.

“என் கோட்டைக்குள் வந்துட்டு அவ்வளவு சுலபமா வெளியே போக முடியும்னு நினைக்கறியா?” எள்ளலாகக் கேட்டான்.

“ஏற்கனவே வெளியே போனவன்தான் நான்...” அதைவிட நக்கலாக பதில் கொடுத்தவன், “உன்மேல் ஒரு சின்ன கருணை காட்டியதால் மட்டும்தான் உன்னை உயிரோட விட்டு விலகிப் போனேன். அந்த கருணைக்கு நீ லாயக்கே இல்லாதவன்னு நிரூபிச்சுட்ட” என்றவன் வெளியேற முயல, அனைத்து துப்பாக்கிகளும் அவனைக் குறி பார்த்தது.

அடுத்த நொடி, வெளியே ஒரு மிகப்பெரிய பாம் வெடிக்கும் ஓசை கேட்டது. கூடவே அடுத்தடுத்த வெடிகளும் வெடிக்கத் துவங்க, சட்டென அனைவரும் சர்வஜித்தை குறி வைத்து சுடத் துவங்கினார்கள்.

சர்வஜித்தின் ஆட்களும் தங்கள் துப்பாக்கியை இயக்க, அங்கே மிகப்பெரும் துப்பாக்கிச்சூடே நடந்தது. அது அவனது இடம் என்பதால் தன்னை மீறி (உஸ்தாத்) சர்வஜித் எதுவும் செய்துவிட முடியாது என்ற காரணத்தால் அவர்களது ஆயுதங்களை பறிமுதல் செய்யாத தன் முட்டாள்த்தனத்தை நொந்து கொண்டான்.

(உஸ்தாத்) சர்வஜித்தை தான் குறைத்து மதிப்பிட்டிருக்க கூடாது என்ற காலம் கடந்த நினைவு.

“உன் கதையை முடிக்கத்தான் வந்தேன்... முடிச்சுடுவேன்...” என்றவன் தான் தன் முழுக்கை சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த கையடக்க துப்பாக்கியை எடுத்து இம்ரானின் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தினான்.

இம்ரானுக்கோ... அவன் துப்பாக்கியை வைத்து அழுத்தியதை விட, ‘தன் ரேடார் சிஸ்டத்துக்கு என்ன ஆனது? தன் செக்யூரிட்டி அலர்ட் ஏன் ஒலி எழுப்பவில்லை?’ என்ற கேள்விதான் அவனுக்குள் வண்டாக குடைந்தது.

இம்ரானை இழுத்துக்கொண்டு ரகசிய வழியோடு அவன் பயணிக்க, அங்கே இம்ரானின் ஆட்கள் துப்பாக்கியோடு அவனை மடக்க முயன்றார்கள். ஆனால் அவன் கையில் இம்ரான் அகப்பட்டு இருக்க, அவன் தோளில் முதல் குண்டை ஏற்கனவே இறக்கி இருந்தான்.

இம்ரானை சுட்டு வீழ்த்த அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது. ஆனால் அவன் உயிருடன் இருக்கும் வரைக்கு மட்டுமே தான் உயிரோடு இருப்போம் என்பது புரிய, அவனை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தான்.

அந்த நேரம் (உஸ்தாத்) சர்வஜித்தின் முகம் ஆங்காங்கே கிழிந்து ஒரு மாதிரி விகாரமாக வேறு இருக்க, அவன் யார் என மற்றவர்களால் அடையாளம் காண முடியவில்லை. அவர்களுக்குள் பின்னால் இருந்து குண்டு வெடித்துக் கொண்டே வர, அதன் ரகசியம் இம்ரானுக்குத் தெரியவே இல்லை.

தன் முன்னால் வந்தவர்களை எல்லாம் இம்ரானைக் காட்டி மிரட்டியவாறே முன்னோக்கிச் செல்ல, பின் தங்கியவர்களை அடுத்தடுத்து வெடித்த சுவரில் இருந்த வெடிகுண்டுகள் கொன்று குவித்தது.

“இது எப்படி?” தன்னை மீறிக் கேட்டான் இம்ரான்.

“இது எல்லாம் நான் ரெண்டு வருடத்துக்கு முன்னால் செட் செய்த ஃபிரீக்வன்சி டிட்டேக்டிவ் பாம்ஸ்...” அவன் சொல்ல, இம்ரானுக்கு தன் செவிகளை நம்பவே முடியவில்லை.

“என்ன...?” அவன் கேட்டு முடிக்கும் முன்னர் அவர்களுக்கு வெகு அருகே ஒரு குண்டு வெடிக்க, அது வெடிக்கப் போவது தெரிந்து சட்டென குனிந்து இருந்தான் சர்வஜித். இம்ரானின் முகத்துக்கு அருகே அது வெடிக்க, அவன் முகம் கிட்டத்தட்ட பொசுங்கியது.

எப்போவாவது இங்கே அணுகுண்டு வெடிக்கும், அதைக் கேட்டு என் செல்லப் பிள்ளைகளும் விழித்துக்கொண்டு உன் கதையை முடித்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவே இல்லை, நான் பால் வார்த்த பாம்பு என்னையவே கொத்தப் பார்த்துடுச்சு.

“சோ... அதனால்தான் என் உயிருக்கு ஆபத்து எனத் தெரிஞ்சே உள்ளே வந்தேன். இங்கே இருக்கும் செட்டப் எல்லாமே நான் செய்தது. அதை எப்படி நிறுத்துவது என்றும் எனக்கு நல்லாவே தெரியும். முதல்பாம் வெடித்தது வெளியே கொஞ்சம் தூரத்தில், அதுவும் என்னோட ஆள் ட்ரோன் மூலமா வெடிக்க வச்சான்.

“உனக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்... அது எந்தக் காலத்திலும் நல்லதுக்கே இல்லை” அப்பொழுது இம்ரானால் நகரக் கூட முடியாத நிலை. அவனது முகமே கிழித்து ரத்தச் சகதியாக இருக்க, அவன் அலறிக்கொண்டே அவனோடு இழுபட்டான்.

அந்த நேரம் அங்கே ஒரு சுவர் வெடிகுண்டு அருகே வெடித்துச் சிதற, அடுத்தடுத்த வெடிகளால் அந்த கட்டிடம் மொத்தமாக சரியத் துவங்கியது. மண் சுவர் என்பதால் அது அத்தனை ஒன்றும் பலமாகவும் இருக்கவில்லை.

இன்னும் வேகமாக செயல்படவில்லை என்றால், தான் வைத்த வெடிகுண்டுகள் எல்லாம் தன்னையே பலி வாங்கும் எனப் புரிந்தது. இன்னும் அவன் தப்பித்துச் செல்ல வேண்டிய வழிக்கு அரை மீட்டர் தூரம் இருக்க, அடிபட்டுவிட்ட இம்ரானை இழுத்துச் செல்வது முட்டாள்த்தனம் எனப் புரிந்தது.

மறு நிமிடம் அவனை சுட்டு வீழ்த்தியவன், கால்களுக்கு வேகம் கூட்டினான். எதிர்பட்ட பலரையும் சுட்டுத் தள்ளி முன்னேற, அவன் காலிலும், தோள்ப்பட்டையிலும், தோட்டாக்கள் துளைத்து வெளியேறியது. வெடிகுண்டு இருக்கும் இடங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும் என்பதால் அவன் லாவகமாக செயல்பட்டான். அப்படியும் சில சேதாரங்கள் நேர்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

கட்டிடம் இடிந்து விழத் துவங்கியதாலோ என்னவோ, அங்கே இருந்த காவலுக்கு இருந்தவர்கள் அனைவரும் வெளியேறி இருந்தார்கள். அது இவனுக்கும் வசதியாகப் போய்விட, அங்கே இருக்கும் வெளியேறப்போகும் கதவு பார்வைக்குப் பட்டது.

அந்த கதவில்தான் கடைசி வெடிகுண்டு இருப்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் அது கதவை உடைத்துச் சிதறும் அளவுக்கான சக்தி கொண்டது மட்டுமே என்பதால் தைரியமாக முன்னேறினான்.

கதவு வெடித்து சிதறவும், இவன் வெளியே சென்று விழுவதற்கும், மொத்த கட்டிடமும் தரைமட்டம் ஆகவும் மிகச் சரியாக இருந்தது. கோட்டைச் சுவர்களிலும் வெடிகுண்டு இருக்கவே, அவை மொத்தமாக வெடித்து சிதறுவதற்கு முன்பாக தான் பின்பக்க கதவுக்கு வெளியே இருக்க வேண்டும் என கால்களுக்கு முயன்று வேகம் கூட்டினான்.
 
  • Love
Reactions: Shanbagavalli

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
தோள்ப்பட்டை, கால், கை என குருதி வெளியேறிக் கொண்டிருக்க, குண்டு துளைத்துச் சென்ற வேகத்துக்கு ரத்தநாளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து இருந்தது. இன்னும் மிஞ்சிப்போனால் நான்கே நிமிடங்களில் தான் முழு மயக்கத்துக்குச் சென்றுவிடுவோம் என புத்தி சொன்னது.

அவன் தலைக்கு மேலே, பக்கத்தில் எல்லாம் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து செல்ல, எப்படியோ ஒரு வழியாக அங்கே இருந்து வெளியேறி இருந்தான். தான் வரச் சொல்லி இருந்த வண்டி இருக்கும் இடத்துக்குச் செல்ல மூன்று நிமிடங்களாவது பிடிக்கும் எனப் புரிந்தது.

தான் உயிர்பிழைப்பது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் வலுப்பெற, தன்னைத் திரட்டிக்கொண்டு ஓடினான். அவன் ஓடிக் கொண்டிருந்ததற்கு மறு பக்கம் போலீஸ் வாகனங்கள் விரைவது தெரிய, அவர்கள் பார்வையில் பட்டுவிடக் கூடாது என மணலில் உருண்டான்.

அந்த மணலில் கால்களால் ஓடுவதை விட, உருண்டால் இன்னும் விரைவாகச் செல்ல முடியும் எனத் தோன்றவே அப்படியே செய்தான். ரத்த இழப்பு, மணல் சூடு எல்லாம் சேர, அவன் கீழே வந்து சேர்ந்த பொழுது மயங்கிச் சரிந்து இருந்தான்.

அவன் மயங்கிய அதே நேரம், அவனை அழைத்துச் செல்ல அவன் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் வந்து அவனைக் காப்பாற்றினார்கள். உடனடியாக அவனை வண்டியில் ஏற்றிச் சென்று வேகமாக அவனுக்கு மருத்துவ உதவி வழங்கப் பட்டது.

கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும் அவன் அங்கேயே இருக்க வேண்டி இருந்தது. தன் உடல் கொஞ்சம் தேறும் வரைக்கும் அவன் அவசரப்படவே இல்லை. அதோடு அங்கே இருந்த நிலவரங்களை கவனித்துக் கொண்டே இருந்தான்.

காவலர்கள் எல்லாம் இருட்டுக்குள் கறுப்பு பூனையைத் தேடி துழாவிக் கொண்டே இருக்க, கிட்டத்தட்ட பத்துநாட்கள் வரைக்கும் அவன் வெளியே வரவே இல்லை. இம்ரானின் சாம்ராஜ்யம் மொத்தமாக அழிக்கப்பட்டது. அதற்கு அவர்களது பகை நாடு ஒன்றை அவர்கள் கை காட்டி அடித்துக் கொண்டார்கள்.

அத்தனை நாட்கள் வரைக்கும் ஹரீஷுக்கு எதற்காக தான் அந்த கப்பலில் இருக்கிறோம்? என்ன செய்யக் காத்திருக்கிறோம் என எதுவும் புரியவில்லை. ஒரு கப்பலைப் பார்ப்பது புது அனுபவமாக இருக்க, அங்கே இருக்கும் வசதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

சில நேரங்களில், ‘என்னை எதுக்குடா இங்கே வச்சிருக்கீங்க?’ என மனதுக்குள் புலம்பிக் கொள்வான். லோக்கல் செய்திச் சேனலில் வந்துகொண்டிருந்த விஷயங்கள் வேறு அடிமனதில் திகிலைப் பரப்பிக் கொண்டு இருந்தது.

‘அவருக்கு எதுவும் ஆகி இருக்காதுதானே?’ என எண்ணியவன் கப்பல் கேப்டனிடம் எதையாவது கேட்கலாம் என்றால் அது வேறு விதங்களில் முடிந்துவிடக் கூடாது என்பதால் வாயை இறுக மூடிக் கொண்டான்.

அப்படியோ அவனது பொறுமையை நிறையவே சோதித்துவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு அந்த கப்பலுக்கு வந்தான் சர்வஜித். சர்வஜித்தின் காயங்கள் கொஞ்சம் ஆறி இருந்தாலும், அவன் ஒரு மிலிட்டரிக்காரன் என்பதால் காயத்தின் தன்மையை வைத்து அவனாகவே அனுமானித்துக் கொண்டான்.

நின்ற இடத்தில் இருந்தே சர்வஜித், “கேப்டன்...” என அழைக்க, “இதோ இருக்கறேன் சர்வஜித்” என்றவாறு கப்பல் கேப்டன் முன்னால் வந்தான்.

“அவன்...?” என்றவாறு படேலைப் பார்த்தான். சர்வஜித் யாரைக் கேட்கிறான் என பட்டேலுக்குப் புரிந்துபோக, ஹரீஷுக்கு சர்வஜித் யாரைக் கேட்கிறான் எனப் புரியவே இல்லை.

“அது...” அவன் உடல்நிலையைக் கருதி மறுப்பாக எதையோ சொல்லப் போன கேப்டன், அது வேலைக்கே ஆகாது எனப் புரிய, “இங்கே இருந்து ஏழு மைல் தூரத்தில் இருக்கான்” என்றான்.

ஹரீஷுக்கு அங்கே இருந்த தொலைகாட்சி மூலம் விஷயங்கள் முழுதாக தெரிய வந்திருந்தது. அதைக் கேட்டது முதல் ‘யாருய்யா நீ?’ என்ற கேள்விதான் உள்ளுக்குள் வண்டாக குடைந்தது. ‘உஸ்தாத்...’ என்ற பெயர் வேறு அடிவயிற்றில் ஒரு அவஸ்தையான உணர்வைக் கொடுத்துக் கொண்டு இருந்தது.

“கண்காணிப்பு எத்தனை பேர்?” அவனிடமிருந்து அடுத்த கேள்வி பிறந்தது.

“நாலுபேர், நாலு டைரக்ஷன்ல இருக்காங்க” அவன் சொல்ல,

“நான் கிளம்பணும்... அதுக்கு முன்னாடி என்ன செய்யணும்னு சொல்லிடு” என்று அவன் செல்ல, கையில் வாக்கிடாக்கியோடு சென்றவன், ஹரீஷையும் அழைத்துச் சென்றான்.

‘இந்த நிலையில் எங்கே போகப் போறாராம்? இவன் என்னை எங்கே கூட்டிப் போறான்?’ என எண்ணியவாறே அவன் பின்னால் சென்றான். ‘எனக்கு வேலை வந்துவிட்டது’ என எண்ணியவனுக்கு உள்ளுக்குள் ஒரு குதூகலம். துப்பாக்கி ஏந்திய ஒரு வீரனுக்கு மட்டுமே வரும் பூரிப்பு அது.

அவனது ஸ்னைஃப்பர் ரைபிளை அவனை எடுத்துவரச் சொல்லிவிட்டு, அவன் செவியில் ஒரு கருவியைப் பொருத்த, அங்கே இணைப்பில் மேலும் பலர் இருப்பது தெரிந்தது. அப்பொழுதுதான் பலர் பல இடங்களில் ஒரே நேரத்தில் இருப்பது தெரிந்தது.

“உங்க டார்கெட் பார்வைக்கு கிடைக்குதா?” ஹரீஷோடு சேர்த்து மற்றவர்களிடமும் படேல் ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் பேசினான். படேல் காட்டிய திசையில் தன் கையில் இருந்த துப்பாக்கியில் பொருத்தி இருந்த லென்ஸ் வழியாகப் பார்த்தான்.

அவனது டார்கெட் யார் என ஹரீஷுக்குப் புரிந்து போனது. “எஸ்... “ எஸ்... மற்றவர்களிடம் இருந்தும் பதில் வர, “ஒரே நேரத்தில் எல்லோரையும் முடிக்கணும். அதுவும் நான் சொல்லும்போது சுடணும்” என்றான்.

அந்த நொடி முதல் படேலின் கட்டளைக்காக காத்திருக்கத் துவங்கினார்கள். அனைவரும் ஒன்றாக குறி பார்த்துக் கொண்டிருக்க, தன் நிலையில் நின்ற ஹரீஷ், ஒற்றைக் கண்ணை மூடி, மறு கண் வழியாக குறி பார்த்தான்.

அவனது டார்கெட் மூவ் ஆக, “டார்கெட் மூவிங்...” என்றவன் சில நொடிகளில் “ஸ்டேபிள்” என்றான். மற்றவர்களும் இதை சொல்லிக் கொண்டே இருக்க, அந்த நேரம் உடை மாற்றிய சர்வஜித் ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்துகொண்டு கடலுக்குள் ஒரு சின்ன கருவியோடு நீந்திக் கொண்டிருந்தான்.

ஹரீஷ் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அந்த சிறியரக கப்பலில் மேலே இருந்து ஒரு தொங்கும் ஏணி கீழே வீசப்பட, சர்வஜித் அதில் தொற்றிக் கொள்வது தெரிந்தது.

அவனைப் பார்த்து அதிர்ந்த ஹரீஷ், ‘என்ன இவரா?’ என எண்ணியவாறே பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘இவருக்கு தோள்ப்பட்டையில் குண்டடி பட்டிருந்தது, காயம் வேற இருந்தது. இவர் எப்படி அந்த ஏணியில் ஏறுவார்?’ ஹரீஷ் நினைக்க, அதற்கு மாறாக ஏணி அப்படியே உயரத் துவங்கியது. சரியாக அந்த நேரம் படேல் அனைவரையும் அலட் செய்தான்.

கட்டளைகள் பிறப்பிக்கப்பட, சர்வஜித் அந்த சின்ன கப்பலின் மேல் தளத்தை அடைந்த பொழுது, டார்கெட் அனைவரும் சுட்டு வீழ்த்தப் பட்டார்கள். அனைவரின் தொடர்பும் அறுந்து போக, ஹரீஷ் இருந்த கப்பல் மெதுவாக அந்த கப்பலை நோக்கி நகரத் துவங்கியது.

படேல் மீண்டும் ஹரீஷிடம் சிலவற்றைச் சொல்ல, அவன் மீண்டும் தன் ‘ஸ்னைப்பர் கன்’னை வைத்து கண்காணிக்கத் துவங்கினான். அவன் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே சர்வஜித் செல்லும் இடங்களில் காவலுக்கு இருந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் வீழ்த்தியவாறு முன்னேறினான்.

அவனது துப்பாக்கியில் சைலன்சர் பொருத்தப்பட்டிருக்க, அவன் முன்னேறிச் செல்வது யாருக்கும் தெரியவே இல்லை. அப்பொழுது கப்பலின் மேல் தளத்துக்கு ஒருவன் படபடப்பும், பரபரப்புமாக ஓடி வருவது தெரிந்தது.

ஹரீஷுக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், பார்த்தவண்ணம் இருந்தான்.

“உஸ்தாத்... உஸ்தாத்... நான் இல்லை... இல்லை...” அவனிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான் மற்றவன். தலை, முகத்தில் பாதி அளவுக்கு என கட்டு போட்டிருந்த பொழுதும் சர்வஜித்தின் கண்களில் தெரிந்த கனல் ஹரீஷையே தாக்குகையில் எதிரில் இருப்பவன் என்ன ஆவான்?

அதே நேரம் இவர்கள் இருந்தப்பக்கம் ஒருவன் வர, அவனை நொடியில் உணர்ந்த ஹரீஷ் அவனை சுட்டு வீழ்த்தினான். மீண்டும் அவனது பார்வை சர்வஜித்திடம் நிலைக்க, அவனோ மற்றவனது விரலை ஒவ்வொன்றாக உடைப்பது தெரிந்தது.

“ஆ...ஆ...ஆ...” அவன் அலறித் துடிக்க, சர்வஜித்திடம் கொஞ்சம் கூட அசைவே இல்லை.

“நான் இங்கே இருந்து போகும்போதே என்ன சொன்னேன்? நான் இந்த உலகத்துக்கு செத்துட்டேன்னு சொன்னேனா இல்லையா?” சர்வஜித் கர்ஜிக்க, அந்த வலியிலும் அவன் காலை பற்றிக் கொண்டு கதறினான்.

“நான் இல்லை... நான் சொல்லலை...?” அவன் மன்றாட,

“பொய்... பொய்... பொய்...” எனக் கத்தியவாறே தன் துப்பாக்கியால் அவன் காலில் சுட்டான். அவன் வலியில் அலறித் துடித்தான். ஆனால் அவனது அலறலை கொஞ்சம் கூட சலனமே இன்றி பார்த்துக் கொண்டிருந்தான் சர்வஜித்.

“எனக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்தாய் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் உனக்கு கண்ணிவெடி வைக்கலை. ஆனா நீ... சொல்லு... உனக்கு அவன் என்ன ஆஃபர் கொடுத்தான்? எனக்குத் தெரிஞ்சாகணும்” கழுத்து நரம்பு புடைக்க கத்திக் கொண்டிருந்தான் சர்வஜித்.

இந்த நேரம் அவனது கையில் அந்த மானிட்டர் வாட்ச் மட்டும் இருந்து இருந்தால், நிச்சயம் அதுவே வெடித்துச் சிதறி இருக்கும்.

மற்றவன் வாய் திறக்காமல் போகவே, அடுத்த நிமிடம் அவனைச் சுட்டுக் கொன்றவன் அவனைத் தூக்கி கடலில் விசிறி அடித்தான்.

“உஸ்தாத்ன்னு ஒருத்தன் இருந்தான்னு சொல்றதுக்கு இனிமேல் எவனும் இல்லை. என்னை அடையாளம் காட்டவும் எவனும் இருக்க மாட்டான்” வாய்விட்டே சொன்னவன்,

“எவனாவது சொன்னாலும் அவனும் இருக்க மாட்டான்” என முத்தாய்ப்பாக முடித்து வைக்க, அவன் நின்ற தோற்றமே ஹரீஷுக்கு குளிரைப் பரப்பியது. அவனது இந்த உடல் நிலையிலும் அவனது ருத்ரதாண்டவம் கண்டு மிரண்டு போனான்.

‘எதையோ ப்ளான் பண்ணி செய்ய ஆரம்பிச்சார், திடீர்ன்னு இங்கே வந்து இவர்களை எல்லாம் முடிக்கிறார். என்னன்னு புரியவே இல்லையே’ சற்று குழம்பித்தான் போனான். ஆனால் சர்வஜித்தின் கணக்குகள் வேறு என அவனுக்குப் புரியவில்லை.

நிழலுலகை விட்டு வெளிச்சத்துக்கு வந்துவிட்டோம் என நினைக்கையில், அது அப்படி இல்லை எனச் சொன்ன அவர்களை அவன் விடுவதா? நெவர்... விட்ட குறை எதுவும் தன்னைத் தொடரக் கூடாது, தன் எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தே அனைத்தையும் செய்தான்.

அப்பொழுதே இதையெல்லாம் அவனால் செய்திருக்க முடியும். ஆனால் அது வேண்டாம் என்றுதான் விலகி வந்தான். ஆனால், தன்னை விடாமல் துரத்தி வந்தவர்களை விட்டுவைப்பானா என்ன?

ஹரீஷ் நடந்தவை அனைத்தையும் நினைத்தவன், ‘இப்படிப் பட்டவனிடம் அந்த இரு பெண்கள் சிக்கி இருக்கிறார்களே’ என எண்ணுகையில் அவர்கள்மேல் பரிதாபம் எழுந்தது. அதுவும் ரூபியைப் பற்றி நினைக்கையில் நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

பகை முடிப்பான்....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
nice
roobikkum harish kum munadiye link irukku pola

மிக்க நன்றி!

ஆமாம்... ரூபிக்கும், ஹரீஷுக்கும் லிங்க் இருக்கு.