• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 17.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
319
113
Chennai
பகுதி – 17.

முத்துப்பாண்டி ஒத்தையாக வந்ததாலோ என்னவோ அவனை கேட்டில் யாரும் தடுக்கவில்லை. அதைவிட இப்படி ஒருவன் வருவான் என சர்வஜித் சொல்லி இருந்தானோ என்னவோ?

அவன் உள்ளே வரும் வேகத்தைப் பார்த்தே அவனது கோபத்தைக் கண்டுகொண்டான் சர்வஜித். இதழ்கடையில் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்க்க, திரையையே வெறித்தான்.

அவனது கையில் கட்டி இருந்த கடிகாரம், ‘பீப்... பீப்...’ என்ற ஒலியை எழுப்ப, அருகே இருந்த ஹரீஷ் சற்று கவலையானான்.

‘இவருக்கு இந்த ரத்தக்கொதிப்பு இவ்வளவு அதிகரிப்பது நல்லதுக்கே இல்லை’ நிஜத்தில் அவனுக்கு நடக்கும் முழுக் கதையும் தெரியவில்லை. ஆனாலும் கோபால் குடும்பத்தை வேண்டும் என்றே சண்டைக்கு இழுப்பது அவனுக்குப் புரிந்தது.

இந்த ஐந்து வருடங்களில், அவனைத் தேடி வரும் வம்புச் சண்டைகளைத்தான் அவன் விட்டதில்லை. ஆனால் முதல் முறையாக அவனே தேடிப்போய் வம்பிழுப்பது இதுவே முதல்முறை. அதுவும் அவர்களை டார்கெட் செய்வது இவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

வந்த முத்துப்பாண்டி ரிசப்ஷனில் வைஷாலியைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, “சார்...” ஹரீஷ் அதைப் பார்த்துவிட்டு அவனைக் கலைத்தான்.

“லெட் ஹிம்...” என்றவன் அத்தனை அழுத்தமாக ஹரீஷிடம் சொல்ல, இவனுக்கு மனதுக்குள் ஆயாசம். அந்த வாட்ச் வேறு இப்பொழுது விடாமல் கத்திக் கொண்டிருக்க, ‘எங்கே இருந்துடா வரீங்க?’ உள்ளே புலம்பியவன்,

‘அவனுக எங்கே வராங்க? இவர்தானே இழுத்துட்டு வர்றார்’ என நினைத்தவாறே திரையைப் பார்த்தான். சர்வஜித்தின் முகம் அத்தனை கடுமையாக மாறிப் போயிருந்தது.

‘இன்னைக்கு அவன் கண்டம் ஆகப் போறான். உசுரைக் காப்பாத்திகிட்டு ஓடிப் போயிட்டால் பரவாயில்லை’ முத்துப்பாண்டிக்காக அத்தனை இரக்கப்பட்டான்.

முத்துப்பாண்டியின் கேள்விக்கு பதில் சொன்ன ரிசப்ஷன் பெண், “நீங்க வெயிட்டிங் ஹால்ல வெயிட் பண்ணுங்க சார். நான் அவங்களை வரச் சொல்றேன். யுவர் குட் நேம் ப்ளீஸ்” அவனிடம் கேட்டாள்.

“முத்துப்பாண்டி...” என வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு அவள் காட்டிய இடத்தில் சென்று நின்றுகொண்டான். அந்த அறைக்குள் இருந்த இருக்கையில் அமராமல், பொறுமையற்று அவன் நடந்து கொண்டிருக்க, சர்வஜித், அந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே அவனைப் பார்த்தான்.

“ரொம்ப டென்ஷனா இருக்கான் இல்ல?” சர்வஜித் ஹரீஷிடம் கேட்க,

‘நீங்க செய்து வைத்த வேலைக்கு அவன் இப்படி இல்லாமல் போனால்தான் ஆச்சரியம்’ என தான் நினைத்ததை அவன் வெளியே சொல்லவில்லை.

நேற்று இரவில் வைஷாலியின் வீட்டுக்குள் புகுந்து அவளது தாயை மயக்கமடையச் செய்து, அவளுக்கும் மயக்க மருந்து கொடுத்து மிகவும் கச்சிதமாகத் தூக்கி விட்டார்கள். இத்தனைக்கும் அவள் வீட்டை விட்டு எங்கேயும் சென்றுவிடக் கூடாது என வீட்டுக்கு வெளியே காவலுக்கும் ஆட்களை ஏற்பாடு செய்தும் இருந்தார்கள்.

அவர்கள் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டு, வைஷாலியை அத்தனை கச்சிதமாக தூக்குவது என்றால் சுலபமா என்ன? அதைக் காதும் காதும் வைத்த மாதிரி செய்து இருந்தானே. அவளை அங்கே வீட்டில் காணாமல் முத்துப்பாண்டி கொதித்துப் போகாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

இன்று ஜோசியரை வரச் சொல்லி, நாள் குறிக்கலாம் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ரத்னா விடியற்காலையிலேயே மகளைக் காணாமல் திகைத்தாள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், மகளைக் காண அறைக்கு வந்தவள் கண்டது வெறுமையான படுக்கை அறையைத்தான்.

மகளை வீடு முழுக்க தேடி, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்து என எல்லாம் செய்துவிட்டு, பிறகு உடனடியாக கோபாலுக்கு அழைத்துவிட்டாள். உடனடியாக தங்கள் ஆட்களை விட்டு, பேருந்து நிலையம், இரயில் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் ஆட்களை விட்டு தேடினார்கள்.

“ஓடுகாலி மு*** அவளுக்கு இருக்கு...” என்ற முத்துப்பாண்டி உடனே ஒரு வண்டியில் ஆட்களோடு சென்னைக்கு கிளம்பிவிட்டான். அவள் நிச்சயம் தன் சென்னை வீட்டுக்குப் போயிருக்கவே மாட்டாள் என அவன் நினைக்க, அவள் அங்கேதான் சென்றாள் எனத் தெரிய வந்த பொழுது கொதித்துப் போனான்.

“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால், ஓடிப் போனவ அவ வீட்டுக்கே போயிருப்பா. எங்க கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவிட்டு அவளால் எங்கே போய்ட முடியும்? அவளை அங்கே இருந்து இழுத்துட்டு வர்றது எனக்கு அவ்வளவு கஷ்டமா என்ன? இதுக்கு மேலே அவளை அங்கே வெறுமே விட்டுவைத்தால் தானே...” அத்தனை வஞ்சினம் கொண்டான்.

நிஜத்தில் முத்துப்பாண்டிக்கு அவளைப் பிடிக்கும். அவளைத் திருமணம் செய்து தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனது மிகப்பெரும் அவா. அதனாலேயே அவளை கொஞ்சமே கொஞ்சம் கௌரவமாக நடத்த வேண்டும் என நினைத்தான்.

அப்படி இல்லாமல் போயிருந்தால் எப்பொழுதோ அவளைத் தொட்டிருப்பான். ‘இவ எங்கே போய்டப் போறா?’ என்ற ஒரு நினைப்பும் அதற்குக் காரணம் எனலாம். ஆனால் அவள் இப்படி தனக்கு தண்ணி காட்டுவது அவனை விலங்காகவே மாற்றி இருந்தது.

அவளை இன்றைக்கே கசக்கி முகர்ந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான். அங்கே வீட்டுக்குச் சென்றால், அவள் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாள் எனத் தெரியவர, உடனே இங்கே வந்துவிட்டான்.

அவளைக் கதறக் கதற இழுத்துச் சென்று அவளை அனுபவித்தால் மட்டுமே தன் ஆத்திரம் அடங்கும் எனத் தோன்றியது. இனிமேல் அவள் தன்னைவிட்டு எங்கேயும் செல்ல நினைக்க கூட கூடாது என்ற வேகம் அவனிடம்.

அலுவலக விசிட்டர் அறைக்குள் அவன் அடிபட்ட வேங்கையென உலவிக் கொண்டிருந்தான். அவன் வந்திருக்கிறான் என வரவேற்பு பெண் சொல்லவே, பெரிதாக வைஷாலி அதிர்ந்துவிடவில்லை. எப்படியும் அவன் இங்கே வந்து நிற்பான் என அவளுக்குத் தெரியுமே.

வைஷாலியின் அறைக்குள் இருந்த கேமரா வழியாக சர்வஜித் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு விஷயம் தெரிய வந்த உடனேயே அவள் பயப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. ரூபி எதையோ கேட்பதும், அதற்கு அவளைத் தடுத்துவிட்டு இவள் எழுந்து செல்வதும் அவனுக்குத் தெரிய அவளையே கேமராக்கள் வழியாக தொடர்ந்தான்.

முத்துப்பாண்டியை அவாய்ட் செய்யலாம் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என அவளுக்குத் தெரியுமே. ‘என்ன ஆகப் போகிறதோ?’ என அவளது மனம் கிடந்தது தவித்தது. நடக்கும் வழிகளில் இருந்த கேமராக்களில் எல்லாம் அவளது பார்வை சென்று மீண்டது.

‘காப்பாற்ற சர்வஜித் வந்துவிட மாட்டானா?’ என ஆழ்மனம் ஆசை கொண்டது. அவன்மேல் சாய்ந்த மனது, அவன் படுத்திய பாட்டில் அவள் காதல் கானல் நீராகிப் போயிற்று என அவள் நினைக்க, தனக்கு ஒரு ஆபத்து என்கையில் அவள் மனம் அவனைத்தான் தேடியது.

அறைக்குள் தோழியின் முன்னால் தன் பரிதவிப்பை காட்ட முடியாமல் வந்துவிட்டவள், வராண்டாவின் ஒரு இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். சுவரில் சாய்ந்து வேக வேகமாக அவள் மூச்சு வாங்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷுக்கே என்னவோ போல் இருந்தது.

சர்வஜித்தோ புகைத்தவாறே அவளைப் பார்த்திருக்க, ‘இவர் மனசென்ன கல்லா?’ என்றுதான் நினைத்தான். கொஞ்சம் கூட இரக்கமே இன்றி அவளை இவன் வாட்டி வதைத்தது எல்லாம் ஹரீஷுக்குத் தெரியுமே.

வைஷாலியைப் பார்க்கவே அப்படி ஒரு ஓய்ந்த தோற்றத்தில் இருந்தாள். ‘இதற்கு மேலே என்னால் முடியாது’ என்ற ஒரு உடல்மொழி. அவள் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்கிறாள் எனப் பார்க்கும்போதே தெரிந்தது.

அதற்கு மேலே அதைக் காண முடியாமல் ஹரீஷ் வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டான். அவளுக்கு உதவி செய்ய அவனால் முடியும். ஆனால் அதை வைத்து அவளை சர்வஜித் இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்துவான் எனப் புரிய, ஒதுங்கிச் சென்றான்.

ஒருத்தருக்கு உதவி செய்வதை விட, உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மிகவும் நல்லது என புத்தி சொன்னது.

சில பல நிமிடங்கள் கடந்து... தன்னால் அந்த முத்துப்பாண்டியை எதிர்கொள்ள முடியும் எனத் தோன்றிய பிறகு வைஷாலி அங்கிருந்து சென்றாள். அவள் அந்த விசிட்டர்ஸ் அறையின் கதவைத் திறப்பதற்கும், அவளது முடியைக் கொத்தாகப் பற்றிக் கொண்டு அவளது இரு கன்னங்களிலும் முத்துப்பாண்டி மாறி மாறி அறைவதற்கும் சரியாக இருந்தது.

பொதுவாகவே ஒரு ஆண்மகனின் அடியை ஒரு பெண்ணவளின் பூந்தேகம் தாங்கிக் கொள்ளாது. அப்படி இருக்கையில் அவனது உச்ச பட்ச கோபத்தில் அவன் அடித்த அடியில் அவளுக்கு பொறி கலங்கிப் போனது. நிற்க கூட முடியாமல் தலை சுற்றி கால்கள் தள்ளாட, அவனைத் தடுக்க கூட அவளால் முடியவில்லை.

முத்துப்பாண்டி நிச்சயம் மோசமாக எதிர்வினை புரிவான் என அவள் எதிர்பார்த்தேதான் வந்தாள். ஆனால் இந்த அடி... இதை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.

“ஓடுகாலி நாயே... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், நாங்க அவ்வளவு சொல்லியும் கேட்காமல் இங்கே ஓடி வந்திருப்ப? அதுவும் எப்படிடி அத்தனைபேர் கண்ணில் மண்ணைத் தூவிட்டு வந்த? யார் கொடுத்த ட்ரெயினிங் அது...?” என்றவன் மேலும் அடித்தான்.

அதைப் பார்க்கும் எந்த ஒரு ஆண்மகனுமே அந்தப் பெண்ணை காப்பாற்ற நினைப்பான். ஆனால் சர்வஜித் அசைவே இன்றி வெறித்துக் கொண்டிருந்தான். ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே’ என்பதுபோல் ஒரு பாவனை. அவன் அப்படி இருந்தாலும், அந்த வாட்ச் கதறுவது ஏன் என யாராவது விளக்கம் கொடுத்தால் தேவலாம்.

“உன்னை விட்டு வைத்தது என் தப்புதான்... இப்போ இந்த நிமிஷம் உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றவன், அவள் தேகத்தில் தன் கரத்தை இறக்கி அழுத்தினான். ஒரு பெண்ணவளை தொடக் கூடாத பாகங்களில் அவன் கரங்கள் அழுத்தி இருக்க, வலியில் அலறினாள்.

அவன் தன்னை அத்துமீறித் தொடுவான், அதுவும் இங்கே அலுவலகத்தில் வைத்து தொடுவான் என்று எல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அருவருத்துப் போய் அவனை அடக்க முடியாத கையறு நிலை என எல்லாம் சேர, வாய்விட்டே அலறினாள்.

ஆனால் மறு நொடி அவள் தலையில் இருந்த முத்துப்பாண்டியின் கரம் விடுபட, “ஆ... ஆ...” என அலறியவாறு அவளை விட்டு விலகி பின்னால் சென்றான். வைஷாலி அரை மயக்க நிலையில் பார்க்க, அவனைக் கொத்தாக அவளிடமிருந்து பிரித்தான் சர்வஜித். அவளது தேகத்தில் இருந்த அவனது கரத்தைப் பிடித்து முறுக்கி, ஒற்றைக் கையில் தூக்கி சுழற்றி கீழே அடித்தான்.

எப்பொழுது தன் அறையில் இருந்து வெளியேறினான்? எப்பொழுது வைஷாலி இருந்த அறைக்குள் வந்தான். எப்பொழுது முத்துப்பாண்டியை சுழற்றி அடித்தான் என மற்றவர்கள் உணரும் முன்பே, கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் செய்து இருந்தான்.

முத்துப்பாண்டி ஆறடி உயர, கட்டுமஸ்த்தான ஆண்மகன். அவனையே சர்வஜித் தூக்கிச் சுழற்றி தரையில் நச் என விசிறி அடிப்பது என்றால், அவன் எத்தனை பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். என்னவோ படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை ரீவைண்டில் பார்ப்பதுபோல் அவளது மூளை அதை ரீ கிரியேட் செய்து பார்த்தது.

முத்துப்பாண்டியோ வலியில் அலறி, “ஆ...ஆ... யார்ரா நீ...?” அவன் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே, அவனது வலக்கரத்தை தரையில் வைத்து காலால் அழுத்தினான். முத்துப்பாண்டி வலியில் அலறிக் கொண்டிருக்க, அவன் கை முட்டியில் தன் காலால் அழுத்தி மிதித்தவன், மறு நொடி அவனது கரத்தைப் பின்னால் திருப்பி உடைத்து இருந்தான் சர்வஜித்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
319
113
Chennai
முத்துப்பாண்டியின் எலும்பு முறியும் ஓசையை அவளது செவிகள் கேட்க, சர்வஜித்தின் ருத்ரதாண்டவத்தைப் பார்த்தவள், மறு நொடி கண்கள் இருட்டிக் கொண்டு வர மயங்கி சரிந்து இருந்தாள்.

“ஹரீஷ்... இந்த நாயைத் தூக்கி வெளியே போடு... டாக்டரை வரச் சொல்...” என்றவன் வைஷாலியை தன் கரத்தில் அள்ளிக் கொண்டான். அப்படியே துவண்ட கொடியேன அவனது கரங்களில் அவள் வழிந்தாள்.

தன் அறைக்கு வந்து, உள்ளே அவனது ஓய்வெடுக்கும் அறையில் படுக்கையில் அவளை விட்டான். தன் கரத்தில் விடாமல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்த கடிகாரத்தை அறுத்து தரையில் விசிறியடித்தான்.

அவனுக்குள் கனன்ற, கொந்தளித்த கோபத்தை கட்டுப்படுத்துவது அவனுக்கு முடியாத காரியமாக இருந்தது. அந்த அறைக்குள் கூண்டுப் புலியென உலவிக் கொண்டிருந்தான்.

ஹரீஷோ, முத்துப்பாண்டியை கேட்டின் முன்பக்கம் கொண்டு போட்டால் அவனது ஆட்கள் பிரச்சனை செய்வார்கள். எனவே கேட்டின் பின்பக்கம் அவனைத் தூக்கி அடித்துவிட்டு, ஆம்புலன்சுக்கு அழைத்து சொல்லச் சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.

அவன் மருத்துவரை அழைக்க, ஒரு லேடி மருத்துவர் அங்கே வந்து சேர்ந்தாள். ஹரீஷ் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, சர்வஜித் அங்கே கட்டிலில் கிடந்த வைஷாலியை கை காட்டினான். சர்வஜித் கொதிப்பது அவனது கண்களிலேயே தெரிய, ஹரீஷ் தூரமாக நின்றுகொண்டான்.

‘இவரைக் கிளப்பிவிடவே வண்டி கட்டிக்கிட்டு வர்றானுக. வந்து வாங்கிக் கட்டிக்கிறானுக.... என் நிம்மதியை குழி தோண்டி புதைக்கறானுக. ஆண்டவா...’ ஹரீஷ் உள்ளே அலறினான்.

அவளை வேகமாக பரிசோதித்த மருத்துவர், “இவங்களை யார் அபியூஸ் பண்ணது. கன்னம் ரெண்டும் கன்னிப் போற அளவுக்கு அடிச்சிருக்காங்க. யார் அடிச்சது? நான் இதை உடனே போலீசுக்குச் சொல்லாமல் விட மாட்டேன்” வைஷாலியை அப்படி ஒரு நிலையில் பார்க்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் வரும் தார்மீகக் கோபம்தான் அது.

“டாக்டர்... இவங்களை அடிச்சது வேற ஒருத்தன்... அவனை நாங்க பார்த்துக்கறோம். இப்போ இவங்களைப் பாருங்க” ஹரீஷ் சொல்ல, அவர்களது அறைக்கதவைத் தள்ளிக்கொண்டு ரூபி வேகமாக உள்ளே வந்தாள்.

“ஷாலு... ஷாலுவுக்கு என்ன ஆச்சு?” என்றவள் படுக்கையை நெருங்கி அமர்ந்தாள்.

ரூபியைப் பார்த்த மருத்துவர், “நீங்க யாரு?” மருத்துவர் கேட்க,

“நான் அவளோட ஃப்ரண்டு...” வேகமாகச் சொன்னாள்.

“இவளுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க டாக்டர். ஹையோ... கன்னம் என்ன இப்படி கன்னிப் போயிருக்கு? யார் இப்படிப் பண்ணா?” ஹரீஷிடம் கத்தினாள்.

“இதைச் செய்தது இவங்க இல்லையா?” மருத்துவர் அவளிடம் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

“என்ன? இல்ல... இல்ல... இவளோட மாமாப் பையன் ரொம்ப கோபமா வந்திருந்தான். இவ அவனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனா. இப்போதான் ரிசப்ஷன்ல இருந்து இவளை இங்கே ரூமுக்கு தூக்கிட்டுப் போறதா சொன்னாங்க, அதான் நான் வந்தேன்” ரூபி சொல்ல, மருத்துவர் கொஞ்சம் நிதானமானாள்.

“நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் வெளியே இருங்க...” மருத்துவர் சொல்ல, வெளியே வந்துவிட்டார்கள். சர்வஜித் சிகரெட்டை எடுத்து புகைக்கத் துவங்கினான். அவன் கண்கள் இரண்டும் ரத்தமான சிவந்து போயிருக்க, அவன் என்ன யோசிக்கிறான் என ஹரீஷால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

அடுத்து சில பல நிமிடங்கள் கடக்க, வைஷாலியை பரிசோதித்த மருத்துவர், அவளுக்கு அதிர்ச்சி மயக்கம்தான் எனச் சொல்லி அவளை நன்றாக ஓய்வு எடுக்கச் சொன்னார். அவளது காயத்துக்கு ஆயின்மெண்டை எழுதிக் கொடுத்துவிட்டு, அவளுக்கு வலி தெரியாமல் இருக்க, மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தாள்.

“அவங்க தூங்கி எழுந்த உடனே நல்லா சாப்பிடக் கொடுத்துட்டு மாத்திரையை போடச் சொல்லுங்க. அவங்க ரொம்ப அனிமிக்கா இருக்காங்க, கூடவே கொஞ்சம் அதிர்ச்சியிலும் இருக்காங்க. கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க” என்றவள் எழுந்துவிட்டாள்.

“டாக்டர், அவளுக்கு எப்போ மயக்கம் தெளியும்?” ரூபி சற்று கவலையாகக் கேட்டாள்.

“எப்படியும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேலேயே ஆகும்” எனச் சொல்லிவிட்டு செல்ல, ரூபி கோபமாக வெளியே வந்தாள்.

“அவளுக்கு என்ன ஆச்சு? எனக்குத் தெரிஞ்சாகணும்” அவள் கத்த, ஹரீஷுக்கு மூச்சடைத்தது. சர்வஜித்தின் கோபம் ரூபியின்மேல் திரும்பிவிடக் கூடாதே என்ற பயம் அவனுக்கு.

‘இப்போ இவ எதுக்கு எங்கேயோ போற வண்டியை இவ பக்கம் திருப்பறா?’ அவன் உள்ளே அலறிப் போனான்.

“அது தெரிஞ்சால் நீ தாங்க மாட்ட... பேசாமல் போய்டு” சர்வஜித்தை கவனமாகப் பார்த்தவாறே அடிக்குரலில் ஹரீஷ் சொன்ன விதத்தில் புருவம் நெரித்தாள்.

“அவளுக்கு மெடிசின் வாங்கணும்” அவள் சொல்ல, “அவங்களையே அனுப்பு ஹரீஷ்...” அத்தனை நேரமாக அமைதியாக இருந்த சர்வஜித் வாயைத் திறந்தான்.

“தேங்க்ஸ்...” என்றவள், அந்த மருந்துகளை வாங்க வெளியே சென்றாள்.

அவள் செல்லவே, “அந்த நாய் என்ன ஆனான்னு விசாரி. அவனோட அடுத்த கையும் எனக்கு வேணும்...” சர்வஜித் சொல்ல, இவன் ஆடிப் போய்விட்டான்.

“அதை எப்படி மிஸ் பண்ணேன்? எப்படி?” தன்னிடமே கேட்டுக் கொண்ட சர்வஜித், விடாமல் புகைத்தான்.

ஹரீஷ் அவன் சொன்னதைச் செய்யப் போக, சர்வஜித் வைஷாலி இருந்த அறைக்குச் சென்றான். கதவருகே நின்றவன் படுக்கையில் இமை மூடிப் படுத்திருந்த அவளையே இமைக்காமல் பார்த்தான்.

‘பொண்ணுங்க மேலேயும், குழந்தைங்க மேலேயும் கை வைக்கக் கூடாது. அது தப்பு... அந்த தப்பை அவன் செய்திருக்க கூடாது’ எண்ணியவனுக்கு, அவள் முத்துப்பாண்டியைக் காணச் செல்லும் முன்னர், அந்த வராண்டாவின் சுவரில் தலை சாய்ந்து நின்ற அவளது அந்த தோற்றமே கண்முன் வந்து போனது.

அவன் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே தலையை அசைத்து, புருவம் நெரிய எதையோ யோசித்தவளது முகம் கலவரமாகுவது அவனுக்குப் புரிந்தது.

‘ஏதோ கனவு காண்கிறாள்’ அவன் நினைத்து முடிக்கும் முன்பு, அலறிக் கொண்டு எழுந்தாள்.

ஒரு மாதிரி அனிச்சையாக தன்னை தொட்டுப் பார்த்தவள், அந்த அறையையும் பரபரவென பார்வையால் அலசினாள். “ஓ... நோ...” வாய்விட்டே சொன்னவள், அங்கே வாசல் அருகே நிழல் உருவமாக நின்ற சர்வஜித்தைப் பார்த்துவிட்டு பயந்து அலறினாள்.

“ஆ...ஆ... யார்ரா நீ... அவன்...அவன்... என்னை விட்டுடுங்க...” தான் ஏதோ மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டதுபோல் உணர்ந்தாள். அதைவிட, முத்துப்பாண்டி தன்னை எங்கேயோ அடைத்து வைத்துவிட்டான் என பயந்தாள்.

ஒரு மாதிரி பரிதவித்து, பதறி, அலறி என அவள் அங்கிருந்து தப்பி ஓட முயல, சர்வஜித்தோ கோபத்தின் உச்சியில் கொதித்துக் கொண்டு நின்றிருந்தான். தன்னைத் தாண்டி ஓட முயன்றவளை தன் வலிய கரங்களால் தடுத்துப் பிடித்தான்.

“என்னை விடு... என்னை விடு... நான் போகணும்...” என்றவள் அவன் பிடியில் திமிறினாள். அந்த நொடி அவளது இமைகள் மூடி இருக்க, அவள் தன் சுய அவள் நினைவிலேயே இல்லையென அவனுக்குப் புரிந்தது.

“ஷ்..ஷ்... நான்தான்... கொஞ்சம் அமைதியா இரு... என்னை மீறி யாரும் உன்னை நெருங்க முடியாது, நெருங்க விடவும் மாட்டேன்” அவன் சொல்ல, அந்த குரல், அவனது அந்த சிகரெட் வாசனை அப்படியே அவளை அமைதிப்படுத்தியது.

“நிஜமா? நிஜமா? முத்துப்பாண்டி வர மாட்டானா? நிஜமா? அவன் அசிங்கமா பண்றான். எனக்குப் பிடிக்கலை... எனக்கு பயமா இருக்கு” என்றவாறே அவள் துவள, அவளைத் தன் கரத்தில் அள்ளிக் கொண்டான்.

அவளைப் படுக்கையில் விட்டவன் விலக முயல, “போகாதீங்க... போகாதீங்க... என்னை விட்டுப் போகாதீங்க...” என்றவளது கரம், அவனது டையை இறுகப் பற்றி இருந்தது. அவள் அவள் கரத்தைப் பார்க்க, இரண்டு மூன்று சுற்று சுற்றி சுருட்டி வைத்து இருந்தாள்.

நியாயமாகப் பார்த்தால் அவனுக்கு கோபம் வந்திருக்க வேண்டும், ஆனால் அவனால் அவள்மேல் கோபம் கொள்ள முடியவில்லை. அவள்மேல் சாய்ந்தும் சாயாத ஒரு நிலை. அத்தனை நெருக்கத்தில் இமை மூடி பிதற்றிக் கொண்டிருந்த அவளது மதி முகம்.

இத்தனை நெருக்கத்தில் எல்லாம் அவன் எந்தப் பெண்ணையும் பார்த்ததே இல்லை. அவ்வளவு ஏன் எந்தப் பெண்ணையும் ஊன்றி கூட அவன் கவனித்தது இல்லை. அவன் கெட்டவன், மிகவும் கெட்டவன்... ஆனால் இவள் தன்னிடம் ஒரு மாதிரி அடைக்கலமாகி இருப்பது ஒருவித புது உணர்வைக் கொடுத்தது.

அவனது சிகரெட் வாசனையை அவள் தொடர்ந்து சுவாசித்தாள். அவனது டையை இன்னும் சுருட்டி அருகே இழுத்தவள், அவன் வாசனையை அனிச்சையாக நுகர்ந்து கொண்டிருந்தாள். அவள் செய்வது இன்னது என அவனுக்குப் புரியவில்லை.

ஆனால் தன் முகத்தில் கோலமிடும் அவளது நாசி, அவளது மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் ஒருவித வாசனை. அவளது அந்த பிரத்தியேக வாசனை அவனை கிறங்கச் செய்தது. அவளோ அவனை வாசம் பிடித்தவாறே அப்படியே உறங்கிப் போயிருக்க, மேலும் சில பல நிமிடங்கள் அப்படியே அவள் அருகிலேயே இருந்தான்.

அவன் மனது ஒருவித அமைதியில் திளைத்திருப்பது அவனுக்குப் புரிந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்த அவனது மனது இப்படி ஒரு ஆழ்ந்த அமைதியில் இதுவரைக்கும் இருந்ததே இல்லை. அவளை முத்தமிட வேண்டும், அவளைக் கொள்ளையிட வேண்டும் என்று எல்லாம் அவனுக்குத் தோன்றவே இல்லை.

மாறாக அவள் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தான். ‘நான் கெட்டவன்டி...’ அவளை உலுக்கி எழுப்பி அவளிடம் சொல்ல வேண்டும்போல் இருந்தது. அவனது மருத்துவர் அவனது வாழ்வில் ஒரு பெண் வந்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னபொழுது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.

ஆனால இந்த நொடி... ‘ஒரு பெண்ணுக்குள் இத்தனை சக்தியா?’ என்றுதான் தோன்றியது. முதல்முறை தன் காரின் முன்னால் அவளைப் பார்த்தது முதல், மாயாஜால் நிகழ்வு... அந்த விமானப் பயணம், அவள் தன்னிடம் வந்து பேசியது... இப்பொழுது தன் குரலுக்கே அவள் அமைதி அடைந்தது என என்னென்னவோ நினைவுகள்.

அவள் கரத்தில் இருந்து தன் டையை விடுவித்தவன், நேராக அமர்ந்தான். தன் குரலைக் கேட்டு அவள் அடங்கிப் போனது, முத்துப்பாண்டி பற்றிய அவளது பயம், அவளை அத்தனை கொடுமை செய்த தன்மேல் அவள் கொண்ட நம்பிக்கை... அவனுக்குப் புரியவே இல்லை.

ஒரு மாதிரி மனம் தள்ளாடியது. அவன் தேகம் கூட நடுங்கியது. “ஹரீஷ்... ஹரீஷ்...” அவன் குரல் உயர்த்தி அழைக்க, வேகமாக அவன் அங்கே வந்தான்.

“அம்மாகிட்டே போகணும்... அம்மாகிட்டே போகணும்... இவளும்... இவளையும்...” என்றவன் வேகமாக, ஆழமாக மூச்செடுத்தான். அவனது அந்த பதட்டமே, ஒரு பெண்ணை அவனுக்கு கையாளத் தெரியவில்லை எனக் காட்ட, ஹரீஷுக்கு சிரிப்பு வரும்போல் இருந்தது. அதோடு கூட அவனது அந்த உறுதி, கண்ணியம் நிச்சயம் அசந்துதான் போனான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
319
113
Chennai
“செஞ்சுடலாம் சார்...” என்றவன், அடுத்த நிமிடம் தங்கள் கேரவனை எடுத்து வரச் சொன்னான். அலுவலகத்துக்குப் பின்னால் அது வந்து நிற்கவே, அந்த நேரம் ரூபி மருந்துகளோடு அங்கே வந்தாள்.

அவளிடமிருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டவன், “நாங்க அவங்களைப் பார்த்துக்கறோம்... யார் வந்து கேட்டாலும் உனக்கு எதுவும் தெரியாது” என்ற ஹரீஷ்..., “சார் கிளம்பலாம்...” எனச் சொன்னான்.

“நீங்க என்ன சொல்றீங்க? அவளை எங்கே அழைச்சுட்டு போறீங்க?” ரூபி கேட்க, அவன் எந்த பதிலையும் சொல்லவில்லை. சர்வஜித்தின் அந்த பிரத்தியேக அறையின் பின்வாசல் வழியாக சர்வஜித் வைஷாலியைத் தூக்கிக்கொண்டு வெளியேற, ரூபி அப்படியே நின்றுவிட்டாள்.

‘இங்கே என்னதான் நடக்குது?’ என எண்ணியவள், தலையில் கை வைத்துக் கொண்டாள். அந்த நேரம் அங்கே வந்த ஒருவன், அவளை அப்புறப்படுத்திவிட்டு, அறையை பழைய நிலைக்கு மாற்றியவன் அறையை மூடிவிட்டுச் சென்றான்.

தன் இருக்கைக்குத் திரும்பியவளுக்கு எதுவும் புரியவே இல்லை. அந்த கேரவனில் படுக்கையில் வைஷாலி விழி மூடி உறங்க, சர்வஜித், அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். இமைக்காத பார்வை... அசையாத பார்வை... ஆனால் அந்த பார்வையில் நேசமோ, பாசமோ இல்லாமல் போக, ஹரீஷ் அவனையே ஆராய்சியாகப் பார்த்தான்.

அடுத்த மூன்று மணி நேரங்களில் கேரவன் விசாலாட்சியின் வீட்டின் முன்னால் நின்றது. அவன் தான் வருவதை அவருக்குச் சொல்லவில்லை என்றாலும் ஹரீஷ் அதைச் செய்து இருந்தான். எனவே விசாலாட்சி பள்ளியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

சர்வஜித் வைஷாலியை வீட்டினுள் தூக்கிச் செல்ல, விசாலாட்சிக்கு பேரதிர்ச்சி என்றே சொல்லலாம். தன் மகன் எத்தனையோ விதமான திரை மறைவு விஷயங்களைச் செய்தான் என அவருக்குத் தெரியும். அதையெல்லாம் கைவிட்ட பிறகுதான் அவரை வந்து பார்ப்பேன் எனவும் சொல்லி இருந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவன் வந்தபொழுது அவன் அனைத்தையும் விட்டுவிட்டான் என எண்ணி நிம்மதியாக உணர்ந்தார். ஆனால் இப்பொழுது ஒரு பெண்ணை இப்படி தூக்கிக் கொண்டு வரவே, பயந்தார்.

ஆனால் மகனை பெண்கள் விஷயத்தில் அவரால் தவறாக நினைக்க முடியவில்லை. அவனாக விஷயத்தை சொல்லும் வரைக்கும் எதையும் கேட்டுக்கொள்ளக் கூடாது என முடிவெடுத்தார்.

அவளை தாயின் அறையில் அவன் விட்டுவிட்டு வர, அந்த தாயுள்ளம் நிறைந்து போனது. “அவளை...” அறையிலிருந்து வெளியே வந்தவன், வைஷாலியை தனியாக விட முடியாது எனச் சொல்லாமல் சொல்ல அது அவருக்குப் புரிந்தது.

“பிரபா...” விசாலாட்சி அழைக்க, அவள் வேகமாக வந்தாள்.

“உள்ளே அவளோட இரு... அவளைப் பார்த்துக்கோ” எனச் சொல்ல, அவள் மறுவார்த்தை பேசாமல் உள்ளே சென்றாள். அவள் செல்லவே, தாயோடு ஹாலுக்கு வந்தவன், ஒரு மாதிரி நிலையில்லாமல் தவித்தான்.

“என்னப்பா...? ஏன் இப்படி தவிக்கற?” தன் மகனை அப்படிக் காண முடியாமல் கேட்டார்.

“அம்மா... நான் கெட்டவன் தானே? ரொம்ப கெட்டவன் தானே?” தாயிடம் கேட்க, அவனது கரத்தைப் பற்றி அங்கே இருந்த சோபாவில் அமர வைத்தார்.

“இரு நான் தண்ணி...” அவர் செல்ல முயல, “நான் எடுத்துட்டு வர்றேன்ம்மா...” என்ற ஹரீஷ் கிச்சனுக்கு ஓடினான். அவன் அதைக் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தவன் நிதானத்துக்கு வர முயன்றான்.

“இப்போ சொல்லு... உனக்கு என்ன குழப்பம்?” அவன் கன்னம் வருடி பாசமாக கேட்டார்.

“அம்மா... நான் கெட்டவன்ம்மா... ரொம்ப ரொம்ப கெட்டவன்... என்னைப்போய் இவ நம்பறாம்மா. எப்படிம்மா முடியும்? எப்படி முடியும்? அதுவும் அவளை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன் தெரியுமா? அவளை யூஸ் பண்ணிட்டு இருக்கேன்ம்மா.

“அதனால் அவளுக்கு அவ்வளவு கஷ்டம்... அப்படியும்... எனக்கு என்னவோ... இங்கே...” என்றவன் இதயத்தை சுட்டிக்காட்டி தன் கரத்தால் நெஞ்சை வருடிக் காட்டினான்.

அவனது அந்த செய்கையில் ஹரீஷின் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தே விட்டது. அவன் சர்வஜித்தை இப்படி ஒரு நிலையில் பார்த்ததே இல்லை. ‘இவர் மனுஷனா? இல்லன்னா காட்டு மிருகமா?’ இப்படித்தான் அவன் பலமுறை எண்ணி இருக்கிறான்.

ஆனால் இந்த நொடி, அந்த தாயின் முன்னால் தவறு செய்த குழந்தையாக அவன் தவிப்பது அவனை என்னவோ செய்தது.

“சரிப்பா... சரி... இப்போ என்ன நடந்தது?” அவனிடமிருந்து விஷயத்தை வாங்க முயன்றார்.

அவன் தான் செய்ததை ஒன்று விடாமல் தன் தாயிடம் சொல்லிவிட்டான். “நான்தான்ம்மா ப்ளே பண்றேன்... இது எப்படி ஆரம்பிக்கணும்னு நான் நினைத்தேனோ அப்படி ஆரம்பிக்கலை. எப்படிப் போகணும்னு நான் விரும்பினேனோ அப்படிப் போகலை. ஆனால் இந்த ஆட்டம் என் கைக்குள்ளே தான் இருக்கு.

“அப்படியும்... இவ... இவ... என் மனசை என்னவோ செய்யறாம்மா. என்னை கட்டி வைக்கப் பார்க்கறாளான்னு எனக்கு இவ மேலே கோபம் வரணும். அதுக்கு பதிலா... இவளை இங்கே தூக்கிட்டு வந்திருக்கேன்” என்றவன் அத்தனை குழப்பத்தில் இருந்தான்.

“சர்வா... இந்த அம்மா சொல்லி நீ எதையும் கேட்கப் போவதில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் ஒன்று மட்டும் சொல்றேன்... எனக்கென்னவோ இவதான் என்னோட மருமகன்னு தோணுது” தாய் சொல்ல,

“வாட்... வாட்...” என்றவன் அதிர்ந்து எழுந்தான். “நோ வே... நோ வே...” எனப் புலம்பினான். அது அப்படித்தான் இருக்க வேண்டும் என அவன் மனம் ஆசைப்பட்டது.

“நான் மிருகம்மா...” அவனைப்பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன?

“எந்த மிருகம்பா வேட்டையாடும் விலங்கை பாதுகாக்க நினைக்கும்?” தாய் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“அவளை கூட்டி வந்து என்கிட்டே கொடுத்திருக்கப்பா. என் மகன் மிருகம் இல்லைன்னு சொல்ல இந்த ஒரு காரணம் போதாதா?” என்றவர் அவன் கன்னம் வருடினார். காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சுதான் என்பதை அந்த தாய் நிரூபித்தார்.

“இல்லம்மா... இது... இதை என்னால் செய்ய முடியாது. என் பழி வெறியை தணிச்சுக்க, அவளைப் பலி கொடுக்க கூட நான் தயங்க மாட்டேன்” தன்னை பலவீனமானவனாக காட்ட அவன் விரும்பவில்லை.

“பலி கொடுக்கத் தயங்காதவன் எதுக்குப்பா அவளை என்கிட்டே அழைச்சுட்டு வந்திருக்க?” தாய் நெற்றியடியாக கேட்க, அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

‘அதுதானே... நான் ஏன் அவளை இங்கே அழைச்சுட்டு வந்தேன்? அவளை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என ஏன் என்னால் விட முடியவில்லை. அவளை நான் மட்டுமே கஷ்டப்படுத்தலாம் என ஏன் நினைக்கிறேன்?’ அவனுக்கு தலை வலித்தது.

“வாழ்க்கையில் சில இடங்களில் தோற்கலாம் ப்பா. என் மகன் ஓநாய் கிடையாது... அவன் சிங்கம்... சில ஓநாய் கூட்டத்தை அழிக்க நீ சிங்கமா இருப்பதில் தப்பில்லை. நீ இளைப்பாற ஒரு இடம் வேண்டும்... இத்தனைக்குப் பிறகும் அவ உன்கிட்டே அடைக்கலத்தை உணர்கிறாள் என்றால் அவ மனசில் நீ இருக்கறன்னு அர்த்தம் சர்வா” தாய் சொல்ல அந்த இறுதி வார்த்தைகள் அவனை உலுக்கியது.

“அவளால் எப்படிம்மா என்னை நம்ப முடியும்?” அவனால் அதைத்தான் ஏற்க முடியவில்லை.

“அந்த அளவுக்கு அவ வாழ்க்கையில் கஷ்டப்பட்டாளோ என்னவோ? பைரவன் அண்ணாவோட பொண்ணை உன்னால் அவங்ககிட்டே விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?” தாய் முத்தாய்ப்பாக முடிக்க, “ம்மா...” அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தான்.

“பைரவன், வைஷாலி... இந்த ரெண்டு பெயர்களை மட்டும் இல்லை, இவங்களையும் நம்மளால் மறக்க முடியாதுப்பா. சரி... நான் போய் அவ கூட இருக்கறேன். இன்னும் ஒரு வாரம் நீங்க இங்கேதான்...” என்றவர் சொல்லிச் செல்ல, சர்வஜித் மறுக்க முடியாமல் அமர்ந்து இருந்தான்.

“ம்மா... என்னால் யார்கிட்டேயும் கேட்டுகிட்டு, கெஞ்சிகிட்டு எல்லாம் இருக்க முடியாது” ஒரு மாதிரி இறுக்கமாக பதில் கொடுத்தான்.

“சரி செய்யாதே... எடுத்துக்கோ... பறிச்சுக்கோ... அது உனக்கு வரும்தானே” என்றவர் சென்றுவிட, ‘நல்ல குடும்பம்டா...’ என ஹரீஷ் எண்ணிக் கொண்டான். தாய் சொன்னதை தீவிரமாக சிந்திக்கத் துவங்கினான் சர்வஜித்.

விசாலாட்சி அறைக்குச் செல்ல, பிரபா தன் வேலையைப் பார்க்கப் போனாள். படுக்கைக்கு அருகில் ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்து கொண்டார். அடுத்த சில பல நிமிடங்களில் கண் விழித்து எழுந்தவள் கண்டது அவரைத்தான்.

“நான்... நீங்க யார்? நான் எங்கே இருக்கேன்?” வைஷாலி மலங்க விழித்தவாறு கேட்டாள்.

“நான் விசாலாட்சி, சர்வாவோட அம்மா. நாம இப்போ பாண்டிச்சேரியில் இருக்கறோம்” அவர் சொல்ல, அவர் சொன்னதை கிரகிக்கவே அவளுக்கு சில பல நிமிடங்கள் தேவைப்பட்டது.

பகை முடிப்பான்.....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
பைரவனுக்கும் சர்வாக்கும் என்ன சம்பந்தம்?
 
  • Like
Reactions: Infaa