• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-11

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை - 11


கடந்த காலம்…

தோட்டத்தில் சுஜாதா, தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருக்க…


பெரியவர்களோ, பரபரப்புடன் இருந்தனர். சுஜாதா பெரிய பெண்ணாகிருந்தாள்.


என்ன நடக்கிறது என்பது சத்யபிரகாஷிற்கு புரிந்து தான் இருந்தது‌‌.


இவனுடைய பார்வை, சுஜாதாவையே வட்டமிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது அம்மா, " தம்பி இங்க நிக்காதப்பா. உள்ள போ." என்றுக் கூற.


அப்போது தான் சத்யபிரகாஷ் அங்கே இருப்பதை பார்த்த சுஜாதாவின் அம்மா, " சத்யா… கடைக்குப் போய் மாமாவை வர சொல்றீயா?" என்று படபடப்புடன் கூற.


" சரி அத்தை. " என்ற சத்யபிரகாஷ் மீண்டும் ஒரு முறை சுஜாதாவை பார்த்து விட்டுச் சென்றான்.


அவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க, அதை தனக்குள் மறைத்தவன், தன் மாமனைத் தேடி சென்றான்.


அதற்குப்பிறகு சுஜாதாவின் தந்தை வீட்டிற்கு வரவும், ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றது.


முதல் தண்ணீர் ஊற்றுவதற்கு, சொந்த பந்தம் எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று ஆளாளுக்கு திட்டம் போட்டனர்.


பயத்திலிருந்த சுஜாதாவோ மேலும் அரண்டாள்.


அவளது பயமெல்லாம் அன்று ஒரு நாள் மட்டுமே இருந்தது.


அதற்கு அடுத்த நாளிலிருந்து, வீட்டில் உள்ளவர்கள் அவளை கவனித்த கவனிப்பில் உற்சாகமானாள்.


தினமும் ஒவ்வொரு உறவினரும், அவர்கள் வீட்டில் பலகாரம் செய்து, அதை எடுத்து வந்து சுஜாதாவிற்கு கொடுத்து விட்டு, கதை பேச…


அவளுக்கோ பலகாரத்தை சாப்பிட்டுக் கொண்டே கதை பேசுவது நல்ல பொழுது போக்காக இருந்தது.


அதுவுமில்லாமல் தினமும் புது ஆடைகளும், அதுவும் அவள் நீண்ட நாளாக ஆசைப் பட்டுக் கொண்டிருந்த பட்டு பாவாடை தாவணி போட்டு விட, அவளுக்கு வேற என்ன வேண்டும்.

பூ வைத்து அலங்காரம் செய்ய, பேரழகியாக ஜொலித்தாள்.


அவளை தனியாக ஒரு அறையில் உட்கார வைத்து இருந்தனர்.


அவள் இருக்கும் இடத்திற்கு, வேளா வேலைக்கு உணவு, பலகாரம் எல்லாம் வரவும், அவளுக்கு உற்சாகம் பொங்கியது.


அவளது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.


" அடியே சுஜாதா… மெதுவாப் பேசு… கத்தாதே." என அவரது அம்மா கூறுவதை, அவள் கேட்பதாகவே இல்லை.


கலகலவென அவள் இருக்கும் இடத்தையே உற்சாகமாக மாற்றிக் கொண்டிருக்க… மதியரசியோ, இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாள்.


"நல்ல வேளை. உன்னை இங்கேயே கட்டுறோம். மதியை மாதிரி உனக்கு வெளிலப் பார்த்திருந்தா, அவ்வளவு தான்… போற இடத்துல எங்களுக்கு கெட்டப் பேரு தான் வாங்கித் தந்துருப்ப." என்று சுஜாதாவின் அன்னை கூற.


" என்ன அண்ணி? இப்படி சொல்றீங்க. சுஜாதா மாதிரி அறிவான, சூட்டிகையான பிள்ளை கிடைக்க, என் தங்கச்சி கொடுத்துல்ல வச்சிருக்கணும்." என்றார் சத்யபிரகாஷின் ஒன்று விட்ட பெரியம்மா. மதியரசியின் வருங்கால மாமியார்.


" ம்கூம் நீங்க தான் மெச்சுக்கணும்." என்றவர் அடுத்த வேலையை கவனிக்க சென்று விட்டார்.


அப்போது சுஜாதாவின் அம்மாவோ, மதியரசியின் அம்மாவோ அவரது பேச்சை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.


மதியரசியின் அந்த அமைதியான சுபாவத்தை, காரணமாக சொல்லி, தன் மகன் செய்த தவறை மறைக்கப் போகிறார் அந்த ஒன்று விட்ட அத்தை‌.


கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் நன்றாக ஓய்வில் இருந்த சுஜாதா ஸ்கூலுக்கு செல்வதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போடப்பட்டது.


அதாவது சத்தமாக பேசக்கூடாது, நிமிர்ந்து வேடிக்கை பார்க்கக்கூடாது, ஸ்கூலுக்கு போனமா நேரா வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கணும் என்று அந்த வீட்டு பெரியவர்கள் கூற, " சரி… " என்று தலையாட்டியவளோ, அதைக் கொஞ்சம் கூட கடைப்பிடிக்கவில்லை.

தலையை மட்டும் நன்றாக ஆட்டினாள். இல்லையென்றால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களே…


மதியரசி பெரிய மனுஷி ஆனதும், பள்ளிக்கு போகக் கூடாது என்று சொல்லியதை தான் அவள் அறிவாளே…

அவளுக்கும் இதே அறிவுரை கூற… இன்று வரை கடுமையாக பின்பற்றுகிறாள்.


மதியரசிக்கு பார்த்திருக்கும் பையன் பிரபு. பிரபு வீட்டிற்கு வந்தால் கூட அங்கு இருக்கக் கூடாது. அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல வேண்டும்‌. மறந்து அங்கே இருந்து விட்டால் அவ்வளவு தான்.

அவளுக்கு அவ்வளவு திட்டு கிடைக்கும். அதனாலேயே மதியரசி, பிரபு வந்தாலே அந்த இடத்தில் இருக்க மாட்டாள்.


ஆனால் ஸ்கூலுக்கு போகும் போது மதியரசியைப் பார்க்க எப்படியாவது வந்து விடுவான்.


ஸ்கூலுக்கு எப்போதும், சுஜாதா, மதியரசி, அவளுடைய தோழி வாணி, அமுதா, நால்வரும் ஒன்றாக தான் செல்வார்கள். கூடத் துணைக்கு மனோகரும், சத்யபிரகாஷும் அவனது நண்பன் கோபியும் உடன் வருவார்கள்

பெண்கள் முன்னே செல்ல… ஆண்கள் பின்னே வருவார்கள்.


அவ்வப்போது, பிரபுவும் அவர்களுடன் சேர்ந்துக் கொள்வான். மதியரசியிடம் பேச முயல்வான். மதியரசியோ, பயந்து நடுங்குவாள்.


தங்களுடன் பேச வரும் பிரபுவுடன் மற்ற பெண்கள் நன்கு வாயடிப்பார்கள்.


இப்படியே போயிருந்தால் வாழ்க்கையில் அப்புறம் என்ன சுவாரசியம் இருக்கும்.


அந்த அண்ணாமலையாரின் திருவிளையாடல் ஆரம்பமானது.

ஆண்கள் பள்ளியில் இறுதி வகுப்பில் இருந்தனர். மனோகருக்கு சென்னையில் மேற்படிப்பு படிக்க ஆசை.

சத்யபிரகாஷிற்கோ, பேருக்கு ஒரு டிகிரி படித்து விட்டு, கடையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

ஆனால் விதியானது விளையாட… இருவருடைய எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல், வேற, வேற பாதையை நோக்கி சென்றனர்.


அன்று தான் டுவெல்த் ரிசல்ட். மனோகரும், சத்யபிரகாஷும் ஆவரேஜ்ஜாக மார்க் வாங்கி இருக்க…

பிரபுவோ பெயில் ஆகிவிட்டான்.

அதற்காக அவனும் பெரிதாக கவலைப்படவில்லை, அவரது அம்மாவும் கவலைப்படவில்லை.

"தம்பி ராசா. பெயிலா போயிட்டீயேனு கவலைப்பட்டு, தப்பான முடிவெதுவும் எடுத்துடாதப்பா. நமக்கு இல்லாத சொத்துப்பத்தா‍… நீ படிச்சு சம்பாதிச்சு தான் இங்கே நிறையணும்னு இல்லை.

நாளையிலிருந்து நம்ம கடைய வந்துப் பார்த்துக்க…" என்றார் அவரது தந்தை.


" சரி பா." என்று தலையாட்டினான் பிரபு.


" ஏங்க… கடையில தான் தம்பி இருக்கப் போறான்னு முடிவாகிடுச்சுனா, அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்." என்றார் பிரபுவின் அம்மா.


" இப்பவே என்ன மா. கொஞ்ச நாள் போகட்டும். கடையிலிருந்து எல்லாம் கத்துக்குறேன். அப்புறமா பார்க்கலாம்." என்று பிரபு தடுமாற.


" இது என்ன பெரிய விஷயமா? கல்யாணம் பண்ணிட்டு கத்துக்க." என்றவர் தனது மனைவியிடம் திரும்பி," வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் பத்தி பேச வரோம்னு உங்க அண்ணன் வீட்ல சொல்லிடு. "


" சரிங்க…" என்றவர், தனது அண்ணன் வீட்டை நோக்கி சென்றார்.

*******************


" என்ன அண்ணி… இப்படி திடுதிடுப்னு சொல்றீங்க." என்றார் மதியரசியின் அன்னை.


"சின்ன வயசுல பார்த்து வச்சதுதானே. என்னவோ புதுசா சொல்றது போல மறுகுற." என்றார் பிரபுவின் அன்னை.


" அதுக்கு இல்லமா… படிச்சு கொஞ்ச நாள் வெளியில வேலைக்கு போனா அனுபவம் கிடைக்கும்ல…" என்றார் மதியரசியின் தந்தை.


" அண்ணா… எவன் கிட்டயோ கைகட்டி வேலை பார்க்கறதுக்கு, நம்ம கடையிலே கத்துக்கலாம்ணா… நீங்க எல்லாம் அப்படித் தானே கத்துக்கிட்டீங்க. அப்புறம் என்ன… எதுவும் தடை சொல்லாதிங்கண்ணா… வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்கு. அன்னைக்கு நாங்க வர்றோம் மத்ததெல்லாம் அப்போ பேசிக்கலாம்." என்றவர் அங்கிருந்த மதியரசியைப் பார்த்து, " நல்லா சாப்பிட்டு தெம்பா இரு மருமகளே. நான் வாரேன்." என்று அங்கிருந்து சென்று விட்டார்.


எல்லோரும் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து ஒவ்வொரு மனநிலையில் இருக்க.


நடந்ததோ வேறு… புதன்கிழமை பிரபுவும், வாணியும் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்கள் காதல் விவரம் எதுவும் அறியாத அமுதாவை, " கோவிலுக்கு போகலாம் வாடி…" என்று வாணி அழைக்க.


" என்ன டி அதிசயமா கோவிலுக்கு கூப்பிடுற… நானும், மதியும் கோவிலுக்கு கூப்பிட்டா கூட வர மாட்ட…" வெள்ளந்தியாக வினவினாள் அமுதா.


" அது அமுதா… ஒரு வேண்டுதல். இப்போ நீ வர்றியா? இல்லையா?" என்று படபடப்புடன் வினவ.


" வரேன் டி வாணி… அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனாகுற. போறப்ப அப்படியே மதியையும் கூப்பிட்டு போவோம். விட்டுட்டு போனது தெரிஞ்சா வருத்தப்படுவா."


" அவங்க வீட்டுக்கு போயிட்டு போனா, லேட்டாயிடும் டி." என்ற வாணியை ஆராய்ச்சியாக பார்த்தாள் அமுதா‌.

பட்டுப்பாவாடை தாவணியில் அழகாக தயாராகி இருந்தாள்.


" இன்னைக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லை. என்னடி பட்டு பாவாடை தாவணியில் இருக்க?" என்று அமுதா வினவ.


அவளைப் பார்த்து முறைத்த வாணி, " ஆசையா இருந்துச்சு டி. அதான் அம்மா கிட்ட இன்னிக்கு ஃப்ரெண்டு வீட்டுல விசேஷம்னு சொல்லியிருக்கேன். நீயும் அதையே சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பி வா." என்று கத்த.


" தையல் க்ளாஸ் போறதுலேருந்து நீ ஆளே சரி இல்லை. எதுக்கெடுத்தாலும் பதட்டமாவே இருக்க. கொஞ்சம் பொறுமையா இரு. ஐந்து நிமிஷத்துல ரெடியாயிட்டு வரேன். அதுக்குள்ள மறுபடியும் கத்தாத." என்று கூறிய அமுதா அவளது வீட்டிற்குச் சென்றாள்.

இருவரது வீடும் அருகருகே இருந்தது.

உள்ளே செல்லும் அமுதாவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் வாணி.'கெட்டிக்காரி தான் இந்த அமுதா. எப்படி சட்டுனு கண்டுப்பிடிச்சிட்டா.' என்று மனதிற்குள் நினைத்தாள் வாணி.


பத்தாவது பரீட்சை எழுதி விட்டு அமுதாவும் மதியரசியும் வீட்டில் இருக்க‌... வாணியோ, தையல் கத்துக் கொள்வதற்காக, தினமும் இரண்டு மணி நேரம் வெளியே சென்று வருகிறாள்.

அவள் மட்டும் தனது தோழிகளை விட்டு முதல் தடவையாக தனியாக செல்ல…

அதுவே பிரபுவுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.


இந்த ஒரு மாத காலத்தில் பேசிப் பழகி, ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்று புரிந்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது.


இது ஏதுமறியாத அமுதா, சொன்ன மாதிரியே ஐந்து நிமிடத்தில் கிளம்பி வந்தாள்.


பதற்றமாகவே இருந்த தனது தோழியையே கவனித்துக் கொண்டிருந்த அமுதா, அப்போது தான் அண்ணாமலையார் கோவிலுக்குச் செல்லாமல், வேறு வழியில் செல்வதை கவனித்தாள்‌.


" ஹேய் வாணி… வழி மாறி வந்துட்ட." என.


அவள் கூறியதைக் கேட்ட வாணி திடுக்கிட்டு நின்றவள், " என்னடி சொல்ற?" என குரலே எழுப்பாமல் மெதுவாக வினவினாள்.


" இது கோவிலுக்கு போற வழியில்லையே." என்றாள் அமுதா.


" அப்பாடா…" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட வாணி, " பெரிய கோவிலுக்கு போகலைடி. துர்க்கை அம்மன் கோவிலுக்கு தான் போறோம்." என்றாள்.


" அங்க தான் போறோம்னா மதியையும் அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கலாம் டி. அவளுக்கு அந்த கோவில் எவ்வளவு பிடிக்கும் தெரியும் தானே… சின்ன சின்ன பாறை, அதுல தண்ணி ஓடுறதுன்னு, அதெல்லாம் அவளுக்கு பார்க்க பிடிக்கும் தானே. " என்று அமுதா கூற.


" அடியே கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு வர்றியா? இல்லையா? நானே பயந்துட்டு வரேன்." என்று முன்பாதியை சத்தமாகவும், பின்பாதியை தனக்குள்ளும் முனங்கிக் கொண்டே வந்தாள் வாணி.


வாணியின் கோபத்தைப் பார்த்த அமுதா, பிறகு கோவில் வரும்வரை வாயைத் திறக்கவில்லை.


கோவிலுக்கு வந்த பின்னோ, அங்கே நடக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து மயக்கம் வராத குறை தான்.


" ஹேய் வாணி… என்னடி நடக்குது இங்கே." என நாக்கு தந்தியடிக்க, வினவினாள் அமுதா.


அவளோ, அமுதாவைக் கண்டு கொள்ளாமல் வேஷ்டி சட்டையில் வந்த பிரபுவையே மையலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரபுவும், வாணியைப் பார்த்ததும், கண் சிமிட்டி சிரித்தவன், " வாங்க மிஸஸ் பிரபு."என ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.

" நான் இன்னும் மிஸ் வாணி தான்." என்று வெட்கத்துடன் ஒரப் பார்வை பார்த்துக் கொண்டே பதிலளித்தாள் வாணி.


" ஓஹோ… அதுக்கென்ன பத்தே நிமிஷம் தான். ஐயர் வந்துருவார். அப்புறம் நீ இந்த ஐயாவோட ஓன் ப்ராப்பர்டி." என அவளிடம் வழிந்தவன், அப்போது தான், இவர்களை கண்கள் விரிய அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அமுதாவையே கவனித்தான்.


" வா அமுதா." என ஒன்றும் நடவாவது போல அவளை அழைத்தான்.

அமுதாவிற்கோ அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.


அமுதாவின் நிலையைப் பார்த்து விட்டு, " நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. ஐயர் வரவும் கூப்பிடுறேன்." என்று அங்கிருந்து நகர்ந்தான் பிரபு.


" என்ன அமுதா? ஒன்னும் சொல்லமாட்டேங்குற?"


" என்னடி சொல்ல சொல்லுற? படிக்குற வயசுல இதெல்லாம் தப்பு டி. அதுவும் இல்லாமல் நம்ம ஃப்ரெண்டுக்கு பார்த்துக்குற பையன் டி. இது துரோகம்." என அமுதா கூற.


" ப்ச் அவருக்கு அந்த உம்முனாமூஞ்சிய பிடிக்கலையாம். என்ன தான் ரொம்ப பிடிச்சிருக்காம்." என்று பெருமையாக அறிவித்தாள் வாணி.


" வாணி சொன்னா கேளு… படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா?" என்று நல்லத் தோழியாக அந்த திருட்டு கல்யாணத்தை தடுக்கவேப் பார்த்தாள் அமுதா.


" நீ மட்டும் லவ் பண்ணுவ… இதே நாங்க பண்ணா தப்பா." என்று அவளது வாயை அடைக்கப் பார்த்தாள் வாணி.


" யாருடி லவ் பண்ணா?" அயர்ந்து போய் அமுதா, தன் தோழியைப் பார்க்க.


" நடிக்காதடி. நீயும், கோபியும் கண்ணாலே பேசிக்கிறது எல்லாம் எங்களுக்குத் தெரியும்." என.


" கோபி என்னோட மாமா பையன். இப்போ எங்க ரெண்டு வீட்டுக்கு நடுவுல பிரச்சனை. அதான் அவர் எங்க வீட்டுக்கு வரதில்லை. நானும் அவர் கிட்ட பேச மாட்டேன். ஆனால் அவர் பார்க்குறதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது." என்று இறுகிப் போன குரலில் கூறினாள் அமுதா.


"..." வாணியோ ஒன்றும் கூறாமல் பிடிவாதமாக நிற்க.


" இப்போ கூட ஒன்னும் ஆகலை டி. வா வந்த மாதிரியே வீட்டிற்கு போகலாம்." என்று அமுதா தான் கெஞ்சினாள்.

அவளது கெஞ்சல் எதையும் கேட்கும் நிலையில் வாணி இல்லை. அவள் தான் காதல் எனும் மாயலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டல்லவா இருந்தாள்.

அவள் கையைப் பிடித்து, அமுதா இழுக்கும் போது, அங்கே ஒரு பார்வை வைத்து இருந்த, பிரபு அங்கு ஆஜரானான்.


" எங்க கிளம்புறீங்க?" என்று வினவ.


" எங்க ஐயரைக் காணும். நாமளும் அங்கே போய் பார்க்கலாம்னு ஒரே தொந்தரவு." என்று சமாளித்தாள் வாணி.


பிரபு நம்பாமல் பார்க்க… அதற்குள் அவனது தோழன்," பிரபு… ஐயர் வந்தாச்சு வாங்க." என்று அழைத்தான்.



அவன் முன்னே நடக்க… இப்போது வாணி அமுதாவின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.


" நான் வரலை. வீட்டுக்கு போறேன். எங்க வீட்டுக்கு தெரிஞ்சா, அப்பா தொலைச்சுக் கட்டிடுவாங்க." என்று அமுதா அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

விதி விட்டால் தானே… அவளது தோழியின் மூலமே விளையாடியது.


" ஹேய் அமுதா. இவ்வளவு நேரம் இருந்த. இன்னும் கொஞ்சம் நேரம் இருடி. தாலிக் கட்டவும் போயிடலாம். எனக்குன்னு வேற யாரும் இல்லை."என்று கண் கலங்க.

வேறு வழியில்லாமல் தலையாட்டி, தன் தலைவிதியை தானே எழுதிக்கொண்டாள்.


கல்யாணம் முடிந்ததும் அங்கிருந்து கிளப்பியவள் வீட்டிற்கு சென்றாள்.


அங்கோ அவள் பேயறைந்தது மாதிரி வந்ததைப் பார்த்த அவரது அம்மா, " எங்கடி போயிட்டு வர… இப்படி மூஞ்செல்லாம் வாடி போயிருக்கு.


ஆமாம் வாணி எங்க?" என்று வினவ.


" அவ கோவில்ல இருக்கா… எனக்கு தலைவலிக்குது, அதான் நான் வந்துட்டேன்." என்று பதட்டத்தில் வாயில் வந்ததை உளற.


" விஷேஷத்துக்கு தானே போறேன்னு சொன்னீங்க…" என்று அவளது அம்மா விடாமல் விசாரிக்க.


" அது பங்ஷன் முடிஞ்சதும் கோவிலுக்கு போனோம் மா. இப்போ கொஞ்ச நேரம் படுத்துக்குறேன்." என்றவள் அறைக்குள் செல்ல முயன்றாள். ஆனால்???


சற்று நேரத்திலே பிரபுவின் அம்மா அங்கு வந்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.


காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போதே பிரபு, லெட்டர் எழுதி வைத்து விட்டு தான் வந்திருந்தான். மதியரசியின் அமைதி, தனக்கு செட்டாகாது‌‌. அவளது ஃப்ரெண்டு வாணியை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. கல்யாணம் பண்ணிக்க போகிறோம். எங்களைத் தேடாதீங்க‌ என்று எழுதி வைத்திருந்தான்.

அதைப் படித்த அவரது அம்மா, "எடுத்தோம், கவிழ்த்தோம்." என நேராக அவரது அண்ணா வீட்டிற்கு சென்று, " ஐயோ! அண்ணா… மோசம் போயிட்டோம்." என்று லபோ திபோவென கத்த…


" என்னாச்சு?" என்று எல்லோரும் பதறினர்.


" அது வந்து… " என்று தயங்கியவர் அந்த கடிதத்தை நீட்ட.


அதைப் படித்து பார்த்த மதியரசியின் தந்தை, நரம்பு புடைக்க, " புள்ளைய ஒழுங்கா வளர்க்கத் தெரியலை. இப்போ எதுக்கு இங்க வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்க." என்று அவரது கோபத்தை வார்த்தைகளில் காட்ட…


அங்கு பெரிய வார்த்தை போர் நடக்க, அதனால் ஒருத்தியின் உள்ளம் நொந்து போவதை யாரும் அறியவில்லை.


" என்ன அண்ணா… இப்படி பேசுறீங்க. அவ ஃப்ரெண்டுக்கு இருக்க தெரவுசு நம்ம மதிக்கு இருந்துச்சுன்னா, அவன் ஏன் வேற பொண்ணை தேடப் போறான்." என்றார் பிரபுவின் அன்னை.


" என் பொண்ணை கேவலப்படுத்த தான் இப்போ வந்தீயா?" என்று அவரும் எகிற.

அப்போது தான் பிரபுவின் அம்மாவிற்கு தான் எதற்கு வந்தோம் என்பதே புரிய, " எனக்கு அந்த புள்ளை வாணி வீடு எங்க இருக்குன்னு உங்க மகளை சொல்ல சொல்லுங்க."என.


மதியரசியோ மரத்தக் குரலில் வீடு எங்க இருக்கிறது என்று சொல்லியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.


அவளைத் தனியே விடாமல் சுஜாதா கூடவே இருந்தாள்.


வீடு எங்க இருக்கிறது என்று கேட்ட பிரபுவின் குடும்பத்தார் நேராக அங்கே செல்ல‌…


அமுதாவின் நேரம் அப்போது தான், அவளது அம்மா வாணியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.


அதை அறையும், குறையுமாக காதில் வாங்கிய பிரபுவின் அம்மா போட்ட சத்தத்தில் தெருவே கூடி விட்டது.


" அடியே நீ தான் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போனீயா? ஒழுங்கா சொல்லு. எங்கே அந்த ஓடுகாலி." என தப்பு செய்த தன் மகனை விட்டுட்டு, அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி வீதியில் பேச.


இப்போது வாணியின் அம்மா அங்கே வந்து விட்டார்.


" எதுவும் தெரியாமல் என் பொண்ணை பேசுற வேலை வச்சுக்காதீங்க." என்று எகிறியவர், அமுதாவிடம் திரும்பி, " எங்க மா வாணி? உன்னோட தானே காலைல ஏதோ விஷேஷம்னு கிளம்பினா… இப்போ நீ மட்டும் வந்திருக்க." என்று அவரும் வினவ.


" எனக்கு எதுவும் தெரியாது." என்றவள் நடுங்கிக் கொண்டே நடந்ததைக் கூற.

அதை நம்பத் தான் யாருமில்லை.


"உனக்குத் தெரியாமல் தான் காலைல பொய் சொல்லிட்டு கோவிலுக்கு போனீயா? என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா சும்மா விட மாட்டேன். " என்று விட்டு அந்த கோவிலைத் தேடி சென்றனர்.


அக்கம் பக்கம் உள்ளவர்களெல்லாம் அவளைப் பார்த்து ஏதேதோ தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க.


அவர்களது பார்வையில் கூனிக் குறுகிப் போய் நின்றாள் அமுதா.

வீட்டிற்குள் நுழைந்த அவளை, என்ன ஏதென்றுக் கூட கேட்காமல் அவரது அம்மா, அவளைப் போட்டு அடிக்க…

இன்று காலையில் நடந்த எதுவும் அவளது தவறல்ல. ஆனால் பழிப்பாவம் மட்டும் அவளைச் சேர…

நேராக தோட்டத்திற்கு சென்றவள் கிணற்றில் விழுந்து தனது உயிரை விட்டிருந்தாள்.


தனக்குப் பார்த்த மாப்பிள்ளை வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டதை அறிந்த மதியரசியோ ரூமுக்குள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, அவளது உயிர் தோழி அமுதா இறந்த தகவல் வந்தது.

மதியரசியும், சுஜாதாவும் அங்கே போகணும்னு ஒத்த காலில் நிற்க.


சத்யபிரகாஷின் அன்னை தான் அவர்களை தனியே அனுப்பாமல் அவரும் கூட வந்தார்.


அமுதாவின் அம்மாவோ, " ஐயோ! நானே என் பொண்ணை கொன்னுட்டேன்."என்று தலைமாட்டு பக்கம் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க…


அவளது காலடியில் ஒரு ஜீவன் துடித்தது.


அது தான் கோபி. கோபியைப் பார்த்த சுஜாதாவிற்கு பாவமாக இருந்தது. அவளுக்கும் அவர்களது பேசாத காதல் தெரியும்.


கோபியை சமாதானம் செய்வதற்காக அவனது அருகில் சென்ற சுஜாதா, " கோபி…" என அழைக்க.


" ஹேய்… எல்லாம் உங்க குடும்பத்தால் தான். உங்களை நான் சும்மா விடமாட்டேன்." என்று கோபி கொலைவெறியுடன் கூறினான்.


அமுதா இறந்ததைக் கேள்விப்பட்டு அங்கு வந்திருந்த சத்யபிரகாஷும், மனோகரும் அவளை இழுத்துக் கொண்டு வந்தனர்.


அவனது கண்களில் தெரிந்த ரௌத்திரம், சுஜாதாவை நடுங்கச் செய்தது.
 
  • Like
Reactions: Lakshmi murugan