• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-12

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
ஓலை - 12

‌கோபியின் பார்வையில் சுஜாதா நடுங்கியதெல்லாம் சில நிமிடங்களே…
பிறகு அவளது கவனம், ஒன்றும் பேசாமல் இறுகிப் போய் இருக்கும் மதியரசியிடம் திரும்பியது.

" மதி…" என அழைத்தாள்.
அவளோ அசைந்தாளில்லை.
மறுபடியும் அவளது கவனத்தை ஈர்க்க, முயன்றாள் சுஜாதா.

ஆனால் மதியரசி மௌனமாகவே இருந்தாள்.

" ஹேய் சுஜாதா. இப்போ ஒழுங்கு மரியாதையா வாயை மூடிட்டு வர்றியா? இல்லையா?" என்று சுஜாதாவின் அம்மா அதட்ட.

அதற்குப் பிறகு சுஜாதாவும் கப்சிப்.
மனோகருக்கும், சத்யபிரகாஷிற்கும் கோபியை நினைத்து மனம் கணத்தது.
எல்லோரும் மௌனமாகவே வீட்டிற்கு வந்தனர்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் பிரபு செய்த துரோகத்தை நினைத்து அழுதுக் கொண்டிருந்தனர் .

உள்ள வந்த சுஜாதாவின் அம்மாவோ, " உங்களை படிக்க ஸ்கூலுக்கு அனுப்புனா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ஒருத்தி என்னென்னா ஓடிப்போயிட்டா? இன்னொருத்தியோ லவ் பண்ணிட்டு, இப்போ செத்தும் போயிட்டா? இதுக்கு தான் வயசுக்கு வந்ததும் படிப்பை நிப்பாட்டிடலாம்னுப் பார்த்தா, அழுது, அழிச்சாட்டியம் பண்ணி, நினைச்சதை சாதிச்சிட்டீங்க… இனி எதுவும் நீங்க நினைக்கிறது நடக்காது. கூடிய சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணப் போறோம். அதுவரைக்கும் வெளியே போனீங்கன்னா காலை உடைச்சுடுவோம்." என்று மதியரசியையும், சுஜாதாவையும் பார்த்து சொல்ல…

மதியரசியோ ஒரு வார்த்தையும் கூறாமல் இறுகிப் போயிருந்தாள்…

சுஜாதாவோ படிப்பின் மீது ஏகப்பட்ட கனவுகளை வளர்ந்திருக்க… ' எங்கே தனது படிப்பை தடைச் செய்து விடுவார்களோ.' என்று நினைத்தவள் செறுமி செறுமி அழுதாள்.

சத்யபிரகாஷ் வந்து தலையிட்டான். " அத்தை. இப்போ என்ன அவசரம். கொஞ்ச நாள் ஆறப் போடுங்க." என்றுக் கூற.

" அதெல்லாம் சரி வராது. மதிக்கு உடனே மாப்பிள்ளை பார்க்கணும்." என்று இப்போது உள் நுழைந்தார் மதியரசியின் தந்தை.

" அது சித்தப்பா…" என்று சத்யபிரகாஷ் ஏதோ கூற வர…

" தம்பி… பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது எதுக்கு நீ நுழையுற? " என்று சத்யபிரகாஷின் தந்தையோ மகனைஅதட்டி விட்டு, மனோகரைப் பார்த்து, " மனோ இங்கே வா…" என.

ஒன்றும் கூறாமல் மனோகர் அவரைப் பார்த்தான்.

" உனக்கும், நம்ம மதியரசிக்கும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்." என்றவர், அவனிடம் அனுமதியெல்லாம் கேட்கவில்லை. சும்மா தகவல் மட்டும் தெரிவிக்க.

தன்னுடைய எதிர்கால கனவுகள் கண் முன்னே வந்து செல்ல, வாயைத் திறந்து பேசினான்.

" மாமா… நான் காலேஜ் படிக்கணும். இப்போ என்ன அவசரம். படிச்சு முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று மதியரசியை வேண்டாம் என்று கூறாமல், இப்போது வேண்டாம் என்று தள்ளிப் போட மட்டுமே பார்த்தான்.

மதியரசியின் தந்தையோ, " ஏற்கனவே மதியைப் பார்த்த பையனுக்கு, அவளைப் புடிக்கலையாம், அதான் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று பேச்சு ஓடுது. இதுல கல்யாணம் பண்ணாமல் வீட்டோட வச்சிருந்தா‍, அவ்வளவு தான். உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லிடு. வெளிலப் பார்க்கலாம்." என்று முடித்தவரின் குரலிலோ, எள்ளளவு கூட மகளின் நல்வாழ்க்கை பற்றிய நம்பிக்கையில்லாமல் குரல் நடுங்கியது.

" மாமா…" என்ற மனோகரோ, அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.

"என்ன மனோ? அப்போ கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாமா?" என்று சத்யபிரகாஷின் தந்தை வினவ.
மௌனமாக தலையாட்டினான் மனோகர்.

சுஜாதாவின் அம்மாவோ,
" சுஜா கல்யாணத்தையும் சேர்த்து ஏற்பாடு பண்ணுங்க." என.

" இரண்டு கல்யாணத்தையும் சேர்த்து பண்ணா ராசி கிடையாது. முதல்ல மதி கல்யாணம் பண்ணுவோம். அடுத்த முகூர்த்தத்துல சுஜாவுக்கு பண்ணுவோம்." என்றார் சத்யபிரகாஷின் அன்னை.

" மா… இப்போ என்ன மா ஆச்சு. இவ்வளவு அவசரப்படுறீங்க? எனக்கு இன்னும் பதினெட்டுக் கூட வரலை." என்றான் சத்யபிரகாஷ்.

" அதெல்லாம் நம்மல்ல சீக்கிரம் பண்றது தான் பழக்கம். உங்க அப்பாவுக்கு பதினைந்து வயசுல, என்ன கட்டி வைக்கலையா? நம்ம வீட்ல எல்லாருக்குமே சீக்கிரமா தான் பண்ணாங்க.
நீயும், மனோவும் படிக்கணும் சொன்னதால் தான் சரி ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் பார்த்தோம். மனோவுக்கு இப்ப பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பது ஆரம்பிக்குது. உனக்கு இன்னும் இரண்டு மாசத்துல பத்தொன்பது அப்புறம் என்ன? " என்று கணக்கு சொன்னார் அவரது அம்மா.

" அம்மா எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சென்னையில் படிக்கலாம்னு இருக்கேன். நான் படிப்பு முடிச்சிட்டு தான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்று உறுதியாகக் கூற.

" சத்யா… கல்யாணம் பண்ணிட்டு நீ போய் படி." என்று சுஜாதாவின் அம்மா கூற.

" அத்தை… என்ன நம்ப மாட்டீயா… " என்று சத்யபிரகாஷ் கேட்க…

" இல்லை…" என்று சொல்ல முடியாமல் அவர் தடுமாறினார்.

சுஜாதாவோ, ' அம்மா என்ன சொல்லப் போகிறாரோ.' என்று கண் சிமிட்டாமல் அவரையே பார்த்தாள்.

சத்யப்ரகாஷின் பார்வையோ, சுஜாதாவையே வருடிச் சென்றது.

அவன் இவ்வளவு போராடுவதே சுஜாதாவிற்காக அல்லவா?
சத்யபிரகாஷ் நினைத்தது போலவே, அவனின் அத்தை, " உன் மேல நம்பிக்கை இருக்கு. அவ பன்னென்டாவது முடிச்சதும் கல்யாணம் தான். அப்ப எதுவும் சாக்கு சொல்லாதே." என்றார்.

" அப்பாடா…" என நிம்மதி பெருமூச்சு விட்டாள் சுஜாதா.

அவளுக்கு அப்போது தெரியவில்லை, இனி அவளது வாழ்வில் நிம்மதி என்பதே கிடையாது என்று…

அதற்கு பிறகு பெரியவர்கள் எல்லோரும் மதியரசி, மனோகரின் திருமண ஏற்பாடைப் பற்றி பேசி முடிவெடுக்க…
கல்யாண மாப்பிள்ளையும், பொண்ணும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ள தான் ஆள் இல்லை.
மனோகருக்கு நன்கு புரிந்து விட்டது, ' இனி தன்னுடைய கனவு அவ்வளவு தான். கல்யாணம் ஆகி விட்டால், பொறுப்பாக இருக்க, கடைக்குத் தான் செல்ல வேண்டும்.' என்று எண்ணியவன் அவனது அறைக்கு சென்று விட்டான்.

அந்த சுதந்திரம் கூட மதியரசிக்கு கிடையாது. ' இப்போது இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் கூட, ஏன் போற? எங்க போற?' என்று யாராவது வந்து தொணத்தொணப்பார்கள்.
அதற்கு பயந்தே எங்கும் அசையாமல் மரம் போல நின்றிருந்தாள்.

திருமண ஏற்பாட்டின் முதல் திட்டமாக, " குலதெய்வக் கோவிலுக்குப் போய்ட்டு வந்து மத்த ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம். அப்போது தான் மளமளவென வேலை நடக்கும். " என்று மனோகரின் அன்னை முடிவெடுத்தார்.
சுஜாதாவிற்கோ ஒரே சந்தோஷம். குல தெய்வக்கோவிலுக்கு போக போவதாக கூறவும்…

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிலுக்கு எப்போதும் ட்ரெயினில் தான் செல்வார்கள்.

என்றைக்கு பெரியவர்கள் ஊருக்கு செல்லலாம் என்று திட்டம் போடுகிறார்களோ, அதற்கு பிறகு இளையவர்கள் தங்களுக்குள் திட்டம் போட்டுக் கொண்டு, தினமும் தரும்
பேட்டா காசை சேர்த்து வைத்து, ட்ரெயினில் சாப்பிடுவதற்காக ஸ்நாக்ஸ் வாங்குவார்கள்.

அந்த ஒரு வார காலமும், யாருக்கு முதலில் ஜன்னலோர சீட் என்று சண்டை நடக்கும்.

அதையெல்லாம் நினைத்துப் பார்த்த சுஜாதா, இப்பவே நமக்கு தான் முதலில் ஜன்னலோர சீட் என்று சொல்லிடணும்னு மதியரசியைப் பார்க்க…

அவளோ அங்கு நடக்கும் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை.
சுஜாதா, " மதி… " என்று அழைக்க.
என்ன என்பது போல், அவளைப் பார்த்தாள் மதியரசி.

" எனக்கு தான் ஜன்னல் சீட்." என்ற சுஜாதாவின் மறுமொழியில் அவளை, லூசா என்பது போல் சத்ய பிரகாஷ் பார்த்தான்.

மதியரசியோ, அவளைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு தன் போக்கில் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். சத்யபிரகாஷிற்கு தனது தங்கையை நினைத்து சற்று கவலை தான். ஆனால் மனோகர் நன்றாக பார்த்துக் கொள்வான் என்பதால், கொஞ்சம் மனது நிம்மதி அடைந்தது.

ஏற்கனவே மனோகருக்கு ஜாதகம் பார்த்ததில் திருமணத்தில் குழப்பம் வரும் என்று இருக்க… அதற்காகத் தான் சிறு வயதிலே அவனுக்கு பெண் பார்த்து வைக்கவில்லை. நல்லவேளை இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்தவன், கடவுளுக்கு நன்றி சொன்னான்.

திருமணம் குறித்து எல்லாவற்றையும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, மெல்ல மதியரசி அங்கிருந்து நழுவினாள்.

சுஜாதா மட்டும் தனியாக இருக்க அவள் அருகே சென்ற சத்யபிரகாஷ், அவளது தலையில் ஒரு கொட்டு வைத்து, " லூசா நீ ? என்ன பேசுறதுன்னே உனக்கு தெரியாதா? " என்று திட்ட…

" இப்போ நான் என்ன தப்பா பேசினேன்‌‌ எப்பயும் போல தானே பேசினேன்." என்று சிலிர்த்துக் கொண்டு நின்றாள் சுஜாதா.

" நீ லூசே தான். இப்ப ட்ரெயின்ல ஜன்னலோரம் உட்கார்ந்து போறது தான் ரொம்ப முக்கியம் பாரு . அவளே கவலையா இருக்கா. அவளுக்கு ஆறுதலாக இல்லாமல் நீ பாட்டுக்கும் ஏதாவது உளறிக் கிட்டு இருக்கிற?" என்று சத்யபிரகாஷ் திட்ட…

" இப்போ எதுக்கு மதிக்கு ஆறுதல் சொல்லணும். எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்க கசக்குதா? அவன் எவ்வளவு நல்லவன்னு உங்களுக்கே தெரியுமே… " என்று பதிலுக்கு எகிறினாள் சுஜாதா.

" அப்போ நானும் நல்லவன் தான். அது உனக்கே நல்லா தெரியும். என்ன நமக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ண சொல்லலாமா? உனக்கு பிரச்சனை இல்லையே?" என்று அவளைப் பார்த்து கேலியாக வினவ.

அவனை முறைத்துப் பார்த்தவளோ, அங்கிருந்து நகர்ந்து அவளது அறைக்குச் சென்று விட்டாள்.

சத்யபிரகஷோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.

யாரும் தங்களை கவனிக்கிறார்களோ, என்று ஒரு முறை பார்வையை சுழற்றினான்.
யாரும் அவர்களை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை எனவும், நல்லப் பிள்ளையாக வெளியே சென்று விட்டான்.

ஆனால் அங்கு நடந்ததை இரு விழிகள் பார்த்தது.

அந்த விழிகளுக்கு சொந்தக்காரரான
அவனது அத்தை அதற்குப் பிறகு சுஜாதாவைப் போட்டுப் படுத்தி எடுத்துவிட்டார்.

சத்யபிரகாஷ் ஹாலில் இருக்கும் போது, அவளுக்கு அவர்களது அறை தான் சிறை. அதை விடுத்து வெளியே வரக்கூடாது. சத்யபிரகாஷிடம் கல்யாணம் ஆகும் வரை அநாவசியமாக பேசக் கூடாது. அப்புறம் பள்ளிக்கு செல்வதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் இருக்கும் இடம் தெரியாமல் போய் வர வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்மாடுகள். அதில் கொஞ்சம் மீறினாலும் சுஜாதாவிற்கு திட்டு கிடைக்கும்.

பெரியவர்கள் குறித்தப்படியே, மதியரசிக்கு மனோகருடன் அடுத்து வந்த முதல் முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருந்தது.

சத்யபிரகாஷ் நினைத்த மாதிரியே மனோகர், மதியரசியை நன்றாக பார்த்துக் கொண்டான்.

சத்யபிரகாஷ் தனது படிப்பிற்காக சென்னைக்கு சென்று விட்டான்.

அவன் ஊரிலிருக்கும் நாட்கள், சுஜாதாவிற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ‌அவள் விருப்பம் போல் ஆடிப் பாடிக் கொண்டிருக்கலாம். அதுவே சத்யபிரகாஷ் ஊரிலிருந்து வந்து விட்டால் அவளுக்கு ஆரம்பமாகும் சோதனைக் காலம்.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வர… சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தான் சத்யபிரகாஷ்.
அவன் வந்தது தெரியாத சுஜாதா, வழக்கம் போல காலையில் எழுந்து வீட்டை ரெண்டாக்கிக் கொண்டிருக்க...

சுஜாதாவின் அம்மா, " ஏன் காலங்கார்த்தால எழுந்து இப்படி கத்திட்டு இருக்க. உள்ள போ. படிக்கிற வேலை இருந்தா பாரு.இல்லைன்னா சமையல் கட்டுல வந்து மதியோட வேலைப் பாரு." என்று கடிந்துக் கொண்டார்.

" போ மா… இன்னைக்கு லீவு தான. பொறுமையா வந்து பாத்திரம் விளக்குறேன்." என்றாள் சுஜாதா.

" சொல்றதே கேட்க மாட்டியா. இல்லைன்னா ரூம்ல போய் இரு. சத்யா ஊர்ல இருந்து வந்துருக்கான். இப்படி வாயாடிட்டு இருக்காதே. அவனுக்கு பிடிக்கலைன்னு அப்புறம் சொல்லிடப் போறான்." என்று அவர் கூற‌.

சுஜாதாவிற்கோ, சத்யபிரகாஷின் பேரைக் கேட்டதும் எரிச்சல் வர, அங்கிருந்து அவர்களது அறைக்குச் சென்று விட்டாள்.

பின்னே அவன் ஊரிலிருந்து வந்துவிட்டால் அவ்வளவு தான்…

அவனுக்கு ராஜமரியாதை. அவனுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என்று எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அவனுக்கு பிடித்த உணவுவகை செய்வது போதாதுன்னு, இவளை இப்படி இரு. அப்படி இருன்னு சுஜாதாவின் அம்மா அட்வைஸ் மழை பொழிய…
அவளுக்கு அவனது பேரே வேப்பங்காயாய் கசந்தது.
அவனைக் கண்டாலே ஆகாமல் போனது.

இப்போதும் குளித்து விட்டு, பக்கத்து வீட்டு அக்காவுடன் கோவிலுக்கு கிளம்பி விட்டாள்.

மதியரசியும் இப்பொழுதெல்லாம் சரியாக பேசுவதில்லை. சுஜாதாவிற்கோ வீட்டில் இருந்தால் மூச்சு முட்டத் தொடங்கியது. அதற்கான தீர்வாக கோவிலுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.

" அம்மா… நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்." என்றாள் சுஜாதா.

" ம்… சரி… பார்த்து பத்திரமா போயிட்டு வா. ராஜாத்தியோட தான போற." என.

" ஆமாமா." என்றவள், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, பக்கத்து வீட்டிற்கு சென்றாள்.

" ராஜாத்தி கா… கோவிலுக்கு வர்றீங்களா?" என்று கத்தியபடியே சென்றாள்.

" அடியே சுஜா. யாரு மேல கோபம்? இப்படி கத்திட்டு வர்ற?"

" அதெல்லாம் ஒன்னும் இல்லை கா. வர்றீங்களா? இல்லையா? நீங்க தான் காலையிலே சமையல முடிச்சிருப்பீங்களே."

" என்ன ஊர்ல இருந்து உங்க மாமா வந்துட்டாங்களா? சரி இரு இதோ இந்த கதையை முடிச்சிட்டு வரேன்." என்றவள் இதயம் பேசுகிறது பத்திரிக்கையில் அந்த வார தொடரை ஆவலாக படித்து விட்டு, கோவிலுக்கு தயாராக சென்றாள்.
சுஜாதா வீட்டின், பக்கத்து வீட்டில் இருக்கும் ராஜாத்தி தான் அவளது புது தோழி.

கணவன், மனைவி இரண்டே பேர். காலையிலே கணவர் வேலைக்கு செல்லும் போதே, சமையல் முடித்து விடுவார். அதற்கு பிறகு கோவிலுக்கு சென்று விடுவார், இல்லை என்றால் அக்கம் பக்கம் சென்று கதையடிப்பார். அப்படி தான் சுஜாதாவுடன் பழக்கம் ஆனது.

அவர் வைத்து விட்டு சென்ற புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள் சுஜாதா.
அந்த தொடர்கதையைப் படிக்க, அந்த எழுத்து அவளை வசீகரிக்க… அவளது வாழ்க்கைப் பாதை மாறியது.

" ஹேய் சுஜா… நான் ரெடி போகலாமா?" என்று வந்து நின்றாள் ராஜாத்தி.

" இருங்க கா… இதோ முடிஞ்சிருச்சு." என்று குரல் கொடுத்த சுஜாதா, அந்த எழுத்தில் ஆழ்ந்தாள்.

கோவிலுக்கு சென்று வரும் போது, அந்தக் கதையைப் பற்றியே ராஜாத்தியிடம் பேசிக் கொண்டு வந்தாள். " அக்கா… அடுத்த பதிவு எப்பக்கா வரும்."

" புதன்கிழமை தான் வரும். அவரு கரெக்டா வாங்கித் தருவார். நான் படிச்சுட்டு, அடுத்து உன் கிட்ட தரேன். இப்போ இதையே பேசிக் கொல்லாதே. ஆளை விடு தாயே! " என்றார்.

" சரி கோயிலுக்கு போகலாமா கா…" என்றவளது முகம் மலர்ந்திருந்தது.
ஒரு வழியாக விடுமுறையெல்லாம் முடிந்து, சத்யபிரகாஷும் கிளம்பி விட்டான்.

அடுத்த வாரம் பக்கத்து வீட்டில் இருந்து புத்தகத்தை இரவல் வாங்கி வந்து வீட்டில் படிக்க, அவரது அம்மாவோ, " அடிக்கழுதை… படிக்கிற வயசுல என்ன கதை பொஸ்தகம்." என்றவர் நன்கு விளாசி விட.

அதிலிருந்து கோவிலுக்கு செல்லும் போது புத்தக்தை எடுத்து செல்பவள், ராஜாத்தி ஊர் கதை பேசும் போது, அவளது ஆஸ்தான இடமான வன்னி மரத்தடியில் அமர்ந்து படிப்பாள்.

உடனே சுஜாதா, அம்மா பேச்சுக் கேட்கும் பெண் என்று நம்பிவிட வேண்டாம். அவள் வீட்டிற்குத் தெரியாமல் நிறைய வேலைப் பார்த்திருக்கிறாள். ******************************
மனோகரும், மதியரசியும் புதிய படத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து இருக்க…

" நானும் வரேன் மதி." என்றாள் சுஜாதா.

வழக்கம் போல சுஜாதாவின் அம்மா," சுஜாதா அடி வாங்காமல் ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு." என்று திட்ட.

" முகத்தை தூக்கி வைத்திருந்த சுஜாதா, அவர்களது அறையில் நீண்ட நேரம் அவளது உண்டியலைக் குடைந்து கொண்டிருந்தாள்.
பிறகு நல்லப்பிள்ளையாக பள்ளிக்கு கிளம்பி சென்றவள், மதியம் வரை பாடத்தை கவனித்தாள், அதற்குப் பிறகு மனோகரும், மதியரசியும் படம் பார்க்க சென்ற அதே தியேட்டருக்கு போய் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

முதலில் மனோகர் தான், அவளைப் பார்த்தான்.

"மதி… அங்கே இருக்கிறது யாரு நம்ம சுஜாதா தானே." என்று வியந்து கேட்க.

நிமிர்ந்து அவளைப் பார்த்த மதியரசியோ, " ஆமாம்…" என்றாள்.

" மதி… அங்கே பார்க்காத… நாம கண்டுக்காம போயிடலாம்." என்று பதட்டத்துடன் மனோகர் கூற.

மதியரசியோ, " க்ளுக்" என சிரித்தவள், " உங்க தங்கச்சிக்கு நாம இங்கே வந்தது தெரியும்." என்று சொல்ல.

" தெரியுமா? நாம அவளை விட்டுட்டு வந்தது தெரிஞ்சா சண்டை போடுவாளேன்னு பயந்தேன்." என்று தடுமாற்றமாக மனோகர் கூற.

" இப்போ மட்டும் என்ன? இண்டர்வெல்ல வந்து சண்டை பிடிக்க போறா?" என்று நமுட்டு சிரிப்புடன் கூறினாள் மதியரசி.

" நம்ம கிட்ட வரமாட்டான்னு நினைக்கிறேன் மதி. வந்தா ஸ்கூல் கட் அடிச்சதை, வீட்ல சொல்லிடுவோம் என்று பயப்பபடுவா."

" அவளாவது பயப்படுறதாவது. நம்ம இங்க வந்திருக்குறது தெரிஞ்சு தான் வந்திருக்கா என்று சொன்னேனே. நம்மளை ப்ளாக் மெயில் பண்ணி, நம்ம வாயை அடைச்சிடுவா." என்று தன் மாமன் மகளை நன்கு அறிந்த மதியரசி.

" அப்படீயா? அப்போ என் பர்ஸ்." என்று மனோகர் வினவ.

" அது இனி காலி." என்று சொல்லி மதியரசி நகைத்தாள்.

இப்படி இவர்கள் இங்கு மகிழ்வாக இருக்க…
*****************************
சென்னையில் கோபி அவளது காதலியை மறக்க முயன்றுக் கொண்டிருந்தான். சத்யபிரகாஷ் அதற்கு உறுதுணையாக இருந்தான். ஆனால் கோபியின் மனதில் இருந்ததை யாரும் அறியவில்லையே!

சென்னைக்கு சென்றதும் சத்யபிரகாஷிற்கு அந்த ஊர் நிறைய அனுபவத்தை கற்றுத் தந்தது.

கல்லூரியில் பலதரப்பட்ட ஊரிலிருந்து வந்த மக்களோடு பழகவும், கற்றுக் கொள்வதற்கும் அவனுக்கு நிறைய விஷயம் இருந்தது.

ஒவ்வொன்றையும் ஆர்வமாக கற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு கன்ஸ்ட்ரெக்ஷன் தொழிலில் ஆர்வம் பற்றிக் கொள்ள, நிறைய சாதிக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

கல்லூரியில் வைக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்துக் கொள்வான். அதில் கலந்துக் கொண்டதிலிருந்து, ஒரு புதிய துறையிலும் ஈர்ப்பு. அதில் எப்படி
ஜொலிக்க, என்று அதிலே சிந்தனை போய் கொண்டிருந்தது.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து வந்து மாலை பொழுதில் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, தலைவலித்தது.

' சற்று காத்தாட நடந்து வரலாம்.' என்று தனக்குள் எண்ணியவன், கால் போன போக்கில் நடந்தான்.

வெகுதூரம் நடந்து வந்திருக்க… இதயம் பேசுகிறது பத்திரிக்கை ஆஃபீஸின் வாசலில் வந்து இருந்தான் .

அங்கிருந்து வெளியே வந்த கோபியை பார்த்து திகைத்து நின்றதெல்லாம் நொடி நேரமே… " கோபி… " என்று அழைத்தான்.

கண்கள் கலங்க முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தான் கோபி.

"கோபி… நடந்ததெல்லாம் எதிர்பாராத விபத்து. அதுவும் இல்லாமல் எங்க சொந்தக்காரங்கன்றது தவிர, இப்போ அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை." என.

" எதுக்கு இந்த தேவையில்லாத விவரம்." என்று பட்டும் படாமலும் வினவினான் கோபி.

முகத்தில் அடிவாங்கியது போல உணர்ந்த சத்யபிரகாஷ் கோபியை பாவமாக பார்த்தான்.

" சரி விடு சத்யா. பழசெல்லாம் இப்போ எதற்கு?" என்றவன் அங்கிருந்து நகரவே பார்க்க.

சத்யபிரகாஷ் அவனை விடவில்லை.
" இங்கே நீ என்ன டா பண்ணுற?"என்று வினவினான்.

கோபியோ தயங்க.
தூண்டித் துருவி வினவினான் சத்யபிரகாஷ்.

அவனை சமாளிக்க முடியாதா கோபி, " நான் இங்கே தான் பார்ட் டைமா வொர்க் பண்றேன். இப்போ எனக்கு வெளிலே வேலை
இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம்." என்று விட்டு நகர்ந்த கோபி பெருமூச்சு விட்டுக் கொண்டே சென்றான்.

சத்யபிரகாஷோ முகம் பளீரென்று ஒளிர, யோசனையுடன் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

 
  • Like
Reactions: Lakshmi murugan