• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
324
ஓலை - 6


"ஃப்ரஷெப்பாகி விட்டு வருகிறேன்." என்ற சத்யபிரகாஷிற்காக காத்திருந்த சுஜாதாவிற்கு பொறுமை கொஞ்சம், கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.



சத்யபிரகாஷ் வந்ததும் இவ்வளவு நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்த மதியரசியும், " சரி சுஜா… அண்ணனுக்கு சாப்பாடு போடு. நான் போய் படுத்துக்கிறேன்." என்று அவரும் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.


யாருமில்லாமல் தனியாக அமர்ந்திருந்த சுஜாதாவோ,' என்னமோ நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி இருவருக்கும் ஸ்பேஸ் கொடுத்து விட்டுட்டு போறா. அறிவுக்கெட்டவ. 'என்று நாத்தனாரை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தார்.


நேரமோ ஓடிக் கொண்டிருக்க… சத்யபிரகாஷ் இன்னும் வரவில்லை.

மதிய உணவை முடித்து விட்டு, தூக்கத்திற்காக கண்கள் கெஞ்ச… அதை சமாளித்து உட்கார்ந்திருந்த சுஜாதாவிற்கு சுறு சுறுவென கோபம் பெருகியது.


அரை மணி நேரத்திற்குப் பிறகு சாவகாசமாக வந்த சத்யபிரகாஷ், அமைதியாக உணவருந்தாமல், அவ்வப்போது ஆராய்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனதிற்குள்ளோ, ' ஐயோ! லெட்டர் இவள் கைக்கு வரவில்லையோ. ஒரு வேளை வேற யாராவது எடுத்திருப்பாங்களோ.' என்று யோசித்துக் கொண்டே உணவருந்தி முடித்தவன், மாடிக்குச் செல்ல…


சுஜாதாவும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, அவர்களது அறைக்குச் சென்றார்.


அங்கோ சத்யபிரகாஷை காணவில்லை.


'எப்ப பாரு அந்த ஆஃபிஸ் ரூம்லயே கதியாகக் கிடக்க வேண்டியது.' என்று திட்டிக் கொண்டே, மகள்களை பார்த்து விட்டு வரலாம் என்று அவர்களது அறைக்குச் சென்றாள்.


சத்யபிரகாஷோ, 'கிரிதரனுக்கு அழைக்க வேண்டும்.' என்று எண்ணிக் கொண்டே

அவரது அலுவலக அறைக்குச் சென்றார்.


கிரிதரனுக்கு அழைக்க…

அவரோ சத்யபிரகாஷின் அழைப்பை எடுக்கவில்லை. சரி தான் என்று வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.


கையில் இருந்தவற்றில் ஆழ்ந்து இருக்க…


அதைக் கலைப்பது போல,சற்று நேரத்திலேயே கிரிதரன் அழைத்தார்.


ஃபோனை ஆன் செய்த சத்யபிரகாஷ், ஹலோ என்று கூட சொல்லாமல், "டேய் ஃபோன் போட்டா எடுக்க மாட்டியா? அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு?" என்று கடுப்படிக்க.


"ஆஃபிஸ்ல வேலையே இருக்காதாடா. காலையிலே நீ வந்த… அப்புறம் நீ சொன்ன வேலையை செய்ய கிளம்பிட்டேன். இப்பாவது வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்ய விடேன்டா." என்று அழுவது போல கூற.


"ஓஹோ… நான் உன்னை வேலை செய்ய விடாமல் டார்ச்சர் பண்றேன் என்று சொல்றீயா?"


"நான் எங்கடா அப்படி சொன்னேன்‌. வேலைப் பார்க்க விடுன்னு தானே சொன்னேன்."


"சரி அப்போ நீ வேலை பாரு. நான் ஃபோனை வைச்சுடுறேன்" என்றார் சத்யபிரகாஷ்.


"என்னடா… உன்னோட ஒரே அக்கப்போரா இருக்கு. அதான் வேலையை முடிச்சுட்டேனே. அதுக்கு அப்புறம் தானே ஃபோன் பண்னேன். என்ன விஷயம் சொல்லி தொலைடா."


'ரொம்ப டென்ஷனாக்கிட்டோமோ! பொழைச்சு போகட்டும்.' என்று பெருந்தன்மையாக மனதிற்குள் நினைத்த சத்யபிரகாஷோ, " அதில்லை டா. லெட்டரை கரெக்ட்டா போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டியா" என்று வினவ.


"ம் போட்டேன்." என்று தடுமாறிக் கூறினார்.


"டேய் ஏன் தடுமாறுற. உன்மையை சொல்லுடா? போட்டியா? இல்லையா?" என்று படபடத்தார் சத்யபிரகாஷ்.


'அடேய். உன்னோடையும், உங்க குடும்பத்தோடையும் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்டா. சும்மாவே உங்கத் தொல்லை தாங்க முடியலைடா. இதுல உன்னோட பொண்ணுக் கிட்ட கொடுத்தேன் என்று உனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான். நான் தொலைஞ்சேன்.' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே இருக்க.

கிரிதரனின் அமைதி சத்யபிரகாஷிற்கு மன சஞ்சலத்தை அளித்தது.


"இல்லை டா. உன்னை சந்தேகப்படுறேன் என்று நினைக்காத டா. இங்கே ஒரு ரிப்ளக்ஷன் இல்லை. அதான் திரும்பத் திரும்ப கேக்குறேன்." என்றான் சத்யபிரகாஷ்.


'அடப்பாவி… குடும்பம் நல்லா போயிட்டு இருக்குன்னு நிம்மதியா இல்லாம, எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கு என்று கவலைப்படுறானே. இவனை என்ன செய்வது?' என்று மனதிற்குள் மீண்டும் திட்டியவர், " நான் வேணும்னா அந்த லெட்டரை எடுத்து யார் கையிலாவது கொடுக்கவா? இல்லைன்னா ஒன்னு பண்ணு. நீயே அந்த போஸ்ட் பாக்ஸ்ல இருக்குற லெட்டரை எடுத்துட்டு போய் சிஸ்டர் கிட்ட கொடு." என்று இடக்காக கூறினான் கிரிதரன்.


"டேய் முட்டாள். நானே எடுத்து கொடுக்குறதுக்கு எதுக்கு இந்த வேகாத வெயில்ல அலையுறேன். எது செஞ்சாலும் சந்தேகம் வராது மாதிரி செய்யணும். இல்லைன்னா நானே அந்த போஸ்ட் பாக்ஸ்ல போட்டுருக்க மாட்டேனா. நான் போடுற நேரம் யாராவது பார்த்து விட்டால் பிரச்சினை. அதுக்காக தான் உன் கிட்ட குடுத்தேன்."


"சரி டா. இந்நேரம் சிஸ்டர் கையில் கிடைச்சாலும் கிடைச்சிருக்கும். படிக்க டைம் இல்லாமல் இருந்திருக்கலாம். நைட் வரைக்கும் வெயிட் பண்ணு."


"சரி டா. நீ உன் வேலையை பாரு." என்று சத்யபிரகாஷ் ஃபோனை வைத்து விட்டார்.


'சுஜா அந்த லெட்டரை படிச்சாலா, இல்லையா? எப்படி தெரிஞ்சுக்கிறது?' என்று சத்யபிரகாஷ் யோசனையில் இருக்க…


அவரது யோசனையை கலைப்பது போல கையிலிருந்த ஃபோன் அழைத்தது.


" ஹலோ சத்யபிரகாஷ் ஸ்பீக்கிங்." என்றுக் கூற.


"...."


அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ, தெரியவில்லை. சத்யபிரகாஷ் டென்ஷனாகி விட்டார்.


"வாட் நான்சென்ஸ்? இதைக் கூட உன்னால சமாளிக்க முடியாதா? அப்புறம் எதுக்கு உனக்கு சம்பளம் கொடுத்து நான் வேலைக்கு வச்சுருக்கேன். யூ ஹேவ் டூ சால்வ் த இஸ்யூ. நாளைக்கு ஒர்க்கர்ஸ் எல்லாரும் வந்திருக்கணும். எனக்கு வேலை கரெக்டா நடக்கணும்.தட்ஸ் இட்." என்றவர் ஃபோனை வைத்து விட.


" சார்… சார்…" என்று அங்கு அவரது மேனேஜரின் குரல் ஏமாற்றமாக ஒலித்தது.


" ஓ காட்! ஒரு நாள் கூட நான் இல்லாமல் ஒரு வேலையும் ஒழுங்கா நடக்க மாட்டேங்குது. இதுல இவங்களை நம்பி ஒன் வீக் ஃப்ளான் பண்ணிருக்கிறேனே. ஷிட். " என்றவர் அங்கிருந்த ரோலிங் ஷேரில் உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டு, லேசாக அதில் ஆடிக் கொண்டே தன்னை அமைதிப்படுத்த முயன்றார்.


ஆனால் கடவுள் விட்டால் தானே.


சற்று நேரத்தில், மீண்டும் அவரது செல்ஃபோன் இசைத்தது.


எடுத்துப் பார்த்த சத்யபிரகாஷின் முகமோ, அதில் வந்த பெயரைப் பார்த்ததும் இறுகிப் போனது.


முன்பு வந்த ஃபோன் காலில் பேசியது போல கம்பீரமாக அவரால் பேச இயலவில்லை.


ஃபோனை ஆன் செய்து அமைதியாக இருக்க…


"ஹலோ மை டியர் ஃப்ரெண்ட். நான் யார் பேசுறேன் தெரியுதா?" என்று கேலியாக

வந்தது.


" ம் தெரியுது. சொல்லு… இப்போ எதுக்கு ஃபோன் போட்டுருக்க."


"நீங்க பாட்டுக்கும் உங்க சொந்த ஊருக்குப் போறேன்னு, பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமா போய்டீங்க… நான் மட்டும் இங்க தனியாக லோல்பட்டுட்டு இருக்கிறேன்."


"அதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும்? உன்னை நானா கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னேன்." என்று எடக்காக கேட்டார்.


"ஹலோ பாஸ். அதெல்லாம் என் பர்ஸனல். அதைப் பத்தியெல்லாம் நீங்க பேசக்கூடாது."


"அப்புறம் ஏன் டா எனக்கு ஃபோன் பண்ணி உயிரை வாங்குற."


"இப்படி சொன்னா எப்படி சத்யபிரகாஷ் சார் ? எனக்கு உங்களையும், உங்க குடும்பத்தையும் விட்டா யார் இருக்கா?" என்று அழுத்திச் சொன்னான் அந்தப் பக்கம் இருந்தவன்.


"டேய் கோபி. என்னை டென்ஷனாக்காமல் ஒழுங்கா வேலையை போய் பாரு."என்று சத்யபிரகாஷ் அதட்ட.


"பாரு டா. இவ்வளவு நேரம் கழிச்சு இப்ப தான் சாருக்கு என் பேரே நியாபகம் வருது. முதல்ல கிளம்பி இங்க வாங்க. அப்புறமா நான் என் வேலையை பார்க்கிறேன்." என்று சிரித்தவாறே கோபி கூற.


இங்கோ கோபத்தை அடக்க முடியாமல் தத்தளித்தார் சத்யபிரகாஷ்.


"என்ன பதிலைக் காணோம். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக்கலாமா?"


"என்னால வர முடியாது. நெக்ஸ்ட் வீக் தான் வருவோம்."


"அதெல்லாம் எனக்கு தெரியாது. காலையில்ல நீங்க சென்னையில் இருக்கணும். இல்லைன்னா…" என்று கோபி இழுக்க.


"இல்லைன்னா என்ன டா பண்ணுவ?" எகிறினார் சத்யபிரகாஷ்.


" சுஜாவுக்கு ஃபோன் பண்ணுவேன்." அலட்டிக்காமல் கோபி கூறினான்.


"உன் ஃபோன் காலை அவ எடுக்க மாட்டா." உறுதியான குரலில் சத்யபிரகாஷின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தது.


"ஓஹோ! கான்பிடன்ஸ். பட் நான் வேற நம்பரிலிருந்து கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிடுவேன். உன் கிட்ட இருந்து முக்கியமான விஷயத்தை, உன் அருமை புருஷன் இருபத்தி ஐந்து வருஷமா மறைச்சு வச்சுருக்கிறார்னு சொல்லுவேன்.


"என்ன பிளாக்மெயில் பண்றியா? அந்த லெட்டரை நான் சுஜாதா கிட்ட கொடுத்துட்டேன். நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ."


"ஹலோ சார். ஐ நோ ஆல் டீடெயில்ஸ். இப்ப கொடுத்துட்டா எல்லாம் சரியாகி விடுமா? இருபத்தி ஐந்து வருஷமா அந்த லெட்டர் உங்க கையில் தான் இருந்தது என்ற விஷயத்தை நான் சுஜா கிட்ட சொன்னால் உங்க நிலைமை. யோசிச்சுக்கோங்க." என்று சிரிக்க.


" சரி வந்து தொலைக்கிறேன்." என்றார் சத்யபிரகாஷ்.

*************************


"ஹேய் பொண்ணுங்களா… எதை அம்மா கிட்ட கொடுப்போமா? வேண்டாமா? என்று டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க." என்று அங்கே வந்த சுஜாதா வினவ.


"அது வந்து மா. ஒன்னும் இல்லை. சும்மா… " என்று சுனிதா தடுமாற…


சந்தியாவோ தன் கையிலிருந்ததை பின்னே மறைத்தாள்.


" ப்ச்… கையில் என்ன வச்சிருக்க சந்தியா? காட்டு…" என்று பொறுமை இழந்த குரலில் சுஜாதா வினவ.


" அம்மா… அது…" என்று இழுத்த சந்தியா, சுஜாதாவின் பார்வையில் பயந்து கையிலிருந்த லெட்டரை கொடுத்தாள்.


அதை வாங்கிப் பார்த்த சுஜாதாவால் நம்பவே முடியவில்லை.


தன் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார்.


'இது எப்படி சாத்தியம். இது நிஜம் தானா? இல்லை கனவா?' என்று தனக்குள் கேள்வியெழுப்பியவர் தன் கையை கிள்ளிப் பார்க்க, சுளீரென வலித்தது கை மட்டும் அல்ல அவரது இதயமும் தான்.


அம்மாவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சந்தியாவும், சுனிதாவும்…


அவர்களைப் பார்த்த சுஜாதா, "

இது… இது… எப்படி உங்க கையில வந்தது. " என்று கோர்வையாக பேச முடியாமல், துண்டு துண்டாக

வினவ.


அவரது பதட்டத்தைப் பார்த்த சந்தியா, "அம்மா… ரிலாக்ஸ். " என்றவள், சுஜாதாவை மெத்தையில் அமர வைக்க…


சுனிதாவோ, வேகமாக அங்கிருந்த ஜக்கிலிருந்த தண்ணீரை கிளாஸில் ஊற்றிக் கொண்டு வந்து சுஜாதாவிடம் கொடுத்தாள்.


அதை வேகமாக அருந்தினார் சுஜாதா.


" அம்மா ஆர் யூ ஆல்ரைட்." என்ற சந்தியாவைப் பார்த்து, " ம்…" என்றவரின் நினைவு மீண்டும் அந்த கடிதத்திடம் சென்றது.


பெருமூச்சு விட்டுக் கொண்டே, தனது மகள்களைப் பார்த்தவர், " எப்படி கிடைச்சது." என்று வினவினார்.


" அம்மா… நாங்க ஷெட்டில்காக் விளையாடும் போது, போஸ்ட்மேன் அங்கிள் வந்து கொடுத்துட்டு போனாங்க." என்றாள் சந்தியா.


" வாட்… இப்போ தான் இந்த லெட்டர் வந்ததா? ஹவ் பாஸிபிள்?" என சுஜாதா திகைக்க.


"அது வந்து மா. இப்போ பாரின்ல கூட ரொம்ப வருஷம் கழிச்சு லெட்டரை சம்பந்தப்பட்டவங்களுக்கு டெலிவரி பண்ணியிருக்காங்க. அதே போல இந்த லெட்டரையும் குடுத்திருக்கலாம்.” என்று சுனிதா கூற.


" ஓ… எப்ப வந்ததுன்னு சொன்னீங்க.” என்று அழுத்தமாக மகள்களைப் பார்த்தார்.


“அது வந்து தோட்டத்தில விளையாடும் போது…” என்று தயக்கத்துடன் கூறினாள் சந்தியா.


“அப்ப வந்ததை , என் கிட்ட வந்து உடனே கொடுக்காமல் என்ன பண்ணிட்டு இருந்தீங்க." என்று வினவியவாறே அந்த கடிதத்தை மீண்டும் கையில் எடுத்துப் பார்த்தார். அதுவோ பிரிக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் கோபத்தைக் கூட காண்பிக்க முடியாமல், " ஏன் டா இப்படி பண்ணீங்க. எல்லோரும் இருக்கும் போதே பிரிச்சு பார்த்தீங்களா." என்று இருவரையும் பார்த்து வினவ.


"இல்லை மா… நாங்க ரூமுக்கு வந்து தான் பிரிச்சோம். அதுவும் பத்திரிக்கை ஆஃபீஸில் இருந்து வந்ததுன்னு தான் அப்படி செய்தோம். இல்லைன்னா நாங்க ஓபன் பண்ணியிருக்க மாட்டோம். சாரிமா." என்று சந்தியாவும், சுனிதாவும் கூற.


"சரி விடுங்க. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும். ப்ளீஸ் லீவ் மீ அலோன்."


" அம்மா… இதை நீங்க படிக்காமலிருப்பது தான் நல்லது." என்றாள் சந்தியா.


" ஹோ… பெரிய மனுஷி ஆகிட்டீங்களோ… நல்லது, கெட்டது சொல்ற அளவுக்கு… இது என்னோட இருபத்தி ஐந்து வருட காத்திருப்பு. இந்த லெட்டர் எனக்கு என்ன வச்சுருக்குன்னு தெரியலை. என்னோட எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமான்னு தெரியலை.

இத்தனை வருடமா, ஏன் என்னோட காதல் கைக்கூடலைன்னு தவிச்சிருக்கேன்.

அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி கிடைக்குமான்னு பார்க்கப் போறேன். தட்ஸ் இட். " என்று தனது மனதில் உள்ளவற்றையெல்லாம் கொட்ட…


"அம்மா… அப்பா…" என்று தழுதழுத்தாள் சந்தியா.


" ப்ச்… இந்த கடிதத்தை படிக்குறதுல என்ன வந்துடப் போவுது. முதல்ல ரூமை விட்டு வெளியே போங்க." என்று கத்த.


" அம்மா மா…" என்று இப்போது சுனிதா அழைக்க…


இருவரையும் தீப்பார்வை பார்த்தார் சுஜாதா. ஏற்கனவே இதை படிப்பதற்காக இருபத்தி ஐந்து வருடம் காத்திருக்க… இன்னும் தாமதமாக்கும் மகள்களின் மேல் கோபம் வந்தது.


அம்மாவின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட சந்தியாவிற்கு வருத்தமாகத் தான் இருந்தது. இருந்தாலும் அவருக்கு இப்போது தனிமை தான் வேண்டும் என்று உணர்ந்து, " சுனிதா எதுவும் சொல்லாத வா. போகலாம். " என்று வெளியே அழைத்து வந்தாள்.


" ஏய் லூசு. எங்கே போறது? இது நம்ம ரூம்." என்று சுனிதா கத்த.


" ப்ச் எனக்கு தெரியும் டி. அம்மா மைண்ட்ல அதெல்லாம் இல்லை. வா நாம பால்கனியில உட்கார்ந்து இருக்கலாம் என்று அழைத்துச் சென்றாள் சந்தியா.


அவள் மனமோ, ' இந்த கடிதத்தால் என்னென்ன குழப்பம் வரப்போகிறதோ தெரியவில்லை. அண்ணாமலையாரே நீ தான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.' என்று அங்கு தெரிந்த கோபுரத்தைப் பார்த்து வணங்கினாள்.

***********************


மகள்கள் வெளியே சென்றதும், மீண்டும் கவனத்தை கடிதத்தில் செலுத்தினார் சுஜாதா.


இதயம் பேசுகிறது… பத்திரிக்கையின் சென்னை அட்ரெஸ் இருந்தது.


' இன்றோ அந்தப் பத்திரிகை இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டது.

அந்தப் பத்திரிக்கை வெளி வருவது நின்றதுமே, இவளது இதயம் வாடிப் போனது.


இருக்காதா பின்னே அந்தப் பத்திரிகையின் மூலமாகத்தானே இதய உதயனின் அறிமுகம் கிடைத்தது. இதயம் பேசுகிறதுவின் இதய உதயன் பேசுகிறேன் என்றல்லவா ஆரம்பித்து தொடர்கதை எழுதுவார்.


அவரது கதைக்கு எந்த அளவுக்கு அடிமையோ, அந்த அளவுக்கு அவரது எழுத்தின் ஆளுமைக்கு அடிமையாக இருந்தார் சுஜாதா.


வார இதழான இதயம் பேசுகிறது என்று தன் கையில் கிடைக்கும் என்று தவமாக தவமிருந்திருக்கிறார்.

அவர்கள் வீட்டில் கதைப் புத்தகம் படிப்பதற்கு தடை. அக்கம் பக்கம் வீடுகளில் வாங்கும் புத்தகத்தை இரவல் வாங்கி படிக்கும் பழக்கம் உடையவள்.

எப்போதடா கிடைக்கும் என்று காத்திருந்து, அந்த கதையை படித்து விட்டு, உடனடியாக கருத்தை லெட்டரில் பதிவு செய்து அனுப்பி விடுவார்.

முதல் முறை அனுப்பி விட்டு, பதில் லெட்டருக்காக தபால்காரர் வரும் நேரத்தில், வெளிவாசலுக்கும், வீட்டுக்குள்ளும் நடந்துக் கொண்டே இருப்பார்.


அதெற்கெல்லாம், எவ்வளவோ திட்டு வாங்கியிருக்கிறாள்.' அதையெல்லாம் எண்ணி பெருமூச்சு விட்டவள், அந்த கடிதத்தை படிக்கத் தொடங்கினார்.


" சுஜாதா… உன் வாழ்க்கை என்றும் சுபமாக இருக்க வேண்டும்.

இந்த இதயஉதயன் உன் இதயத்திலும் உதயமானது மகிழ்ச்சி. நன்றாக யோசிச்சு சொல்லு சுஜாதா. உனக்கு சம்மதம் தானே.

உன் கரம் பற்றி…

உன் கனவை நிறைவேற்றுவான்,

உன் இதய உதயன்.

நீ எனக்காக காத்திருப்பாயா?

எப்போதும் என் கதையையும், லெட்டரையும் படிக்குமிடமான

வன்னிமரத்தடியில், பிள்ளையாருடன் நானும் காத்திருப்பேன். வரும் வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் என் வாழ்வில் உதயமாகும் வெண்ணிலாவே வருக.

இப்படிக்கு உன் இதய உதயன்."

எத்தனை முறை திரும்பத் திரும்ப படித்தாலோ கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.


" ஐயோ! என்னுடைய இருபத்தி ஐந்து வருட காதலை இழந்து விட்டேனே!" என்று வாய்விட்டுக் கதற…


கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த சத்யபிரகாஷோ, கடிதத்தை தன் நெஞ்சோடு சேர்த்து வைத்து அழுதுக் கொண்டிருந்த சுஜாதாவைப் பார்த்ததும் மட்டுமில்லாமல், அவள் வாய்விட்டு கதறியதையும் கேட்டு விட்டார்.

தேகம் முழுவதும் இறுக, முகமோ கல்லென இறுகியிருந்தது.


அவர் அருகே சென்ற சத்யபிரகாஷ், சுஜாதாவிடமிருந்து அந்த லெட்டரை வாங்கியவர், " என்ன இது ?" என்று வினவ.


“ அது… இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முந்தி நான் அனுப்பினதுக்கு, வந்த பதில் கடிதம்." என்று தடுமாறிக் கொண்டே கூற.



அந்த லெட்டரை வேகமாக பார்வையிட்டவர், " ஓஹோ காதல் ஓலை. காலத்தோடு கையில் சேரவில்லையோ." என்று கேலியாக் கூறியவர், திரும்பி செல்ல முயல…


சுஜாதாவோ வேகமாக கண்களைத் துடைத்துக் கொண்டு, " சத்யா..." என்று சத்யபிரகாஷை தடுத்து நிறுத்த முயன்றார்.


என்ன என்பது போல் பார்த்தார் சத்யபிரகாஷ்.


" உங்கக் கிட்ட பேசணும்." என்றார் சுஜாதா.


" ப்ச் இப்போ கேக்குற மூட் இல்லை. நான் இப்போ உடனே சென்னைக்கு கிளம்பணும். அங்கே கன்ஸ்ட்ரக்ஷன்ல பிரச்சனை." என்றவர் அங்கிருந்து சென்றார்.


தான் சொல்ல வந்ததை காதுக்கொடுத்து கேட்காமல் செல்லும் சத்யபிரகாஷை, உஷ்ணத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜாதா.




 
Top