• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
324
ஓலை- 7

தான் சொல்ல வந்ததை காதுக்கொடுத்து கேட்காமல் செல்லும் சத்யபிரகாஷை, உஷ்ணத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தார் சுஜாதா.

பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டவர், யோசனையில் ஆழ்ந்தார்.

'இப்பொழுது கீழே போனா அவ்வளவு தான். அங்கே ஒரு பெரிய பாசப் போராட்டமே நடக்கும். அதைப் பார்க்கும் அளவிற்கு நமக்கு பொறுமையில்லை.' என்று எண்ணியவள் கீழே செல்லாமல் மீண்டும் ஒரு முறை அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு அதை பத்திரப்படுத்தலாம் என்று கஃபோர்டை நோக்கித் திரும்ப, அப்போது தான் கவனித்தார்.
தான் இருப்பது தன் மகள்களின் அறை. தன் நெற்றியில் லேசாக தட்டிக் கொண்டவர், அவரது அறைக்குச் சென்றார்.

கீழே சென்ற சத்யபிரகாஷ், தனது முக மாற்றத்தைக் கட்டுப்படுத்தி இயல்பாக்கினார்.

ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த நித்யா, " என்ன பா? காஃபி கொண்டு வரவா?" என்று வினவ.

" ம்ஹூம் வேண்டாம்." என்றவர், " இல்லை… சரி… கொண்டு வா மா." என்று தடுமாறினார்.

அவரது தடுமாற்றத்தையும், அவரது கையில் இருக்கும் சூட்கேஸையும் பார்த்து குழப்பத்துடனே கிச்சனுக்குள் சென்றாள் நித்யா.

கண்களை மூடி சோஃபாவில் உட்கார்ந்து இருந்த சத்யபிரகாஷின் மனதிற்குள்ளோ, சுஜாதாவின் அழுத முகமும், அவள் சொல்லிய வார்த்தைகளுமே முட்டி மோதியது.' அப்போ அவள் சிறு வயது காதலை மறக்கவே இல்லையா? தாங்கள் வாழ்ந்த இருபத்தி ஐந்து வருட வாழ்க்கைக்கு என்ன அர்த்தம். நான் என்ன நினைச்சு இந்த லெட்டரைக் கொடுத்தேன். இப்போ நடக்குறது என்ன? இப்போ நான் எப்படி ரியாக்ட் பண்றது ஒன்னும் புரியவில்லையே.' என்று குழம்பித் தவித்தார்.

தற்காலிகமாக அவரது தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நித்யா வந்தாள். " அப்பா காஃபி‌…" என.

" தேங்க்ஸ் டா." என்றவர் ஒரு வாய் அருந்தி விட்டு, " எங்கே யாரையும் காணோம்." என.

" யாரைக் கேட்குறீங்க பா? அம்மா, சந்தியா, சுனிதா மாடியில் தான் இருக்காங்க. அத்தை படுத்துருக்காங்க. மாமாவும், மகிழும் கடைக்குப் போயிருக்காங்க.தாத்தாஸ், பாட்டிஸ் வாக்கிங் போற நேரம். அவங்க தோட்டத்தில வாக்கிங் போய்ட்டு இருக்காங்க. அவங்க துனைக்கு அனிதா போயிருக்கா. இன்னைக்கு அவ பார்த்துக்குற நாள். அதான் நான் டிவி பார்த்துக்கிட்டு இருக்கேன்." என்று குறும்பாக கூற.

" நாட்டி… நான் எதுக்கு கேட்டேனு எனக்கே மறந்துடும் போல. எனக்கு திடீர்னு ஒரு அர்ஜென்ட் வொர்க். நான் உடனே சென்னைக்கு கிளம்பணும். உங்க சுஜா அம்மாக் கிட்ட சொல்லிட்டேன். மேடம் கோபத்துல இருக்காங்க. சோ… அவங்க கீழே வர மாட்டாங்க… நான் மறுபடியும் மேல போனா அவ்வளவு தான். அதனால நீ சுதாவையும், சந்தியாவையும் தோட்டத்துக்கு வரச் சொல்லு. நான் அங்கே எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டு கிளம்புறேன்." என.

" சரிப்பா." என்ற நித்யா.
சந்தியாவிற்கு அழைத்து கீழே வரச் சொன்னாள்.

தோட்டத்திற்கு சென்ற சத்யபிரகாஷ், ஊருக்கு போவதாக சொல்லவும்‍, " அதுக்குள்ள என்ன பா. ஒரு வாரம் இருக்கப் போறேன் என்று சொன்னீயே." என்று ஆளாளுக்கு பதற.

" ஒரு முக்கியமான வொர்க்‌. நான் மட்டும் தான் போறேன். வேலை முடிஞ்சதும் வந்துடுவேன்." என்று எல்லோரையும் சமாதானம் படுத்துவதற்குள் சத்யபிரகாஷிற்கு போதும், போதுமென்றாகி விட்டது‌.
அதற்குள் அவரது அம்மா, " சாப்பிட்டுட்டு கிளம்பு பா." என்றார்.

"ஐயோ மா. நான் இப்ப கிளம்பினா தான் நைட் ரெஸ்ட் எடுத்துட்டு, ஃப்ரெஷ்ஷா காலைல வேலைப் பார்க்கலாம். நான் சாப்பாடுக்காக வெயிட் பண்ணிட்டு போனால் லேட் நைட் ஆகிடும். அங்கே சமைக்க சொல்லியிருக்கேன்." என்று வாய்க்கு வந்ததை கூறினார்.

அடுத்து அவரது சித்தப்பா, " செல்ஃப் ட்ரைவிங் வேண்டாம். டிரைவரை அழைச்சிட்டு போ." என.

" ஆமாம் சித்தப்பா. டிரைவரை வர சொல்லிட்டேன். அவரும் வந்துட்டார்." என்றவர் திரும்பி பார்க்க…
சந்தியாவும், சுனிதாவும் வந்து நின்றனர். அவர்கள் முகம் வாடியிருக்க.

" ஹேய் நீங்க ரெண்டு பேரும் சின்ன
குழந்தைங்களா… அப்பா சீக்கிரம் வந்துடுவேன்‌. ரெண்டு பேரும் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க." என்று அவர்கள் தலையை வருடி சமாதானம் செய்தார்.

"சரி … நான் கிளம்புறேன். பை. " என்று எல்லோரிடமும் விடைப்பெற்று காரில் ஏறுவதற்குள் நொந்து நூலாகி விட்டார்.

காரில் அமர்ந்து இயற்கை காற்றை ஆழ்ந்து சுவாசித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
சற்று மனம் அமைதியடையவும் சுஜாதாவின் நியாபகம் வந்துச் சென்றது.

'ப்ச் அந்த லெட்டரை சுஜாதாவின் கையில் சேர்த்திருக்க வேண்டாம்.' என்று எண்ணியவனின் நினைவில் கோபி வந்து போனான்.

' முதலில் அவனுக்குபாடம் புகட்ட வேண்டும்.' என்று எண்ணியவர் தன் கையோடு எடுத்து வந்த சூட்கேஸை ஓபன் செய்து பார்த்தார்‌
********************************

" சீக்கிரம் வந்து கூட்டிட்டு போறேன்." என்ற தந்தையின் வாக்கை கேட்டு சமாதானம் ஆன, சுனிதாவும், சந்தியாவும் சுஜாதாவைத் தேடி அவர்களது அறைக்குச் செல்ல‌‌… அங்கே அவர் இல்லை.

சரி தான் அவரது அறைக்குச் சென்றிருப்பாரோ என்று அங்கு செல்ல…
அவரோ விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

" அம்மா." என்று இருவரும் அழைக்க. இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருக்கும் அவரோ திரும்பவில்லை.

அவருக்கு அருகே சென்று அமர்ந்த சுனிதா, " அம்மா…" என்று அவரை அசைக்க.

கனவிலிருந்து விழித்தது போல, நிகழ்வுக்கு வந்தவர், " என்னடா…" என்று வினவ.

"அப்பா ஊருக்கு போய்ட்டாங்க." என்று உதடு துடிக்கக் கூறினாள் சுனிதா.

" ப்ச்… இப்போ அதுக்கென்ன?"

"என்னம்மா இப்படி சொல்றீங்க." அழுதே விட்டாள் சந்தியா.

எழுந்து உட்கார்ந்த சுஜாதா மகள்களை புரியாமல் பார்த்தவர், " எதுக்கு இப்படி இரண்டு பேரும் அழுதுட்டு இருக்கீங்க. இரண்டு நாள்ல உங்க அப்பா வந்துடுவாரு. இந்த லெட்டரால நம்ம வாழ்க்கையில எதுவும் மாறப் போறது கிடையாது. இதை மறந்துட்டு உங்க வேலையை பாருங்க." என.

" அம்மா… நிஜமாலுமே நீங்க லவ் பண்ணீங்களா?" என்று நம்பமாட்டாமல் சுனிதா வினவ.

" ஷ்…" என்ற சுஜாதா, கதவை ஒரு தரம் திரும்பி பார்த்தார்.

"இப்போ எதுவும் பேச வேண்டாம். அதுவும் இங்க வேண்டாம். நாளைக்கு காலைல கோயிலுக்கு போகலாம். அங்கே எல்லாம் சொல்றேன். இப்போ எனக்கு தலைவலிக்குது. கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும். பாட்டிங்க கேட்டா சொல்லிடு. நானே கீழே வரேன். யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்." என்ற சுஜாதா மீண்டும் படுத்துவிட.

" சரி மா." என்ற சந்தியா, சுனிதா வை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அத்தையிடம் சென்று, " அத்தை… அம்மாவுக்கு கொஞ்சம் தலைவலியாம். அப்புறமா வரேன் என்று சொன்னாங்க. பாட்டி கேட்டா சொல்லிடுங்க." என்றாள் சந்தியா.

" சரி டா தங்கம். அனிதாவும், நித்யாவும் உங்களைத் தேடிட்டு இருந்தாங்க."

" அப்படியா அத்தை. எங்கே அவங்க? ஹால்ல காணோம்."

" தோட்டத்தில இருக்காங்கடா."

" சரி அத்தை. நாங்க தோட்டத்துக்கு போறோம்." என்றவள், சுனிதாவுடன் அங்கு சென்றாள்.

அனிதாவும், நித்யாவும் இவர்களைப் பார்த்ததும், எழுந்து இவர்கள் அருகே வர…

" மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும், எதுக்கு எழுந்திருக்கிறீங்க… உட்காருங்க… உட்காருங்க." என்று இருவரையும் சுனிதா கலாய்க்க.

" ஹேய் வாலு. முதல்ல அக்கான்னு மரியாதையை நீ கொடு ." என்று அவள் தலையில் லேசாக கொட்டினாள் நித்யா.

"அக்கா … நாங்க தான் வரோம்ல… அப்புறம் எதுக்கு எழுந்துருச்சீங்க‌."
" அது… காலையில் வந்துச்சுல லெட்டர் அதனால எதுவும் பிரச்சனையா? அப்பா வேற ஊருக்கு கிளம்பிட்டாங்க… ஏதாவது கேட்போம்னா இரண்டு பேரையும் பிடிக்க முடியலை." என்றாள் நித்யா.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை கா. பத்திரிக்கையில் வந்த கதைக்கு அம்மா விமர்சனம் எழுதினதுக்காக, வந்த பதில் கடிதம்." என்றாள் சந்தியா .

" அப்போ சரி." என்றவள் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேலையிருப்பதாக உள்ளே செல்ல.
அனிதாவும் படிக்கணும் என்று உள்ளே சென்று விட்டாள்.

சுனிதாவும், சந்தியாவும் மட்டும் தோட்டத்திலிருக்க…

" சந்து… இந்த லெட்டரால அம்மா, அப்பாவுக்கு நடுவுல எதுவும் சண்டை வராதுல‌." என்று கண்கள் கலங்க வினவ.

" அப்படிலாம் ஒன்னும் வராது சுதா." என்று ஆறுதல் சொன்னாள் சந்தியா.

" இல்லை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அம்மா ரொம்ப டீஃப்பா லவ் பண்ணிருப்பாங்களோ! இந்த லெட்டர் அப்பவே அம்மா கையில கிடைச்சிருந்தா, அப்பாவை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க தானே."

" ப்ச்… எதுக்கு சுதா இந்த தேவையில்லாத ஆராய்ச்சி?"

" இல்லை கா. அம்மா நம்மக் கிட்ட சமாதானமா சொன்னாலும், எதையோ நினைச்சு கவலையா இருக்காங்களோன்னு தோணுது. ஒரு வேளை அந்த உதயன் சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சோ, இல்லையோன்னு கவலைப்படுறாங்களோ."

" மே பி." என்று சந்தியா தோளைக் குலுக்க.

" அக்கா…. நாம வேணும்னா, அந்த இதய உதயன் யாருன்னு கண்டுபிடிச்சு, அவர் தனக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டார்னு அம்மாவுக்கு தெரிய வச்சோம்னா, அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும்ல."

" சுதா‌. இது தேவையில்லாத வேலை. ஒரு வேளை அவரைக் கண்டுபிடிச்சு, அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தா, தேவையில்லாமல் வம்பை விலைக் கொடுத்து வாங்குற மாதிரி ஆகாதா?
சரி அதெல்லாம் விடு. தேடுறதுன்னா எங்க போய் தேடுறது. அந்தப் பத்திரிக்கை இப்ப இருக்கிற மாதிரியே தெரியலை." என்றாள் சந்தியா.

" ஆமாம்க்கா‌… நான் கூகிள் பண்ணி பாத்துட்டேன். அந்த பத்திரிக்கை இப்போ வர்றது இல்லை. அந்த பத்திரிக்கையோட ஆசிரியர் இறந்தவுடனே, கொஞ்ச நாளிலேயே பத்திரிக்கையை நிறுத்தி விட்டதாக கேள்விப்பட்டேன்‌." என்ற சுனிதா ஒரு நிமிடம் அமைதியாக இருக்க.

" அப்புறம் எப்படி கண்டுபிடிக்கிறதுடி?"
" ப்ச். என்ன அக்கா? நீ எந்த நூற்றாண்டுல இருக்க. ஒருத்தவங்கள கண்டுபிடிக்கணும்னா ஈஸியா கண்டுபிடிக்கலாம். நம்மால முடியலன்னா, டிடெக்டிவ ட்ரை பண்ணலாம்.
எந்த தகவலும் இல்லை என்றாலும் கண்டுபிடித்து கொடுத்துடுவாங்க. நமக்கு தான் நிறைய தகவல் இருக்கே. அதை வச்சு ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்.
ஆனால் இப்போ முடியாது. நாம சென்னைக்கு போய் தான், முயற்சி செய்யணும்." என்றாள் சுனிதா.

" அப்ப ஒரு முடிவோட தான் இருக்க." என்று தங்கையை முறைத்தாள் சந்தியா.

" ஆமாம் கா. "

" சரி வா. போய் சாப்பிட்டுட்டு சீக்கிரமா தூங்கலாம். அம்மா காலைல கோயிலுக்கு போகலாம் என்று சொன்னாங்கள்ல." என்று நினைவுப் படுத்தினாள் சந்தியா.

" ஆமாம். அப்புறம் அம்மா எழுதுன லெட்டரை பத்தியும் கேட்கணும்க்கா. அப்படி என்ன தான் எழுதிருக்காங்க என்று தெரிஞ்சுக்கணும்." என்று மீண்டும், மீண்டும் அந்த லெட்டரைப் பற்றியே பேசும் தங்கையை என்ன செய்வது என்று தெரியாமல், தன் தலையில் தட்டிக் கொண்டாள் சந்தியா.
இப்படி ஆர்வமும், சலிப்புமாக இருவரும் அந்த கடிதத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க... அங்கு ஒருவர், அந்தக் கடிதத்தைப் படித்து ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்
******************************
தனது இறுக்கமான மன நிலையை மாற்றுவதற்காக மீண்டும் அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அவர்.

அந்த கடிதத்தில் உள்ள வரிகளைப் படிக்கும் போது எப்பொழுதும் போல் அவருக்கு சிரிப்பே வந்தது.
அதில் உள்ள வார்த்தைகளை மனதிற்குள் மீண்டும் அசை போட்டார்.

" அன்புள்ள இதய உதயன் அவர்களே…
நான் இங்கு நலம். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்…

என் இதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியை பெருக்கும் ஊற்றாக இருப்பது உங்கள் எழுத்துக்கள் தான்.
இதை ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன்.
இதை மீண்டும் நினைவு படுத்துவதற்கு காரணம் இருக்கிறது.
உங்கள் எழுத்துக்களை படிக்காத நாள் தான், என் வாழ்நாளில் மோசமான நாளாக இருக்கும். எப்போதும் உங்க கதையில் வரும் கதாநாயகியை ரொம்ப பிடிக்கும். உங்க கதாநாயகியின் தைரியம், தன்னம்பிக்கை, படித்து தன் காலில் நிற்பது எல்லாமே ரொம்ப பிடிக்கும்.உங்க கதாநாயகியை ரசித்து, ரசித்து நானும் அதைப் போல படித்து சொந்த காலில் நிற்க ஆசை.
இப்படி என் கனவுகளை நான் வளர்ந்திருக்க… திடீரென்று எங்கள் வீட்டில் எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.
மேற்படிப்பு படிக்க வைக்க மாட்டேன் என்று விட்டார்கள்.
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். எப்படியாவது என்ன வந்து கல்யாணம் பண்ணி, உங்க கதாநாயகி மாதிரி படிக்க வைக்கிறீங்களா.
இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் தீவிர வாசகி.
சுஜாதா. "

அந்தக் கடிதத்தை வழக்கம் போல நெஞ்சோடு அணைத்து, அவளின் நினைவில் கரைந்தார்.

'மிஸ் யூ அண்ட் யூவர் ஃபீட்பேக் டியர். உனக்காகவே நான் அந்த பெயரில் கதை எழுதுவதையே விட்டுவிட்டேன்.' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
********************

காலையில் சுஜாதா அவளது அறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பே அவரது மகள்கள் இருவரும் தயாராகி இருக்க.
அதைப் பார்த்ததும் சிரிப்புடன் தலையசைத்த சுஜாதா, " ஓ ரெண்டு பேரும் ரெடியாத் தான் இருக்கீங்களா… சரி வாங்க போகலாம்." என்று கூறினார்.
சந்தியாவும், சுனிதாவும் சற்று பரபரப்பாக கிளம்பினர்.
அவர்களது ஆர்வத்தைத் பார்த்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் சுஜாதா.

கோவிலுக்குள் நுழைந்தாமோ, இல்லையோ, " அம்மா…" என்று அவசரப்பட்ட சுனிதாவைப் பார்த்து, பொய்யாக முறைத்த சுஜாதா, "இருங்கடி… சாமி தரிசனம் செய்து விட்டு வந்துடலாம். அப்புறமா உங்க இன்வெஸ்டிகேஷனை வைச்சுக்கோங்க." என்று இருவரையும் பார்த்து சொன்னார்.

"சரி மா." என்ற மகள்களோடு சென்று சாமி தரிசனம் முடித்து வந்தவர், தான் வழக்கமாக செல்லும் இடமான வன்னிமரத்து பிள்ளையார் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அந்த இடமே அமைதியாக இருக்க…

" வாவ். வாட் ஏ ப்ரீட்டி கொயிட் ப்ளேஸ்." என்று சுனிதா ஆர்ப்பரிக்க.

சந்தியாவோ, "இத்தனை நாளா இந்த இடத்தை எப்படிப் பார்க்காமல் இருந்தோம்னு தெரியலையே. " என்றாள்.

" இந்த கோயிலை முழுசா சுத்தி பார்க்கணும்னா, உங்களுக்கு ஒரு நாள் எல்லாம் பத்தாது. பிரகாரமே ஆறு இருக்கு. சாமி சன்னிதானம் நூறுக்கும் மேல இருக்கும். நானே இன்னும் முழுமையாக பார்த்திருப்பேனான்னே தெரியலை." என்று பெருமையாக கூறிய சுஜாதா, அவர்களை அழைத்துச் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்தார்.

" இந்த இடம் தான் நான் எப்பொழுதும் வரும் இடம்.

இப்பவே யாரும் வராமல் அமைதியாக இருக்கும் இந்த இடத்தில், நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது யாருமே வர மாட்டார்கள்.

வீட்ல கையில் கதை புக் வைத்திருந்தால், அவ்வளவு தான் உங்க பாட்டி, வைச்சு விளாசிடுவாங்க.
சோ… கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு, பக்கத்து வீட்டு அக்கா கிட்ட புக் வாங்கிட்டு வந்தேன்னா, அதை படிச்சு முடிக்கிறவரைக்கும் இந்த உலகத்துலே இருக்க மாட்டேன்.
கதையாசிரியர்ட்ட இருந்து வரும் லெட்டரையும் இங்கே வந்து தான் படிப்பேன்." என்றவர் சற்று நேரம் அந்த நினைவில் ஆழ்ந்திருந்தார்.
சற்று நேர அமைதிக்கு பிறகு, தன்னை சமாளித்துக் கொண்டவர், பெண்கள் இருவரையும் பார்த்து, " என்ன தெரியணும்? கேளுங்க…" என.

" அதுவா…" என்று தயங்கிய சுனிதா, தன் அக்காவை பார்க்க.

அவளோ வாயைத் திறப்பதாக இல்லை. அதைப் பார்த்ததுமே புரிந்து விட,

சுனிதாவே தனது தயக்கத்தையெல்லாம் விட்டுவிட்டு, " நீங்க அவரை ரொம்ப லவ் பண்ணிங்களா" என்று கேட்டே விட்டாள்.

" லவ்வுனும் சொல்ல முடியாது. இல்லைன்னும் சொல்ல முடியாது. அந்த வயசுல பேரு தெரியலை. மே பி க்ரெஷ்ஷா இருக்கலாம்.

ஆனா அந்த வயசுல, எப்படியாவது கல்யாணத்துல இருந்து தப்பிச்சு, என் கனவை நிறைவேத்திக்க போயிடுணும்னு நினைச்சேன்." என்றாள்.

" என்னம்மா இப்படி சொல்றீங்க. சின்ன வயசுல உங்களுக்கு அப்பா தான்னு பார்த்து வச்சுட்டாங்க தானே. அப்புறம் எப்படி? நம்பவே முடியவில்லையே?" என்று சந்தியா வினவ.

" சின்ன வயசுலே பார்த்து வச்சது தான் காரணம்." என்று கோபமாக கூறிய சுஜாதாவைப் பார்த்து பெண்கள் இருவரும் திகைக்க.

" என்னுடைய வாழ்க்கையில் நடந்ததை சொன்னால் தான் உங்களுக்குப் புரியும்." என்ற சுஜாதா, அவளது கடந்தகாலத்தை நோக்கிச் சென்றாள்.
*************************
இரவு வீட்டிற்குச் சென்றிருந்த சத்யபிரகாஷிற்கோ, யாரும் இல்லாத தனிமை வெறுப்பாக இருந்தது.
அவன் உள்ளே நுழைந்ததும், " என்ன ஐயா… திடீர்னு வந்துட்டீங்க… சாப்பாடு எடுத்து வைக்கவா? " என்று பரபரப்புடன் கேட்டார் அந்த வீட்டின் சமையல் அம்மா.

" இல்லை… எனக்கு பசியில்லை. நீங்க போய் படுங்க. " என்று விட்டு தனதறைக்கு சென்றவர், ஃப்ரெஷ்ஷப்பாகி விட்டு, படுக்கையில் சரிந்தார்.

அவரை எதையும் சிந்திக்க விடாமல் கோபி
கண்முன்னே வந்து சென்றார்.

'நாளைக்கே அவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.' என்று எண்ணியவரும், அவரது கடந்த காலத்தை நோக்கிச் சென்றார்.


 
Top