• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
324
ஓலை - 8


கடந்த காலம்…

முப்பது வருடங்களுக்கு முன்பு…


"ஏன் மா. மதிக்கு பாவாடை தாவணி. எனக்கு மட்டும் பாவாடை, சட்டை… " என்று வழக்கம் போல சுஜாதா, அவளுக்கு வாங்கிய பாவாடை சட்டையில் திருப்தி இல்லாமல் வினவ.


"அடிக்கழுதை. அவ உன்னை விட ஒரு வருஷம் பெரியவ. பெரிய மனுசி ஆகிட்டா… அதான் அவளுக்கு பாவாடை தாவணி. உனக்கு அடுத்த வருஷமே எடுக்குற பிராப்தம் அமையட்டும்." என்றார் அவளது அன்னை.


" போங்க மா. அவளுக்கு மட்டும் எப்போதும் அவ ஆசைப்படுறதை வாங்கிக் கொடுப்பீங்க. நான் கேட்டா மட்டும் செய்யாதீங்க. " என்று கோபமாக அடுப்படியில் இருந்து வெளியே வந்த சுஜாதாவோ, 'சீக்கிரமா வயசுக்கு வர வேண்டும்.' என்று தீவிரமாக மனதிற்குள் வேண்டத் தொடங்கினாள்.


வயசுக்கு வந்த பிறகு, ' ஏன் தான் வயசுக்கு வந்தோமோ.' என்று வருந்தப்போவதை அப்போது அவள் அறியவில்லை.


மீண்டும் மதியரசிக்கு அருகில் வந்தாள். அவள் கையிலிருந்த ஆடையிலே கண் வைத்தவள், " மதி… இது எனக்கு புடிச்ச கலரு… தர்றியா… நான் ஒரு தடவை போட்டுப் பார்த்துட்டு தரேன்." என்று அந்த பட்டுப் பாவடைத் தாவணியை எடுத்து தடவித், தடவிப் பார்த்துக் கொண்டே வினவினாள் சுஜாதா.


"ஐயோ! ட்ரெஸ் மடிப்பு களைஞ்சாலே அம்மா வைக்க மாட்டாங்க. போட்டது மட்டும் தெரிஞ்சா தொலைச்சிடுவாங்க. கோடி ட்ரெஸ் தீபாவளி அன்னைக்கு தான் போடணும்னு சொல்லியிருக்காங்க." கண்களில் பயம் தெரிய, மெல்லிய குரலில் கூறினாள் மதியரசி.


" ப்ச் மதி. அதான் மூன்று ட்ரெஸ் இருக்கே. நான் இது ஒன்னை தானே போட்டுப் பார்க்குறேன் என்று சொன்னேன். இப்போ தருவியா? மாட்டியா? " என்று தன்னை விட பெரியவளான மதியரசியை மிரட்டிக் கொண்டிருந்தாள், அந்த வீட்டின் கடைக் குட்டியான சுஜாதா.


" தீபாவளிக்கு ஒன்னு. பிறந்தநாளுக்கு ஒன்னு. பொங்கலுக்கு ஒன்னுன்னு அம்மா சொன்னாங்க. ஆளை விடு சுஜா." என்றவள் அங்கிருந்து ஆடைகளை அள்ளிக் கொண்டு, அவர்களது அறைக்கு ஓடி விட்டாள்.


உள்ளே செல்லும் மதியரசியை முறைத்துக் கொண்டிருந்த சுஜாதா, அவளது முதுகைப் பார்த்து பழிப்புக் காட்டியவள், பிறகு வெளியே விளையாட ஓடி விட்டாள்.


உள்ளே டிரெஸ்ஸை வைத்து விட்டு வந்த மதியரசி, சுஜாதாவை தேட. அவளைக் காணவில்லை.


அந்த பெரிய வீடு முழுவதும் தேடி அலைந்தவள், தனது சின்ன அத்தையிடம் சென்று, "அத்தை..

சுஜாவை பார்த்தீங்களா? " என.


" நான் பார்க்கலையே கண்ணு. இங்கே தான் எங்கேயாவது இருப்பா?" என்று விட்டு அவரது வேலையை பார்க்க…


மதியரசியோ, முகம் வாட நின்றாள்.

அம்மிக்கல்லில் மருதாணிஇலை, கொட்டைப்பாக்கு, புளி வைத்து அரைத்துக் கொண்டிருந்தவரோ, மதியரசி இன்னும் நகராமல் முகம் வாடி அமைதியாக இருப்பதைப் பார்த்து விட்டு, " மதி… சுஜா ஒரு வேளை வெளியே விளையாடப் போயிட்டா போல. இரு மனோவ அனுப்பி கூட்டிட்டு வர சொல்றேன்." என்றவர், " மனோ… மனோ…" என்று கத்திக் கொண்டே, நன்கு அரைப்பட்ட மருதாணியை கிண்ணத்தில் வழித்து வைத்துக் கொண்டிருந்தார்.


" என்ன சித்தி கூப்பிட்டீங்களா? " என்று அப்போது தான் கடையிலிருந்து வந்திருந்த மனோகர் வினவ.

"டேய் மனோ… . சுஜா வெளியே விளையாட போயிருக்கா. இருட்டுற நேரமாச்சு. அவளைக் கூட்டிட்டு வாடா." என.


" ஐயோ! ஆளை விடுங்க சித்தி. நான் கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டா" என்றான்.


" டேய் மனோ. சித்தி சொல்றதைக் கேட்க மாட்டியா?" என்று அவனது அம்மா கண்டிப்புடன் வினவ.


" அம்மா. நான் போய் கூப்பிட்டா சண்டைக்கு தான் வருவா. நானே கடைக்குப் போயிட்டு டயர்டா வந்துருக்கேன். எனக்கு ஃபர்ஸ்ட் காஃபி கொண்டாங்க." என்றவன், ' நாலு நாள் லீவ்ல கூட ஃப்ரெண்ட்ஸோட வெளியே போக முடியலை.' என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.


" அத்தை… எனக்கும் காஃபி." என்றான் அவன் பின்னாலே வந்த சத்யபிரகாஷ்.



" என்னடா பிரச்சனை? ஏன் லூசாட்டம் புலம்பிட்டு இருக்க." என்று மனோகரைப் பார்த்து கேலியாக வினவ.


" டேய் எல்லாம் உன்னால தான். சாயந்திரம் கிரவுண்டுக்கு போகணும்னு சொல்லியிருந்தேன்ல. நீ பாட்டுக்கு கடையிலிருந்து வராமலிருக்க. சரி உன்ன கூப்பிடலாம்னு கடைக்கு வந்தா, என்னையும் பிடிச்சு உட்கார வைச்சுட்டாங்க." என்று சத்யபிரகாஷைப் பார்த்து முறைத்தான்.


"சரி விடு டா. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. கடை கிடையாது. நாளைக்கு கட்டாயம் போகலாம் டா." என்று மனோகரை சமாதானம் செய்தான் சத்யபிரகாஷ்.


" அப்படியே ஒன்னு விட்டேனா பாரு. எல்லாம் உன்னால தான். இன்னைக்கு விளையாட வரேன்னு சொல்லிட்டு போகாமல், நாளைக்கு போனால் சேர்த்துப்பாங்களா சொல்லு.

உன்னால என்னையும் கிரிக்கெட்ல சேர்த்துக்க மாட்டாங்க." என்று மனோகர் புலம்ப.


" விடு டா. தீபாவளி நேரம். கடையில கூட்டமா இருந்தது. அதான் என்னால கிளம்ப முடியலை. உனக்கென்ன நான் அவங்க கிட்ட சாரி கேட்டு, எப்படியாவது நம்மளையும் சேர்த்துக்க வைக்கிறேன்." என்றான் சத்யபிரகாஷ்.


காஃபியை கொண்டு வந்த மனோகரின் அம்மா, " டேய் சத்யாவைப் பாரு பொறுப்பா கடைக்கு போறான். நீ என்னடான்னா அம்மா சொல்ற எதையும் கேட்கிறது கிடையாது. தங்கச்சியைக் கூட்டிட்டு வாடாண்ணா, ஆயிரத்தெட்டு சாக்கு போக்கு சொல்ற." என்றார்.


" என்ன அத்தை செய்யணும் சொல்லுங்க. நான் செய்றேன்." என்று நல்லப் பிள்ளையாக வினவினான் சத்யபிரகாஷ்.


‘அவனாக வாலண்ட்ரியாக வேலை செய்றேன் என்று சொல்ல காரணமே சுஜாதாவை அழைத்து வரச் சொல்கிறார்கள் என தெரிந்து தான். அவளிடம் வம்பு வளர்க்க ஒரு வாய்ப்பு தானாக வர. அதை அவன் விடுவானா?’


" அது வா சத்யா. சுஜா வெளில விளையாடப் போயிருக்கா… இன்னும் வரலை. மணி ஆயிடுச்சு. கூட்டிட்டு வர்றீயா."


" சரி அத்தை." என பவ்யமாக கூறினான்.


மனோகரும், சத்யபிரகாஷும் பள்ளியிறுதி வகுப்பில் இருக்க…

இயல்பாகவே அவனிடம் அந்த டீன்ஏஜ் வயதுக்குரிய குறும்புத்தனம் அதிகமாக இருந்தது.


கடைக்குட்டி என வீட்டில் எல்லோரும் சுஜாதாவிற்கு செல்லம் கொடுக்க.


அவளை வம்பிழுப்பதே அவனுக்கு பொழுதுபோக்கு.


இப்பொழுதும் அவனுடைய பெரிய அத்தையே ஒரு வாய்ப்பு கொடுக்க. அதை வீணாக்குவானா…


அதான் சுஜாதாவைக் கூப்பிட கிளம்பிவிட்டான்.


சுஜாதா எங்கு இருப்பாள் என்று நன்கு அறிந்தவன், நேராக அவள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும் இடத்துக்குச் சென்றான்.


சுஜாதாவோ சற்றுமுன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மறந்து‍, ஏன் இந்த உலகத்தையே மறந்து, மணி என்ன என்றுக் கூடப் பார்க்காமல் , ஐஸ்பால் விளையாடிக் கொண்டிருந்தாள்‌.


"ஏய் சுஜாதா… " என்று எப்போதும் போல அவளது பெயரை நீட்டி, முழக்கி கத்த…


ஒரு வீட்டின் திண்ணையில் மறைந்து இருந்தவள், அவனைப் பிடித்து வேகமாக உள்ளே இழுத்துக் கொண்டே, " ஐயோ! சத்தம் போடாதீங்க மாமா." என்றாள்.


" ஏய் அரை டிக்கெட்டு… உன்ன வீட்ல வலை வீசி தேடுறாங்க. வா."


" நீங்க போங்க மாமா. நான் வர்றேன்." என்றவள், யாராவது அவுட் ஆகிட்டாங்காளா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


" ஏய் லூசு. மணி என்ன ஆகுது. அப்பா, மாமாவெல்லாம் கடை சாத்திட்டு வர நேரமாகிடுச்சு. இன்னும் வெளியே விளையாடிட்டு இருந்தா திட்டுவாங்க. ஒழுங்கா வா." என்றான் சத்யபிரகாஷ்.


இவ்வளவு நேரம் ஆட்ட மும்முரத்தில் இருந்த சுஜாதா அவன் பேசியதை கருத்தில் கொள்ளவில்லை.

இப்போது தான் கவனித்தவள், " என்னது ? ஏய்னு கூப்பிடுறீங்களா? ஒழுங்கா பேரை சொல்லி கூப்பிடுங்க." என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.


" ஏய் காப்படி. என்னைப் பார்த்து மிரட்டுறியா? நான் ஏய் மட்டும் சொல்லலை. அரை டிக்கெட்… லூசு… காப்படி… இப்படி எல்லாம் தான் சொன்னேன். திரும்பவும் சொல்லுவேன். இப்போ என் கூட வரப் போறீயா? இல்லையா?" எனத் திமிராக வினவ…


தலையை சிலுப்பிய சுஜாதாவோ, " வரமாட்டேன்.போ மாமா. " என்றாள்.


அவளது கண்களோ, கண்ணீரை இப்போ விடவா? அப்போ விடவா? என்பது போல துருத்திக் கொண்டிருந்தது.


" ஓஹோ அப்படியா…" என்றவன், அதற்கு பிறகு சுஜாதாவிடம் பேசாமல், அங்கு ஒளிந்திருந்தவர்களை தேடிக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்றவன், "அதோ அந்த பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்கே அந்த வீட்ல தான் சுஜாதா இருக்கா." என்று போட்டுக் கொடுத்தான்‌.


அவன் செய்தவற்றைப் பார்த்த சுஜாதா,அழுதுக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.


அவன் பின்னே வந்த சத்யபிரகாஷ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே வந்தான்.


" அத்தை… இந்த மாமாவை என்னென்னு கேளுங்க. என்னை வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க." என்று அழ.


" அடியே சுஜாதா. வர,வர உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாடுச்சு. டைம பார்க்க மாட்டியா? எட்டாக போகுது. நான் தான் அவனை அனுப்புனேன். உன்னை கூட்டிட்டு வர்றதுக்காக. ஒழுங்கா கை கால் கழுவிட்டு வா. இரண்டு வாய் சாப்பிட்டு, உங்க அம்மா அரைச்சு வச்சுருக்க மருதாணியை போய் போட்டுக்க."


" பெரியம்மா… இந்த மாமா என்ன பண்ணாங்கன்னு தெரியுமா? எதுவும் தெரியாமல் உங்க தம்பி பையனுக்கே சப்போர்ட் பண்ணுங்க."என்று சுஜாதா கத்த…


அடுப்படியில் இருந்து சுஜாதாவின் அம்மா வேகமாக அங்கே வந்தவர், " சுஜாதா… உனக்கு வர வர கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. எல்லாரும் குடுக்குற செல்லம் தான்.

பெரியம்மா கிட்ட இப்படி தான் எதிர்த்து பேசுவாங்களா? அப்புறம் சத்யபிரகாஷ் உன்னை கட்டிக்க போறவன். அவன் கிட்ட வம்பு பண்ணாத." என.


" நான் எங்கே வம்பு பண்ணேன். அவன் தான்…" என்று சுஜாதா சொல்ல வர‌.


தலைல ஒரு குட்டு குட்டியவர்,"ஏய் இன்னும் ஒரு வார்த்தை பேசுன, வெளக்கமாறு தான் பேசும். ஒழுங்கா வந்து சாப்பிட்டுட்டு போய் மருதாணி போட்டுக்க." என்று அவர் கத்த.


இதற்கு மேல் பேசினால், அம்மா சொன்ன மாதிரியே அடித்து விடுவார்கள் என்று நன்கு அறிந்த சுஜாதா, அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.


சத்யபிரகாஷ், ' அடேங்கப்பா… அத்தையோட மிரட்டலுக்கு இவ்வளவு பயமா?' என்று எண்ணியவன், கேலியாக அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான்.


அவளோ, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.


சுஜாதாவிற்கு கோபம் குறையாமல், உள்ளுக்குள் கணன்றுக் கொண்டு தான் இருந்தது.


அதே கோபத்துடன் வந்தவள், மருதாணி வைத்து விடுகிறேன் என்றுக் கூறிய பெரியத்தையிடம், " எனக்கு ஒன்னும் வேண்டாம்." என்று விட்டு போய் படுத்து விட்டாள்.


" ஏன் டா கண்ணு. என் தங்கத்துக்கு என்ன கோபம்?" என்று அவர் சமாதானம் செய்ய.


அங்கு வந்த சத்யபிரகாஷோ, " விடு மா. அவ திமிர் பிடிச்சவ. அத்தை திட்டுனத்துக்கு, உன் கிட்ட கோபத்தை காண்பிக்குறா" என.


போர்வையை தலை வரை போத்திருந்தவள், 'அடேய் மாங்காய் மடையா. உன்னால தான் எல்லாம்.' என்று முணுமுணுத்தவளோ, அழுதுக் கொண்டே உறங்கி விட்டிருநந்தாள்.


காலையில் எழுந்தவள், ஆசையாக கையைப் பார்த்தாள்.


எப்படியும் இரவு தூக்கத்தில், அம்மா மருதாணி வைத்து இருப்பார்கள் என்று நினைத்து, ஆசையாக கைகளைப் பார்க்க. அதுவோ வெறுமையாக இருந்தது.


அவளோ, ஏமாற்றத்துடன் தன் கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வெளியே இருந்து வந்த மதியரசி, " சுஜா… இங்கே பாத்தியா எவ்வளவு அழகாக சிவந்திருக்கு." என்று அவளது கைகளை நீட்ட.


அதைப் பார்த்து விட்டு, " ஒ…" என அழுதாள் சுஜாதா.

மதியரசிக்கோ, ' தான் என்ன செய்தோம்? சுஜாதா எதற்கு அழுகிறாள்?' என்று புரியாமல் திகைத்து விழிக்க...


அங்கு வந்த சத்யபிரகாஷோ, " ஏன் சுஜா அழற?" என பதற்றத்துடன் வினவினான்.


அவளோ, எதுவும் சொல்லாமல் செறுமி செறுமி அழ…


மனோகரும் அங்கு வந்து விட்டான்.

பெரியவர்கள் எல்லோரும் காலையிலேயே எழுந்து சமையல் செய்து விட்டு, தோட்டத்தில் பலகாரம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்னும் இரண்டு நாளில் தீபாவளி என்பதால் அவர்கள் பரபரப்பாக இருந்தனர்.


சுஜாதா அழுவது, அவர்கள் காதில் விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

அவ்வளவு பெரிய வீட்டில் இவர்களோ, முன் கட்டில் உள்ள ஒரு அறையில் இருந்தனர்.


சுஜாதா அழுகையை நிறுத்தியபாடில்லை.

" ஏதாவது சொல்லுவாளா!" என்று எல்லோரும் அவளையே பார்க்க‌.

அவளோ,ஒன்றும் சொல்வது மாதிரி இல்லை எனவும் சத்யபிரகாஷ், மதியரசிடம், " ஏன் மதி… சுஜா அழறா?" என்று வினவ.


" எனக்கேதும் தெரியலையேணா. மருதாணி போட்டுருக்க கையை காண்பிச்சேன். அவ்வளவு தான். " என்று பயந்தக் குரலில் கூறினாள் மதியரசி.


" சரி நீ விடு…" என்றவனுக்கு எதற்காக அவள் அழுகிறாள் என புரிந்து விட்டது.

சுஜாதாவின் அருகே சென்றவன், செய்த காரியத்தில் அங்கிருந்த மதியரசியும், மனோகரும் வாயை பிளக்க…

சுஜாதா அவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்தவள், அழுகையை நிறுத்திவிட்டு முறைக்க ஆரம்பித்திருந்தாள்.

******************************


நிகழ்காலம்...


அரைகுறையாய் உறங்கி எழுந்தாலும், காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியாக உணர்ந்தார் சத்யபிரகாஷ்.

அவருக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களை ஒலிக்கவிட்டு அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க…


அவரது மனமோ லேசாக, நேற்று இருந்த இறுக்கம் இப்போது மறைந்திருந்தது. உற்சாக வானில் பறந்துக் கொண்டிருந்தார்.


அதைத் தடை செய்வது போல், அவரது ஃபோன் அடிக்க…


எடுத்துப் பார்த்தவர் தன் நாக்கைக் கடித்துக் கொண்டார்.


" ஹலோ சத்யபிரகாஷ் ஸ்பீக்கிங்…" என்றுக் கூற…



அந்தப்பக்கம் மனோகரோ வசைமாரி பொழிந்தார். " டேய் நீயெல்லாம் மனுசனா டா. ஊருக்கு வந்தவன் கடைக்கு இன்னைக்கு வரேன், நாளைக்கு வரேன் என்று சொல்லிட்டு, இப்படி திடுதிப்புனு ஊருக்கு போயிட்ட. சொல்லிட்டுக் கூட போகமாட்டியாடா

என்னடா நெனச்சிட்டு இருக்க?"


" டேய் முக்கியமான வொர்க். நான் தான் பார்த்தாகணும். அதான் டா. கிளம்பிட்டேன்."


" பேசாத டா. எப்ப பாரு வேலையை கட்டிக்கிட்டு இருக்க. அதிசயமா இந்த தடவை தான் ஒரு வாரம் குடும்பத்தோட இருக்கணும்னு கிளம்பி வந்திருக்கேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டா, இப்படி கிளம்பிட்ட." என்று மனோகர் பொறிய.


" டேய் நான் மட்டும் தான்டா வந்துருக்கேன். சுஜா, பிள்ளைங்க எல்லோரும் அங்கே தான இருக்காங்க. "


" டேய்… அவங்களையும் அழைச்சிட்டு போறது தானே. நல்லா வாயில வந்துடும்."


" சரி டா. சொல்லாமல் வந்தது என்னோட தப்பு தான். சாரி. இப்ப நான் ஆஃபீஸ் கிளம்பிட்டு இருக்கேன். அப்புறமா பேசவா?" என்று அவனிடமிருந்து தப்பிக்க பார்க்க…


" டேய் இரு டா. அத்தை பேசணும்னுனாங்க. " என்ற மனோகர் தனது அத்தையிடம் கொடுக்க…

அடுத்த அர்ச்சனை ஆரம்பமானது.


" ஹலோ அம்மா…" என.


" என்னப்பா… ஊருக்கு போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ண சொன்னேன். எங்காச்சும் பண்ணியா? சுஜாதாட்ட கேட்போம்னு பார்த்தா, காலையிலே பிள்ளைங்களை கூட்டிட்டு கோவிலுக்குப் போயிட்டா. ரெண்டு பேரும் இப்படி பொறுப்பே இல்லாமல் இருக்கீங்க." என அவர் குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்க.


" இங்க கொண்டாங்க அண்ணி. நான் பேசுறேன்." என்று வாங்கிய சுஜாதாவின் அம்மா, " மாப்பிள்ளை நீ கொடுக்கற இடம் தான், இந்த பொண்ணு இப்படி இருக்கா… இல்லன்னா நீ ஊருக்கு கிளம்பும் போது,என்ன வேணும்னு கவனிக்காமல் இருப்பாளா. இப்பவும் பாரு என் பேத்திகளையும் கூட்டிட்டு போய்ட்டா. அவங்களோட பேசிட்டு இருக்கலாம்னு பார்த்தோம்." என அவரது ஏக்கத்தைக் கூற.


" உங்களுக்குத்தான் தெரியுமே அத்தை. சுஜாதாவிற்கு கோவில் எவ்வளவு முக்கியம்… அதான் போயிருக்கா. சீக்கிரம் வந்துடுவா. நானும் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன் அத்தை. அம்மாக் கிட்டேயும் சொல்லிடுங்க. ஆஃபிஸுக்கு டைம் ஆயிடுச்சு. வச்சுடுறேன். " என்று சமாதானம் செய்து விட்டு ஃபோனை வைத்தான் சத்யபிரகாஷ்.


' சுஜா ஆறுதலுக்காக

தானே கோவிலுக்கு போயிருப்பாள்.' என்று மனதிற்குள் நினைத்தவனுக்கோ, அவனது இயலாமையில் கோபம் வந்தது.


அவன் சுஜாதாவை எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்க, இப்போது கோபியின் அழைப்பு வந்தது.

அவனது கோபமெல்லாம், இப்போது கோபியின் மீது சென்றது.

 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
646
கோபி தான் அந்த கடிதம் எழுதியதா? வாய்ப்பில்லையே:unsure::unsure::unsure:.
 
Top