• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓலை-9

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam

ஓலை - 9

கடந்த காலம்…


ஓவென அழுது கொண்டிருந்த சுஜாதாவிற்கு முன்பு சம்மணம் போட்ட சத்யபிரகாஷ், கையில் ஒரு சொம்பை வைத்துக் கொண்டு, " அம்மா… அம்மா…" என்று சுஜாதாவைப் போலவே செருமி, செருமி அழுதுக் கொண்டே அவளது கண்களில் இருந்து வரும் கண்ணீரை பிடிப்பது போல அந்த சொம்பை வைத்துக் கொண்டிருந்தான்.


சுஜாதாவிற்கு தன்னை கிண்டல் செய்யவும், அழுகை நின்று கோபம் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.



மதியரசியும், மனோகரும் சிரிப்பை அடக்கிப் பார்த்து, அது முடியாமல் கண்களில் நீர் வழிய விழுந்து, விழுந்து சிரித்தனர்.


சத்யபிரகாஷிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்த சுஜாதா, " அம்மா…" என ஆத்திரமாக கத்தினாள்.


அவளது அழைப்பில் அங்கிருந்த மூவரும் தெறித்துக் ஓடிவிட்டனர்.

பின்னே என்ன? உலகின் மறுகோடியில் இருந்தாலே, இவ கத்திய சத்தத்திற்கு வந்து விடுவார்கள். தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தவர்களா வர மாட்டார்கள்.

உடனே வந்து விடுவார்கள். அதுவும் சத்யபிரகாஷின் அம்மா வந்து விட்டால், அவ்வளவு தான். அவளை வம்பிழுத்த மூவரையும் திட்டி தீர்த்து விடுவார். அது தெரிந்து தான் மூவரும் ஓடி விட்டனர்.


அதே போல சுஜாதாவின் சத்தத்தில் உள்ளே வந்த, அவரது பெரியத்தை, அப்போது தான் தூங்கி எழுந்து தலையெல்லாம் கலைந்திருக்க, கண் கலங்கி, சிவந்து இருந்த மருமகளை பார்த்து பதறியவர், " ஏன் மா அழற?" என்று வினவ.


" அத்தை…" என்று அவள் ஏதோ கூற வருவதற்குள், தோட்டத்திலிருந்து வந்த அவளது அம்மா, " ஏன் டி இப்படி கத்துற? பொம்பிளை புள்ளையா, லட்சணமா இரு டி. மதியும் உன்னை விட ஒரு வயசு தானே பெரியவ. எவ்வளவு அமைதியா இருக்கா. அவளை மாதிரி இரேன் டி" என்றார்.


இவ்வளவு நேரம் சத்யபிரகாஷ் மேல், இருந்த கோபமெல்லாம் மறந்து, தான் எதற்காக கத்தினோம் என்பதையும் மறந்து, தன் அம்மா திட்டுவதையும் கூட கவனத்தில் கொள்ளாமல், கீழே இருந்து எழுந்த சுஜாதா,தன் அம்மா முன்னாடி தன் இரு கைககளையும் நீட்டினாள்.


" இப்போ எதுக்கு பரதநாட்டியம் ஆடுற மாதிரி கையை நீட்டுற… என்ன விஷயம் சொல்லு. எனக்கு தோட்டத்தில் ஏகப்பட்ட வேலைக் கிடக்கு. உன் கிட்ட வார்த்தையாடெல்லாம் எனக்கு நேரமில்லை." என.


அம்மா இன்னும் தன்னை கண்டுக்கொள்ளவில்லை எனவும் சுஜாதாவின் கண்களில் மீண்டும் அருவி பொழிய.


“ஏய் சுஜாதா எதுக்கு இப்போ காலங்கார்த்தால அழுதுட்டு இருக்க?" என்று கடுப்புடன் வினவினார்.


“ எனக்கு ஏன் மா மருதாணி வைச்சு விடல." என்று அழுகுரலிலில் சுஜாதா கூற.


" நீ தானே, நேத்து ரோஷத்தோட வேண்டாம் என்று போன."


"அம்மா… நீ எப்படியும் வச்சு விடுவன்னு நினைச்சு காலையில ஆசையா பார்த்தேன்." என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள் சுஜாதா.


" அடிக்கழுதை… வேலையை முடிச்சிட்டு, ராத்திரி வந்து எத்தனை முறை எழுப்பினேன் தெரியுமா? அசைஞ்சா தானே. சரி தூக்கத்திலே வைப்போம்னு பார்த்தா, கையைத் தராமல் தலைக்கு அடியில் வைச்சுக்கிட்ட. அவ்வளவு பிடிவாதம். ஒழுங்கா குளிச்சிட்டு, சாப்பிட்டுவிட்டு வா. நேத்து அரைச்சதை வச்சிவிடுறேன்."


" என்னது. நேத்து அரைச்சதா?" என அம்மாவைப் பார்த்து கேள்வி எழுப்பிய சுஜாதா, " அத்தை… அது சிவக்காது. " என்று பரிதாபமாக, அருகே இருந்த அவளது பெரிய அத்தையை பார்த்தாள்.


" அங்கே என்ன கேட்டுட்டு இருக்க. இந்த மருதாணி தான் இருக்கு. புதுசா அரைக்க வேற மருதாணி இலை கிடையாது. நேத்து தான் தோட்டத்தில் இருந்ததை எல்லாத்தையும் வெட்டி, தெருவுல எல்லோருக்கும் குடுத்தாச்சுல்ல." என்று இடையிட்டார் அவளது அம்மா.


" எனக்கொன்னும் வேணாம்." என்றாள் சுஜாதா.


" வேணாம்னா… போ. மீதி இருக்குறதை காய வச்சு தேங்காய் எண்ணையில் காய்ச்சிடுறேன்."



ஒன்றும் செய்ய இயலாமல், மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள் சுஜாதா.


" வாயை மூடு. காலங்காத்தாலே அழுதுட்டு இருந்தா வீடு வெளங்குமா? எல்லாம் இந்த வீட்ல இருக்குறவங்க கொடுக்குற செல்லம் தான். இன்னும் ஐந்து நிமிஷத்துல, இந்த இடத்தை விட்டு எழுந்து போகலை. வெளியே போயிருக்க, உங்க அப்பா வந்ததும் சொல்லிடுவேன்." என்றார் சுஜாதாவின் அம்மா.


" அப்பா கிட்ட சொல்லிடுவேன்." என்று அஸ்திரம் சுஜாதாவிடம் நன்கு வேலை செய்தது.

மெல்ல அந்த இடத்தை விட்டு, எழுந்து சென்றாள்.


" பாவம் டி. குழந்தை முகமே வாடிருச்சு. ஆனாலும் என் தம்பி பேரை சொல்லி ரொம்பத் தான் மிரட்டுற." என்றார் சத்யபிரகாஷின் அன்னை.


" சும்மா இருங்க அண்ணி. இல்லைன்னா இவளை அடக்க முடியாது. இவ்வளவு நேரம் வாயை மூடினாளா. அவங்க அப்பா பேரை சொன்னதும், எப்படி வாயை மூடிட்டு போயிட்டா."


" அதுவும் சரி தான். " என்றவர் சிரித்தார்.


அங்கிருந்து சென்ற சுஜாதா, சத்தமில்லாமல் குளிச்சிட்டு வந்தவள், நேராக பலகாரம் சுடும் இடத்திற்கு சென்றாள்.


சூடான எண்ணெயில் பொறித்து எடுத்த பொன்னிற முறுக்கு, "அவளை வா, வா." என அழைக்க.


கோபத்தையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு, அதில் கை வைத்தாள் சுஜாதா.



அவள் கையை பிடித்து தடுத்த அவளது பெரியம்மா, " வெறும் வயித்துல எண்ணெய் பலகாரம் சாப்பிட கூடாது. ரெண்டு இட்லி சாப்பிட்டு வா… அப்புறம் உனக்கு எவ்வளவு வேணுமோ, எடுத்துக்க." என்றார்.


" ப்ளீஸ் பெரியம்மா… " என்று கெஞ்ச.


" முதல்ல சாப்பிட்டுட்டு வா சுஜா. மதியைப் பாரு. சாப்பிட்டு வந்து தான் எடுத்துக்கிட்டா." என.


அங்கு சமத்தாக உட்கார்ந்து கொண்டு, முறுக்கை நொறுக்கும் மதியரசியைப் பார்த்து முறைத்தாள்.


" அவளை ஏன் டி. முறைக்குற. " என்று சுஜாதாவின் தலையில் கொட்டினார் அவளது அம்மா.


" அம்மா…" என சிணுங்கிய சுஜாதா, வேறு எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் சாப்பிட சென்றாள்.

ஏனென்றால் அவளுக்கு அந்த முறுக்கு முக்கியம்.


வேகமாக இட்லியை விழுங்கி விட்டு வந்தவள், ஒரு தட்டில் முறுக்கு, சோமாஸை எடுத்துக் கொண்டவள், வீட்டின் வெளி ஹாலில் உள்ள பெஞ்சில் உட்கார்ந்து நிதானமாக சாப்பிடத் தொடங்கினாள்.


திடீரென அவளிற்கு ஒரு சந்தேகம், ' இந்தப் பலகாரம் தீரும் வரை, பேட்டா தருவாங்களா? மாட்டாங்களா?' என தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தாள்.


அவளுக்கு அவளது கவலை. தினமும் பலகாரம் வாங்கி சாப்பிடுவதற்காக, ஆளுக்கு இருபத்தைந்து காசு தருவார்கள். இவள் அந்த காசை சேர்த்து வச்சு தான் , தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களுக்கு போகலாம் என்று திட்டம் தீட்டி இருந்தாள்.

அதற்கு ஏதும் பங்கம் வந்து விடுமோ என்பதே அவளது இப்போதைய கவலையாக இருந்தது.

அவளது யோசனையில் குறுக்கிடுவது போல் மதியரசி வந்தாள்.


" சுஜா." என.

அவளோ, முகத்தை திருப்பிக் கொண்டாள்.


" சுஜா. நான் என்ன டி பண்ணேன். என் மேல ஏன் கோவம்." என்று அவளது தாவாங்கட்டையை பிடித்து கெஞ்சலாக கேட்க.


"மாமா என்னை வம்பு இழுக்கும் போது, நீயும் தான சிரிச்ச. "


" மன்னிச்சுக்கோ டி. நான் வேணும்னே சிரிக்கலை. அண்ணா பண்ணதப் பார்த்ததும், என்னால சிரிப்ப அடக்க முடியல." என்றவளுக்கு மீண்டும் சிரிப்பு வர, சுஜாதாவின் கோபத்தை நினைத்து கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள்.


" நான் உன் கூட பேசணும்னா, உன்னோட பங்கு முறுக்குல, எனக்கு பாதி தரணும்." என்று முறுக்கை கடக்கு, முடக்கென்று கடித்துக் கொண்டே சுஜாதா வினவ.


"அதானே வேணும்… உனக்கு என்னோட பங்கு எல்லாத்தையும் நான் தரேன். ஆனால் என் கிட்ட பேசாமல் மட்டும் இருக்காதே." என்று மதியரசி கூற.


" வேணாம், வேணாம் பாதி தந்தா போதும். என்றாள் சுஜாதா.


" ஆமா நான் வரும் போது, தீவிரமா யோசிச்சிட்டு இருந்தியே! என்ன யோசனை? எந்த கோட்டையை பிடிக்க யோசனை?" என்று சுஜாதா பேசவும், சந்தோஷத்தில் கேலியாக வினவினாள் மதியரசி.


" அது ஒன்னுமில்ல மதி. நான் மட்டும் பையனா பொறந்திருந்தா எப்படி இருக்கும்." என்று நினைச்சுட்டு இருந்தேன்.


" நிஜமா?" என சந்தேகமாக வினவினாள் மதியரசி.


" உனக்கு இதுல என்ன சந்தேகம்?" என்றாள் சுஜாதா.


" இல்லை… நீ அவ்வளவு சீரியஸா யோசிக்கிற ஆள் இல்லையே… " என சந்தேகமாகவே மீண்டும் வினவ.


" அதுவா… முதல்ல நமக்கு பேட்டா காசு, டெய்லி தருவாங்களானு தான் யோசிச்சேன். அதை மிச்சம் பண்ணி தீபாவளிக்கு ரிலீஸாகுற எல்லா படத்துக்கும் போகணும்னு நினைச்சேனா, அப்படியே படத்துக்கு அனுப்புவாங்களானு ஒரு சந்தேகம் வந்துச்சு. அப்படியே யோசனை எங்கெங்கோ போயிடுச்சு." என்று சுஜாதா பெருமூச்சு விட‌.


" அப்படி என்ன யோசனை? சொல்லு டி?"

என விடாமல் மதியரசி நச்சரிக்க.


" ஆம்பளையா பொறந்திருந்தா, நம்மளும் எப்போ வேணும்னாலும் வீட்டை விட்டு வெளியில் போகலாம். இப்போ மாதிரி சினிமா போறதுக்கு பர்மிஷன்லாம் வாங்க வேண்டாம். " என்றாள்.


" அது சரி தான். ஆனால் பக்கத்து வீட்டு அக்காங்களோட அனுப்புறாங்க தானே." என்றாள் மதியரசி.


" ம்கூம். ஆயிரம் கன்டிஷன்ல போட்டு அனுப்புறாங்க.

இதுவே மனோ அண்ணனும்,மாமாவும் எங்க போறேன்னு சொல்லிட்டு போறதுக் கிடையாது. நினைச்சா சினிமா. இல்லை ஃப்ரெண்டுகளோட ஊர் சுத்துறது, இல்லை கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடுவாங்க. இல்லனா எதாவது கட்ட சுவத்துல உட்கார்ந்து ஜாலியாக அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க… கொடுத்து வச்சவங்க." என்றவள் மீண்டும் பெருமூச்சு விட்டாள் .


" சரி விடு சுஜா. இதெல்லாம் தெரிஞ்சக் கதை தானே." என்ற மதியரசி, வேறு பேச்சுக்கு தாவ. சுஜாதாவும் சேர்ந்துக் கொண்டாள். பக்கத்து வீட்டு பிள்ளைகளும் வர, அவர்களுக்கு பொழுது சுவாரசியமாக போனது.

அங்கு மனோகரோ, பயங்கர கோபத்தில் இருந்தான். பின்னே, " நீ முன்னாடி கிரவுண்ட்டுக்கு போ. இதோ நான் வந்துடுறேன்." என்ற சத்யபிரகாஷை அதற்கு பிறகு ஆளே காணவில்லை.


" ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்துடுறேன். நீ போய் கேளு. கிரிக்கெட்ல சேர்த்துக்கலைன்னா,நான் வந்து அவர்களை சமாதானப்படுத்துறேன்." என்றவன் சென்றது தான், மீண்டும் கிரவுண்ட் பக்கம் வரவே இல்லை.


மனோகரோ கிரவுண்டில் உள்ள அவனது தோழர்களிடம், " டேய் நானும் வரேன் டா." என.



அவர்களோ, " டேய் டீம். கரெக்டா இருக்கு. சத்யா வந்தாலாவது பரவாயில்லை. வேணும்னா நீ அம்பயரா இரு." என்றார்கள்.


" போங்கடா…" என்ற மனோகர், அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர பிடிக்காமல், கோவிலில் சென்று அமர்ந்துக் கொண்டான். கோவில் நடை சாத்தவும் தான் வீட்டுக்கு வந்தான்.


அவன் வந்த அரைமணி நேரம் சென்றே, சத்யபிரகாஷ் வந்தான். முகமெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்ததில், முகமெல்லாம் வியர்த்து, கருத்து போயிருக்க, கையில் ஒரு பை இருந்தது.

நேராக சுஜாதாவிடம் சென்றவன், " இந்தா சுஜா…" என்று நீட்ட.

அதைப் பார்த்தவளின் முகம், மீண்டும் கோபத்தில் சிவந்தது.

*****************************


நிகழ்காலம்…

சுஜாதாவின் நினைவுகளில் இருந்த சத்யபிரகாஷை, கோபியின் அழைப்பு நிதர்சனத்திற்கு அழைத்து வர.

பல்லைக் கடித்தவாறே ஃபோனை எடுத்தவன், " ஐயம் இன் சென்னை நவ்." என்று விட்டு ஃபோனை வைத்தவர், சமையல் செய்யும் அம்மா சாப்பிட சொன்னதையும் மறுத்து விட்டு, விறுவிறுவென காரில் கிளம்பி, கன்ஸ்ட்ரெக்ஷன் வொர்க் நடக்கும் இடத்திற்கு சென்றார்.


அங்கு தொண்ணூறு சதவீதம் வேலை முடிந்த நிலையில் இருந்த, பத்து மாடிக் கட்டடத்தை பார்த்தார்.இன்னும் பூச்சு வேலை மட்டுமே பாக்கி. எலக்ட்ரிக் வொயர் எல்லாம் பிக்ஸ் பண்ணியாச்சு.

பூச்சு வேலை முடிந்ததும், பெயிண்ட் வேலை, கிராணைட் போடுறது, இன்ட்ரீயர் டெகெரேஷேன் என இன்னும் மிச்ச சொச்ச வேலைகள் இருக்கிறது.

அதை எல்லாம் முடித்தால், தான், ஆறு மாதத்தில் அட்வான்ஸ் கொடுத்தவர்களுக்கு வீட்டை ஒப்படைக்க முடியும்.

டிலே ஆனால், காம்பேன்ஷன் கொடுக்குற மாதிரி இருக்கும். எதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் டிலே ஆனால் கூட பரவாயில்லை.

இப்போ இது தேவையில்லாத நஷ்டம். இதைக் கூட டீல் பண்ணாத மேனேஜரை நினைத்து கோபம் வந்தது.


அந்த இறுக்கத்துடன் க்ரவுண்ட் ப்ளோரில் இருந்த ஆஃபீஸ் ரூமில் நுழைந்தார்.

அங்கே ஏற்கனவே மேனேஜரும், இன்ஜினியரும் இருக்க.


ஏதோ கூற வந்த மேனேஜரை, கையமர்த்தி அமைதியாக இருக்க சொன்னவர், அங்கே படபடப்புடன் நின்றிருந்த இன்ஜியரைப் பார்த்து, "என்ன பிராப்ளம்?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.


இரண்டு நாட்களாக, மேனேஜரை சமாளித்த மாதிரி சமாளிக்க இயலவில்லை. அவரது பார்வை வீச்சில், நடுங்கியவாறே ஆளுங்க எல்லாம் சம்பளம் ஏத்தி கேக்குறாங்க.


" ரைட்… கேட்டால் கொடுக்க வேண்டியது தானே." என்று கூலாக சத்யபிரகாஷ் வினவ.


" அது…" என்று இழுத்த இன்ஜினியர் முழித்தார்.


" அது உன்னுடைய பிரச்சனை. உன்னை இந்த பில்டிங்குக்கு அப்பாயிண்ட் பண்ணது மட்டும் தான் நாங்க. வொர்க்கர்ஸெல்லாம் உன்னோட டீலிங் தானே. காண்ட்ராக்ட்ல எல்லாமே தெளிவா படிச்சு பார்த்து தானே சைன் போட்ட. இப்போ வந்து சம்பளம் அதிகமாக கேட்டாங்க என்று சொன்னால் நீ தான் கொடுக்கணும். எனக்கு இன்னைக்கு சைட்ல வேலை நடக்கணும். சொன்ன டைம்ல வேலை முடியணும். இல்லைன்னா?" என்றவர், எது வேணும்னாலும் செய்வேன் என்று சொல்லாமல் பார்வையாலே மிரட்டி விட்டு அங்கிருந்து நகர…


" சார்… சார்… ப்ளீஸ் சார். ஆளுங்க எல்லாம் திடீர்னு நூறு நாள் திட்டத்துக்குப் போயிட்டாங்க. புதுசா யாரையாச்சும் கூப்பிடலாம்னு பார்த்தால், கூலி அதிகமாக கேக்குறாங்க." என்று உண்மையான காரணத்தைக் கூறினார்.


" இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம். ஒன் டே வொர்க் நடக்கலை. தென் இதனால என்னோட ஷெட்யூல்லே மாறிடுச்சு. பட் இப்பாவாச்சும் என்ன ப்ராப்ளம் சொன்னீயே. தட்ஸ் ஃபைன்." என்றவர் கோபியை பார்க்க.

கோபியோ, சத்யபிரகாஷை பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோபியைப் பார்த்து முறைத்தார் சத்யபிரகாஷ்.


சத்யபிரகாஷின் பார்வையை உணர்ந்த கோபி, " சாரி…" என்று இழுக்க…

சத்யபிரகாஷ் பார்வையாலே, அவரது வாயை மூட செய்தவர், அடுத்து செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டார்.


" கோபி… நம்ம படூர் சைட்ல இருந்து ஆளை வரச் சொல்லி, வேலையை ஆரம்பிச்சுடு. தென் ஏஜென்சில சொல்லி, ஆளை ஏற்பாடு பண்ணிடு. அதிகமாகுற செலவை, இன்ஜினியருக்கு கொடுக்குற அமவுண்ட்ல டேலி பண்ணிட்டு." என்றவர், ஒரு தலையசைப்புடன் செல்ல.


இன்ஜினியரால் ஒன்றும் கூற முடியவில்லை. ஏனென்றால் அது அவரது தவறாயிற்றே...


சத்யபிரகாஷின் வேக நடைக்கு ஈடு கொடுத்து நடந்த கோபி, " டேய் சத்யா. மெதுவா போடா. என்னால வேகமாக நடக்க முடியலை." என்று கெஞ்ச.


திடீரென்று நின்ற சத்யபிரகாஷ், "இது ஆஃபீஸ். நீ என் ஸ்டாஃப்"


" இன்னும் ஆஃபிஸ் டைம் ஸ்டார்ட்டாகலை‌. நான் உன் ஃபேமிலி ஃப்ரெண்ட்" என்று அழுத்தி சொல்ல..‌.


மீண்டும் ஒரு முறைப்பை பரிசளித்த சத்யபிரகாஷ் வேகமாக நடை போட்டு அடுத்த ப்ளோருக்கு சென்றிருந்தார்.

சற்று மூச்சு வாங்க வந்த கோபி‍, சத்யபிரகாஷின் கையைப் பிடித்து நிறுத்தி, " ‌ஹேய் என்னால உண்மையாவே முடியலை. விட்டா பத்து ப்ளோருக்கும் படியிலே ஏறுவ போலிருக்கே." என்றார் கோபி.


" ஒழுங்கா உடம்பை மெயிண்டென் பண்ணனும். இப்படி வெயிட் போட்டா மூச்சு வாங்கத் தான் செய்யும். கரெக்டா டயட் ஃபாலோ செய்யணும், எக்ஸர்சைஸ் செய்யணும், நீ எதுவும் செய்யறதுக் கிடையாது." என்று திட்ட…


" உனக்கென்ன பா. நீ ஃபேமிலி மேன். உனக்கு செய்ய சுஜா இருக்கா. நீ கொடுத்து வைத்தவன், நான் ஒண்டிக்கட்டை தானே." என்ற கோபிக்கும், சத்யபிரகாஷின் வயது தான்.


" தேவையில்லாதது பேசாதே. நானா உன்னை கல்யாணம் பண்ணாதே என்று சொன்னேன். ஃபோன்லயும் மிரட்டுற. நான் மட்டும் ஜாலியா இருக்கேன். நீ மட்டும் தனியா கஷ்டப்படுறேனு சொல்ற. இதுல எல்லாத்தையும் சுஜா கிட்ட சொல்லிடுவேன் என்று வேற ப்ளாக் மெயில் பண்ணுற." என்று கோபியை பார்த்து கோபமாக வினவ.


" நான் என்ன தப்பா சொல்லிட்டேன். நீ மட்டும் ஜாலியா இருக்க. சைட்ல ப்ராப்ளம் என்று சொல்றேன். வர முடியாதுன்னு சொல்ற. அதான் ப்ளாக்மெயில் பண்ணேன். நான் பிளாக்மெயில் பண்ணது வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனால் சுஜா கிட்ட நீ மறைக்கிறது தப்பு. நீ என் ஃப்ரெண்டா இருந்தாலும், சுஜாவுக்கும், எனக்கும் நடுவுல வந்திருக்க கூடாது." என்றவனின் குரல் தழுதழுக்க.

பழைய நினைவுகளுக்கு செல்ல முயன்ற கோபியை, தடுப்பதற்காக வேகமாக மறுமொழி அளித்தார் சத்யபிரகாஷ்.


" சரி விடு. அதைப்பற்றி பேசாதே. ஏதோ ஒண்டிக்கட்டை என்று சொன்னீயே. இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்லை. ம்னு ஒரு வார்த்தை சொல்லு. உனக்கு நான் பொண்ணு பார்க்குறேன்." என்று சத்யபிரகாஷ் வினவ.


" ஓஹோ… இத்தனை வருஷம் ஆனதால பழசெல்லாம் மறந்திருப்பேன் என்று நினைக்கிறீயா… இப்போ இல்லை எப்போ கேட்டாலும், என் உதடு, உள்ளம் எல்லாம் அந்த மூன்று எழுத்தைத் தான் உச்சரிக்கும். உன்னால நான் சொல்ற பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?" என சவால் விடுவது போல கோபி பார்க்க.

சத்யபிரகாஷோ அயர்ந்து நின்றார்.