• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 12.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 12.

வைஷாலி தன் வீட்டில் அமர்ந்து அத்தனை தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். சர்வஜித்தைப் பற்றி யோசிக்கையிலேயே மண்டைக்குள் குடைந்தது. ‘அது சர்வா தான்...’ மனம் அத்தனை உறுதியாகச் சொல்ல, அவளது நகங்கள் அவளது யோசனைக்கு இலக்காகிக் கொண்டிருந்தது.

‘அவரோட முகம் மாறலாம்... ஆனால் அந்த உடல்மொழி, குரல் எல்லாம் எனக்கு அப்பட்டமாகத் தெரிந்ததே. அது என்ன பொய்யா?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

மீண்டுமாக தன் அலைபேசியை எடுத்தவள், யூடியூபில் அந்த லான்ச் வீடியோவை ஓடவிட்டாள். ‘அவனது கம்பெனி சிம் வேண்டும் அனைவருக்கும் இலவச சிம். அன்லிமிட்டட் கால் வசதி, தினமும் மூன்று ஜிபி டேட்டா இலவசம்’ என அவன் சொல்லிக் கொண்டே போனான்.

அந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாள் எனக் கேட்டால் அவளுக்கே தெரியாது. குறைந்தது நூறு முறைக்கு மேலாவது அதைப் பார்த்திருப்பாள். அவளது கண்களும் புலன்களும் பொய் சொல்லவில்லை என அவளுக்கு சத்தியம் செய்து கொண்டு இருந்தன.

‘எனக்கு அப்பட்டமா தெரியற விஷயம், அந்த ரூபிக்கு எப்படிப் புரியாமல் போகுது? நான் அத்தனை முறை சொல்லியும் அவ கேட்கவே இல்லையே...’ யோசனையோடு அந்த வீடியோவைப் பார்த்தாள்.

அவனது கண்ணீர் என்ற குரல், அந்த ஆங்கில உச்சரிப்பு, ஆறடிக்கும் குறையாத அவனது உயரம். அவன் அணிந்திருந்த அந்த இங்க் வர்ண சூட்... அவனது கம்பீரத்துக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

ஜெல் போட்டு படிய வைத்திருந்த அவனது கேசம், அப்படியும் அடங்காமல் நெற்றியில் புரண்டு கொண்டிருந்தது. ட்ரிம் செய்த தாடியும், மீசையுமாக கொஞ்சம் நல்ல கலராகவே இருந்தான். அவன் அன்று சிகரெட் பிடித்த விதம் நினைவுக்கு வர, அவள் விழிகள் மூடிக் கொண்டது.

‘ரஜினியை விட சூப்பரா சிகரெட் பிடிச்சாரே...’ அந்த வாசனை இப்பொழுதும் தன்னைச் சுற்றி இருப்பது போன்ற பிரம்மை. பொதுவாகவே பெண்களுக்கு அந்த வாடையே ஆகாது. ஆனால் வைஷாலிக்கு சின்ன வயதில் இருந்தே அந்த சிகரெட் வாசனை அவ்வளவு பிடிக்கும்.

அவளது அம்மாவின் அப்பா சுருட்டு பிடிப்பார்... அந்த வாசனையும் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். அது ஏன் என அவளுக்குத் தெரியாது. ரூபி கூட அதைச் சொல்லி அவளை கேலி செய்வாள். “எப்படித்தான் இந்த நாத்தம் உனக்குப் புடிக்குதோ? எனக்கு குடலைப் புரட்டும்” என்பாள்.

சில பல நொடிகள் அவன் புகைத்த விதமே அவள் நினைவில் நிற்க, தன்னை மீறி அதை மனக் கண்முன் கண்டிருந்தாள். ‘அப்படி என்ன கோபம் வருது? என் மாமனையே ஓட விட்டிருக்காரே’ அதுதான், அந்த விஷயம்தான் அவள் யோசனையில் அவன் நிற்கக் காரணமாக இருந்தது.

‘அவர் என்னைப் பார்த்தார் தானே? நான் அந்தப் படிகளில் ஏறும்போது என்னையவே பார்த்துக் கொண்டு இருந்தார். அதுவும் நானும் ரூபியும் பேசும்போது, விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்’ அவள் சன்னமாக முனகினாள்.

“அந்த கண்ணாடிக் கருமத்தை புடுங்கி தூரப் போடணும். எப்போ பார் ராப்பிச்சைக்காரன் மாதிரி ஒரு கண்ணாடி” சற்று குரல் உயர்த்தியே சொன்னாள்.

‘இப்போ உனக்கு அவன் கண்ணாடி போட்டிருப்பது பிரச்சனையா? இல்லையென்றால் அவன் கண்களைப் பார்த்து, உணர்வுகளைப் படிக்க முடியவில்லையே என்பது பிரச்சனையா?’ அவளது மனசாட்சி கேட்டு வைத்தது.

“என்ன? அப்படியெல்லாம்...” எனத் துவங்கியவள், “ஆமா... அதுக்கு இப்போ என்ன?” தனக்குத் தானே பேசிக் கொண்டாள். அவனைப் பார்த்த அத்தனை முறையும் அவன் கண்களை அந்த குளிர் கண்ணாடி மறைத்து இருந்தது புரிந்தது.

“ச்சே...” அவள் சலித்துக் கொள்ள, “கூப்ட்டியா பாப்பா? பசிக்குதா?” என்றவாறு அருணா அங்கே வந்தாள்.

“ஹாங்... இல்லக்கா... நீங்க போங்க” என்றவள், அவள் செல்லவே தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டியாடி?” தனக்குத் தானே சொல்லியும் கொண்டாள். ரூபி அவளிடம் அவளது பிரச்சனையைப் பற்றி கேட்டிருக்க, அவளிடம் சொல்ல மறுத்தாள்.

“இப்போதான் அதைக் கொஞ்சம் மறந்துட்டு இருக்கேன். அதை மறுபடியும் ஞாபகப்படுத்தாதே ரூபி. எனக்கு எப்போ சொல்ல முடியும்னு தோணுதோ அப்போ சொல்றேன்” அவள் சொல்லிவிட, ரூபி அதற்கு மேலே எதையும் கேட்கவில்லை.

ஆனால் அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தவளாக, “உனக்கு அந்த ஹரீஷை முன்னாடியே தெரியுமா?” வைஷாலி கேட்க, ரூபியிடம் சட்டென ஒரு தடுமாற்றம்.

“அது... அப்படியெல்லாம் எதுவும் இல்லையே...” அவள் சொன்ன விதமே அவள் பொய் சொல்கிறாள் எனச் சொல்ல வைஷாலி அதைத் தோண்டி துருவவில்லை.

“உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு...” அவள் சொல்ல,

“அதையெல்லாம் நான் மறக்கணும்னு நினைக்கறேன் ஷாலு” அவள் ஒரு மாதிரி குரலில் சொல்ல, அதை அப்படியே விட்டுவிட்டாள்.

ஆனால் அந்த நேரம் ரூபி ஹரீஷைப் பற்றிதான் யோசித்துக் கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்து, பேசி மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டாலும், ஹரீஷை அவளால் மறக்க முடியவில்லை.

அது ரூபி கல்லூரியில் முதல் வருடம் முடித்த பொழுது நடந்தது. அவளது தகப்பன் ராமராஜனுக்கு திடுமென மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

குடும்பமே நிலை குலைந்து போனது. அவருக்கோ தன் இளைய மகளை கட்டிக் கொடுக்காமல் போய்விட்டால், தன் மனைவி எப்படி சமாளித்து இருப்பாள் என்ற கவலை அவரைப் பிடித்துக் கொண்டது.

அவள் அப்போழுதுதுதான் இருபதுவயதின் துவக்கத்தில் இருந்தாள். டிச்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், தன் கவலையைச் சொல்லி கண் கலங்கிவிட்டார். எப்பொழுதும் தைரியமாக, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் தன் அப்பா கண் கலங்கினால் எந்தப் பெண்ணால்தான் அதைத் தாங்க முடியும்?

“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்ப்பா. இப்படி அழாதீங்க” அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னாள். அப்பொழுது சென்னையில் அவர்கள் வேறு ஏரியாவில் இருந்தார்கள்.

உடனடியாக தரகரிடம் சொல்லி மாப்பிள்ளை பார்க்க, அவர் கொண்டு வந்த வரன் தான் ஹரீஷ். அந்த மிலிட்டரி உடையில், அத்தனை கம்பீரமாக, முறுக்கிய மீசையும் கூர்மையான விழிகளுமாக இருந்த அவனைப் பார்த்த உடனே அவளுக்குப் பிடித்தது.

முதல் பார்வையிலேயே ஹரீஷ் அவளைப் பாதித்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை, அம்மா மட்டும்தான்... வேறு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை எனவும் ராமராஜனுக்கு மகளை அவனுக்கு கொடுக்க அத்தனை விருப்பம். அதுவும் அவ்வளவு சின்ன வயதிலேயே உயர் பதவியிலும் இருக்க அதைச் சொல்லியே பூரித்துப் போனார்.

அவருக்குத் தெரிந்த தன் மிலிட்டரி நண்பர்கள் மூலமாக அவனைப் பற்றி விசாரித்தார். அவனது திறமையைப்பற்றி அவர்கள் சிலாகிக்க, ஒவ்வொன்றும் ரூபியின் கவனத்துக்கும் வந்தது. அவனைப்பற்றி கேட்க அவ்வளவு பிடித்தது. அவனது நினைப்பை தனக்குள் வளர்த்துக் கொண்டாள்.

அவன் வந்து பார்க்கும் முன்பாக, அவனது தாய் அவளை வந்துப் பார்த்தார். “என் மகனை நீ பார்த்துகிட்டா போதும்னு சொல்ல மாட்டேன். நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா அவன் உன்னைப் பார்த்துப்பான். அவ்வளவு பாசக்காரன்... லீவுக்கு வீட்டுக்கு வந்தால், என்னை ஒரு வேலை செய்ய விட மாட்டான்” அவர் சொல்லிக் கொண்டே போக, அவள் மனதில் அவன் வேர்விட்டான்.

“என் மகன் வந்த உடனே நிச்சயம் பண்ணி கல்யாணத்தையும் வச்சுடலாம். எங்க பக்கம் பெருசா சொந்தங்கள் கிடையாது, அதனால் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படித்தான்” இப்படி வெள்ளையாக பேசிய அந்த மனுஷியை அனைவருக்கும் பிடித்தது.

இங்கே பேச்சுவார்த்தை துவங்கி, அவனது தாய் ரமணி இவளைத் தன் மருமகளாகவே எண்ணி பேசத் துவங்கி இருந்தார். தன் மகனிடமும் சொல்லிவிட்டதாக அவர் சொல்ல, ‘அவன் தன்னை எப்பொழுது வந்து பார்ப்பான்? தன்னிடம் எப்பொழுது பேசுவான்?’ என ரூபி வெகுவாக எதிர்பார்க்கத் துவங்கி இருந்தாள்.

“அவனுக்கு இப்போ உடனே லீவ் கிடைக்கலையாம். கிடைச்ச உடனே வந்து பார்க்கறேன்னு சொன்னான்” ரமணி சொல்ல, ரூபிக்கு சற்று ஏமாற்றம்தான். திருமணக் கனவுகள் அவளுக்குள் முளை விட்டிருக்க, அவன்மீதான நேசமும் துளிர் விட்டிருக்க, அவளுக்கு அவனை எப்பொழுது நேரில் காண்போம் என்ற ஏக்கம் பிறந்தது.

அது அந்த வயதுக்கே உரிய குணம்... அவளது ஆசையும், எதிர்பார்ப்பும் தவறு என யார் சொல்ல முடியும்? திருமணக் கனவுகளோடு, அவனோடான வாழ்க்கையையும் அவள் கற்பனையிலும், கனவிலும் காணத் துவங்கி இருந்தாள். தன் பாடப் புத்தகத்துக்குள் அவனது புகைப்படத்தை உடன் வைத்துக் கொண்டாள்.

ரகசியமாக அதை எடுத்துப் பார்ப்பதும், புகைப்படத்தில் இருந்த அவனை முத்தமிடுவதும் கூட அவளது அன்றாட விஷயமாகிப் போனது. இங்கே தன்னை நினைத்து ஒருத்தி ஏங்கித் தவிப்பது தெரியாமலேயே ஹரீஷ் இருந்தான்.

ரமணி அவனிடம் விஷயத்தைச் சொல்லி இருந்தார்தான். அவளது புகைப்படத்தையும் அவனுக்கு அனுப்பி இருந்தார். அதை ஒரு பார்வை பார்த்தவன், அந்த புகைப்படத்தை எங்கே வைத்தான் எனக் கேட்டால் கூட அவனுக்குத் தெரியாது.

“நான் வந்த பிறகு பார்த்துக்கலாம்மா... இப்போ உடனே அவசரப்பட்டு எதையும் செய்யாதீங்க?” அவன் சொல்லி இருக்க, அதையெல்லாம் ரமணி பெரிதாக எடுக்கவே இல்லை. தன் மகன் தான் சொன்னால் எதையும் கேட்பான் என்ற அவரது நம்பிக்கை அவரை அப்படி நினைக்க வைத்ததோ என்னவோ?
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
ரூபியின் மனதுக்குள் முழுதாக கலந்து வியாபித்த பிறகு, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த பிறகே அவன் ஊருக்கு வந்தான். ரமணி அவன் வந்த உடனேயே விஷயத்தைச் சொல்ல, நிதானமாக கேட்டுக் கொண்டான்.

“படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதுக்கும்மா கல்யாணம்? இந்த பெத்தவங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்களோ?” தாயிடம் சலித்துக் கொண்டான்.

“அப்படிச் சொல்லாதப்பா... அவங்க அப்பாவுக்கு கொஞ்சம் மேலுக்கு முடியலை. அவருக்கு ஏதாவது ஒன்று ஆக முன்னாடி தன் பொண்ணுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைக்க நினைக்கறார். பொண்ணும் தங்கவிக்ரகமாட்டம் இருக்காப்பா” தாய் சொல்ல, அவன் தாயிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவன் மனதுக்குள் என்ன ஓடுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் ஊருக்கு வந்த மறுநாளே அவனையும் அழைத்துக் கொண்டு ரூபியின் வீட்டுக்கு வந்துவிட்டார். ரூபிக்கோ அவனைப் பார்த்துவிட்டு அத்தனை படபடப்பு.

ஆனால் ஹரீஷ் வெகு சாதாரணமாகவே இருந்தான். அவளது தகப்பனோடு, சித்ராவின் கணவனோடு என அனைவரிடமும் இயல்பாக பேசினான். புகைப்படத்தில் பார்த்ததைப் போலவே அவன் இருக்க, கதவின் இடுக்கின் வழியாக அவனை ரசித்தாள்.

அவள் கரத்தில் காபிக் கோப்பைகளைக் கொடுத்து கொடுக்கச் சொன்ன பொழுது அவளது கரங்கள் சற்று நடுங்கவே செய்தது. அவளிடம் அவன் தனியாகப் பேசவேண்டும் எனச் சொன்ன பொழுது அவள் நெஞ்சம் கிடந்தது அடித்துக் கொண்டது.

இருவரும் ஒன்றாக மொட்டை மாடியில் நிற்க, அவன் குரலைக் கேட்க, அவனது பேச்சை மனப் பெட்டகத்தில் சேர்க்க அவள் காத்துக் கொண்டிருந்தாள். அவனை நேருக்கு நேராகப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை. மனதுக்குள் அப்படி ஒரு சிலிர்ப்பு ஓடியது.

ஹரீஷோ அவளை ஆராய்ச்சியாக பார்த்தான். ‘இதென்ன இவ்வளவு சின்னப் பொண்ணா இருக்கா. ஃபோட்டோவில் பார்த்ததை விட, நேர்ல இன்னும் குட்டியா இருக்காளே. இவ்வளவு நெர்வஸா இருக்கா, என்னை நேராக் கூட பார்க்க மாட்டேங்கறா.

‘மிலிட்டரியில் எனக்கு எப்போவேணா, என்ன வேணா நடக்கலாம். அதையெல்லாம் இவ எப்படி தாங்கிப்பா? இவளால் எப்படி ஹேண்டில் பண்ணிக்க முடியும்?’ அவனுக்குள் இவைதான் ஓடிக் கொண்டு இருந்தது.

ஆழமாக மூச்செடுத்தவன், “இந்த கல்யாணம் வேண்டாம்... இது சரி கிடையாது. ஜஸ்ட் நாம இப்போதான் பார்த்துக்கறோம், அதனால் இதையெல்லாம் நீ மறந்துட்டு உன் படிப்பை மட்டும் பாரு. எங்க அம்மாவை நான் சமாளிச்சுக்கறேன், கீழே நான் பேசிக்கறேன்” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

ரூபிக்கோ மனதுக்குள் இடி விழுந்த உணர்வு. ‘இந்த கல்யாணம் வேண்டாம்’ அவன் சொன்ன முதல் வார்த்தைகளிலேயே அவளது மொத்த உலகமும் சிதைந்து போன உணர்வு. தான் கண்ட வண்ணக் கனவுகள் எல்லாம் கலைந்து போக, வாழ்க்கையே முடிந்து போனதுபோல் இருந்தது.

கடந்த ஆறு மாதங்களாக அவனைத் தன் மனதுக்குள் வைத்து ரகசியமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். அவனோடான வாழ்க்கையை கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தன் சந்தோசம், துக்கம் ஒவ்வொன்றையும் அவன் நிழலோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.

அப்படி இருக்கையில்... இவன் என்னவென்றால் வெகு சுலபமாக ‘இந்த கல்யாணம் வேண்டாம்’ என முடித்துவிட்டானே. அவளால் எப்படி முடியும்? தன் கண்ணீரை கட்டுப்படுத்தத்தான் நினைக்கிறாள், ஆனால் அது அவளால் முடியவில்லை.

அவள் அனுமதியின்றியே கண்ணீர் கன்னத்தில் வழிந்து கொண்டே இருந்தது. அதை அவளுக்குத் துடைக்கக் கூடத் தோன்றவில்லை. ‘அவ்வளவுதானா? முடிந்ததா? போய்விட்டாரா?’ கீழே கார் கிளம்பிச் செல்லும் ஓசை கேட்டது.

ரூபியால் நின்ற இடத்தில் இருந்து அசையக் கூட முடியவில்லை. நெஞ்சடைத்துக் கொண்டு, மூச்சுக் காற்றுக்கு தவிப்பதுபோல் இருந்தது. ‘ஜஸ்ட் லைக் தேட்’ அவன் முடித்துவிட்டுப் போய்விட்டான். ஆனால்... அவனைக் கணவனாக மனதுக்குள் வரித்துக் கொண்டவளுக்கு அதை விட்டு மீள முடியவில்லை.

மாடிப் படிகளில் தாயும், அக்காவும் வரும் ஓசை கேட்கவே, வேகமாக தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். “ரூபி... என்னடி சொன்னார்?” அக்கா கேட்க, தன்னை மீட்டுக்குள்ள முயன்றாள்.

பேச முயன்றாள் முடியவில்லை, சிரிக்க முயன்றாள் அதுவும் முடியவில்லை. ஏதோ ஒன்று தொண்டையைக் கவ்வும் உணர்வு. அந்த நொடி அவளுக்குத் தனிமை வேண்டும்... கதறி அழ வேண்டும் போல் இருந்தது.

“எ...எ... தெரியலைக்கா...” எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். தொண்டை கவ்விக்கொண்டு வலித்தது.

“என்னடி இது? வந்த மனுஷன் மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டார். இவகிட்டே கேட்டாலும் தெரியலைன்னு சொல்றா?” தாய் புலம்ப, பெரியவள் தாயைக் கண்களால் அடக்கினாள்.

“அட விடுங்கம்மா... உலகத்தில் இவன் மட்டும்தான் மாப்பிள்ளையா? இவளுக்கு என்ன வயசா ஆயிடுச்சு நீங்க கவலைப்பட்டுகிட்டு இருக்கீங்க? பத்து மாப்பிள்ளை பார்த்தால்தான் ஏதாவது ஒன்று நடக்கும். நீங்களும் அப்சட் ஆகி, இவளையும் அப்சட் பண்ணாதீங்க... போங்க நீங்க...” தாயை அனுப்பினாள்.

“அதுவும் சரிதான்... நீ இவளை அழைச்சுட்டு வா...” என்றவாறு தாய் கீழே சென்றுவிட, சித்ரா தங்கையை அணைத்துக் கொண்டாள்.

அவள் என்னவோ தாயை அந்த நேரம் சமாளிக்க வேண்டியே சொன்னாள். இல்லையென்றால் தன் ஆற்றாமையைச் சொல்லி புலம்புகிறேன் என்று தங்கையை இன்னும் கஷ்டப்படுத்துவார் என்பதாலேயே அவ்வாறு செய்தாள்.

“அக்கா...” என்றவள் அவளைக் கட்டிக்கொண்டு கதறிவிட்டாள். தங்கையின் மனதுக்குள் அவன் நுழைந்துவிட்டது இவளுக்கு நன்கு தெரியும். கணவன் உடன் வராத நாட்களில், அக்காவும் தங்கையும் ஒரு அறையில் தானே படுத்துக் கொள்வார்கள். அவளது புத்தகப் பைக்குள் அவனது புகைப்படம் இருப்பதும் அவளுக்குத் தெரியும்.

“ஷ்...ஷ்... ரூபி... அக்காவுக்குப் புரியுது... கஷ்டம்தான்... இது எல்லாமே உன் மனசு சம்பந்தப்பட்டது. இதில் எங்கேயுமே அவன் கிடையாது. அவன் இதை பேசினான், சொன்னான்... நாங்க சேர்ந்து ப்ளான் பண்ணோம்னு எதுவுமே கிடையாது ரூபி.

“இப்போதைக்கு உடனே மாப்பிள்ளை பார்க்காத மாதிரி அக்கா மாமாவை விட்டு பேசச் சொல்றேன். நீ இதில் இருந்து, உன் நினைப்புக்குள் இருந்து வெளியே வா. நாங்க இருக்கோம்... எதுன்னாலும் நீ அக்காகிட்டே பேசலாம்” நிராகரிப்பின் வலி எப்படி இருக்கும் என அன்று ரூபி உணர்ந்தாள்.

“என் தப்புதான்க்கா...” அவள் கண்ணீர் குரலில் சொல்ல, சித்ராவுக்கு மனதைப் பிசைந்தது. நிர்மலமாக இருந்த தங்கையின் மனதுக்குள் கல்லெறிந்து விட்டார்களே. இப்பொழுது அவள் சலனப்படக் கூடாது எனச் சொல்வது அரக்கத்தனம் என அவளுக்குப் புரிந்தது.

“அப்படி இல்லை ரூபி... இது எல்லாம் எங்க தப்பு...” ‘ஒரு அக்காவாக தங்கைக்கு புரிய வைத்திருக்க வேண்டும் என்று இப்பொழுது வருத்தப்பட்டாள். கழுத்தில் தாலி என்ற ஒன்று ஏறும் வரைக்கும் மனதுக்குள் எதையும் ஏற்றிக் கொள்ளாதே’ எனச் சொல்லாமல் விட்டது அவர்கள் தவறு தானே.

“கழுத்தில் தாலின்னு ஒன்று ஏறும் வரைக்கும் நான் பொறுமையா இருந்து இருக்கணும்க்கா. இப்போ எவனோ ஒருத்தனை... மனசுக்குள்ளே சுமந்துட்டு... எனக்கு அசிங்கமா, அவமானமா கூட இருக்குக்கா” அவள் சொன்னபொழுது சித்ராவுக்குமே கண்கள் கலங்கிவிட்டது.

“ரூபி... கண்டதையும் யோசிச்சு உன்னை நீயே வருத்திக்காதே. இதை விட்டு வெளியே வா... மறக்க முயற்சி பண்ணு. கண்டிப்பா உன்னால் முடியும்... அக்கா சொல்றேன்... உனக்கு நான் இருக்கேன். என்கிட்டே பேசு...” என்றவள் ரூபியை பேச வைத்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கையோடு இருந்து அவளை வெளியே கொண்டு வர முயன்றாள். தன் முயற்சியின் பலனாக அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம் என அவள் நினைத்தாள். ஆனால் தங்கையின் மனதுக்குள் இருப்பது எதுவும் அவளுக்குத் தெரியாதே.

ரூபியுமே அவனைக் கடந்துவிட்டோம், மறந்துவிட்டோம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் எந்த நொடி நடுரோட்டில் வைத்து அவனைப் பார்த்தாளோ, அந்த நொடி அப்படி இல்லை என அவளுக்குப் புரிந்து போனது.

அவனை மறந்துவிட்டோம், நம் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறோம் என அவள் நினைக்க, அவனைப் பார்த்த அந்த நொடி அவளுக்கு வலித்ததே. ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வியதே... இதயத்தை அசைத்துப் போட்டதே... அவளால் முடியவில்லை.

‘என்னால் அவனை மறக்கவே முடியாதா? இப்போ ஏன் என் கண் முன்னால் வந்தான்?’ அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவனை மறக்க வேண்டும் என்றே தகப்பனை வேறு வேலை மாற வைத்தாள். அவர்கள் இருந்த இடத்தை விட்டு வேறு இடம் வந்தாள். எது மாறினாலும் மாற வேண்டியது அவளது மனம் ஆயிற்றே.

இப்படி ஒரு விஷயத்தை அவள் எப்படி வைஷாலியிடம் சொல்ல? மாப்பிள்ளையாக அவனைப் பார்த்தார்கள், அவன் தன்னை நேரில் வந்து பார்க்கும் முன்பே அவனிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டேன் என அவள் எப்படி தோழியிடம் சொல்ல? அவள் தன்னை என்னவென நினைத்துக் கொள்வாள்? கேவலமாக பார்த்துவிட்டால், பேசிவிட்டால் என்ன செய்வது என மனம் தவித்தது.

இருவரும் தங்கள் வீடுகளில் அமர்ந்து, எதை எதையோ யோசித்தவாறு தங்களையே குழப்பிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரம் வைஷாலியின் அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
அழைப்பது தன் தகப்பன் எனப் புரிய, எடுத்துப் பேச அத்தனை தயக்கமாக இருந்தது. தான் பேசவில்லை என்றால் தன் அப்பா இன்னும் வருத்தப்படுவார் எனப் புரிய, அழைப்பை ஏற்றாள்.

“அப்பா... எப்படிப்பா இருக்கீங்க? அங்கே எல்லாம் ஓகே தானே?” தகப்பன் இங்கே இருந்து சென்று அதற்குள் ஒரு வாரம் கடந்து இருந்தது.

“நான் நல்லா இருக்கேன் பாப்பா... நீ எப்படி பாப்பா இருக்க? எதுவும் பிரச்சனை இல்லையே...” சர்வா விஷயத்தை அவள் அவரிடம் சொல்லி இருக்கவே கேட்டார்.

“அதெல்லாம் இல்லப்பா... அது முடிஞ்சு போச்சு. வேலைக்குதான் முயற்சி பண்ணிட்டே இருக்கோம். இன்னும் ஒரு மாசம் பார்த்துட்டு ஐடிக்கே மாறிடலாம்னு இருக்கேன்ப்பா. எவ்வளவு நாள் இப்படியே வெட்டியா இருந்து பொழுதைப் போக்க முடியும்?” சற்று கவலையாகச் சொன்னாள்.

“இன்னும் கொஞ்ச நாள் பாரு பாப்பா... எதுவும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதே” அவளுக்கு ஐடி வேண்டாம் என்றதால்தான் வேறு படித்தாள். அப்படி இருக்கையில் மீண்டும் பிடிக்காத அதிலேயே மகள் சென்று சேர்வதை அவர் விரும்பவில்லை.

“சரிப்பா... பார்க்கறேன்...” சோர்வாகச் சொன்னாள்.

“வேணா மேலே எதையாது படிக்கறியா பாப்பா? MBA ஏதாவது படிச்சு, அது வழியா வேற வேலைக்கு போக முடியுமான்னு பாரேன்” மகளை எப்படியாவது வேறு விஷயத்தில் மாற்றி விட முயன்றார்.

“அதுவும் நல்ல யோசனைதான்ப்பா. ஆனால் இப்போ ரெண்டும் கெட்டான் இடத்தில் இருக்கேன். இப்போ உடனே சேர முடியாது, எப்படியும் அடுத்த வருஷம்தான் முடியும். ஆனா அதுக்குள்ளே...” தன் தாயை எண்ணி பயந்தாள்.

தாய் மட்டுமாக என்றாலாவது தன் திருமண விஷயத்தில் போராடலாம். இப்பொழுது கோபாலும் இறங்கி விட்டார், இதற்கு மேலே தான் தப்பிக்கும் மார்க்கம் எல்லாம் எதுவும் அவளுக்குத் தோன்றவே இல்லை.

பைரவன் அவளை சமாதானப்படுத்த என்று எதையாவது சொல்லலாம். ஆனால் இந்த விஷயத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் அவளது எண்ணம், அதுதான் உண்மையும் கூட.

“பாப்பா... இங்கே வேற பெரிய பிரச்சனை எல்லாம் ஓடிகிட்டு இருக்கு. இப்போதைக்கு அவங்க இந்த கல்யாண விஷயத்தை எல்லாம் கையில் எடுப்பாங்கன்னு தோணலை” தகப்பன் சொல்ல, ஆச்சரியமானாள்.

“என்னப்பா சொல்றீங்க? அந்த தீம்பார்க் விஷயத்தையா சொல்றீங்க? அது இன்னும் முடிவுக்கு வரலையா?” அவளால் நம்பவே முடியவில்லை.

அந்த தீம்பார்க் கோபாலின் இதயத்தைப் போன்றது. அதை ஓட வைக்காமல் நிறுத்தி வைப்பது, அவரது இதயத் துடிப்பையே நிறுத்துவதற்குச் சமம். அப்படி இருக்கையில், ஒரு வாரம் கடந்தும் அதை எதுவும் செய்ய முடியவில்லை என்பது அவளுக்கு அதிர்ச்சி தான்.

“அதை அசைக்க கூட முடியலை பாப்பா. அரசாங்கம் அதில் தலையிட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுவும் முதலைமைச்சரே சொல்லிட்ட பிறகு யாரால் என்ன செய்ய முடியும்?” அவர் கேட்க, வைஷாலிக்கு சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வேண்டும்போல் இருந்தது.

“அப்பா... நோ வே... முதலமைச்சரேவா? எப்படிப்பா விட்டாங்க?” அவள் பிறந்தது முதல் பார்க்கிறாள். அவர்கள் மாவட்டத்தில் எங்கே மாநாடு, கட்சிக் கூட்டம், அவ்வளவு ஏன்... கோபாலின் இரு மகன்களின் திருமணத்திற்கே கூட முதலமைச்சர் நேரில் வந்து வாழ்த்தினார்.

அப்படி இருக்கையில், அவர்களது விஷயத்துக்கு முதலமைச்சர் உதவ மாட்டேன் என சொன்னது எல்லாம் கனவிலும் நடக்க வாய்ப்பே இல்லாதது.

“இதற்கே இப்படி சொல்றியே... இங்கே ஒரு மிகப்பெரிய மால் வரப் போகுதாம். அதற்கு பெர்மிட் முதலமைச்சரே கொடுத்து இருக்கார். மால்ல ஐந்து மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர், ஃபன் ஃப்ளோர் கூட இருக்குன்னு பேசிக்கறாங்க” அவர் சொல்லச் சொல்ல, அவளால் தன் காதுகளை நம்பத்தான் முடியவில்லை.

“என்னப்பா இது? ஃபோனைப் போட்டு எனக்கு அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியா கொடுத்துட்டு இருக்கீங்க?” அவரிடம் கேட்டாள்.

“ஆமா பாப்பா... எனக்கே ஷாக் தான். இங்கே ஒரு வாரமா உன் மாமா வீடே அல்லோகலப்பட்டுகிட்டு கிடக்கு. கட்சி ஆட்கள், அடியாட்கள் எல்லாம் கொந்தளிச்சுப் போய் கிடக்காங்க. இங்கே அப்படி ஒரு ‘மால்’ வர விடவே கூடாதுன்னு இருந்தவங்க இவங்க தானே” அவர் சொல்ல, அது இவளுக்குமே தெரியும்.

“எங்கேப்பா வருது? யாருக்கு இவ்வளவு தைரியம்? இவங்க எல்லாம் சும்மாவா விட்டாங்க?” தகப்பனிடம் கேட்டாள்.

“பாப்பா... இதுக்கும் அந்த சர்வாதான் காரணம்னு பேசிக்கறாங்க. கன்னியாகுமரி போற வழியில், கிட்டத்தட்ட நூறு ஏக்கர் இடம் மொத்தமா வளைச்சுப் போட்டிருக்காங்க. அந்தப் பக்கமே யாராலும் போக முடியலை” அவர் சொல்ல, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி.

“யாரு... என்ன பேர்ப்பா சொன்னீங்க? சர்வாவா?” என்றவள், ‘இவர் என்ன இங்கே இருந்துட்டு, அங்கே வரைக்கும் ஆட்டி வைக்கறார்? நான் கேட்டது நிஜமா?’ குழம்பிப் போனாள். அதே நேரம் மனமோ, ‘அவனுங்களையும் ஆட்டி வைக்க ஒருத்தனா?’ குதூகலிக்கத் தோன்றியது.

சர்வஜித்தை நல்லவன் என அவள் நினைக்கவில்லை. ஆனால் மோசமான கெட்டவனாக அவனை அவளால் சித்தரிக்க முடியவில்லை. அவளது மாமா முதல், மாமாவின் மகன்கள் வரைக்கும் பெண்கள் விஷயத்தில் மிக மிக மோசமானவர்கள்.

பைரவனே கோபாலின் கதைகளைப் பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். மூத்தவன் விநாயகம், இரண்டாமவன் வேலவன், கடைசியில் அந்த முத்துப்பாண்டி... அனைவருமே பெண்கள் விஷயத்தில் கேடு கெட்டவர்கள்.

அவர்கள் பார்க்கும் பெண்களை எல்லாம், ‘வேண்டும்’ என நினைத்துவிட்டால் தொட்டுவிடுவார்கள். அப்படி இருக்கையில், சர்வஜித் தன்னை தவறாக ஒரு பார்வை கூட பார்க்காதது, தன்னை கஷ்டப்படுத்தினாலும், கேவலமாக நடத்தாதது, தவறாக தீண்டாததே அவன்மேல் ஒரு நல் மதிப்பை விதைத்தது.

அவள் மனதை எங்கேயோ அவன் தொட்டிருந்தான். “அந்த சர்வா தான்ம்மா... இங்கே பில்டிங் கட்ட வேலையே ஆரம்பிச்சுடுச்சு. இடம் எல்லாம் இதற்கு முன்னாடியே வாங்கிப் போட்டிருக்காங்க. கட்டுமான பொருட்கள் எல்லாம் வந்து இறங்கி இருக்கு.

“வேலை ஆரம்பிச்ச விதத்தைப் பார்த்தாலே, பெர்மிட் வாங்க வேண்டி காத்துட்டு இருந்த மாதிரி இருக்கு பாப்பா. உங்க மாமன் கண்ணில் மண்ணைத் தூவிட்டு, எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை சாதிச்சான்னு தான் தெரியலை.

“தியேட்டர் சங்கம், ஜவுளிக்கடை சங்கம்... எல்லாம் கும்பலா வீடு தேடி வந்து உன் மாமனை கேள்வி கேட்கறாங்க. எலக்ஷன்னு சொன்ன உடனே கட்டு கட்டா பணம் மட்டும் வாங்கிக்கறீங்க. இங்கே உங்களை மீறி எதுவுமே வராதுன்னு சொன்னீங்க.

“இப்போ என்னன்னா மால்... அதுவும் தியேட்டர், ஃபன் ப்ளே ஏரியான்னு எல்லாம் சொன்னால் என்ன அர்த்தம்னு கேட்டு பிடி பிடின்னு பிடிக்கறாங்க. அவன் பிரச்னையை பார்க்கறதா? இவங்களுக்கு பதில் சொல்றதா? வந்திருப்பவனை அடக்கறதான்னு தெரியாமல் முழி பிதுங்கறான்.

“இந்த லட்சணத்தில் இடைத் தேர்தல் வேற வருது... அந்த ‘மால்’ வேலை நடக்கறதை நிறுத்தாமல் எலக்ஷனுக்கு பணம் தர மாட்டோம்னு வேற சொல்லிட்டாங்க. எலக்ஷன் இருப்பதால், தீம்பார்க் விஷயத்தை உடனே பார்க்க முடியாத சூழல்.

“உன் மாமனை இப்படிப் பார்க்க எனக்கே கொஞ்சம் பரிதாபமா இருக்குன்னா பார்த்துக்கோயேன்” அவர் சொல்ல,

“ப்பா... என்னப்பா நீங்க? உங்களுக்கு அவங்களைப் பார்த்து பரிதாபமா வேற இருக்கா? என்ன பேசறீங்க நீங்க? அவங்க கொட்டம் அடங்கணும்னு நீங்களே எத்தனை நாள் புலம்பி இருப்பீங்க. இப்போ என்னன்னா இப்படிப் பேசறீங்க? போங்கப்பா நீங்க” தகப்பனிடம் காய்ந்தாள்.

“பாப்பா... பாப்பா... ஒரு பேச்சுக்கு சொன்னேன் பாப்பா. உலகம் தலைகீழா சுத்தற மாதிரி இருக்கு பாப்பா. இப்போ இவங்களுக்கு எலக்ஷனுக்கு செலவழிக்க பணம் இல்லைன்னா, என்ன செய்வாங்கன்னு தெரியலை.

“இங்கே எதிர்க்கட்சி வேற இந்த தீம் பார்க் விஷயம், அந்த வீணாப் போன MP விஷயத்தை எல்லாம் தோண்டி எடுத்து பிரச்சனை பண்ண தயாரா இருக்காங்க. இப்போ மட்டும் எதிர்க்கட்சி ஜெயிச்சால் அதுக்கு மேலே என்னென்ன செய்வாங்களோ தெரியலை” அவர் சொல்லிக் கொண்டே போக, இவளோ உள்ளுக்குள் கும்மாளமிட்டாள்.

“அப்பா எனக்கென்னவோ ஆப்போசிட் பார்ட்டி தான் ஜெயிக்கும்னு தோணுதுப்பா” அவள் சொல்ல,

“பாப்பா... சத்தமா சொல்லாதே... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என முடித்துக் கொண்டார்.

“அப்பா வேடிக்கை மட்டும் பாருங்கப்பா. அவங்களுக்கு நல்லா வேணும்... அப்போ நான் ஃபோனை வைக்கறேன்ப்பா. அடிக்கடி எனக்கு ஃபோன் பண்ணி அங்கே என்ன நடக்குதுன்னு சொல்லுங்க, தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.

‘இவ்வளவு எல்லாம் செய்யற இந்த சர்வா யாரு? சர்வா தானா? இல்லன்னா சர்வஜித்தா? சர்வஜித்ன்னா என் மாமனுங்க நிலை கொஞ்சம் கஷ்டம் தான். சென்ட்ரலையே ஆட்டி வைக்கிறவன்... இங்கே...’ உள்ளுக்குள் சட்டென அந்த யோசனை ஓடியது.

சர்வஜித் தான் சர்வா என அவள் மனம் அடித்துச் சொன்னது.

பகை முடிப்பான்.......
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
25
29
13
Vellkovil
ஹரிஷ் நீ ரூபிகிட்ட தெளிவாக பேசியீருக்கலாம். வைசாலி உன் மாமா, மாமா பசங்க அவங்க பிரச்சினைய தீர்த்துக்கவே நேரம் கிடைக்காது 😏😏
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
ஹரிஷ் நீ ரூபிகிட்ட தெளிவாக பேசியீருக்கலாம். வைசாலி உன் மாமா, மாமா பசங்க அவங்க பிரச்சினைய தீர்த்துக்கவே நேரம் கிடைக்காது 😏😏

ஹரீஷ் தெளிவா பேசி இருந்தால் எல்லாம் நல்லபடியா முடிந்து இருக்கும். எல்லாம் விதி வேற என்ன?

நன்றி!
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
ஹரிஷ் தெளிவா பேசி இருக்கணும் ரூபியிடம் ..
அவனின் எண்ணம் சரி தான் ,அதை அவன் சொன்ன விதம் தான் தப்பு ,என்ன பண்ண மிலிட்டரி ரூபி கையால் செமத்தியா வாங்க வேணும் என்று விதி போல.
சரவாவை வைஷு கணடு பிடித்து விட்டாளே ..!அடுத்தது ..?
 

Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
150
7
28
VILLUPURAM
ஷாலுமா சர்வாவ கண்டு புடிச்சிட்டா 😍😍😍😍😍
கோபால் nd பேமிலி எத எத சமாளிக்கனு தெரியல 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣 இன்னும் நல்லா வேணும்