• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 18.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
பகுதி – 18.

சென்னையில் வைஷாலியின் வில்லா ரணகளமாக இருந்தது. முத்துப்பாண்டியின் கை முறிக்கப்பட்டு சரியாக ஒரு வாரம் கடந்திருக்க, அவனுக்கு கை எலும்புகள் முறிந்து போயிருக்க, அதற்கான ஆப்பரேஷன் முடிந்து அவனது கரம் தொட்டிலில் தொங்கிக் கொண்டிருந்தது.

அங்கே அவர்களைப் பார்த்தவாறு நடுநாயகமாக நின்றிருந்தான் சர்வஜித். அவனுக்குப் பின்னால் வைஷாலி நின்றுகொண்டிருக்க, முத்துப்பாண்டியைப் பார்த்தவனின் ரத்தம் கொதித்தது. ‘எனக்கு அவனோட அந்த கையும் வேணும்...’ எண்ணியவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலாகவே இருந்தது.

பைரவன் மகளைப் பார்த்துவிட்டு அவள் அருகே வர முயல, கோபால் அவரைப் பார்த்த ஒற்றைப் பார்வையில் அப்படியே நின்றுவிட்டார். அவர் கண்களில் மகளின் நலத்தை அறியும் தவிப்பிருக்க, அவளுக்குமே தகப்பனின் தோள் சாய மனம் தவித்தது.

‘எப்படிம்மா இருக்க?’ என்பதுபோல் மகளைப் பார்த்தவர், சர்வஜித்தை கோபமா, ஆற்றாமையா... இன்னதெனப் புரியாத பார்வை பார்த்தார். அதைப் பார்த்த சர்வஜித் பைரவனைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

அவனுக்கு இவர்களோடு தானே பகை, பைரவன் மேல் அவனுக்கு அளவிட முடியாத நன்றிப்பெருக்கு இருக்கிறது. ஆனால் கௌரவர்கள் பக்கம் இருக்கும் பீஷ்மரைபோல் அவர் இருக்க, பாண்டவர்கள் பக்கம் நிற்கும் அவனால் எதுவும் செய்ய இயலாத நிலை.

“டேய்... இவன்தான்... இவன் கையைக் காலை எல்லாம் வெட்டிப் போடுங்கடா” முத்துப்பாண்டி குதிக்க, அவனை சர்வஜித் பார்த்த பார்வையில் அவனைப் பெற்றவருக்கு புருவம் இடுங்கியது. தன் ஆட்கள் இத்தனைபேரைப் பார்த்தும் சர்வஜித் அசையாமல் இருப்பது கோபாலுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“முத்துப்பாண்டி... கொஞ்சம் அமைதியா இரு” மகனை அடக்கினார். சர்வஜித்தின் குளிர் கண்ணாடி அவன் கண்களை மறைத்திருக்க, அவன் என்ன நினைக்கிறான் என அவரால் கணிக்க முடியவில்லை.

“என்னப்பா என்னை அடக்குறீங்க? உங்க பையன் கையை உடைச்சவன் உங்க எதிர்ல திமிரா நிக்கறான்ப்பா. இந்த நேரம் நீங்க அவனை வெட்டிப் போட்டிருக்க வேண்டாமா?” தன் தகப்பனா இது என அவனுக்கு கோபம்.

ஆனால் கோபால் சாணக்யன் என்பது அவரது செய்கையிலே சர்வஜித்துக்குப் புரிய, அவனது இதழ்கள் முத்துப்பாண்டியைப் பார்த்து ஏளனமாக வளைந்தது.

கோபாலோ சர்வஜித்தை எடைபோட்டுக் கொண்டே இருந்தார். தங்கள் கோட்டைக்குள் அவன் ஊடுருவி இருக்கிறான். தங்கள் தீம் பார்க்கை இன்னுமே அவரால் முழுதாக ஓபன் செய்ய முடியவில்லை. கார்ப்பரேஷன் வாட்டர் சப்ளை அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டது.

அதனால் வாட்டர் ரைட் எதுவும் இல்லாமல் போனதால் கூட்டம் எதுவும் வருவதே இல்லை. அங்கே மால் துவங்கி இருக்கிறான், தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறான். இவை எல்லாம் ஒரு சாதாரனமானவனால் முடியாது என அவரது புத்திக்குப் புரிந்தது. அவருக்குப் புரிந்தது அவரது மகன்களுக்கும் புரிய வேண்டுமே.

சர்வஜித்துக்குப் பின்னால் இருந்த ஹரீஷையும், அவனுக்குப் பின்னால் கறுப்பு உடையில் மிகவும் அமைதியாக நின்ற அந்த மூன்று பேரையும் அவரது கண்கள் அலசியது. நிச்சயம் அவர்களிடம் துப்பாக்கி இருக்கும் என அவரது உள்ளுணர்வு சொன்னது.

சர்வஜித் கோபாலையும், அவரது மூன்று மகன்களையும் இமை கொட்டாமல் பார்த்தான். அவனது கை கடிகாரம் ‘பீப்...பீப்...பீப்...’ என்று விடாமல் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. ஹரீஷோ ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என கலவரமாக நின்றிருந்தான்.

அந்த ஒலியை அப்பொழுதுதான் முதல்முறையாகக் கேட்ட வைஷாலி, தன் அருகே நின்று இருந்த ஹரீஷைப் பார்த்தாள். “என்ன சத்தம் அது? இவர்கிட்டே இருந்துதான் வருது” அவனிடம் கேட்டாள்.

“ஷ்... அவரோட பிபி கொதிக்குது...” என்றவாறே சர்வஜித் கையில் கட்டியிருந்த வாட்சை கண்களால் காட்டினான்.

“என்ன?” என்றவளுக்கு அந்த வாட்சின் ஒலி அந்த இடத்தையே நிறைக்க, உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.

“ஏய்... இன்னும் என்னடி அங்கே நிக்கற? ஒரு வாரமா அவனோட கூத்தடிச்சது உனக்குப் பத்தலையா? நீ எவன் கூடப் போனாலும் நீ எனக்குத்தான்டி. உன்னை அனுபவிக்காமல் அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன். இங்கே வாடி...” முத்துப்பாண்டி வேகமாக அவள் பக்கம் வரப் போனான்.

தகப்பனின் முன்னால் வைத்து அவனது அந்த பேச்சைக் கேட்டவளுக்கு தேகம் மொத்தமும் எரியும் உணர்வு. எந்தப் பெண்ணும் பெற்றவர் முன்னால் வைத்து கேட்கக் கூடாத வார்த்தைகள் அல்லவா அது.

அதைவிட, இப்படிப் பேசும் அவனது நாவை வெட்டி எறிய முடியாமல், கைகள் கட்டப்பட்ட பைரவனின் நிலை அந்தோ பரிதாபம் தான். அவர் ஒரு மாதிரி குறுகிப் போய் நின்றார். அந்த நிலை வேறு அவள் நெஞ்சறுத்தது.

முத்துப்பாண்டியின் கண்களில் இருந்த அவள்மீதான அந்த வெறி... சர்வஜித் அதை மிகச் சரியாக இனம் கண்டான். அத்தனை வேகமாக சர்வஜித்தின் மூளைக்குள் பல கணக்குகள் உலா போனது.

தன்னைத் தாண்டிச் செல்ல முயன்றவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தவன், “உன்னோட இன்னொரு கையும் எனக்குத்தான்” அவனுக்கு மட்டும் கேட்குமாறு இதழ் பிரியாமலே சொன்னான். சர்வஜித் பேசியது சற்று தூரத்தில் இருந்த மற்றவர்களுக்கு கேட்காமல் போனாலும், பின்னால் நின்ற இவர்களுக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது.

“என்னடா சொன்ன?” என்றவாறு முத்துப்பாண்டி அடிக்கப் போக, அவனது இடக்கரத்தைப் பிடித்து பின்னால் வளைத்தான் சர்வஜித். அவனது தோள்ப்பட்டையில் என்னவோ செய்ய, அவனது மூட்டு விலகி வலியில் அலறத் துவங்கினான்.

“ஏய்...” என்றவாறு அவன்மேல் முத்துப்பாண்டியின் அண்ணன்மார் பாய முயல, மூன்று துப்பாக்கிகள் அவர்களை குறி பார்த்தது.

“விநாயகம், வேலவா... தூரப் போங்க...” அவர் சொல்ல, முத்துப்பாண்டியோ வலியில் இன்னும் கதறிக் கொண்டிருந்தான். வைஷாலிக்கு என்னவோ கேங்க்ஸ்டர் படம் பார்க்கும் உணர்வு.

சர்வஜித்தோ, “எதிர்ல நிக்கறது யாரு? அவன் பலம் என்ன? இது எல்லாம் தெரிஞ்சு மோதணும். இல்லன்னா இப்படித்தான்” என்றவன் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். அந்த இடமே அமைதியில் இருக்க, முத்துப்பாண்டியில் அரற்றல் மட்டுமே அங்கே இருந்தது.

“சர்வஜித்தோ, ஆழமாக சிகரெட்டைப் புகைத்து, புகையை நுரையீரலுக்கு அனுப்பியவன், அதை நிதானமாக வெளியேற்றினான். “இது அவனா கேட்டு வாங்கினது. பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும். அது உங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லது” காலை அகட்டி நின்றவன், கைநீட்டி எச்சரிப்பதுபோல் சொன்னான்.

“நீ உன் ரூமுக்குப் போ...” சர்வஜித் கட்டளை பிறப்பிக்க, வைஷாலி அங்கே நிற்கவே இல்லை. அடுத்த நிமிடம் தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள். அவள் பின்னாலேயே பைரவனும் செல்ல, அவள் சாற்றிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்.

“பாப்பா...” அவர் அழைக்க,

“அப்பா...” என்றவள் தகப்பனின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள்.

“உனக்கு ஒன்றும் இல்லையே பாப்பா... நீ... நீ... பத்திரமா இருக்க தானே?” அதைக் கேட்பதற்குள் அவரது மொத்த தேகமும் பதறிக் கொண்டு இருந்தது. தகப்பன் எதற்காக பயப்படுகிறார் எனப் புரிய, மறுப்பாக தலை அசைத்தாள்.

“எனக்கு ஒன்றும் இல்லைப்பா... நான் நல்லாத்தான் இருக்கேன். இந்த ஒரு வாரமும் அவரோட அம்மாகூடத்தான் இருந்தேன். அவங்க என்னை நல்லபடியா பார்த்துகிட்டாங்கப்பா” அவள் சொல்ல அவரது கண்கள் கசிந்தது.

“அவரோட அம்மா கூடவா?” என்றவருக்கு அத்தனை ஆசுவாசம். கூடவே சர்வஜித்தின் மீது ஒரு பெரிய அபிமானமே எழுந்தது.

“நல்ல வேளைம்மா... இந்த ஒரு வாரமா நீ அவங்க கண்ணில் படலை. நீ மட்டும் அவங்க கையில் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பாங்க என்றே தெரியலை. இந்த ஒரு வாரத்தில் அவங்க கோபம் எல்லாம் எவ்வளவோ குறைஞ்சுடுச்சு” என்றவருக்கு மகள் பத்திரமாக இருக்கிறாள் என்பதில் அத்தனை நிம்மதி.

அவர் அழுவதைப் பார்த்தவள், “அழாதீங்கப்பா” என்றாள்.

“இப்படி ஒரு கையாலாகாத அப்பாவா இருக்கேனேன்னு நினைச்சால் எனக்கே என்னைப் பிடிக்கலைம்மா” மனம் வெதும்பினார். தான் பெற்ற மகளைப் பாதுகாக்க முடியாத ஒரு தகப்பனின் தவிப்பு அது.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா... இங்கே நீங்க மட்டும்தான் எனக்கு ஒரே ஆறுதல்” என்றவள், வெளியே கேட்ட சத்தத்தில் கலைந்தாள்.

முத்துப்பாண்டி இன்னுமே வலியில் அலற, “ஹரீஷ்...” என்றவன் விரலை அசைக்க, வேகமாகச் சென்று அவனது கக்கத்தில் தன் கரத்தை நுழைத்தான்.

‘எப்படியோ அவர் நினைத்த மாதிரி அடுத்த கையையும் உடைச்சுட்டார். அவனுகளுக்கே தெரியாமல் விஷயத்தை செய்ததுதான் சிறப்பே’ ஹரீஷ் நினைத்தான்.

முத்துப்பாண்டியிடம், “கையை ரிலாக்ஸா விடு...” என்றவன், தன் தோளை நெம்ப, முத்துப்பாண்டியின் விலகிய தோள் மூட்டு, சரியாகப் பொருந்தியது.

அப்பொழுது சட்டென அவனது வலியும் நின்று போக, அப்படியே தரையில் சில பல நிமிடங்கள் அமர்ந்துவிட்டான்.

சர்வஜித்தோ மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டவன், “வெல்... உங்களோட நான் சண்டை போட வரலை... என் கம்பெனி எம்ப்ளாயி கிட்டே இவன் தப்பா நடந்துக்கப் பார்த்தான். அதை நான் தடுத்தேன் அவ்வளவுதான். என்கிட்டே வேலைக்கு வரும் எல்லோருக்கும் நான்தான் பாதுகாப்பு.

“அதுக்கு மேலே வர்றவங்களுக்கு என்ன உறவு, பகை இதெல்லாம் நான் பார்க்கறது இல்லை. இவங்களுக்குள் என்ன உறவு என்றும் எனக்குத் தெரியாது. நடந்த விஷயம், என் எம்ப்ளாயியை காப்பாற்ற நான் எடுத்த நடவடிக்கை மட்டும்தான்.

“அது உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால், அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. அவங்க அவங்க செய்கையைப் பொறுத்துதான் என்னோட நடவடிக்கையும் இருக்கும்” ஒரு மாதிரி தெனாவெட்டாகவே சொன்னான்.

அவனது பேச்சை அறைக்குள் இருந்து கேட்ட வைஷாலி திகைத்துப் போனாள். ‘அடப்பாவி... பச்சை பொய் பேசறாரே. நான் இவங்களுக்கு என்ன உறவுன்னு இவருக்குத் தெரியாதமா? அவ்வா...அவ்வா...’ மானசீகமாக தன் வாயிலேயே அடித்துக் கொண்டாள்.

வெளியே... “அப்பா பொய்ப்பா... பொய்...” முத்துப்பாண்டி கத்தினான். கோபாலின் கண்களோ இன்னுமே பின்னால் இறக்காத ‘கன்’களோடு இருந்த அவர்களிடமே நிலைத்து இருந்தது. தாங்கள் எப்படிப் பட்டவனோடு மோதுகிறோம் எனத் தெரியாமல் மோதக் கூடாது என அவர் நிதானமாகவே இருந்தார்.

“சரிங்க... இப்போ என்ன நான் மன்னிப்புக் கேட்டால் உங்களுக்குப் போதுமா?” சர்வஜித் கேட்க, வைஷாலி தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.

‘என்னது மன்னிப்பா இவரா? வாய்ப்பே இல்லை’ என்றுதான் எண்ணிக் கொண்டாள்.

“இங்கே பாருங்க... நான் சொல்றதை எல்லாம் சொல்லிடறேன். பிறகு நீங்க முடிவெடுத்துக்கோங்க. வைஷாலிக்கு கான்ட்ராக்ட் முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு. அந்த மூணு மாசமும் அவ என்கிட்டே வேலைக்கு வந்தாகணும்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
“ஹாங்... இருங்க... இருங்க... அவசரப்படாமல் நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசுங்க” என்றவன், “நீங்க ஒரு கோடிக்கு பல கோடி நஷ்ட ஈடு கொடுப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது பணத்தைப் பற்றி இல்லை. அவங்க இடத்துக்கு வேற ஆள் எடுத்து, அவங்க கொஞ்ச நாள் அவங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்தாகணும்.

“எனக்கு என் தொழில் ரொம்ப முக்கியம்ங்க. அவங்க அவ்வளவு திறமைசாலி, அவங்களை அப்படி சட்டுன்னு நான் விட முடியாது. அதுக்குத்தான் சொல்றேன்... அவங்களை வேலைக்கு வர வைக்க, மன்னிப்பு என்னங்க, அவரோட காலில் கூட விழுந்து மன்னிப்புக் கேட்கறேன்” என்றவன் அவனை நோக்கி நடக்க, அலறிப் போனான்.

ஹரீஷோ... ‘பின்றியேடா... நடிப்பில் பிச்சு உதறுறியே...’ பிரகாஷ்ராஜ் குரலில் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு நின்றிருந்தான்.

வைஷாலிக்கு நெஞ்சே ஒரு நொடி நின்றுவிட்டது. ‘என்னவோ பெருசா ப்ளான் பண்றார்’ அவளது மனது அடித்துச் சொன்னது. கூடவே அவன் நடிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“அவ எங்கேயும் வர மாட்டா. எனக்கும் அவளுக்கும் வர்ற முகூர்த்தத்தில் கல்யாணம்” முத்துப்பாண்டி சொல்ல, நிதானமாக அவன் அருகே நெருங்கினான்.

“ஏய்... கிட்ட வராமல் தூரமா இருந்தே பேசு...” அவன் சொல்ல, அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஒரு முறை அவளை வீடு புகுந்து தூக்கின எனக்கு மறுமுறை அதைச் செய்வது எல்லாம் ரொம்ப ஈசி” சின்னக் குரலில் சொல்ல, சற்று நேரத்துக்கு முன்னர் ஜெமினிகணேசன் மாடுலேஷனில் மன்னிப்பை வேண்டியவனா இவன் என முத்துப்பாண்டி உறைந்து போனான்.

“என்ன? அப்போ நீதான் அப்போ அவளை... அவளை...” முத்துப்பாண்டிக்கு பேரதிர்வாக இருந்தது.

சர்வஜித்தோ மற்றவர்களை ஓரவிழிப் பார்வையாக கவனித்துவிட்டு, “என்ன சொன்ன? உனக்கும் அவளுக்கும் கல்யாணமா? அவ எனக்குத்தான்... உன்னால் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ” முத்துப்பாண்டியிடம் அடிக்குரலில் சொன்னவன்,

வெளியில் சத்தமாக, “இந்த உடைஞ்ச கையை வச்சுகிட்டு அவ கழுத்தில் எப்படி தாலி கட்டுவ? த்...த்..த்...” என சத்தமாக அனுதாபத்தை கொட்டினான்.

“என்னடா சொல்றான்?” என்ற முத்துப்பாண்டியின் இரண்டாவது அண்ணன் வேலவன் அருகே வர முயல, அவனால் ஒரு அடி கூட நகர முடியவில்லை. அங்கே அவர்கள் அனைவரும் கைதிகளாக நிற்க வைக்கப் பட்டிருப்பது கோபாலுக்கு நன்கு புரிந்தது.

“மன்னிப்புதான் கேட்டேன்...” சர்வஜித் பின்னால் திரும்பிச் சொல்ல, முத்துப்பாண்டிக்கு திகைப்பு.

“அவளை எங்கேயும் அனுப்ப முடியாதுடா... என்ன செய்வன்னு நானும் பார்க்கறேன்” முத்துப்பாண்டி விடுவதாக இல்லை.

“ரெண்டு முறை அவளைத் தூக்கி இருக்கேன், இன்னும் என்கிட்டே சவால் விடற பார்த்தியா?” சர்வஜித் அத்தனை தெனாவெட்டாக பேசினான். அதைக் கேட்க கேட்க அவனுக்கு ரத்தம் கொதிக்கவே செய்தது. ஆனால் இருக்கும் சூழல் அப்பொழுதுதான் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் துவங்கியது.

அவன் அமைதியாகிவிட, “பயமா இருக்குல்ல?” இதழ் ஓரம் நக்கல் வழியக் கேட்டான்.

“பயமா எனக்கா?” முத்துப்பாண்டி எகிற,

“பயப்படணும்... நீ பயந்தே ஆகணும். பயந்து அவளை ஒளிச்சு வைக்கணும், நான் உன் கண்ணு முன்னாடியே அவளைத் தூக்கணும். இந்த விளையாட்டு எனக்குப் பிடிச்சிருக்கு. மூணு மாசம் மட்டும் அவளை எனக்கு கொடுத்துட்டா ஓகே... இல்ல...” அவன் முகத்தின் அருகே நெருங்கி, அத்தனை வில்லத்தனமாகச் சொன்னான்.

“நீ... நீ... அவளை கூட்டிப் போ... இல்ல... அவ மூணு மாசம் வேலைக்கு வருவா” முத்துப்பாண்டி வேகமாகச் சொன்னான். அங்கே இருந்த மற்றவர்களுக்கு சர்வஜித் என்ன பேசுகிறான் எனப் புரியவே இல்லை. ஆனால் முத்துப்பாண்டியின் எதிர்வினைகள் மட்டுமே புரிந்தது.

‘அவ இவனுக்கு கிடையாது. இவனுக்கு அவளை அனுபவிக்க அவ்வளவு வெறியா? அப்படின்னா இவனுக்கு அவ கிடைக்கவே போறதில்லை... நான் கொடுக்கவும் போறதில்லை’ சர்வஜித் முடிவெடுத்தான்.

“ரொம்ப சந்தோசம்... மூன்றே மாசம் தான்...” என சத்தமாகச் சொன்ன சர்வஜித், “அவ எனக்குத்தான்... அவளை முழுசா நான் மட்டும்தான் அனுபவிக்கப் போறேன். நீ அவளை மறந்துடு...” சின்னக் குரலில் அவனிடம் சொன்னவன் அவனைப் பார்த்து கண்ணடித்தான்.

நிஜத்தில் வைஷாலியை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமெல்லாம் சர்வஜித்துக்கு துளியும் இல்லை. பாண்டிச்சேரியில் இருந்து கிளம்பி வருகையில் தன் தாயிடமும் அதைத் தெளிவுபடுத்தி இருந்தான்.

அதற்கு அவனது தாய், “அப்படி ஒரு நினைப்பு இல்லையென்றால் அவளை அவர்கள் வீட்டில் விட்டுவிடு” எனச் சொல்லவேதான் அவளை இங்கே அழைத்து வந்தான். முத்துப்பாண்டியின் கையை உடைத்த பிரச்னையை தான் தனியாக டீல் செய்து கொள்ளலாம் என நினைத்தால், இங்கே எல்லாம் தவறாகிப் போனது.

அவன் கணக்குகள் எல்லாம் வைஷாலியிடம் தவறாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றன என்பதை அவன் உணர மறந்தான்.

“நீ சொன்னதை நான் வெளியே சொன்னால் என்ன ஆகும்னு தெரியுமா? உன் வீட்டில் கல்லெறிவோம், உன் மால் தரைமட்டமாகும். உன் கம்பெனி ஸ்ட்ரைக்கால் மூட வேண்டிய நிலை வரும்” முத்துப்பாண்டி அவனை மிரட்ட முயன்றான்.

“நீ எல்லாத்தையும் செய்யணும்னுதான் நான் எதிர்பார்க்கறேன். இந்த விளையாட்டை இன்ட்ரஸ்ட் ஆக்க ஒன்று செய்யவா? மூணு மாசத்தில் அவளை உன்கிட்டே திருப்பி அனுப்பி வைக்கறேன். அவ கழுத்தில் தாலி மட்டும் கட்டிடு, இது எல்லாத்தையும் விட்டுட்டு நான் திரும்பிப் போய்டறேன்.

“இந்த தமிழ்நாட்டு பக்கம் கூட வர மாட்டேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...” அவன் சொல்ல, முத்துப்பாண்டியின் கண்கள் ஒளிர்ந்தது.

“என்ன அது?” அத்தனை ஆர்வமானான். ஆனால் சர்வஜித் விரிக்கும் வலையில் எல்லாம் தான் வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என அவனுக்குப் புரியவே இல்லை.

“இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கணும். நீ மட்டுமே என்ன வேணா ப்ளான் பண்ணிக்கோ... எத்தனை பேரை வேணா கூட்டு சேர்த்துக்கோ. ஆனா... விஷயம் மட்டும் வெளியே போகக் கூடாது” சர்வஜித் சொல்ல, முத்துப்பாண்டிக்கு அத்தனை கொண்டாட்டம்.

ஆனால் அவனது ஈகோவை தூண்டி விட்டு சர்வஜித் குளிர் காய்கிறான் என்பது எல்லாம் அவனுக்குப் புரியவே இல்லை. வைஷாலியை வெற்றி கொள்வதை விட, கோபாலின் மகன்களின் தோல்வியை, கையறு நிலையை பச்சையாக ரசிக்கும் மனநிலையில் சர்வஜித் இருந்தான்.

“விஷயம் மட்டும் வெளியே கசிந்தது... உன் வைஷாலியை நீ மறந்துட வேண்டியது தான்” அவன் சொல்ல, முத்துப்பாண்டியின் முகத்தில் ஒரு கலவரம் வந்து போனது. அவன் அப்படி பயப்படுவதை வைஷாலி பார்த்தாள்.

சர்வஜித்தான் இதற்குக் காரணம் என்பது ஒரு மாதிரியான உணர்வைக் கொடுக்க, அவனையே இமைக்காமல் பார்த்தாள். பாண்டிச்சேரியில் இருந்து கிளம்புகையில் அவனது தாய் அவளிடம் சொன்னது அவள் நினைவில் ஆடியது.

“இனிமேல் அவன் உன்னை எந்த தொல்லையும் செய்ய மாட்டான்ம்மா... நீ நிம்மதியா இருக்கலாம். போயிட்டு வா...” எனச் சொன்ன பொழுது இதயத்தைக் கசக்கிப் பிழியும் வலி. அவனிடமிருந்து தப்பித்து, ஒரு நிம்மதியான இடத்திருக்கு செல்லப் போகிறோம் என்றால் பரவாயில்லை.

புதை குழிக்குள் விழப் போகிறோம் எனத் தெரிந்த பிறகு எப்படி சந்தோஷப்பட? ஆனால் விசாலாட்சி மேலும் சொன்ன சில விஷயங்கள் அவளுக்குள் ஒரு குண்டூசியின் முனை அளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

“அங்கே என்னம்மா நடக்குது?” பைரவன் மகளிடம் கேட்டார்.

“எனக்கும் தெரியலைப்பா...” என்றவளுக்கு சர்வஜித்தைப் பார்க்கப் பார்க்க, மனதுக்குள் அப்படி ஒரு ஏக்கமாக இருந்தது.

மூச்சு முட்டும் இருட்டு அறைக்குள், சிறு வெளிச்சப் புள்ளையைப் பார்த்து விட்டால் ஏற்படுமே அப்படி ஒரு நம்பிக்கையை அவன் கொடுத்தான். ஆனால் அது அப்படி இல்லை எனத் தெரிய வருகையில் வாழ்க்கை மீதே ஒரு அவ நம்பிக்கை வருமே அப்படி ஒரு நிலை.

மகள் சர்வஜித்தைப் பார்க்கும் பார்வை அந்த தகப்பனுக்குப் புரிய, அவருக்கு தன் கையாலாகாத நிலை இன்னும் பூதாகரமாகத் தெரிந்தது.

“ஓகே... அப்போ நம்ம பேச்சுவார்த்தை ரொம்ப சுபமாக முடிந்தது... இப்போ நீங்க கிளம்பலாம்” சர்வஜித் சொல்ல, ‘நீங்கள் அனைவரும் சென்றாக வேண்டும்’ என்ற கட்டளை அதில் இருந்தது.

கோபாலுக்கு தன் இடத்தில் மற்றவனின் ஆளுமை அவரை திணறச் செய்தது. அவருக்கு இருக்கும் கோபத்துக்கு, அவனைக் கொன்று எரித்து, அவனது சாம்பலைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்னும் வெறி.

“இது எங்க இடம்... நீ வெளியே போ...” அத்தனை நேரமாக வாய் திறவாமல் நடப்பதை கவனித்துக் கொண்டு இருந்த கோபால் வாய் திறந்தார்.

“இல்லையே... அது முடியாதே... என்ன மிஸ்டர் முத்துப்பாண்டி... நீங்க என்ன சொல்றீங்க?” அவனிடம் கேட்டான்.

“அப்பா நாம போகலாம்...” அவன் சொல்ல, ‘இந்த அளவுக்கா அவ மேலே உனக்கு ஆசை? அது எந்த காலத்திலும் நடக்காதுடா’ மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அவர்கள் செல்லமுயல, “வீட்டு ஆட்கள் கிட்டே சொல்லாமல் கிளம்பறீங்க?” என்றவன் ஹரீஷை விட்டு பைரவனை வெளியே அழைத்தான்.

அவர் வரவே, “என்ன மச்சான்... எங்களோட வரீங்களா?” கோபால் கேட்டார்.

“இல்ல... நான் என் பொண்ணு கூட ஒரு நாலு நாள் இருந்துட்டு வர்றேன்” என்றவருக்கு அங்கே என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.

“வைஷாலி...” முத்துப்பாண்டி அழைக்க, அவள் வெளியே வந்தாள்.

“நீ உன் மிச்சம் இருக்கற கான்ட்ராக்ட் நாட்களை முடிச்சுட்டு அடுத்த நாள் ஊர்ல இருக்கணும். இல்லையா அடுத்த நாள் நான் இங்கே இருப்பேன். நீ ஊருக்கு வந்த பத்து நாளில் நமக்கு கல்யாணம்” அவன் சொல்லிக்கொண்டே போக, அவளுக்கு எதுவும் புரியவில்லை.

‘இவன் என்ன சொல்கிறான்? என்னை இங்கே விட்டுட்டுப் போறாங்களா? நிஜமாவா? நான் வேலைக்குப் போகலாமா?’ அவளால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.

“ரொம்ப நாள் இந்த ஆட்டம் நிலைக்காது. இந்த கோபால் இறங்கி செஞ்சு நீ பார்த்தது இல்லையே... பார்ப்ப...” கோபால் சர்வஜித்திடம் சவால் விட்டார். சர்வஜித்தோ புகையை நிதானமாக வெளியேற்றியவன், கோபாலை ஒரு எள்ளல் பார்வை பார்த்தான்.

“என் விஷயத்தை யோசிக்கறதுக்கு எல்லாம் உனக்கு டைம் கொடுப்பேனா என்ன? ஹா...ஹா...ஹா... குட் ஜோக்.... நானே சிரிச்சுட்டேன்னா பாரேன்” சர்வஜித் ஒரு மாதிரி தோரணையாக நின்று சொல்ல, அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வரு வழி இருக்கவில்லை.

முத்துப்பாண்டி அவளை ஒரு மாதிரியாக பார்த்துச் செல்ல, அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவர்கள் செல்லவே, பைரவன் பக்கம் திரும்பியவன், “உங்க முயற்சியை நீங்க கை விட்டுடுங்க. அது நடக்கவே போறதில்லை...” என்றான்.

‘என்னவாம்?” என அவள் யோசிக்க, பைரவனோ அதிர்ந்தார்.

“நாளையில் இருந்து நீ ஆபீசுக்கு வந்து சேர்” என்றவன் சென்றுவிட்டான். அவன் செல்லவே, வைஷாலி தகப்பன் பக்கம் பார்த்தாள்.

“என்னப்பா...? அவர் உங்ககிட்டே என்ன சொல்லிட்டுப் போறார்?” புரியாமல் கேட்டாள்.

“உன்னை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டி முயற்சி பண்ணிட்டு இருக்கேன்ம்மா. உனக்கு இங்கே சேஃப் இல்லை. இந்த விஷயம் கடுகளவு கசிந்தாலும் உன் மாமனுங்க என்ன செய்வாங்கன்னே தெரியாதே.

“அதனால் நானே இறங்கி... ஒவ்வொண்ணா நிதானமா செய்துட்டு இருக்கேன். உன் விஷயத்தில் என்னால் யாரையும் நம்ப முடியாதே. ஆனா... இவருக்கு எப்படி தெரிய வந்ததுன்னுதான் தெரியலை. எனக்கென்னவோ பயமா இருக்கும்மா” பைரவன் முதல் முறையாகப் பயந்தார்.

“உன்னை என்னால் பாதுகாக்க முடியாமல் போய்டுமோன்னு நினைச்சாலே எனக்கு தூக்கம் கூட வர மாட்டேங்குது. இப்போ... இவர் சொல்லிட்டுப் போறதைப் பார்த்தால்...” அப்படியே கலங்கிப்போய் சோபாவில் அமர்ந்துவிட்டார்.

“அப்பா... அப்பா... எனக்கு எதுவும் ஆகாதுப்பா... என்னை நம்புங்க” அவள் சொல்ல, எதிர்பார்ப்பும், பரிதவிப்புமாக மகளைப் பார்த்தார்.

“என்னம்மா சொல்ற? நீ சொல்றது நடக்குமா?” நம்பிக்கையே இல்லாமல் கேட்டார்.

“சர்வா நினைத்தால் நடக்கும்ப்பா. இப்போ இந்த நிமிஷம்... என்னை இங்கே விட்டுட்டு அவங்க கிளம்புவாங்கன்னு நீங்க நினைச்சீங்களா? இல்லை தானே... ஆனா நடந்திருக்கே. என்னை உயிரோடவாவது விடுவாங்கன்னு நினைச்சீங்களா? அதுவும் நடந்திருக்கு. அப்போ... நான் சொல்றதும் நடக்கும்ப்பா” அவள் சொல்ல, மகளை நம்பிக்கையின்றியே பார்த்தார்.

பகை முடிப்பான்....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
15
15
3
Vellkovil
முத்துப்பாண்டி சர்வாகிட்ட தானா உன் தலைய கொடுத்துட்டையே 😏
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
முத்துப்பாண்டி சர்வாகிட்ட தானா உன் தலைய கொடுத்துட்டையே 😏

முத்துப்பாண்டிக்கு தரமான சம்பவம் இருக்கு.

நன்றி!