• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 21.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
பகுதி – 21.

அடுத்து வந்த இரண்டு மாதங்கள் எப்படிக் கடந்தது எனக் கேட்டால் யாருக்கும் தெரியாது. வைஷாலி அவள் ஊருக்கே சென்றுவிட்டாள். இன்னும் பதினைந்து நாட்களில் அவளுக்குத் திருமணம் என முடிவாகி இருக்க, அந்த வேலைகள் எல்லாம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது.

வைஷாலி கொஞ்சம் கூட கவலையற்று இருந்தாள். சர்வஜித் தன் சவாலில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவான் என அவளுக்கு மலையளவு நம்பிக்கை இருந்தது. இத்தனைக்கும் அவளை வீட்டுச் சிறையில்தான் வைத்து இருந்தான் அந்த முத்துப்பாண்டி.

அதற்கும் அவள் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. அவளுக்கு உடை வாங்க, ஜேக்கட் தைக்க, நகை வாங்க என ரத்னா அத்தனை அலப்பறைகள் கூட்டினாள். எதற்கும் கொஞ்சம் கூட அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை.

முதலில் எல்லாம் இந்த திருமணமே வேண்டாம் என முரண்டு பிடித்திக் கொண்டிருந்த மகள், இப்பொழுது அமைதியாகிவிட, ரத்னாவை கையில் பிடிக்க முடியவில்லை. அதுவும் தன் பிறந்த வீட்டில் கோபால் அவளுக்கு முழு ஆதரவாக இருக்க, அவள் சொல்வதுதான் அங்கே என்றாகிப் போனது.

“என்னம்மா ரத்னா, மருமக ஏதும் பிரச்சனை பண்றாளா?” கோபால் தங்கையிடம் கேட்டான்.

“அவ வேண்டாம் வேண்டாம்னு சொன்னது எல்லாம் சும்மா அண்ணே. இப்போ புடவை செலெக்ட் பண்றது என்ன? நகை வாங்கறது என்ன? ஜேக்கட்டுக்கு டிஸைன் சொல்றது என்ன? எனக்கே ஆச்சரியம் தான்” அவள் சிலாகிக்க கோபாலுக்குமே அவ்வளவு சந்தோசம்.

ரத்னா பேசுவதைக் கேட்ட கோதை, “அக்கா, நாம எல்லாம் தெரியாமல் இந்த பாழும் கிணற்றில் வந்து விழுந்தோம். ஆனா இந்த பொம்பளை தெரிஞ்சு வச்சுகிட்டே இப்படிச் செய்யுதே. அதுக்கு எப்படிக்கா மனசு வருது? இதுதான் நிஜமாவே வைஷாலியைப் பெத்துதா?” ஆற்றாமையாகக் கேட்டாள்.

“எல்லாம் இந்த அதிகார போதையும், ‘தான்’ என்ற அகங்காரமும் கொடுக்கற திமிர் போதைதான் வேற என்ன? பொண்ணோட வாழ்க்கையோ, அவ சந்தோஷமோ முக்கியம்னு கொஞ்சமாவது நினைப்போ, அக்கறையோ இருந்தா இந்த பொம்பளை இப்படிச் செய்யுமா?” ஜெயந்தியும் புலம்பினாள்.

“ஹையோ அத்த...” கோதை... ருக்மணியைப் பார்த்துவிட்டு தன் வாயை கப்பென மூடிக் கொண்டாள். ருக்மணிக்கும் இந்த திருமணத்தில் அத்தனை விருப்பமில்லை என்றாலும், தன் மகனைப்பற்றி குறைவாக அவர் முன்பே பேசுவதைக் கேட்டால் அவருக்கு வலிக்கத்தானே செய்யும்?

எப்பொழுது முத்துப்பாண்டியோடு வைஷாலியின் திருமணம் முடிவானதோ அப்பொழுதே தன் மகனிடம் பேசினார். கை உடைந்து, அது முழுதாக சரியாகாமல் கொஞ்சம் கஷ்டப்படும் மகனைப் பார்க்க வருத்தமாகவே இருந்தது.

தாயைப் பார்த்தவுடன், “என்னம்மா... என்னைத் தேடி வந்திருக்க? என்ன விஷயம்?” கொஞ்சம் கூட மரியாதையின்றியே கேட்டான். தாய் எதைப்பற்றி தன்னிடம் பேச வந்திருப்பார் என தெரிந்தது போலவே அவனது பேச்சு இருந்தது.

“பாண்டி... நான் பேசப்போற விஷயம் உனக்குப் பிடிக்காதுதான்...” ருக்மணி தயக்கமாகத் துவங்க,

“அப்போ பேசாத...” கத்தரித்து பேசினான்.

“நான் உன்னைப் பெத்தவடா...”.

“அதுக்கு இப்போ உன் கால்ல விழுந்து தொழணுமா? உன் சந்தோஷத்துக்கு நீ பெத்துட்டு, என்னவோ பெரிய தியாகி மாதிரி பேசற? நீ பேசறதை எல்லாம் எனக்கு கேட்க நேரமில்லை. கல்யாண வேலை தலைக்கு மேலே கிடக்கு” எங்கேயோ வெளியே செல்ல கிளம்பியவாறே பேசினான்.

அவனது பேச்சில் அந்த தாயுள்ளம் கொஞ்சம் கூசிப் போனது. ஆனாலும் மகனிடம் பேச வந்ததை சொல்லிவிட முடிவெடுத்தார்.

“வைஷாலி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவளுக்கு வேண்டியாவது நீ கொஞ்சம் மாறணும். உன் கெட்ட சகவாசத்தை எல்லாம் விட்டுடு. இனிமேலாவது அவளுக்கு ஏத்தவனா மாறுப்பா” கெஞ்சலாகவே சொன்னார்.

“இதோ பார்... என் இஷ்டப்படிதான் நான் இருப்பேன். சாப்பாட்டிலேயே வெரைட்டியை எதிர்பார்க்கறவன் நான். என்கிட்டே வந்துட்டு என்ன பேசிகிட்டு இருக்க நீ? அவ நல்லவளா? நீ பாத்தியா? எவன் கூடவோ போய் ஒரு வாரம் இருந்துட்டு வந்தவதான் அந்த நல்லவ. நீ எனக்கு பாடம் எடுத்துகிட்டு இருக்க.

“பெத்தவன்னு கூடப் பார்க்காமல் ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன் போய்டு. அவளை விட்டு வச்சிருக்கறதே அத்தைக்காகத்தான். இல்லன்னா என்னைக்கோ அவளை தூக்கிட்டு போய் சிதைக்க எனக்கு எவ்வளவு நேரமாகி இருக்கும்?

“அதோட அவ மேல கொஞ்சமே கொஞ்சம் ஆசை வச்சிருக்கேன். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவளைக் காலம் முழுக்க கூடவே வச்சிருந்து அனுபவிக்கணும்னு ஆசைப்படறேன். மற்றபடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

“எனக்கு பொண்ணு கொடுக்க எத்தனை MLA, MP வீட்ல இருந்து கேட்கறாங்கன்னு உனக்குத் தெரியுமா? நீ என்னவோ திருந்தணும், மாறணும்னு பாடம் எடுத்துகிட்டு இருக்க? உன் மரியாதையை நீ காப்பாத்திகிட்டா உனக்கு நல்லது... போய்டு...” அவன் பேச வெறுத்துப் போய்விட்டார்.

அதற்கு மேலே அவனிடம் பேசுவதும், பாறாங்கல்லில் முட்டிக் கொள்வதும் ஒன்று எனப் புரிய அங்கிருந்து கிளம்பினார். “எனக்கு எவளையாவது பார்த்து கல்யாணம் பண்ணி வைப்ப தானே, அது இவ தான்னு நினைச்சுக்கோ...” அவன் சொல்ல, ருக்மணிக்கு மனதே விட்டுப் போனது.

தன் மூத்த இரு மகன்களும்கூட, திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்றுதான் நினைத்தார். திருந்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எல்லாம் கானல் நீராகிப் போனது. தன் கணவனைப் பார்த்துதானே மகன்கள் வளர்ந்தார்கள். அப்படி இருக்கையில், வேப்பமரத்திடம், வாழைப்பழத்தை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் என அவருக்குப் புரிந்தது.

ருக்மணி ஒரு மாதிரி சோர்வாகத் தெரிய, “என்ன ஆச்சு அத்த? உடம்பு எதுவும் சரியில்லையா?” ஜெயந்தி கவலையாகக் கேட்டாள்.

“எனக்கு எதுவும் இல்லை... இந்த உயிர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ?” என்றவருக்கு, ‘வைஷாலிக்காகவாவது அவன் மாறலாம்’ என ஏக்கமாக இருந்தது.

“எதுக்கு அத்த இப்படில்லாம் பேசறீங்க? எங்களுக்கு ஆதரவா, ஆறுதலா இருக்கறது நீங்க மட்டும்தான்” கோதை சொல்ல, ருக்மணிக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. தன் மருமக்களின் நிலைக்கும், அவரது நிலைக்கும் பெரிதாக எந்த மாறுதலும் கிடையாது.

கோபால் வயது மூப்பின் காரணமாக தன் சேட்டைகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டாரே தவிர, தன் மகன்களின் வயதில் கோபால் ஆடாத ஆட்டமா? இப்பொழுதும் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்டம் போடத்தானே செய்கிறார்.

இத்தனை வருடமாகியும் அவரால் எதை மாற்ற முடிந்ததாம்? இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, கோதையின் முகத்திலேயே ஒரு ஸ்கூல் ஷூ வந்து விழுந்தது.

“டேய் குமரா...” ருக்மணி குரல் கொடுக்க,

“வேலைக்காரி வேலையை ஒழுங்கா பார்க்கறாளா? இல்லையான்னு கவனிக்கறதை விட நீ என்ன புடுங்கிட்டு இருக்க? அவ செய்யலையா? நீ செய்... இப்போவே எனக்கு அந்த ஷூவை பாலிஷ் போட்டுக் கொடு...” கோதையின் மகன் குமரன் அத்தனை அதிகாரமாக பேசினான்.

“என்னடா சொன்ன?” என்ற கோதை அவனை அடிக்கப் போக, அவளது கரத்தை தடுத்துப் பிடித்தான்.

“இந்த அடிக்கற வேலை எல்லாம் வச்சுக்காத... சொன்னதை செய்” என்றவன் அலட்சியமாக சொல்லிச் சென்றான். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

“அத்த... என்ன பேசிட்டுப் போறான் பார்த்தீங்களா? இவனும் இந்த வீட்டு வாரிசாவே மாறிட்டான்” கோதையின் குரலில் அத்தனை வலி, வேதனை. தகப்பன் செய்வதைப் பார்த்தே வளர்பவன், அதைவிட அவன் அடங்காமல் எதையாவது செய்து, அதை வேலவனிடம் சொன்னால், ‘என் மகன், என் வாரிசு அப்படித்தான் இருப்பான். அவன் இஷ்டத்துக்கு விடு’ எனச் சொல்லி உரம் ஏற்றிவிட்டான்.

இப்பொழுது அதன் பலனை எல்லாம் அறுவடை செய்யத் துவங்கி இருந்தார்கள். இந்த பதினான்கு, பதினைந்து வயதுக்கே தன் வகுப்புத் தோழிகளிடம் எல்லாம் தவறாக பேசுகிறான் என புகார் வரத் துவங்கி இருந்தது.

இவன் அடுத்ததாக எதை இழுத்துக்கொண்டு வருவானோ? என்பதுதான் கோதையின் இப்போதைய பயமே. “நாம வாங்கி வந்த வரம் அப்படி. இவங்களை எல்லாம் அடக்கி வைக்க ஒருத்தன் பிறக்காமலா போயிருப்பான்? அவன் வருவான்... வந்து இவங்களை எல்லாம் அடக்குவான்” ருக்மணி ஆவேசமாகச் சொன்னார்.

அந்த நேரம் தேவதைகள் எல்லாம் ‘ததாஸ்து’ எனச் சொல்லிச் சென்றதை அவர் அறியவே இல்லை.

“பிறந்துட்டான் அத்த...” ஜெயந்தி சொல்ல, புரியாமல் அவளைப் பார்த்தார்.

“அதான்... நம்ம தீம் பார்க் விஷயம், எலக்ஷன் விஷயம், அந்த மால் விஷயம்.... கூடவே நம்ம ஏரியாவிலேயே இவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு வீடு வேற வாங்கி இருக்காரே மிஸ்டர் சர்வா, அவரைத்தான் சொல்றேன்” அவள் சொல்ல, மற்ற இரு பெண்களின் கண்களும் ஒளிர்ந்தது.

“நீ நிஜமாத்தான் சொல்றியா? கெட்டவங்கள்ள யார் நல்ல கெட்டவன்னு தேடற நிலையில்தான் நாம இருக்கோம்” கோதை வேதனையாகச் சொன்னாள்.

“நம்ம வைஷாலியைப் பார்க்க நான் அன்னைக்குப் போயிருந்தேனே, அவதான் சொன்னா. அவர் நல்லவரா கெட்டவரான்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு விஷயம் ரொம்ப உறுதியா தெரியும், அது... பெண்கள் விஷயத்தில் அவர் நெருப்பு மாதிரியானவர்.

“இது வரைக்கும் அவரைப்பற்றி ஒரு சின்ன கிசுகிசு கூட வந்தது இல்லை. அதோட அவர் தன்னை நல்லவன்னு இதுவரை சொன்னதே இல்லை. நான் கெட்டவன், ஆனா கேடுகெட்டவன் இல்லைன்னுதான் சொல்லி இருக்கார்” அவள் சொல்ல, இவர்களுக்கு பெருமூச்சு எழுந்தது.

“இவங்களை எல்லாம் நல்லவங்களால் தண்டிக்கவே முடியாதுன்னு நான் சொல்லிட்டு வந்தேன்” ஜெயந்தி சொல்ல, மற்றவர்களுக்கு எல்லாம் நம்பிக்கையே இல்லை.

“அவ இன்னொரு விஷயம் சொன்னா” ஜெயந்தி குரலைத் தழைத்துக் கொள்ள, அனைவரும் ஆர்வமானார்கள்.

“அது என்னன்னா... அந்த சர்வா அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி இருக்கார். முத்துப்பாண்டி கூட அவளோட கல்யாணம் நடக்கவே செய்யாதுன்னு அவ அவ்வளவு உறுதியா சொல்றா. எனக்குத்தான் அதை நம்பறதா வேண்டாமான்னு தெரியலை” ஜெயந்தி தங்களைச் சுற்றிலும் ஒரு பயப்பார்வை பார்த்துக் கொண்டாள்.

தாங்கள் பேசுவது வேலைக்காரர்கள் காதில் விழுந்து, அது பெரிய தலையின் காதுக்குச் சென்றால் தங்கள் நிலை என்னவாகும் என உதறலாக இருந்தது. “எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” ருக்மணி சொல்ல, இவர்கள் ஆச்சரியமானார்கள்.

“எப்படி அத்தை சொல்றீங்க?” மற்றவர்கள் கேட்டார்கள்.

“அவன் இவ்வளவு செய்தும், இவங்களால் அவனை தொடவாவது முடிந்ததா? அதைவிட, வைஷாலியை அவ வீட்டுக்குள் இருந்தே தூக்கி, ஒரு வாரம் அவளை மறைச்சு வச்சு இருந்திருக்கான். இவங்களோட மொத்த படையும் திரண்டும் எதுவும் கண்டு பிடிக்க முடியலையே. நான் அதை வச்சுத்தான் சொல்றேன்” ருக்மணி அழுத்திச் சொல்ல, மற்றவர்களுக்கும் சிறு நம்பிக்கை பிறந்தது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
“இன்னும் ரெண்டே நாள்தான் என்ன நடக்கும்னு தெரிஞ்சுடும். அவ வீடு முழுக்க அவ்வளவு காவல். நாமளே கூட சுலபமா நுழைய முடியலை” அவர்களுக்கு இதயம் கிடந்தது அடித்துக் கொண்டது.

வைஷாலிக்குமே ‘என்ன ஆகுமோ?’ என்ற பதட்டம் அதிகம் இருந்தது. அதுவும் சர்வஜித் திருமணத்திற்கு முந்தின நாள் இரவு வரைக்கும் ஊருக்கு கூட வரவில்லை எனத் தெரிய சற்று சோர்ந்தாள். அதுவும் ஊருக்குள் வரும் வண்டிகள் எல்லாம் எல்லையோரத்திலேயே கண்காணிக்கப் படுவதாகச் சொல்ல, அவள் இதயம் தாளம் தப்பும் உணர்வு.

ஆனால் அன்று நள்ளிரவில் அவள் அறைக்குள் அவன் வந்து நின்றபொழுது உறைந்துதான் போனாள். “நீ...நீ...நீங்க எப்படி இங்கே?” அவளுக்கு பேச்சு வர மறுத்தது. நிஜத்தில் அவள் அவ்வளவு டென்ஷனாக இருந்தாள். இந்த பதினைந்து நாட்களில், அவனிடமிருந்து ஒரு சிறு செயலைக் கூட அவள் காணவில்லை.

இப்பொழுது கூட விடிந்தால் கல்யாணம் என்னும் நிலை. தன் வாழ்க்கை என்னவாகும் என்ற கவலையில், பயத்தில் அவளால் உறங்க கூட முடியாமல்தான் அமர்ந்திருந்தாள்.

“உனக்கு என்ன திக்கு வாயா? என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் பேசற? சரி... நீ தூங்கல?” சாதாரணமாகக் கேட்டான்.

“எப்படி தூக்கம் வரும்?” அவனிடம் கேட்க, தலையை சரித்து சில நொடிகள் அவளைப் பார்த்தான்.

“நான் சொன்னா செய்வேன்... சில நேரம் சொல்லாததையும் கூட செய்வேன்” அவன் சாதாரணமாக சொல்வதுபோல் இருந்தாலும், அது அப்படி இல்லை என அவனது குரல் சொன்னது.

“மைண்ட்ல ஏத்திக்கறேன்...” என்றவளுக்கு அதற்கு மேலே என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அத்தனை நேரமாக இருந்த மொத்த அழுத்தங்களும் அவளை விட்டு விடை பெற்றுச் சென்றிருக்க, பெருத்த நிம்மதியாக உணர்ந்தாள்.

“அம்மா இதை உன்கிட்டே கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதுக்குத்தான் வந்தேன்” என்றவன் ஒரு பார்சலைக் கொடுத்தான்.

“என்ன இது?” அவள் கேட்க, தோளைக் குலுக்கினான்.

அவள் அதை வேகமாகப் பிரிக்க, ஒரு விலை உயர்ந்த பட்டுப்புடவை அதற்குள் இருந்தது. அதற்குள் இரு கடிதமும் இருக்க, அதைப் படித்தவளின் கண்கள் பனித்தது. அவளது செய்கையை எல்லாம் விலகி நின்று பார்த்தானே தவிர எதுவும் செய்யவில்லை.

“ஓகே... நான் கிளம்பறேன்... நாளைக்கு மேடையில் உன்னை சந்திக்கறேன்” என்றவன் அங்கிருந்து செல்லப் போனான்.

“வெளியே காவலுக்கு நிறையப்பேர் இருக்காங்க. எப்படிப் போவீங்க?” சற்று பதட்டமாகவே கேட்டாள்.

“எப்படி வந்தேனோ, அப்படியேதான் போகப் போறேன்” என்றவன் ஒரு மாஸ்க்கை எடுத்து அவளிடம் காட்டினான்.

“ஓ...” என்றவள், அவன் தன்னை இப்படியே அழைத்துச் சென்றுவிட்டால் பரவாயில்லை என்னும் நிலை.

“என்னையும் இப்போவே உங்க கூடவே அழைச்சுட்டுப் போய்டறீங்களா?” என்றவளின் குரலில் மலையளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த டென்ஷனை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்ற பரிதவிப்பு இருந்தது.

“எதா இருந்தாலும் முகத்துக்குநேரே செய்துதான் எனக்குப் பழக்கம்” அவன் கோபமாகச் சொல்ல, அமைதியாகிவிட்டாள். ‘இவனை இப்பொழுது முத்துப்பாண்டியின் ஆட்கள் பார்த்தால் என்ன ஆகும்? நாளுக்கு இவனைக் கண்டால் சும்மா விடுவார்களா என்ன?’ வைஷாலியின் இதயம் கிடந்தது அடித்துக் கொண்டது.

ஒரு சாதாரண காதலனாக அவன் இருந்திருந்தால் அவளது உணர்வுகளைப் புரிந்து இருப்பானோ என்னவோ? அவனுக்கு அவளது நுண்ணிய உணர்வுகள், அந்த நேரம் அவன்மேல் அவள் மனம் கொள்ளும் வேட்கை இது எல்லாம் எதுவும் புரியவே இல்லை.

“அப்போ நான்...” என்றவன் செல்லப் போக, அவனை தாவி இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவனது கரங்களோடு சேர்த்து அவள் அவனை அணைத்திருக்க, நிஜத்தில் அவள் இப்படிச் செய்வாள் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த நேரம் அவளது அறைக்கு வெளியே காலடி ஓசை கேட்க, “ஷ்...ஷ்...” என்றவன், அவளை சுவர் பக்கம் நகர்த்தினான். அவனது புலன்கள் எல்லாம் அத்தனை உன்னிப்பாக வெளியே நடப்பதை அவதானிக்க முயல, அவன் கன்னம் தாங்கி அதிரடியாக அவன் இதழில் இதழ் பதித்து இருந்தாள்.

அவன் இதழ்கள் அவள் இதழ்களால் வன்மையாக சுவைக்கப்பட்டுக் கொண்டிருக்க, அந்த முத்தத்தை எதிர்பாராத அவன் திகைத்துப் போனான். அவனது கரங்கள் இரண்டும் சுவரில் பதிந்திருக்க, அவள் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்.

அத்தனை நெருக்கத்தில் அவள் முகத்தையே அவன் பார்த்திருந்தான். அந்த அறைக்குள் அரை இருளுக்கும் குறைவான வெளிச்சமே இருக்க, அந்த அவளது மதி முகம் முதல் முறையாக அவனை என்னவோ செய்தது.

அவள்தான் அவனை முத்தமிட்டாளே தவிர, அவனோ அவளது முத்தத்தை ஏற்று நின்றிருந்தான் அவ்வளவே. அதற்கு அவன் மயங்கவும் இல்லை, எதிர்வினை புரியவும் இல்லை. எப்பொழுதுமே தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்தே பழகியவன், அதையே கடைபிடித்தான்.

‘என்னை இவளுக்கு இவ்வளவு பிடிக்குமா?’ என்றுதான் மனதுக்குள் ஓடியது. அவனைப் பிடிக்கும் என அவனிடமே அவள் சொல்லி இருக்கிறாள் தான். அப்பொழுது எல்லாம் அவளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வந்தவன் என்ற நிலையில் அவளுக்கு தன்மேல் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு அது என்றே அவன் எண்ணி இருந்தான்.

ஆனால் இந்த நொடி, அது அப்படி இல்லை எனத் தோன்றியது. அவனை முத்தமிட்டு ஓய்ந்தவள், “பேட்லி ஐ நீட் திஸ்... நீங்க என்னைப்பற்றி என்ன வேணா நினைச்சுக்கோங்க. பட்... இந்த பதினைஞ்சு நாளா மூச்சு முட்டிப் போய்டுச்சு” என்றவளின் ஆசுவாசம் அவள் முகத்திலேயே தெரிந்தது.

“இட்ஸ் ஓகே...” என்றவனுக்கு அவளை அணைத்து, ஆறுதல் சொல்லி, தைரியப்படுத்த வேண்டும் என்பது எல்லாம் வரவில்லை.

“ஓகே இல்லை...” என்றவள் மேலே எதையோ பேசப் போக, கதவின் அருகே கேட்ட சத்தத்தில் யாரோ கதவில் காத்து வைத்து ஒட்டு கேட்பது அவனுக்குப் புரிய, நொடியில் செயல்பட்டு இருந்தான். இப்பொழுது அவளது இதழை அவன் அழுத்திக் கொள்ள, அவளுக்கு ஆச்சரியம்.

அவள்... அவன் முத்தத்தை ரசிக்கும் மனநிலையில் இருக்க, அவனோ, ஒட்டு கேட்பவன் எந்த சத்தமும் வராமல் போனால், அங்கிருந்து விலகிச் செல்லும் காலடி ஓசைக்காக காத்திருந்தான். அப்பொழுது அவளது இதழ்கள் மென்மையாக திறந்துகொள்ள, அவன் தடுமாறிப் போனான்.

‘முத்தம்’ என்ற வார்த்தையைக் கூட அவன் தன் வாழ்நாளில் இதுவரை உச்சரித்துப் பார்த்தது இல்லை. அப்படி இருக்கையில், அவளது இணக்கம், எதிர்பார்ப்பு... இப்பொழுது அவளை எப்படி முத்தமிட வேண்டும் என அவனுக்கு சத்தியமாகத் தெரியவில்லை.

அவன் சட்டென அவளைவிட்டு விலகிக் கொண்டு அவள் முகம் பார்க்க, பாவையவள் கூசிப் போனாள். “சாரி... நான்...” அவன் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பான்?’ என மனம் குன்றிப் போனது.

அவனுக்கோ அவன் தாய் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ‘நீ உன் மனைவியோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாகணும். உனக்கு உயிர் கொடுத்தவனைப்போல் நீ எந்த காலத்திலும் இருக்கவே கூடாது. அவ உணர்வுகளுக்கும், ஆசைக்கும் மதிப்பு கொடுப்பன்னு எனக்கு வாக்கு கொடு’ தாய் கேட்டதும், தான் வாக்கு கொடுத்ததும் அவன் நினைவுக்கு வந்து போனது.

“எனக்குத் தெரியாது...” அவன் சொல்ல, அவள் புருவம் நெரித்தாள். அவனும் அந்த நொடி அவளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் அது தானாக வந்தது.

“எனக்கு சண்டை தெரியற அளவுக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியாது. சோ... டோன்ட் பீ சாரி... நான்தா சாரி சொல்லணும். இப்போ நேரமில்லை வர்றேன்... நாளைக்கு மணமேடையில் உன்னை சந்திக்கறேன். நீ ரூமை உடனே பூட்டிக்கோ, கீ லாக் போடு, உள் லாக் போடாதே” என்றவன் வேகமாக வேஷத்தை மாற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சொன்ன பிறகுதான், தன் தாய் தன்னை உள்ளே வைத்து வெளியே கீயால் பூட்டிச் சென்றது நினைவுக்கு வந்தது. அவள் ஒரு மாதிரியான கலவையான மனநிலையில் படுக்கையில் சென்று அமர்ந்தாள்.

நிஜத்தில் அவ்வளவு நேரமும் அவளால் படுக்கையில் அமரக் கூட முடியவில்லை. அப்படி இருக்கையில் உறக்கம் எல்லாம் எட்டாக்கனிதான். இப்பொழுது அவன் கொடுத்துவிட்டுச் சென்ற புடவை, ஜேக்கட்டை எடுத்துப் பார்த்தாள்.

கூடவே அந்த கடிதம்... “என் மகன் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவான். நீ எதுக்கும் கவலைப்படாதே. நாளைக்கு நம்ம வீட்டில் உன்னை நான் எதிர்பார்க்கிறேன்” என அவர் எழுதி இருக்க, அந்த கடிதத்தை தன் நெஞ்சோடு வைத்துக் கொண்டாள்.

அந்த புடவையை தன் கரத்தால் வருடிக் கொடுத்தவளுக்கு ‘நாளைய விடியல் எந்த மாதிரியான அதிர்ச்சிகளை எல்லாம் கொடுக்க காத்திருக்கிறதோ?’ என்ற எண்ணமே உள்ளுக்குள் ஓடியது. மறுநாள் விடியலில் தகப்பன் வந்து எழுப்பிய பிறகே கண் திறந்தாள்.

“அப்பா...” என்றவாறு கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

“எழுந்து குளிம்மா... நேரமாகுது பார்...” என்றவருக்கு அத்தனை வருத்தம். அதைப் பார்த்தவள், தன் தகப்பனின் கைபிடித்து அருகே அமர வைத்தாள்.

“அப்பா... நைட் அவர் வந்திருந்தார்ப்பா. காலையில் என்னை மண மேடையில் சந்திக்கறேன்னு சொல்லிட்டுப் போனார். இங்கே பாருங்க, முகூர்த்தப் புடவை கூட கொடுத்தார்” மகள் சொல்ல, அவரால் தன் காதுகளை நம்பத்தான் முடியவில்லை.

“என்னம்மா சொல்ற? நிஜமாகவா? ஆனால் எப்படிம்மா முடியும்? உன்னை இங்கே இருந்து தூக்கிடக் கூடாதே என்றுதான் உனக்கு இவ்வளவு காவல். அதைவிட, மண்டபத்துக்கு போகவும் அவங்க வண்டியில்தான் நாம போயாகணும். இதில் மொத்த மீடியாவும் இங்கேதான் இருக்கு.

“அதுவும் முதலமைச்சர் தலைமையில் நடக்கப்போற கல்யாணம். பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் வேற இருக்காங்க. ஒரு சின்ன அசம்பாவிதம் என்றாலும், கேள்வியே கேட்காமல் முதலமைச்சரின் பாதுகாப்புக் காரணத்தை சொல்லி கைது பண்ண போலீஸ் தயார் நிலையில் இருக்காங்க.

“இவ்வளவு கட்டுக்காவல், உன் மாமாவோட அடியாட்கள் பலத்தை எல்லாம் கடந்து இங்கே ஒருத்தன் வர்றது அசாதாரணம்தான். ஆனாலும் நேற்று உன் ரூமுக்கே வந்துட்டுப் போயிருக்கார்ன்னா, எனக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறக்குது பார்ப்போம்” என்றவர் கொஞ்சம் நிம்மதியாக அங்கே இருந்து செல்லப் போனார்.

“அப்பா...” என அவரை அழைக்க, நின்று மகளைப் பார்த்தார்.

“நீங்க இனிமேல் என்னைப்பற்றி கவலைப் படாதீங்கப்பா. நான் நல்லபடியா இருப்பேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” அவள் சொல்ல, அவள் தலையை வாஞ்சையாக வருடினார்.

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கும்மா. நீ மகராசியா நல்லா இருக்கணும்” என்றவர் வெளியே சென்றார். ஆனாலும் மனதுக்குள் மகளின் கழுத்தில் தாலி ஏறும் வரைக்கும் அவருக்கு நிம்மதி என்பது இருக்கப் போவதில்லை. அதற்குப் பிறகு நிச்சயம் சர்வா பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் மண்டபத்தில் இவர்கள் எதிர்பாராத அத்தனை காட்சிகளும் அரங்கேறியது.

“டேய் முதலமைச்சர் வர்றார்... இந்த நேரம் இன்னும் அலட்டா இருங்கடா” வேலவனும், விநாயகமும் தங்கள் ஆட்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

“அண்ணே... எங்களை மீறி காத்து கூட உள்ளே நுழையாதுண்ணே” அவர்கள் சொல்ல, சர்வா நுழைந்து இருந்தான்.

முதலமைச்சரின் காரில், அவருடனே வந்து இறங்கிய சர்வாவை அங்கே யாருமே எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவரோடு சகஜமாக பேசி சிரித்தவாறு, அவன் ராஜ நடையிட்டு வர, இவனைக் கொல்லத் தேடியவர்களே அவனை வரவேற்க வேண்டிய நிலை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,241
236
113
Chennai
அதுவும் சர்வா கோபாலைப் பார்த்த அந்த பார்வை. அதில் வழிந்த நக்கல், அவன் தலையை நிமிர்த்திக்கொண்டு நடந்த விதம்... கோபாலால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வேலவன், விநாயகம் என யாராலும் இந்த காட்சியை நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தானே ஆக வேண்டும்.

“வணக்கம் கோபால்... சவுக்கியமா?” அவன் தலையை ஆட்டியவாறு கேட்டு வேறு வைக்க, கோபாலுக்கு மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை. முதலமைச்சர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அவர்களை கொன்று புதைத்து இருப்பார்.

உடன் வந்திருப்பது முதல்வர் என்பதால், திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் அவன் வந்த எரிச்சலை சகித்துக் கொண்டார். இவர்கள் பேசிக் கொள்ள முதல்வர் பார்வையாளர்தான். அதுவும் ‘முதல்வர் வாழ்க’ என்னும் கோஷம் விண்ணை முட்ட, இவர்கள் பேசுவது வேறு யாருக்கும் கேட்கவும் முடியவில்லை.

“கோபால், இது மிஸ்டர் சர்வா... பெரிய பிசினஸ்மேன். இப்போ நம்ம கட்சிக்கு நிதியை வாரி வழங்குவது இவர்தான்” முதல்வர் அறிமுகப்படுத்திவேறு வைக்க, கையெடுத்து கும்பிட்டாக வேண்டிய நிலை.

“அப்படியா ரொம்ப சந்தோசம்... வாங்க தம்பி...” கோபால் வரவேற்றாக வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளானார். அறிமுகப்படுத்துவது முதலமைச்சர் என்கையில் அவனிடம் முகம் திருப்பினால் அது முதலமைச்சரை அவமானப்படுத்துவது போலாகி விடுமே. சர்வாவின் வெற்றிக்களிப்பு அவன் முகத்திலேயே தெரிந்தது.

சர்வா வருவதை இப்படி நின்று வேடிக்கை பார்க்க வேண்டி வரும் என அவர்கள் யாரும் கனவிலும் கூட கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கோபாலின் வீட்டுப் பெண்களுக்கு திறந்த வாயை மூட முடியாத நிலை.

“எப்படிம்மா இருக்கீங்க? பெரிய அண்ணி, சின்ன அண்ணி... நலமா?” என சர்வஜித் சிரித்துக்கொண்டே கேட்டு வைக்க, அவர்கள் எப்படி பதில் சொல்லாமல் இருக்க முடியும்? அதுவும் முதலமைச்சரின் முன்னால் வைத்து அவன் கேள்வி கேட்கையில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

“நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் தம்பி... வாங்க... வாங்க...” மனதார வரவேற்றார்கள்.

அவன் முதல்வரோடு உள்ளே வர, மணமகள் அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு கண்கள் தெறித்துவிடும்போல் விரிந்து கொண்டது.

“அது யாருடி? முதலமைச்சரோட பையன் போல இல்லையே?” ரத்னா மகளிடம் கேட்டு வைத்தாள்.

“அவர்... அவர்... சர்வா?” வைஷாலி சொல்ல, ரத்னாவின் தேகம் முழுக்க மிளகாயைப் பூசிக் கொண்டதுபோல் ஒரு எரிச்சல் மண்டியது.

“இவனைக் கொல்ல வேண்டி அண்ணா ஊர் முழுக்க தேடினால், இவன் இந்த ஆள் கூட வந்திருக்கானா” என்றவளுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. அத்தனை நேரமாக வைஷாலிக்கு காவல் இருந்த ரத்னா, தன் அண்ணனைப் பார்க்க ஓடினாள்.

அந்த கேப்பில் ருக்மணி, ஜெயந்தி, கோதை என அனைவரும் வைஷாலியை வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

“அக்கா... எப்படிக்கா?” கோதை ஜெயந்தியிடம் கேட்க, “எனக்கும் அதே ஆச்சரியம் தான். ஆனாலும் மனுஷன் இவங்க கண்ணுக்குள்ளே எல்லாம் விரலை விட்டு ஆட்டறார்” இவர்கள் பேச, வைஷாலியின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

“விரலை இல்லை... கடப்பாரைக்கா...” கோதை சிலாகித்தாள். இந்த சர்வஜித் ஒரு ராஜதந்திரி என அவர்கள் அறிந்த நொடிகள் அவை. அதுவும் கோபாலின் நுனி விரலைக் கூட அசைக்க விடாமல் முழுதாக நிறைந்திருக்கும் அவனது பிரம்மாண்டம் கண்டு மலைத்தார்கள்.

சர்வஜித்தை முதலமைச்சரின் அருகே பார்க்கப் பார்க்க, வைஷாலிக்கு என்னவோ செய்தது. கூடவே நேற்று அவனை முத்தமிட்ட நினைவு வேறு வந்து போக, இதயம் படபடத்தது. கொஞ்சம் கூட லஜ்ஜையே இன்றி அவனை வெறித்தாள். அவன் அங்கே இருந்தே அவளைப் பார்த்துவிட்டதற்கு அறிகுறியாக, மெல்லியதாக இதழ் வளைத்து புன்னகைத்தான்.

அவன் கண்களில் குளிர் கண்ணாடி அணிந்திருக்க, அவன் பார்வையை அவளால் படிக்க முடியவில்லை. ‘முதல்ல இந்த கண்ணாடியை அவர்கிட்டே இருந்து புடுங்கி தூரப் போடணும். என்ன நினைக்கறார்? ஏது நினைக்கறார்ன்னு எதுவும் தெரிஞ்சுக்க முடிய மாட்டேங்குது’ தனக்குள் புலம்பினாள்.

“அக்கா... இங்கே ஒருத்தியைப் பாருங்க... விட்டா இப்போவே அவர் கிட்டே போய்டுவா போல” கோதை சொல்லி சிரிக்க, அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை.

முதலமைச்சருக்கும் அவனுக்கும் கோபால் தன் கையாலேயே ஜூசைக் கொடுக்க, ஒரு ஏளன சிரிப்போடு அதை வாங்கிக் கொண்டான். “நாங்க இருக்கறோம்... நீங்க போய் வேலையைப் பாருங்க” முதலமைச்சர் சொல்ல, கோபால் கோபமாக அங்கிருந்து நகர்ந்தார்.

அதற்கு இடையில் வைஷாலி மணமேடைக்கு வந்துவிட, ஐயர் மந்திரங்களைச் சொன்னார். முத்துப்பாண்டி அவ்வளவு நேரமாக அங்கே இருந்தவன், அப்பொழுது மணமேடையில் இருக்கவில்லை.

முதல்வரை வரவேற்க என இறங்கி வந்த முத்துப்பாண்டியை அதன் பிறகு யாருமே பார்க்கவில்லை. முதலில் அவன் கழிவறைக்கு உள்ளே சென்று இருப்பான் என அவர்கள் எதிர்பார்த்திருக்க, மணமகள் வந்த பிறகும் அவனைக் காணோம் எனவும் மண்டபமே அல்லோகலப் பட்டது.

“ஐயா வாங்க...” என்ற சர்வா, முதல்வரோடு மேடைக்கு ஏற, கோபால், விநாயகம், வேலவன் என அனைவரும் அந்த நேரம் முத்துப்பாண்டியை தேடச் சென்று இருந்தார்கள். ரத்னாவும் தன் அண்ணனின் பின்னால் சென்று இருக்க, மற்றவர்கள் மட்டுமே மேடையில் இருந்தார்கள்.

முதலமைச்சரின் கமேண்டோ பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி, கோபாலின் ஆட்களால் மேடையை நெருங்கவே முடியவில்லை. “ஐயரே, மந்திரத்தை சொல்லுங்க” என முதலமைச்சர் சொல்ல, அவருக்கு எதுவும் புரியவில்லை என்ற பொழுதும் அவர் சொன்னதைச் செய்தார்.

சரியாக அந்த நேரம் கெட்டிமேளம் முழங்க, முதலமைச்சர் அங்கே இருந்த தாலியை எடுத்து சர்வஜித்திடம் கொடுத்தார். ஒரு புன்னகை முகமாக அதை வாங்கியவன், கெட்டிமேள சத்தத்தில் அங்கே வந்த மற்றவர்களை எல்லாம் பார்த்தவாறே தாலியை வைஷாலியின் கழுத்தில் அணிவித்தான்.

அந்த மஞ்சள் கயிற்று பொன் தாலி எப்பொழுது தங்கத்தில் கோர்த்த தாலியாக மாறியது என யாருக்கும் தெரியவில்லை. அவள் கண்கள் மெல்லியதாக பனித்துப் போக, நடந்து முடிந்ததை இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை. தன் கழுத்தில் தொங்கிய பொன்தாலியை தன் கரத்தில் அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

அதற்கு மேலே பைரவனின் காலிலும், அங்கே இருந்த ருக்மணி, ஜெயந்தி, கோதை என அனைவரின் காலிலும் வைஷாலி விழ, அவன் பைரவனின் காலில் மட்டுமே விழுந்து எழுந்தான்.

“விருந்து சாப்பிட போகலாமா?” சர்வஜித் சாதாரணமாக கேட்க, அவளுக்குத்தான் என்ன ஆகுமோ என பதைபதைப்பாக இருந்தது. ஆனால் முதல்வரின் நிழலில் அனைத்தையும் சாதித்துக் கொண்டே அங்கிருந்து அகன்றான்.

சர்வஜித்தின் அந்த செய்கை... ‘என் திருமணம்... நான் அமர்ந்து, விருந்து உண்டுவிட்டே செல்வேன்’ என்ற அந்த திமிர் அப்பட்டமாகத் தெரிந்தது.

‘எவனாக இருந்தாலும் வந்து பார்...’ என பார்வையால் தன்னை எரித்தவர்களை எல்லாம் சவாலுக்கு அழைத்தான். முதல்வரோடு அமர்ந்து, மறுபக்கம் வைஷாலியோடு எதையோ சொல்லி என அவன் இருக்க, வைஷாலிக்குத்தான் உணவு தொண்டைக் குழிக்குள் இருந்து இறங்க மறுத்தது.

‘இங்கே இருந்து போய்ட்டா பரவாயில்லை. ஆனா இவர் ஏன் இப்படி பண்றார்?’ அவள்தான் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவனோ... ‘அப்படித்தான்டா செய்வேன்? நெருங்கிப் பாருங்கள்’ என விருந்தை நிதானமாக ரசித்து உண்டான்.

ஊர் மக்களும் சரி, அடியாட்கள், கோபால், அவரது மகன்கள் என யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் முதலமைச்சரோடு அவரது காரில் ஏறி ஏர்போர்ட் வந்தும் இறங்கிவிட்டான்.

முதலமைச்சர் தனி விமானத்தில் செல்ல, அவன் தனது ப்ரைவேட் ஜெட்டில் ஏறிக் கொள்ள, வைஷாலிக்கு மயக்கம் வராத குறைதான்.

பகை முடிப்பான்.....