• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 23.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai

பகுதி – 23.

முந்தினதினம் இரவு தாமதமாக உறங்கினாலும், அதிகாலையிலேயே வைஷாலிக்கு விழிப்பு வந்துவிட்டது. சோம்பலாக கண் விழித்தவள், வேகமாக தன் அருகே படுக்கையை ஆராய்ந்தாள். அங்கே சர்வஜித் இல்லை என்ற பிறகுதான் சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.

நேற்று இரவு நடந்தவை அனைத்தும் அடுக்கடுக்காக நினைவுக்கு வர, கன்னங்கள் இரண்டும் சிவந்துபோக, வெட்கப் புன்னகை சிந்திக் கொண்டாள். அவனது அடாவடியின் பலனாக தேகம் மொத்தமும் ஊமை வலியில் கொஞ்சம் திணறியது.

அவனது பேச்சுக்களும், செய்கைகளும் இப்பொழுது நினைக்கையிலும் மனதை என்னவோ செய்தது. கொஞ்சம் முரட்டுத்தனமாகவே அவளைக் கையாண்டு இருந்தான். ‘இவர் இவ்வளவு காலையிலேயே எங்கே போயிருப்பார்?’ எண்ணியவாறு எழுந்து ஜன்னல் பக்கம் சென்றாள்.

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவள், பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள். சர்வஜித்தும், ஹரீஷும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள். மிகக் கடுமையான பயிற்சியாக அது இருக்க, பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு கண்கள் தெறித்து விடும்போல் விரிந்து கொண்டது.

ஒரு ஸ்லீவ்லெஸ் பனியனும், ஒரு ஷாட்சும் அவன் அணிந்திருக்க, ஹரீஷ் முழு வாக்கிங் உடையில் இருந்தான். நின்று பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு, ‘இருவரும் பயிற்சி செய்கிறார்களா? இல்லையென்றால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்களா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.

அந்த அளவுக்கு பல விதமான தற்காப்பு கலைகளை ஒவ்வொன்றாக அவர்கள் பயிற்சி செய்ய, இறுதியில் ஆளுக்கு ஒரு நிஞ்சா வாளை கையில் எடுக்க, அவளுக்கு நெஞ்சே நின்று போனது.

‘என்னது... இந்த வாளால் சண்டை போட்டுக்க போறாங்களா?’ இதயம் தாறுமாறாக துடிக்க, ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு அப்படியே நின்றுவிட்டாள். ஏசியை ஆஃப் செய்துவிட்டு, ஜன்னலை அகலத் திறந்து வைத்தாள்.

‘இங்கே இருந்து அழைப்போமா?’ என அவள் யோசிக்க, அவர்களது அந்த தீவிர பயிற்சி அதைச் செய்ய விடாமல் தடுத்தது. தான் குரல் கொடுத்து, அதனால் யாரின் கவனமும் கொஞ்சம் பிசகி ஒருவர் மற்றவரை காயப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்பதால் வாயை அவள் திறக்கவே இல்லை. சர்வஜித்தை முதல் முறையாக இப்படி ஒரு குறைந்த உடையில் பார்க்கிறாள்.

இதுவரை அவனது அகன்று விரிந்த தோள்களோ, புஜபலமோ, பைசப்சோ எதுவுமே அவள் கண்களுக்குப் புலன் ஆனது இல்லை. ஆனால் இப்பொழுது வியர்வையில் ஒட்டி இருந்த அவனது நெஞ்சின் உரம், அதில் இருந்த சிக்ஸ் பேக்கா? எயிட் பேக்கா? என அறிய முடியாதவாறு இருந்த படிக்கட்டு தேகம்.

அவன் சுழன்று மின்னல் வேகத்தில் தாக்கும் விதம்... அவனது அந்த வேகமே இது அவனுக்குப் புதிதில்லை என அவளுக்குச் சொல்ல, அவனை வஞ்சனையின்றி ரசித்தாள். அவளது பார்வை மறந்தும் ஹரீஷின் பக்கம் செல்லவே இல்லை.

ஆனாலும் அவனும் சர்வஜித்துக்கு இணையாக ஈடு கொடுப்பது ஓரவிழிப் பார்வையிலேயே புரிந்தது. அவள் அப்படியே நின்று ரசித்துக் கொண்டிருக்க, அவள் வந்து நிற்பது சர்வஜித்துக்கு நன்கு புரிந்தது.

சர்வஜித்தின் புலன்கள் எப்பொழுதும் மிகவும் கூர்மையானவைதான். ‘உஸ்தாதுக்கு முதுகுக்குப் பின்னால் கூட கண் உண்டு’ என அவர்களது நிழல் உலக வட்டத்தில் பேசிக் கொள்வார்கள். தன்னைச் சுற்றிலும் எப்பொழுதுமே கவனித்த வண்ணம் இருப்பான். எத்தனை தூரத்தில் இருந்து அவனைப் பார்த்தாலும் அவனுக்குப் புரியும்.

வைஷாலியின் அசைவை வைத்தே அவளைக் கண்டு கொள்வான். அப்படி இருக்கையில், அவள் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு நின்றால் அவளைக் கண்டுகொள்ள மாட்டானா என்ன? அவள் சென்றுவிடுவாள் என அவன் எதிர்பார்க்க, அவள் அசையும் வழியைக் காணோம்.

எனவே இந்த சண்டைப் பயிற்சியை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான். திடுமென சர்வஜித் ஆக்ரோஷமாகத் தாக்க, ஹரீஷ் அவனுக்கு ஈடுகொடுக்க முயன்று தோற்றுப் போனான்.

அவன் அப்படி மின்னல் வேக தாக்குதல்களைத் தொடுக்கும் பொழுது, ‘என்ன ஆகுமோ?’ என பயந்த வைஷாலிக்கு, அவன் வெற்றி பெறவும் சந்தோஷம் பிடிபடவில்லை. தன்னை மீறி வேகமாக கையைத் தட்டிவிட்டாள்.

ஹரீஷ் வேகமாக அவள் இருந்த பக்கம் பார்க்க, அதன் பிறகே தான் செய்த முட்டாள்த்தனம் அவளுக்குப் புரிந்தது. ஆனால் சர்வஜித் நிதானமாக நடந்து சென்று அங்கே இருந்த ஸ்டேண்டில் வைத்திருந்த பூந்துவாலையை எடுத்து தன் வியர்வையை துடைத்துக் கொண்டான்.

அவன் பின்னாலேயே வந்த ஹரீஷ், “பாஸ்...” எனச் சொல்லி சிரிக்க, ‘என்ன?’ என்பதுபோல் ஒரு பார்வையைச் செலுத்தியவன் மறந்தும் வைஷாலியின் பக்கம் பார்க்கவும் இல்லை, கொஞ்சம் கூட அசையவும் இல்லை.

“நான் கூட என்னடா சார் திடீர்ன்னு வேகத்தை அதிகமாக்கிட்டாங்களேன்னு பார்த்தேன். அப்போவே புரிஞ்சது, நீங்க இதை முடிக்க நினைக்கறீங்கன்னு. நான் நினைச்சது சரியா போச்சு. ஆனால் காரணம்தான் வேற போல” என்றவாறு வைஷாலியைப் பார்த்து சின்னதாக தலை அசைத்தான்.

“செம ஃபயிட்...” என அவள் கத்தியதுதான் காரணம். இல்லையென்றால் சர்வஜித் முன்னால் அவன் அவளைப் பார்த்து தலை அசைப்பானா என்ன? சர்வஜித் அசையாமல் இருக்க, அவனும் அப்படி இருக்க முடியாதே.

“பாஸ்... மிஸ்ஸஸ் பாஸ் பார்க்கறாங்க...” அவனிடம் சொன்னான்.

“நீ கிளம்பு...” சர்வஜித் சொல்ல, அங்கே இருந்த பயிற்சிக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். வைஷாலிக்கு தன்னவன் அப்படி இறுக்கமாக நிற்பது மனதுக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.

‘என்னைக் கொஞ்சம் பார்த்தால்தான் என்ன? என்னோடு ஒன்றான பிறகும், அவருக்குள் நான் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?’ அந்த எண்ணம் அவளைக் கொஞ்சம் சோர்ந்து போகச் செய்தது.

அங்கிருந்து அகன்று சோர்ந்த நடையோடு குளிக்கச் சென்றாள். ஆனால் சர்வஜித் ஒரு மாதிரி தள்ளாடிப் போனான். நேற்று வரைக்கும் அவன் இப்படியெல்லாம் உணர்ந்தது இல்லை. பெண்ணவள் தன் வாழ்க்கைக்குள் வந்த பிறகான அந்த மாற்றம்... அது அவனுக்கே நன்கு புரிந்தது.

வியர்வை அடங்க அங்கே புல்வெளியில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பேப்பரை கரத்தில் எடுத்துக் கொண்டான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்த பிறகே அவன் தன் அறைக்கு வர, அப்பொழுதுதான் குளித்துவிட்டு தலையில் ஒரு டவ்வலும், ஏற்றிக் கட்டிய டவ்வலோடும் வைஷாலி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்.

சட்டென அவளைப் பார்த்துவிட்டவன், “ஓ ஷிட்... சாரி... சாரி...” என்றவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான். அதைப் பார்த்தவள், சில பல நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டாள்.

‘ஏன்... இது கூட இல்லாமல் என்னை அவர் பார்த்ததே இல்லையா? நல்லா வெறிக்க வெறிக்க...’ எண்ணிக் கொண்டே வந்தவள் தன் நினைப்பை நிறுத்திவிட்டாள். அவள் வேகமாக உடை மாற்றிவிட்டு வெளியேற, அவன் அறைக்குள் நுழைந்தான்.

தன் அறைக்குள் அவன் இதுவரை உணராத அந்த வாசனை, பாத்ரூமிலும் அதே வாசனை, அவனை ஒருமாதிரி கிறங்கச் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

கீழே உணவருத்தச் செல்கையில் அவள் அங்கே இருக்க, அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள். அதைப் பார்த்த விசாலாட்சி, “அட... எதுக்கும்மா எழுந்து நிக்கற? உட்கார்...” என்றார்.

“ஹெல்த் ட்ரிங்க் தான் குடிப்பன்னு சொன்னாங்க.... இந்தாப்பா. நீ என்னம்மா குடிக்கற?” அவளிடம் கேட்டார்.

‘இவ இன்னுமா குடிக்கல?’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவளுக்கு அவனிடம் பேச நெஞ்சு முட்ட ஒரு மாதிரி ஆசையாக இருந்தது. கூடவே அவனது செல்ல சீண்டல், தீண்டல், பார்வைகளுக்காக மனம் ஏங்கியது.

‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ அவனை நேசித்து திருமணம் செய்து கொண்டவளுக்கு வாழ்க்கை இப்படி உப்புச் சப்பில்லாமல் செல்வது ஒரு மாதிரியாக இருந்தது.

சின்னவர்களுக்கு தனிமை கொடுத்து விசாலாட்சி ஒதுங்கிக் கொள்ள, “உனக்கு தனி ரூம், பெர்சனல் ரூம் வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ரூம் எடுத்துக்கோ” அவன் சொல்ல, காபி கப்பை கீழே வைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் கண்களில் குளிர் கண்ணாடி இருக்க, வேகமாக வந்து அதை கழட்டி எடுத்தவள், “ஏன்... நான் உங்க ரூம்ல இருக்கறது உங்களுக்கு அசவுகரியமா இருக்கா என்ன?” சற்று கோபமாகவே கேட்டாள்.

“நான் எனக்காக சொல்லலை, உனக்காகத்தான் சொன்னேன்...” அவன் புருவம் நெரிய, அவளை சற்று அழுத்தமாக பார்த்தவாறே சொன்னான்.

“எனக்கு வேணும்ன்னா நானே செஞ்சுக்கறேன். ஏன் அதுக்கு உங்ககிட்டே பெர்மிஷன் வாங்கணுமா?” கோபம் குறையாமலே கேட்டாள். சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவே இல்லை. காலையில் ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கவே, அதைத் தவிர்க்க வேண்டியே சொன்னான். அதற்கு ஏன் இவள் இப்படி ரியாக்ட் செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை.

சில நுண்ணிய உணர்வுகள் எல்லாம் அவனுக்கு இன்னும் கைவரப் பெறவில்லையே. “நோ நீட்...” அவன் முடித்துவிட, தான் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவள் காபிக் கோப்பையை கைகளில் எடுத்துக் கொண்டாள்.

(அவர்களது அறைக்குள் மட்டும் சர்வஜித்தாக இருப்பவன், அவர்களது அறைக்கு வெளியே சாதாரணமாகச் செல்வதாக இருந்தால் கூட ‘சர்வா’வாகவே சென்றான். நொடிகளுக்குள் அவன் மாறும் வேஷம் கண்டு வைஷாலியே திகைத்துத்தான் போயிருந்தாள்).

பத்து மணிக்குத்தான் அலுவலகம் என்பதால் காலையில் சற்று இலகுவாகவே இருந்தான். அவளுக்கு திடுமென நினைவுக்கு வர, “அந்த முத்துப்பாண்டியை என்ன பண்ணீங்க?” வேகமாகக் கேட்டாள்.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், “கண்டெயினரில் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க அனுப்பி வச்சிருக்கேன்” அவன் சாதாரணமாகச் சொல்ல, பதறிப் போனாள்.

“என்ன கண்டெயினர்லயா? மூச்சு முட்டி செத்துப் போய்டுவான். பெரிய பிரச்சனை ஆகப் போகுது. சரி... அதெப்படி அவனை அங்கே இருந்து தூக்கினீங்க? எனக்கு பயந்து வருது” என்றாள்.

“அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கு இல்லை. அதே மாதிரி அவன் எத்தனை நாள் உயிரோட இருப்பான், எப்படி இருப்பான்? அவனை எப்போ வெளி உலகத்துக்கு தூக்கிட்டு வரணும்... எல்லாம் எனக்குத் தெரியும்” அவன் சொல்ல, அவளுக்கு மலைப்பாக இருந்தது.

“உங்களுக்கு பயமே இல்லையா?” அவனிடம் கேட்டாள்.

“உன் மாமா பயந்திருக்காரு? இல்லல்ல... இனிமேல் பயப்படுவார்” அவன் நிதானமாகச் சொன்னாலும், அவனது கை கடிகாரம் ஓசை எழுப்பத் துவங்கியது. கூடவே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொள்ள, வேகமாக எழுந்து வந்து அதைப் பிடுங்கினாள்.

“வீட்டுக்குள்ளே சிகரெட் பிடிக்காதீங்க... அத்தை வயசானவங்க, அவங்களுக்கு இந்த நிக்கோட்டின் புகை ஒத்துக்காது” வேகமாகச் சொன்னாள்.

“உனக்குப் பிடிக்கும் தானே?” அவன் கேட்க,

“ஆமா... அதுக்கு...? உங்களோட நானும் சேர்ந்து ஸ்மோக் பண்றேனா என்ன?” வெடுக்கென கேட்டாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“உனக்கு ஓகேன்னா யூ கேரி ஆன்...” என்றவாறு சிகரெட் பேக்கட்டை அவள் பக்கம் நகர்த்தினான்.

“உங்ககிட்டே பேச முடியாது... சரி எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கேட்கணும்னு நினைப்பேன்... ஆனா அது எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாததால் இதுவரை நான் கேட்டது இல்லை” அவள் தயக்கமாக பேச, அவள் எந்த விளைவுகளைச் சொல்கிறாள் என அவனுக்குப் புரிந்தது.

“இனிமேல் அப்படி நடக்காது...” பட்டெனச் சொன்னான். அவன் அப்படிச் சொன்னதில் அவள் சிலிர்த்துப் போக, அவனோ “அதற்கு அம்மா அனுமதிக்க மாட்டாங்க. நான் அவங்களுக்கு வாக்கும் கொடுத்து இருக்கிறேன்” அவன் சொல்ல, அவளுக்கு சப்பென்றாகிப் போனது.

அதை முயன்று ஒதுக்கியவள், “நீங்க என் கோபால் மாமாவை டார்கெட் பண்றீங்களா? எதற்காக? அவருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பகை? அவர் வயசுக்கும், உங்க வயசுக்கும் பகையாளி ஆக கூட வாய்ப்பு இல்லையே” அவள் சொல்லிக் கொண்டே போக, அவன் கையில் இருந்த கிளாஸ், சிலீர் என நொறுங்கிய பிறகே பேச்சை நிறுத்தினாள்.

“ஹையோ ரத்தம்...” அந்த கிளாஸ் அவனது உள்ளங்கையை ஆழமாக குத்தி பதம் பார்த்திருக்க, அவன் கரத்தில் இருந்த வாட்ச்சோ, ‘பீப்..பீப்...பீப்...’ என உச்ச வேகத்தில் கதறத் துவங்கி இருந்தது.

அந்த சத்தத்துக்கு அங்கே வந்த விசாலாட்சி... “என்னப்பா ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபம்?” அவர் கேட்டுக் கொண்டு இருக்கையிலேயே ஒரு பெண் முதலுதவிப் பெட்டியோடு அங்கே வந்தாள். சரியாக அந்த நேரம் ஹரீஷும் அங்கே வர, வேகமாக அவர்களை நெருங்கினான்.

“லீவ் மீ...” என்றவன் அவள் கரத்தில் இருந்து, தன் கரத்தை உருவிக் கொண்டவன், ரத்தம் சொட்டச் சொட்ட கரத்தை அப்படியே தொங்க விட்டான்.

அதைப்பார்த்து அவள்தான் பதறிப் போனாள். “ஹையோ என்ன பண்றீங்க? கிளாஸ் ஆழமா குத்தி இருக்கு... ப்ளட் வேற கொட்டுது” பதறினாள்.

“இதெல்லாம் எதுவுமே இல்லை... இதனால் நான் சாகப் போறதும் இல்லை” அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்துவது அவன் குரலில் இருந்தே தெரிந்தது.

“சர்வா... உட்கார்...” விசாலாட்சி அவ்வளவுதான் சொன்னார். மறு பேச்சின்றி அவன் அமர்ந்துகொள்ள, “ஹரீஷ்... கொஞ்சம் என்னன்னு பாரு” எனவும் வேகமாக அவன் கரத்தை ஆராய்ந்தான்.

“சார் காயம் ஆழமா இருக்கு, ரெண்டு தையலாவது போட்டாகணும்” அப்படி இல்லையென்றால், ரத்தமும் நிற்காது, காயம் ஆற நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் வேகமாகச் சொன்னான்.

“அவன்கிட்டே என்ன சொல்லிக்கிட்டு இருக்க, நான்தானே உன்னை பார்க்கச் சொன்னேன். என்ன செய்யணுமோ செய்” ஹரீஷிடம் சொல்ல, அவன் வேகமாக செயல்பட்டான். அந்த கண்ணாடித் துண்டை அகற்றிய நேரம் ரத்தம் இன்னும் வேகமாக குபுக்கென வெளியேற, பஞ்சால் அதை அழுத்திப் பிடித்தான்.

இரண்டு நிமிடங்கள் கடந்தும் பஞ்சு ரத்தத்தில் குளிப்பது நிற்காமல் போக, “அது ஒன்றும் பிரச்சனை இல்லை, நீ தையலைப் போடு” என்றான். அவன் சொன்ன பிறகு வேறு என்ன செய்ய முடியும், வலி தெரியாமல் இருக்க ஊசியைக் கூட அவன் போட்டுக் கொள்ளவில்லை.

அவன் அப்படியே அமர்ந்திருக்க, வைஷாலிக்குத்தான் கண்கள் கலங்கிப் போனது. “இது என்னால்தான்... நான் எதையோ கேட்கப் போய்தான் இப்படி ஆயிடுச்சு” கலங்கிப் போன குரலில் சொன்னாள்.

“நீ அமைதியா இரு...” என்ற விசாலாட்சி, ஹரீஷ் மூன்று தையல் போட்டு முடிக்கவே, அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொன்னார்.

எல்லாம் முடியவே... ஹரீஷ் தான் வந்த விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவன் செல்லவே, “உனக்கு அப்படி என்ன கோபம் வருது? அவ கேட்டா, கேட்டதுக்கு பதில் சொல்லியாகணும். அதை விட்டு... இப்படி உன் முரட்டுத்தனத்தை அவகிட்டே காட்டுவியா?” விசாலாட்சி கடிந்துகொள்ளும் குரலில் கேட்டார்.

“நான் அவளை எதுவும் செய்யலை...” அவன் சொல்ல,

“எதா இருந்தா என்ன? கிளாசை நொறுக்கற அளவுக்கு கோபம் வேணுமா? கையில் கட்டியிருக்கும் வாட்ச் கதறுது. நானும் பார்த்துட்டே இருக்கேன், நீ உன் கோபத்தை அடக்கும் வழியைக் காணோம்” சற்று கோபமாகவே சொன்னார்.

“இப்போ நீங்க எதுக்கு கோபப்படறீங்க? இப்படி உட்காருங்க, தண்ணி குடிங்க” என்றவன் தானே அங்கே மேஜைமேல் இருந்த ஜக்கில் இருந்து ஊற்றிக் கொடுத்தான். ஏனோ அந்த நொடி அவர்களை அப்படிப் பார்க்க அவளுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

‘இவர் என்கிட்டே எப்போ இப்படி இறங்கிப் பேசுவார்?’ என மனதுக்குள் ஒரு ஏக்கம் பிறர்ந்தது.

அவனோ, “அவ என்ன கேட்டான்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க” என்றான்.

“அவ என்ன வேணா கேட்டிருக்கட்டும்... அவகிட்டே கோபத்தை காட்டிட்டு, நீ எங்க போகப் போற?” தாய் கேட்க, அவனிடம் அத்தனை அமைதி. வைஷாலியை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

“சரி... இனிமேல் கோபப்படலை” உடனே சரண்டர் ஆனான். வைஷாலிக்கு தன்னிடம் முரட்டுத்தனத்தையும், வார்த்தைகளில் ஆசிட்டையும் கலக்கும் சர்வஜித் கண்முன் வந்து போனான். அவளிடம் அவன் பேசிய பேச்சுக்கள், நடந்துகொண்ட முறை என அனைத்தும் கண்முன் நிழலாடியது.

“சரி எப்போ உங்க கல்யாணத்தை வெளி உலகுக்கு அறிவிக்கப் போற? அதோட எப்போ ஹனிமூன் போறீங்க?” தாய் கேட்க, அவனோ ஒரு மாதிரி குழப்பமாக தாயைப் பார்த்தான்.

“ஹனிமூனா? நானா?” என்னவோ கேட்கக் கூடாத வார்த்தையை கேட்டுவிட்டதுபோல் அவன் முகம் மாறி இருந்தது.

“இல்ல... உனக்கு கல்யாணமாயிடுச்சே... நான் ஹனிமூன் போகலாம்னு பார்த்தேன்” தாய் சொல்ல, வைஷாலி அந்த நிலையிலும் களுக்கென சிரித்துவிட்டாள். அவள் சிரிக்கவே, விசாலாட்சியும் சிரிக்க, அவனோ இருவரையும் ‘உர்’ எனப் பார்த்தான்.

“அம்மா... என்னால் செய்ய முடியாத எதையும் என்கிட்டே சொல்லாதீங்க. நீங்க சொன்னால் அதை என்னால் தட்ட முடியாது” ஒரு மாதிரிக் குரலில் சொன்னான். அவன் அப்படிச் சொல்லவே, வைஷாலிக்கு இன்னுமே ஆச்சரியம்.

“ஹனிமூன் போறது மலையைப் புரட்டும் விஷயமா?” என்றவர் வைஷாலியை ஒரு பார்வை பார்த்தார். அந்த பேச்சு வந்த உடனேயே அவள் முகம் வெட்கத்திலும், சங்கடத்திலும் முக்குழித்து இருக்க, அதை அவனிடம் ஜாடையாக காட்டினார்.

“எனக்கு இங்கே வேலை இருக்கும்மா...” அவனுக்கு அப்படி ஒரு நினைப்பே இல்லாத பொழுது அவனும் என்னதான் செய்ய?

“உனக்கு எப்போ வேலை இல்லாமல் இருந்திருக்கு? அவளை அழைச்சுட்டு ஒருவாரம், பத்துநாள் எங்கேயாவது போய்ட்டு வாப்பா. இதெல்லாம் ஒரு ஞாபகங்கள்... இப்போ இல்லன்னா எப்போதும் முடியாது” தாய் சொல்ல, அமைதியாக யோசித்தான்.

“இப்போ... உடனே முடியாதும்மா... நான் முயற்சி செய்கிறேன்” அவன் சொல்ல, அதற்கு மேலே அவர் கட்டாயப்படுத்தவில்லை. வைஷாலியின் முகம் சற்று சோர்ந்து போனது. அது அவனோடு ஹனிமூன் கொண்டாட போக முடியவில்லையே என்ற நினைப்பால் அல்ல.

மாறாக... அந்த நினைப்பே அவனுக்கு இல்லை என்பது ஒரு மாதிரி வலியைக் கொடுத்தது. அந்த வலியே, தனக்கு அவன்மேல் எத்தனை, நேசம்... காதல் என உணர்த்த அதுவேறு இன்னும் வலித்தது.

‘அவர் அவரோட சவாலில் ஜெயிக்க என்னை கல்யாணம் பண்ணிகிட்டார். அம்மா சொன்னாங்கன்னு நேற்று என்கூட குடும்பம் நடத்தினார். அதுக்கு மேலே அவர்கிட்டே அன்பு, பாசம், பற்றுதல், அக்கறை இதையெல்லாம் நீ எப்படி எதிர்பார்க்கற?’ என தன்னைத் தானே குட்டிக் கொண்டாள்.

அவள் முகம் நொடியில் வாடிப் போக, அதை அவன் உணர்ந்தான். அதிகாலையில் அவள் தன்னை ரசித்த அந்த பார்வை, சற்று நேரத்துக்கு முன்னர் உரிமையான அவளது செய்கை. தன் காயத்தால் அவள் கொண்ட பரிதவிப்பு... இப்போதைய அவளது சோகம்... என அனைத்தும் அவனைத் தாக்கியது. ஆனால் அதை மறந்தும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

இயற்கையில் நியதியா? இல்லையென்றால் தன்னவள் என ஆழ்மான உந்துதலா? இல்லையென்றால் தாலியின் மகிமையா? ஏதோ ஒன்று அவனையும் ஆட்டி வைத்தது. அவளை கவனிக்கச் செய்தது. அவள் முக மாறுதல்களை ஆராய வைத்தது. அவளது சோர்வு அவனுக்குள்ளும் இறங்கியது.

‘எனக்கு உங்களைப் பிடிக்கும்’ என்ற அவளது வார்த்தைகளும், அவளது வீட்டில், அவளது அறையில் வைத்து அவள் தன்னை முத்தமிட்டதும், ‘பேட்லி ஐ நீட் திஸ்... நீங்க என்னைப்பற்றி என்ன வேணா நினைச்சுக்கோங்க’ என்றதும் அசரீரி போல் காதுக்குள் ஒலித்தது.

அவளது பார்வை, அவளது வாசனை, உடனிருப்பு, உரிமை கோபம் என நினைத்துப் பார்த்தவன், தன்னைத் தானே திட்டிக் கொண்டான். ‘உன்னை இந்த அளவுக்கு ரெஸ்ட்ரிக்ட் பண்ணிக்க வேண்டாம் சர்வா. கொஞ்சம் லூஸ்ல விடு’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அதற்கு மேலே அதிகம் யோசிக்காமல், அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான். அவன் கிளம்பும்பொழுது அவள் அறையிலேயே அவனோடு இருக்க, அவளது உடனிருப்பு அவனை என்னவோ செய்தது. அவன் காட்டுச் செடி... தானாகவே முளைத்து, வளர்ந்து கரடு முரடாகவே இருந்துவிட்டவன்.

இப்பொழுது அவனை அப்படியே கொத்தாகப் பிடுங்கி மலர்ச் சோலைக்குள் வைத்துவிட்ட உணர்வு. சுற்றிலும் இருக்கும் மலர்களின் வாசமும், வேரில் ஊற்றப்படும் நீரும் அவன் குணத்தை மாற்றத் துவங்கி இருந்ததோ?

பதிமூன்று, பதினான்கு வயதுக்கு மேலே அவனுக்கு பெண் வாசனை என்றால் என்னவென்றே தெரியாது. அந்த பதினான்கு வயது வரைக்கும் தாயின் முந்தானைக்குள் வாழ்ந்தவன்தான் அவன். ஆனால் அந்த நினைப்புகளைக் கூட அவன் இப்பொழுது வெளியே வர விடுவதில்லை.

அது அவனைப் பலவீனமானவனாக மாற்றும் என்பதாலா? இல்லையென்றால் மனம் அப்படி ஒரு வாழ்க்கைக்கு ஏங்கும்? என்பதாலா? எப்பொழுதுமே அவன் நினைக்க மாட்டான்.

கீழே வந்து உணவை முடித்துக் கொண்டவன், வேகமாக கிளம்பி வெளியே வந்தான், தன் முதுகின் பின்னால் தேங்கி நின்ற அவளைப் பார்த்தவன் சற்று தேங்கினான். அவள் முகத்தில் படர்ந்திருந்த சோகம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்து அதைப் போக வைக்க என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

“வர்றேன்...” எனப் பொதுவாகச் சொன்னவன் கிளம்பிவிட்டான். வைஷாலிக்கு தனிமை சிறு பயத்தைக் கொடுத்தது. ‘என் வாழ்க்கை இப்படியே போய்டுமோ?’ அவனுடனே இருக்க மனம் வெகுவாக ஆசைப் பட்டது.

அவன் தன்னையும் அலுவலகம் அழைத்துச் சென்றிருந்தால் கூட இப்படி உணர்ந்திருக்க மாட்டாள். ஆனால் தன்னை இப்படி விட்டுச் சென்றது அதிகம் பாதித்தது. அவள் சோர்வாக தங்கள் அறைக்குச் சென்று அப்படியே படுத்துவிட்டாள்.

விசாலாட்சிக்கு வைஷாலியின் மனநிலை புரிந்தது. ஆனால் தன்னால் செய்ய முடியாத எதையும் சொல்லாதே என அவன் சொல்லிவிட்ட பிறகு, அதையே சாக்காக வைத்து மகனிடம் பேச அவரால் முடியவில்லை. எனவே அவர் தன் வேலையைப் பார்க்கப் போனார்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
பைரவனுக்கு அழைத்துப் பேசலாம் என நினைத்த வைஷாலி அந்த நினைப்பைக் கைவிட்டாள். அங்கே என்ன பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறதோ அவளுக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் தானாக எதையும் உருவாக்க அவள் விரும்பவில்லை.

அதே நேரம் அலுவலகத்துக்கு வந்த சர்வஜித், சில பல நிமிடங்கள் மிகுந்த முனைப்புடனே வேலை செய்தான். நேரம் செல்லச் செல்ல, அறைக்குள் பரவியா ரூம்ஸ்ப்ரேயின் வாசனை அவளை நினைவூட்டியது. ‘இதைவிட, அவளோட அந்த வாசனை நல்லா இருந்தது’ என மனம் சொன்னது. வைஷாலியின் வாடிய முகம் அவன் மனக்கண்முன் தோன்றி அவனைத் தொல்லை செய்தது.

பொதுவாகவே ‘இது வேண்டாம்... விட்டு விலகிவிடு...’ என அவன் எதையாவது செய்ய நினைத்தால், அது எத்தனை கடினம் என்றாலும் செய்து முடிப்பான். சிறு வயது நினைவுகளைக் கூட அப்படித்தானே அழுத்தி, அமிழ்ந்து போகச் செய்து இருக்கிறான். ஆனால் அவனுக்குள் படையெடுக்கும் அவள் நினைவுகளை அவன் கட்டுப்படுத்த நினைக்கவே இல்லை.

அது ஒரு மாதிரி மனதுக்கு நிறைவை அளிக்க அவள் நினைப்பில் மூழ்கினான். நேரம் கடந்துகொண்டிருக்க, சின்னதாக இருந்த அவனது நினைப்புகள் எல்லாம் அவள்மேல் மொத்தமாக குவிந்தது. அப்படி குவிந்த பிறகு அவனால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை.

முதல் முறையாக அவன் உணர்வுகள் அவனை வென்றது. அவனால் வேலை செய்ய முடியவில்லை. வைஷாலியைச் சென்று பார்த்தே ஆக வேண்டும்போல் ஒரு வேகம். இளமை அதன் வேலையை சரியாகச் செய்ய, அது அவனுக்கு பிடித்து வேறு தொலைத்தது.

‘இப்போ அங்கே போய் நின்னால் என்ன செய்வா?’ என எண்ணியவனுக்கு அதை அறியவேண்டும் போல் இருந்தது.

அதை ஒதுக்கிவிட்டு வேலை செய்ய முயல, சுத்தமாக அவனால் முடியவில்லை. ‘இதற்கு மேலே முடியாது’ எனத் தோன்ற, ஹரீஷை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

“சார் வெயிட் பண்ணவா?” ஹரீஷ் கேட்க,

“இல்ல வேண்டாம்... நீ கிளம்பு” எனச் சொன்னவன் தன் அறைக்கு விரைந்தான். தன் மகன் வந்ததைப் பார்த்த விசாலாட்சிக்கு அப்படி ஒரு சந்தோசம். எங்கே தன் பிடிவாதத்துக்காக திருமணம் செய்துகொண்ட மகன், வாழ்க்கையை வாழாமல் போய்விடுவானோ என்ற அச்சம் அவருக்கு இருக்கவே செய்தது.

ஆனால் இப்பொழுது அவன் வந்து நிற்க, அவருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தங்கள் அறைக்கதவு திடுமென திறக்கப்பட, ‘யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தில் பார்த்தவள், சத்தியமாக அங்கே சர்வஜித்தை எதிர்பார்க்கவே இல்லை.

“சர்வா?” என்றவாறு அவள் படுக்கையில் இருந்து எழுந்து நிற்க, அவளை நெருங்கியவன், அவளை இடையோடு சேர்த்து இழுத்து இறுக கட்டிக் கொண்டான். முகத்தை அவள் கழுத்தில் புதைத்தவன் அனல் மூச்சு விட்டான்.

அந்த நொடி வைஷாலியின் இதயம் பூரித்துப் போனது. ‘என்னைத் தேடறார்... இப்போதைக்கு எனக்கு இது போதும்’ மனம் நிறைந்தது. சாதாரண நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்தும் உடல் பொருத்தத்தில் இருந்து தானே மனப் பொருத்தத்திற்கு செல்லும். இங்கேயும் அதுவே நடந்தேறத் துவங்கியது.

“என்னை தேட வைக்கற... வேலை செய்ய விடாம தொல்லை பண்ற. பெட்டர் யூ ரிமூவ் திஸ்... இல்லன்னா நைட் நிலைமைதான் இப்போவும் ஆகும்” என்றவனது அனல்மூச்சு அவளைச் சுட்டது.

“இதென்ன பட்டப் பகல்ல வந்துட்டு வம்பு பண்றீங்க? ரொம்ப வெளிச்சமா இருக்கு. என்னால் முடியாது” பெண்ணவளிடம் போலி மறுப்பு வெளிப்பட்டது.

அவள் அவ்வாறு சொல்லவே, அத்தனை நேரமாக அவள் கழுத்தில் முகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவன் அப்படியே அசைவற்றுப் போனான். “ம்ச்... காட்... ஓகே லீவ் இட்...” என்றவன் சட்டென விலகப் போனான்.

ஆனால் அது அவனால் முடியவில்லை. அவனது டை அவள் கரங்களில் சுற்றப் பட்டிருக்க, நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவன் கண்கள் குழப்பத்தைக் காட்ட, “பொண்ணுங்க சைக்காலஜி உங்களுக்கு சுத்தமா புரியாது” என்றவள் அவன் இதழ்களை கவ்விக் கொண்டாள்.

அவள் முத்தமிட்டு விலகும் வரைக்கும் அசையாமல் நின்றவன், “கொஞ்சம் ஈஸியா எதையாவது போட்டுக்க மாட்டியா?” அவள் கழுத்தில் முகத்தைப் புரட்டியவாறே கேட்டான்.

“அப்போ நான் டவ்வல்தான் கட்டிக்கணும், கட்டிக்கவா?” குறும்பு கூத்தாட, குரல் குழைய கேட்டாள். அவன் தன்னைத் தேடி வந்தது, இப்படி குழைந்து நிற்பது அவளுக்கு அவ்வளவு பிடித்தது. உள்ளுக்குள் என்னவோ செய்தது.

மறுநொடி அவனது அடாவடியில் இரவு அவள் ஜேக்கட்டுக்கு நேர்ந்த கதிதான் இப்பொழுதும் ஆகிப் போனது. அவன் அவள் தேகத்தில் முட்டத் துவங்க, “ம்மா... இப்படியே ஒவ்வொரு ஜேக்கட்டா நீங்க கிழிச்சுட்டே இருந்தீங்கன்னா, நான் பிறகு ஜேக்கட்டே இல்லாமல்தான் சுத்தணும்.

“முரட்டுத்தனமா பண்றீங்க... கொஞ்சம் மெதுவா... நான் சொல்றது ஏதாவது உங்க காதில்...” அவள் சொல்லிக் கொண்டே போக, இப்பொழுது அவள் இதழ்களை அவன் அடைத்து இருந்தான். ஒரு அடைமழையின் ஆர்ப்பரிப்பு அவனிடம் வெளிப்பட, மொத்தமாக மூச்சுத் திணறிப் போனாள்.

அவன் கரங்களின் இறுக்கம், அழுத்தம்... இதழ்களின் தீண்டல், பல்த்தடம் பதிய அவன் கொடுக்கும் காயம்... அதிரடியான அவனது நெருக்கம்... அவனது புயல் வேகம், அதில் அவன் தன்னை சுருட்டிக் கொண்ட விதம்... திணறித் திண்டாடிப் போனாள்.

அவனை எப்படி கட்டுப்படுத்துவது என அவளுக்குத் தெரியவே இல்லை. அவளது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, இறுதியில் அவன் போக்கில் விட்டுவிட்டாள். ‘என்னை தேட வைக்கற... தொல்லை பண்ற’ என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்லை என்பதை நிரூபித்தான்.

அவளுக்கோ, ‘இன்னும் வேண்டும் எனவும், போதும் எனவும், விலகிவிட மாட்டானா எனவும், விலகவே கூடாது’ எனவும் கலவையான உணர்வுகள் எழுந்து அவளைப் புரட்டிப் போட்டது. ஒரு கட்டத்தில் தான் சிதறி விடுவோம் என அவள் அஞ்ச, அது நடந்தேவிட்ட பொழுது அவன் இதழில், கன்னத்தில் என பலமாக கடித்து இருந்தாள்.

ஒரு வழியாக அவளோடு ஒன்றாக கலந்தவன், அவளை இறுக கட்டிக்கொண்டு அவள் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அங்கே இருந்தே அவன் என்னவோ சொல்ல, அதைக் கேட்டவள், வேகமாக அவன் வாயை தன் கரத்தால் மூடினாள்.

“ஷ்...ஷ்...” என்றவளால் பேச முடியவில்லை. அவள் தேகம் உணர்வுகளின் பிடியில் நடுங்கிக் கொண்டிருக்க, அவளை வளைத்து இறுக்கினான். இறுக்கியவன், செல்லமாக சில்மிஷம் புரிய, “ம்ஹும்... மறுபடியும்ன்னா என்னால் முடியாது. சும்மா இருங்க...” அவளிடம் அத்தனை சோர்வு.

“சரி... நீ ரெஸ்ட் எடு... நாம ஹனிமூன் போக வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் நான் பார்க்கறேன்” என்றவன் விலகி எழ, அவன் முகத்தைப் பார்த்தவள், அதிர்ந்து தன் வாயில் கை வைத்துக் கொண்டாள்.

“ஹையோ போச்சு... போச்சு...” என்றவாறு அவள் முகத்தை மூடிக்கொண்டு புலம்ப, வேகமாகத் திரும்பி அங்கே இருந்த கண்ணாடியைப் பார்த்தான். தன் உதடு தடித்து, சிறு காயத்தோடு கன்றிப் போயிருக்க, கன்னம் சற்று வீங்கிப் போயிருந்தது.

மெல்லிய தாடியின் உபயத்தால் காயமாகத் தெரியவில்லை என்றாலும், வீக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. “லவ் பைட்...” அவன் சொல்ல, வேகமாக எழுந்து அமர்ந்தவள் அவன் வாயை கரத்தால் மூடினாள்.

“சாரி... சாரி... ஐஸ் எடுத்துட்டு வர்றேன்... ஐயோஓ...” என தவித்தாள்.

“உன் உடம்பே பல இடத்தில் கன்றிப் போயிருக்கு... இதுக்கு நான் என்ன செய்ய?” அவன் கேட்க, அப்பொழுதுதான் தன் நிலையே அவளுக்குப் புரிந்தது. வேகமாக போர்வைக்குள் தன்னை அவள் திணித்துக் கொள்ள, முதல் முறையாக புன்னகைத்தான்.

அந்த புன்னகையை சட்டென தனக்குள் சேகரித்துக் கொண்டாள். அவன் எதையோ சொல்லப் போக, “ப்ளீஸ்... ப்ளீஸ்... எதுவும் சொல்லாதீங்க. நீங்க செய்யறதை விட, சொல்றது ரொம்ப ரொம்ப... ம்ச்... எனக்கு சொல்லத் தெரியலை...” ஒரு மாதிரி வெட்கத்தில் சிவந்துவிட்ட முகத்தோடு அவள் தடுமாறிச் சொல்ல, தன் முகம் காண மறுக்கும் அவளை முதல் முறையாக ரசித்தான்.

பகை முடிப்பான்....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
சர்வாவை இப்படி ஒரே பதிவுல காதல் மன்னனா மாத்திட்டிங்களே 😜😜
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
சர்வாவை இப்படி ஒரே பதிவுல காதல் மன்னனா மாத்திட்டிங்களே 😜😜

அவன் மாறலைன்னா எப்படி? அதுதான் மாத்திட்டேன். அதுவும் என் ஹீரோஸ் எல்லாம் இப்படித்தான் இருக்கணும்.

நன்றி!
 
  • Haha
Reactions: kumarsaranya