பகுதி – 23.
முந்தினதினம் இரவு தாமதமாக உறங்கினாலும், அதிகாலையிலேயே வைஷாலிக்கு விழிப்பு வந்துவிட்டது. சோம்பலாக கண் விழித்தவள், வேகமாக தன் அருகே படுக்கையை ஆராய்ந்தாள். அங்கே சர்வஜித் இல்லை என்ற பிறகுதான் சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்.
நேற்று இரவு நடந்தவை அனைத்தும் அடுக்கடுக்காக நினைவுக்கு வர, கன்னங்கள் இரண்டும் சிவந்துபோக, வெட்கப் புன்னகை சிந்திக் கொண்டாள். அவனது அடாவடியின் பலனாக தேகம் மொத்தமும் ஊமை வலியில் கொஞ்சம் திணறியது.
அவனது பேச்சுக்களும், செய்கைகளும் இப்பொழுது நினைக்கையிலும் மனதை என்னவோ செய்தது. கொஞ்சம் முரட்டுத்தனமாகவே அவளைக் கையாண்டு இருந்தான். ‘இவர் இவ்வளவு காலையிலேயே எங்கே போயிருப்பார்?’ எண்ணியவாறு எழுந்து ஜன்னல் பக்கம் சென்றாள்.
ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவள், பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள். சர்வஜித்தும், ஹரீஷும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள். மிகக் கடுமையான பயிற்சியாக அது இருக்க, பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு கண்கள் தெறித்து விடும்போல் விரிந்து கொண்டது.
ஒரு ஸ்லீவ்லெஸ் பனியனும், ஒரு ஷாட்சும் அவன் அணிந்திருக்க, ஹரீஷ் முழு வாக்கிங் உடையில் இருந்தான். நின்று பார்த்துக் கொண்டிருந்த வைஷாலிக்கு, ‘இருவரும் பயிற்சி செய்கிறார்களா? இல்லையென்றால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்களா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது.
அந்த அளவுக்கு பல விதமான தற்காப்பு கலைகளை ஒவ்வொன்றாக அவர்கள் பயிற்சி செய்ய, இறுதியில் ஆளுக்கு ஒரு நிஞ்சா வாளை கையில் எடுக்க, அவளுக்கு நெஞ்சே நின்று போனது.
‘என்னது... இந்த வாளால் சண்டை போட்டுக்க போறாங்களா?’ இதயம் தாறுமாறாக துடிக்க, ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு அப்படியே நின்றுவிட்டாள். ஏசியை ஆஃப் செய்துவிட்டு, ஜன்னலை அகலத் திறந்து வைத்தாள்.
‘இங்கே இருந்து அழைப்போமா?’ என அவள் யோசிக்க, அவர்களது அந்த தீவிர பயிற்சி அதைச் செய்ய விடாமல் தடுத்தது. தான் குரல் கொடுத்து, அதனால் யாரின் கவனமும் கொஞ்சம் பிசகி ஒருவர் மற்றவரை காயப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்பதால் வாயை அவள் திறக்கவே இல்லை. சர்வஜித்தை முதல் முறையாக இப்படி ஒரு குறைந்த உடையில் பார்க்கிறாள்.
இதுவரை அவனது அகன்று விரிந்த தோள்களோ, புஜபலமோ, பைசப்சோ எதுவுமே அவள் கண்களுக்குப் புலன் ஆனது இல்லை. ஆனால் இப்பொழுது வியர்வையில் ஒட்டி இருந்த அவனது நெஞ்சின் உரம், அதில் இருந்த சிக்ஸ் பேக்கா? எயிட் பேக்கா? என அறிய முடியாதவாறு இருந்த படிக்கட்டு தேகம்.
அவன் சுழன்று மின்னல் வேகத்தில் தாக்கும் விதம்... அவனது அந்த வேகமே இது அவனுக்குப் புதிதில்லை என அவளுக்குச் சொல்ல, அவனை வஞ்சனையின்றி ரசித்தாள். அவளது பார்வை மறந்தும் ஹரீஷின் பக்கம் செல்லவே இல்லை.
ஆனாலும் அவனும் சர்வஜித்துக்கு இணையாக ஈடு கொடுப்பது ஓரவிழிப் பார்வையிலேயே புரிந்தது. அவள் அப்படியே நின்று ரசித்துக் கொண்டிருக்க, அவள் வந்து நிற்பது சர்வஜித்துக்கு நன்கு புரிந்தது.
சர்வஜித்தின் புலன்கள் எப்பொழுதும் மிகவும் கூர்மையானவைதான். ‘உஸ்தாதுக்கு முதுகுக்குப் பின்னால் கூட கண் உண்டு’ என அவர்களது நிழல் உலக வட்டத்தில் பேசிக் கொள்வார்கள். தன்னைச் சுற்றிலும் எப்பொழுதுமே கவனித்த வண்ணம் இருப்பான். எத்தனை தூரத்தில் இருந்து அவனைப் பார்த்தாலும் அவனுக்குப் புரியும்.
வைஷாலியின் அசைவை வைத்தே அவளைக் கண்டு கொள்வான். அப்படி இருக்கையில், அவள் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு நின்றால் அவளைக் கண்டுகொள்ள மாட்டானா என்ன? அவள் சென்றுவிடுவாள் என அவன் எதிர்பார்க்க, அவள் அசையும் வழியைக் காணோம்.
எனவே இந்த சண்டைப் பயிற்சியை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான். திடுமென சர்வஜித் ஆக்ரோஷமாகத் தாக்க, ஹரீஷ் அவனுக்கு ஈடுகொடுக்க முயன்று தோற்றுப் போனான்.
அவன் அப்படி மின்னல் வேக தாக்குதல்களைத் தொடுக்கும் பொழுது, ‘என்ன ஆகுமோ?’ என பயந்த வைஷாலிக்கு, அவன் வெற்றி பெறவும் சந்தோஷம் பிடிபடவில்லை. தன்னை மீறி வேகமாக கையைத் தட்டிவிட்டாள்.
ஹரீஷ் வேகமாக அவள் இருந்த பக்கம் பார்க்க, அதன் பிறகே தான் செய்த முட்டாள்த்தனம் அவளுக்குப் புரிந்தது. ஆனால் சர்வஜித் நிதானமாக நடந்து சென்று அங்கே இருந்த ஸ்டேண்டில் வைத்திருந்த பூந்துவாலையை எடுத்து தன் வியர்வையை துடைத்துக் கொண்டான்.
அவன் பின்னாலேயே வந்த ஹரீஷ், “பாஸ்...” எனச் சொல்லி சிரிக்க, ‘என்ன?’ என்பதுபோல் ஒரு பார்வையைச் செலுத்தியவன் மறந்தும் வைஷாலியின் பக்கம் பார்க்கவும் இல்லை, கொஞ்சம் கூட அசையவும் இல்லை.
“நான் கூட என்னடா சார் திடீர்ன்னு வேகத்தை அதிகமாக்கிட்டாங்களேன்னு பார்த்தேன். அப்போவே புரிஞ்சது, நீங்க இதை முடிக்க நினைக்கறீங்கன்னு. நான் நினைச்சது சரியா போச்சு. ஆனால் காரணம்தான் வேற போல” என்றவாறு வைஷாலியைப் பார்த்து சின்னதாக தலை அசைத்தான்.
“செம ஃபயிட்...” என அவள் கத்தியதுதான் காரணம். இல்லையென்றால் சர்வஜித் முன்னால் அவன் அவளைப் பார்த்து தலை அசைப்பானா என்ன? சர்வஜித் அசையாமல் இருக்க, அவனும் அப்படி இருக்க முடியாதே.
“பாஸ்... மிஸ்ஸஸ் பாஸ் பார்க்கறாங்க...” அவனிடம் சொன்னான்.
“நீ கிளம்பு...” சர்வஜித் சொல்ல, அங்கே இருந்த பயிற்சிக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். வைஷாலிக்கு தன்னவன் அப்படி இறுக்கமாக நிற்பது மனதுக்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது.
‘என்னைக் கொஞ்சம் பார்த்தால்தான் என்ன? என்னோடு ஒன்றான பிறகும், அவருக்குள் நான் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?’ அந்த எண்ணம் அவளைக் கொஞ்சம் சோர்ந்து போகச் செய்தது.
அங்கிருந்து அகன்று சோர்ந்த நடையோடு குளிக்கச் சென்றாள். ஆனால் சர்வஜித் ஒரு மாதிரி தள்ளாடிப் போனான். நேற்று வரைக்கும் அவன் இப்படியெல்லாம் உணர்ந்தது இல்லை. பெண்ணவள் தன் வாழ்க்கைக்குள் வந்த பிறகான அந்த மாற்றம்... அது அவனுக்கே நன்கு புரிந்தது.
வியர்வை அடங்க அங்கே புல்வெளியில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பேப்பரை கரத்தில் எடுத்துக் கொண்டான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்த பிறகே அவன் தன் அறைக்கு வர, அப்பொழுதுதான் குளித்துவிட்டு தலையில் ஒரு டவ்வலும், ஏற்றிக் கட்டிய டவ்வலோடும் வைஷாலி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்.
சட்டென அவளைப் பார்த்துவிட்டவன், “ஓ ஷிட்... சாரி... சாரி...” என்றவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான். அதைப் பார்த்தவள், சில பல நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டாள்.
‘ஏன்... இது கூட இல்லாமல் என்னை அவர் பார்த்ததே இல்லையா? நல்லா வெறிக்க வெறிக்க...’ எண்ணிக் கொண்டே வந்தவள் தன் நினைப்பை நிறுத்திவிட்டாள். அவள் வேகமாக உடை மாற்றிவிட்டு வெளியேற, அவன் அறைக்குள் நுழைந்தான்.
தன் அறைக்குள் அவன் இதுவரை உணராத அந்த வாசனை, பாத்ரூமிலும் அதே வாசனை, அவனை ஒருமாதிரி கிறங்கச் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
கீழே உணவருத்தச் செல்கையில் அவள் அங்கே இருக்க, அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள். அதைப் பார்த்த விசாலாட்சி, “அட... எதுக்கும்மா எழுந்து நிக்கற? உட்கார்...” என்றார்.
“ஹெல்த் ட்ரிங்க் தான் குடிப்பன்னு சொன்னாங்க.... இந்தாப்பா. நீ என்னம்மா குடிக்கற?” அவளிடம் கேட்டார்.
‘இவ இன்னுமா குடிக்கல?’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவளுக்கு அவனிடம் பேச நெஞ்சு முட்ட ஒரு மாதிரி ஆசையாக இருந்தது. கூடவே அவனது செல்ல சீண்டல், தீண்டல், பார்வைகளுக்காக மனம் ஏங்கியது.
‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ அவனை நேசித்து திருமணம் செய்து கொண்டவளுக்கு வாழ்க்கை இப்படி உப்புச் சப்பில்லாமல் செல்வது ஒரு மாதிரியாக இருந்தது.
சின்னவர்களுக்கு தனிமை கொடுத்து விசாலாட்சி ஒதுங்கிக் கொள்ள, “உனக்கு தனி ரூம், பெர்சனல் ரூம் வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ரூம் எடுத்துக்கோ” அவன் சொல்ல, காபி கப்பை கீழே வைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கண்களில் குளிர் கண்ணாடி இருக்க, வேகமாக வந்து அதை கழட்டி எடுத்தவள், “ஏன்... நான் உங்க ரூம்ல இருக்கறது உங்களுக்கு அசவுகரியமா இருக்கா என்ன?” சற்று கோபமாகவே கேட்டாள்.
“நான் எனக்காக சொல்லலை, உனக்காகத்தான் சொன்னேன்...” அவன் புருவம் நெரிய, அவளை சற்று அழுத்தமாக பார்த்தவாறே சொன்னான்.
“எனக்கு வேணும்ன்னா நானே செஞ்சுக்கறேன். ஏன் அதுக்கு உங்ககிட்டே பெர்மிஷன் வாங்கணுமா?” கோபம் குறையாமலே கேட்டாள். சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவே இல்லை. காலையில் ஒரு சங்கடமான சூழ்நிலை உருவாகி இருக்கவே, அதைத் தவிர்க்க வேண்டியே சொன்னான். அதற்கு ஏன் இவள் இப்படி ரியாக்ட் செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை.
சில நுண்ணிய உணர்வுகள் எல்லாம் அவனுக்கு இன்னும் கைவரப் பெறவில்லையே. “நோ நீட்...” அவன் முடித்துவிட, தான் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவள் காபிக் கோப்பையை கைகளில் எடுத்துக் கொண்டாள்.
(அவர்களது அறைக்குள் மட்டும் சர்வஜித்தாக இருப்பவன், அவர்களது அறைக்கு வெளியே சாதாரணமாகச் செல்வதாக இருந்தால் கூட ‘சர்வா’வாகவே சென்றான். நொடிகளுக்குள் அவன் மாறும் வேஷம் கண்டு வைஷாலியே திகைத்துத்தான் போயிருந்தாள்).
பத்து மணிக்குத்தான் அலுவலகம் என்பதால் காலையில் சற்று இலகுவாகவே இருந்தான். அவளுக்கு திடுமென நினைவுக்கு வர, “அந்த முத்துப்பாண்டியை என்ன பண்ணீங்க?” வேகமாகக் கேட்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், “கண்டெயினரில் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க அனுப்பி வச்சிருக்கேன்” அவன் சாதாரணமாகச் சொல்ல, பதறிப் போனாள்.
“என்ன கண்டெயினர்லயா? மூச்சு முட்டி செத்துப் போய்டுவான். பெரிய பிரச்சனை ஆகப் போகுது. சரி... அதெப்படி அவனை அங்கே இருந்து தூக்கினீங்க? எனக்கு பயந்து வருது” என்றாள்.
“அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கு இல்லை. அதே மாதிரி அவன் எத்தனை நாள் உயிரோட இருப்பான், எப்படி இருப்பான்? அவனை எப்போ வெளி உலகத்துக்கு தூக்கிட்டு வரணும்... எல்லாம் எனக்குத் தெரியும்” அவன் சொல்ல, அவளுக்கு மலைப்பாக இருந்தது.
“உங்களுக்கு பயமே இல்லையா?” அவனிடம் கேட்டாள்.
“உன் மாமா பயந்திருக்காரு? இல்லல்ல... இனிமேல் பயப்படுவார்” அவன் நிதானமாகச் சொன்னாலும், அவனது கை கடிகாரம் ஓசை எழுப்பத் துவங்கியது. கூடவே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொள்ள, வேகமாக எழுந்து வந்து அதைப் பிடுங்கினாள்.
“வீட்டுக்குள்ளே சிகரெட் பிடிக்காதீங்க... அத்தை வயசானவங்க, அவங்களுக்கு இந்த நிக்கோட்டின் புகை ஒத்துக்காது” வேகமாகச் சொன்னாள்.
“உனக்குப் பிடிக்கும் தானே?” அவன் கேட்க,
“ஆமா... அதுக்கு...? உங்களோட நானும் சேர்ந்து ஸ்மோக் பண்றேனா என்ன?” வெடுக்கென கேட்டாள்.