பகுதி - 25.
தங்கள் மாலுக்கு வந்த வைஷாலிக்கு மனதுக்குள் அத்தனை சந்தோஷமாக, நிறைவாக இருந்தது. அதுவும் ஜெயந்திக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் அந்த பிள்ளை வரம் அவளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
அங்கே இருந்த பிரச்னையை ஹரீஷே கவனித்து முடித்திருக்க, அந்த இடத்தையே நிதானமாக சுற்றி வந்தாள். அவளுடன் ரூபியும் இருக்க, அவர்களுக்கு காவலாக ஹரீஷும் உடன் இருந்தான். அவ்வப்பொழுது ரூபி, ஹரீஷின் கண்கள் உரசிக் கொள்ள, இதழ்களிலோ ரகசியப் புன்னகை.
தோழியை இப்படிப் பார்க்க வைஷாலிக்குப் பிடித்தாலும், அவளுக்குள் மெல்லிய ஏக்கம் படர்ந்தது. அவளது கணவனுக்கு இந்த பார்வை உரசல்கள் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. அதைவிட சில மெல்லிய உணர்வுகளை எல்லாம் அவனுக்கு வெளிப்படுத்தவும் தெரியாது.
சர்வஜித் எப்பொழுதுமே பிஸி தான். என்றைக்கு எப்பொழுது எங்கே இருப்பான் என அவன் மட்டுமே அறிந்த ரகசியம். சென்னை, மும்பை, வெளிநாடுகள் என அவனது கால்கள் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதே இல்லை.
அவனுடனேதான் ஹரீஷும் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் தன்னவளின் பாதுகாப்பு மிக முக்கியம். அதுவும் எதிரிகளின் கோட்டைக்குள்ளேயே அவளை விட்டு வைத்திருப்பதால், ஹரீஷ் தன்னுடன் இருப்பதை விட, அவளுடன் இருப்பது முக்கியமாகப் பட்டது.
திருமணம் முடிந்து முதல் பத்துநாள் மட்டுமே அவள் அவனுடனே இருந்தாள். தேனிலவுப் பயணத்தை அவர்கள் முடித்துக் கொண்டு வந்த அடுத்த இரண்டே நாட்களில், தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கான ஒரு விமரிசையான திருமண வரவேற்பு நடந்தது.
அவனது திருமணத்தை அறிவிக்க வேண்டி அதைச் செய்தானா? இல்லையென்றால் கோபாலை வெறுப்பேற்ற வேண்டியே அதை இத்தனை விமரிசையாக, அதுவும் கன்னியாகுமரியிலேயே செய்தானா? என வைஷாலிக்கே மிகப்பெரிய சந்தேகம் இருந்தது.
அது முடிந்தவுடன், மேலும் இரு வாரங்கள் அவனோடு சென்னையில் இருந்தாள். அதற்குப் பிறகு, இங்கே ஊருக்கு வந்துவிட, வாரம் தவறாமல் அவளை வந்து பார்த்துச் சென்றான். அந்த ஒரு நாளோ, இரண்டு நாளோ... மனத்துக்கான தேடலை விட, தேகத்துக்கான தேடல் மட்டுமே குறைவின்றி நடந்தேறியது.
இடையில் பாசமாகவோ, தேடலாகவோ, நல விசாரிப்பாகவோ ஒரு அலைபேசி அழைப்பு கூட கிடையாது. அவனுடன் பேச வேண்டும், அவனது குரலையாவது கேட்கவேண்டும் என வைஷாலிக்கு அத்தனை ஏக்கமாக இருக்கும்.
அவளாக அழைத்தால் நிச்சயம் பேசாமல் இருக்க மாட்டான். அவன் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும், மீட்டிங்கில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும் உடனே அவளது அழைப்பை ஏற்பான். அவளது நல விசாரிப்பு பொறுமையாகவே பதில் கொடுப்பான். ஆனால் அவனாக அழைத்து பேசுவதே இல்லை.
அது ஒரு மிகப்பெரும் குறையாகவே அவளுக்கு இருந்தது. அவனுக்கு அது வராது என மனம் சமாதானம் கொண்டாலும், ஆசை கொண்ட மனது அதை ஏற்க மறுத்தது.
ஆனால் தேனிலவு பயணத்தில் அவனது செய்கைகள்... தன்னை சர்ப்ரைஸ் செய்யச் சொல்லி அவள் சொன்னதற்காக நிறையவே செய்தான். விமானம் ஏறியது முதல், மாலத்தீவு... இன்னும் பல நாடுகள் என அவளை அழைத்துச் சென்றான்.
அவன் செய்யும் ஒவ்வொன்றும் பிடித்தாலும், “இதில் என்ன பிரம்மாதம்?” என்பதுபோல் அவள் பேசி வைக்க, அன்று ஒரு வித்தியாசமான இடத்துக்கு அவளை அழைத்துச் சென்றான். அது எந்த நாடு என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.
இரவு உணவு நேரம் நெருங்கவே, “கிளம்பு போகலாம்...” எனச் சொன்னவன் அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள். அரை இருட்டுக்கும் குறைவான வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த ஹோட்டல்.
அங்கே இருந்த டேபிள்களுக்கு மேலே சின்ன மஞ்சள் விளக்கு எரிய, அங்கே கசிந்த ஒரு மேலை நாட்டு இசை அந்த இடத்தையே ரம்மியமாக்கியது. கண்கள் அந்த இருட்டுக்குப் பழக காத்திருந்தவள், இருட்டுக்குப் பழகிய பிறகு கண்ட காட்சியில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“அடக் கடவுளே... இது என்ன மாதிரியான இடம்? இங்கே எதுக்கு என்னைக் கூட்டி வந்தீங்க? இங்கே இருந்து போகலாம்...” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, வேறு ஒருவன் வேறு ஒரு உணவோடு வர, வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
அவள் வெளியேறவே, தானும் அவள் பின்னால் வந்தவன் எதையோ பேசப் போக, “முதல்ல நம்ம ஹோட்டலுக்குப் போகலாம்” அவள் சொன்ன விதத்தில் அங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அறைக்கு வந்தவள் அவனை பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். “நீங்க என்ன நினைச்சுட்டு என்னை அங்கே அழைச்சுட்டுப் போனீங்க? அங்கே எல்லோரும்... ஆண்டவா... கண்ணு கொண்டு பார்க்க முடியலை” அவனிடம் பொரிந்தாள்.
“நீ சர்ப்ரைஸ் பண்ணச் சொன்ன...” அவன் சொல்லி சிரிக்க,
அதைப் பார்த்தவளுக்கு கோபம் கொப்பளிக்க, “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க? நீங்க என்ன நினைச்சுட்டு என்னை அங்கே அழைச்சுட்டுப் போனீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்” அவனிடம் அழுத்தமாகக் கேட்டாள். தேனிலவு வந்திருக்கும் தம்பதிகள் செல்லும் இடமா அது?’ என்ற கோபம் அவளுக்கு.
“அதுவா... நான் சர்ப்ரைஸ் பண்ற எதுவும் உனக்கு அப்படி இல்லை. சோ... ஒரு வெரைட்டி...” அவன் சொல்லி முடிக்கும் முன்பு அவனைப் பிடித்து தள்ளி, அவன்மேல் படர்ந்து அவனை அடிக்கத் துவங்கி இருந்தாள்.
“ச்சீ... என்ன பேசறீங்க? எனக்கு வாந்தி வருது. அப்போ நீங்களும் வெரைட்டி பார்க்கத்தான் அங்கே போனீங்களா?” ஆத்திரமென்றால் அப்படி ஒரு ஆத்திரம் அவளுக்கு.
“எனக்கு உன்னை ரசிக்கவே நேரம் போதலை... இதில்...” அவளது அடிகளை எல்லாம் வாங்கியவன் அவளைத் தடுக்க கூட இல்லை.
“அப்படின்னா எனக்காகவா? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் உங்களையே...” என சொல்லிக் கொண்டே வந்தவள், கப்பென வார்த்தைகளை நிறுத்திவிட்டு அதிர்வாக அவன் முகம் பார்த்தாள்.
அவளுக்கு தான் சொல்ல வருவது புரிந்துவிட்டது எனப் புரிய, “முதல்நாள் என்னை முத்தமிட்ட வைஷாலியை எங்கே? நான் உனக்கு சர்ப்ர்ரைஸ் தர நினைத்தால், நீதான் எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டாய்...” என்றவன் இன்னதென அத்தனை வெளிப்படையாக பேச, வெட்கத்தில் சிவந்து போனாள்.
“சர்வா... போதும்... இப்படியெல்லாம் பேசாதீங்க...” என்றவள் அவனது பேச்சை நிறுத்த முயல, அது அவளால் முடியவே இல்லை.
“நீ ஏன் என்னை ரசிக்கவில்லை? உணரவில்லை?” என அவன் கேட்டு நிற்க, ஹையோடா... அந்த நிமிடங்களைக் கடக்க அத்தனை சிரமப்பட்டாள். அவன் வாயை மூட, அன்று அவள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானாள்.
அவனை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும்? ரசிக்கின்றாள் என அவனுக்கு உணர்த்திய பிறகே அவளை அவன் விட்டால். அவள் அதை நினைத்தவாறு நின்றுவிட, அவளது அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது.
அதில் ஒளிர்ந்த தாயின் எண்ணைப் பார்த்தவள், “ஒரு நிமிஷம் ரூபி...” என்றவாறு அங்கிருந்து அகன்றாள். எப்படியும் தாய் நல்லவிதமாகப் பேசப்போவதில்லை என அவளுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் தோழியின் முன்னால் சங்கடம் வேண்டாமே என நினைத்தாள்.
தாயின் குணத்துக்கு அவள் இப்பொழுது அழைப்பை ஏற்கவில்லை என்றால், நேரடியாக இங்கேயோ, அல்லது வீட்டுக்கோ கூட கிளம்பி வந்துவிடுவார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால், வாய்க்கு வந்தபடி சத்தம் போடுவார், அது இன்னும் அசிங்கம் என்பதாலேயே அழைப்பை ஏற்றாள்.
அவள் அங்கிருந்து செல்லவே, “சாரா?” ரூபியிடம் கேட்டான்.
“ம்கும்... உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை... உங்க சார் பண்ணிட்டாலும்” சற்று கடுப்பாகவே சொன்னாள். ஹரீஷ் கப்பென தன் வாயை இறுக மூடிக் கொண்டான். இந்த இரண்டு மாதங்களில் சர்வஜித் பற்றிய பேச்சு வந்தாலே தங்களுக்குள் முட்டிக் கொள்ளும் என்பதால் எழுந்த ஞானமே அது.
பிடிவாதமாக சர்வஜித்துக்காகப் பேசி, தன் பெர்சனல் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்திக்கொள்ள அவன் தயாராக இல்லை.
தன் அறைக்கு வந்த வைஷாலி அழைப்பை எடுக்கவே, “என்ன மகாராணி ஃபோனை எடுத்துட்டீங்க? வழக்கமா எடுக்க மாட்டீங்களே?” நக்கலாக கேட்டார்.
“அம்மா, தேவையில்லாமல் பேசாமல், எதுக்காக இப்போ கூப்டீங்கன்னு சொல்லுங்க” கத்தரித்தே பேசினாள். ஏதாவது ஒரு கட்டத்திலாவது தன் தாய், தனக்கு தாயாக மாறிவிட மாட்டாரா? என்னும் எதிர்பார்ப்பு அவளுக்குள் இன்னும் கனன்று கொண்டிருந்தது. அதனால் மட்டுமே அவள் அழைப்பை ஏற்றாள்.
“என் அண்ணன் மகனை பைத்தியமாக்கிட்டு நீ நல்லா இருந்துடுவியா? கல்யாணமாகி இத்தனை மாசம் ஆச்சே, வயிற்றில் ஒரு புழு பூச்சி உண்டா? எப்படி வரும்? செய்த பாவம் அப்படியாச்சே...” தாய் பேசுவதைக் கேட்டவளின் கண்கள் கலங்கிப் போனது.
“ம்மா... நீதான் என்னைப் பெத்தியாம்மா?” தாள முடியாமல் கேட்டுவிட்டாள்.
“எனக்கும் அதே சந்தேகம் இருக்குடி... நீ என் வயித்தில்தான் வந்து பொறந்தியா? இல்லன்னா உங்கொப்பன் பிள்ளையை மாத்தி தூக்கிட்டு வந்துட்டானான்னு தெரியலை. இப்போ கூட ஒன்றும் கெட்டுப் போகலை, அவனை விட்டு வந்துடு...” தாய் சொல்ல,
“ச்சீ... என்னம்மா பேசற நீ? உனக்கு இதைச் சொல்ல நாக்கு கூசலை?” வெடித்தாள்.
“கண்டவன் கூட போக உனக்கே கூசாதபோது, எனக்கு எதுக்குடி கூசணும்? ஒழுங்கு மரியாதையா நான் கூப்பிடும்போதே வந்துடு. என் அண்ணன் மகன் இன்னும் உன்னை மறக்கலை. உன்னை கட்டிக்கிற நினைப்பில்தான் இருக்கான். உன் பெயரைச் சொல்லியே புலம்பிகிட்டு கிடக்கான்.
“எல்லாத்தையும் மறந்த பிறகும், உன்னைமட்டும் அவன் மறக்கவே இல்லைன்னா, அவன் மனசுக்குள்ளே நீ எந்த அளவுக்கு பதிஞ்சு போயிருக்கன்னு தெரிஞ்சுக்கோ. நீ மட்டும் வந்துட்டா, அவன் உடனே நார்மல் ஆகிடுவான்னு சொல்றாங்க... வந்துடு...” தாய் பேசப் பேச அவளுக்கு அருவருத்துப் போனது.
பட்டென அலைபேசியை வைத்துவிட்டாள். ‘இப்படியும் ஒரு தாயா?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அலைபேசியை வைத்துவிட்ட பிறகும், தாயின் குரல் காதுக்குள் ஒலிப்பதுபோல் இருக்க, தேகம் நடுங்கியது.