• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 27.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai

பகுதி – 26.

வைஷாலிக்கும், சர்வஜித்துக்கும் இடையே ஒரு சின்ன மனக்கசப்பு. சர்வஜித் வந்தது முதலே அலைபேசியில் நிறைய பேசிக் கொண்டே இருக்க, அவளுக்கு டென்ஷன் ஆனது. அவன் ஒன்றும் அவளுக்கு ஒளித்து மறைத்து என எதையும் செய்யவில்லை.

வைஷாலி அந்த கோபாலுக்கு சாதகமாகப் பேச, சர்வஜித்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. ‘இவளால் எப்படி அவங்களுக்கு இரக்கம் பார்க்க முடிகிறது?’ என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது.

சர்வஜித் பெரிதாக ஏதோ ப்ளான் செய்வது புரிய, அதுவே அவளுக்கு அதிக பட்டத்தைக் கொடுத்தது. “நீங்க என்னவோ ப்ளான் பண்றீங்கன்னு தெரியுது. ஆனால் இதெல்லாம் அவசியமா? வேண்டாமே...” அவனிடம் சொன்னாள்.

“இதை ஆரம்பிச்சாச்சு... இனிமேல் நிறுத்த முடியாது” அவன் அத்தனை உறுதியாகச் சொல்ல, அவளுக்கு பயம்தான்.

“அதான் முத்துப்பாண்டியை கடத்தி, அவனை பைத்தியமாக்கியாச்சே. இதுக்கு மேலே என்ன செய்யப் போறீங்க? அவனோட வாழ்க்கையே போச்சு... போதும், நிறுத்துங்க” பழி பாவங்களுக்கு அஞ்சும் மனது, அவனைத் தடுக்க முயன்றது.

“உன் மாமனைப் பற்றியும், அவன் மகன்களைப் பற்றியும் முழுசா தெரிஞ்சுமா இப்படி பேசற?” என்றவனுக்கு அத்தனை கோபம்.

நடக்கும் விஷயங்களின் கனம் தெரியாமல் பேசுகிறாளே என்ற கோபம் அவனுக்கு. அதைவிட அவர்கள் இப்பொழுது திட்டமிடும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அவனுக்குத் தெரியவர, அவன் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

“அவங்க என்னவோ செஞ்சுட்டுப் போகட்டும்... விடுங்க” அவள் சொல்ல கடுப்பானான்.

“விஷயம் தெரியாமல் பேசாதன்னு சொன்னேன். உண்மை எல்லாம் உனக்குத் தெரியவரும்போது நீ இதே வார்த்தையைச் சொல்லு நான் கட்டுப்படறேன்” என்றான். அவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.

‘இவ்வளவு அநியாயம் பண்ற அவனுக மேலே இவளுக்கு அப்படி என்ன பாசம் வேண்டிக் கிடக்கு?’ அவனுக்கு ஆத்திரமென்றால் அவ்வளவு ஆத்திரம். ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என நினைக்குமாம். அப்படி இவளும், அவர்கள் செய்வது தெரியாமல் போனால், அவர்கள் நல்லவர்களாகி விடுவார்களா?’ தன் கோபத்தை அவளிடம் காட்டாமல் இருக்க அவ்வளவு போராடினான்.

ஆனால் அது அவனது கைகடிகாரத்தின் மூலம் வெளிப்பட, வைஷாலி பின்வாங்கினாள். ஆயிரம் இருந்தாலும் அவனது உடல்நிலை அவளுக்கு மிகவும் முக்கியம் ஆயிற்றே.

மிகக் கடுமையாக எரிந்து கொண்டிருக்கும் அவன்மேல், நீரைத் தெளிக்கும் அவளது செய்கை அவனை என்ன செய்துவிடும்? மேலும் கொதிக்கச் செய்வதைத் தவிர, அதனால் எந்த பலனும் இல்லை என அவளுக்குப் புரியவே இல்லை.

அவள் அவனைத் தடுக்க முயன்றது முதல், அவன் அவளை விட்டு விலகி இருக்க, அதுவேறு அவளது கோபத்தை அதிகரித்தது. ‘பொண்டாட்டின்னா தப்பு செய்தால் கேட்கத்தான் செய்வா. அப்படிக் கேட்டால் விலகி இருப்பாராமா?’ அவளுக்குள் ஆற்றாமை பெருகியது.

அவன் தன்னோடு ஒன்றாக இருக்கும் நேரங்கள் மட்டுமே, அவனவளாக அவள் உணர்ந்தாள். மற்ற நேரங்களில் அவன் ஒட்டாமல் விலகி நிற்க, தனித் தீவாக அவன் நிற்பது போன்ற பிரம்மை. ‘தான் இருந்தாலும், இல்லை என்றாலும் அவனுக்கு ஒன்றுமே இல்லையா?’ என்ற ஆதங்கம் அவளுக்குள் நிறைந்தது.

இவை எல்லாம் சேர, அவன் முகம் பாராமல் இருந்துகொண்டாள். அவள் அப்படி இருக்க, அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வீட்டில் இருந்தாலே, அவனை ஒட்டிக்கொண்டு, உரசிக்கொண்டு இருப்பவள், திடுமென விலகி இருந்தால் அவன் எப்படி சகிக்க?

‘ஒரு வேளை விலகி இருந்து அவளைக் காண்பதைத்தான் அவள் விரும்புகிறாளோ?’ என்ற எண்ணம் எழ, உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டான்.

“நான் சென்னைக்கு கிளம்பறேன்” என்றவாறு அவன் நிற்க, உள்ளம் அதிர அவனைப் பார்த்தாள்.

“இனிமேல் கொஞ்சநாள் இங்கேதான்னு சொன்னீங்க?” அவன் இல்லாமல் அவள் அவளாகவே இருப்பதில்லை என்பதால் தன் வலியை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

“அதான் ஒரு வாரம் இருந்தேனே... நான் இல்லாத நேரம் என்ன வேணா நடக்கலாம். கொஞ்சம் கவனமா இருந்துக்கோ, என்ன நடந்தாலும் உன்னை நான் விட்டுட மாட்டேன்னு நம்பு” எனச் சொல்ல, புருவம் நெரித்தாள். அவன் சொல்வதன் முழுக் காரணமும் அவளுக்குப் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது.

“அம்மா... பார்த்து இருந்துக்கோங்க. ஹரீஷ் கவனம்...” என்றவன் அவனை ஒரு பார்வை பார்க்க, புரிந்தது என்பதுபோல் தலை அசைத்தான் ஹரீஷ். தாயை கட்டிக்கொண்டு அவன் விடைபெற, தன்னைக் கண்டு கொள்ளாதது அவளுக்குள் எதையோ உடைந்து போகச் செய்தது.

இதயத்தில் விழுந்த இடியில் கண்கள் கலங்கிப் போக, வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள். கண்கள் தன்போக்கில் கண்ணீரை வடிக்க, குலுங்கி அழுதாள்.

“ஷாலு... மால்’க்குப் போகலாமா?” என்றவாறு ரூபி அவளது அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.

“இல்ல ரூபி... எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் வரலை” என அவள் பதில் கொடுக்க, அவளது குரலே சரியில்லை என அவள் உணர்ந்து கொண்டாள். சர்வஜித் அவளை தனியாக விட்டுச் சென்றதால் வந்த சோர்வு என ரூபிக்குப் புரிய அவளைத் தொல்லை செய்யாமல் திரும்பிவிட்டாள்.

கீழே வந்தவள், விசாலாட்சியை தேடித் போனாள். “அம்மா, ஷாலு கொஞ்சம் அப்சட்டா இருக்கா. ‘மால்’க்கும் வரலைன்னு சொல்லிட்டா. நான் கிளம்பறேன்...” அவரிடம் சொல்லிவிட்டு கிளம்ப, அடுத்த அரைமணி நேரத்தில் அந்த அசம்பாவிதம் நடந்து இருந்தது.

வைஷாலியின் வீட்டுக்குள் புகுந்த சிலர், விசாலாட்சியை அடித்துப் போட்டுவிட்டு அவளை அடாவடியாகத் தூக்கி இருந்தார்கள். ஹரீஷ் ரூபியை அழைத்துக்கொண்டு சென்றிருக்க, அவன் அங்கே இல்லாதது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று.

வைஷாலியோ அவர்கள் இழுப்பிற்கு முரண்டு பிடிக்காமல் அவர்களோடு சென்றாள். சர்வஜித் சொல்லிச் சென்றதன் காரணம் புரிய, ‘இவங்களுக்கு பட்டாலும் புத்தி வராதா?’ என்றுதான் நினைத்தாள்.

அவளைக் கடத்திய மறு நிமிடம் விஷயம் சர்வஜித்துக்கு அறிவிக்கப்பட, அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் அவளை எங்கே கூட்டிச் செல்கிறார்கள் என்பது எல்லாம் அவளிடம் இருந்த ட்ரேக்கர் மூலம் அவன் கண்காணித்துக் கொண்டே இருந்தான்.

வைஷாலியை கோபால் தனது கொடவுனுக்கு அழைத்துச் செல்ல, அந்த இடம் அவளுக்கும் புதியதே. அங்கே கோபால் இருக்க, அவரைப் பார்த்தவள் சீறினாள். “என்ன மாமா இது? எதுக்காக என்னை இப்போ இங்கே கூட்டி வந்தீங்க? என்னை விட்டுடுங்க மாமா, இல்லன்னா உங்களுக்குத்தான் கஷ்டம்” தன்னவனைப் பற்றி தெரிந்தவள் என்பதால் சொன்னாள்.

இப்பொழுது எல்லாம் கோபால் மீதான பயத்தை விட, சர்வஜித் எதையும் எப்படியும் செய்து முடிப்பான் என்ற உண்மை அவளுக்குப் புரியத் துவங்கி இருந்தது. அதுவும் கோபாலின் குடும்பத்தை வாரிசு கூட இன்றி அவன் நிர்மூலமாக்குவேன் எனச் சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்லை என அவளுக்கு புரிய வரத் துவங்கியது.

எனவே எப்படியாவது கோபாலை தடுத்துவிட மாட்டோமா என எதிர்பார்த்தாள். ஆனால் அவர் அப்படி கேட்டுவிடும் ஆளா என்ன?

“என்ன பயம் காட்டுறியா? இது எங்க கோட்டைடி. இதுக்குள்ளே வந்த பிறகும், நீ இவ்வளவு தைரியமா பேசறன்னா, அதுவும் எங்க முகம் பார்த்து பேசறன்னா உனக்கு தைரியம்தான்” என்றவாறு அங்கே வந்தான் விநாயகம்.

“எங்க அப்பாவைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? உங்க தங்கச்சி பொண்ணு தானே நான்? அந்த பாசம் கூடவா உங்க நெஞ்சில் இல்லை?” மிரட்டல் வேலைக்கு ஆகவில்லை என்றவுடன், பாசத்தைக் காட்ட முயன்றாள்.

“ஐ... வைஷாலி... இவ வைஷாலி தானே... வைஷாலி...” என்றவாறு முத்துப்பாண்டி அங்கே வந்தவன் அவளைத் தொட முயன்றான். அந்த முத்துப்பாண்டியை பார்த்த அந்த நொடி, பயந்து போனாள்.

“டேய் பாண்டி... இவ உனக்குத்தான்... கூட்டிப் போடா...” கோபால் சொல்ல, முதல் முறையாக வைஷாலியின் மனதுக்குள் ஒரு பயம் பிடித்துக் கொண்டது.

“வாடி...” என்றவாறு முத்துப்பாண்டி அவளை அங்கே இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.

“டேய்... விடுடா... என்னை விடுடா... மாமா என்னை விடச் சொல்லுங்க. என் புருஷன் உங்களை எல்லாம் சும்மா விட மாட்டார்” கத்தி கதறினாள். அவர்கள் யாருமே அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

‘ச்சீ... இவர்களுக்கா பாவம் பார்த்தேன்?’ என அவளுக்கே வெறுத்துப் போனது.

அவளை அந்த அறைக்குள் இழுத்துச் சென்றவன், அவளை அந்த அறைக்குள் வீசி எறிந்தான். ஒரு மாதிரி கோணல் சிரிப்பு சிரித்தவன், “என்னடி... என்கிட்டே இருந்து தப்பிச்சுட்டோம்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா? உன்மேலே எனக்கு எவ்வளவு வெறின்னு இன்னைக்கு காட்டறேன்டி...” என்றவாறு அவளை நெருங்கிச் சென்றான்.

“வேண்டாம் பாண்டி... நான் சொல்றதைக் கேளு...”.

“கேட்க முடியாதுடி... அப்படி என்னடி அவன் என்னைவிட உசத்தி? அப்படி என்கிட்டே இல்லாதது என்னது அவன்கிட்டே இருக்கு? என்ன உன்னை முழுசா அனுபவிச்சுட்டானா? ஆனா கூட பரவாயில்லை... எனக்கு உன்னை ஆசை தீர அனுபவிக்கணும்” அவன் சொல்லிக் கொண்டே போக, அவனை ஆராய்சியாகப் பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்தவன், “என்னடி பார்க்கற?” அவளிடம் கேட்டான்.

“நீ... உனக்கு பைத்தியம் இல்லையா?” அவள் கேட்க, வில்லச் சிரிப்பு சிரித்தான்.

“ஹா...ஹா...ஹா... பைத்தியமா எனக்கா? என் அப்பாவை வெறி ஏற்றிவிட நான் செய்த ட்ரிக் தான் அது. இல்லன்னா உன்னை இன்னைக்கு இங்கே தூக்கிட்டு வந்திருப்பாரா? என்ன அதுக்காக கொடுத்த விலைதான் கொஞ்சம் அதிகம்.

“ஆனாலும் என் அப்பாவுக்கும், அண்ணன்களுக்கும் என்மேலே ரொம்ப பாசம்டி. என் பைத்தியத்தை தெளிய வைக்கறேன்னு விதம் விதமா பொண்ணுங்களை இறக்கினாங்க. ஆனா உன்னை மட்டும் கண்ணில் காட்டவே இல்லை. அதுக்குத்தான்... கடைசியா ஒரு பொண்ணை கொலையே செய்ய வேண்டியதா போச்சு” அவன் சொல்லிக்கொண்டே போக, அருவருத்துப் போனாள்.

அதுவும் அவன் விதம் விதமான பெண்களை சிதைத்தேன் எனச் சொன்ன பொழுது, ‘இவனுக்கு வேண்டியா அவர்கிட்டே சண்டை போட்டேன்? இவன் எல்லாம் திருந்தாத ஜென்மம். இவன் சாக வேண்டியவன்’ மனதுக்குள் அத்தனை ஆத்திரம் வந்தது.

அதைவிட பைத்தியம் என வேஷம் போட்டிருக்கிறான் எனப் புரிய, தன்னவன் சொன்னதன் காரணம் முழுதாக அவளுக்குப் புரிந்தது. சர்வஜித் பார்த்த அந்த பார்வை... அதன் பொருள் இப்பொழுது புரிய, தன் முட்டாள்த்தனத்தை நொந்து கொண்டாள்.

“ச்சீ.... நீயெல்லாம் மனுஷனா? இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கறியே, உனக்கு கொஞ்சம் கூட கூசல?” ஆத்திரத்தில் கத்தி, அவன் மூஞ்சியில் எச்சிலை துப்பினாள். அதைக் கொஞ்சம் கூட சலனமே இன்றி வாங்கிக் கொண்டவன், அவளைப் பார்த்து இளித்தான்.

“இப்போ நீ துப்புற... கொஞ்ச நேரத்தில் நான்...” என்றவாறு அவன் வக்கிரமாகப் பேச, தன் செவிகளை மூடிக் கொண்டாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“உன் புருஷன் மட்டும் என்ன உத்தமனா? இப்போ நாகர்கோவில் லாட்ஜ்ல ஒரு பொண்ணோட கூத்தடிச்சுட்டுதான் இருப்பான். நான் காட்டறேன் பார்க்கறியா?” என்றவாறு தன் கையில் இருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

அந்த வீடியோ அழைப்பு எடுக்கப்படவே, “ஷோ மீ பேபி...” அவன் சொல்ல, அந்த வெள்ளித்திரை நடிகை ஒரு அறையின் கதவை தட்டிக் கொண்டு இருந்தாள். இப்பொழுது அழைப்பு நின்று, கேமரா கோணம் வழியாக காட்சிகள் தெரிந்தது. அந்த பெண் தன் உடம்பில் எங்கேயோ கேமராவை ஒளித்து வைத்திருப்பது வைஷாலிக்குப் புரிந்தது.

தன்னவன் சென்னைக்குச் செல்லாமல், இங்கே நாகர்கோவிலில் இருக்கிறான் எனச் சொன்னதே அவளது பயத்தை எல்லாம் துடைத்து எறிந்தது. அவர் என் அருகே இருக்கிறார்’ என்னும் நினைப்பே யானை பலத்தைக் கொடுத்தது.

அவள் முகத்தில் புன்னகையைக் காணவே, “என்னடி சிரிக்கற?” வைஷாலியிடம் கேட்டான்.

“நீ ஏமாறப் போற...” அத்தனை நம்பிக்கையாகச் சொன்னாள். தன்னவனைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எந்த பெண்களையும் ஏறிட்டு கூட பார்க்காதவன், அந்த விமானப் பயணத்தில் ஹிந்தி நடிகையிடம் அவன் நடந்துகொண்ட முறை என அனைத்தும் அவள் நினைவில் வந்து போனது.

அவ்வளவு ஏன்? அவளே கொஞ்சம் சுணங்கினால் கூட அவளை நெருங்காதவன். அப்படி இருக்கையில் நடிகையாவது? உலக அழகியாவது? யாரும் அவன் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள் என இறுமாப்பு கொண்டாள். அது அவளது கொண்டவன் கொடுத்த நம்பிக்கை. அந்த நொடி அவன்மீது அவள் கொண்டிருந்த மனச் சுணக்கம் எல்லாம் தேய்ந்து மாய்ந்து போனது.

“இந்த நடிகையை அனுபவிக்கணும்னு எத்தனைபேர் வலை விரிச்சுட்டு காத்திருக்காங்கன்னு தெரியுமா? ஆம்பளைங்களைப் பத்தி தெரியாமல் பேசற. இப்போ எப்படி நாய் மாதிரி அவகிட்டே குழைவான்னு மட்டும் பார்...” என்றவாறு அலைபேசியை அவளிடம் காட்டினான்.

“பார்க்கலாம்...” என்றவாறு அவள் காத்திருக்க, சர்வஜித் கதவைத் திறந்த மறு நிமிடம், குழைந்த உடல்மொழியும், மயக்கும் புன்னகையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் அவள். அவளைப் பார்த்த சர்வஜித், எதுவும் சொல்லாமல் பேசாமல், அவளைத் தடுக்க கூட இன்றி அப்படியே விலகி வழிவிட்டான்.

வந்தவள் உள்ளே படுக்கையில் சென்று சுவாதீனமாகப் படுத்துக் கொள்ள, சர்வஜித் எதிரில் கிடந்த சோபாவில் அமர்ந்தான். வந்தவள் சர்வஜித்திடம் என்னென்னவோ பேசியவாறு அவனை படுக்கைக்கு அழைக்க, வைஷாலிக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது.

வந்தவள் என்னென்னவோ பேசியும் சர்வஜித் அசையாமல் போகவே, எழுந்து அவன் அருகே வந்தவள் அவனை முத்தமிடப் போனாள். அவ்வளவுதான் அவளுக்குத் தெரிந்தது... அடுத்த நிமிடம் அவள் தரையில் கிடக்க, வெளியே இருந்து வந்த இரு பெண் காவலர்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள்.

“சார்... நீங்க சொன்னப்போ நாங்க நம்பவே இல்லை. ஆனால் இப்போ நம்பறோம்” அந்த பெண் காவலர்கள் சொல்ல, அந்த நடிகையோ பதறினாள். இப்படி ஒரு திருப்பத்தை முத்துப்பாண்டியும் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த நடிகையை உள்ளே விட்டு, புகைப்படம் எடுத்து, ‘பிரபல தொழிலதிபர் நடிகையோடு சல்லாபம். ஹோட்டல் அறையில் கைது’ என செய்தி வெளியிட முத்துப்பாண்டி காத்திருக்க, அங்கே நடந்ததோ நேர் எதிரான விஷயம்.

“இல்ல... இல்ல... இதை நானா செய்யலை... இவரை இப்படி செட் பண்ணச் சொல்லி எனக்கு பணம் கொடுத்தாங்க, அதற்கு ஆசைப்பட்டுதான் நான் இதைச் செய்தேன். இந்த விஷயம் வெளியே வந்தால் என் கெரியரே நாசம் ஆயிடும். என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” அவள் கெஞ்சினாள்.

“சாரி... ஐ’ம் ஹெல்ப் லெஸ்...” சர்வஜித் அசால்ட்டாக தோளைக் குலுக்கிவிட்டு, அவள் ஆடையில் பொருத்தி இருந்த அந்த கேமராவை தன் கரத்தில் எடுத்து, முகத்துக்கு நேராகப் பிடித்தான்.

“நீ இன்னும் நியூஸ் சேனல் பார்க்கலை போல... த்...த்...த்...” என அனுதாபப்பட, முத்துப்பாண்டிக்கு ரத்தம் கொதித்தது.

“அதோட...” எனத் துவங்கிய சர்வஜித், தன் தோளைக் குலுக்கிவிட்டு, சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவன் அதை ஆழ்ந்து புகைக்க, அந்த நிக்கோட்டினின் விறுவிறுப்பை அவன் உணர்ந்து திளைப்பதை இங்கே இவர்களால் உணர முடிந்தது.

“உன் பொண்டாட்டி என்கிட்டே இருக்காடா” முத்துப்பாண்டி ஆணவமாகச் சொன்னான். அது அந்தப் பக்கம் சர்வஜித்துக்கு கேட்காது என்ற அறிவு கூட அந்த நொடி அவனுக்கு இருக்கவில்லை. அப்பொழுதுதான் சர்வஜித் செய்திச் சேனல் எனச் சொன்னது முத்துப்பாண்டியின் நடு மண்டையில் இறங்கியது.

“உன்னை வந்து கவனிக்கறேன்டி...” என்றவாறு வெளியே ஓடினான். சரியாக அந்த நேரம் செய்திச் சேனல் வண்டிகளும், கூடவே காவல்த்துறை வாகனமும் அந்த இடத்தை அப்படியே சுற்றி வளைத்தது.

“பட்டப்பகலில் வீடு புகுந்து இளம் பெண் கடத்தல்” எனத் துவங்கி செய்திச் சேனல்கள் எல்லாம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, இவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அதைவிட இவர்கள் அனைவரும் அறியாத விஷயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருந்தது. வைஷாலியின் கடத்தல் முதல், முத்துப்பாண்டியின் ஒப்புதல் வாக்குமூலம் வரைக்கும், அனைத்தும் ‘லைவ்’வாக டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.

அங்கே வந்த காவலர்கள், வைஷாலியை மீட்டு, முத்துப்பாண்டியை உடனடியாக கைது செய்தார்கள். கூடவே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக, கோபால், விநாயகம் என இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப் பட்டார்கள்.

“என்னய்யா நடக்குது இங்கே? நாங்க எந்த தப்பும் செய்யலை. அவ என் தங்கச்சி பொண்ணு. அவ எங்களைப் பார்த்து பேசத்தான் இங்கே வந்தா” கோபால் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களது வக்கீல் வர்கீஸ் வேகமாக அங்கே வந்தார்.

“சார்... நிலைமை மொத்தமா கைமீறிப் போயிடுச்சு. நீங்க எதுவும் பேசாமல் இருப்பது நல்லது” வர்கீஸ் சொல்ல, கோபால் வாயை மூடிக் கொண்டார்.

இது ஒரு ஹை ப்ரோஃபைல் கேஸ் என்பதால், நேரடியாக அவர்களை ஐஜி அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அங்கே சென்ற பிறகுதான் நிலைமையின் தீவிரமே அவர்களுக்குப் புரிந்தது.

அங்கே காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி மனநிலை சரியில்லாதவன் போன்று நடிக்க, காவலர்களின் கரத்தில் இருந்து சரியான கவனிப்பை பெற்றுக் கொண்டான். அவனது நடவடிக்கைகள், ஒப்புதல் வாக்குமூலம் என அனைத்தும் நீதிபதியின் முன்னால் நேரடிக் காட்சிகளாகவே பதியப் பட்டதால், அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலை.

வைஷாலியின் கைப்பட அவள் கம்ப்ளெயின்ட் எழுதிக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்தாள் ரூபி. அவளோடு ஹரீஷும் இருக்க, அவன் பின்னாலேயே சர்வஜித்தும் வந்தான். அவனைப் பார்த்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து சென்ற வைஷாலி தன்னவனை இறுக கட்டிக் கொண்டாள்.

“என்ன பயந்துட்டியா?” அவளிடம் கேட்டான்.

“நீங்க இருக்கும்போது பயமா? எனக்கா?” அவள் கேட்க, அவன் கண்கள் ஒளிர்ந்தது.

“நீ கப்ளேயின்ட் எழுதிக் கொடு...” என்றவன் அவளோடு உடன் அமர்ந்து கொண்டான். அவள் எழுத நினைக்கையில் அவளது கைகள் நடுங்க, அங்கே சர்வஜித்தின் வக்கீல் வந்தார். அவர் எழுதிக் கொடுக்க, உடனடியாக அவள் கையெழுத்திட்டு கொடுக்கவே வைஷாலியும், சர்வஜித்தும் வெளியே வந்தார்கள்.

“வெளியே மீடியா இருக்காங்க... நீ எதைப்பற்றியும் கவலைப்பட தேவையே இல்லை. எல்லாம் நான் பார்த்துக்கறேன்” அவன் சொல்ல, அவன் தோள் வளைவில் ஒடுங்கிக் கொண்டாள். அவர்கள் வெளியே வருகையில் பத்திரிகை அன்பர்களும், தொலைகாட்சி பிரமுகர்களும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

“சார் இந்த கடத்தலைப் பற்றி நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? எதற்காக இந்த கடத்தல் நடந்தது?” பத்திரிக்கைக்காரர்கள் கேட்க, சர்வஜித் நின்று அவர்களைப் பார்த்தான்.

“நாங்க லவ் மேரேஜ் பண்ணிகிட்டது அவங்களுக்குப் பிடிக்கலை. அந்த கோபத்தில் இப்படியெல்லாம் செய்யறாங்க. மற்றபடி எல்லாம் போலீஸ் தான் கண்டு பிடிக்கணும்” என்றவன் சொல்லிவிட்டு நடந்துவிட்டான்.

‘என்னது லவ் மேரேஜா?’ அவள்தான் வாய் பிளந்தாள். அதைவிட சுற்றிலும் இருக்கும் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் அவன் கவலைப்படாத விதம், அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. இந்த சர்வாவை விட, ‘சர்வஜித்’ என்பவன் நடத்தும் டெலிவிஷன் ‘ஷோ’க்கள் அவளுக்குத் தெரியாதா என்ன?

அவனிடம் ‘இதையெல்லாம் எப்படிச் செய்தாய்?’ எனக் கேட்க இதழ்கள் பரபரத்தது. ஆனாலும் சுற்றிலும் இத்தனைபேரை வைத்துக்கொண்டு அவள் என்ன கேட்பதாம்? மேலும் அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லத் தயாராக இல்லை.

அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல, அவனது பாடிகார்ட்ஸ் விரைந்துவிட, யாராலும் அவர்களை நெருங்க முடியவில்லை. இனிமேல் கொஞ்ச நாளைக்கு தொலைகாட்சி, பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் முத்துப்பாண்டியின் விஷயம்தான் ஹாட் டாபிக் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் அவன் நேராகச் சென்று நின்றது தன் தாயிடம்தான். அவர் தலையில் ஒரு சின்ன கட்டு போடப் பட்டிருக்க, அதை மென்மையாக வருடினான்.

“ரொம்ப வலிக்குதாம்மா? இனிமேல் இப்படி நடக்காது” அவன் வருத்தமாகச் சொல்ல, அவரோ புன்னகைத்தார்.

“என் மகன் நடத்தும் இந்த யுத்தத்தில் நானும் ஒரு சின்ன ரோலை எடுத்துகிட்டேன் அவ்வளவுதான். எனக்கு பெருசா ஒன்றும் இல்லை... நீ சொன்னபடி முதல் அடியிலேயே மயக்கம் போட்டு விழுந்த மாதிரி படுத்துட்டேன்” விசாலாட்சி சொல்லிவிட்டு சிரிக்க, வைஷாலிக்கு எதுவும் புரியவில்லை.

அப்பொழுதுதான் ஹரீஷ் தன்னை விட்டு எங்கேயும் நகரவே மாட்டான் என்பதும், அவனும் அன்று காலையின் தன்னோடு இல்லை என்பதும் நினைவுக்கு வந்தது.

அவள் அதைப்பற்றி கேட்க முயல, “முதல்ல எல்லோரும் போய் சாப்பிடுங்க... நேரம் சாயங்காலம் நாலு மணி ஆகிடுச்சு” விசாலாட்சி சொல்ல, மறுக்காமல் சென்றார்கள். ஹரீஷும், ரூபியும் கூட ஒன்றாக அமர்ந்து உண்ண, உண்டு முடிக்கும் வரைக்கும் அங்கே பேச்சே இருக்கவில்லை.

“இங்கே என்னதான் நடந்ததுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றீங்களா?” வைஷாலி சர்வஜித்திடம் கேட்டாள்.

“அதை நான் சொல்றேன்... அவங்க உங்களை கடத்த ப்ளான் பண்ணது, உங்களை அந்த கொடவுனுக்கு கொண்டு போகப் போறது எல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும். அதோட அந்த முத்துப்பாண்டி மனநிலை சரியில்லாதவன் மாதிரி நடிக்கறான்னும் எங்களுக்குத் தெரியும்.

“அவன் பெண்களை, சீரழிச்சது, ஒரு பொண்ணை கொலை செய்தது எல்லாமே சாருக்கு தெரிய வந்தபொழுதும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தோம். காரணம் ஒன்றுதான்... அந்த முத்துப்பாண்டி மனநிலை சரியில்லாதவன்னு எல்லோரையும் நம்ப வச்சுட்டு இருந்தான்.

“அப்போ அந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்திருந்தால், அவன் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வச்சு ரொம்ப ஈசியா வெளியே வந்திருப்பான். இப்போ அது அவனால் முடியாது. அவங்க ப்ளான் தெரிஞ்ச உடனேயே சார் வேற ப்ளான் போட்டார்.

“அவனுங்க சாரோட கேரக்ட்டரையே இன்னும் புரிஞ்சுக்கலைன்னு வச்சுக்கோங்களேன். சார் எப்பவுமே ஒரு படி மேலேதான் யோசிப்பார்... எல்லாமே ஹார்ட் ஒர்க்கை விட, ஸ்மார்ட் ஒர்க்தான். இவர் ஊர்ல இல்லை, இதுதான் சரியான நேரம்னு அவனுக யோசிச்சாங்க.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“ஆனால் அந்த வாய்ப்பையே இவர்தான் கொடுத்தார்ன்னு யோசிக்க மறந்துட்டாங்க. இங்கே இருக்கும் நாகர்கோவில்லதான் இவர் இருக்கார்ன்னு கண்டு பிடிச்சவங்க, ஏன் அப்படி இருக்கறார்ன்னு யோசிக்கலை பார்த்தீங்களா?

“நீங்க போட்டிருக்கும் ரெண்டு கம்மலிலும் கேமரா இருக்கு, உங்களை கடத்தும்போது ரெண்டு ட்ரோன் கேமரா அவங்களை கண்காணிச்சது. உங்ககிட்ட உங்களுக்கே தெரியாமல் ட்ரேக்கர் இருக்கறது... இப்படி நிறைய விஷயம் இருக்கு.

“இதில் உண்மையான ஆப்பே அந்த நீதிபதியும் நேரலையில் எல்லாத்தையும் பார்த்து, கேட்டதுதான். அவன் எந்த காலத்திலும் இதில் இருந்து எல்லாம் தப்பிக்கவே முடியாது. பாதிக்கப்பட்ட எல்லா பெண்களிடம் இருந்தும் புகார் கொடுக்க வச்சாச்சு. அவங்களோட பெயர் எங்கேயும் வெளியே வராதுன்னு உறுதி கொடுத்த பிறகுதான் எல்லாம் செய்திருக்கோம்.

“இனிமேல் அந்த முத்துப்பாண்டி பைத்தியம் வேஷம் போட்டாலும் எதுவும் நடக்காது. இதில் இலவச இணைப்பா, உங்க மாமாவும், மாமா மகனும் உங்க கடத்தலுக்கு காரணமான கேசில் கொஞ்ச நாள் உள்ளே உட்காரணும்.

“முத்துப்பாண்டிக்கு நிஜமாவே என்ன நடந்திருக்குன்னு தெரிய வந்து, அதுக்கு ஆக்ஷன் எடுக்கவே உங்க மாமாவுக்கு பல நாளாகும். இனிமேல் அவர் மகனை அவர் மறந்துட வேண்டியதுதான்.

“கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல்... எல்லாம் தனித்தனி கேஸ். அவனுக வாயிதா வாங்கியே சாகப் போறானுக” ஹரீஷ் சொல்லி நிறுத்த, அவளுக்கோ திகைப்புத்தான்.

‘எல்லாம் தெரிஞ்சே செய்திருக்கார்’ எண்ணியவளுக்கு இவன் சாதாரணமானவன் இல்லை எனத் தோன்றியது. கோபால் எந்த ஓட்டை வழியாக எல்லாம் உருவிக் கொண்டு ஒழுகிப் போவான் எனத் தெரிந்து, அத்தனை ஓட்டைகளையும் சர்வஜித் அடைத்துவிட்டது புரிந்தது.

“இதில் நீதிபதி எப்படி வந்தாங்க?” நம்ப முடியாமல் கேட்டாள்.

“முத்துப்பாண்டியோட கைங்கரியம், அவன் செய்து வைத்த எல்லாமே நம்மகிட்டே வீடியோ ஆதாரமா இருக்கு. அவங்களோட செல்வாக்கு, அவங்க வீட்டிலேயே ஒரு MLA இருக்கார். இதையெல்லாம் கணக்கில் கொண்டு, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து நம்ம வக்கீல் வர்கீஸ் செய்த வேலைதான் இது” ஹரீஷ் பதில் கொடுக்க, அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“உன் மாமா... அவரோட செல்லப் பிள்ளையை மறந்துட வேண்டியதுதான். அவன் ஜெயிலை விட்டு வெளியே வரப் போறதே இல்லை. விக்கெட் நம்பர் ஒன் அவுட்...” என்ற சர்வஜித் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

“எ..என்ன சொல்றீங்க?” ‘கொலையும் செய்யப் போகிறானா?’ என்று இருந்தது.

“அவனைக் கொல்லப் போறீங்களா?” சிறு பயத்தோடு கேட்டாள்.

“அவன் உயிரோடு இருந்து யாருக்கு என்ன நல்லது செய்யப் போகிறான்?” அவன் எதிர்கேள்வி கேட்க, அவளால் அதை ஏற்கத்தான் முடியவில்லை. அவளுக்கும் முத்துப்பாண்டியைப் பிடிக்காதுதான்... அதற்காக அவனைக் கொல்ல வேண்டும் என அவள் நினைத்தது இல்லையே.

அப்படி நாம் வெறுப்பவர்களை எல்லாம் கொல்வதாக இருந்தால், எத்தனை பேரைத்தான் கொல்வது? அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என அவள் வேண்டிக் கொண்டாள். கூடவே மறு பக்கம், கோபால் தன் செல்ல மகனை அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார் என நினைத்தாள்.

கோபாலும் எத்தனையோ விதமான வக்கீல்கள் மூலம், எத்தனையோ விதங்களின் முயன்று பார்த்துவிட்டார். ஆனால் தன் மகனை ஒருமுறை நேரில் காண்பதற்கு கூட அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது.

கோபால் வெறிகொண்ட மனநிலையில் என்னென்னவோ செய்யப் பார்த்தார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனவும், வேறு வழியின்றி சர்வஜித்தை சந்திக்க வந்தார். இனிமேல் தன் மகனைக் காக்க ஒரே ஒரு வழி இருக்கிறது என்றால், அது சர்வா மனது வைத்தால் மட்டுமே முடியும் என அவருக்குப் புரிந்து போனது.

கோபால் மட்டுமே அவனது வீட்டுக்கு வர, விசாலாட்சி அவரைப் பார்த்தவர் அப்படியே நின்றுவிட்டார். மனதுக்குள் அமிழ்ந்து கிடந்த பல விஷயங்கள் எழுந்து மேலே வர, அவரது கால்கள் பலமிழக்கும் உணர்வு.

‘இதோ விழப் போகிறேன்?’ என அவர் நினைக்க, தாயை தோளோடு அணைத்துக்கொண்டு தாங்கி நின்றான் சர்வஜித். தாயும் மகனும் அந்த கோபாலை பார்த்தது, பார்த்தவண்ணம் இருந்தார்கள். எத்தனை வருடங்களுக்குப் பிறகு விசாலாட்சி அந்த கோபாலைக் காண்கிறார். நெஞ்சை முட்டிக்கொண்டு என்னென்னவோ நினைவுகள் வந்து போனது.

மகனது கரத்தை இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக பற்றிக் கொண்டார். “நான் இருக்கேம்மா... இப்போ தவற விட மாட்டேன்” என்றவனது பேச்சில் ஆயிரம் அர்த்தங்கள்.

“எனக்குத் தெரியும்ப்பா... நான் உள்ளே போறேன்” எனச் சொல்ல, தாயை அவர் அறையில் விட்டுவிட்டு வந்தான். அது வரைக்கும் கோபால் வாசல் அருகிலேயே நின்றுகொண்டு இருந்தார்.

“என்ன விஷயம்?” உள்ளே இருந்து வந்தவன், அவர் முன்னால் நின்று நேருக்கு நேராகக் கேட்டான். இப்படி... இந்த ஒரு சந்திப்புக்காக அவன் பல வருடங்களாக காத்துக் கொண்டு இருந்தவன் ஆயிற்றே.

“உனக்கு நான் என்ன வேணா செய்யறேன், அதற்குப் பதிலா என் மகனை மட்டும் விட்டுடு...” கோபால் தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஒருவனிடம் கெஞ்சினார். எனக்கு வேண்டுமா எடுத்துக் கொள்வேன். என் பிள்ளைகளுக்கு வேண்டுமா பிடுங்கி எடுப்பேன் என்ற திமிரில் ஆடிக் கொண்டிருந்தவர். முதல் முறையாக ஒருவனிடம் கை ஏந்தினார்.

“என்ன பிச்சையா?” அவன் கேட்க, அந்த ‘பிச்சை’ என்ற வார்த்தை அவரை ஒரு உலுக்கு உலுக்கியது.

‘யாரும் இல்லாத தனி மரமா உன்னை நிற்க வைப்பேன். உன் செல்வாக்கு, அரசியல் பலம் எல்லாம் இல்லாமல் பண்ணுவேன். ஒவ்வொரு மகனுக்காகவும் என்கிட்டே நீ பிச்சை எடுப்ப’ என ஒரு பதினான்கு வயது பாலகனின் குரல் அவர் செவிகளில் ஒலிக்க, அப்படியே ஆணி அடித்ததுபோல் நின்றுவிட்டார்.

“நீ... நீ... நீ...?” அவரால் நம்ப முடியவில்லை. தன் முன்னால் நிற்பவன் ‘அவனாக’ இருக்கவே முடியாது என மனம் அடித்துச் சொன்னது. ஆனால் அந்த வார்த்தை ‘பிச்சை’ இதை அவனைத் தவிர வேறு எவனும் சொல்ல வாய்ப்பில்லையே.

“நீ செய்தியே... ‘அதுக்கும் மேலே’ நான் செய்வேன். என்ன கேட்ட உன் மகனா? நீ யாருக்காவது ஏதாவது கொடுத்து இருக்கியா? அப்படி இருக்கும்போது என்கிட்டே பிச்சை கேட்கற? தர மாட்டேன்... ஒன்று இல்ல... மூணு... இல்ல நாலு... இல்ல இல்ல... அஞ்சும் எனக்குத்தான்” அவன் வெறிபிடித்த மனநிலையில் சொல்ல, கோபால் அந்த நொடி பயந்தான்.

கூடவே குழப்பமாக அவனைப் பார்த்து வைக்க, “என்ன கணக்கு தப்பா இருக்கேன்னு பார்க்கறியா? உன் அடுத்த தலைமுறை கணக்கையும் சேர்த்துதான் சொல்றேன்” அவன் நின்று சொன்ன தோரணையில் மிரண்டு போனார்.

“என்னடா சொன்ன?” வெகுண்டு எழுந்தார்.

“முதல் பாடையைக் கட்டி தயாரா வச்சுக்கோ. உனக்கு கொள்ளி வைக்க எந்த பிள்ளையும் இருக்க மாட்டான். பந்தக்கால் பிடிக்க பேரப்பிள்ளையும் கிடையாது... போ.... போ... கார்ட்ஸ், இவனைத் தூக்கி வெளியே போடுங்க” என்றவன் திரும்பி நடந்தான்.

அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வைஷாலிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. ‘அப்படி என்ன பகை?’ தன் மாமன் இவன் பேச்சுக்கு நின்ற நிலை அவளையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அப்படி ஒரு குரலில், வன்மத்தில் சர்வஜித் பேசி இருந்தான்.

இவனது பேச்சைக் கேட்ட பிறகு, கோபால் ஏதாவது செய்து தன் செல்ல மகனைக் காப்பாற்றி விடுவான் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில், ஜெயிலில் நடந்த கலவரத்தில் முத்துப்பாண்டி கொல்லப்பட்டான் என்ற செய்தி அவளை எட்டி கதிகலங்கச் செய்து இருந்தது.

பகை முடிப்பான்....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
கோபாலுக்கு சர்வா யாருன்னு தெரிஞ்சுருச்சு முத்துப்பாண்டி உயிரோட இருக்க லாயிக்கல்லாதவன் வைசாலி
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
கோபாலுக்கு சர்வா யாருன்னு தெரிஞ்சுருச்சு முத்துப்பாண்டி உயிரோட இருக்க லாயிக்கல்லாதவன் வைசாலி

வைஷாலிக்கு இவன் கொலைகள் செய்வதில் விருப்பமில்லை, அதான்...

கோபாலுக்கு தெரிஞ்ஜாகணுமே. நன்றி!